தொழுவதற்கு தடை விதிக்கும் கொடுமைக்காரர்கள்!

in சமூகம்

2:114

‘இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையிலும் இவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.’ (அல்குர்ஆன் 2:114)

சராசரி அறிவு படைத்தவருக்கும் புரியும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது. மேலதிகமாக விரிவுரையோ விளக்கமோ தேவையில்லாத அளவுக்கு மிகவும் தெளிவாக அமைந்துள்ளது இவ்வசனம். ஆயினும் இவ்வசனம் தமிழக முஸ்லிம்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. எனவே இவ்வசனத்திற்குக் கூட விளக்கம் தரும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழாண்டுக் காலம் மதரஸாக்களில் படித்த மவ்லவிகளில் பலர் மார்க்கத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைப் பற்றித் தாங்களே பறைசாற்றிக் கொள்வோர் தமிழகத்துப் பள்ளிகள் தோறும் ‘நான்கு மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் தொழவோ, தொழ வைக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டு தீன்(?) பணி செய்து வருகின்றனர்.

அல்லாஹ்வுடைய தெளிவான இந்த ஒரு வசனத்தைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்க அறிஞர்களாம்! புரிந்தாலும் இறைவனைப் பற்றிச் சிறிதும் அச்சமின்றி அவனது பள்ளியைப் பாழாக்குவோர் மார்க்கத்தின் காவலர்களாம்!

மனிதர்கள் செய்யும் கொடுமைகளில் மிகப் பெரும் கொடுமை அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்குத் தடை விதிப்பதாகும்.

அல்லாஹ்வின் பள்ளிவாசலில் எவருக்கும் கூடுதலான உரிமை கிடையாது. எந்த நாட்டைச் சேர்ந்தவனும் அதில் தொழலாம். இறைவனைத் துதிக்கலாம். எந்த மொழி பேசுபவனும் தொழலாம். துதிக்கலாம். உலகம் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் தான் அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்குத் தடை விதிக்கப்படும் கொடுமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு இந்த வசனம் கடுமையான எச்சரிக்கை விடுகின்றது! ஒரு எச்சரிக்கை அல்ல! நான்கு எச்சரிக்கைகள்!
1. உலகிலேயே மிகவும் கொடுமைக்காரர்களாக அவர்கள் இறைவனால் கருதப்படுவார்கள்.
2. இப்படித் தடுப்பவர்கள் பள்ளிக்குப் பயந்து பயந்து செல்லும் நிலை உருவாகும்.
3. இந்த உலகத்திலேயே இழிவை அவர்கள் அடைவார்கள்.
4. மறுமையில் கடுமையான வேதனையைச் சந்திப்பார்கள்.

மறுமையின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இறைவனைப் பற்றி அச்சம் உள்ளவர்களுக்கும், இந்த எச்சரிக்கை மிகப் பெரிய விஷயமாகும்.

தொழுகையாளியைத் தடுப்பவர்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமான அவனது இல்லத்தை தங்கள் சொந்த உடைமை போன்று கருதுவதால் அவர்களுக்கு எதிராக இறைவனே போர்ப் பிரகடனம் செய்கிறான். மற்றோர் இடத்தில் இதைத் தெளிவாக இறைவன் அறிவிக்கிறான். அதுவும் இறைவன் அருளிய முதலாவது அத்தியாயத்திலேயே இவ்வாறு பிரகடனம் செய்கிறான்.

