நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத “பித்அத்”கள்

Post image for நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத “பித்அத்”கள்

in பித்அத்

 அல்லாஹ்(ஜல்) கூறுகிறான்: “”அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக் கூடிய இணையாளர்களும் அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும்(மறுமையில் விசாரணைக்குப் பிறகு தக்கக்கூலி கொடுக்கப்படும் எனும் இறைவனின்) வார்த்தை இல்லாதிருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு.” (அல்குர்ஆன் : 42:21)

(நபியே! நீர் கூறும்) அல்லாஹ்வுக்கு நீங்கள் உங்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியி லுள்ளவற்றையும் நன்கு அறிகிறான். அன்றியும், அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் : 49:16)

இந்த இரண்டு குர்ஆன் வசனங்களும், அல்லாஹ்வுக்கு மட்டுமே மார்க்கம் சொந்தம்! அவனே அனைத்தையும் அறிந்தவனாக இருக்கிறான்! ஒன்றை மார்க்கமாக்கும் அதிகாரம் அவனுக்கு மட்டுமே இருக்கிறது!

அதற்கு மாற்றமாக, மனிதர்களால் மார்க்க மாக்கப்பட்டதை அதாவது, “பித்அத்’துக்களை எடுத்து நடப்பவர்கள் அல்லாஹ்வுக்கு இணை ஷிர்க்) வைக்கிறார்கள்! (பார்க்க : 9:31)

அந்த “பித்அத்’துக்களை உண்டாக்கியவர்களை அல்லாஹ்வுக்கு இணையாளர்களாக ஆக்கி விட்டார்கள்! இது இணை(ஷிர்க்) வைக்கும் மன்னிக்கப்படாத குற்றமே என்பனவற்றை தெள்ளத் தெளிவாக அறிவுறுத்துகின்றன. (4:48,116)

1. “”எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களுக்கும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்தத் தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள், அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர், ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது”, என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.
ஆதாரம் : இப்னு மஸ்ஊத்(ரழி), நூல் : முஸ்லிம்

2. “”வார்த்தையில் சிறந்தது அல்லாஹ் (ஜல்)வின் நெறிநூல்; நடைமுறையில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நடைமுறை, காரியங்களில் கெட்டது (நபி(ஸல்) அவர்களின் சொல், செயல் அங்கீகாரம் இல்லாத) “பித்அத்’கள். “பித்அத்’கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத்(ரழி), ஜாபிர்(ரழி), நூல்கள் : புகாரீ, முஸ்லிம், நஸாயீ.

3. “”உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றி பிடித்திருக்கும் காலமெல் லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்(ஜல்)வின் நெறிநூல். இரண்டு எனது வழிமுறை”. அறிவிப்பவர்: மாலிக் இப்னு அனஸ்
(ரழி), நூல் : முஅத்தா.

4. அன்னை ஆயிஷா(ரழி) அறிவித்துள்ளார்கள். “”எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரீ, முஸ்லிம்

6. நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். “”வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்லுகிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது. அதில் அழிந்து நாசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டான்.” அறிவிப்பவர் : உமர்(ரழி): நூல் : ரஜீன்.

7. ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார்கள் : மக்கா மாநகரம் வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டு ரமழான் மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் அங்கு புறப்பட்டனர். குராவுல் கமீம் என்ற இடத்திற்குச் செல்லும் வரை அவர்கள் நோன்போடு சென்றார் கள். மக்களும் நோன்போடு இருந்தனர். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஒரு கோப்பையில் நீர் கொணரச் செய்து மக்கள் அனைவரும் பார்க்கும் அளவுக்கு கோப்பையை உயர்த்தி, மக்களும் அதனைப் பார்த்த பின்னர் அதனைப் பருகினர். இதன் பின் மக்களில் சிலர் நோன்போடு இருப்பதாக நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் “இத்தகையோர் பாவிகளே! அத்தகையோர் பாவிகளே!” என்று கூறினர். (முஸ்லிம், திர்மிதீ)

8. “”எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது” என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர் : அலீ(ரழி), நூல் : அபூதாவூது, நஸாயீ.

9. நபி(ஸல்) அவர்கள், நபிதோழர் பராஉ பின் ஆஸிஃப்(ரழி) அவர்களுக்கு, இரவில் படுக்கப் போகும் பொழுது ஓதும் துஆ ஒன்றைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “”….. வநபிய்யி கல்லதீ அர்ஸல்த….” என்று கற்றுக் கொடுத்ததை, நபிதோழர் “”…..வரசூலி கல்லதீ அர்ஸல்த….” என்று ஓதிக் காண்பித்த போது, நபி(ஸல்) அவர்கள், இல்லை “”வநபிய்யி கல்லதீ அர்ஸல்த…” என்றே (தான் ஓதிக் காட்டியபடியே) ஓதுமாறு கூறினார்கள். (புகாரீ)

“”நபிய்யி கல்லதீ” என்பதை “ரசூலிகல்லதீ’ என்று சொன்னதையே நபி(ஸல்) அவர்கள் அனுமதிக்காமல், அதைக் கண்டித்து திருத்தி இருக்கும்போது, ஒருவர் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை, அது அழகானது என்று கூறி செய்ய முற்பட்டால் அவருடைய நிலை என்ன என்பதை நாம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

மேற்காணும் குர்ஆனின் வசனங்களும், நபி (ஸல்) அவர்களின் போதனைகளும், மார்க்கத்தில் புதிதாக அணு அளவும் இணைக்க முடியாது என்பதையே வலியுறுத்துகின்றன என்பதை நடு நிலையோடு சிந்திக்கும் உண்மை விசுவாசிகள் விளங்கிக் கொள்ள முடியும். இனி பித்அத் விஷயமாக நபிதோழர்களுடைய அறிவுரைகளைப் பார்ப்போம்.

1. “”நான் உங்களிடம் அல்லாஹ்(ஜல்) கூறுகிறான். அல்லாஹ்வுடைய ரசூல்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்று கூறுகிறேன்.

நீங்களோ “”அபூபக்கர் சொன்னார், உமர் சொன்னார் என்று கூறுகிறீர்கள். எனவே உங்கள் மீது வானத்திலிருந்து கல்மாரி பொழியப்படுமோ என்று நான் அஞ்சுகிறேன்” என இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்.

2. “”நான் பின்பற்றுகிறவனே அல்லாமல், புதிதாக உண்டாக்குகிறவன் அல்லன். நான் நேராக நடந் தால் என்னைப் பின்பற்றுங்கள். பிழை விட்டால் என்னைத் திருத்துங்கள்” என அபூபக்கர் சித்தீக் (ரழி) கூறினார்கள்.

3. ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக “”திக்ரு” “”ஸலவாத்து” ஓதிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து இப்னு மஸ்ஊத்(ரழி) அவர்கள், “”நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவ னாக இருக்கிறேன். நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் யாரும் இவ்வாறு திக்ரு, ஸலவாத்து ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத பித்அத்தைச் செய்கிறீர்கள்” என்று கூறி அவர்களை பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றி விட்டார்கள்.

4. ஒருவர் தும்மியதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தபடி “அல்ஹம்துலில்லாஹ்’ என்று சொல்வதோடு “வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்” என்று இணைத்துக் கொண்டார். இதனை ‘பித்அத்’ என்று கண்டித்துத் திருத்தினார்கள் இப்னு உமர்(ரழி) அவர்கள்.

5. “பித்அத்’கள் அனைத்தும் வழிகேடுகள் தான். மனிதர்கள் அவற்றில் சிலதை அழகானது (ஹஸன்) என்று கருதினாலும் சரியே” என இப்னு உமர்(ரழி) கூறியுள்ளார்கள்.

6. “”பின்பற்றுபவனாக இரு. புதிதாக ஒன்றை ஏற்படுத்தாதே” என இப்னு அப்பாஸ்(ரழி) உபதேசம் செய்துள்ளார்கள்.

7. “”நபிதோழர்கள் செய்யாத வணக்க வழிபாடு கள் எதனையும் செய்யாதீர்கள். முன் சென்றவர்கள் பின் சென்றவர்களுக்கு எதனையும் விட்டு வைக்கவில்லை” என ஹுதைபா (ரழி) அறிவித்துள்ளார்கள்.

8. “”அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல்(ரழி) அவர் கள் தொழுகையில் “”பிஸ்மியை” சப்தமிட்டு ஓதிக் கொண்டிருந்ததாகவும், அதைக் கண்ட அவருடைய தகப்பனார், மகனே! நான் நபி(ஸல்) அவர்கள், அபூ பக்கர் சித்தீக்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகியோருக்குப் பின்னே தொழுதிருக்கிறேன். அவர்களில் யாரும் “பிஸ்மியை’ சப்தமிட்டு ஓதியதை நான் கேட்டதில்லை. எனவே, மார்க்கத்தில் இல்லாத “பித்அத்’ நீ செய்வதாக நான் கருதுகிறேன் என்று கண்டித்துள்ளார்கள்.” இச்செய்தியை அவர்களே அறிவிக்கிறார்கள். நூல் : திர்மிதீ, நஸாயீ, அஹ்மத்

அடுத்து, தாபியீன்களில் தலை சிறந்தவரும், சீரிய கலீஃபாவுமான உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் “பித்அத்’ நீ செய்வதாக நான் கருதுகிறேன் என்று கண்டித்துள்ளார்கள்”.

இச்செய்தியை அவர்களே அறிவிக்கிறார்கள். நூல் : திர்மிதீ, நஸாயீ, அஹ்மத்.
அடுத்து, தாபிஈன்களில் தலைசிறந்தவரும், சீரிய கலீஃபாவுமான உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்களின் “பித்அத்’ வி­யமான எச்சரிக்கையையும் தருகிறோம்.அது பின் வருமாறு உள்ளது.

“”அல்லாஹ்வின் ஏவல்களைக் கொண்டும், நபி (ஸல்) அவர்களின் நடைமுறைகளைக் கொண்டும் மார்க்கத்தைப் போதுமாக்கிக் கொள்ளுங்கள். அதன் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திய புதுமை (பித்அத்)களை விட்டு விடுமாறு எச்சரிக்கை செய்கிறேன்.

இமாம்களின் நல் உபதேசங்கள் :
இதற்கு மேலும் இது விஷயத்தில் சந்தேகிப்பவர்கள் இமாம்களின் பெயரால் மத்ஹபுகளை அமைத்துக் கொண்டிருக்கும் முகல்லிதுகளேயாகும். ஆனால் அந்த மரியாதைக்குரிய இமாம்கள் எங்களை தக்லீது செய்யாதீர்கள். எங்கள் பெயரால் மத்ஹபுகளை அமைக்காதீர்கள் என்றே தெளிவாகக் கூறி இருக்கின்றார்கள். அந்த இமாம்களின் கூற்றுக்கு முரணாக மத்ஹபுகளை அமைத்திருப்பது போல், இங்கும் அந்த இமாம்களின் தெளிவான உப தேசங்களுக்கு விரோதமாகவே “பித்அத்’களை உண்டாக்கிச் செய்து வருகின்றனர். இதோ அந்த மரியாதைக்குரிய இமாம்களின் நல் உபதேசங்கள்.

1. இமாம் அபூஹனீபா(ரஹ்) கூறியுள்ளார்கள் :
நீங்கள் ஹதீஃத் ஆதாரங்களையும், நபி தோழர்களின் நடைமுறைகளையும் பற்றிப் பிடிப்பவர்களாய் இருங்கள். மார்க்கத்தில் புதிதாக தோன்றியவை குறித்து எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் அனைத்து பித்அத்களும் வழிகேடுகளேயாகும்.

2. இமாம் மாலிக்(ரஹ்) கூறியுள்ளார்கள் :
மார்க்கத்தல் “பித்அத்’ உண்டாக்கி அதற்கு “பித்அத்துஹஸனா’ என்று எவன் பெயர் சூட்டுகின்றானோ, அவன், நபி(ஸல்)அவர்கள் தனது ரிஸாலத்தில் (தூதுவப் பணியில்) மோசடி செய்துவிட் டார்கள் என்று கருதுகிறான். ஏனென்றால், அல்லாஹ், “அல்யவ்ம அக்மல்த்து லக்கும் தீனக்கும்…’ என்று சொல்லிவிட்டான். அன்று மார்க்க மாக இல்லாதது அதன் பின்னர் என்றுமே மார்க்க மாக இருக்க முடியாது.

3. இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறியுள்ளார்கள் :
எவன் மார்க்கத்தில் புதிதாக ஒன்றை உண்டாக்கி, அதை “பித்அத்’து ஹஸனா(அழகிய பித்அத்) என்று சொல்கிறானோ அவன் புதிதாக ஒரு மார்க்கத்தையே (மதம்) உண்டாக்கி விட்டான்.

4. இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) கூறியுள்ளார்கள் :
எங்களிடத்தில் சுன்னாவின் அடிப்படையாவது ரசூல்(ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் இருந்த வழியை உறுதியாகப் பற்றிப் பிடித்து, அவர்களைப் பின்பற்றி “பித்அத்’களை விடுவதேயாகும். ஏனென்றால் “பித்அத்’க்கள் அனைத்துதம் வழிகேடுகளே யாகும்.  நூல்: அஸ்ஸுன்னத்து வல் பித்ஆ

மேற்கூறிய மரியாதைக்குரிய நான்கு இமாம்கள் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருக்கிறோம் என்று சொல்பவர்கள், அவர்களின் மணியான இந்த உபதேசங்களுக்கு நேர்முரணாக “பித்அத்’களில் ஏன் தான் மூழ்கி இருக்கிறார்களோ? நாம் அறியோம். அது மட்டுமல்ல. “பித்அத்’களை வகை வகையாகத் தரம் பிரித்துக் கொண்டு தாங்களும் குழம்பிப் போய், மக்களையும் குழப்புவது அதைவிட விந்தையாக இருக்கிறது.

அபூ அப்தில்லாஹ்

{ 2 comments… read them below or add one }

SELVAN January 18, 2015 at 4:15 pm

1)…FIRST BID-AT AFTER NABI (SAW):
BRINGING QUR-AN IN BOOK SHAPE.
DURING NABI (SAW), QURAN WAS NEVER WRITTEN AS A BOOK.
WHOLE QURAN WAS IN HEARTS ONLY- EVEN NABI (SAW), HAD THE WHOLE QURAN IN HIS HEART.
SO, ALL THE BOOK FORMS OF QURAAN ARE THE FIRST BIDAT AFTER NABI (SAW).
2)…SECOND BIDAT IN QURAN.
PUTTING ZABAR, ZER, PESH IN QURAAN.

SO, YOU PLEASE REMOVE ALL THE QURAAN IN THE FORM OF BOOKS FROM ALL TAMILNADU .
IT WILL AUTOMATICALLY REMOVE THE SECOND BIDAT OF ZABAR, ZER …..

HOPE YOU WILL DO IT…

JUST TALKING ABOUT BIDAT IS NOT ENOUGH.

GET INTO ACTION ALSO….

Reply

Ashak July 25, 2018 at 2:27 am

செல்வன் அவர்களே பித்அத்’ என்றால் என்ன என்றே தெரியாத பல அறிஞர்கள் உள்ளனர், நீங்கள் சொல்வதுபோல் எழுத்துவடிவ குரான் என்பது பித்அத்’ அல்ல, நபி ஸல் அவர்கள் காலத்திலேயே ஒட்டக எலும்பு தோலில் எழுதப்பட்டது, ஷேர் ஜபர் என்பது அர்த்தம் மாறாமல் இருக்க, பித்அத்’ ஒழிக்கிறேன்னு அடிப்படைக்கு ஆப்பு வைக்கும் செயல்தான் உங்களது

Reply

Leave a Comment

Previous post:

Next post: