இப்பேரண்டத்தைப் படைத்துப் பரிபாலனம் செய்து வரும் அல்லாஹ் மனித சமுதாயத்தை பலவீனமான நிலையிலேயே படைத்துள்ளான்.
அல்லாஹ் (தன் கட்டளைகளை) உங்களுக்கு இலகுவாக்கவே விரும்புகின்றான். மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான். (திருகுர்ஆன் 4:28)
இப்படி பலவீனமான மனித சமுதாயம் நித்தமும் பாவம் எனும் ஆற்றில் நீந்திக் கரைசேர இயலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. நன்மை, தீமைகளை பிரித்தறியக் கூடிய ஆற்றலை மனிதனுக்கு இறைவன் வழங்கியும் பாவ காரியங்களை மிகச் சர்வ சாதாரணமாக, நாம் பாவம் செய்கிறோம் என்ற நாணம் கூட ஏன் எண்ணம் கூட இல்லாமல் செய்து வருவதை நம்மைச் சுற்றியிருப்பவர்களை நோக்கினாலே தெளிவாகத் தெரியும். இன்னும் சொல்லப்போனால் நேரான வழியில் நடக்க வேண்டும், பாவங்களை விட்டும் விலகி இருக்க வேண்டும் என்று முயலும் மனிதன்கூட தன் அரைகுறை ஈமானையும் இழந்து விடும் அளவுக்கு எங்கு நோக்கினும் பாவத்தின் ஊற்றுக் கண்களே தென்படுகின்றன.
இன்றைய நாம் வாழும் சமூகத்தில், ஒருபுறம் தர்ஹா, கந்தூரி, உரூஸ, ஜண்டா என்று அவ்லியாக்களை நேசிக்கிறோம். புகழ்கிறோம் என்ற பெயரில் படைத்து இறைவனுக்கு மட்டும் செய்ய வேண்டிய சிரம் பணிதலையும், நேர்ச்சைகளையும், பிரார்த்தனைகளையும் அவுலியாக்களுக்கும், மற்றவர்களுக்கும் செய்து இணை வைத்தல் எனும் கொடிய, இறைவனால் மன்னிக்கப்படாத பாவத்தை ஏதோ புண்ணியம் செய்கிறோம் என்று கருதி பயபக்தியுடன் பாவத்தை அரங்கேற்றுகின்றனர்.
அது போல் தன்னுடைய வாழ்க்கையின் சரிபாதியை பகிர்ந்து கொள்ளவிருக்கும் மனைவியிடம் கைநீட்டி யாசகம் (வரதட்சணை) பெறும் ஆண்மையற்ற பேடிகள் மறுபுறம்; இரட்டிப்பாகும் வட்டியும் வியாபாரத்தைப் போன்றது என்று வியாக்கியானம் கொடுத்து வறியவர்களைச் சுரண்டும் பகல் கொள்ளையர்கள் ஒருபுறம். மதிமயக்கும் மதுவை உண்டு. மண்ணில் புரண்டு காற்றில் மானத்தை பறக்க விடும் போதைப் பிண்டங்கள் மறுபுறம். பிறர் பொருளைப் பறித்து தனதாக்கிக் கொள்ளும் மோசடிப் பேர்வழிகள் ஒருபுறம். கடமையைச் செய்வதற்கு கூசாமல் லஞ்சம் கேட்கும் ஊழல் பெருச்சாளிகள் மறுபுறம். இப்படி எங்கு நோக்கினும் பாவம்! பாவம்! என்ற நிலையையே நம்மால் காணமுடிகிறது.
ஏன்! சாதாரணமாக நாம் பேருந்தில் பயணம் செய்கிறோம் என்றால் கூட அங்கும் நம் கண்கள் பாவத்தை சம்பாதிக்க ஷைத்தான் ‘சினிமா’ எனும் ஆயுதத்தை பயன்படுத்துகிறான். அதிலிருந்து தப்பிக்க நம் கவனத்தை பேருந்திலிருந்து வெளியேவிட்டால், பல வண்ணங்களில், முப்பரிமாண, ஆளுயர திரைப்பட ஆபாசச் சுவரொட்டிகள், இதற்கு பயந்து கண்ணயர்ந்து தூங்குவோம் என்றால், பேருந்தில் ஒலிக்கும் திரைப்படப் பாடலின் இசைத்தொல்லை நம் காதைக் கிழிக்கும். இவ்வாறாக ஒரு சாதாரண பேருந்துப் பயணம் கூட பாவப் பயணமாக மாறிவிடும் மோசமான சூழலில் நம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம்மைச் சூழ்ந்திருக்கும் பாவ வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன வழி? நம்முடைய இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டு, நம்மை தவறில் தள்ளிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் நம்முடைய முதல் எதிரியான ஷைத்தானின் வலையில் அகப்படாமல் தப்பிக்க என்ன வழி?
தக்வா எனும் உள்ளச்சத்தையும் இறை ஆதரவையும் தவிர வேறு வலிமையான ஆயுதம் உண்டோ?
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கான வழி என்ன? என்று கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் தான் எங்கு இருந்தாலும், தன்னை இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என்ற உணர்வோடு அவர் இருக்கட்டும் என்று கூறினார்கள்.அப்துல்லாஹ் இப்னு புஷ்ர்(ரழி) நூல்: திர்மிதி.
நபியவர்களே! எனக்கு ஏதாவது அறிவுதை கூறுங்கள் என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், “எந்தச் சூழ்நிலையிலும் பயபக்தியை(தக்வா) கைவிட்டு விடாதீர்; ஏனென்றால் அதுதான் அனைத்து நன்மைகளின் இருப்பிடமாகும். இறைவனை நினைவு கூறுவதையும், அவனது நெறி நூலான அல்குர்ஆனை பொருள் அறிந்து படிப்பதையும் கடைபிடிப்பயாக! ஏனென்றால் நிச்சயமாக அது பூமியில் உனக்குப் பிரகாசமாகவும், வானத்தில் உன்னைக் குறித்து புகழ்ந்து பேசுவதற்குக் காரணமாகவும் அமையும். இதல்லாமல் நல்ல விஷயங்களைத் தவிர மற்றவைகளை பேசுவதிலிருந்து உனது நாவைக் கட்டுப்படுத்துவாயாக! ஏனென்றால் உறுதியாக அதன்மூலம் நீ ஷைத்தானை வென்று விடலாம்” என்று உபதேசித்தார்கள். அபூ ஸயித்(ரழி) நூல்: அல்முஃஜமுஸ்ஸகீர்
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வைக்க வேண்டிய முறைப்படி அஞ்சி ஆதரவு வைக்க வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். ஆதரவு வையுங்கள். (திருகுர்ஆன் 3:102)
(நபியே!) ஷைத்தானுடைய யாதொரு ஊசலாட்டம் (தீய காரியங்களைச் செய்யும்படி) உம்மைத் தூண்டும் சமயத்தில் (உம்மை அதிலிருந்து) பாதுகாத்துக் கொள்ளும்படி அல்லாஹ்விடத்தில் நீர் கூறுவீராக! நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிபவனாகவும் இருக்கிறான். (ஆதலால் அவன் உம்மை பாதுகாத்துக் கொள்வான்) (திருகுர்ஆன் 41:36)
என் இறைவனே! ஷைத்தான் என்னிடம் நெருங்காமலிருக்கவும் நான் உன்னிடம் கேட்கிறேன் என்று நீங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருங்கள். (திருகுர்ஆன் 23:97-98)
எனவே பாவத்திலிருந்து தப்பிக்க இறையச்சமும், ஆதரவும், பிரார்த்தனையுமே நமது இன்றைய தேவையாக இருக்கிறது. நம் வாழ்க்கையை சீர்படுத்திக் கொள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் தவ்ஃபீக்-அருள் புரிவானாக.
இப்னு சித்திக், கடையநல்லூர்