இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்!  

Post image for இறைவனால் இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்!   

in பொதுவானவை

 اتَّبِعُواْ مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلاَ تَتَّبِعُواْ مِن دُونِهِ أَوْلِيَاء قَلِيلاً مَّا تَذَكَّرُونَ

    (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெருகிறீர்கள். (7:3)

    அல்லாஹ் இவ்வசனத்தின் கருத்தின்படி நாம் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும் அவனால் அனுப்பப்பட்ட நபிصلى الله عليه وسلم அவர்களை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இதற்கு மாறாக மற்றவர்களைப் பாதுகாவலர்களாக நம்பி பின்பற்றுவோமேயானால் நிச்சயமாக நாம் பகிரங்கமாக வழிகேட்டிலேயே ஆகிவிடுவோம்.

   வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது நபி அவர்களின் நடைமுறை. காரியங்களில் கெட்டது (நபி  அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாத)  பித்அத்துக்கள், பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடுகள். வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும் என்று நபி அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரழி),ஜாபிர்(ரழி) புகாரீ,நஸயீ, முஸ்லிம்)

    எனவே நபி அவர்கள் சொல்லாத செய்யாத அங்கீகரிக்காத அனைத்து செயல்களும்  நம்மை நரகத்திற்கு இட்டுச் செல்லும் வழிகேடான செயல்களே! ஆனால் இன்று முஸ்லிம்கள் இந்த பித்அத்தான வழிகேடான செயல்கள் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் வாழ்கின்றனர். அவர்கள் இதன் கடுமையை உணர வேண்டும்.

    மார்க்கம் என்பது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்பட்டது. மார்க்கத்தில் உள்ள அமல்களையும் சட்ட திட்டங்களையும், ஏவல் விலக்கல்களையும் ஏற்படுத்தி நபி அவர்கள் மூலமாக அல்லாஹ் நமக்கு அருளச் செய்தான். எப்படி வணக்கத்திற்குரியவன் என்பது அல்லாஹ்விற்கு மட்டும் உரிய தனித்தன்மையோ அதுபோல மார்க்கத்தில் கட்டளையிடுதல் என்பதும் அல்லாஹ்வின் தனித்தன்மையில் உள்ளதாகும். நபி அவர்கள் கூட மார்க்கத்தில் தன் விருப்பத்திற்கேற்ப எந்த செயல்களையும் மார்க்கமாக அறிவித்துவிட முடியாது.

وَمَا يَنطِقُ عَنِ الْهَوَى  إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى  عَلَّمَهُ شَدِيدُ الْقُوَى   
    அவர்கள் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹிமூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறில்லை. மிக்க வல்லமையுடையவர் (ஜிப்ரயீல்) அவருக்கு கற்றுக்கொடுத்தார். (53:3-5)

    என்பதாக அல்லாஹ் கூறுகிறான். அப்படியே ஒரு சமயம் தங்களுடைய மனைவியர்களின் விருப்பத்திற்காக ஒரு பொருளை ஹராமாக்கிக் கொண்டதற்காக உடனே கண்டித்து அல்லாஹ் ஆயத்தை இறக்கி வைத்தான்.


يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ
    நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன். (66: 1)

    அல்லாஹ்  நபி அவர்கள்  மீது மிக அதிக  பிரியமுடையவன். அத்தகைய  பிரியமுள்ள  நபியே  சொல்லி விட்டார்கள் என்பதற்காக அல்லாஹ் நபி அவர்கள் கூறியதை அனுமதித்திருக்கலாம் அல்லவா? ஏன் அனுமதிக்கவில்லை? ஏனென்றால் மார்க்கத்தில் ஹலால், ஹராமை ஏற்படுத்துவது அல்லாஹ்வின் தனித்தன்மை. இதில் தன்னுடைய நபியையே அனுமதிக்கவில்லையென்றால் இன்று இமாம்கள் பெரியார்கள் முன்னோர்களின் பெயரால் நபி காட்டித்தராத செயல்களை எல்லாம் மார்க்கமாக எண்ணி செயல்படுவதை அல்லாஹ் எவ்வாறு ஏற்றுக்கொள்வான் இதனைச் சிந்திக்க வேண்டாமா?

    மேலும் நபி காட்டித் தராத செயல்களை எல்லாம் நன்மை என எண்ணிச் செய்தால் இந்த நன்மையான செயல்களை நபி அவர்கள் நமக்கு காட்ட மறந்துவிட்டார்களா? அல்லது மறைத்து விட்டார்களா? அல்லது அவர்களுக்கே அது நன்மையான செயல் என்று தெரியாமல் போய்விட்டதா? இது நபி அவர்களின் தூதுவத்தையே களங்கப்படுத்தக் கூடிய எவ்வளவு பெரிய கொடுஞ்செயல் என்பதை ஏனோ இவர்கள் உணரவில்லை. இதைவிட கொடுஞ்செயல் என்னவென்றால் இதுவெல்லாம் மார்க்கம், நன்மையான செயல் என்று அல்லாஹ்வுக்கே அவர்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள் போலும்.

    அல்லாஹ் முக்காலத்தையும் அறிந்தவன். இன்று இவர்கள் நபி அவர்கள் செய்து காட்டாத எந்தெந்த செயல்களையெல்லாம் நன்மை என்று எண்ணிச் செய்கிறார்களோ இதனையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தே உள்ளான். அப்படியிருக்க இவர்கள் செய்யும் இச்செயல்களெல்லாம் அல்லாஹ்விடத்தின் நன்மையான விஷயங்களாக இருக்குமேயானால் நபி அவர்களை இச்செயல்களை செய்யும்படி அல்லாஹ் ஏவியிருக்கமாட்டானா? ஏவியிருப்பானே? அப்படியெனில் ஏன் ஏவவில்லை? இச்செயல்களெல்லாம் நன்மையானது என அல்லாஹ்விற்கே தெரியாமல் போய்விட்டதா? (நவூது பில்லாஹ்)

    “வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது.அதில் அழிந்து நசமாகக் கூடியவனைத் தவிர வேறு யாரும் வழி தவறவே மாட்டார்கள். (உமர்(ரழி)நூல்:ரஜீன்)


قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا  الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا
    அல்லாஹ்  கூறுகிறான், செயல்களில்  மிகப்பெரும்  நஷ்டவாளிகள்  யார் என்பதை  நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயணற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல் குர்ஆன் 18:103,104)

    எனவே பெரியார்கள் முனோர்களின் பெயரால் மார்க்கத்தில் இட்டுக்கட்டி அதனை கண்மூடித்தனமாக பின்பற்ற சொல்லும் வர்க்கத்தினரை நம்பிச் செயல்படாமல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட வேதத்தையும், அவனால் அனுப்பப்பட்ட நபி அவர்களின் சுன்னத்தான வாழ்க்கையின்படி வாழக்கூடிய மக்களாக வாழ வல்ல அல்லாஹ்(ஜல்) நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

அபூ ஷமீமா, விருதை

{ 2 comments… read them below or add one }

M.M.A.NATHARSHAH DUBAI January 29, 2015 at 4:08 pm

AAMEEN

Reply

muhamed maurice February 14, 2015 at 3:35 pm

Ameen Jazakallahu khai

Reply

Leave a Comment

Previous post:

Next post: