ஜமாஅத்து(கூட்டுத்)தொழுகை தொழுகையைக் கடைபிடியுங்கள். ஜகாத்தையும் கொடுத்து விடுங்கள். ருகூஃ செய்வோருடன் சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்! (2:43)
மேற்காணும் வசனத்திற்கு ”ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுங்கள்” என்பதாக இப்னுஅப்பாஸ்(ரழி) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (தப்ஸீர் இப்னு அப்பாஸ்)
ஜமாஅத்துடன் தொழுவதற்கும், தனிமையாகத் தொழுவதற்குமிடையே நன்மையில் ஏற்ற தாழ்வு: ”ஜமாஅத்துடன் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
அபூஸயீத்(ரழி) வாயிலாக புகாரீயில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் 25 பங்கு பதவியில் கூடுதலாகும். என்றும், அபூஹுரைரா(ரழி) வாயிலாக புகாரீ, முஸ்லிம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள அறிவிப்புகளில் 20க்கு மேலதிகமான பங்கு பதவியால் கூடுதலாகும் என்றும் உள்ளது.
மேற்காணும் ஹதீஸ்களில் 27 பங்கு என்றும், 25 பங்கு என்று 20க்கும் அதிகமான பங்கு என்றும் மூன்று விதமாக இடம் பெற்றிருப்பினும் ”25பங்கு” எனும் அறிவிப்புகளே மிக அதிகமானவையாகும். இவ்வாறு 20க்கும் மேலதிகமான பங்கு, 25 பங்கு, 27 பங்கு என்பன போன்று கூடுதல், குறையுதலாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பதற்கு காரணம், அல்லாஹ் அவர்களுக்கு ஆரம்பத்தில் குறையுதலாக அறிவித்து, பின்னர் கூடுதலாக அறிவித்திருக்கலாம் என்பதைத் தவிர, இது வகையில் பிறர் தன்னிச்சையாகத் தந்துள்ள எத்தகைய சுயவிளக்கங்களும் தேவையில்லை.
ஜமாஅத்து நடத்துவதற்கு இருவரோ, அதற்கு மேற்பட்டவரோ இருந்தால் போதும்: ஒருமுறை நானும் எனது சிறிய தந்தையின் மகனும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் நீங்களிருவரும் பிரயாணம் செய்வீர்களானால், பாங்கு சொல்லி, இகாமத்தும் சொல்லுங்கள். உங்களிருவரில் பெரியவர் இமாமத்துச் செய்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மாலிக்குப்னுல் ஹுவைரிஸ்(ரழி), புகாரீ)
பின்பற்றித் தொழுவோர் அதிகமாவதால், ஜமாஅத்தின் பலனும் அதிகரிக்கிறது: ”ஒருவர் தாம் தனித்துத தொழுவதைவிட மற்றொருவருடன் சேர்ந்து (ஜமாஅத்தாகத்) தொழுவது சிறந்ததாகும். ஒருவர் இருவருடன் சேர்ந்து தொழுவதானது தாம் ஒருவருடன் சேர்ந்து தொழுவதை விட மேலானதாகும். (ஜமாஅத்) அதிகமாகும் அளவுக்கு அல்லாஹ்வுக்குப் பிரியமானதாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (உபய்யுபின் கஃபு(ரழி),அபூதாவூத், நஸயீ, அஹ்மத்)
ஜமாஅத்துடன் தொழுவது வலியுறுத்தப்பட்டுள்ள சுன்னத்துகளில் ஒன்றாகும்: நாளை மறுமையில் தாம் முஸ்லிமான நிலையில் அல்லாஹ்வை சந்திக்க விரும்புவோர் இத்தொழுகைகளை அவற்றிற்காக பாங்கு அழைப்புக் கொடுக்கப்படும் இடத்தில் (பள்ளிவாசலில்) கவனத்தோடு முறையாகத் தொழுது கொள்வாராக! நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய நபி அவர்களுக்கு நேர்வழியான பல சுன்னத்து – நடைமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான், (அதன் அடிப்படையில்) நிச்சயமாக பள்ளிக்குச் சென்று ஜமாஅத்தோடு தொழும் தொழுகைகளும் நேர்வழியான சுன்னத்துகளில் உள்ளவையாகும். (ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது) இப் பின்தங்கியவர் தமது வீட்டில் தொழுவதுபோல், நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுது கொள்வீர்களானால், உங்கள் நபி அவர்களின் சுன்னத்தை தவற விட்டவராவீர்கள். உங்கள் நபி அவர்களின் சுன்னத்தைத் தவறவிட்டால் நீங்கள் வழி தவறியவர்களாகிவிடுவீர்கள்.
எவரேனும் ஒருவர் தாம் அழகிய முறையில் ஒளூ செய்து கொண்டு இப்பள்ளிகளில் யாதேனும ஒரு பள்ளியை நோக்கிச் செல்வாரானால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு கால் அடிக்கும் ஒரு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். ஒரு பதவியை உயர்த்தி, ஒரு பாவத்தையும் அழித்து விடுகிறான். (சஹாபாக்களாகிய) எங்களிடையே நான் பார்த்திருக்கிறேன் பகிரங்கமாக நயவஞ்சகத் தன்மையுடைய முனாபிக்கான நபரைத் தவிர மற்றொருவரும் ஜமாஅத்துத் தொழுகைக்கு பின்னடைய மாட்டார். (இயலாத) ஒருவரை வரிசையில் நிற்க வைப்பதற்காக, இருவருடைய தோள் புஜங்களில் அவருடைய கைகள் போடப்பட்டு அவரைத் தாங்கிய நிலையில் கொண்டுவந்து பள்ளியில் சேர்க்கப்படும் (சூழ்நிலை அப்போது இருந்து வந்தது) என்று இப்னுமஸ்ஊத்(ரழி) அறிவித்துள்ளார்கள். (முஸ்லிம்,அபூதாவூத், நஸயீ)
பஜ்ரு, இஷா ஆகிய தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுவதன் சிறப்பு: ”இஷாவை ஜமாஅத்துடன் தொழுதவர் பாதி இரவு நின்று வணங்கியவர் போலாவார். சுப்ஹை ஜமாஅத்துடன் தொழுதவர் முழு இரவும் நின்று வணங்கியவர் போலாவார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (உஸ்மான்(ரழி), முஸ்லிம்)
முனாபிக்கானவர்களுக்கு பஜ்ரு, இஷா ஆகிய தொழுகைகளைப் பள்ளிக்கு வந்து ஜமாஅத்தோடு தொழுவதைப் பார்க்கினும் மிகச் சிரமமான தொழுகை வேறில்லை. அவ்விரண்டின் பலனை அவர்கள் அறிந்து கொண்டால் அவற்றைத் தொழுவதற்காக தவழ்ந்தவர்களாக வேணும் (பள்ளிக்கு) வந்து விடுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), புகாரீ)
ஜமாஅத்துடன் தொழுவதற்காக ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்தவருக்கு அது தவறிவிடினும் அதன் பலன் கிடைக்கும். ”ஒருவர் நல்ல முறையில் ஒளூ செய்துவிட்டு (ஜமாஅத்தோடு) தொழுவதற்காக பள்ளிக்குகம் சென்றார். (அங்கு) மக்கள் தொழுது முடிந்து விட்டதைக் கண்டார். (தாம் முயற்சித்து வந்தமைக்காக) அந்தத் தொழுகைக்கு வந்து (ஜமாஅத்துடன்) தொழுதவர்களுக்குக் கிடைக்கும் கூலியில் இவருக்கும் அல்லாஹ் கொடுப்பான்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி),அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத்)
ஜமாஅத்துடன் தொழுவதற்காக ஓடி வருதல் கூடாது: நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது, சிலர் வேகமாக நடந்துவரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றார்கள். தாம் தொழ வைத்து முடித்தவுடன் உங்களுக்கு என்ன நேர்ந்தது? (சிலர் வேகமாக நடந்துவரும் சப்தத்தை நான் கேட்டேனே) என்றார்கள். அதற்கு அவர்கள் நாங்கள் தொழுகைக்காக வேகமாக விரைந்து வந்தோம் என்றனர். ”நீங்கள் அவ்வாறு வேகமாக விரைந்து வர வேண்டாம்” என்று அவர்களை நோக்கி கூறிவிட்டு, நீங்கள் தொழுகைக்காக வரும்போது கம்பீரத்தோடு அமைதியாக வாருங்கள்! தொழுகையில் உங்களுக்குக் கிடைத்த அளவு தொழுது கொள்ளுங்கள், எந்தளவு தவறி விட்டதோ அதை நிறைவு செய்து கொள்ளுங்கள், எந்தளவு தவறி விட்டதோ அதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்றார்கள். (அப்துல்லாஹ்பின் அபீகதாதா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