‘தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும் இறையச்சத்தை ஏவியவாறு இருந்தும் அவரைப் பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றான் என்பதை பார்த்தீரா? அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லையா? அவ்வாறல்ல. அவன் (இதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால் அவனது தலைமயிரைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்துப் பொய்யுரைக்கும் (அவனது) தலைமயிரை(ப் பிடித்து) இழுப்போம். ஆகவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்.’ (அல் குர்ஆன் 96: 9-18)

பள்ளிவாசலில் இறைவனைத் தொழுவதற்குத் தடை விதிக்கும் கொடுமைக்காரர்களுக்கு எவ்வளவு கடுமையான எச்சரிக்கை இது!
நீ உன் சபையினரை உனது ரவுடிப் பட்டாளத்தை உனக்குத் தலையாட்டும் மூடர் கூட்டத்தை அழைத்து வா! நானும் எனது நரகக் காவலாளிகளை அழைக்கிறேன் என்ற எச்சரிக்கையையும் கூடப் பொருட்படுத்தாத கொடுமைக்காரர்கள் இவர்கள். தொழுபனுக்கு தடை விதிக்கின்றார்களே!

தடுக்கப்பட்டவன் குடிக்கிறான் என்பதற்காகவா?
சாராயக் கடை ஏலம் எடுத்திருக்கிறான் என்பதற்காகவா?
சினிமாக் கொட்டகை நடத்துகிறான் என்பதற்காகவா?
வட்டிக் கடை வைத்திருக்கிறான் என்பதற்காகவா?
ஊர்ப்பணத்தைச் சுரண்டி வாழ்கிறான் என்பதற்காகவா?
பள்ளிவாசல் சொத்துக்களை தன் பெயருக்குப் பட்டா போட்டுக் கொண்டான் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை.

யாரைத் தடுக்கிறார்கள்?

இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவனை
வரதட்சணை கூடாது என்பவனை
வீண் விரயமும், ஆடம்பரமும் கூடாது என்று கூறுபவனை
குர்ஆன் போதனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பவனை
இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சக் கூடாது என்பவனைத் தடுக்கிறார்கள்.

இப்போது மேலே உள்ள வசனத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! இன்றைய சூழ்நிலைக்காக இறங்கியது போல் தோன்றவில்லையா?

‘பள்ளிகள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்’ (அல்குர்ஆன் 72:18)

அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளில் இறைவனல்லாத பெரியார்களுக்கு மவ்லூது ஓதி அவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த வசனத்தின் கட்டளை அப்பட்டமாக மீறப்படுகின்றது. இவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.

‘நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது’ என்று எழுதி வைக்கும் மூடர்கள், அவர்களே எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. நான்கு மத்ஹபுகளில் எந்த மத்ஹபும் பள்ளிக்குத் தொழ வருபவர்களைத் தடுக்குமாறு கூறவில்லை. தடுக்கக் கூடாது என்றே நான்கு மத்ஹபுகளும் கூறுகின்றன.

இவ்வாறு எழுதி வைத்ததன் மூலம் நான்கு மத்ஹபுகளையும் ஒரு சேரப் புறக்கணித்தவர்கள் இவர்கள். இந்தத் தடை முதன் முதலாகத் தடுப்பவர்களையே கட்டுப்படுத்தும். ஏனென்றால் நான்கு மத்ஹபுகளுக்கும் மாற்றமாக தொழுபவர்களைத் தடுக்கின்றனர்.

இவ்வாறு எழுதி வைக்கிறோமே! நாம் வக்காலத்து வாங்கும் மத்ஹபுகளில் இதற்கு அனுமதி உண்டா? என்ற ஞானமும் அற்ற ஞான சூன்யங்கள் இவர்கள். நான்கு இமாம்களில் எந்த இமாமாவது இவ்வாறு கூறியதாக அவர்களால் காட்ட முடியாது. மத்ஹபைப் பின்பற்றுவதும் இவர்களின் நோக்கமல்ல என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை.

கத்தம், பாத்தியா, தாயத்து, தட்டு என்று மக்களைச் சுரண்டிப் பிழைப்பதற்கு ஆபத்து என்பதனால் தான் இந்தக் கூப்பாடு! நேரடியாக இதைக் கூறமுடியாதவர்கள் மத்ஹபின் காவலர்கள் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கிறார்கள். அவ்வளவு தான்!

உண்மையில் மத்ஹபைப் பின்பற்றுவது இவர்களின் நோக்கமென்றால், மத்ஹபைக் காப்பது இவர்களின் இலட்சியம் என்றால் மத்ஹபின் தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு எழுதி வைக்கத் துணிந்தது ஏன்? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.

தங்களின் புரோகிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த மவ்லவிமார்கள் தவறான வழிகாட்டும் போதும், தொழுகையாளிகளைத் தடுக்குமாறு தூண்டும் போதும் அவர்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் நிற்கின்ற நிர்வாகிகளும் ஜமாஅத்தார்களும் இறைவனது இந்த எச்சரிக்கைக்கு உரியவர்கள் தாம். இவர்களின் துணையின்றி மவ்லவிமார்கள் இத்தகைய அக்கிரமத்தை அரங்கேற்ற முடியாது என்பதால் முதல் குற்றவாளிகளே இவர்கள் தாம்.

சவூதி அரேபியா போன்ற நாடுகளில் எந்த மத்ஹபையும் பின்பற்றுவதில்லை. அவர்களின் நிர்வாகத்தின் கீழ்தான் கஃபா ஆலயம் உள்ளது. சவூதி அரசாங்கம் ‘மத்ஹப்வாதிகள் கஃபாவுக்கு வரக்கூடாது, ஹஜ் செய்ய அவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று உத்தரவு போடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது இந்த மவ்லவிமார்கள் என்ன செய்வார்கள். 96:9, 2:114 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டி சவூதி ஆட்சியாளரை நார்நாராகக் கிழித்திருப்பார்கள். இப்போது மட்டும் இந்த இருவசனங்களும் இவர்களுக்கு நினைவுக்கு வரும். அவர்களே இந்த அக்கிரமத்தை அரங்கேற்றும் போது மட்டும் இந்த வசனங்களை மறந்து விடுகின்றனர்.

இறையச்சமுள்ள மவ்லவிகள் இந்த அக்கிரமத்தைச் செய்யமாட்டார்கள். இறையச்சமுள்ள மக்கள் இந்த அக்கிரமத்துக்குத் துணை போக மாட்டார்கள் என்று நம்புகிறோம்.

இஸ்லாமிய தாவா.காம்

{ 2 comments }

asiaabdulrahman August 23, 2013 at 2:14 pm

I like it. Very super. Allah oruvan

AZEEZULLAH, JEDDAH , KSA. September 17, 2013 at 12:21 am

அல்லாஹ் என்பதற்கு தர்கா, மவ்லுது, மந்திரித்தல், தாயத்து . . . . . .இதெல்லாம் நேரான வழியாக உள்ளது அதற்கெல்லாம் யார் யார் தடங்கலாக இருந்கின்றர்களோ அவர்கள் பள்ளிவாசலுக்கு வரகூடாது.

அவைகள் எல்லாம் தான் மிகப்பெரிய பவர் அதாவது சக்தி இந்த சக்தியானது மக்களின் மனதுக்குள் சாதாரணமாக உள்ளது இவைகளை ஒளிப்பதுக்கு வழி என்னவென்றால் இஸ்லாத்தினை மிக அதிகமாக மிக ஒழுக்கத்துடன் மக்களிடத்தில் கத்துகொடுக்கணும். உண்மை, வணக்கம் , பயபக்தி என்பதெல்லாம் மிகச்சரியாக தெரியாமலேய் என்றும் நடைமுறையில் உள்ள பழக்கத்தில் வாழ்து காலத்தை கழிக்கின்றனர்.

அரபிக் படித்த ஆலிம் களுக்கு முதலில் அல்லாஹ் நல்ல தூய்மையான இஸ்லாத்தை தரனும் மற்றும் மக்களுக்கு முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை மற்றும் போதனைகளை சரியாக பின்பற்ற்குடிய மக்களாக ஆக்கி அருள்புறிவானாக ஆமீன் யா ரப்பில் ஆலமீன்.

Comments on this entry are closed.

Previous post:

Next post: