நபி(ஸல்) அவர்கள் ரமழான் மாதத்தில் ஜமாத்து அன்றி 20 ரகஅத்துகளும், வித்ரும் தொழுதார்கள் (இப்னு அப்பாஸ்(ரழி) பைககீ)
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ‘இப்றாஹீம்பின் உஸ்மான்’ என்பவர் மிகவும் பலகீனமானவர். இவர் பற்றி இவர் பொய்யர் என்று ஷஃபா அவர்களும், நம்பகமற்றவர் என்று அஹ்மத், இப்னு முயீன், புகாரி, நஸயீ, அபூதாவூத், அபூஹாத்தம், தாரகுத்னீ ஆகியோரும், ஹதீஸ்கலையினரால் புறக்கணிக்கப்பட்டவர் என்று திர்மிதி, அபூதாலிம் ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.
உமர்(ரழி) அவர்கள் காலத்தில் ரமழானில் மக்கள் 23 ரகஅத்துக்கள் தொழுது கொண்டிருந்தார்கள். (யஜீது பின் ரூமான், பைஹகீ)
இதன் முதல் அறிவிப்பாளரான ‘யஜீதுபின் ரூமான்’ என்பவர் உமர்(ரழி)அவர்களின் காலத்தவர் அல்லர் என்று இமாம் பைஹகீ அவர்களே விமர்சித்துள்ளார்கள். இவ்வாறு ஒருவர் காலத்தில் வாழ்ந்திராத ஒருவர் அக்காலத்தவரின் நடைமுறைப் பற்றி எடுத்துக்கூறுவதை எவ்வாறு ஏற்க முடியும்? ஆகவே இந்த அடிப்படையில் இவ்வறிவிப்பு கோளாறுடையதாயிருப்பதால் ஏற்புக்குறியதல்ல.
அலி(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைக்கும்படி ஒருவருக்கு கட்டளையிட்டார்கள். (அபுல்ஹஸனாஃ. நூல்: பைஹகீ, இப்னு மாஜ்ஜா)
இதன் அறிவிப்பாளராகிய ‘அபுல்ஹஸனாஃ’ என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுகமற்றவர் என்று இப்னு ஹஜர் அவர்கள் தமது ‘தக்ரிபு’ எனும் நூலில் விமர்சித்துள்ளார்கள். ஆகவே இது ஏற்புக்குறியதல்ல
ஒருமுறை அலி(ரழி) அவர்கள் ரமழானில், குர்ஆனை நன்கு ஓதும் நபர்களை அழைத்து மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழ வைக்கும்படி கட்டளையிட்டிருப்பதோடு அலி(ரழி) அவர்கள் தாமே அந்த மக்களுக்கு வித்ரும் தொழவைத்துக் கொண்டிருந்தார்கள். (அபூஅப்துர்ரஹானிஸ்ஸில்மீ, பைஹகீ)
இதன் அறிவிப்பாளர் தொடரில் ‘ஹம்மாதுபின்ஸ்ஸ்ஷுஐபு’ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை இப்னு முயீன், நஸயீ ஆகியோர் பலஹீனமானவர் என்கிறார்கள். இமாம் புகாரி அவர்கள் இவர் பிரச்னைக்குரியவர் என்றும், இப்னு அதீ அவர்கள் இவருடைய பெரும்பாலான அறிவிப்புகள் ஏற்புக்குரியவை அல்லவென்றும் விமர்சித்துள்ளார்கள். ஆகவே, இது முறையான அறிவிப்பல்ல.
உமர்(ரழி) அவர்கள் மக்களுக்கு 20 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்டார்கள். (யஹ்யப்னுஸயீத் இப்னு அபீஷைபா)
இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெற்றுள்ள ‘யாஹ்யா பின் ஸயீத்’ என்பவர் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் உள்ளவரல்லர். ஆகவே இதன் அறிவிப்பாளர் தொடரில் முறிவு காணப்படுவதால் இதுவும் ஏற்புக்குரிய தகுதியை இழந்து விடுகிறது.
உபையுபின் கஃபு(ரழி) அவர்கள் மதீனாவில், ரமழான் மாதத்தில் மக்களுக்கு 20 ரகஅத்துக்கள் தொழவைத்து விட்டு 3 ரகஅத்துகள் வித்ரும் தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். (அப்துல் அஜீஸ்பின்ரஃபீஉ, இப்னுஷைபா)
இதன் அறிவிப்பாளராகிய ‘அப்துல் அஜீஸ்பின்ராஃபீஉ’ என்பவர் உபையுபின் காலத்தில் உள்ளவர் அல்லர். ஆகவே இவ்வறிவிப்புத் தொடரில் முறிவு ஏற்பட்டு ஏற்புத்தன்மையை இழந்திருப்பதோடு, உபையுபின்கஃபு(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் தாம் தமது குடும்பத்தாருக்கு 8 ரகஅத்துகளும் வித்ரும் தொழவைத்ததாக எடுத்துக்கூறப்பட்ட அறிவிப்பும், உமர்(ரழி) அவர்கள் உபையுபின் கஃபு(ரழி) தமீமுத்தாரீ(ரழி) ஆகியோருக்கு 11 ரகஅத்துகள் தொழவைக்கும்படி கட்டளையிட்ட அறிவிப்பும் மிக பலம் வாய்ந்தவையாயிருக்கும் போது அவற்றுக்கு முரண்பட்டதாகவும் இருக்கின்றது.
இப்னுமஸ்வூத்(ரழி) அவர்கள் 20 ரகஅத்துகள் தொழுதுவிட்டு, 3 ரகஅத்துகள் வித்ரு தொழுவார்கள்.(அஃமஸ், கிதாபு கியாமுல்லைல்)
இதன் அறிவிப்பாளராகிய ‘அஃமஸ்’ என்பவர் இப்னுமஸ்வூத்(ரழி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பிழந்தவராவார். ஆகவே இதுவும் ஏற்புக்குரியதல்ல.
நாங்கள் உமர்(ரழி) அவர்கள் காலத்தில் 20 ரகஅத்துக்களும், வித்ரும் தொழுதோம். (ஸாயிபுபின்யஜீத், பைஹகீ)
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள ‘அபூ உஸ்மான்’ அப்தில்லாஹ்’ என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுகமற்றவராக இருக்கிறார். மேலும் இதே ‘ஸாயிப்னுயஜீத்’ என்பவர் “நாங்கள் உமர்(ரழி) அவர்களின் காலத்தில் 11 ரகஅத்துகள் தொழுது கொண்டிருந்தோம்” என்று அறிவித்துள்ள ஓர் அறிவிப்பு ‘சுனனு ஸயீதிப்னிம்ஃன்ஸூர்’ எனும் நூலில் காணப்படுகிறது. இவ்வறிவிப்பு மிகவும் பலம் வாய்ந்த ஸஹீஹான அறிவிப்பாக உள்ளது என்று ‘அல்மஸாபீஹ் ஃபிஸலாத்திந்தராவீஹ்’ எனும் நூலில் இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இவ்வாறே ‘உமர்(ரழி) அவர்கள் காலத்தில் மக்கள் ரமழான் மாதத்தில் 20 ரகஅத்துகள் தொழுது கொண்டிருந்தார்கள்’ என்ற ஓர் அறிவிப்பும் பைஹகீயில் காணப்படுகிறது. இதன் அறிவிப்பாளரான ‘அபூஅப்தில்லாஹ்பின் ஃபன்ஜவைஹித்தைனூரி’ என்பவர் ஹதீஸ் கலைக்கு அறிமுக இல்லாதவராயுள்ளார். ஆகவே இதுவும் ஏற்புக்குரியதல்ல.
மேற்கண்டவாறு 20 ரகஅத்துக்கள் என்ற வகையில் ஆதாரமற்ற பல அறிவிப்புகள் பல காணப்பட்டாலும், அவை அனைத்தும் அதர்கள் – சஹாபாக்களின் சொற் செயல்கள்தான். நமக்கு 8+3 பதினொரு ரகஅத்துகள் என்பதற்கு நபி(ஸல்) ஆவர்களின் சொல்லும், செயலும், அங்கீகாரமும் அசைக்க முடியாத ஸஹீஹான ஆதாரங்களாக இருப்பதால் ரமழானுடைய இரவுத் தொழுகை 8+3 பதினொரு ரகஅத்துகள்தான் என்பதை மிகத் தெளிவாக அறிகிறோம்.
எனவே ரமழான் இரவின் முற்பகுதியில் 8+3 தொழுவது நபிவழியாகும். இரவின் பிற்பகுதியில் தொழுவதும் நபிவழியாக இருப்பதோடு மிகவும் சிறப்புக்குரியதாகவும் இருக்கிறது. அதிகப்படுத்தி ஜமாஅத்தாக தொழுவது நிச்சயமாக நபிவழியே அல்ல. ஜமாஅத்தாக அல்லாமலும் குறிப்பிட்ட எண்ணிக்கையை நிர்ணயம் செய்யாமலும் விரும்புகிறவர்கள் விரும்பிய எண்ணிக்கையில் எவ்வித நிர்ப்பந்தமோ, சடைவோ இல்லாமல் தனியாக உபரி வணக்கமாக (நஃபிலாக) தொழுவதற்கு மார்க்கத்தில் தடையேதும் இல்லை.
Comments on this entry are closed.