வெகுதூரத்திலிருந்து பள்ளிக்குவந்து தொழுவோருக்கு அதிக நன்மை உண்டு: ”நிச்சயமாக தொழுகையில் மகத்தான கூலியை உடையவர், தொழுகைக்கு வருவதில் நடையால் அதிக தூரமுடையவரே ஆவர்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூமூஸா(ரழி), முஸ்லிம்)
ஜமாஅத்தை விட்டவர்மீது ஷைத்தானின் ஆதிக்கம்: ”ஏதேனும் ஓர் ஊரிலோ அல்லது காட்டுப் பகுதியிலோ மூன்று நபர்கள் இருந்து அவர்களிடையே (ஜமாஅத்தாக) தொழுகை நிறைவேற்றப்படா விட்டால், அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் கொள்கிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதைக் கடைபிடியுங்கள். ஏனெனில் தனிமையில் மேயும் ஆட்டைத்தான் ஓநாய் கபலிகரம் செய்கிறது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபுத்தர்தாஃ(ரழி), அபூதாவூத், நஸயீ, அஹ்மத், இப்னுகுஜைமா இப்னு ஹிப்பான்)
குருடரும் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுவதே மேலாகும்: கண்பார்வை இல்லாத ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே? சில (சந்தர்ப்பங்களில்) என்னைப் பள்ளிக்கு அழைத்து வருவோர் யாருமில்லாமலாம் விடுகிறேன் என்று கூறி தமக்கு அனுமதி கொடுத்தால் தமது வீட்டிலேயே தாம் தொழுது கொள்வதாகக் கேட்டுக்கொண்டார். நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி, அவர் சென்று கொண்டிருக்கும்போது, அவரை அவர்கள் அழைத்து, தொழுகையின் அழைப்பாகிய பாங்குடைய சப்தத்தை நீர் கேட்கிறீரா? என்றார்கள். அதற்கு அவர் ”ஆமாம்” என்றார். (அவ்வாறாயின் அந்த அழைப்பிற்கு) நீர் பதில் அளிப்பீராக! என்றார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
தக்க காரணமின்றி ஜமாஅத்தை விட்டவர் மீது நபி(ஸல்) அவர்களின் ஆத்திரம்! ”எனது வாலிப நேயர்களிடம் கூறி, விறகு கட்டுகளை எனக்காக சேகரிக்கும்படி செய்து, பிறகு காரணமின்றி ஜமாஅத்தோடு தொழாது தமது வீட்டில் தொழுது கொண்டிருப்போரிடம் வந்து (அவற்றைப் போட்டு) அவர்கள் வீடுகளைத் தீ வைத்துக் கொளுத்திவிடலாம் என்று நான் கருதுகிறேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம், திர்மிதீ,அபூதாவூத், இப்னுமாஜா)
மேற்காணும் அறிவிப்பில் பார்வை இல்லாதவர் பாங்கு சப்தத்தைக் கேட்பதனால், அதற்கு பதிலளிக்கும் வகையில் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதானது, பார்வை இழந்தவரும் தம்மால் இயன்றளவு பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுவதே மேலாகும் என்பதை உணர்த்துவதற்காகவே அன்றி அவருக்கு எவ்வித கஷ்டம் ஏற்பட்ட போதிலும் அவர் அதைப் பொருட்படுத்தாது, அவசியம் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுதாக வேண்டும் என்ற கருத்தில் அல்ல. காரணம், ”அல்லாஹ் எந்த ஓர் என்பதாக அல்குர்ஆன் கூறுகிறது. (2:286)
இவ்வாறே சரியான காரணமின்றி ஜமாஅத்துடன் தொழாது தமது வீடுகளில் தொழுகிறவர்களின் வீடுகளைத் தீ வைத்து கொளுத்தி விடலாம் என்று நபி(ஸல்) அவர்கள் நினைத்தார்கள தவிர, அவ்வாறு எந்த வீட்டையும் அவர்கள் கொளுத்தவிடவில்லை. இவ்வாறு கூறுவதன் மூலம் ஜமாஅத்தை விடுபவர் மீது தமக்குள்ள ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
பிரயாணம், வியாதி முதலிய தக்க காரணங்களால் ஜமாஅத்தை விடுபவருக்கு அதன் பலன் உண்டு. ”ஓர் அடியார் வியாதியுற்று விட்டால் அல்லது பிரயாணம் செய்து விட்டால், அவர் ஆரோக்கியமாக, தமது சொந்த ஊரில் இருக்கும்போது செய்து கொண்டிருந்த அமல்களை அவருக்கு எழுதப்படும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூமூஸா(ரழி), புகாரீ,அபூதாவூத், அஹ்மத்)
சில ரகாஅத்துகள் விடுபட்டவராக இமாமைப் பின்பற்றித் தொழுவோர் நிலை: ”நீங்கள் (தொழுகைக்காக) ”இகாமத்து” சொல்வதைச் செவியுற்றால் உங்களிடம் அமைதியும், கம்பீரமும் உள்ளவர்களாக தொழுகைக்கு நடந்து வாருங்கள்! அவசரப்படாதீர்கள் உங்களுக்கு (இமாமுடன் கிடைத்தவற்றைத் தொழுங்கள். விடுபட்டவற்றைப் பூர்த்தி செய்து விடுங்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்)
”உங்களில் ஒருவர் தொழுகையை நாடி (வருவாரா)னால், அவர் தொழுகையில் தான் இருந்து கொண்டிருக்கிறார்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரழி), முஸ்லிம்) இவ்வறிவிப்புகளின்படி தொழுகைக்காக வரும் நாம் அதற்காக ஓடிவராமல் மிகவும் அடக்கத்துடன் நடந்து வரவேண்டும் என்பதையும், நாம் தொழுகையை நாடி வருவதால் தொழுகையில் ஒருசில பகுதி நமக்குக் கிடைக்காமல் தவறிவிட்டாலும் தொழுகையின் பலன் நமக்கு உண்டு என்பதையும் அறிகிறோம். சில ரகாஅத்துகள் விடுபட்டவராக இமாமைப் பின்பற்றி தொழுதவர் அந்த இமாமுடன் சேர்ந்து தாம் தொழுதுள்ள ரகாஅத்துகளை, முறையே தமது தொழுகையின் முதலாவது, இரண்டாவது ரகாஅத்து என்பதாகக் கொள்ள வேண்டும்.
மேற்காணும் ஹதீஸில் ”விடுபட்டவற்றைப் பூர்த்தி செய்து விடுங்கள்” என்பதாக வாசகம் இடம்பெற்றிருப்பதால், ஒன்றைப்பூர்த்தி செய்வதென்பது, அதற்குமுன் அதுசம்பந்தமாக எதையும் செய்திருந்தால் தான், அத்துடன் மற்றவற்றையும் சேர்த்து அதைப்பூர்த்தி செய்யமுடியும். இவ்வாறே ஒருசில ரகாஅத்துகள் விடுபட்ட ஒருவர் இமாமுடன் தாம் சேர்ந்து ரகாஅத்துகளை முறையே தமது ”முதலாம் ரகாஅத்து, இரண்டாம் ரகாஅத்து” என்று வரிசைப்படுத்திக் கொண்டால் தான் ஹதீஸின்படி விடுபட்ட மற்ற ரகாஅத்துகளையும் தொழுது அவர் தொழுகையைப்பூர்த்தி செய்து கொள்வதென்பதற்குப் பொருத்தமாகும்.
ஒருசில ரகாஅத்துகள் விடுபட்டவராக இமாமுடன் சேர்ந்து தொழும் போது தமக்குக் கிடைத்த ரகாஅத்துகள் தமது தொழுகையின் முற்பகுதி தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பின்வருமாறு ஓர் அறிவிப்பு பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.
இமாமுடன் நீர் அடைந்துகொண்டவை உமது தொழுகையின் முற்பகுதியாகும். (அதன் பிற்பகுதியை நீர் பூர்த்தி செய்கையில்) குர்ஆனில் இருந்து உமக்கு விடுபட்டவற்றை நீர்பூர்த்தி செய்துகொள்வீராக! (பைஹகீ)
ஒரு சில ரகாஅத்துகள் விடுபட்டவராக இமாமைப் பின்பற்றித் தொழ முனைபவர் தொழுகையின் பர்ளுகளில் ஒன்றாகிய ”தக்பீருத்தஹ்ரீம்” எனும் முதல் தக்பீரைக் கூறியே இமாமுடன் தொழுகையில் பிரவேசிக்கிறார். ஆகவே அவர் தக்பீர் கூறி தொழுகையில் பிரவேசிக்கும் அந்த ரகாஅத்தே முறைப்படி அவருக்கு முதலாம் ரகாஅத்து ஆகிறது.
ஒருவர் இமாமுடைய கடைசி ரகாஅத்தில் அவரைப் பின்பற்றினால் அவருடன் கடைசி இருப்பு இருந்து, அதில் ”தஷஹ்ஹ{து – அத்தஹிய்யாத்து” ஓதி, இமாம் ஸலாம் கொடுத்தவுடன் தமக்கு விடுபட்டவற்றைப் பூர்த்தி செய்வதற்காக தாம் எழுந்து தொழவேண்டும்.
அப்போது அவர் இமாமுடன் தொழும்போது தொழுகையின் இறுதியில் தாம் இருந்துள்ள கடைசி இருப்பையும், ஓதிய அத்தஹிய்யாத்தையும் கணக்கிடாமல், அவை தாம் இமாமைப் பின்பற்றியமைக்காக, அவர் செய்வது போன்று தாமும் செய்யவேண்டும் என்ற அடிப்படையில் செய்யப்பட்டவையே அன்றி, தமது தொழுகைக்கும் அவற்றிற்கும் சம்பந்தமில்லை. தமது தொழுகையின் இறுதியில் மீண்டும் கடைசி இருப்பு இருந்து, அத்தஹிய்யாத்து ஓதி மறுமுறையும் அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை இருப்பதால், இமாமுக்கு அது கடைசி ரகாஅத்தாம் இருப்பினும், ஒரு சில ரகாஅத்துகள் விடுபட்டவராக அந்த இமாமுடன் தொழுதவருக்கு அது முதல் ரகாஅத்து என்றே கொள்ளவேண்டும்.
சில ரகாஅத்துகள் விடுபட்டவராக ஒருவர், ஒரு இமாமுடைய கடைசி ரகாஅத்தைப் பெற்றுக்கொள்வாரானால் அந்த இமாமுக்கு அது கடைசி ரகாஅத்தாக இருப்பதுபோல், அவரைப் பின்பற்றிதொழுத அந்த நபருக்கும் அது கடைசி ரகாஅத்தாகும் என்று ஒருசிலர் கூறுவது முறை அல்ல. காரணம் அவ்வாறு அது கடைசி ரகாஅத்து என்று கூறினால் விடுபட்ட ரகாஅத்துகளைப்பூர்த்தி செய்யும்போது, மீண்டும் கடைசி இருப்பினும் இருக்கவேண்டிய நிலையும், ஏன் ஏற்படுகிறது? இவற்றை எல்லாம் இமாமுடன் தாம் தொழும்போது நிறைவேற்றிய பின்னரும், மீண்டும் இவற்றை நிறைவேற்றியாக வேண்டும் என்ற நிலையிருப்பதால், இமாமுடன் தமக்குக் கிடைத்துள்ள அந்த ஒரு ரகாஅத்தைத் தமது முதலாம் ரகாஅத்து என்று கொள்வதே முறையாகும்.
ஆகவே சில ரகாஅத்துகள் விடுபட்டவராக, ஒரு இமாமைப் பின்பற்றித் தொழுதவர், இமாம் தமது தொழுகையை நிறைவு செய்தவுடன் தாம் எழுந்து தமக்கு இமாமுடன் தொழும்போது கிடைத்த ரகாஅத்துகளை முறையே ”முதலாம் ரகாஅத்து, இரண்டாம் ரகாஅத்து” என்பதாக மனதில் கொண்டு, விடுபட்டவற்றைப் பூர்த்தி செய்துவிடுங்கள் என்று ஹதீஸில் இடம்பெற்றிருப்பதால், அதற்கேற்ப, சூரத்துல் ஃபாத்திஹாவுக்குப் பின் ஓதப்படும் சூரா, நடு இருப்பு போன்ற தமக்கு விடுபட்டவற்றை தாம் எழுந்து தொழும்போது அது அதன் கட்டத்தில் அவற்றை நிறைவேற்றி தொழுகையை பூர்த்தி செய்யவேண்டும். ஒருவர் இமாமுடன் சேர்ந்து தொழும்போது தமக்கு ஏற்படும் சிரமத்திற்காக இமாமைவிட்டுப் பிரிந்து தொழுவது ஆகும்.
முஆது(ரழி) அவர்கள் இஷாத் தொழுகையை நபி(ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டு, பிறகு தமது கூட்டத்தாரிடம் வந்து அவர்களுக்கு தொழ வைத்துக் கொண்டிருந்தார்கள். (ஒருநாள்) நபி(ஸல்) அவர்கள் இஷாவைப் பிற்படுத்தி தொழுதார்கள். அப்போது அவர் அவர்களுடன் தொழுது விட்டு, தமது கூட்டத்தாரிடம் வந்து (தொழவைக்கும்போது) ”சூரத்துல் பகரா” வை ஓதினார்கள். அதுசமயம் ஒருவர் தொழும் வரிசையை விட்டு பின்னால் நகர்ந்து தனிமையாகத் தொழுதார். அவரை நோக்கி நீர் முனாஃபிக்கு- நயவஞ்சகராம் விட்டீரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ”நான் முனாஃபிக்காகவில்லை நான் நிச்சயமாக நபி(ஸல்) அவர்களிடம் சென்று (நீண்ட சூராவை ஓதி சிரமம் தந்மைக்காக) புகார் செய்வேன்” என்று கூறியவராக நபி(ஸல்) அவர்களிடம் சென்று அதுபற்றி அவர்களிடம் புகார் செய்துவிட்டார். அதற்கு அவர்கள் முஆது(ரழி) அவர்களை நோக்கி, முஆதே! நீர் குழப்பம் செய்கிறீரா? முஆதே! நீர்குழப்பம் செய்கிறீரா? என்று கேட்டுவிட்டு சிறிய சில சூராக்களைச் சுட்டிக்காட்டி) இத்தகைய (சிறிய) சூராக்களை ஓதுவீராக என்று கூறினார்கள். (ஜாபிர் (ரழி), புகாரீ, முஸ்லிம், அஹ்மது)
மேற்காணும் அறிவிப்பில் ஒருவர் தாம் அதிக நேரம் இமாமுக்குப் பின் நின்று தொழ முடியாமையால் இமாமை விட்டு அவர் பிரிந்து தொழுதுள்ளார். இதுபற்றி நபி(ஸல்) அவர்கள் அறிந்திருந்தும், அவ்வாறு அவர் பிரிந்து தொழுததை ஆமோதித்துள்ளார்கள் என்பதை அறிகிறோம்.
ஆகவே இது போன்ற இமாமுடன் சேர்ந்து தொழும்போது ஏற்படும் சிரமத்திற்காக அவரை விட்டுப் பிரிந்து தொழுவது ஆகும் என்பது தெளிவாகிறது. இமாம் தம்மைப் பின்பற்றித் தொழுவோரின் இடத்தை விட உயரமான இடத்தில் நின்று தொழ வைப்பது முறை அல்ல.
இமாம் ஒரு பொருளின் மீது ஏறி நின்று கொண்டு மக்கள் அவருக்குப் பின்னால் நின்று தொழுவதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். (அபூமஸ்ஊத்(ரழி), தாருகுத்னீ)
ஒருமுறை ஹுதைஃபா(ரழி) அவர்கள் ”மதாயின்” நகரத்தில் ஓர் உயரமான இடத்தில் நின்று கொண்டு தொழவைத்தார்கள். அப்போது மஸ்ஊத்(ரழி) அவர்கள் அவர்களின் சட்டையைப் பிடித்து பலமாக இழுத்தார்கள். (இந்நிலையில்) அவர்கள் தொழவைத்து முடித்தவுடன் அவர்களை நோக்கி, மக்கள் இவ்வாறு தொழுவதை விட்டு தடை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் அறியவில்லையா? என்று அபூமஸ்ஊத்(ரழி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு ஹுதைஃபா(ரழி) அவர்கள் ”ஆம் தங்கள் என்னைப் பிடித்து இழுக்கும்போது தான் அது எனது ஞாபகத்திற்கு வந்தது என்றார்கள். (ஹ{மாமுப்னுல் ஹாரிஸ்(ரழி),அபூதாவூத், பைஹகீ)
இவ்வறிவிப்பின் படி பின்பற்றித் தொழுவோரை விட உயரமான இடத்தில் இமாம் நின்று தொழ வைப்பது முறை அல்லவென்பது தெளிவாகிறது.
இமாம் நம்மைப் பின்பற்றித் தொழுவோரைப் பார்க்கினும் உயரமான இடத்தில் நிற்பதானது முக்கிய தேவையை அடிப்படையாகக் கொண்டிருப்பின் அவ்வாறு செய்வது ஆகுமானதாகும். நபி(ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவி-மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் நிர்மாணித்துள்ள பள்ளியில்) மிம்பர்- பிரசங்க மேடை தயாரித்து வைக்கப்பட்ட முதல் நாள் அதன் மீது தாம் அமர்ந்தவர்களாக (தொழுகைக்கு) தக்பீர் கூறினார்கள். பிறகு அதில் இருந்துகொண்டே ருகூஃவும் ஸஜ்தாவும் செய்தார்கள். பிறகு (சற்று) பின்னால் நகர்ந்து (அதை விட்டு) கீழே இறங்கி மிம்பரின் அடிபாகத்தில் ”ஸஜ்தா” செய்தார்கள். பின்னர் மீண்டும் (மிம்பரின் மீது தொழுவதற்காக) ஏறிவிட்டார்கள். தாம் செய்து காட்டியதெல்லாம் நீங்கள் தொழுகையை அறிந்து என்னைப் பின்பற்றி நடப்பதற்காகவே தான்” என்று கூறினார்கள். (ஸஹ்லுபின் ஸஃதிஸ் ஸாயீத்(ரழி), புகாரீ, முஸ்லிம்,அபூதாவூத்)
இமாமைப் பின்பற்றித்தொழுவோர் இமாமுடைய இடத்தை விட உயரமான இடத்தில் நின்று தொழுவது ஆகுமானதாகும்:
அனஸ்(ரழி) அவர்கள் ”பஸ்ரா”வெனும் நகரத்தில் பள்ளிவாசலில் எதிரில் தலைவாசலையுடைய பள்ளியின் வடபாகத்திலுள்ள ஓர் ஆள் உயரமுள்ள அறையில் தாம் இருந்துகொண்டு, ”ஜும்ஆ” தொழும் போது, (தமக்குக் கீழேயுள்ள அப்பள்ளியின்) இமாமைப் பின்பற்றி தொழுதார்கள். அப்போது அங்கு இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஸஹாபாக்கள் இதற்கு எந்த மறுப்புமின்றி மௌனமாய் இருந்தார்கள். (ஸுனனு ஸயீதுபின் மன்சூர்)
இவ்வறிப்பை ஸயீதுபின் மன்சூர் அவர்கள் தமது ”ஸுனனு ஸயீதுபின் மன்சூர்” எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
இவ்வாறே ”அபூஹுரைரா(ரழி) அவர்கள் பள்ளிவாசலின் மாடியில் இருந்து கொண்டு (தமக்குக் கீழே தொழவைக்கும்) இமாமுடைய தொழுகையைத் தொழுதுள்ளார்கள்” என்பதாக இமாம் பைஹகீ ஸயீதுபின் மன்சூர் ஆகியோர் அறிவித்திருப்பதோடு, இமாம் புகாரி அவர்களும் தமது ”தஃலீகுல் புகாரீ”யில் அறிவித்துள்ளார்கள்.
ஆகவே இமாமைவிட உயரமான இடத்தில் நின்று தொழுவோர் இமாமுடைய நிலைகளை உணர்ந்து கொள்ளும் அமைப்பில் இருந்து தொழுவது அவசியமாகும். இமாமைவிட உயர்ந்த இடத்தில் ஒருவர் இருந்து கொண்டு தொழக்கூடாது என்பதற்கான தடை ஏதும் ஹதீஸின் வாயிலாக இல்லை.
(நபியே!) சொல்வீராக! நீங்கள் அல்லாஹ்வை நேசித்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான், மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக்கிருபை செய்பவனாகும். (அல்குர்ஆன்: 3:31)
”என்னைத் தொழக்கண்டவாறே நீங்களும் தொழுங்கள்” மாலிக் பின் ஹுவைரிஸ் (ரழி), புகாரி, முஸ்லிம்
Comments on this entry are closed.