அல்லாஹ்வின் உதவியுடன் நான் கூறுவதாவது: நபி(ஸல்) அவர்களுடைய அல்லது மற்றொருவருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது அல்ல. அது மார்க்கத்தின் பெயரால் கொண்டு வரப்பட்ட ஒரு பித்அத் (நூதன செயல்) என்பதால் நிறுத்தப்படுவது அவசியமாகும்.
நபி(ஸல்) அவர்கள் அதைக் கொண்டாடவில்லை. தனக்காகவோ தனக்கு முன் வாழ்ந்து சென்ற நபிமார்களுக்காகவோ, தனது மகள்கள், மனைவியர், மற்றைய உறவினர்களுக்காகவோ பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடத்த வேண்டும் என்று கூறவில்லை. அத்துடன் நேர்வழி நடந்த கலீஃபாக்கள், நபித் தோழர்கள், அவர்களைத் தொடர்ந்தவர்கள் எவருமே பிறந்த தினங்களைக் கொண்டாடவில்லை. முந்தய நூற்றாண்டுகளில் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களும் இதைக் கொண்டாடவில்லை. அவர்கள் அனைவரும் நபி(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற முன்மாதிரியை (சுன்னாவை) நன்கு அறிந்தவர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது அளவிலா அன்பு கொண்டவர்கள். அவர்களது ஷரீஅத்தை இக்காலத்தில் வந்தவர்களைவிட மிகச் சரியாகப் பின்பற்றியவர்கள். எனவே பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்றமானது எனக் கண்டிருந்தால் அதை அவர்கள் நிச்சயமாகச் செய்திருப்பார்கள்.
நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்:
“யாரேனும் ஒருவர் எம்முடைய விஷயமொன்றில் புதுமையைச் சேர்க்கின்றாரோ, அது அந்த விஷயம் சார்ந்தது அல்ல, அது நிராகரிக்கப்பட வேண்டும்.” (புகாரி, முஸ்லிம்)
“முஸ்லிம்” ஹதீஸ் கிரந்தத்தில் உள்ள மற்றுமோர் அறிவிப்பின்படி,
“யாரேனும் ஒருவர் நமக்கு உடன்பாடு இல்லாத செயலொன்றை செய்வாரெனில் அது நிராகரிக்கப்பட வேண்டியதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக வருகின்றது.
மற்றொரு நபிமொழி,
“நீங்கள் என்னுடைய சுன்னாவை (வழிமுறையை)யும் நேர்வழி நடந்த கலீஃபாக்களின் சுன்னாவையும் அனுசரித்து நடவுங்கள், அவற்றில் உறுதியாக நில்லுங்கள்”, என்று கூறுகின்றது.
மேலும் “மார்க்கத்தில் புதிதாக நுழைக்கப் பட்டவற்றையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். எல்லாப் புதியனவும் நூதனக் கிரியைகளே நூதனக்கிரியைகள் யாவும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்பவைகளே” என ஒரு நபிமொழி அறிவிக்கப்படுகின்றது.
நபி(ஸல்) அவர்கள் தமது ஒவ்வொரு வெள்ளிக்கிழமை குத்பா உரைகளிலும், “மிகச் சிறந்த பேச்சு அல்லாஹ்வின் வேதத்தை(குர்ஆனை) உடையதே, மிக்க சிறந்த வழிகாட்டல் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் உடையதே, மிகவும் மோசமானவை நூதனக் கிரியைகள், நூதனக்கிரியைகள் யாவும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்பவைகளே” என்று மொழிவார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்.
﴿وَمَا آتَاكُمْ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا﴾
“மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்.” (அல்குர்ஆன் 59:7)
மேலும் கூறுகின்றான்,
﴿فَلْيَحْذَرْ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ﴾
“ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களைச் சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினைத் தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்”. (அல்குர்ஆன் 24:63)
மீண்டும் கூறுகின்றான்.
﴿الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا﴾
“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன். மேலும், நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். இன்னும், உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”. (அல்குர்ஆன் 5:3)
நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதை முழுமைப்படுத்தி, தனது சொல், செயல், அங்கீகாரம் யாவையும் சட்டங்களாக்கி வைத்துவிட்டுத்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து சென்றார்கள். அத்துடன் மக்களால் மார்க்கத்தினுள் நுழைந்து பின்னர் மார்க்கமாகக் காட்டக்கூடிய எல்லா வகையான நூதனச் செயல்களும், அவற்றை உட்புகுத்தியவர்கள் நல்ல நோக்கத்துடன் செய்திருந்தாலும், நிராகரிக்கப்பட வேண்டியவைகளே என அழுத்தமாகக் கூறிச்சென்றார்கள்.
அல்லாஹ்வின் எதிரிகளான யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் அல்லாஹ் அனுமதிக்காதவற்றைத் அவர்களது மதத்தினுள் புகுத்தினார்கள். நூதனக் கிரியைகள் பல கற்பித்தார்கள். அத்தகைய வழிமுறையைப் பின்பற்றி இஸ்லாத்தினுள் நூதனக் கிரியைகளைக் கற்பித்து அனுமதிக்கப் பட்டவைகளாக ஆக்குவதை சங்கைமிக்க நபித் தோழர்களும் கண்டித்து, அவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும்படி எச்சரிக்கையும் விடுத்தார்கள்.
மேலும், இஸ்லாத்தினுள் நூதனக் கிரியைகள் சேர்ப்பதானது “இஸ்லாம் முழுமையாகவும் மிகச் சரியாகவும் இல்லை” எனக் கருதுவதாக அமைய முடியும் அத்தகைய கருத்து மிகத் தீயது மட்டுமல்ல, “இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்” என்ற இறை வசனத்தற்கும் நூதனக் கிரியைகள் பற்றிய நபி(ஸல்) அவர்களது எச்சரிக்கைகளுக்கும் நேர்முரணானது என்பதுமாகும். இவை நம் கவனத்திற்குரியவை.
நபி(ஸல்) அவர்களுடைய மற்றும் மற்றவர்களுடைய பிறந்த தினத்தை வருடாவருடம் கொண்டாடுவதானது “அல்லாஹ் மார்க்கத்தைப் பூரணப் படுத்தவில்லை” “நபி(ஸல்) அவர்கள் தமது மார்க்கக் கடமைகளைத் தமது மக்களுக்கு ஒழுங்காகக் கற்றுக் கொடுக்கவில்லை” போன்ற கருத்துக்களையும் கொடுக்கின்றன. அவற்றின் காரணமாகவே பிற்காலத்தில் தோன்றியவர்கள் அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கத்தில் புகுத்தி அவை தம்மை அல்லாஹ்வின் பால் நெருக்கமாக்கி வைக்கும் என்று கருதுகின்றார்கள்.
அல்லாஹ் தனது மார்க்கத்தைப் பூரணப் படுத்தி அளவற்ற அருளையும் கொடுத்திருக்க நபி(ஸல்) அவர்கள் தமது தூதை பகிரங்கமாக முன்வைத்து இவை சுவனத்தைப் பெற்றுத் தரும் நல்லன என்றும் இவை நரக நெருப்பைப் பெற்றுத்தரும் தீயன என்றும் தமது உம்மத்தவருக்கு அறிவித்திருக்க மேற்கானும் விதத்தில் நினைப்பதும் சந்தேகத்திற்கிடமின்றி ஆபத்தானது மட்டுமல்ல, அல்லாஹ்வையும் அவன் தூதரையும் குறைகாண்பதற்குச் சமமான பெரும் பாவச் செயலாகும்.
அல்லாஹ்வின் தூதர் மொழிந்ததாக ஓர் ஆதாரபூர்வமான நபிமொழியை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
“(வல்லமை பொருந்திய) அல்லாஹு தஆலா ஒரு நபியை தமக்குத் தெரிந்த நல்வழியில் தமது மக்களை வழிநடத்திச் செல்லவும் தமக்குத் தெரிந்த தீமைகளைவிட்டு எச்சரிக்கவும் உரிய உதவி வழங்காது (உலகுக்கு) அனுப்பவில்லை.” (முஸ்லிம்)
நபி(ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் மிகச் சிறப்பானவர் என்பதும், தனது தூதை மிகச் சரியாகவும் முழுமையாகவும் நிறைவு செய்து, தமது மக்களுக்கு அறிவுரை பகர்ந்த இறுதியானவர் என்பதும் யாவரும் மிக அறிந்த விஷயம். அல்லாஹ் தனது அடியார்களுக்குரிய மார்க்கக் கடமைகளுள் ஒன்றாக, மீலாத் விழா கொண்டாடுவதை அனுமதித்து இருக்க வேண்டும். இல்லையென்றால், நபி(ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்கு அது பற்றி விளக்கி, அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அல்லது அவர்கள் தமது வாழ்வில் அதனைக் கொண்டாடியிருக்க வேண்டும். அல்லது நபித் தோழர்கள் அதனைச் செய்திருக்க வேண்டும். இவ்வாறு எதுவுமே இல்லாததால், மீலாத் விழா மார்க்கத்திற்கு உடன்பாடான ஒரு விஷயம் அல்ல என்பதை நன்கு தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது. அதோடு இங்கு தரப்பட்ட விளக்கங்களிலிருந்து இது (மீலாத் விழா) சன்மார்க்கத்தில் நுழைக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் தமது மக்களுக்கு எச்சரிக்கை செய்ததுமான ஒரு பித்அத் என்பதும் தெளிவாகின்றது.
அல்லாஹ் கூறுகின்றான்.
﴿يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا﴾
“நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்குக் கீழ்படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும் (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.” (அல்குர்ஆன் 4:59)
மேலும் கூறுகிறான்.
இந்த விஷயம் தொடர்பாக அல்லாஹ்வின் அருள்மறையை நோக்குவோமாயின் அது நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றி நடக்கும்படி கட்டளையிடுவதைக் காண்போம். அவர்கள் எவற்றையிட்டு “ஆகும்” என கட்டளை பிறப்பித்தார்களோ அவற்றை ஏற்ற நடப்பதுடன், எவற்றை “ஆகாது” என எச்சரித்துத் தடுத்தார்களோ அவற்றை விட்டு ஒதுங்கி இருக்கும்படி அல்குர்ஆன் கட்டளை இடுகின்றது. அத்துடன், அல்லாஹ் மக்களுக்குரிய மார்க்கத்தை (இஸ்லாத்தை)ப் பூரணப்படுத்தியுள்ளதாகவும் இறைமறை இயம்புகின்றது. எனவே நபி(ஸல்) அவர்களின் போதனைகளுள் மீலாத் கொண்டாடுவது பற்றி கூறப்படாததால், அது சன்மார்க்கம் சார்ந்த ஒரு செயல் என ஏற்க முடியாது. மார்க்கம் என்பது அல்லாஹ்வால் நமக்காகப் பூரணப்படுத்தப்பட்டு நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும்படி மொழியப்பட்டதாகும்.
அடுத்து, இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை நோக்குவோமாயின், நபி(ஸல்) அவர்களோ, அவர்களது தோழர்களோ அதை கொண்டாடியதற்கு ஆதாரம் இல்லை. எனவே மீலாத் என்பது மார்க்கத்தில் உள்ள ஓர் அம்சம் அல்ல எனத் தெளிவாகின்றது. அது மக்களால் கொண்டுவரப்பட்ட நூதனக் கிரியையும், கண்மூடித்தனமான போலிச் செயலுமாகும். உதாரணமாக யூதர்களும் கிறிஸ்தவர்களும் கொண்டாடும் திருநாட்களைக் குறிப்பிடலாம். எனவே, நீதி, நேர்மை, சத்தியம் என்பவற்றுடன் அற்ப அளவு உறவும் உணர்வும் கொண்ட யாராயினும், இதுவரை கூறிய உண்மைகளை மனதில் இருத்தி நோக்குவார்களெனில் எவருடைய பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் இஸ்லாத்தில் இடமில்லை என்பதை அறிவர். உண்மையில் இது அல்லாஹ்வும் ரசூலும் எச்சரித்த நூதனக் கிரியைகளை (பித்அத்தை) சார்ந்ததாகும்.
அறிவுடன் சந்திக்கும் ஒருவர், உலகளாவிய ரீதியில் ஏராளமான மக்கள் இதனைக் கொண்டாடுகிறார்களே என ஏமாந்துவிடக் கூடாது. ஏனெனில், சத்தியம் ஷரீஅத்தின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதேயன்றி மக்களின் எண்ணிக்கையைக் கொண்டதல்ல.
வல்லமை பொருந்திய அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி இவ்வாறு கூறுகின்றான்.
﴿وَقَالُوا لَنْ يَدْخُلَ الْجَنَّةَ إِلَّا مَنْ كَانَ هُودًا أَوْ نَصَارَى تِلْكَ أَمَانِيُّهُمْ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنتُمْ صَادِقِينَ﴾
“யூதர்கள் கிறிஸ்தவர்கள் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள்” என்று அவர்கள் கூறுகிறார்கள். இது அவர்களின் வீணாசையேயாகும், “நீங்கள் உண்மையுடையோராக இருந்தால், உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (அல்குர்ஆன் 2:111)
மீண்டும் கூறுகின்றான்.
﴿وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ﴾
“பூமியில் உள்ளோரில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்துவிடுவார்கள்.(ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.” (அல்குர்ஆன் 6:116)
பித்அத்கள் யாவும் அவற்றின் தன்மையைப் பொறுத்து பல தீமைகளுக்கு வழிவகுக்கும். ஆண் பெண் கலத்தல், இசையுடன் கூடிய ஆடல் பாடல்கள், மதுபானம் அருந்துதல், போதைப் பொருட்கள் உட்கொள்ளல் என்பன அவற்றுள் சில. அத்துடன் நபி(ஸல்) அவர்கள் மீதும், இன்னுமுள்ள நல்லடியார்கள் மீதும் அளவு கடந்த அன்பு பூண்டு, அவர்களிடம் பிரார்த்தனைப் புரிவதும், அவர்களது உதவிநாடி கெஞ்சுவதும், அவர்கள் மறைவானவற்றை அறிந்துள்ளனர், என்ற நம்பிக்கையுடன் நாட்டங்கள் நிறைவேற்ற வேண்டுதல் புரிவதும் கூட நடைபெறும், இவை மிகப்பெரிய ஷிர்க் (இணைவைத்தல்) சார்ந்த செயல்களே. இவற்றின் மூலம் அவர்கள் இறைநம்பிக்கை அற்றவர்களாக மாறிவிடுவர்.
நபி(ஸல்) அவர்கள் மொழிந்ததாக ஆதாரபூர்வமான ஹதீஸ் ஒன்று இவ்வாறு காணப்படுகின்றது.
“நீங்கள் மார்க்கத்தில் வீண் செலவையிட்டு எச்சரிக்கையாய் இருங்கள். உங்களுக்கு முன்னிருந்த மக்கள் இதனால் அழிந்து போயுள்ளனர்.”
மீண்டும் அவர்கள் மொழிந்ததாகக் காணப்படுவதாவது.
“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டதுபோல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நான் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” என்று கூறுங்கள்.” (புகாரி)
நம் சமூகத்தின் மிக முக்கியமானவர்கள் கூட இத்தகைய விழாக்களில் மிகத் தீவிரமாக ஈடுபாடு கொண்டு செயற்படுவதையும், இவற்றுக்குச் சார்பாக கருத்து வெளியிடுவதையும் காண்கின்றோம். அத்தகையவருள் பலர் ஐவேளைத் தொழுகைளையோ ஒழுங்காக நிறைவேற்றாதிருப்பது ஆச்சரியமும் வேதனையும் மிக்கதே. இது பற்றி அவர்கள் வெட்கப்படுவதாகவோ, வேதனைப் படுவதாகவோ, பெரும் பாவமொன்றில் ஈடுபட்டுள்ளோமே என உணர்வதாகவோ தெரிவதில்லை.
எத்தகைய சந்தேகமுமின்றி இத்தகையவர்களின் இச்செயல் இவர்களது பலவீனமான விசுவாசத்தையும், தூரநோக்கில்லாத தன்மையையும், துருப்பிடித்துவிட்ட உள்ளங்களின் இறுக்கமான போக்கையுமே தெளிவு படுத்துகின்றது. இவர்களது பாவச் செயல்களும், கீழ்ப்படியாமையுமே இந்நிலைக்குக் காரணம். அல்லாஹ் நம்மையும் எல்லா முஸ்லிம்களையும் இந்நிலையிலிருந்து பாதுகாப்பானாக.
இங்கு குறிப்பிடவேண்டிய மிகவும் அதிசயமும் ஆச்சரியமுமான மற்றொரு விஷயம் என்னவெனில், சிலர், மீலாத் விழாக்களின் போது நபி(ஸல்) அவர்களும் அங்கு பிரசன்னமாகி இருப்பார்கள் என நம்புவதே. இதன் காரணமாக அவர்கள் எழுந்து நின்று நபி(ஸல்) அவர்களை வரவேற்று வாழ்த்துகின்றார்களாம். இது அப்பட்டமான பொய் மாத்திரமன்று. மிக மோசமான அறிவீனமும் கூட. நபி(ஸல்) அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் கியாமத் தினத்திற்கு முன் அவர்களது அடக்கத்தளத்திலிருந்து எழுந்து வரமாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அவர்கள் மக்களை சந்திக்கவோ, அவர்களது கூட்டங்களில் கலந்துகொள்ளவோ மாட்டார்கள். மாறாக, அவர்கள் மீண்டும் எழுப்பப்படும் கியாமநாள் வரை தமது அடக்கத்தளத்திலேயே இருப்பார்கள். அதேவேளை அவர்களது தூய ஆன்மா உயர்ந்த, கண்ணியமான அந்தஸ்தில் அல்லாஹ்வுடன் இருக்கும்.
அல்லாஹு தஆலா கூறுகின்றான்.
﴿ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيِّتُونَ ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ﴾
“பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கின்றீர்கள். பிறகு, கியாம நாளன்று நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 23:15,16)
நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.
நான்தான் கியாம நாளன்று முதன்முதலாக எழும்புபவன், நானே முதலாவதாக (மற்றவர்களுக்காக) பரிந்து பேசுபவன், என்னுடைய பரிந்து பேசுதலே முதலாவதாக ஏற்கப்படும்.
குர்ஆனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக் காட்டப்பட்ட மேற்காணும் மேற்கோள்கள் மரணித்த எவருமே கியாம நாளுக்கு முன் தமது அடக்கத் தளங்களிலிருந்து எழுந்து வருவது இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன. அனைத்து இஸ்லாமிய அறிஞர்களும் இது விஷயத்தில் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு முஸ்லிமும் இவை பற்றி நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறின்றி, அல்லாஹ்விடமிருந்து எத்தகைய அதிகாரமும் பெறாத அறிவு குன்றிய மக்கள் உருவாக்கியுள்ள பித்அத்கள், மூட நம்பிக்கைகள் என்பனவற்றை நம்பி, எளிதில் தவறான வழியில் செல்பவர்களாக இருக்கக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் மொழிவதானது, அல்லாஹ்வுடைய கூற்றுக்களுக்கு ஏற்ப, மிக ஏற்றமான சிறப்புமிக்க செயற்களுள் அமைந்தனவாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்.
﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾
“இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகின்றான், மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.” (அல்குர்ஆன் 33:56)
நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள்.
“எவரொருவர் என் மீது ஒருமுறை ஸலவாத்துச் சொல்கிறாரோ, அவர்மீது அல்லாஹ் பத்து முறை தனது அருளைச் சொரிகின்றான்.”
இது எல்லா நேரத்திலும், குறிப்பாக ஒவ்வொரு தொழுகையின் பின்னர் மொழிவது அவசியம் எனக் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழுகையின் இறுதி கட்டத்தில் இதை மொழிவது கட்டாயம்(தஷஹ்ஹீத்) என இஸ்லாமிய அறிஞர்கள் பலரால் கூறப்பட்டுள்ளது. ஹதீஸ்களின்படி “அதான்” அழைப்பு விடுக்கப்பட்டவுடனும், நபி(ஸல்) அவர்களுடைய பெயரைக் கேட்டவுடனும், வெள்ளிக்கிழமைப் பகலிலும் இரவின் ஆரம்பத்திலும் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வது மிக மிக அவசியம் என வேண்டப்பட்டுள்ளது. இதுதான் இந்த விஷயம் தொடர்பாக நான் வலியுறுத்திக் கூறவிரும்புவதாகும். எவர்கள் அல்லாஹ்வின் அருளொளி கிடைக்கப் பெறுகின்றார்களோ அவர்கள் அனைவரும் இவ்விளக்கங்களால் திருப்தியுறுவார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.
இனி, நபி(ஸல்) அவர்கள் மீது ஆழ்ந்த விசுவாசமும், அளவிலா பற்றும் கொண்ட பக்திமிகுந்த முஸ்லிம்களுள் சிலர் இத்தகைய நூதனமா(பித்அத்தா)ன கொண்டாட்டங்களை சரிகாணுவது வேதனையாயுள்ளது. அத்தகைய மக்களிடம் கேட்கின்றேன், “எமக்குக் கூறுங்கள். நீங்கள் அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாஅத்தைச் சேர்ந்த, நபி(ஸல்) அவர்களது அடிச்சுவட்டில் செல்ல விரும்புகின்ற ஒருவராயின் தயவுசெய்து கூறுங்கள், நபி(ஸல்) அவர்கள் மீலாத் கொண்டாடினார்களா? அவர்களது தோழர்களோ அடுத்து வந்தவர்களோ கொண்டாடினார்களா?” இல்லையே! உண்மையில், இச்செயல் இஸ்லாத்தின் எதிரிகளான யூதர்கள், கிறிஸ்தவர்களிடமிருந்து பெறப்பட்டதே. அதனை நம்மவர்கள் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர்.
இத்தகைய பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நபி(ஸல்) அவர்கள் மீது அன்பு பாராட்டும் வழிமுறை சார்ந்தது அல்ல. அவர்கள் மீது அன்பு பாராட்டுபவர்கள் அவர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்களது போதனைகளை நம்பி நடக்க வேண்டும். அவர்கள் தடுத்தவற்றிலிருந்து விலகி நிற்க வேண்டும். அவர்கள் காட்டித்தந்த முறைப்படி அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு வர வேண்டும். இதுதான் நமக்குரிய நடைமுறை. அத்துடன் ஒவ்வொரு வேளையிலும், குறிப்பாகத் தொழுகை வேளைகளில் நபிகளார் பெயர் வரும்போது ஸலவாத்தும் ஸலாமும் மொழிவதன் மூலம் அவர்கள் மீது நாம் கொண்டுள்ள அன்பை அழகாக வெளிப்படுத்த முடியும்.
மேலும், “இபாதத்” என்பது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதும், அவன் மீது அன்பு செலுத்துவதும் மட்டும் அல்ல. அதன் முறையான கருத்து என்னவெனில் அவனுக்கு மட்டும் முழுக்க முழுக்கக் கட்டுப்பட்டு, வணங்கி, வழிபட்டு, வாழ்தல் என்பதாகும். அல்லாஹு தஆலாவால் அருளப்பட்டு நபிமார்களால் பரப்பப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இறந்த காலத்திலும் இன்னும் இதுவன்றி இன்னுமொரு மார்க்கம் இறைவனிடம் ஏற்கப்படவோ, அங்கீகாரம் பெறவோமாட்டாது. எனவே இதன்படி வாழ்தலே இவ்வுலக மக்கள் அனைவருடைய கடமையாகும்.
ஒருவர் அல்லாஹ்வுக்கு அடிபணிவதுடன், அதேவிதமான அடிபணிவை மற்றொருவருக்கும் செலுத்துவாராயின் அவர் ஒரு முஷ்ரிக் (இறைவனுக்கு இணைவைப்பவர்) ஆவார். அதே போன்று எவரொருவர் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவதுடன் மற்றொருவரிடமும் பிரார்த்தனை புரிகின்றாரோ அவரும் அதே தரத்தை உடையவராவார். எவரொருவர் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அடிபணிந்து நடக்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்காக தனது கடமைகளில் தவறு செய்கின்ற தற்பெருமை பிடித்தவராவர்.
அல்லாஹ் கூறுகின்றான்.
﴿وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنْ اُعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ﴾
“மெய்யாக நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடமும் “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள். ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பிவைத்தோம்.” (அல்குர்ஆன் 16:36)
“மரியமின் மகன் விஷயத்தில் கிறிஸ்தவர்கள் நடந்து கொண்டதுபோல் நீங்கள் என்னைப் புகழ்வதில் வீண் விரயம் செய்யாதீர்கள். நாம் ஓர் அடிமை மாத்திரமே. எனவே, மிக எளிமையாக “அல்லாஹ்வின் அடிமையும் திருத்தூதருமே” எனக் கூறுங்கள்.” (புகாரி)
அப்துல் அஜீஸ் அப்துல்லாஹ் பின் பாஸ் (ரஹ்)
{ 3 comments… read them below or add one }
மீலாது கொண்டாட்டத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. நபி இறைதூதராக ஆன பின்பு அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் கவனிக்கப்பட்டு மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது அந்த வகையில் அவர் மறைந்தது ரபியுல்அவ்வல் பிறை 12 என்று உறுதியாகிறது. ஆனால் அவர் பிறந்தது ரபியுல்அவ்வல் பிறை 12 தான் என்று தெளிவாக சொல்லமுடியவில்லை சில வரலாற்று ஆசிரியர்கள் அவர் பிறந்ததாக வேறு ஒரு நாளைக்குறிப்பிடுகிறார்கள் நபியவர்கள் வாழ்ந்த காலத்தில் ரபியுல்அவ்வல் பிறை 12 தான் எனக்கு பிறந்தநாள் என்று சொல்லி அதற்க்கு முக்கியத்துவம் தந்ததாக எந்த செய்தியும் இல்லை தம்பட்டமும், பெருமையும் அடிக்கும் அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு பிறந்தநாள் விழா ஒரு விளம்பரமாக அமையலாம் இதற்க்கெல்லாம் அப்பாற்பட்டவர் நமது இறைதூதர்.
ஆனால் அல்லாவும், இறைதூதரும் ஏவாததை கங்கணம் கட்டிக்கொண்டு நாங்கள் அப்படித்தான் செய்துக்கொண்டிருப்போம் என்று விடாப்பிடியாக இருப்பவர்களுக்கு என்ன நேர்ந்து விட்டதோ இறைவன்தான் நல் வழி காட்டித்தரவேண்டும்
Allahuvey.. Nabiyai pugalndhulladhu theriyuma umaku???? ——- Yaseen avargale!!
Iblees! Allahuvaal palikapatta visayam theriyuma?? Adhu yean yendru theriyuma??