நூஹ் (அலை) கால பிரளய பெரு வெள்ள நீர்…. எங்கிருந்து வந்தது?
எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.
Huge amount of water in Earth’s mantle
ஆழி சூழ் உலகமாக நமது பூமி விளங்குகிறது. சுமார் 70 % கடல் நீர்ப்பரப்புக்கு இடையில் நாம் வாழ்ந்து வருகின்றோம். ஒவ்வொரு உயிரினத்திற்கும் நீர் இன்றியமையாதது. அனைத்து உயிர்களும் நீரிலிருந்தே படைக்கப்பட்டுள்ளது என்றே அல்குர்ஆனும், அறிவியலும் கூறுகின்றன. இறைவன் படைத்த முதற் பொருளாகவும் நீர் இருக்கின்றது. நீரானது ஆக்சிஜன், ஹைட்ரஜன் என்ற இரு அணுக்கள் இணைவதால் பிறந்தது.
நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் நடந்த பெருவெள்ள அழிவின் போது அனைத்து உயிரினங்களும் நீரால் அழிக்கப்பட்டன. நூஹ் (அலை) அவர்களால் தேர்வு செய்யப்பட்ட உயிரினங்களும், மனிதர்களுமே தப்பிப்பிழைத்தனர். உலகம் முழுவதும் நீரால் மூழ்கிப் போகும் அளவிற்கான பெரு வெள்ளம் எங்கிருந்து வந்தது? எனும் கேள்விக்கு அல் குர்ஆன் பதிலளிக்கிறது.
ஆதலால், வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம். அன்றி, பூமியின் ஊற்றுக்கண்களையும் பீறிட்டுப் பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது. அல்குர்ஆன்.54:11,12.
ஆகவே வேதனை நெருங்கி அடுப்பு பொங்கவே, ஆண், பெண், இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள் .நம் வாக்கு ஏற்பட்டு விட்டவர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் நம்பிக்கையாள ர்களையும் அதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.” என்று நாம் கூறினோம் – அல்குர்ஆன்.11:40.
உலகத்தை அழிக்க வந்த பெரு வெள்ள நீரானது வானத்திலிருந்தும் கொட்டியது. பூமியிருந்து புது ஊற்றாகவும் பொங்கி வழிந்தது. இந்த விண் நீரும், மண்ணீரும் ஒன்று கலந்தே உலகை மூழ்கடித்தன. இப்பெரு உலகை மூழ்கடிக்கக்கூடிய பெருக்கடலளவு நீர் பூமிக்கு அடியில் இருப்பதாக அறிவியல் இன்று சொல்வதை அன்றே அல்குர்ஆன் கூறிவிட்டது.
பூமியின் மையத்தில் ஏற்படும் நிலநடுக்க அதிர்வு அலைகள்…. இடையில் உள்ள பாறை, மண் அடுக்கு நீர் வெப்பம் இவைகளைக் கடந்து வந்தே பதிவாகிறது. இப்படி கடந்து வரும் அதிர்வு அலைகளின் வேகம் ஒன்று போல் இருப்பதில்லை. அது கடக்கும் தாதுப் பொருளின் அடர்த்திக்கு தகுந்தாற்போல் வேறுபடும். இந்த வேறுபாட்டை ஆய்வு செய்தே பூமிக்கு அடியில் மறைந்துள்ள ரகசிய கடல்களை ஆய்வாளர்கள் கண்டுபிடிக்கின்றனர்.
கடினப் பாறையில் மறைந்துள்ள நன்னீர்.
https://www.discovermagazine.com/planet-earth/the-search-for-earths-underground-oceans
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 250 முதல் 410 மைல் ஆழத்திலுள்ள மாறுதல் மண்டலத்தில் (Transition Zone) இரண்டு முக்கிய தாதுப் பொருள்கள் இருக்கின்றன. வாட்ஸ்லெயிட் மற்றும் ரிங்வுட்லைட் (Wadsleyite and Ringwoodite).
இந்த இரு தாதுப்பொருள்களும் ஹைட்ராக்ஸைட் அயன் ( Hydroxide ion) நிரம்பியது. இதில் தண்ணீர் மூலக்கூறுகளான ஆக்சிஜன், மற்றும் ஹைட்ரஜனை தமக்குள் பொதிந்து வைத்துள்ளன. ஒரு ஸ்பான்ஞ் பஞ்சில் எவ்வாறு தண்ணீர் உருஞ்சி வைத்திருப்பது போன்று, வாட்ஸ்லெயிட், ரிங்வுட்லைட் பாறையில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. நம் பூமியின் மேற்பரப்பிலுள்ள கடலைப் போன்று மூன்று மடங்கு கடல் நீர் பரப்பு அடி ஆழத்தில் (Transition Zone) உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. நிலத்தடி கடல்கள் நிலமட்டத்தில் ஊற்றாக பொங்கிப் பெருகும் போதும் வானத்தின் வாசல் திறந்து மழை நீர் அருவியாக பொழியும் போது நிலப்பரப்பு மூழ்கி நீர்ப்பரப்பாக மாறிவிடும்.
பூமியின் ஆழத்தில் 250 – 410 மைல் தொலைவில் அமைந்துள்ள டிரான்சிசன் மண்டலத்தில் இருக்கும் வாட்ஸ்லெயிட் மற்றும் ரிங்வுட்லைட் பாறைகள், ஸ்பான்ஜ் பஞ்சு போன்று தண்ணீரை தமக்குள் தேக்கி வைத்துள்ளன. இது போன்ற நீர் நிரம்பிய பாறைகளைப் பற்றியும் குர்ஆன் கூறுகிறது.
கற்பாறைகளிலும் தொடர்ந்து தானாகவே ஊற்றுகள் உதித்தோடிக் கொண்டிருப்பவைகளும் நிச்சயமாக உண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. – அல்குர்ஆன்.2:74.
நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் நடந்த வெள்ளப் பிரளயத்தில் விண்ணிலிருந்து வந்த மழை நீரும் மண்ணுக்கடியிலிருந்து பொங்கிப் புறப்பட்ட ஆழ்கடல் வெள்ளமும் ஒன்று கலந்தன. மண்ணை மூடின, மலைகளும் மூழ்கின.
வானத்தின் வாயில்களைத் திறந்து விட்டு, தாரை தாரையாய் மழை கொட்டும்படி நாம் செய்தோம். அன்றி, பூமியின் ஊற்றுக்கண்களையும் பீறிட்டுப் பாய்ந்தோடச் செய்தோம். ஆகவே, நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக தண்ணீர் ஒன்று சேர்ந்தது. – அல்குர் ஆன் 54:12.
இறுதியாக நமது உத்தரவு வந்து, அடுப்பு பொங்கவே, நாம் நூஹை நோக்கி, உயிர்ப்பிராணிகள் ஒவ்வொரு வகையிளிருந்தும், ஒவ்வொரு ஜோடியை அக்கப்பலில் ஏற்றிக்கொள்ளும் என்று நாம் கூறினோம். – அல்குர்ஆன்.11:40.
மேலே உள்ள 11:40 வசனத்தில் மூலத்தில் “ அத் தன்னூர்” எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு பல பொருள் அரபியிலுண்டு. அடுப்பு. மேற்பரப்பு, கப்பலில் இருந்த நீர்த்தொட்டி, விடியல், பூமியின் மேடான பகுதி. ஆயினும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் அடுப்பு பொங்குவதையே இதற்கான சரியான விளக்கமாக கருதுகிறார்கள். நவீன அறிவியல் கருத்தின்படி இதுவே சரியான பொருளாக உள்ளது…. எப்படி?
உலகில் உள்ள மொத்த நீரில் சுமார் 97.2% கடல் நீராக உள்ளது. நிலத்தடி நீரானது சுமார் 0.61% மட்டுமே இருக்கிறது. ஒரு சதவீதம் கூட இல்லாத இந்த நன்நீரைத்தான் ஆழ் துளை குழாய் மூலம் நாம் உறுஞ்சிக் கொண்டிருக்கிறோம். இந்த நீரானது பூமியில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் இருந்து எடுக்கப்படுகிறது. பூமியின் உற்றுக்கண் திறந்து தண்ணீர் பீறிட்டு அடித்தாலும்… உலகம் முழுவதையும் முழ்கடித்தும்.. உயரமான மலைகளை மூழ்க வைக்கக் கூடிய அளவு தண்ணீர், நாம் இறைக்கும் ஆழ் துளை மட்டத்தில் இல்லை.
அல்லாஹ் கூறும் அடுப்பு பொங்கி பெருகிய ஊற்று நீரானது…. பூமியின் ஆழத்தில்…. 250 – 410 மைல் தொலைவில் அமைந்துள்ள டிரான்சிசன் மண்டலத்தில் இருக்கும் வாட்ஸ்லெயிட் மற்றும் ரிங்வுட்லைட் பாறைகளிலிருந்து கடல் போன்று பொங்கிப் பெருகி வந்த பிரளய வெள்ளமாகும். அல்லாஹ் அடுப்பு பொங்குதல் என்ற வார்த்தையை பயன்படுத்துவதன் காரணம்…. டிரான்சிசன் பாறை அடுக்குகளுக்குக் கீழே மாண்டில் என்று சொல்லப்படும் உருகிய பாறை குழம்பு அடுப்பு போன்று கடும் வெப்பத்தில் இருக்கிறது. இதனால் அடுப்பின் மேல் உள்ள வாட்ஸ்லெயிட், ரிங்வுட்லைட் பாறை அடுக்குகள் வெப்பமடைந்து, தன்னில் தேக்கிவைத்துள்ள கடல் போன்ற நீரை கொதி நிலை அடையச் செய்து பூமியின் மேற்பரப்பிற்கு விசையுடன் வெளியேற்றுகிறது..
இந்த நிலத்தடி ஆழ்கடல் தண்ணீரானது மேற்பரப்பிற்கு வந்து உலகை மூழ்கடித்தது. பூமியின் ஆழத்திலிருந்து வந்த கொதிநிலை வெப்பநீரையே அல்லாஹ் “ அடுப்பு பொங்கியது…” என்று குறிப்பிடுகிறான். பூமியின் கொதிநிலை வெப்ப நீருடன் வானில் இருந்து அருவியாக இறங்கிய மழை நீரும் ஒன்று கலந்து பூமியின் மலைகளை மூழ்கடித்தன.
பூமியின் அடியாழத்தில் கடல் போன்று பெரும் நிலப்பரப்பில் நன்னீர் நிறைந்துள்ள செய்தியை நவீன அறிவியல் ஆய்வுகள் வெளிப்படுத்தி வருகின்றன. தண்ணீரின் மூலக்கூறுகளான ஆக்சிஜன் மற்றும் ஹைடிரஜன் அயனிகளை தம்முள் பொதித்து வைக்கும் தளங்களாக வாட்ஸ்லெயிட் மற்றும் ரிங்வுட்லைட் பாறைப் படிமங்கள் இருக்கின்றன.
வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை நாம் இறக்கி வைக்கின்றோம், அதன் பின்னர் அதனை பூமியில் தங்குமாறு செய்கின்றோம், நிச்சயமாக அதனைப் பூமிக்குள் இழுக்கப்பட்டு போக்கி வைக்கவும் நாம் ஆற்றலுடையோர் ஆவோம். – அல் குர்ஆன்.23;18.