ஜகாத் ஒரு மறு ஆய்வு

in நோன்பு,ஜகாத்

அடிப்படைத் தூண் ஜகாத்

இஸ்லாத்தின் ஐந்து அடிப்படைத் தூண்களில் ஜகாத் ஒரு பலமான தூணாகும். 14 நூற்றாண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த ஜகாத் விஷயத்தில் எந்தக் காலத்திலும் எடுத்து வைக்கப்படாத சில காரசாரமான விவாதங்கள் சமீபகாலமாக தமிழ் இஸ்லாமிய சகோதரர்களிடையே நிலவி வருகிறது. குறிப்பாக

1) ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?
2) கடமையான ஜகாத்தை எப்போது வழங்க வேண்டும்? அதற்கான கால வரம்பு என்ன?
3) “ஜகாத்” செல்வத்தை தூய்மைப் படுத்துகிறதா? மனிதனைத் தூய்மைப் படுத்துகிறதா?
4) தொடர்ந்து ஜகாத் வழங்குவது ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கிவிடுமா?

இது போன்ற சில விஷயங்களில் நம் சகோதரர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். காரணம் புதிய கோணத்தில் மாறுபட்ட கருத்து தமிழகத்தில் மட்டும் ஒரு சிலரால் சமீப காலமாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.

எனவே, ஜகாத்தின் சட்டங்களை உரிய சான்றுகளின் மூலம் தெளிவு படுத்த வேண்டிய அவசரமான அவசியம் ஏற்பட்டுள்ளது. இங்கு தரப்படும் தகவல், குர்ஆன் மற்றும் நபிமொழி ஆகியவற்றிலிருந்து பெறப்படும் ஆதாரத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். யாரின் சொந்தக் கருத்துக்கும் அறவே இடமளிக்க வில்லை. உண்மையை புரிந்து அதனை செயல்படுத்துபவர்களாகவும் தவறை இனம் கண்டு தவிர்ந்து நடப்பவர்களாகவும் நம்மை அல்லாஹ் ஆக்க வேண்டும்!

 
ஜகாத் என்றால் என்ன?

“ஜகாத்” என்ற வார்த்தைக்கு “வளர்ச்சி அடைதல்”, தூய்மைப் படுத்துதல் போன்ற பல்வேறு அர்த்தங்கள் உண்டு.

(والزكاة في اللغة النماء يقال زكا الزرع إذا نما وترد أيضاً في المال, وترد بمعنى التطهير. وشرعاً بالإعتبارين معاً: أما بالأول فلأن إخراجها سبب للنماء في المال, أو بمعنى أن الأجر بسببها يكثر, أو بمعنى أن متعلقها الأموال ذات النماء كالتجارة والزراعة. دليل الأول ((مانقص مال من صدقة)) ولأنها يضاعف ثوابها كما جاء ((إن الله يربي الصدقة)) وأما بالثانى فلأنها طهرة للنفس من رذيلة البخل, وتطهير من الذنوب. فتح الباري شرح صحيح البخاري ج3/332)

“ஜகாத்” என்றால் அகராதியில் வளர்ச்சியடைதல் என்பதாகும்.
பயிர் வளர்ச்சியடைந்ததைக் குறிக்க “ஜகா அஜ்ஜரஉ” (பயிர் வளர்ச்சி அடைந்தது) என்று கூறப்படும்.
செல்வத்தில் ஏற்படும் வளர்ச்சியைக் குறிக்கவும் “ஜகா” எனும் வார்த்தை கையாளப்படுகிறது.
“தூய்மைப் படுத்துதல்” என்ற அர்த்தமும் அதற்கு உண்டு.

செல்வத்திலிருந்து குறிப்பிட்ட வகையினருக்கு வழங்கப்பட வேண்டிய குறிப்பிட்டளவு தொகையினை “ஜகாத்” என்று இஸ்லாம் பெயரிட்டிருப்பது இவ்விரு அர்த்தத்தின்படி மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஏனெனில், “ஜகாத்” வழங்குவது பொருளாதாரம் வளர்ச்சியடைய காரணமாக அமைகிறது. நன்மைகள் வளர காரணமாகிறது..

 “தர்மம் செய்வதால் செல்வம் குறைந்து விடாது” (முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்) என்ற நபி மொழியும், “அல்லாஹ் தர்மங்களை வளர்க்கிறான்” என்று குர்ஆனில் வந்துள்ள செய்தியும் முறையே ஜகாத் வழங்குவதால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுகிறது, நன்மைகள் பன்மடங்காக கிடைக்கிறது என்பதை தெளிவு படுத்துகின்றன.

மேலும், ஜகாத் வழங்கும் மனிதன் கஞ்சத்தனம், பேராசை போன்ற இழிந்த துற்குணங்களின் கசடுகளிலிருந்து தூய்மைப்படுத்தப் படுகிறான். ஜகாத் வழங்குவதால் பல பாவங்களிலிருந்தும் அவன் பரிசுத்தமாக்கப்படுகிறான்.
(ஃபத்ஹுல் பாரி: 3/332)

“ஜகாத்” என்ற வார்த்தைக்கு மேலே குறிப்பிட்ட இரு அர்த்தங்களும் உண்டு என்பதை லிசானுல் அரப், காமுஸுல் முஹீத், அந்நிஹாயா போன்ற எல்லா அகராதி நூற்களிலும், ஜகாத்தைப் பற்றி விவரிக்கும் ஹதீஸ் மற்றும் மார்க்கச் சட்ட விளக்க நூற்களிலும் கூறப்பட்டிருப்பதை காணலாம்.

இவ்வாறு பல அர்த்தங்கள் உள்ள ஒரு வார்த்தைக்கு “தூய்மைப்படுத்துதல்” என்ற அர்த்தம் மட்டுமே இருப்பது போன்ற ஒரு பொய் தோற்றத்தை ஏற்படுத்தி பிரச்சாரம் செய்து வருகின்றனர். எனவே,
“ஜகாத்” என்ற வார்த்தைக்கு “வளர்ச்சியடைதல்”, “தூய்மைப் படுத்துதல்” போன்ற பல்வேறு அர்த்தங்கள் இருப்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

 

மீண்டும் “ஜகாத்” இல்லை என்போர் யார்?

“ஜகாத்” வழங்கிய ஒரு பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என சிலர் சமீப காலமாக பிரச்சாரம் செய்து வரும் இவர்களின் ஆதாரங்களை ஆய்வு செய்யும் முன் இந்த கருத்துடையவர்கள் யாரெல்லாம் 14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் இருந்து வந்துள்ளனர் என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

ஒரு முறை ஜகாத் வழங்கிவிட்ட எப்பொருளுக்கும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டியதில்லை என்ற கருத்தை நாம் மட்டும் கூறிக் கொண்டிருக்கவில்லை. இதற்கு முன்னர் பலரும் கூறியுள்ளனர் என இப்னுஹஸ்மின் “அல் முஹல்லா” எனும் நூலை மேற்கோள் காட்டி தங்களுக்கு வலுச்சேர்க்கின்றனர்.

இக்கருத்தை கூறியவர்கள் அன்றும் இன்றும் சிறுபான்மையோராகத்தான் இருந்தனர். எந்தக் காலத்திலும் இக்கருத்து எடுபடவில்லை. எனினும் நாம் கூறுவதில் சத்தியம் இருக்கிறது” எனக் கூறி வருகிறார்கள்.

இது சரிதானா?

இக்கருத்துடையவர்கள் ஒரு காலத்திலும் இருந்ததில்லை. இவர்கள் மேற்கோள் காட்டிய நூலில் இதற்கு மாற்றமான கருத்தே பதிவு செய்யப்பட்டுள்ளது.

 “ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என நாம் மட்டும் கூறவில்லை. எல்லாக்காலத்திலும் இக்கருத்துடையோர் சிறுபான்மையினராகவே இருந்து வந்தனர். இப்னு ஹஸ்ம் அவர்கள், முஹல்லா என்ற தனது நூலில் அவ்வாறு கூறியோரைப் பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்”

 இறைத்தூதர் மீதே பொய்யுரைத்தவர்கள், இப்னு ஹஸ்மின் மீது பொய்யுரைப்பதற்குத் தயங்குவார்களா என்ன? உண்மையில் இப்னு ஹஸ்ம், அப்படியொரு பட்டியல் எதையும் வெளியிடவில்லை என்பது மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நூலிலும் அவ்வாறு கூறப்படவில்லை. மாறாக, திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்பதில் யாரும் எந்தக் காலத்திலும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை என்றுதான் கூறியுள்ளார். அவர் கூறிய செய்தியை அவரது நூலிலிருந்து அப்படியே எடுத்துத் தருகிறோம்.

 والزكاة تتكرر في كل سنة في الإبل, والبقر, والغنم, والذهب والفضة, بخلاف البر والشعير والتمر فإن هذه الأصناف إذا زكيت فلا زكاة فيها أبداً……..وهذا لا خلاف فيه من أحد…….. (المحلى:ج6/23)

“ஒட்டகம், மாடு, ஆடு, தங்கம், வெள்ளி ஆகியவற்றில் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கடமையாகும். தீட்டிய கோதுமை, தீட்டாத கோதுமை, பேரீச்சம் பழம் ஆகிய விளைபொருளில் ஒரு முறை ஜகாத் வழங்கி விட்டால் பின்பு அவற்றிற்கு எப்போதும் ஜகாத் இல்லை. மேற்கூறிய இக்கருத்தில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.” (அல் முஹல்லா பாகம்: 6/23).

இப்னு ஹஸ்ம் காலம் வரையிலும் மாற்றுக் கருத்துடையோர் யாரும் இருந்ததில்லை. அவர் காலத்திற்குப் பிறகும் அவ்வாறு கூறுவோர் இவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதே உண்மை.

 திரித்துக் கூறப்பட்ட இப்னு ஹஸ்மின் கூற்று

“மேய்ந்து திரியாத கால்நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டுக்கு மட்டும் ஒரு தடவை ஜகாத் வழங்கி விட்டால், அதற்கு ஜகாத் இல்லை” எனக் கூறும் சிலருக்கு அதனை மறுக்கும் விதமாக இப்னு ஹஸ்ம் பின்வரும் கேள்விக் கணையையும் அவர்களை நோக்கி வீசுகிறார்.

இப்னு ஹஸ்மின் கேள்விக்கணை!

قال أبو محمد( إبن حزم)… قد ثبت أن رسول الله  كان يبعث المصدقين في كل عام لزكاة الإبل, والبقر, والغنم. هذا أمر منقول نقل الكافة. . فخروج المصدقين في كل عام موجب أخذ الزكاة في كل عام بيقين. فإذا لاشك في ذلك, فتخصيص بعض ما وجبت فيه الزكاة عاماً بأن لايأخذ المصدق الزكاة عاماً ثانياً تخصيص النص, وقول بلا برهان. (المحلى ج6/28ص)

“ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஜகாத் வசூலிப்போரை, ஒவ்வொரு வருடமும் அனுப்பி வைப்பது (கடந்த காலங்களில் ஜகாத் வழங்கப்பட்டது உட்பட அனைத்துப் பொருட்களிலும்) ஜகாத் வசூலிப்பது கடமை என்பதையே தெளிவு படுத்துகிறது. இந்நிலையில், முதல் ஆண்டில் ஜகாத் வாங்கியவற்றில் அடுத்த ஆண்டு ஜகாத் வாங்குதல் இல்லை என்பது சான்றில்லாத கூற்றாகும். (இக்கூற்றினை ஏற்க இயலாது.) (அல்முஹல்லா பாகம்:6 பக்கம்:28)

ஒவ்வொரு வருடமும் ஜகாத் வசூலிப்போரை நபி (ஸல்) அனுப்பி வைக்கும் போது, கடந்த ஆண்டு ஜகாத் வாங்கி விட்டதற்கு திரும்ப ஜகாத் வாங்காதீர்கள் எனக் கூறி அனுப்பியதாக எந்தத் தகவலும் இல்லை. எனவே ஒவ்வொரு வருடமும் ஏற்கனவே ஜகாத் வழங்கப்பட்டது, வழங்கப்படாதது எனப் பாகுபாடில்லாமல் எல்லாவற்றுக்கும் ஜகாத் வசூலிக்கப்பட்டுள்ளது என்றே நம்ப வேண்டும். இதற்கு மாற்றமாக யாராவது கூறினால் அதற்கான சான்றினைச் சமர்ப்பிக்க வேண்டும் என இப்னு ஹஸ்ம் கேட்பது அவர்கள் காதில் விழுகிறதோ இல்லையோ, நமக்கு நன்றாகவே கேட்கிறது.

தீனி போட்டு வளர்க்கப்படும் கால் நடை, அணியும் நகைகள் ஆகிய இரண்டு பொருள்களுக்கு மட்டும் ஆயுளில் ஒரு தடவை ஜகாத் வழங்கினால் போதும் என்ற இந்தச் செய்தியைத்தான் திரித்து ஜகாத் வழங்கிய ஒரு பொருளுக்கு திரும்ப ஜகாத் இல்லை என்று கூறுவோர் எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர் என பேசி வருகின்றனர். இவர்கள் கூறுவது போல் அந்நூலில் இருந்தால் அதன் அரபி வாசகத்துடன் எழுதி வெளியிடத் தயாரா?

 14 நூற்றாண்டு கால இஸ்லாமிய வரலாற்றில் எந்த அறிஞருக்கும் உதிக்காத புதிய ஞானம் இந்த நவீன அறிஞர்களுக்கு தோன்றியது ஒரு விந்தைதான். “இக்கருத்து எந்தக் காலத்திலும் எடுபடவில்லை, புறக்கணிக்கப்பட்டு விட்டது” என்று அவர்களே ஒப்புக் கொள்கின்றனர். சத்தியத்திற்கு புறம்பான கருத்துகள் எக்காலத்திலும் எடுபடாது என்பது உலகறிந்த விஷயம்தானே. அசத்தியம் அழிந்தே தீரும் என்பது இறைவாக்கல்லவா?

 எனினும், தங்களின் கருத்துக்கள் உண்மையானது போல பேசிவருகிறார்கள். முதலில் இவர்கள் என்ன கூறுகிறார்கள், தங்களின் கருத்தை நிலை நிறுத்த எடுத்து வைக்கும் சான்றுகள்தான்(?) என்ன என்பதை அறிந்து விட்டு, பின்பு அதற்கான பதில் என்ன? என்பதை தெரிந்துக் கொண்டு, பிறருக்கும் புரியவைப்போம். சத்தியத்தை நம் அனைவருக்கும் புரிய வைத்து அதனைப் பின்பற்றி நடப்பவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக!

ஜகாத் இல்லை என்போர் காட்டும் சான்றுகள்(?)

1. “செல்வத்தை தூய்மைப்படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என நபி(ஸல்)அவர்கள் கூறி உள்ளார்கள். (துஹ்ரத்தன் லில் அம்வால்) எனவே, ஒருமுறை ஜகாத் வழங்கி விட்டால் பொருளாதாரம் சுத்தமாகி விடுகிறது. சுத்தமாகி விட்ட ஒரு பொருளை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை. 

 (மீண்டும் ஜகாத் இல்லை என்போர் தங்களது வாதத்திற்கு இதனை வலுவான முதன்மைச் சான்றாக கருதி வந்தார்கள். இதை இறைத்தூதர் கூறவில்லை என்பதை நாம் நிரூபித்துக் காட்டியதன் பின், துணை ஆதாரமாகத்தான் கூறினோம் என்பதால் தங்களது கருத்தை மாற்றிக் கொண்டனர். இவர்களின் கருத்துப்படி இதனை துணை ஆதாரமாகவும் கருதமுடியாது. ஏனெனில் இறைத்தூதர் கூறாத எதையும் முதன்மை ஆதாரமாகவும் துணை ஆதாரமாகவும், காட்டலாகாது என்பதே இவர்களின் கொள்கை.)

2. “ஜகாத் கொடுங்கள்” என அல்லாஹ் கூறுகிறான். “கொடு” என்று சொன்னால் எல்லா மொழியிலும் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் புரிந்து கொள்கிறோம். அது போன்றே “ஜகாத் கொடு” என்ற வசனத்தையும் ஒரு முறை ஜகாத் கொடு என்றுதான் புரிந்துகொள்ள வேண்டும்.

3. ஹஜ்ஜைப் போன்றே ஜகாத்தும் ஆயுளில் ஒரு முறைதான்.

4. விளைபொருளில் அறுவடை செய்யும் அன்று ஜகாத் கொடுத்து விட்டால் அதன் பின் அதற்கு எப்போதும் ஜகாத் வழங்க வேண்டாம் என எல்லோரும் கூறுகின்றனர். அதுபோல்தான் மற்ற பொருளாதாரத்திலும் ஒரு முறைதான் ஜகாத் எனப் புரிந்து கொள்ள வேண்டும். விளைபொருளுக்கு ஒரு சட்டம், தங்கம், வெள்ளி போன்ற பொருளாதாரத்திற்கு மற்றொரு சட்டமா?

5. கொடுத்த பொருளுக்கே மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்கிக் கொண்டிருந்தால் விரைவில் வறுமை ஏற்பட்டு ஜகாத் கொடுத்தவன் பிறரிடம் கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு பிச்சைக்காரனாக ஆகிவிடுவான். ஒருவனை பிச்சைக்காரனாக ஆக்கும் சட்டத்தை இஸ்லாம் ஒரு போதும் கூறாது.

6. அனைவரும் செய்யும்படி சட்டத்தை எளிமையாக கூறினால் அனைவரும் செயல்படுத்துவார்கள். மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என சட்டத்தைக் கடினமாக சொல்வதனால்தான் ஆயிரத்தில் ஒருவர் கூட சரியாக ஜகாத் வழங்குவதில்லை. ஒருமுறை ஜகாத் கொடுத்தால் போதும் என சட்டம் கூறினால் ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் ஜகாத் வழங்கி விடுவார்கள்(!?).

7. “ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும்” என குர்ஆனிலோ நபிமொழி யிலோ ஒர் இடத்தில் கூட கூறப்படவில்லை.

ஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறி வருவோர் தங்களது கருத்திற்கு எடுத்துக் காட்டும் சான்றுகள்தான் இவை.

 (சமீத்தில் வெளியான ஏகத்துவத்திலும், (செப்டம்பர் 2005), ஜகாத் குறித்து பல இடங்களில் பேசியவற்றை தொகுத்து வழங்கப்பட்ட “ஜாகத் ஓர் ஆய்வு” என்ற சி.டி. யிலும் இச்சான்றுகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளததைக் காணலாம்.)

சான்றாய்வு- 1
ஜகாத் பொருளைத் தூய்மைப்படுத்துகின்றதா?

“பொருளாதாரத்தை தூய்மைப் படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்” என இறைத்தூதர் கூறியதாக மேடைகளில் பேசிவரும் இவர்கள், எந்த நூலில், யார் அறிவித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை ஒர் இடத்திலும் அறவே குறிப்பிடவில்லை. பொதுவாக மார்க்க அறிஞர் ஒரு நபிமொழியை கூறுவதாக இருந்தால், அறிவிப்பாளர் தொடரோடு எந்த நூலில் இடம் பெற்றுள்ளது என்பதை மேற்கோள் காட்டித்தான் பேச வேண்டும். அவ்வாறு கூறாததால் நாமே இந்த நபிமொழியை சரிகாண ஆய்வில் இறங்கினோம்.

இச்செய்தி, புகாரியில் 1404, 4661 இடங்களில், பதிவாகி இருப்பது உண்மைதான். ஆனால், அதை இறைத்தூதர் கூறவில்லை. மாறாக அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்தான் கூறியுள்ளார்.
இதோ அந்த செய்தி!

1404-عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ-رضى الله عنهما – فَقَالَ أَعْرَابِىٌّ أَخْبِرْنِى قَوْلَ اللَّهِ (وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِى سَبِيلِ اللَّهِ ) قَالَ ابْنُ عُمَرَ – رضى الله عنهما – مَنْ كَنَزَهَا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا فَوَيْلٌ لَهُ ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْراً لِلأَمْوَالِ (رواه البخاري)

காலித் பின் அஸ்லம் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) உடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, “யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ..” என்ற வசனத்தைப் பற்றி வினவினார். இப்னு உமர்(ரலி), “யார் அவற்றைப் பதுக்கிவைத்து அதற்கான ஜகாத்தை கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடுதான். இவ்வசனம் ஜகாத் கடமையாகுவதற்கு முன்புள்ளதாகும். ஜகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் தூய்மைப்படுத்தக் கூடியதாக “ஜகாத்தை” அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்றனர். (புகாரி: 1404, 4661)

இச்செய்தி இப்னு மாஜாவிலும், 7021 வது நபி மொழியாக பைஹகியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இச்செய்தி நாம் அறிந்தவரை இறைத்தூதர் கூறியதாக உலகில் உள்ள எந்நூலிலும் பதிவு செய்யப்படவில்லை. இது இறைத்தூதர் மீது இட்டுக் கட்டப்பட்ட மாபெரும் பொய்யாகும்.

 

நபித் தோழரின் கூற்றை ஏற்க மறுப்பது ஏன்?

இப்னு உமர் கூறிய செய்தி நம்பகத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில் அதனை ஏன் மறுக்க வேண்டும்? என்ற கேள்வி எழலாம்.

 
ஆனால், எந்த ஒரு விஷயத்திற்கும் நபித் தோழர்களின் கூற்றை சான்றாக ஏற்காதவர்கள் இக்கேள்வியை எழுப்ப அறவே அருகதையற்றவர்கள்.

ஜகாத் மனிதனைத்தான் தூய்மைப்படுத்துகிறது என குர்ஆனிலும் நபிமொழியிலும் தெளிவாகக் கூறப்பட்டு விட்டதால், இப்னு உமர் அவர்களின் கூற்றை சான்றாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்பதற்கு இப்னு உமரின் கூற்றை சான்றாக எடுத்துக் கொண்டவர்கள், அதே இப்னு உமர் (ரலி) அவர்கள், ஜகாத் வழங்கிய பொருளுக்கே மீண்டும் ஜகாத் வழங்கி வந்துள்ளார்கள் என்ற நடைமுறையை மறந்து விட்டார்களா? அல்லது மறைத்து விட்டார்களா? என்பது அவர்களுக்குத் தான் வெளிச்சம்.

 
இச்செய்தியை கூறிய இப்னு உமர் அவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத ஒரு செய்தியை இவர்கள் மட்டும் அறிந்து கொண்டார்கள் என்றால் அதுதான் ஒரு வியப்பான மர்மம்.

செல்வத்தைத் தூய்மைப் படுத்துவதாக நபி மொழியில் இடம் பெற்றுள்ளதா?


“ஜகாத் செல்வத்தை தூய்மைப் படுத்துகிறது” என்ற தங்களின் கருத்துக்கு அபூ தாவூதில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸை கூடுதல் சான்றாக முன் வைக்கிறார்கள்.

ஆனால், அவர்கள் சான்றாக காட்டிய இந்நபி மொழியில் “துஹ்ரத்தன் லில் அம்வால்” (செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது) என்ற (அர்த்தத்தைக்கொண்ட) வார்த்தை அறவே இடம் பெறவில்லை. அதற்கு நிகரான “தஹ்ஹாரத்தன்”, “முதஹ்ஹிரத்தன்” “யுதஹ்ஹிர” “தஹ்ஹர”, “துஹுரன்” போன்ற வார்த்தைகளும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

 
முதலில் அவர்கள் சமர்ப்பித்த நபி மொழியை அதன் அர்த்தத்துடன் காண்போம்.

 

حدثنا عثمان بن أبي شيبة حدثنا يحيى بن يعلى المحاربي حدثنا أبي حدثنا غيلان عن جعفر بن إياس عن مجاهد عن ابن عباس قال لما نزلت هذه الآية والذين يكنزون الذهب والفضة قال كبر ذلك على المسلمين فقال عمر رضي الله عنه أنا أفرج عنكم فانطلق فقال يا نبي الله إنه كبر على أصحابك هذه الآية فقال رسول الله  إن الله لم يفرض الزكاة إلا ليطيب ما بقي من أموالكم وإنما فرض المواريث لتكون لمن بعدكم فكبر عمر ثم قال له ألا أخبرك بخير ما يكنز المرء المرأة الصالحة إذا نظر إليها سرته وإذا أمرها أطاعته وإذا غاب عنها حفظته – ابوداود

 

“பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்து” என்ற வசனம் அருளப்பட்டது நபித்தோழர்களுக்கு பெரும் பாரமாக தெரிந்தது. உங்களது கவலையை நான் நீக்குகிறேன்” என்று கூறி விட்டு, இறைத்தூதரை நோக்கிச் சென்ற உமர்(ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இவ்வசனம் உங்களின் தோழர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்)அவர்கள், “உங்களின் செல்வத்தில் எஞ்சியதை (சேமிப்பதை) அனுமதிப்பதற்காகவே தவிர வேறு எதற்கும் ஜகாத்தை அல்லாஹ் கடமையாக்கவில்லை. உங்களுக்குப் பின் வருவோருக்கு செல்வம் சேர வேண்டும் என்பதற்காகத்தான் வாரிசுரிமைச் சட்டத்தைக் கடமையாக்கினான்” என கூறினார்கள். இதை செவியுற்ற உமர்(ரலி) தக்பீர் முழங்கிய போது, “மனிதன் சேமிப்பதில் சிறந்தது” எது என உங்களுக்கு அறிவிக்கட்டுமா? “கணவன் காணும்போது மகிழ்விக்கும், அவனது கட்டளைக்கு கீழ்படிந்து நடக்கும், அவளை விட்டும் அவன் வெளியில் சென்று விட்டால் அவனை (அவனது உடமையை) பாதுகாக்கும் நல்ல மனைவிதான் சிறந்த சேமிப்பாகும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்).

இந்நபி மொழியில் இடம் பெற்ற “லி யுதய்யப” என்ற வார்த்தைக்கு தூய்மைப்படுத்துதல் என்ற ஒரு அர்த்தமும் இருப்பதால், ஜகாத் வழங்குவது செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது என இறைத்தூதரே கூறிவிட்டதாக தங்களின் கருத்திற்குச் சான்றாக இந்நபி மொழியை முன்வைக்கிறார்கள்.

அறிவிப்பாளர் விடுபட்ட தொடர்பறுந்த பலவீனமான ஹதீஸாகும்


ஆனால், இந்நபி மொழி அறிவிப்பாளர் தொடர்பறுந்த பலவீனமான ஹதீஸாகும். காரணம், நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் “உஸ்மான்” என்ற அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். அவர் பலவீனமானவர் என்பது இக்கலை அறிஞர்கள் அனைவரின் ஏகோபித்த முடிவாகும்.

மேலும், முஜாஹித் என்பவரிடமிருந்து ஜாஃபர் பின் இயாஸ் அறிவிப்பதாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாஃபர் நம்பகமானவர், புஹாரி முஸ்லிம் ஆகிய நூட்களில் இடம் பெற்றவர்தான் என்றாலும், முஜாஹித்தின் மூலம் அவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானதாகும் என்று அவரது மாணவரும், அறிவிப்பாளர் ஆய்வில் சிறந்து விளங்குபவருமான ஷுஃபா அவர்கள் கூறியதை, யஹ்யா பின் முயீன், யஹ்யா பின் சயீத், அஹ்மத் பின் ஹன்பல், இப்னு ஹஜர் ஆகியோர் சந்தேகத்திற்கு இடமின்றி உறுப்படுத்தியுள்ளனர்.

எனவே, இவ்விரு காரணங்களின் அடிப்படையில், அபூ தாவூதில் இடம் பெற்றுள்ள இந்நபி மொழி பலவீனம் என்பதால், அவர்களின் கருத்துக்கு இது சான்றாக அமையாது.

 

பொருளைத் தூய்மைப் படுத்துவதே ஜகாத் என்ற நபிமொழி பலவீனம் என்பதற்கான சான்றுகள் அரபி மூலத்துடன்:

அபூ தாவூதில் இடம் பெற்றுள்ள இந்நபி மொழியை மேலோட்டமாக பார்க்கும் போது ஸஹீஹானது போல தோன்றும். ஏனெனில் இதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர்களில் பெரும்பாலோர் புஹாரி மற்றும் முஸ்லிம் ஆகிய நூற்களில் இடம் பெற்றவர்கள். குறிப்பாக அறிவிப்பாளர் வரிசையில் உள்ள கைலான் என்பவரும், ஜாஃபர் என்பவரும் சம காலத்தில், அடுத்தடுத்த ஊரில் வாழ்ந்து வந்தவர்கள். இவ்விருவரும் சந்தித்திருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு போன்ற செய்திகளை மேலோட்டமாக பார்த்து விட்டு ஹாகிம், ஹாஃபிழ் அல்இராகி ஆகியோர் இது ஸஹீஹானது என கூறிவிட்டனர். அறிவிப்பாளர் ஒருவர் விடுபட்ட தொடர்பறுந்த நபிமொழி என்பது ஊர்ஜிதமாகவில்லையானால், இவர்கள் கூறியது சரி என ஏற்கலாம். ஆனால், ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார், அவர் பலவீனமானவர் என்பது சான்றுகளுடன் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. ஸஹீஹ் என வாதிப்பவர்கள் அதற்கான பதிலைத் தராத வரையிலும் பலவீனம் என்ற கருத்தே உறுதியாகும்.

 
அறிவிப்பாளர் விடுபட்டதை அறிந்து கொள்வது எப்படி?


அறிவிப்பாளர் விடுபட்ட செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள இந்நபி மொழி எந்தெந்த நூற்களில் இடம் பெற்றுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

ஹாகிமில் இரு இடங்களில்:

 

1487 أخبرنا أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا علي بن عبد الله بن المديني ثنا يحيى بن يعلى المحاربي ثنا أبي حدثنا غيلان بن جامع عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس رضي الله عنهما  ………

 

3281 أخبرنا علي بن محمد بن عقبة الشيباني حدثنا إبراهيم بن إسحاق الزهري حدثنا يحيى بن يعلى بن الحارث المحاربي حدثنا أبي حدثنا غيلان بن جامع عن عثمان بن القطان الخزاعي عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس رضي الله عنهما

 

ஸுனன் பைஹகி:

 

سنن البيهقي الكبرى ج: 4 ص: 83

 

 7027 أخبرنا أبو محمد عبد الله بن يحيى بن عبد الجبار السكري ببغداد أنبأ إسماعيل بن محمد الصفار ثنا عباس بن عبد الله الترقفي ثنا يحيى بن يعلى بن الحارث ثنا أبي ثنا غيلان يعني بن جامع عن عثمان أبي اليقظان عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس……

 

7028 وأخبرنا أبو عبد الله الحافظ ثنا علي بن محمد بن عقبة الشيباني بالكوفة أنبأ إبراهيم بن إسحاق الزهري ثنا يحيى بن يعلى بن الحارث المحاربي فذكره ثم بمثل إسناده وقصر به بعض الرواة عن يحيى فلم يذكر في إسناده عثمان أبا اليقظان

முஸ்னத் அபீ யஃலா:

 

مسند أبي يعلى ج: 4 ص: 378

 

2499 حدثنا أبو بكر حدثنا يحيى بن يعلى قال حدثني أبي حدثنا غيلان عن عثمان أبي اليقظان عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس….

 

 

ஷுஃபல் ஈமான்:

 

شعب الإيمان ج: 3 ص: 194

 

 3307 أخبرنا ابو عبد الله الحافظ أنا أبوعلي محمد بن عقبة الشيباني وبالكوفة نا ابراهيم بن اسحاق الزهري نا يحيى بن يعلى بن الحارث المحاربي نا ابي نا غيلان بن جامع عن عثمان ابي اليقظان الخزاعي عن جعفر بن أياس عن مجاهد …..

 

فضائل الصحابة لابن حنبل ج: 1 ص: 374 560 حدثنا محمد بن يونس قال نا يحيى بن يعلى قال أبي نا غيلان بن جامع عن جعفر بن إياس عن مجاهد عن بن عباس

 

தஃப்ஸீர் இப்னு கஃதீர்:
 

تفسير إبن كثير

 

قال ابن أبي حاتم: حدثنا أبي حدثنا حميد بن مالك حدثنا يحيى بن يعلى المحاربي حدثنا أبي حدثنا غيلان بن جامع المحاربي عن عثمان بن أبي اليقظان عن جعفر بن إياس عن مجاهد عن ابن عباس……..

 

மேற்கண்ட நூற்களில் இடம் பெற்ற அறிவிப்பாளர்கள் வரிசையில் கோடிட்ட இடங்களை நன்கு கவனித்து பார்ப்பவர்கள், ஓர் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பதை எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொள்வார்கள். அதாவது கைலான் மற்றும் ஜாஃபர் ஆகிய இருவருக்குமிடையில் உஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். அவர்தான் அபூ தாவூதின் அறிவிப்பில் விடுபட்டுள்ளார்.

விடுபட்டுள்ளார் என்பது சரியா? நுழைக்கப்பட்டார் என்பது சரியா?

இந்நபிமொழி யஹ்யா என்பவரின் மூலம்தான் அபூ தாவூத் உட்பட எல்லா நூற்களிலும் பதிவாகி உள்ளது. யஹ்யாவைத் தவிர வேறுயாரும் இச்செய்தியை அறிவிக்கவும் இல்லை. யஹ்யாவிடமிருந்து அவரின் ஏழு மாணவர்கள் இதனை அறிவிக்கிறார்கள்.

1. உஸ்மான் பின் அபீ ஷைபா. (அபூ தாவூத்)
2. அலி பின் அப்தில்லாஹ் அல் மதீனியி. (ஹாகிம்)
3. முஹம்மது பின் யூனுஸ். (ஃபழாயிலுஸ் ஸஹாபா)
4. இப்ராஹீம் பின் இஸ்ஹாக் அஜ்ஜுஹ்ரி. (ஹாகிம், பைஹகி, ஷுஃபல் ஈமான்)
5. அப்பாஸ் பின் அப்தில்லாஹ் அத்தர்ஃபகியி. (பைஹகி)
6. ஹமீது பின் மாலிக். (இப்னு கதீர்)
7. அபூ பக்கர். (அபீ யஃலா)

யஹ்யாவின் மூலம் அறிவிக்கும் அவரது ஏழு மாணவர்களில் முதல் மூவரின் அறிவிப்பில் ‘உஸ்மான்’ இடம் பெறவில்லை. அடுத்துள்ள நால்வரின் அறிவிப்பிலும் ‘உஸ்மான்’ இடம் பெறுகிறார். இவர்களின் அறிவிப்புகளில் எது சரியானது?

முந்திய மூவரின் அறிவிப்பில் உஸ்மான் விடுபட்டுள்ளார் என்பது சரியா? அல்லது மற்றுள்ள நால்வரின் அறிவிப்பில் உஸ்மான் நுழைக்கப்பட்டுள்ளார் என்பது சரியா? இதற்கான சரியான விடையை நாம் தெரிந்து கொண்டால், இந்த நபிமொழியில் ஏற்பட்ட குழப்பம் நீங்கிவிடும்.

 

விடுபட்டுள்ளார் என்பதே சரியானது

‘இந்நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையில் உஸ்மான் என்பவரை சிலர் விட்டுட்டு சுருக்கமாக அறிவிக்கிறார்கள்’ என ஹதீஸ் மற்றும் அறிவிப்பாளர்கள் ஆய்வில் சிறந்து விளங்குபவரும், இந்த ஹதீஸை தனது நூலில் பதிவு செய்தவருமான மாபெரும் இமாம் பைஹகி அவர்கள் இந்த ஹதீஸின் கீழ் தெளிவான குறிப்புரை ஒன்றை எழுதியுள்ளார். இமாம் பைஹகியின் இந்த விளக்கம், முதல் மூவரின் அறிவிப்பிலும் உஸ்மான் விடுபட்டுள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதோடு, ‘நுழைக்கப்பட்டார்’ என்ற கருத்து தவறானது என்பதையும் உணர்த்துகிறது.

அறிவிப்பளார் விடுபட்டுள்ளார் என்பதை அழ்ழியாவுல் மக்தஸி என்பரும் தனது நூலில் உறுதிப் படுத்தி உள்ளார்.

இந்நபி மொழியை தனது நூலில் பதிவு செய்த இமாம் பைஹகி அவர்கள், உஸ்மான் விடுபட்டுள்ளார் என்பதை உறுதி செய்யும் போது, மாற்றுக் கருத்துடையோர் தவறான கருத்து கொண்டுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.

 
‘சமகாலத்தில் அடுத்தடுத்த ஊரில் வாழ்ந்துள்ள ஜாஃபர் மற்றும், கைலான் இருவரும் சந்தித்துக் கொள்ள அதிக வாய்ப்பிருப்பதால், அதுவே இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்பதற்கு போதுமான சான்றாகும். ஹாகிமில் இடம் பெற்ற பலவீனமான அறிவிப்பின் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூ தாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று கூறுவது அர்த்தமற்ற வாதமாகும்’ என்று கூறி அபூ தாவூத்தில் இடம் பெற்ற ஹதீஸை நியாயப்படுத்த முனைகிறார்கள்.

இவ்வாறு கூறுவதுதான் அர்த்தமற்றதாகும். சமகாலத்தில் வாழ்ந்த இருவர் சந்தித்திருக்க சாத்தியம் இருப்பது போலவே, சந்தித்துக் கொள்ளாமல் இருக்கவும் வாய்ப்பு உண்டு. ‘இருவருக்கும் சந்திப்பு இல்லை.’ என்பதை இந்த நபி மொழியைப் பதிவு செய்துள்ள மாபெரும் இமாம் பைஹகி அவர்களால் உறுதி செய்யப்பட்ட நிலையில், ‘சந்திப்பு உண்டு’ என்போர் தமது கருத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க போதுமான சான்றுகள் தரவேண்டும். மேலும், ஜாஃபர் என்பவரின் மாணவர் உஸ்மான், இவரின் மாணவர்தான் கைலான் என்பதை தஹ்தீபுல் கமால் என்ற நூலின் ஆசிரியர் உறுதிப்படுத்துகிறார். இவ்வரலாற்றுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போதும், கைலான் என்பவர் உஸ்மானிடம் இருந்துதான் இந்த செய்தியை அறிவித்துள்ளார், ஜஃபரிடம் கேட்டிருக்க வாய்ப்பில்லை என்பது மேலும் உறுதியாகின்றது.

சமகாலத்தில் வாழ்ந்த இருவர் சந்தித்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் சாத்தியம் இருப்பதால்தான் இமாம் புஹாரி அவர்கள் இந்த நிபந்தனையை ஏற்கவில்லை. மாறாக இருவரும் ஒரு முறையாவது சந்தித்துள்ளார்கள் என்பது நிரூபணமாகி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

 
மேலும், இந்த அறிவிப்பில் உள்ள கோளாறு, கைலான் என்பவரின் மூலம் ஏற்படவில்லை. மாறாக யஹ்யாவின் மாணவர்களின் மூலம் தான் ஏற்பட்டுள்ளது. அதாவது, கைலான் என்பவர் ‘ஜாஃபர்’ என்று கூறினாரா? அல்லது ‘உஸ்மான்’ என்று கூறினாரா? என்பதுதான் இங்கே ஏற்பட்ட குழப்பம். இந்த சந்தேகத்தை தெளிவுபடுத்த, யஹ்யா அல்லாத வேறொருவரின் மூலம் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டிருந்து, அத்தொடரில் ‘உஸ்மான்’ இடம் பெறாமல், ஜாஃபரிடமிருந்து கைலான் நேரிடையாக கேட்டுள்ளார் என்பதை சுட்டிக் காட்டி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால், அப்போது அபூ தாவூதின் அறிவிப்பில் எந்த ஒரு அறிவிப்பாளர் விடுபடவில்லை என்பதை ஏற்கலாம். அவ்வாறு நிரூபிக்காத வரை அபூ தாவூதின் அறிவிப்பில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்ற நம் கருத்து உறுதியானதாகும்.

பைஹகி அவர்கள் தெரிந்து கொண்ட இந்நுட்பமான காரணம் இந்த ஹதீஸை சரியென கூறியவர்களின் கவனத்திற்கு வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும். இதனால், அபூ தாவூதில் பதிவு செய்யப்பட்டிருப்பதை மட்டும் பார்த்தவர்கள் அதனை ஸஹீஹ் என மேலோட்டமாக கூறிவிட்டனர்.
ஒரு ஹதீஸில் இடம் பெற்ற பலவீனமான அறிவிப்பாளரை நீக்கி விட்டு அறிவித்தால் அது ஸஹீஹான ஹதீஸாக மாறிவிடுமா?

உஸ்மான் பற்றிய விமர்சனங்கள்:
உஸ்மான் பின் உமைர் அபில் யக்ழான் அல் பஜலி, அல் கூஃபி என்பதே முழுப் பெயராகும்.

அல் மஜ்ரூஹீன் என்ற நூலில்:
‘தான் அறிவிப்பது என்ன?’ என அறியாமல் குழப்பம் அடைந்தவர்களில் ‘உஸ்மான்’ என்பவரும் ஒருவர். ஒரு நபி மொழியை மற்றொன்றோடு கலந்து, மாற்றி மாற்றி அறிவிப்பதால், இவர் அறிவிக்கும் எதையும் ஆதாரமாக ஏற்ககூடாது.

யஹ்யா பின் முயீன், அப்துர்ரஹ்மான் அல்மஹ்தி ஆகியோர் இவரின் மூலம் எந்த ஒரு செய்தியையும் அறிவிக்க மாட்டார்கள்.

ஷுஃபா என்பவர் கூறுகிறார்:
‘நான் ஒரு முறை உஸ்மானிடம் வந்தேன். ஒரு செய்தியை மற்றொன்றோடு மாற்றி கலந்து அறிவிப்பதைக் கண்டேன். அதனால், எதையும் எழுதிக் கொள்ளாமல் திரும்பி விட்டேன்.’

தக்ரீப் தஹ்தீப் எனும் நூலில்:
…அவர் பலவீனமானவர், குழப்பம் அடைந்தவர், ஷியாக் கொள்கையில் மூழ்கிப்போனவர், அவர் ஒரு முதல்லிஸாகும். (ஹதீஸை கேட்காத ஒருவரிடமிருந்து கேட்டது போல் அறிவிப்பவர்.)
‘பலவீனமானவர்’ (தார குத்னி)

இமாம் புகாரி அவர்கள்:
மறுக்கப்படும் ஹதீஸை அறிவிப்பவர்
 

அறிவிப்பாளர் வரிசையில் உள்ள மற்றொரு கோளாறு


இதன் அறிவிப்பாளர் வரிசையில் மற்றொரு கோளாறும் உண்டு. அதாவது, ஜாஃபர் பின் இயாஸ் என்பவர் முஜாஹித்தின் மூலம் இதனை அறிவிப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாஃபர் பின் இயாஸ் நம்பகமானவர், குறிப்பாக சயீத் பின் ஜுபைர் மூலம் அறிவிப்பவர்களில் மிக உறுதியானவர் என்பதில் எச்சந்தேகமும் இல்லை. எனினும், முஜாஹித் மூலம் அவர் அறிவிக்கும் செய்தி பலவீனமானதாகும். ஏனெனில், “ஜாஃபர் என்பவர் முஜாஹித் மற்றும் ஹபீப் பின் ஸாலிம் மூலம் அறிவிக்கும் செய்தி பலவீனமானதாகும். அவ்விருவரிடம் எதையும் கேட்கவில்லை” என (அறிவிப்பாளர்கள் ஆய்வில் சிறந்து விளங்கும்) ஷுஃபா அவர்கள் கூறியதாக யஹ்யா பின் சயீத் அறிவித்த செய்தியை, இமாம் அஹ்மத் பின் ஹன்பல் உறுதி செய்கிறார்.

“முஜாஹித்திடம் தஃப்ஸீர் குறித்த எச்செய்தியையும் ஜாஃபர் கேட்கவில்லை” என இமாம் ஷுஃபா கூறி யதாக யஹ்யா பின் முயீன் கூறுகிறார். (அபூதாவுதில் இடம் பெற்ற செய்தி தஃப்ஸீர் குறித்ததாகும் என்பது இங்கே கவனிக்கத் தக்கது.)

முஜாஹிதின் மூலம் ஜாஃபர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனம் என்ற காரணத்தினால்தான் இமாம் முஸ்லிம் அவர்கள் தனது நூலில், ஒரு செய்தியைக் கூட பதிவு செய்யவில்லை என இப்னு ஹஜ்ர் அவர்கள் ஃபத்ஹுல் பாரியின் முன்னுரையில் குறிப்பிடுகிறார். (இமாம் புகாரி அவர்களும் இவரை குறை கூறியுள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)

முஜாஹித்திடம் கேட்கவில்லை என்ற இமாம் ஷுஃபா அவர்களின் கருத்தை யஹ்யா பின் சயீத், யஹ்யா பின் முயீன், அஹ்மத் பின் ஹன்பல், இப்னு ஹஜர் இன்னும் பல அறிஞர்களும் உறுதிபடுத்துகின்றனர். (தஹ்தீபுத் தஹ்தீப், தஹதீபுல் கமால், அல்ஜர்ஹ் வத் தஃதீல், அல்காமில் ஃபில் ளுஃபா, மிஜானுல் இஃதிதால், அல் முக்னீ, அல் மராஸீல் ஆகிய நூற்களிலும், ஃபத்ஹுல் பாரியின் முன்னுரையிலும் இதனைக் காணலாம்.)

 
ஷுஃபாவின் ஆசிரியர்தான் ஜாஃபர் என்பவர். ஒரு மாணவர் தன் ஆசிரியரைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பார் என்ற அடிப்படையிலும், நிறையை விட குறையை முற்படுத்த வேண்டும் என்ற அடிப்படை யிலும், ஷுஃபா கூறியதை புறக்கணிக்க முடியாது.

இதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது, முஜாஹித் அவர்களிடம் ஜாஃபர் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு வலுவாகிறது. எனவே, முஜாஹித் மூலம் ஜாஃபர் அறிவிப்பதாக அபூ தாவூதில் பதிவான நபி மொழி பலவீனம் என்ற வாதம் மேலும் வலுப்பெறுகிறது.

ஆக, இந்நபிமொழியின் அறிவிப்பாளர் வரிசையில் உஸ்மான் என்ற பலவீனமானவர் விடுபட்டுள்ளதாலும், முஜாஹித் மூலம் ஜாஃபர் அறிவிப்பது பலவீனமாகும் என்ற காரணத்தினாலும் அபூ தாவூதில் இடம் பெற்ற நபிமொழி பலவீனமானதாகும். பல்வேறு வகையில் பலவீனமாகவும், அர்த்தத்திலும் தங்களது கருத்திற்கு மாற்றமாக இருக்கும் இந்த ஹதீஸைத்தான் இஸ்லாத்தின் மிக முக்கியமான கடமையான ஜகாத்தைப் பற்றி தீர்மானிக்க சான்றாக இவர்கள் கூறிவருகிறார்கள்.

ஜாஃபர் பின் இயாஸ் பற்றிய சில நூற்களில் இடம் பெற்ற விமர்சனங்களின் அரபு மூலம் கீழே தரப்பட்டுள்ளது.

 

[930] جعفر بن إياس أبو بشر بن أبي وحشية بفتح الواو وسكون المهملة وكسر المعجمة وتثقيل التحتانية ثقة من أثبت الناس في سعيد بن جبير وضعفه شعبة في حبيب بن سالم وفي مجاهد من الخامسة مات سنة خمس وقيل ست وعشرين ع  تقريب التهذيب ج1/ص139

 

1491 2524ت   جعفر بن إياس  ع أبو بشر الواسطي أحد الثقات   أورده ابن عدي في كامله فأساء وهو بصري سكن واسط وحدث عن سعيد بن جبير ومجاهد وطبقتهما وكان من كبار العلماء معدود في التابعين فإنه روى عن عباد بن شرحبيل اليشكري أحد الصحابة حديثا في السنن سمعه وعنه شعبة وهشيم وجماعة  وكان شعبة يضعف أحاديث أبي بشر عن حبيب بن سالم وقال أحمد أبو بشر أحب إلينا من المنهال بن عمرو وقال أبو حاتم وغيره ثقة  وقال ابن القطان كان شعبة يضعف حديث أبي بشر عن مجاهد وقال لم يسمع منه شيئا وقال أبو طالب سألت أحمد عن حديث لشعبة عن أبي بشر سمع مجاهدا يحدث عن ابن عمر مرفوعا في التحيات فأنكره فقلت يرويه نصر بن علي الجهضمي عن أبيه عنه  وقال الأثرم حدثنا أحمد حدثنا يحيى كان شعبة يضعف حديث أبي بشر عن مجاهد في الطير هو حديث للمنهال عن سعيد بن جبير عن ابن عمر قال ابن عدي وأبو بشر له غرائب وأرجو أنه لا بأس به   (ميزان الإعتدال)

 

جعفر بن إياس  أبو بشر بن أبي وحشية مشهور بكنيته من صغار التابعين وثقه بن معين والعجلي وأبو زرعة وأبو حاتم والنسائي وكان شعبة يقول إنه لم يسمع من مجاهد ولا من حبيب بن سالم وقال أحمد كان شعبة يضعف أحاديثه عن حبيب بن سالم وقال البرديجي هو من أثبت الناس في سعيد بن جبير وقال بن عدي أرجو أنه لا بأس به فتح الباري

 

7331 أبو بشر هو جعفر بن أبي وحشية ثقة ضعف (كتاب المغني للإمام الذهبي)

 

39 جعفر بن   أبي وحشية  أبو بشر

 

حدثنا محمد بن حمويه بن الحسن قال سمعت أبا طالب قال قال أحمد بن حنبل قال يحيى بن سعيد كان شعبة يضعف حديث أبي بشر عن مجاهد قال ما سمع منه شيئا ( المراسيل لابن أبي حاتم)

 

இந்நபிமொழி அவர்களுக்கு சான்றாக அமையாது

 

செல்வத்தை சேமிக்க தடை இல்லை என்பதே இந்நபி மொழியின் நோக்கம்

இந்நபி மொழி ஸஹீஹானது என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், அர்த்தத்தின் அடிப்படையிலும் அவர்களுக்கு இது சான்றாக அமையாது. ஏனெனில், “லி யுதய்யிப” என்ற வார்த்தைக்கு தூய்மைப்படுத்துதல் என்றோர் அர்த்தம் இருந்தாலும், இந்த நபிமொழியின் முன் பின் தொடரை கவனத்தில் கொள்ளும்போது, “அனுமதித்தல்” என்ற அதன் வேறொரு அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை கையாளப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். காரணம், “பொன்னையும் வெள்ளியையும் சேமித்துவைத்து” என்ற வசனம் (9:34) அருளப்பட்டதும், செல்வத்தை சேமிக்க தடை வந்துள்ளதாக சில நபித் தோழர்கள் தவறாகப் புரிந்து கொண்டு, இறைத்தூதரிடம் விளக்கம் கேட்டபோது,

“செல்வத்தை சேமிப்பது தடை செய்யப்பட்டிருந்தால், ஜகாத்தையும், வாரிசுரிமைச் சட்டத்தையும் இறைவன் கடமையாக்கி இருக்க மாட்டான். இவ்விரண்டு சட்டங்களையும் கடமையாக்கியது, செல்வத்தை சேமிப்பதை அனுமதிப்பதற்காகத்தான் என நபி(ஸல்) அவர்கள் விளக்கம் அளித்தார்கள்.

இதனை கருத்தில் கொண்டு, மேற்கண்ட நபி மொழியில் இடம் பெற்றுள்ள, “லி யுதய்யிப மா பகிய மின் அம்வாலிக்கும்” என்ற வாசகத்தை நன்கு ஆராய்ந்தால், “கடமையான ஜகாத்தை வழங்கியது போக மீதி இருக்கும் செல்வத்தை உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் சேமித்துக் கொள்ள தடை இல்லை” என்று கூறுவது தான் இந்த ஹதீஸின் நோக்கமாகும் என்பது தெளிவாகத் தெரியவரும்.

அதாவது, செல்வத்தை சேமிப்பது கூடுமா? கூடாதா? என்றுதான் இந்நபி மொழியில் பேசப்படுகிறதே தவிர, செல்வம் சுத்தமானதா? அசுத்தமானதா? என்ற பேச்சிற்கே இடமில்லை. செல்வம் சுத்தமானதா? அசுத்தமானதா? என்ற சந்தேகம் வினவப்பட்டிருந்தால், வாரிசுரிமைச் சட்டத்தைப் பற்றி இங்கு கூற வேண்டிய அவசியமும் ஏற்பட்டிருக்காது. ஜகாத்தை மட்டும் கூறி நிறுத்திக் கொண்டிருப்பார்கள்.

“ஒரு மனிதன் சேமித்து வைப்பதில் சிறந்தது, நற்குணமுள்ள மனைவிதான்” என இதன் இறுதியில் இடம் பெற்றுள்ள செய்தி நாம் கூறிய அர்த்தத்தை மேலும் உறுதிப் படுத்துகிறது.

 
(“ஜகாத் வழங்கி விட்டால், செல்வத்தைச் சேமிக்கத் தடையில்லை” என்று கூறுகின்ற இந்த நபிமொழியை, இப்னு உமரும் அவ்வாறே புரிந்து கொண்டு, “எனக்கு உஹத் மலையளவு செல்வம் இருந்து, அதற்கு ஜகாத் வழங்கி விட்டால் மீதி உள்ளதை சேமித்து கொள்வதில் எக்கவலையும் அடையமாட்டேன். என்று கூறினார்கள். (பைஹகி:7021)

 
இதன்படி ஜகாத் வழங்குவது செல்வத்தைத் தூய்மைப்படுத்து கிறது என்ற வாதம் அடிப்படை இன்றி தகர்ந்து விடுகிறது.

[“தய்யிப்” என்ற வார்த்தைக்கு “அனுமதித்தல்” “அனுமதிக்கப்பட்டது” என்ற அர்த்தம் உண்டு என்பது அல் காமுஸுல் முஹீத் எனும் நூலில் 110 -ம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

 

(الطيب: الحلّ,  والطيب: الحلال.) (القاموس المحيط للفيروزآبادي. ص110)

அனுமதிக்கப்பட்டது என்ற அர்த்தத்தில் குர்ஆனிலும் நபிமொழியிலும் பல இடங்களில் கையாளப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். (பார்க்க: 5:87)]

மனிதனைத் தூய்மைப் படுத்துவதே ஜகாத்

ஜகாத் வழங்குவது மனிதனைத் தூய்மைப்படுத்துகிறது எனப் புரிந்துக் கொள்வதுதான் ஆதாரத்தின் அடிப்படையில் சரியானது. காரணம், ஒருவனிடம் செல்வம் குவிகின்றபோது, மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்ற பேராசை, கஞ்சத்தனம், பிறரின் செல்வத்தில் ஆசை கொள்தல், ஏழைகளுக்கு இரங்காமை போன்ற பல்வேறு அழுக்குகள், கசடுகள் அவனிடம் சேர்கின்றன. செல்வத்தில் இது போன்ற ஒர் அழுக்கும் சேர்வதில்லை. இதை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது தூய்மையாக்கப்பட வேண்டியவன் மனிதனே தவிர பொருளாதாரம் அல்ல என்பது தெளிவாகிறது.

செல்வம் குவிகின்ற போது, நாம் மேலே கூறிக் காட்டிய அழுக்குகள் மனிதனிடம் சேர்கின்றன என்பதற்கு குர்ஆன் மற்றும் நபி மொழியில் சான்றுகள் ஏராளம் உண்டு.

 

மனிதனைத் தூய்மைப்படுத்தவே ஜகாத் கடமையாக்கப்பட்டது என்பதை இறைவனும் பின் வரும் வசனத்தில் தெளிவாகவே குறிப்பிடுகிறான்.

 

خُذْ مِنْ أَمْوَالِهِمْ صَدَقَةً تُطَهِّرُهُمْ وَتُزَكِّيهِمْ بِهَا وَصَلِّ عَلَيْهِمْ إِنَّ صَلاتَكَ سَكَنٌ لَهُمْ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ) (التوبة:103)

 

“(நபியே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுத்து, அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி (அகத்திலும்) அவர்களை பரிசுத்தமாக்குவீராக! அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! ஏனெனில், உமது பிரார்த்தனை அவர்களுக்கு மன அமைதியைத் தரும். அல்லாஹ் செவியேற்பவன், நன்கறிபவன்.” (அல்குர்ஆன் 9:103)

 

தனக்கு விருப்பமான செல்வத்தில் ஒரு பகுதியை அவன் ஜகாத்தாக வழங்கும் போது, செல்வத்தின் மீது அவனுக்குள்ள மோகம் குறைந்து பேராசை, கஞ்சத்தனம் பிறரின் செல்வத்தின் மீதுள்ள ஆசை போன்ற அழுக்குகள் அகற்றப்பட்டு, அவன் வழங்கிய ஜகாத்தோடு வெளியேறிவிடுகின்றன. அதனால்தான் ஜகாத்தாக வெளியேறியதை மனிதனின் அழுக்கு, அல்லது மனிதனின் பாவங்களைக் கழுவிய அழுக்கு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸாயி, அஹ்மத், அபூ தாவூத், இப்னு குஸைமா, பைஹகி, முஸன்ஃப் அப்துர் ரஜ்ஜாக்.)

ஜகாத் செல்வத்தை தூய்மைப் படுத்துகிறது என்று குர்ஆனிலும் இல்லை, நபி மொழியிலும் இல்லை மாறாக, மனிதனைத்தான் தூய்மைப்படுத்துகிறது என்பதை சுட்டிக்காட்டவே இச்சான்றுகளை தருகிறோம். இன்னும் இதற்கான கூடுதல் சான்றுகள் பின்வருமாறு:

 

பேராசை பெரு நஷ்டம்


மனிதனிடம் செல்வம் குவிகின்ற போது பேராசை ஏற்படுகிறது என்பதை பின்வரும் நபி மொழி விவரிக்கிறது.

 

6439-عَنِ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِى أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ   قَالَ « لَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِياً مِنْ ذَهَبٍ أَحَبَّ أَنْ يَكُونَ لَهُ وَادِيَانِ ، وَلَنْ يَمْلأَ فَاهُ إِلاَّ التُّرَابُ ، وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ » رواه البخاري ومسلم, وإبن حبان, والترمذي, وأحمد)

“மனிதனுக்குத் தங்கத்திலான ஒரு ஓடை இருந்தால் தனக்கு இரண்டு ஓடைகள் இருக்க வேண்டுமென அவன் ஆசைப்படுகிறான். அவனுடைய வாயை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. மேலும், (இது போன்ற பேராசையிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டுவிட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம், இப்னுஹிப்பான், திர்மிதி, அஹ்மத்)

இரு ஓடையளவு செல்வம் இருந்தால் மூன்றாவது ஓடையளவு வேண்டுமென ஆசைப்படுகிறான் என்று வேறொரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

 

 عَنْ أَنَسٍ رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ  « يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ حُبُّ الْمَالِ ، وَطُولُ الْعُمُرِ »رَوَاهُ البخاري

“மனிதன் வளர வளர அவனுடன் இரண்டு (ஆசைகளும் சேர்ந்தே) வளர்கின்றன.
1. பொருளாசை
2. நீண்ட நாள் வாழ வேண்டு மென்ற ஆசை.

என நபி (ஸல்) அவர்கள் கூறி யதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி:6421)

மனிதனை மரணம் தழுவுகின்ற வரை பொருளை சேமிக்க வேண்டும் என்ற பேராசையில் அலைகின்றான். மனிதனின் ஆசைகள் அடங்குவதில்லை. அதற்குள் அவனது ஆவி அடங்கிவிடுகின்றது என நபி (ஸல்) அவர்கள் மனிதனது மன நிலையை படம் பிடித்துக் காட்டி இடித்துரைக்கிறார்கள்.

மண்ணறையைக் காணும் வரை மனிதன் திருந்தப் போவதில்லை என பின்வரும் அத்தியாயத்தில் மனிதனின் பேராசையை இறைவனும் சாடுகிறான்.

 

)أَلْهَاكُمُ التَّكَاثُرُ .حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ.كَلَّا سَوْفَ تَعْلَمُونَ . ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ .كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ.لَتَرَوُنَّ الْجَحِيمَ. ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ. ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ) (التكاثر)

 

“மண்ணறைகளை (மரணத்தை) சந்திக்கும் வரை செல்வத்தைத் தேடுவது உங்கள் கவனத்தை (இறை நினைவிலிருந்து) திருப்பி விட்டது. அவ்வாறல்ல! (அதன் விளைவை) அடுத்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னரும் அவ்வாறல்ல! மீண்டும் அறிவீர்கள். அவ்வாறல்ல! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தை காண்பீர்கள். பின்னர் நீங்கள் அதை கண்ணுக்கெதிராகக் காண்பீர்கள். பின்னர் அந்நாளில், (உங்களுக்கு வழங்கப்பட்ட) அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.” (102: 1-8)

மரணம் தழுவும்வரை செல்வத்தை தேடுவதில் பேராசை கொண்டு அலையும் மனிதன், இறுதியில் அதன் தீய விளைவுகளை மறுமையில் அறிந்து கொள்வான், நரகத்தை காண்பான் என்றெல்லாம் எச்சரிக்கை செய்து மனிதனது பணம் தேடும் பேராசையை இடித்துரைக் கின்றான் இறைவன்.

கஞ்சத்தனம்


மனிதன் வறுமையில் உழல்கின்ற போது, தமக்கு செல்வம் இருந்தால் அதனை அறவழியில் அதிகளவில் செலவு செய்வேன், ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குவேன், அனாதைகளை ஆதரிப்பேன் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறான்.

 
செல்வம் வந்ததும் அவனிடம் கஞ்சத்தனம் குடியேறி விடுகிறது. தன் சுயமுயற்சியில் ஈட்டிய பொருளை செலவு செய்தால் வறுமை ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் அவனை ஆட்டிப் படைக்கிறது. பழைய வாக்குறுதிகளை மறந்து விட்டு, மாபெரும் கஞ்சனாக மாறி, இரவு பகலாக செல்வத்திற்கு காவல்காரனாக ஊழியம் புரிந்து தன் செல்வத்திலிருந்து எந்தப் பயனையும் அடையாமல் அனைத்தையும் விட்டு விட்டு இறுதியில் மரணித்துவிடுகிறான்.

செல்வம் குவிகின்ற போது மனிதனிடம் கஞ்சத்தனம் குடியேறி விடுகிறது என்பதை இறைவனே பரிகசித்துக் காட்டுகிறான்.

 

وَمِنْهُمْ مَنْ عَاهَدَ اللَّهَ لَئِنْ آتَانَا مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقَنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ))فَلَمَّا آتَاهُمْ مِنْ فَضْلِهِ بَخِلُوا بِهِ وَتَوَلَّوْا وَهُمْ مُعْرِضُونَ) (التوبة:75, 76)

“அல்லாஹ் தன் அருளை எங்களுக்கு வழங்கினால், தர்மம் செய்து நல்லோர்களில் ஆகி விடுவோம்” என அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்துக் கொண்டோரும் அவர்களில் உள்ளனர். அல்லாஹ் தன் அருளை அவர்களுக்கு வழங்கிய போது, அதில் அவர்கள் கஞ்சத்தனம் செய்தனர். (தங்களின் வாக்குறுதியை) அலட்சி யமாகப் புறக்கணித்து விட்டனர்.  (அல் குர்ஆன்: 9:75,76)

வறுமையில் வாடிக் கொண்டிருந்த போது பல்வேறு நல்லறங்கள் செய்வதாக உறுதி மொழி எடுத்துக் கொள்ளும் மனிதன், செல்வம் கிடைத்ததும் தான் எடுத்த உறுதி மொழியை முற்றிலுமாக மறந்து, அலட்சியம் செய்து புறக்கணித்து உலோபித்தனம் செய்கிறான். ஜகாத் கொடுக்க மறுக்கிறான். செல்வம் குவிந்தால் கருமித்தனம், வாக்குறுதி மீறல், அலட்சியம் போன்ற அழுக்குகள் மனித மனதில் குடியேறிவிடுகின்றன. மேலும், கஞ்சத்தனம் இறைவனிடம் பெரும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பின் வரும் வசனம் எச்சரிக்கின்றது.

 

)وَلا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْراً لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ) آل عمرات)

 

“அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத்தனம் செய்வோர், அது தங்களுக்கு நல்லது எனக் கருதிக் கொள்ள வேண்டாம். மாறாக, அது அவர்களுக்கு தீங்காகும். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அவற்றை மறுமையில் (நெருப்பு) மாலையாக அவர்கள் அணிவிக்கப் படுவார்கள். வானங்கள், பூமியின் உரிமை இறைவனுக்குரியதே! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்” (3:180)

மக்களின் அழுக்குதான் ஜகாத்


ஜகாத் மனித அழுக்குதான் எனக் கூறும் நபி மொழி இதோ!

 

[1072] حدثني عبد الله بن محمد بن أسماء الضبعي حدثنا جويرية عن مالك عن الزهري أن عبد الله بن عبد الله بن نوفل بن الحارث بن عبد المطلب حدثه أن عبد المطلب بن ربيعة بن الحارث حدثه قال اجتمع ربيعة بن الحارث والعباس بن عبد المطلب فقالا والله لو بعثنا هذين الغلامين قالا لي وللفضل بن عباس إلى رسول الله e  فكلماه فأمرهما على هذه الصدقات فأديا ما يؤدي الناس وأصابا مما يصيب الناس قال فبينما هما في ذلك جاء علي بن أبي طالب فوقف عليهما فذكرا له ذلك فقال علي بن أبي طالب لا تفعلا فوالله ما هو بفاعل فانتحاه ربيعة بن الحارث فقال والله ما تصنع هذا إلا نفاسة منك علينا فوالله لقد نلت صهر رسول الله e فما نفسناه عليك قال علي أرسلوهما فانطلقا واضطجع علي قال فلما صلى رسول الله e الظهر سبقناه إلى الحجرة فقمنا عندها حتى جاء فأخذ بآذاننا ثم قال اخرجا ما تصرران ثم دخل ودخلنا عليه وهو يومئذ عند زينب بنت جحش قال فتواكلنا الكلام ثم تكلم أحدنا فقال يا رسول الله أنت أبر الناس وأوصل الناس وقد بلغنا النكاح فجئنا لتؤمرنا على بعض هذه الصدقات فنؤدي إليك كما يؤدي الناس ونصيب كما يصيبون قال فسكت طويلا حتى أردنا أن نكلمه قال وجعلت زينب تلمع علينا من وراء الحجاب أن لا تكلماه قال ثم قال إن الصدقة لا تنبغي لآل محمد إنما هي أوساخ الناس ادعوا لي محمية وكان على الخمس ونوفل بن الحارث بن عبد المطلب قال فجاءاه فقال لمحمية أنكح هذا الغلام ابنتك للفضل بن عباس فأنكحه وقال لنوفل بن الحارث أنكح هذا الغلام ابنتك لي فأنكحني وقال لمحمية أصدق عنهما من الخمس كذا وكذا قال الزهري ولم يسمه لي رواه مسلم والنسائي وأحمد وأبو داود وإبن خزيمة والبيهقي ومصنف عبد الرزاق.

 

அப்துல் முத்தலிப் பின் ரபீஆ என்பவர் கூறுகிறார்: …”அல்லாஹ்வின் தூதரே! மக்களில் அதிகம் நன்மை செய்பவர்கள் நீங்கள்! சொந்தத்தை அதிகம் சேர்ந்து நடப்பவர்கள் நீங்கள்! திருமணம் முடிக்கும் வயதை நாங்கள் அடைந்துள்ளோம். எனவே, ஜகாத் வசூலிக்கும் பணியை தந்தால், மற்ற மக்களைப் போன்று அதனை வசூலித்து, உங்களிடம் கொடுத்து விட்டு, மற்றவர்கள் (ஊதியம்) பெறுவது போன்று நாங்களும் (ஊதியம்) பெற்று (அதன் மூலம் திருமணம் செய்து) கொள்வோம்’ என்று கூறினோம்.
நபி (ஸல்) அவர்கள் நீண்ட நேரம் மௌனமாக இருந்ததால், மீண்டும் கேட்கலாம் என நாங்கள் பேச நினைத்த போது, திரைக்குப் பின்னால் இருந்த ஜைய்னப் அவர்கள், பேசவேண்டாம் என சமிக்கை செய்தார்கள்.

பின்பு நபி (ஸல்)கூறினார்கள்:
‘முஹம்மதுவின் குடும்பத்தினருக்கு ஜகாத் அனுமதிக்கப்பட்டதல்ல. ஏனெனில், அது மக்களின் அழுக்காகும். ……’
(முஸ்லிம், நஸாயி, அஹ்மத், அபூ தாவூத், இப்னு குஸைமா, பைஹகி, முஸன்ஃப் அப்துர்ரஜ்ஜாக்.)

இப்ன குஸைமாவின் அறிவிப்பில்

غسالة ذنوب الناس

 

(ஜகாத், மக்களின் பாவங்களைக் கழுவியதாகும்) என இடம் பெற்றுள்ளது.

ஜகாத் மனிதனின் அழுக்குதான் என்பது இந்த நபி மொழியில் தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.
அதாவது ஒருவனிடம் செல்வம் மேலும் மேலும் குவிகின்றபோது, பேராசை, கஞ்சத்தனம், ஏழைகளுக்கு இரங்காமை உரிமை மீறல் போன்ற பல்வேறு பாவ அழுக்குகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இறைக்கட்டளையை ஏற்று ஜகாத்தை வழங்கிவிடுகின்ற போது, பேராசை கஞ்சத்தனம் போன்ற பாவக்கறைகள் அவனது உள்ளத்திலிருந்து கழுவி எடுக்கப்பட்டு புடம்போட்ட தங்க மனதுள்ளவனாக மனிதன் மாறிவிடுகிறான்.

எனவே, ஜகாத் வழங்குவது மனிதனைத் தூய்மைப் படுத்துகிறது என்று கூறுவதுதான் குர்ஆன் மற்றும் நபி மொழி ஆகியவற்றின் அடிப்படையில் சரியானது.

 

மனிதனைத் தூய்மைப் படுத்தும் பிற கடமைகள்

ஏகத்துவக் கலிமா இணைவைத்தல் என்ற மாபெரும் அசுத்தத்திலிருந்தும், தொழுகை மானக்கேடான, மற்றும் தீமையான காரியங்களிலிருந்தும் மனிதனைத் தூய்மைப்படுத்துகிறது. நோன்பு நோற்பதால், மனக்கசடுகள் மாறி இறையச்சம் அதிகரிக்கிறது. ஏற்கப்படும் ஹஜ் செய்தவன், அனைத்து பாவங்களிலிருந்தும் சுத்திகரிக்கப்பட்டு, அன்று பிறந்த பாலகனாக மாறிவிடுகிறான். நோன்பு பெருநாளன்று வழங்கும் ஸதகத்துல் ஃபித்ர், நோன்பு நோற்றவனை பரிசுத்தமாக்குகிறது. இவ்வாறு இஸ்லாமிய கடமைகள் அனைத்தும் மனிதனைத்தான் தூய்மைப் படுத்துகிறது எனும் போது, ஜகாத் வழங்குவதும் மனிதனைத்தான் தூய்மைப்படுத்துகிறது என்ற கருத்தே சரியானதாக இருக்க முடியும். அதுவே குர்ஆன் மற்றும் நபிவழிக்கு ஏற்ற அறிவுடமையான கருத்தாகும்.

ஆறு ஓடுகிறது என்பதை அதில் தண்ணீர் ஓடுகிறது எனப் புரிந்து கொள்வது, ஊர் சிரிக்கிறது என்பதை ஊர் மக்கள் சிரிக்கிறார்கள் எனப் புரிந்து கொள்கிறோம்.

அது போன்றே, ஜகாத் செல்வத்தைத் தூய்மைப்படுத்துகிறது என்பதற்கு ஒரு சரியான ஹதீஸை அவர்கள் கொண்டு வருவார்களானால், செல்வம் யாரிடம் உள்ளதோ அவரைத் தூய்மைப்படுத்துகிறது என்றுதான் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற நடைமுறை குர்ஆனிலும், நபி மொழியிலும் ஏராளம் இடம் பெற்றுள்ளது.

 
யஃகூப் நபியின் ஒரு மகன் திருடி விட்டார் என்ற செய்தியை மற்ற மகன்கள் தன் தந்தையிடம் கூறி விட்டு, இதனை உண்மைப்படுத்திக் கொள்ள நாங்கள் இருந்த ஊரையும், எங்களுடன் வந்த வணிக ஒட்டகக் கூட்டத்தையும் விசாரித்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதை (அல்குர்ஆன் 12:82) என்ற வசனத்தில், அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஊரையும், ஒட்டகக்கூட்டத்தையும் விசாரிப்பது என்ற வசனத்தை, ஊர் மக்களையும், ஒட்டகத்தின் உரிமையாளரையும் விசாரிப்பது என எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டதோ, அது போன்றுதான், ஜகாத் பொருளாதாரத்தை தூய்மைப்படுத்துகிறது என்றால் பொருளாதாரம் வைத்திருப்பவனைத்தான் தூய்மைப்படுத்துகிறது எனப் புரிந்து கொள்ளப்படவேண்டும்.

காதறுந்த ஊசிக் கதை:

“ஊசி புதிய துணியை தைக்கும் கிழிசலையும் தைக்கும் என்பதை நாமும் அறிவோம். ஆனால், ஜகாத் செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது என இறைத்தூதர் கூறியதாக இவர்கள் விடும் ஊசிக் கதையைத்தான் மறுக்கிறோம். காதறுந்த ஊசி எதற்கும் பயன்படாது என்பது போல, “ஜகாத் செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது” என அடிப்படை ஆதாரமின்றி இவர்கள் கூறிவரும் ஊசிக் கதையும் பயனற்றதாகும்.

ஜகாத் செல்வத்தை தூய்மைப்படுத்துகிறது என எந்த நபிமொழித் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது என்பதற்கான சரியான ஆதாரத்தை காட்டிவிட்டு, அதன்பின் ஊசிக் கதை விடட்டும் ஏற்கிறோம்.

 

 

 

சான்றாய்வு -2

ஜகாத் ஆயுளில் ஒரு முறையா? ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு முறையா?

“ஜகாத் கொடு” என்று கூறினால், ஒரு முறைதான் கொடுக்க வேண்டும். காரணம், ‘கொடு’ என்றால், எல்லா மொழியிலும் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் புரிந்து கொள்கிறோம் என அர்த்தம் கற்பிக்கின்றார்கள்.

‘ஒரு முறை’ என்பது ஆயுளில் ஒரு முறையா? ஒரு பொருளுக்கு ஒரு முறையா?

1. ஆயுளில் ஒரு முறைதான் என அர்த்தம் செய்தால், ஒருவன் ஒரு தடவை ஜகாத் வழங்கி விட்டால் பின்பு ஆயுள் முழுவதும் அவன் ஜகாத் வழங்கத் தேவையில்லையா?

2. ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்றால், புதியதாக வரும் ஒவ்வொரு பொருளுக்கும் ஜகாத் வழங்க வேண்டும். அப்போது ‘ஜகாத் வழங்குதல்’ என்ற செயல் ஆயுளில் பல முறை நிகழுகிறதே. ‘கொடு’ என்றால் அது ‘ஒரு முறைதான்’ என்ற அவர்களின் அடிப்படையான வாதத்திற்கு நேர் எதிராக உள்ளது.

 

மீண்டும் ஜகாத் கோரி அபூபக்கர் (ரலி) தொடுத்த போர் அநியாயமானதா?


ஏற்கனவே நபியவர்களிடம் ஜகாத்தை வழங்கி இறைக்கட்டளையை செயல்படுத்தி வந்த சிலர், நபியவர்களின் மரணத்திற்குப் பின் ஜகாத் வழங்க மறுத்த போது, அபுபக்கர்(ரலி) அவர்கள், போர் தொடுத்து ஜகாத்தை வசூல் செய்தார்கள்.

‘ஜகாத்கொடு’ என்ற வசனத்திற்கு ஒரு முறை கொடுப்பதுதான் என அர்த்தம் செய்தால், அபூபக்கர் அவர்கள் தொடுத்த போர் அநியாயம் என்றாகிவிடுமல்லவா?. இதற்கு சகோதரர்கள் தருவார்களா?

3. ஒரு பொருளுக்கு ஒரு முறை எனக்கூறினால் ஆயிரத்திற்கு ஆயிரம் நபரும் கொடுத்து விடுவார்கள் என்ற வாதம் உண்மையானால், இறைத்தூதரின் காலத்திலும், அபூபக்கரின் ஆட்சி காலத்திலும், சிலர் ஜகாத் வழங்க மறுத்தது ஏன்? ஒரு பொருளுக்கு ஒருமுறைதான் ஜகாத் எனில், யாரும் மறுத்திருக்கமாட்டார்கள் அல்லவா?

 

நபி (ஸல்) அவர்களும், அபூபக்கர் (ரலி) அவர்களும் ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடு எனக் கேட்டதால் தானே கொடுக்க மறுத்தார்கள்.

 
எனவே, நபி (ஸல்) மற்றும் அபூபக்கர்(ரலி) ஆகியோரின் ஆட்சி காலத்தில் ஒரு பொருளுக்கு திரும்ப திரும்ப ஜகாத் வழங்குவதுதான் நடைமுறைச் சட்டமாக இருந்து வந்துள்ளது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.
 

 

சான்றாய்வு -3

ஜகாத் ஹஜ்ஜைப் போன்றதா?

“ஹஜ்ஜை உங்கள் மீது அல்லாஹ் கடமையாக்கி உள்ளான்” என நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது, ‘ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டுமா?’ என ஒரு நபித்தோழர் கேட்டார். அப்போது இறைத்தூதர் கோபம் அடைந்து, ‘இவ்வாறு தேவையில்லாத கேள்வியைக் கேட்க நான் ஆம்! என்று கூறி விட்டால் அது கடமையாகிவிடும். தேவையில்லாத கேள்வி கேட்டு மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த நினைக்கிறாயா?’ எனக் கடிந்து கொண்டார்கள். எனவே, ‘செய்’ என்று பொதுவாகக் கூறினால் ஒரு முறைதான் எனப்புரிந்து கொள்ள வேண்டும் என்பது இந்த நபி மொழியிலிருந்து தெரிகிறது. ஆகவே, ‘ஜகாத் கொடு’ எனப் பொதுவாக கூறப்பட்டுள்ளதால் ஒருமுறை வழங்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும்” என மேற்கண்ட நபி மொழியை சான்றாகக் காட்டி கூறுகின்றனர்.

இறைத்தூதர் கோபமடைந்தது ஏன்?

இறைத்தூதர் உரையை தடை செய்யும் விதத்தில் குறுக்கிட்டு திரும்பத் திரும்பக் கேள்வி கேட்டதுதான் இறைத்தூதரின் கோபத் திற்கு காரணம் என தப்ராணியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோ அந்த செய்தி!

(فغلق كلام رسول الله وأسكت وأغضب)

சாதாரணமாகவே ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கீடு செய்தால் ஆத்திரத்தை வரவழைப்பது இயற்கை. ஆனால், ஹஜ் குறித்து கேள்வி கேட்டவர், திரும்ப திரும்ப மூன்று முறை கேட்டார் என பல நபி மொழித் தொகுப்புகளிலும் சரியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி உள்ளது. இதுதான் இறைத்தூதர் கோபம் அடைந்ததற்கான சரியான காரணமே தவிர, ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டுமா? எனக் கேட்டதால் ஏற்பட்ட கோபம் அல்ல? என்பதை தப்ராணியில் இடம் பெற்ற ஹதீஸ் உறுதி செய்கிறது.

நபித் தோழர்கள் சந்தேகம் அடைந்தது ஏன்?

ஹஜ் செய்வது கடமை என்ற வசனம் அருளப்பட்ட போது, ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் சில நபித்தோழர்களுக்கு ஏற்பட்டது. ஏனெனில், கடமைகளில் இதுவே இறுதியானதாகும். இதற்கு முன் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய அனைத்தும் கடமையாகி நடை முறைக்கு வந்து விட்டன. இக்கடமைகள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் செய்து வந்த நபித்தோழர்கள், ‘ஹஜ் கடமை’ என்ற வசனம் அருளப்பட்டதும், இதனையும் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டுமோ என சந்தேகம் அடைந்து, விளக்கம் கேட்டனர்.

ஏற்கனவே கடமையான ஜகாத்தை ஒரு முறை மட்டுமே நபித்தோழர்கள் வழங்கி இருந்தால், காலம் குறிப்பிடாமல் ஹஜ் கடமையான போது, அதையும் ஒரு முறைதான் செய்ய வேண்டும் என சந்தேகத்திற்கு இடமின்றி புரிந்து கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் கோபமடையும் அளவுக்கு கேள்வியும் கேட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால், அவர்கள் ஹஜ்பற்றிய கேள்வி கேட்டதின் மூலம், ஜகாத்தை திரும்ப திரும்ப கொடுத்து வந்துள்ளார்கள் என்று தானே புரிந்துகொள்ள முடிகிறது.

 
முதலில் கடமையானது ஜகாதா? ஹஜ்ஜா?

முதலில் கடமையான ஜகாத்தைப் போன்றுதான், ஹஜ்ஜையும் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறுவதுதான் சரி. இதை விட்டு விட்டு இறுதியாகக் கடமையான ஹஜ்ஜைப் போன்றே ஏற்கனவே கடமையாகி நடை முறையில் இருந்து வரும் ஜகாத்தை புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறுவது அறிவுடமையாகாது.

ஏனெனில், ஏற்கனவே கடமையான சட்டம்தான் மக்களுக்கு அறிமுகமானதாக இருக்கும். அறிந்ததை மேற்கோள் காட்டி உவமைப் படுத்துவதே அறிவுடமையாகும். ஆனால், இவர்கள் தலைகீழாக புரிந்து கொண்டு பேசுவதுதான் மிகவும் வேடிக்கையாக உள்ளது.

ஹஜ்ஜுக்கு முன் ஜகாத் செயல்படுத்தப்பட வில்லையா?

ஜகாத் கடமையாக்கப்பட்டு சுமார் 6 வருடம் கழித்துதான் ஹஜ் கடமையாக்கப்பட்டது. ஹஜ்ஜைப் போன்றுதான் ஜகாத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஹஜ் கடமையாகும் காலம் வரை (இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில்) நபித்தோழர்கள் யாருமே ஜகாத் வழங்க வில்லையா? இறைத் தூதர்தான் அவர்களிடமிருந்து ஜகாத்தை வசூலிக்கவில்லையா?. அல்லது ஹஜ் எவ்வாறு கடமையாகிறது என அறிந்து, அதைப் போன்று ஜகாத்தையும் செயல்படுத்திக் கொள்ளலாம் என ஹஜ் கடமையாகும் வரை காத்திருந்தார்களா?

 

மேலும், “இஸ்லாமிய ஐந்து கடமைகளும் தனித்தனியானது. ஒவ்வொன்றும் தனித்தன்மைகளோடு கடமையாக்கப்பட்டது. எனவே, ஒவ்வொன்றும் எவ்வாறு கடமையாக்கப்பட்டு, எவ்வாறு செயல்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதோ அதுபோன்றே நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். ஒரு கடமையை வேறொன்றோடு ஒப்பீடு செய்து, அதைப் போன்றுதான் இதனையும் செய்ய வேண்டும் என்று கூறுவது அறிவீனமாகும்.” என இமாம் புஹாரி காலத்திற்கு முன் வாழ்ந்த ஹதீஸ் கலை அறிஞரும் இஸ்லாமிய பொருளாதார நிபுணருமான அபூ உபைத் என்பவர் ‘அல் அம்வால்’ என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். இதே கருத்தை நம் சகோதரர்களும் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், ஜகாத்தையும், ஹஜ்ஜையும் ஒப்பிட்டு பேசுவது மட்டும் நியாயமா?

குர்ஆனில் ஹஜ்ஜிற்கு (எத்தனை முறை என) காலம் குறிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், ஆயுளில் ஒரு முறைதான் ஹஜ் கடமை என இறைத்தூதர் காலம் குறிப்பிட்டுள்ள செய்தி அனைத்து நபி மொழித் தொகுப்புகளிலும் பதிவாகி உள்ளது. எனவே, காலம் குறிக்கப்பட்ட ஹஜ்ஜுடன் காலம் குறிப்பிடாத (இவர்களின் கருத்துப்படி) ஜகாத்தை எவ்வாறு ஒப்பிட்டு பேச முடியும்?

ஒரு முறை கடமையான ஹஜ்ஜை பலமுறை செய்வது குற்றமா?

ஒரு முறை செய்வது கடமை எனக் கூறப்பட்ட ஹஜ்ஜை பலமுறை செய்திட ஒருவர் விரும்பினால் அதற்கு எந்தத் தடையும் இல்லை. யாரும் தடுக்கவும் முடியாது எனும் போது, காலம் குறிக்கப்படாத ஜகாத்தை மீண்டும் கொடுப்பது கூடாது எனக்கூற இவர்கள் யார்? அல்லாஹ்வும் அவனின் தூதரும் தடை செய்யாத, அதே நேரத்தில் அதிகம் செய்வதற்கு ஆர்வமூட்டும் தர்மத்தை தடை செய்யும் அதிகாரத்தை இவர்களுக்கு வழங்கியது யார்?

தன் மீது கடமை என நினைத்து ஒருவன் ஜகாத் வழங்கி விட்டால், அவன் புரிந்து கொண்டது தவறாக இருந்தாலும்கூட, இஸ்லாத்தில் கூறப்படாத ஜகாத்தை ஏன் வழங்கினாய்? என அவன் தண்டிக்கப் படமாட்டான். அவன் வழங்கியது தர்மம் என்ற வகையில் அதற்குரிய நன்மைகள் கிடைக்கும். வீண் பிரச்சாரம் செய்து அதை தடுக்க ஏன் முயற்சிக்க வேண்டும்?

சான்றாய்வு -4

விளைபொருள் போன்றே மற்ற செல்வங்களுக்கும் ஜகாத் வழங்கப்பட வேண்டுமா?


விளைபொருளுக்கு அறுவடை காலத்தில் ஜகாத் வழங்கி விட்டால் அதன்பின் எப்போதும் ஜகாத் இல்லை என எல்லோரும் கூறுகின்றனர். விளைபொருளில் புரிந்துக் கொள்ளப்பட்டது போலவே, மற்றைய செல்வத்திற்கும் ஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டுமென புரிந்துக் கொள்ளவேண்டும். விளைபொருளிற்கு ஒரு சட்டம், செல்வத்திற்கு ஒரு சட்டமா? என்று வினோதமான கேள்வியை முன்வைக்கிறார்கள்.

விளைபொருளுக்கான ஜகாத்தின் சட்டத்தை இஸ்லாம் தனியாகப் பிரித்துள்ளது என்பதை இவர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள். எனவே, விளைபொருளுக்கான சட்டம் வேறு, மற்ற பொருளாதாரத்திற்கான சட்டம் வேறுதான். இரண்டும் ஒன்றல்ல. ஏனெனில்,

“அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய கடமையை(ஜகாத்தை) வழங்கி விடுங்கள்” (6:141) என அல்லாஹ் கூறுகிறான்.

விளைபொருளுக்கான ஜகாத்தை அறுவடையின் போது கொடுத்துவிடு என்றால், அறுவடையின் போது மட்டும்தான் ஜகாத், அதன் பின் அதற்கு ஜகாத் இல்லை என்பதை இவ்வசனத்தை வாசிப்போர் யாரும் எளிதாகப் புரிந்து கொள்ள மாட்டார்களா?

 
‘அர்ரிசாலா’ நூலாசிரியரும் இவ்வாறுதான் இவ்வசனத்திற்கான அர்த்தத்தைக் குறிப்பிடுகிறார்

 

 ثم كان مانقلت العامة عن رسول الله   في زكاة الماشية والنقد أنه أخذها في كل سنة مرة  وقال الله وآتوا حقه يوم حصاده فسن رسول الله أن يؤخذ ما فيه زكاة من نبات الأرض الغراس وغيره على حكم الله جل ثناؤه يوم يحصد لا وقت له غيره     (الرسالة للإمام الشافعي)

“கால்நடைகளிலும், நாணயங்களிலும் ஒவ்வொரு வருடமும் ஒரு முறை ஜகாத் வசூலித்துள்ளார்கள் என்ற செய்தியை இறைத்தூதரிடமிருந்து எல்லோரும் (நபித் தோழர்கள் மூலம்) கூறியுள்ளனர். (விளை பொருளில்) “அதன் உரிமையை அறுவடை காலத்தில் கொடுத்து விடுங்கள்! என இறைவன் கூறியுள்ளதால், ஜகாத் கடமையான விளைபொருளில், அறுவடை தினத்தன்று ஜகாத் வசூலிப்பதை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். அதன்பின் வேறு எந்நேரத்திலும் அதில் ஜகாத் இல்லை.” (அர்ரிசாலா)

விளைபொருளுக்கு அறுவடை செய்யும் போதெல்லாம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதே அதன் சட்டம். அதன் பின் எப்போதும் ஜகாத் இல்லை என்பதே நபிவழியாகும்.

எனவே, விளைபொருளுக்கென தனியாகச் சட்டம் கூறப்பட்டு விட்டதால், தங்கம், வெள்ளி, நாணயம் போன்ற மற்ற பொருளாதாரத்தோடு ஒப்பிட்டு பேசுவது மக்களை திசை திருப்பும் செயலாகும்.

 

விளைபொருள் மற்றைய செல்வத்திலிருந்து எந்த விதத்தில் வேறுபடுகிறது:

1. ஏற்கனவே ஜகாத் வழங்கப் பட்டு விட்ட தானியத்திலிருந்து 10 மூட்டையை விதையாக எடுத்து மீண்டும் பயிரிட்டு, அதனை அறுவடை செய்யும் போது நூறு மூட்டை கிடைத்தால், ஏற்கனவே, ஜகாத் வழங்கிய விதை பொருளான 10 மூட்டைக்கும் சேர்த்து நூறு மூட்டைக்கான ஜகாத்தையே வழங்க வேண்டும். அறுவடை செய்யப்பட்ட தானியத்திலிருந்து விதை பொருளான பத்து மூட்டையைக் கழித்துவிட்டு 90 மூட்டைக்கு மட்டும்தான் ஜகாத் வழங்க வேண்டும் என இவர்களும் கூறவில்லை.

ஆனால், செல்வத்தைப் பொறுத்த மட்டில், ஏற்கனவே, ஜகாத் வழங்கப்பட்டு விட்ட ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்து பொருளீட்டும் போது, 2 லட்சம் ரூபாய் கிடைக்குமேயானால் ஏற்கனவே ஜகாத் வழங்கிய ஒரு லட்சத்தை கழித்துவிட்டு மீதி இருப்பதற்கு மட்டுமே ஜகாத் வழங்க வேண்டும் என கூறுகிறார்கள். ஏன் இந்த முரண்பாடு? எனக் கேட்டால் இரண்டுக்கும் தனித் தனியான சட்டம் என இவர்களே விளக்கம் அளிப்பர். எனவே, விளைபொருளுக்குத் தனி சட்டம், செல்வத்திற்கு தனி சட்டம் எனும்போது இரண்டையும் ஒப்பிடுவது சரியா?

2. விளைபொருளில் வழங்க வேண்டிய ஜகாத்தின் அளவு பொருளாதாரத்திற்கு வழங்கவேண்டிய அளவிலிருந்து வேறுபடுகிறது.

மழை, மற்றும் ஆற்றுப் பாசனத்தின் மூலம் நீர் பாய்ந்து விளைந்த பொருளாக இருக்குமானால், அதற்கு 10% ஜகாத் கொடுக்க வேண்டும். செலவு செய்து நீர் பாய்ச்சி விளைந்ததாக இருக்குமானால் அதற்கு 5% ஜகாத் கொடுக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் இவ்வேறுபாடு கவனத்தில் கொள்ளப்படுவதில்லை அதாவது, அன்பளிப்பு, வாரிசுரிமை போன்ற சிரமம் அற்ற வழிமுறைகளில் செல்வம் கிடைத்திருக்குமானால், அதற்கு கூடுதல் சதவிகிதமும், சிரமத்தோடு தொழில் செய்து பொருளீட்டியிருந்தால் அதற்கு குறைவான சதவிகிதம் வழங்கவேண்டும் என யாரும் கூற மாட்டார்கள்.

எல்லா நிலையிலும் பொருளாதாரத்திற்கான ஜகாத்தின் சதவிகிதம் 2.5 சதவீதமாகவே உள்ளது.

 

விளைபொருளுக்கான ஜகாத்தின் சதவிகிதம் மற்ற பொருளாதாரத்திற்கான ஜகாத்தின் அளவை விட அதிகம் இருப்பதற்கு காரணம் விளைபொருளுக்கு ‘ஒரு முறை தான் ஜகாத்’ என்ற சட்டம் இருப்பதுதான் என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல.

இவ்வாறு பொருளாதாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கக் கூடிய விளைபொருளுக்கான ஜகாத்துடன் ஒப்பிடுவது எவ்விதத்திலும் ஏற்க முடியாது. அதனால்தான், விளைபொருளில் ஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறிய அறிஞர்களில் ஒருவர்கூட (நபித் தோழர்கள் உட்பட) பொருளாதாரத்தில் அந்த சட்டத்தைக் கூறவில்லை.
 

சான்றாய்வு -5
 

தொடர்ந்து ஜகாத் வழங்கினால் பிச்சைக்காரனாகிவிடுவானா?

‘தொடர்ந்து ஜகாத் வழங்கினால், விரைவில் வறுமை ஏற்பட்டுவிடும். ஜகாத் வழங்கி வந்தவன், பிறரிடம் கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு பிச்சைக்காரனாகிவிடுவான். பிச்சைக்காரனாக்கும் சட்டத்தை இஸ்லாம் ஒரு போதும் கூறாது’ என்ற இக்கருத்தினை தங்களின் வாதத்திற்கு சான்று போல கூறிவருகிறார்கள்.

இதற்கு சில உதாரணங்களையும் தவறான கணக்குகளையும் கூறிவருகிறார்கள்.

20 பவுன் நகை வைத்திருப்பவன் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறினால், முதல் வருடம் ஒரு பவுன் மறு வருடம் ஒரு பவுன் என்று படிப்படியாகக் குறைந்து கொண்டே வந்து, இறுதியில் அவன் பிச்சைக்காரனாகி விடுகிறான் என்றும்,

அது போலவே, ஒரு இலட்ச ரூபாய் வைத்திருப்பவன் முதல் வருடம் 2.5 ஆயிரம் கொடுப்பான். மறுவருடம், 2.5 ஆயிரம் எனப் படிப்படியாகக் குறைந்து, இறுதியில் அவன் பிச்சைக்காரனாகி விடுகிறான் என்ற கற்பனையான உதாரணங்களை மனம் போன போக்கில் அள்ளி வீசுகிறார்கள். (பார்க்க: அவர்களின் ‘ஜகாத் ஓர் ஆய்வு’ என்ற தொகுப்பு சி.டி.)

இந்த உதாரணங்களைப் பார்த்த பாமரர்களில் சிலர், ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்க வேண்டும் என்றால் இரண்டு மூன்று வருடத்திலேயே பிச்சைக்காரனாக ஆகிவிடுவோமே என புரிந்து(!), இவர்கள் கூறுவது எவ்வளவு சரியானதாக உள்ளது என நம்பிவிட்டார்கள். ஆனால், இந்த உதாரணங்களில் உள்ள அபத்தங்களைப் புரிந்து கொள்ளத் தவறிவிட்டனர்.

அபத்தங்கள்:

20 பவுன் வைத்திருப்பவன் ஒவ்வொரு வருடமும் ஒரு பவுன் அளவு ஜகாத்தாக கொடுப்பான் என்று எதை அடிப்படையாகக் கொண்டு கூறுகிறார்கள்?. தங்களது உதாரணத்தின் மூலம் இஸ்லாத்தின் சட்டத்தை விளக்குகிறார்களா? அல்லது தங்களது கற்பனையை சட்டமாக்க முனைகிறார்களா? 20 பவுனாக இருந்த போது கொடுத்த ஒரு பவுனையே, 20 பவுனை விடக் குறைவாக இருக்கும் போதும் கொடுப்பான் எனப் பேசிவருவது அறியாமையின் வெளிப்பாடல்லவா?

20 பவுனுக்குரிய ஜகாத்தின் சரியான அளவு

20 பவுன் நகை வைத்திருப்பவன் 1/2 பவுன் அதாவது 4 கிராம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதே இஸ்லாம் கூறும் அளவு. மீதி இருக்கும் 19.6 பவுனுக்கு அடுத்த ஆண்டும் 4 கிராம் கொடுக்க வேண்டுமா? என்றால் இல்லை. மீதி இருக்கும் 19.5 பவுனுக்கு 2.5 சதவிகிதம் அதாவது சுமார் 3.9 கிராம் மட்டுமே வழங்க வேண்டும். இதே போன்று அடுத்தடுத்த வருடங்களில் கொடுக்க வேண்டிய ஜகாத்தின் அளவு குறைந்து கொண்டே வந்து, சுமார் 11 பவுன் அளவை விடவும் (88கிராம்) குறைந்து விட்டால் அதற்குப் பிறகு அவன் ஜகாத் வழங்க வேண்டியதில்லை.

இந்த அளவை இரண்டு மூன்று வருடத்தில் அடைந்து விட முடியுமா? எனில் நிச்சயம் முடியாது. இந்த 11 பவுன் அளவை அடைய சுமார் 25வருடங்கள் ஆகும்.

ஒரு லட்சத்திற்குரிய ஜகாத்தின் சரியான அளவு

இதே போன்றுதான், ஒரு இலட்சம் ரூபாய் வைத்திருப்பவன் முதல் வருடத்தில் ரூ 2500 கொடுப்பான். அடுத்த வருடம் ரூ2437.5 கொடுப்பான். சுமார் ரூ 55 ஆயிரம் அளவு வரை தன் கையிருப்பு நிலவரப்படி 2.5% தொகையை வருடா வருடம் ஜகாத்தாகக் கொடுத்துக் கொண்டிருப்பான். ரூ 55 ஆயிரத்தை விட குறைந்து விட்டால் அதற்குப் பிறகு ஜகாத் வழங்க வேண்டியதில்லை.

இவ்வாறு வருடா வருடம் ஜகாத் கொடுத்து வரும்போது, இந்த ரூ55 ஆயிரம் என்ற அளவை அடைய சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகும். இதுதான் உண்மையான சரியான கணக்காகும். ஆனால், இதற்கு மாற்றமாக, ஒரு இலட்சம் வைத்திருப்பவன் ஒவ்வொரு வருடமும் 2500 கொடுப்பான் என்று கூறுவது என்ன குருட்டுக் கணக்கு? யாரை ஏமாற்ற நினைக்கிறார்கள்?

சோம்பேறிகளாக இருப்பதை இஸ்லாம் விரும்புகிறதா?

20 பவுன் நகை, அல்லது ரூ 1 லட்சம் வைத்திருப்பவனும், ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுத்து பிச்சைக்காரனாக வேண்டுமெனில், சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்த 20 ஆண்டுகளாக உழைக்காமலும் சம்பாத்தியம் செய்யாமலும், சோம்பேறிகளாகவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
ஒருவன், தன் சுய சம்பாத்தியத்தில் உண்பதை விட சிறந்த உணவு வேறொன்றுமில்லை என சுயமரியாதையைக் கற்றுத் தரும் இஸ்லாம், சோம்பேறிகளாக 20 ஆண்டுகள் இருந்துகொண்டு, தன் வசம் உள்ள பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்கி விட்டு பிச்சைக்காரனாகி, பிறரிடம் ஜகாத் வாங்கிச் சாப்பிடும்படி போதிக்குமா?

‘வாங்கும் கரத்தை விட வழங்கும் கரமே மேலானது’ என்ற கண்ணியத்தை வலியுறுத்தும் இஸ்லாம் பிச்சை எடுக்கத் தூண்டுகிறது என்பதை அறிவுலகம் ஏற்றுக் கொள்ளுமா? தன் வசம் உள்ள பொருளாதாரத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்தி சுழற்சி முறையில் பெருக்கிக் கொள்ள மாட்டானா? நூறை இரு நூறாக ஆக்குவது எப்படி என இரவு பகலாக ஓயாது சிந்தித்துக் கொண்டிருக்கும் கணினி உலகில் இந்தக் கருத்து எடுபடுமா? எந்த உலகில் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? மண்ணை பொன்னாக்க முயற்சி செய்து கொண்டிருப்பவன் தன் வசமுள்ள பணத்தை ஒன்றும் செய்யாமல் மூட்டைகட்டி தலைக்கு வைத்து உறங்கிக் கொண்டிருப்பானா? என்ன பேசுகிறோம் என்று புரியாமல் பேசி வருகிறார்கள்.

பல்டி அடிக்கிறார்கள்

வருடா வருடம் ஜகாத் கொடு என்று சொல்லும் போது மட்டும், ஒருவன் தன்னிடம் உள்ள பொருளாதாரத்தை ஒன்றுமே செய்யாமல் அப்படியே வைத்திருந்து வெகுவிரைவிலேயே பிச்சைக்காரனாகிவிடு வான் என்று கூறியவர்கள், அடுத்த நிமிடத்திலேயே இதற்கு முரணாகப் பேசி பல்டி அடிக்கிறார்கள்.

அதாவது, ரூ 10  இலட்சம் வைத்திருப்பவன் முதல் வருடம் ரூ 25 ஆயிரம் ஜகாத் கொடுத்து விட்டு, அடுத்த வருடம் கணக்கு பார்க்கும் போது ரூ 20 இலட்சம் இருந்தால் ஏற்கனவே ஜகாத் வழங்கி விட்ட 10 லட்சத்தை கழித்து விட்டு, புதிதாக கிடைத்த ரூ.10 இலட்சத்திற்கு மட்டும் ஜகாத் வழங்க வேண்டும். புதிதாக எப்படி பொருள் வரும்? எவ்வாறு ஜகாத் வழங்குவார்கள்? என்றெல்லாம் கேள்வி கேட்கக் கூடாதாம். ஏனெனில் “பொருளாதாரம் என்றாலே சுழற்சி முறையில் வளர்ந்து கொண்டுதான் இருக்குமாம். இன்றைக்கு இருந்தது போலேவே நாளைக்கு இருக்காது. பொருளாதாரத்தை அப்படியே யாரும் கையில் வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்” என அழுத்தம் கொடுத்து பேசி அந்தர்பல்டி அடித்துள்ளார்கள்.

ஜகாத் வழங்கியதற்கு மீண்டும் ஜகாத் இல்லை எனக் கூறும்போது பொருளாதாரம் அப்படியே இருக்காது என்று கூறுபவர்கள், ஒரு பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறும் போது மட்டும் ஏன் இந்த அளவுகோலை எடுத்துக் கொள்ளவில்லை? அதற்கு என்ன தடை உள்ளது?

வியாபார யுக்திகள் வளர்ந்த இந்த நவீன காலத்தில் பணத்தை கையில் வைத்துக் கொண்டு யாரும் சும்மா இருக்க மாட்டார்கள். ஏதேனும் ஒரு வழியில் ஈடுபடுத்தி வளர்ச்சி அடையச் செய்யவே முயற்சிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால், மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறும் போதுதான், செல்வத்தைப் பெருக்கிட வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கும். ஏனெனில், அப்படியே பொருளை வைத்துக் கொண்டிருந்தால், வருடா வருடம் ஜகாத் வழங்கி வந்தால், பொருளாதாரம் குறைந்து, (இவர்களின் கருத்துப்படி) வறுமையை அடைந்து விடுவோம். எனவே, தொழில் துறைகளில் பணத்தை ஈடுபடுத்தி இலாபம் ஈட்ட வேண்டும் என்று அச்சத்துடன் கூடிய ஆசை ஏற்படும். ஜகாத் ஒரு முறை வழங்கினால் போதும் என்று கூறினால், பொருளாதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அறவே ஏற்படாது. இது மக்களை சோம்பேறிகளாக்கும் திட்டமே தவிற வேறில்லை. இதனை இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்காது.

“தொழுகையை முடித்து விட்டால், பூமியில் பரந்து சென்று அல்லாஹ்வின் அருளைத்தேடிக் கொள்ளுங்கள்!” (அல்குர்ஆன் 62:10)

 

“ஹஜ்ஜின் போது அல்லாஹ்வின் அருளைத் தேடிக்கொள்வது உங்கள் மீது குற்றமில்லை” (அல்குர்ஆன் 2:198)

 

என்றெல்லாம் போதித்து, மக்கள் உழைத்து, அல்லாஹ்வின் அருளைத் தேட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஆனால், இவர்கள் ஜகாத்திற்கு புதிய விளக்கமளிப்பது சோம்பேறிகளைத்தான் உருவாக்கிறது. இது இஸ்லாத்திற்கு எதிரானது, இஸ்லாம் அனுமதிக்காதது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஜகாத் வழங்குவதால் செல்வத்தில் வளர்ச்சியே ஏற்படுகிறது:

ஜகாத் வழங்குவதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது என்று குர்ஆனிலும், நபி மொழியிலும் நிறையவே இடம் பெற்றிருக்கும் போது, இவர்கள் ஏன் இவ்வாறு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்? என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தர்மம் செய்வதால் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது என்பதைப் பறைசாற்றும் சான்றுகள் இதோ!

مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ) (البقرة:261)  

“தங்களது செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காக வழங்குகிறான். அல்லாஹ் தாராளமானவன், நன்கறிந்தவன்.” (அல்குர்ஆன் 2:261)

அல்லாஹ்வின் பாதை என்பது அறப்போரினைக் குறிக்கும் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.
ஜகாத் செலவிடப்பட வேண்டிய இனங்களில் ‘அல்லாஹ்வின் பாதையும்’ ஒன்று (9:60) என இறைவன் கூறுகிறான். எனவே, அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்படும் ஜகாத், பொருளாதாரத்தை பன்மடங்காக வளர்ச்சி அடையச் செய்கிறது என்பதை மேற்கண்ட வசனத்தின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

 
قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ وَمَا أَنْفَقْتُمْ مِنْ شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ) (سـبأ:39)  

“என் இறைவன் தன் அடியார்களில் தான் நாடியோருக்கு வாழ்வாதாரத்தை தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதைக் குறைத்தும் வழங்குகிறான். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் அதற்கான பகரத்தை அவன் வழங்குகிறான். வாழ்வாதாரம் வழங்குவோரில் அவன் மிகச் சிறந்தவன்” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 34:39)

 

என்ற வசனத்தில், இறைவழியில் செலவிடுவோருக்கு பகரமளித்துவிடுவதாக இறைவன் வாக்குறுதி அளிக்கின்றான். இந்தப் ‘பகரம்’ மறுமையில் கிடைக்கும் பகரத்தை மட்டுமல்ல இம்மையில் கிடைக்கும் பகரத்தை எடுத்துக் கொள்வதற்கும் எந்தத் தடையும் இல்லை. மேலும், இறைவனைப் பொறுத்தவரை இரு உலகிலும் பகரம் தருவதற்கு இயலாதவனும் அல்லன்.

‘நல்லறம் புரிந்தவர்களை மகிழ்ச்சியாக வாழச்செய்வோம் மறுமையிலும் சிறந்த கூலியை வழங்குவோம்’ (16:97) என்ற வசனத்தில் உள்ள மகிழ்ச்சியான வாழ்வு என்பதன் நோக்கம் இவ்வுலகில் வாழும் வாழ்வுதான் என தஃப்ஸீர் இப்னு கஸீரில் கூறப்பட்டுள்ளது. தர்மம் ஒரு நல்லறம் என்பதில் அறிவுடைய யாரும் சந்தேகிக்க மாட்டார்கள். எனவே, தர்மம் செய்வோர் ஏழ்மையாகி விடமாட்டார். சுகமான வாழ்வில் மிதந்து கொண்டிருப்பார்.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள ஒரு நபி மொழியை கவனியுங்கள்!

عن أنس بن مالك أنه حدث عن رسول الله e إن الكافر إذا عمل حسنة أطعم بها طعمة من الدنيا وأما المؤمن فإن الله يدخر له حسناته في الآخرة ويعقبه رزقا في الدنيا على طاعته ( مسلم)

“இறைவனை நிராகரிக்கும் ஒருவன் நன்மை செய்தால், அதன் பலனை இவ்வுலகிலேயே கொடுக்கப்பட்டு விடுகிறான். இறை விசுவாசிக்கு அவனது நல்லறங்களை மறுமைக்காக அல்லாஹ் சேமித்து வைக்கிறான். மேலும், அவன் இறைவனுக்கு அடிபணிந்து நடப்பதால், இவ்வுலகிலும் வாழ்வாதாரத்தை வழங்குகிறான்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (முஸ்லிம்)

 
‘ஒர் இறை விசுவாசி செய்யும் நல்லறத்திற்கான பகரம் இவ்வுலகிலும் வழங்கப்படுவதோடு, மறுமையிலும் அதற்கு கூலி வழங்கப்படும்’ என முஸ்லிமின் வேறொரு அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.

“ஒவ்வொரு நாளும் இரு வானவர்கள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ‘அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்கு(அதற்கான)ப் பகரத்தை அளித்திடுவாயாக!’ என பிரார்த்தனை செய்வார். இன்னொருவர், ‘அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல் பொருளைத்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு (செல்வத்தில்) அழிவை ஏற்படுத்து வாயாக!’ என பிரார்த்தனை செய்வார்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி 1442).

இறைவழியில் செலவு செய்பவர்கள் ஒருபோதும் பிச்சைக்காரர்களாக ஆகி விடமாட்டார்கள், அவ்வாறு செலவு செய்யாதவர்களே பிச்சைக்காரர்களாக ஆகிவிடுவார்கள் என மேற்கண்ட நபி மொழி நமக்கு உணர்த்துகிறது. காரணம் நாம் இறைவழியில் எவ்வளவு தர்மம் செய்தாலும் அது கடமையான ஜகாத்தாக இருந்தாலும் சரி, கடமையில்லாத தர்மமாக இருந்தாலும் சரி அதற்கு பகரமாக, ஏன்? நாம் செலவு செய்ததை விட கூடுதலாகவே இறைவனால் வழங்கப்பட்டு விடுகிறது. (ஒரு நன்மை செய்தால் அது போன்ற பத்து மடங்கு கிடைக்கும் (6:160) என்பது இறைவாக்கு)

இந்தப் பகரம் மறுமையில்தான் என சிலர் வாதிக்கலாம். ஆனால், அவர்களது கூற்று தவறாகும். காரணம், மேற்கண்ட நபி மொழியில் இடம் பெற்ற ‘அழிவு’ என்பது இவ்வுலகில் ஏற்படும் அழிவை குறிப்பது போலவே ‘பகரம்’ என்பதும் இவ்வுலகில் ஏற்படும் பகரத்தையே குறிக்கும். மறுமையிலும் பகரம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆக, இறைவழியில் மனிதன் எவ்வளவு செலவிட்டாலும் சிலர் வாதிட்டு வருவது போல அவன் ஒரு போதும் பிச்சைக்காரனாகி விடமாட்டான். மாறாக, கொடுக்கக் கொடுக்கத்தான் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும். கொடுத்துப் பழகியவர்களே அதன் பலனை நன்குணர்வார்கள்!

வறுமை குறித்து அச்சுறுத்துவது யார்?

இறைவழியில் செலவு செய்தால் வறுமை வந்துவிடும், பிச்சைக்காரர்களாக ஆகிவிடுவீர்கள் என அச்சுறுத்துவது யார் என்பதை பின்வரும் இறைவசனம் நமக்கு தெளிவாக இனம் காட்டுகிறது.

الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلاً وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ) (البقرة:268)

 
“(தர்மம் செய்வதால்) வறுமை ஏற்படும் என ஷைத்தான் உங்களை பயமுறுத்துகிறான். வெட்கக் கேடானதை (செய்ய) உங்களைத் தூண்டுகிறான். அல்லாஹ்வோ தனது மன்னிப்பையும் அருளையும் (தருவதாக) வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவன், நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 2:268)

தர்மம் செய்வதால் ஏற்படும் பயன், தர்மம் செய்யாத போது ஏற்படும் தீங்கு ஆகியவற்றை விவரித்து, தர்மம் செய்ய வேண்டிய அவசியத்தையும், எவ்வாறு செய்ய வேண்டும் செய்த பின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி கூறிவரும் தொடரின் இறுதியில் தான் நாம் மேற்கண்ட வசனம் இடம் பெற்றிருக்கிறது.

 
ஜகாத் வழங்குவதால் பிச்சைக்காரர்களாக மாறிவிடுவோம் என்ற ஷைத்தானின் அச்சுறுத்தலை பின்னுக்கு தள்ளி விட்டு இறைவழியில் அதிகளவு தர்மம் செய்ய வேண்டும் என்பதை நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

 
உதாரணத்திற்கு ஓர் ஆளைக் காட்ட முடியுமா?

ஜகாத் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்ற கருத்து சுமார் இரண்டு மூன்று வருடங்களாத்தான் பேசப்பட்டு வருகிறது. இதற்கு முன் இந்த கருத்து இல்லாததால் கடந்த 14  நூற்றாண்டுகளாக வாழ்ந்த இஸ்லாமியச் சமூகம் ஜகாத் வழங்கியவற்றுக்கே மீண்டும் மீண்டும் கொடுத்தே வந்துள்ளனர். இந்த 14 நூற்றாண்டு கால வரலாற்றில் அவ்வாறு ஜகாத்தை செயல்படுத்தி வந்தவர்களில் பிச்சைக்காரராகிவிட்டார் என ஒருவரையாவது எடுத்துக்காட்ட முடியுமா?

 

சான்றாய்வு -6

எளிமையான(?) சட்டம் கூற வேண்டுமா?

ஜகாத் வருடா வருடம் இல்லை என்போர் கூறும் இன்னொரு துணைச் சான்று இதோ!

‘மீண்டும் மீண்டும் ஜகாத் கொடு’ என்று சட்டம் கூறுவதனால்தான், விரைவிலேயே பிச்சைக்காரர்களாக மாறிவிடுவோமோ என பயந்துதான், ஆயிரத்தில் ஒருவர் கூட சரியாக ஜகாத் வழங்குவது இல்லை. “ஒரு பொருளுக்கு ஒரு முறை ஜகாத் கொடு” என்று சட்டத்தை எளிமையாக்கினால் ஆயிரத்திற்கு ஆயிரம் பேரும் ஜகாத் வழங்குவார்கள். இதனால், கொடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி மொத்தத்தில் ஏழைகள் அதிகளவில் பயன் பெறுவார்கள்.”

இஸ்லாமியப் பிற கடமைகளையும் எளிமையாக்கித் தருவார்களா?

ஒரு நாளைக்கு ஐந்து நேரமும் தொழவேண்டும் என்று கூறுவதால்தான் நூற்றுக்கு ஐந்து பேர் கூட தொழுவதில்லை. பல கிராமங்களில் உள்ள பள்ளிகள் ஜும்ஆ மற்றும் பெருநாள் தொழுகையை தவிர வேறொன்றையும் கண்டதில்லை. பலநூறு பள்ளிகளின் கதவுகளில் பல நாட்களாக பூட்டுகள் தொங்குகின்றன.

வாரத்தில் ஒரு முறை, அல்லது வருடத்தில் ஒரு முறை தொழுவதுதான் கடமை என்று சட்டத்தை எளிமையாக்கினால், பள்ளிகள் அனைத்தும் தொழுவதற்கு இடமின்றி நிரம்பி வழியுமல்லவா?

 

ரமளானில் 30 நாட்களும் நோன்பு நோற்பது பலருக்கு கஷ்டமாக உள்ளதாம். ரமளானில் மூன்று நாட்கள்மட்டும் நோன்பு நோற்றால் போதும் என எளிமையாக சட்டம் கொண்டு வந்தால் நோயாளிகள் கூட நோன்பு நோற்று நன்மையை அடைந்து இறையச்சம் உடையவர்களாக மாறிவிடுவார்களல்லவா?

ஜகாத் என்பது எல்லோரும் செய்ய வேண்டிய கடமையல்ல. செல்வந்தர்கள் மட்டுமே செயல்படுத்த வேண்டிய கடமை. ஆனால், தொழுகையும், நோன்பும் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி எல்லோரும் செய்ய வேண்டிய கட்டாயக் கடமை. எனவே, முதலில் மாற்றம் செய்யப்பட வேண்டியது தொழுகையும், நோன்பும்தான். அதில் மாற்றம் செய்து விட்டு, பிறகு ஜகாத்தில் அவர்கள் கூறிவரும் மாற்றத்தைச் செய்து கொள்ளட்டும்.

செயல்படுத்துவோரின் எண்ணிக்கையை அளவு கோலாகக் கருதலாமா?

ஒரு சட்டத்தை எத்தனை மக்கள் செயல்படுத்துகிறார்கள் என்பதை அளவு கோலாக கொள்ள ஆரம்பித்தால் ஒவ்வொரு நாட்டிலும், மனித சட்டங்களில் அடிக்கடி திருத்தம் செய்யப்பட்டு வருவது போல் மார்க்கச் சட்டங்கள் அனைத்தையும் அடிக்கடி திருத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும், அதிக மக்கள் செய்து வரும் தர்ஹா வழிபாடு, மவ்லூத் ஃபாதிஹா போன்ற பல்வேறு விஷயங்களை மார்க்கமாக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும். இதை அனுமதிக்க முடியுமா?

ஒரு சட்டத்தை ஆய்வு செய்யும் போது எத்தனை பேர் செயல்படுத்துகிறார்கள் என எண்ணிக்கையை அளவு கோலாக கருதக் கூடாது. குர்ஆனில் கூறப்பட்டுள்ளதா? நபி மொழியில் கூறப்பட்டுள்ளதா? என்று மட்டுமே சிந்திக்க வேண்டும். குர்ஆனிலும், நபிமொழியிலும் ஒரு சட்டம் சொல்லப்பட்டு விட்டால், அதை மக்களால் பின்பற்ற முடியாத அளவிற்கு கடினமாக உள்ளதாகக் கருதி அச்சட்டத்தை விமர்சிக்கவோ அல்லது அதில் மாற்றம் செய்ய முனையவோ இவ்வுலகில் யாருக்கும் அதிகாரமில்லை.

“உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமையாக்கி விட்டேன்” (5:3) என்றும், “அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒன்றை தீர்மானித்து விட்டால், அதில் சுயவிருப்பம் கொள்ளும் உரிமை விசுவாசம் கொண்ட எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் இல்லை” (33:36) என்றும் இறைவன் தெளிவுபடுத்தி விட்டான். இந்நிலையில் ஜகாத்தின் சட்டங்கள் மக்களால் செயல்படுத்த முடியாமல் உள்ளது என்று விமர்சிப்பது, இச்சட்டத்தைக் கூறிய இறைவனையும், இறைத்தூதரையும் விமர்சிப்பதாக ஆகும்.

மேலும், நல்லவர்கள் குறைவானவர்களே என மனிதர்களைப் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வே தெளிவுபடுத்தி உள்ளான். எவ்வளவு எளிமையான சட்டத்தை இயற்றினாலும் நூறு சதவீத மக்களும் செயல்படுத்த மாட்டார்கள். அப்போதும் அந்த எளிமையான சட்டத்தை செயல்படுத்துபவர்கள் குறை வாகத்தான் இருப்பார்கள்.

இறைவன், தன் தூதரை நோக்கி, ‘நீர் எவ்வளவு பேராசை கொண்டாலும் மக்களில் அதிகமானோர், நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்’ எனக் கூறுகிறான். இதே அளவுகோல்தான் எல்லா நல்லறங்களிலும். “தீயது (தீயவர்கள்) அதிகமாக இருப்பது, உமக்கு ஆச்சரியமாக இருந்த போதிலும், தீயதும் நல்லதும் ஒருகாலும் சமமாக ஆகாது” என (5:100) இறைவன் வேறோரு வசனத்தில் குறிப்பிடுகிறான். எனவே, ஒரு முறை ஜகாத் என்று சட்டம் கூறினால் அனைவரும் செயல்படுத்துவார்கள் என்பது இறைவன் ஏற்படுத்திய நியதிக்கு முரணானதாகும்.

இறைத்தூதர், அபூபக்கர் ஆட்சியில் சிலர் ஜகாத் வழங்க மறுத்தது ஏன்?

இறைத்தூதர் காலத்திலும், அவர்களது மரணத்திற்கும் பின்பும் சிலர் ஜகாத் வழங்க மறுத்து வந்தார்களே! ஏன்? ஒரு முறைதான் வழங்க வேண்டும் என்ற எளிமையான சட்டம் அப்போது நடைமுறையில் இல்லை என்றுதானே அர்த்தம்?

ஜகாத் வழங்குவது ஒரு முறை தான் என்ற எளிமையான சட்டம் அவர்கள் காலத்தில் இருந்திருந்தால் அனைவரும் ஜகாத் வழங்கி இருப்பார்களல்லவா?

எனவே, இறைத்தூதர் காலத்திலும், அவர்கள் மரணித்த உடனேயும் ஜகாத் வழங்க சிலர் மறுத்துள்ளனர் என புகாரி, முஸ்லிம் ஆகிய நம்பகமான நூற்களில் இடம் பெற்றுள்ள செய்தியின் மூலம் ஒரு பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்குவதுதான் இறைத்தூதர் காலத்திலிருந்தே சட்டமாக இருந்து வந்துள்ளது என்பது உறுதியாகிறது.

 

சான்றாய்வு -7
ஒரே பொருளுக்கு வருடா வருடம், ஜகாத் வழங்க வேண்டும்

‘ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்’ என குர்ஆனிலோ நபி மொழியிலோ கூறப்படவில்லை. வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என ஒரு ஹதீஸை கொண்டு வந்தால் ஒரு லட்சம் ரூபாய் தரப்படும்’ என சவால் விட்டுப் பேசி வருகிறார்கள்.

ஒரு லட்சம் என சவால் விட்டுப் பேசி விட்டதால் அவர்களின் கருத்தில் உண்மை இருப்பதாக அர்த்தமாகிவிடாது. வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு ஹதீஸை எடுத்துக் காட்டியப் பின்பும் அதனைப் பலவீனம் எனக் கூற காரணம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இது இவர்களின் போலித் தனத்தை காட்டுகிறது.

 

ஜகாத் கொடுங்கள்!

وَأَقِيمُوا الصَّلاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ) (البقرة:110)

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஜகாத்தை வழங்குங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடத்தில் பெற்றுக் கொள்வீர்கள்! நீங்கள் செய்பவற்றை நிச்சயம் அல்லாஹ் பார்க்கிறான். (அல்குர்ஆன் 2:110)

தொழுகையைப் பற்றிக் கூறப்படும் வசனங்களில் எல்லாம் ஜகாத்தையும் சேர்த்தே கூறப்படுகிறது.
ஆனால், எப்போது, எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற அளவு காலம் பற்றி குறிப்பிடாமல், ஜகாத் கொடுங்கள் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. எனினும், ஜகாத் கடமையாகுவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்), எவ்வளவு வழங்க வேண்டும், (சதவிகிதம்) எப்போது வழங்க வேண்டும் ஆகிய அனைத்திற்கும் இறைத்தூதர் தெளிவாக விளக்கமளித்துள்ளார்கள்.

அளவு நிர்ணயம்

ஒருவன் மீது ஜகாத் கடமையாவதற்கான செல்வத்தின் உச்ச வரம்பை நிஸாப் என்று கூறப்படும். வெள்ளி, விளைபொருள், கால்நடை ஆகிய ஒவ்வொன்றிற்கும் நிஸாபை தீர்மானித்து தெளிவுபடுத்திய நபிமொழிகள் ஏராளம். அவற்றில் சில!

 

 1459- عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ  رضى الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ  قَالَ « لَيْسَ فِيمَا دُونَ خَمْسَةِ أَوْسُقٍ مِنَ التَّمْرِ صَدَقَةٌ ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ مِنَ الْوَرِقِ صَدَقَةٌ ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ مِنَ الإِبِلِ صَدَقَةٌ »رواه البخاري

 

“ஐந்து வஸக்குகளை விடக் குறைவாக உள்ள பேரீச்சம் பழத்தில் ஜகாத் இல்லை. ஐந்து ஊக்கியாக்களை விடக்குறைவாக உள்ள வெள்ளியில் ஜகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களை விடக் குறைவானவற்றிலும் ஜகாத் இல்லை.” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி:1459)

‘வஸக்’ என்பது அறுபது ஸாவ் ஆகும். ஒரு ஸாவ் என்பது 2.156 கி.கிராம். இதன்படி ஐந்து வஸக் என்பது 5 x 60 x 2.156 = 646.8 கி.கிராம். அதாவது விளை பொருளில் ஜகாத் கடமையாகுவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்) சுமார் 650 கிலோ ஆகும்.

‘ஊக்கிய’ என்பது 40 திர்ஹங்களாகும். ஒரு திர்ஹம் என்பது சுமார் 2.975 கிராம்.
ஐந்து ஊக்கிய என்பது:
5 x 40 x 2.975 = 595 கிராம்.

இதன்படி, வெள்ளியில் ஜகாத் கடமையாவதற்கான உச்ச வரம்பு (நிஸாப்) 595 கிராம் ஆகும்.
(யூசுப் கர்ழாவி அவர்கள் எழுதிய ‘ஃபிக்ஹு ஜகாத்’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட நவீன கால அளவுகளாகும் இவை. அளவுகள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே இவ்வளவின் விபரத்தை பதிவு செய்துள்ளார்.) விளைபொருள் 650 கிலோவுக்கும் வெள்ளி 595 கிராமிற்கும் குறைவாக ஒருவனிடம் இருந்தால் அப்போது ஜகாத் கடமையில்லை. இந்த அளவும், இதைவிட கூடுதலாகவும் ஒருவனிடம் இருந்தால் அப்போது அவன் மீது ஜகாத் கடமையாகும்.

 
ஆடு, மாடு ஆகியவற்றில் ஜகாத் கடமையாவதற்கான குறைந்தபட்ச அளவினை (நிஸாபை) விவரிக்கும் நபி மொழிகள் ஏராளம் உண்டு. அதனை இங்கே எழுத வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதனை இங்கு குறிப்பிடவில்லை.

எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும்?

ஜகாத் கடமையான பொருட்களில் ஒவ்வொன்றிலும் எத்தனை சதவிகிதம் வழங்க வேண்டும் என பின் வரும் நபிமொழிகள் விளக்குகிறது.

 

1483 عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ – رضى الله عنه عَنِ النَّبِىِّ  قَالَ « فِيمَا سَقَتِ السَّمَاءُ وَالْعُيُونُ أَوْ كَانَ عَثَرِيًّا الْعُشْرُ ، وَمَا سُقِىَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ » رواه البخاري.

 

“மழை, ஊற்று, மற்றும் தானாகப் பாயும் நீரால் விளைந்த பொருளில் பத்தில் ஒரு பங்கும் ஏற்றம், கமலை கொண்டு நீர் பாய்ச்சி விளைந்த பொருளில் இருபதில் ஒரு பங்கும் ஜகாத் கொடுக்க வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி. 1483)

 

1454- أَنَّ أَنَساً حَدَّثَهُ أَنَّ أَبَا بَكْرٍ رضى الله عنه كَتَبَ لَهُ هَذَا الْكِتَابَ لَمَّا وَجَّهَهُ إِلَى الْبَحْرَيْنِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ « هَذِهِ فَرِيضَةُ الصَّدَقَةِ الَّتِى فَرَضَ رَسُولُ اللَّهِ e عَلَى الْمُسْلِمِينَ ، وَالَّتِى أَمَرَ اللَّهُ بِهَا رَسُولَهُ ، فَمَنْ سُئِلَهَا مِنَ الْمُسْلِمِينَ عَلَى وَجْهِهَا فَلْيُعْطِهَا ، وَمَنْ سُئِلَ فَوْقَهَا فَلاَ يُعْطِ……. ، وَفِى الرِّقَةِ رُبْعُ الْعُشْرِ ، فَإِنْ لَمْ تَكُنْ إِلاَّ تِسْعِينَ وَمِائَةً فَلَيْسَ فِيهَا شَىْءٌ ، إِلاَّ أَنْ يَشَاءَ رَبُّهَا » .رواه البخاري

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘…. வெள்ளியில் நாற்பதில் ஒரு பங்கு கொடுக்க வேண்டும். அதில் நூற்றுத் தொண்ணூறு திர்ஹம் மட்டும் இருந்தால் உரிமையாளன் நாடினாலே தவிர ஜகாத் இல்லை.’ என்று இருந்தது (புகாரி:1454)

எப்போது ஜகாத் கொடுக்க வேண்டும்?

மேற்கண்ட வெவ்வேறு நபிமொழிகளில், பல்வேறு பொருட்களின் ஜகாத்திற்கான நிஸாப், மற்றும் எத்தனை சதவிகிதம் வழங்கப்பட வேண்டும் என்ற விபரங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. எப்போது வழங்க வேண்டும் என்பதற்கான விளக்கம் வேறோரு நபிமொழியில் அளிக்கப்பட்டுள்ளது.

 

قال أبو داود وقرأت في كتاب عبد الله بن سالم بحمص عند آل عمروبن الحارث الحمصي عن الزبيدي قال وأخبرني يحيى بن جابر عن جبير بن نفير عن عبد الله بن معاوية الغاضري من غاضرة قيس قال قال النبيe  ثلاث من فعلهن فقد طعم طعم الإيمان من عبد الله وحده وأنه لا إله إلا الله وأعطى زكاة ماله طيبة بها نفسه رافدة عليه كل عام ولا يعطي الهرمة ولا الدرنة ولا المريضة ولا الشرط اللئيمة ولكن من وسط أموالكم فإن الله لم يسألكم خيره ولم يأمركم بشره (رواه أبو داود )

“மூன்று விஷயங்களை செய்யும் ஒருவர் ஈமானின் ருசியை சுவைத்துவிட்டார். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை மட்டும் வணங்குவது, தன் செல்வத்திலிருந்து மன விரும்பி ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுத்து வருவது …” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காழிரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூற்கள்: அபூ தாவூத், தப்ரானி, பைஹகி, புகாரியின் தாரீக் அல் கபீர், முஃஜம் ஸஹாபா, அல் ஆஹாது வல் மஃதானி.)

இந்நபி மொழியினை ஹதீஸ் கலை வல்லுனர்கள், குறிப்பாக இப்னு முலக்கின் அவர்களும், சமீபகால பேரறிஞர் அல்பானி போன்ற பலரும் ஸஹீஹ் எனக் கூறுகின்றனர். ஹஸன் என்ற தரத்தைவிடவும் சிறந்தது என சிலர் ஏற்றுள்ளனர்.

 

ثم كان مانقلت العامة عن رسول الله   في زكاة الماشية والنقد أنه أخذها في كل سنة مرة (الرسالة)

“கால்நடை மற்றும் நாணயங்களின் ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வசூலித்துள்ளார்கள் என்பதை இறைத்தூதரிடமிருந்து (நபித்தோழர்கள்) அனைவரும் கூறியுள்ளனர்.” (அர்ரிஸாலா)

ஒவ்வொரு வருடமும் ஒரு முறை ஜகாத் வழங்க வேண்டும் என்பதை இந்த சான்றுகள் உறுதி செய்கின்றன.

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டாமா?

1. இறைவன் ஜகாத் கொடு என்று கூறுகிறான்.
2. ஒருவரிடம் நிஸாப் அளவு செல்வம் இருந்தால் அவர் ஒவ்வொரு வருடமும் தன் செல்வத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதம் ஜகாத் வழங்க வேண்டும் என இறைத்தூதர் கூறியுள்ளார்கள்.

இச்சான்றுகளின் அடிப்படையில், ஒருவனிடம் நிஸாப் அளவு செல்வம் இருக்கும் காலமெல்லாம் அவன், தன் வசமுள்ள அனைத்துச் செல்வத்திற்கும் வருடா வருடம் ஜகாத் வழங்கிக் கொண்டே இருக்க வேண்டும் என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இறைத்தூதருடன் வாழ்ந்த நபித்தோழர்கள், ஹதீஸ் கலையின் அறிஞர்கள், (அவசியப்படும் போது மாபெரும் இமாம் என இவர்கள் கூறிக் கொள்ளும்) இமாம் அஹ்மத் பின் ஹன்பல், இமாம் மாலிக் ஆகியோர் சுருக்கமாகச் சொல்வதானால் உலகமே இவ்வாறுதான் புரிந்து கொண்டுள்ளது. எனவே, இதற்கு மாற்றமாக, ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் என யார் கூறினாலும், அவர் தன் கருத்துக்கு சான்றுகள் தரவேண்டும்.

‘ஒரு பொருளுக்கு ஒரு முறைதான் ஜகாத் வழங்க வேண்டும்’ என இறைவன் கூறியதாகவோ, இறைத்தூதர் கூறியதாகவோ ஒரு சான்று கூட தராமல், தான் புரிந்து கொண்டது போல்தான் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் எனப்பேசி வருவது அறிவுடையோர் கருத்தாக இருக்க முடியாது.

அபூ தாவூதில் இடம் பெற்ற இந்நபி மொழி பலவீனமானதா?

“வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும்” என்ற நபி மொழியில், அபூ தாவூதில் இடம் பெற்றிருக்கும் அறிவிப்பாளர் வரிசையைத் தவிர, தப்ராணி, பைஹகி, புகாரியின் தாரீக் அல்கபீர், முஃஜம் ஸஹாபா, அல் ஆஹாது வல் மஃதானி ஆகிய பல்வேறு ஹதீஸ் நூட்களில் உள்ள அறிவிப்பாளர் வரிசையில் பலவீனமானவர்கள் இடம் பெற்றுள்ளதால், அவற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை.

(வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று உலகில் எந்த நூலிலும் ஹதீஸ் இல்லை. எடுத்துக் காட்டுவோருக்கு ஒரு இலட்ச ரூபாய் பரிசு’ என்று அறிவிப்புச் செய்தார்கள். ஆனால், அபூ தாவூதில் உள்ள இந்த ஹதீஸை எடுத்துக் காட்டிய போது அதனை பலவீனம் என்று கூறக் காரணம் தேடுகிறார்கள்.)

பலவீனம் என்று கூறுவோர், இந்நபி மொழியின் மீது மூன்று குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள். அக்குற்றச்சாட்டுகளையும், அதற்கான பதிலையும் விரிவாக அறிந்து கொள்வோம்.

 

قال أبو داود وقرأت في كتاب عبد الله بن سالم بحمص عند آل عمروبن الحرث الحمصي عن الزبيدي قال وأخبرني يحيى بن جابر عن جبير بن نفير عن عبد الله بن معاوية الغاضري

 

குற்றச்சாட்டு -1

‘கோடிட்டு காட்டப்பட்ட யஹ்யா பின் ஜாபிர் என்பவர், ஜுபைர் பின் நுஃபைர் என்பவரிடம் நேரிடையாக இந்த ஹதீஸைக் கேட்கவில்லை. இவ்விருவருக்குமிடையில் அறிவிப்பாளர் ஒருவர் விடுபட்டுள்ளார். அதனால் அது தொடர்பறுந்த(முன்கதிஃ) ஹதீஸாகும்.’ ஆகையால், இது பலவீனமானது.

பதில் -1 (ஸஹீஹ் என்பதனை சரிகாணல்)

அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார் என்பது உண்மையே. எனினும், அறிவிப்பாளர் விடுபட்டிருப்பதால் மட்டும் ஒரு ஹதீஸ் பலவீனமானது என்ற முடிவுக்கு வரக்கூடாது. விடுபட்டவர் யார்? என அறவே தெரியவில்லை அல்லது விடுபட்டவர் பலவீனமானவர் என கண்டுகொள்ளப்பட்டது போன்ற சூழ்நிலையில் மட்டும் அந்த நபி மொழி பலவீனமானது என்று உறுதியாக முடிவு எடுக்க முடியும்.

 
விடுபட்டவர் நம்பகமானவர் என வேறு சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளப்படுமேயானால், அல்லது வேறோர் தொடரில் அறிவிப்பாளர் விடுபடாமல் அறிவிக்கப்பட்டிருந்தால் அப்போது அதனை பலவீனமானது என ஒதுக்கிவிட முடியாது.

அபூ தாவூதில் உள்ள நபி மொழியின் அறிவிப்பாளர் வரிசையில் யஹ்யா பின் ஜாபிர் என்பவருக்கும் ஜுபைர் என்பவருக்குமிடையில் விடுபட்டவர், அப்துர்ரஹ்மான் என்பவர் ஆவார் என்பதை வேறு நூட்களில் இடம் பெற்ற அறிவிப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. ‘இவர், இதே அறிவிப்பில் இடம் பெற்ற ஜுபைர் என்பவரின் மகனாவார். இவர் நம்பகமானவர்’ என ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவரும் கூறுகின்றனர். ஆகையால், இது ஸஹீஹானது தான் என இக்கலை அறிஞர்கள் பலரும், குறிப்பாக சமீபத்தில் தோன்றிய ஹதீஸ் ஆய்வாளர்களில் சிறந்து விளங்கும் நாஸிருத்தீன் அல்பானியும் ஏற்றுள்ளனர். அர்னாவூத் என்பவர் ஹஸன் என்ற தரத்தில் உள்ளது எனக் கூறுகிறார்.

மேலும், அபூ தாவூதின் இன்னொரு ஒரிஜினல் பிரதியில் எந்த அறிவிப்பாளரும் விடுபடாமல் தொடர்ச்சியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை இப்னு ஹஜர் அவர்கள் தன் வசம் இருந்து வந்த வேறொரு மூலப் பிரதியின் மூலம் ‘அல் இஸாபா’ என்ற தனது நூலில் இனம் காட்டியுள்ளார். “நமது கைவசம் உள்ள அபூ தாவூதின் பிரதிகளில் எழுதுவோர் தவறினால் அப்துர் ரஹ்மான் விடுபட்டுள்ளார். ‘இஸாபா’ என்ற நூலில் இப்னு ஹஜ்ர் அவர்கள் எடுத்துக் காட்டிய அறிவிப்புதான் சரியானதாகும்” என அபூ தாவூதின் விரிவுரையாளர், ‘அவ்னுல் மஃபூத்’ எனும் தனது நூலில் இதை உறுதிப்படுத்துகிறார். (இஸாபா என்ற நூலையும், அவ்னுல் மஃபூத் என்ற நூலில் மேற்கூறிய நபிமொழியின் விளக்க உரையையும் காண்க!)

மேற்கண்ட விளக்கத்தின்படி அறிவிப்பாளர் தொடரில் யாரும் விடுபடவில்லை என்பது தெளிவாகிறது. எனவே, அபூ தாவூதில் இடம்பெற்ற ஹதீஸ் முன்கதிஃ (தொடர்பறுந்தது) எனக் காரணம் காட்டி பலவீனமானது என்று ஒதுக்க முடியாது.

 

 
குற்றச்சாட்டு-2
 

“அபூ தாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக் கூறி மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்கிறார்கள். அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூ தாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகின்றார். அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை. ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிஸுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும். மேலும் அம்ரு பின் ஹாரிஸுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப் படவில்லை. தஹபீ அவர்கள் இவரது நேர்மை நிரூபணமாக வில்லை என்று கூறுகின்றார். நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூ தாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது.”

அம்ர் பின் ஹாரிஸ் நேர்மை நிரூபணமாகாதவாரா? (ஸஹீஹ் என்பதனை சரிகாணல்)

‘அம்ர் பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணம் ஆகல்லை’ என தஹபி கூறுவதாக அவர்கள் எழுதிய தகவல், உண்மைக்குப் புறம்பானதாகும். தஹபி அவர்கள் எந்த இடத்திலும் அவ்வாறு கூறவில்லை. மாறாக ‘மீஜானுல் இஃதிலால்’ என்ற நூலில் அவர் கூறியதை திரித்து மொழி பெயர்த்துள்ளனர். தஹபி கூறிய வாசகம்:

(لا تعرف عدالته)

 

அவரது நேர்மை அறியப்படவில்லை.

‘நேர்மை அறியப்படவில்லை’ என்ற வாசகத்திற்கும், ‘நேர்மை நிரூபணமாகவில்லை’ என்ற வாசகத்திற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு. ‘அறியப்படவில்லை’ என்ற வாசகத்தின் மூலம் நம்பகமானவரா? என்பது தஹபிக்கு தெரியாது என்றே புரிந்து கொள்ளப்படும். ‘நிரூபணம் ஆகவில்லை’ என்று அர்த்தம் செய்வதாக இருந்தால்,

 

(لاتـثبت عدالته)

 

என்று கூறி இருக்க வேண்டும். அவ்வாறு தஹபி அவர்கள் ஒரு இடத்திலும் கூறவில்லை. பொய்யுரைக்கக் கூடியவர், மனன சக்தி குன்றியவர், மறுக்கப்பட வேண்டியவர் போன்ற அவரை குறைப்படுத்துகின்ற காரணங்களையும் தஹபி அறியவில்லை. எனவேதான், ‘அவரது நேர்மை அறியப் படவில்லை’ என்று கூறி முடித்துக் கொண்டார்.

மேலும், ஹிஜ்ரி 720ல் தங்களது 48வது வயதில் எழுதிய அல் காஷிஃப் என்ற நூலில் ‘அமர் பின் ஹாரிஸ் நம்பகமானவராக கருதப்பட்டுள்ளார்’ என்று பதிவு செய்து, தனது முந்திய கருத்தை மாற்றிக் கொண்டுள்ளார். இச்செய்தி அவர்களுக்கு எதிராக அமைந்திருப்பதால் வசதியாக அதை மறைத்தே விட்டார்கள். காஷிஃபில் பதிவான செய்தி இதோ!

 

 عمرو بن الحارث بن الضحاك الحمصي عن عبد الله بن سالم وعنه إسحاق زبريق وثق د  الكاشف ج2/ص73

…. அம்ர் பின் ஹாரிஸ் …நம்பகமானவராகக் கருதப்பட்டுள்ளார். அல் காஷிஃப். 2/73

(தொழுகையில் விரல் அசைப்பதற்கு இவர்கள் ஆதாரமாக எடுத்து வைக்கும் ஹதீஸை அறிவிக்கக்கூடிய ‘குலைப்’ என்பவரின் நம்பகத்தன்மையை (وثق) என்ற வார்த்தையின் மூலம்தான் இமாம் தஹபி விமர்சனம் செய்துள்ளார். தஹபியின் ஒரே மாதிரியான விமர்சனத்தை குலைப் விஷயத்தில் ஏற்றுக் கொண்டவர்கள், அம்ர்பின் ஹாரிஸ் விஷயத்தில் ஏற்க மறுப்பதும், மறைப்பதும் ஏன்?)

அம்ர் பின் ஹாரிஸ் குறித்து தஹபி அவர்கள் இருவேறு கருத்துகளை கூறியுள்ளார். இதில், நம்பகமானவர் என்ற கருத்தே பிந்தியதாகும். ‘நேர்மை அறியப்படவில்லை’ என்ற கருத்துதான் பிந்தியது என ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், தஹபி அறியவில்லை என்று கூறியதால், உலகில் உள்ள யாருக்கும் அமர் பின் ஹாரிஸ் அறியப்படாதவர் என்று ஆகிவிடுமா?.

‘இமாம் திர்மிதி அவர்கள் அறியப்படாதவர்’ என பிரபல ஹதீஸ் கலை அறிஞர் இப்னு ஹஸ்ம் கூறியதாக தஹபின் மிஜானுல் இஃதிலால் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது. இப்னு ஹஸ்ம் இவ்வாறு கூறியதால், இமாம் திர்மிதி அவர்கள் யாருக்கும் அறியப்படாதவர் என்று ஆகிவிட்டாரா?

காரணம், அறிவிப்பாளர்கள் ஆய்வில் தஹபியை விட சிறந்து விளங்கிய இப்னு ஹிப்பான் அவர்கள், ‘அம்ர் பின் ஹாரிஸ் நேர்மையான அறிவிப்பாளர்’ என ‘ஃதிகாத்’ எனும் தனது நூலில் சான்று தருகிறார். ‘அம்ர் பின் ஹாரிஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்’ என இமாம் இப்னு ஹஜ்ர், ‘தக்ரீப் தஹ்தீப்’ எனும் நூலில் குறிப்பிடுகிறார்.

அல் ஜர்ஹ் வத்தஃதீல் என்ற நூலிலும், தஹ்தீபுல் கமால் என்ற நூலிலும் அம்ர் பின் ஹாரிஸின் வரலாறு கூறபட்ட இடத்தில் அவர் குறித்து ஒரு குறையும் பதிவு செய்யப்படவில்லை.

திரிப்பு வேலையில் ஈடுபட்டு மக்களை திசை திருப்பாமல் இருக்க அம்ர் பின் ஹாரிஸ் பற்றி இக்கலை அறிஞர்கள் கூறியதை அவர்களின் நூலிலிருந்து அப்படியே அரபி மூலத்துடன் தந்துள்ளோம்.

 

 [5001] عمرو بن الحارث بن الضحاك الزبيدي بضم الزاي الحمصي مقبول من السابعة بخ د  تقريب التهذيب ج1/ص419

 [4136] عمرو بن الحارث بن الضحاك الحمصي عن عبد الله بن سالم وعنه إسحاق زبريق وثق د  الكاشف ج2/ص73

   14548 عمرو بن الحارث بن الضحاك الحمصي يروى عن عبد الله بن سالم الأشعري عن الزبيدي روى عنه إسحاق بن إبراهيم بن العلاء بن زبريق وأهل بلده مستقيم الحديث (الثقات لإبن حبان)

   4339 بخ د عمرو بن الحارث بن الضحاك  الزبيدي الحمصي وعداده في الكلاعيين روى عن عبد الله بن سالم الأشعري الحمصي بخ د روى عنه إسحاق بن إبراهيم بن العلاء الزبيدي المعروف بزبريق بخ ومولاته علوة وقال محمد بن عوف الطائي د قرأت في كتاب عمرو بن الحارث ذكره بن حبان في كتاب الثقات روى له البخاري في الأدب وأبو داود ( تهذيب الكمال)

   1253 عمرو بن الحارث بن الضحاك  الزبيدي الحمصي روى عن عبد الله بن سالم الأشعري روى عنه إسحاق بن إبراهيم بن العلاء بن الضحاك الزبيدي سمعت أبى يقول ذلك (الجرح والتعديل)

இப்னு ஹிப்பான் கூறுவது தவறா?

‘ஒருவரை நம்பகமானவர்’ என்று கூறுவதில் இப்னுஹிப்பான் கவனக் குறைவாகவும், தனக்கு தெரியாத வர்களையும் கூட நம்பகமானவர் என்று கூறிவிடுவார் என்றொரு குற்றச்சாட்டு இப்னு ஹிப்பான் மீது கூறப்படுகிறது. அதனைக் காரணம் காட்டி, அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் இப்னு ஹிப்பான் கூறிய கருத்தை புறக்கணிக்க முயற்சி செய்யலாம். எனவே, அதற்கான பதிலையும் நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

இக்குற்றச்சாட்டு பொதுவானதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவர் பயன்படுத்துகின்ற வாசகத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்ய வேண்டும் என அல் முஅல்லிம் அல் யமானி என்ற இக்கலை அறிஞர், அத்தன்கீல் பிமாஃபி தஃனீபில் கவ்ஃதரி என்ற தனது நூலின் முதல் பாகத்தில் 66, 437, 438 ஆகிய பக்கங்களில் கூறி விட்டு, இப்னு ஹிப்பான் ‘நம்பகமானவர்’ என்று கூறுவோரை ஐந்தாக வகைப்படுத்துகிறார்.

 

إن توثيق إبن حبان على درجات:

الأولى:   أن يصرح به كما أن يقول كان متقناً أو مستقيم الحديث أو نحوه.

 (2)  أن يكون الرجل من شيوخه الذين جالسهم وخبرهم.

 (3)  أن يكون من المعروفين بكثرة الحديث بحيث يعلم أن إبن حبان وقف له على أحاديث كثيرة.

(4)  أن يظهر من سياق كلامه أنه قد عرف ذلك الرجل معرفة جيدة.

(5)  ما دون ذلك.

فالأولى لا تقل عن توثيق غيره من الأئمة بل لعلها أثبت من توثيق كثير منهم.  والثانية قريبة منها. والثالثة : مقبولة.  والرابع صالح. والخامسة لا يؤمن  فيها الخلل. (التنكيل بما في تأنيب الخطيب الكوثري من الأباطيل ج1/438,437,66 )

 

‘நம்பகமானவர்’ என இப்னு ஹிப்பான் அவர்கள் கூறுவது பல (5) படித்தரங்களை கொண்டுள்ளது.

1. ‘மிக்க உறுதியானவர்’, ‘நேர்மையான அறிவிப்பாளர்’ போன்ற தெளிவான வார்த்தைகளைப் பயன்படுத்தி உறுதி செய்பப்பட்டவராக இருப்பர்.

2. அவர்களுடன் அமர்ந்து அவர்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்ட இப்னு ஹிப்பானின் ஆசிரியர்களாக இருப்பர்.

3. அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பவர்கள் என இப்னு ஹிப்பான் அவர்களால் அறிந்து கொள்ளப்பட்டவர்களாக இருப்பர்.

4. இப்னு ஹிப்பான் பயன்படுத்துகின்ற வாசகத்தின் மூலம், அவர்களை இவர் நன்கு அறிந்து கொண்டுள்ளார் என்பது விளங்கும்.

5. மேலே கூறப்பட்ட தரத்தில் எதிலும் இடம் பிடித்தவர்களாக இருக்கமாட்டர்.

இந்த ஐந்து வகையில், முதல் முறையில் கூறப்பட்டிருப்பவர்கள், ஹதீஸ் கலையின் மற்ற அறிஞர்களின் ‘நம்பகமானவர்’ என்ற கூற்றுக்கும் குறைந்ததல்ல. இன்னும் சொல்லப்போனால், இக்கலை அறிஞர்களின் அதிகமானோரின் கூற்றை விடவும் இப்னு ஹிப்பானின் இவ்வகையான கூற்று மிக உறுதியானதாகும். (அம்ர் பின் ஹாரிஸ் விஷயத்தில் முதல் வகையான வாசகத்தை குறிப்பிட்டே அவரது நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

இரண்டாவது வகை இதற்கு நெருக்கமானதாகும். (அதனையும் சான்றாக ஏற்கலாம்.)
 

மூன்றாவது வகை ‘ஒப்புக்கொள்ளப்பட்டவர்’ என்ற தரத்தில் உள்ளவர்(அதாவது வேறொருவர் சான்றளித்தால் அவர் ஏற்றுக் கொள்ளப்படுவார் என்பது அதன் அர்த்தம்.)

நான்காவது ‘பராவாயில்லாதவர்’ என்ற தரத்தில் உள்ளவர்.

ஐந்தாவது வகையினர் குறைபாடுகள் இல்லாதவர்கள் என கூறமுடியாது. (தன்கீல்:1/66, 437, 438.)

இந்த வகையில் முதல் வகையைச் சார்ந்தவர்தான் அம்ர் பின் ஹாரிஸ் என்பவர். எனவே, அவரை பலவீன மானவர் எனக் கூறி தவிர்க்க முடியாது என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

எனவே, இப்னு ஹிப்பான் ஒருவரை நல்லவர் என்று கூறினால், அதை ஏற்க கூடாது என பொத்தாம் பொதுவாகக் கூற முடியாது.

மேலும், தஹ்தீபுல் கமாலின் ஆசிரியர், இப்னு ஹிப்பான் கூறியதை ஏற்று தனது நூலிலும் பதிவு செய்துள்ளதன் மூலம், அம்ர் பின் ஹாரிஸ் நேர்மையானவர், நம்பகமானவர் என்பதை தஹ்தீபுல் காமாலின் ஆசிரியரும் உறுதி செய்கிறார். இவ்வாறு, இப்னு ஹிப்பான், இப்னு ஹஜர், அபுல் ஹுஜ்ஜாஜ், தஹபி ஆகிய பலரும் அம்ர் பின் ஹாரிஸ் அவர்களின் நம்பகத் தன்மையை குறை கூறாத போது, இவர்கள் மட்டும் ஏன் அம்ர் பின் ஹாரிஸ் பற்றி தவறான செய்தியை தந்து மக்களை திசை திருப்ப நினைக்கிறார்கள் என்பதின் மர்மம் அவர்களுக்கே வெளிச்சம்.

அம்ர் பின் ஹாரிஸ் குடும்பத்தார் நம்பகமானவர்களா?


‘அப்துல்லாஹ் பின் சாலிமின் ஏட்டை அவரிடமிருந்து நேரிடையாக அபூ தாவூத் வாசிக்கவில்லை. அம்ர் பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடமிருந்து வாசித்ததாகவே இந்த ஹதீஸை தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள். அம்ர் பின் ஹாரிஸின் நம்பகத் தன்மையே நிரூபணம் ஆகாத நிலையில் அவரது குடும்பத்தினரின் நம்பகத்தன்மை எத்தகையது என தெரியாது. இந்நிலையில் வேறொரு ஏட்டை எடுத்துக்காட்டி இதுதான் அப்துல்லாஹ் பின் சாலிமின் ஏடு என அவரது குடும்பத்தார் கூறியிருக்கலாம். இதன் அடிப்படையிலும் அபூ தாவூத்தின் அறிவிப்பு பலவீனம் அடைகிறது” என்பதே அவர்களின் துணைக் குற்றச்சாட்டு.

பதில்:

அம்ர் பின் ஹாரிஸின் குடும்பத்தினர் நம்பகமானவர்களா? இல்லையா? என்ற ஆய்வில் இறங்கினால், புஹாரி, முஸ்லிம் போன்ற எல்லா நூற்களையும் நாம் புறக்கணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம். காரணம் இவர்கள் தங்கள் நூற்களை தொகுத்து தங்களது வீட்டில்தானே வைத்திருந்திருப்பார்கள். அவர்களது குடும்பத்தினரைப் பற்றி சந்தேகம் கொண்டால், இந்நூற்களையும் கூட ஏற்க முடியாதுதான்.
 

எனவே, நம்பகமான (அம்ர் பின் ஹாரிஸ்) ஒருவரிடம் வேறொரு நம்பகமானவரின் (அப்துல்லாஹ் பின் சாலிம்) நூல் இருந்தது. அந்நூலிலிருந்து அபூ தாவூத் அவர்கள் பதிவு செய்த இந்த ஹதீஸை ஏற்கத்தான் வேண்டும். வேறொரு நூலைப் பார்த்து விட்டு, தவறாக பதிவு செய்திருப்பார் என சந்தேகம் கொள்வது அபூ தாவூத் அவர்களின் நம்பகத்தன்மையை குறை கூறுவதாக அமையும்.

இவ்வாறு அம்ர் பின் ஹாரிஸின் குடும்பத்தினரிடம் இருந்த நூல் அப்துல்லாஹ் பின் சாலிம் அவர்களின் ஏடுதான்’ என தஹபி, (மிஜானுல் இஃதிதால்) அபூ தாவூத் ஆகிய இரு நம்பகமானவர்கள் ஊர்ஜிதம் செய்வதால், அப்துல்லாஹ் பின் சாலிம் அவர்களின் நூலை தம்மிடம் வைத்துக் கொண்டு வேறொரு நூலை எடுத்துக்காட்டி இருப்பார்கள் என்பது இவர்களின் வெறும் யூகம் தான். யூகம் எந்த விதத்திலும் பயனளிக்காது என்பது குர்ஆன் வசனம்.

 
மேலும், ‘ஆல்’ என்ற வார்த்தை ஒருவரது குடும்பத்தினருக்கு மட்டும் கூறப்படுவது போலவே அவரையும் அவரைச் சேர்ந்தவர்களை குறிக்கவும் பயன்படுத்தவும். அம்ர் பின் ஹாரிஸ் குடும்பத்தினர் எனும்போது அவரும் குடும்பத்தினரில் உள்ளடக்கும். இந்த அடிப்படையில், குடும்பத்தினரிடம் இருந்து வந்த நூல் என்பதற்கு அவரிடம் இருந்து வந்த நூல் எனப் புரிந்து கொள்ளத் தடை ஏதும் இல்லை.

பிறரின் நூலிலிருந்து ஹதீஸை பதிவு செய்வது ஏற்புடையதா?

தனக்கு அறிவிப்பவரை குறிப்பிடாமல் வேறொருவரிடம் இருந்த அப்துல்லாஹ் பின் சாலிமின் ஏட்டிலிருந்து பதிவு செய்ததாக அபூ தாவூத் குறிப்பிடுகிறார். இம்முறையில் பதிவு செய்த ஹதீஸை ஏற்கலாமா?

 
ஒருவரிடம் நேரிடையாக கேட்காமல் அவரின் நூலிலிருந்து பதிவு செய்யப்பட்ட பல ஹதீஸ்களை இமாம் புகாரி, முஸ்லிம் அவர்கள் தங்களது நூற்களில் பதிவு செய்துள்ளார்கள். 1286-வது ஹதீஸில்

قال مسلم: سمعت يحيى بن يحيى يقول: كتبت هذا الحديث من كتاب سليمان بن بلال.

 

முஸ்லிம் அவர்கள் கூறுகிறார்கள்:
யஹ்யா பின் யஹ்யா அவர்கள் கூறினார்: இந்த ஹதீஸை (1286) சுலைமான் பின் பிலால் அவர்களின் ஏட்டிலிருந்தே நான் எழுதினேன்.

இம்முறையில் அறிவிக்கப்பட்ட ஹதீஸை 2833, 2965, 3024, 3025, 5828, 7237 ஆகிய இடங்களில் இமாம் புஹாரி பதிவு செய்துள்ளார்கள்.

 

குற்றச்சாட்டு -3

“இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவராக அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காளிரீ என்பாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் நபித் தோழர் என்று சில நூற்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபித்தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் இவருக்குப் பொருந்தவில்லை. நபித்தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித்தோழர் என்று பரவலாக அறியப் பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை. “நான் நபியிடம் கேட்டேன்” என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவிக்க வேண்டும். இந்த ஹதீஸில், “நான் நபியிடம் கேட்டேன்” என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக நபி சொன்னார்கள் என்ற வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலின்படியும் இவர் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை. அல்லது ஒரு நபித்தோழரோ அல்லது ஒரு தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை. தத்ரீப் 2/672ல் நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவுகோல் கூறப்பட்டுள்ளது. நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவு கோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித்தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.”

 

இந்த நபிமொழி பலவீனமானது என்பதற்கான இவர்களின் மற்றொரு குற்றச்சாட்டு.

அப்துல்லாஹ் பின் முஆவியா ஒரு நபித்தோழரே:

யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு அளவுகோலை கையில் எடுத்துக் கொண்டு ஒரு நபித்தோழரை, நபித்தோழர் அல்லர் என வாதிப்பது அறிவுடமையாகாது. மேலும், இவர்களே, ‘நபித் தோழர் என சில நூற்களில் கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை’ என ஆதங்கத்துடன் உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டதாக நினைப்பது போல, அறிவுக் கண்ணை மூடிக் கொண்டு, உண்மை புரியவில்லை என்று இவர்கள் கூறவதால், உண்மைப் பொய்யாகிவிடுமா? இவர்களுக்கு தெரியவில்லை என்பதால், யாருக்கும் தெரியாது என்று ஆகிவிடுமா?
அப்துல்லாஹ் பின் முஆவியா(ரலி) அவர்கள் ஒரு நபித்தோழர் என்றே பெரும்பாலான நூற்களில், அடையாளங்காட்டப்பட்டுள்ளார் குறிப்பாக அவர்கள் மேற்கோள் காட்டிய நபித்தோழருக்கான அளவுகோலை விவரிக்கும் தத்ரீப் என்ற நூலிலும்கூட நபித் தோழர் அல்லர் என கூறப்படவே இல்லை.

 
அறிவிப்பாளர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்ட இவர்கள் மேற்கோள்காட்டும் எல்லா நூற்களிலும், நபித்தோழர் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளார்.

‘நபித் தோழர்’ எனக் கூறிய நூற்கள் பட்டியல் இதோ!

1. இல் இஸாபா.
2. தஹ்தீபுத் தஹ்தீப்.
3. தக்ரீபுத் தஹ்தீப்
4. மிஜானுல் இஃதிலால்.
5. அல் காஷிப்
6. தஹ்தீபுல் கமால்
7. முஃஜமுஸ் ஸஹாபா
8. அல் ஃபிர்தவ்ஸ் பிமஃதூரில் கிதாப்.
9. அல் ஜர்ஹ் வத்தஃதீல்.
10. அவ்னுல் மஃபூத்
11. அத்தபகாத்துல் குப்ரா.
12. அல் இஸ்திஆப்.
13. இமாம் புகாரி அவர்களின் தாரிக் அல் கபீர்.

இப்னு ஹிப்பான், அபூ ஹாதிம் அர்ராஜி ஆகியோரும் அப்துல்லாஹ் பின் முஆவியா (ரலி) அவர்கள் ஒரு நபித்தோழர்தான் என்பதை உறுதி செய்துள்ளனர்.

இமாம் புகாரி உட்பட ஹதீஸ் கலை அறிஞர்கள் அனைவராலும் நபித் தோழர் எனக் கூறப்படும் ஒருவரை, தங்களது கருத்திற்கு எதிரான ஒரு செய்தியை அறிவிக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக அவரை நபித்தோழர் அல்லர் என்று சாதிக்கும் இவர்களின் மனநிலையை என்னவென்று கூறுவது.

இந்த ஒரு ஹதீஸைத்தவிர வேறு எதிலும் இடம் பெறவில்லை என்றொரு குற்றச் சாட்டையும் கூறுகிறார்கள். இதனை சரியென ஒப்புக் கொண்டால், ஒரு ஹதீஸைத் தவிர வேறு எதிலும் இடம் பெறாத நபித் தோழர்கள் என நீண்டதொரு பட்டியல் உண்டு. அவர்களையெல்லாம் நபித்தோழர்கள் அல்லர் என்று கூறுவார்களா? ஒரு ஹதீஸைக் கூட அறிவிக்காத பல நபித்தோழர்களும் உள்ளனர். அதனால், இவர்களை நபித்தோழர்கள் அல்லர் என்றுதான் கூற முடியுமா?

பரவலாக அறியப்படாதவரா?


அப்துல்லாஹ் பின் முஆவியா நபித்தோழர் என பரவலாக அறியப்படாதவர் என்ற வேறொரு குற்றச் சாட்டையும் கூறுகிறார்கள்.

1. அப்துல்லாஹ் பின் ஹர்மலா அல்முத்லஜி (عبد الله بن حرملة المدلجي)
2. ஷிஹாப் பின் அல் மஜ்னூன் (شهاب بن المجنون الجرمي)
3. கத்தாஷ் பின் அபீ கத்தாஷ் (خداش بن أبي خداش)
4. ரக்ப் அல் மஸ்ரியீ (ركب المصري)
5. ஷத்தாத் பின் ஷர்ஹபீல் (شداد بن شرحبيل)
6. ஷத்தாத் பின் ஃதுமாமா (شداد بن ثمامة)
7. அம்ர் பின் மஃதீகரிப் (عمرو بن معديكرب)
8. கைஸ் பின் அல் ஹாரிஸ் (قيس ين الحارث)
9. யஃகூப் பின் அல் ஹுஸைன் (يعقوب بن الحصين)
10. அபூ ஹிந்த் அல் பஜலி (أبو هند البجلي)
11. அல் ஹாரிஸ் பின் முகல்லத் அல் அன்ஸாரி (الحارث بن مخلد الأنصاري)
12. அப்துல்லாஹ் பின் மாயிஜ் அத் தமீமிய்யீ(عبد الله بن ماعز التميمي)
13. முஆவியா பின் முஆவியா அல் முஜ்னியீ (معاوية بن معاوية المزني)

ஆகியோர் நபித் தோழர்கள் எனக் கூறப்படுகின்றனர். ஆனால், நபித்தோழர்களில் அவர்கள் பிரபலமாகாதவர்கள் என்ற மறுப்புரையை அல் இஸாபா என்ற தனது நூலில் பதிவு செய்துள்ள இமாம் இப்னு ஹஜர் அவர்கள், ‘அப்துல்லாஹ் பின் முஆவியா’ ஒரு நபித் தோழர்தான் என அழுத்தமாக கூறியுள்ள தன் மூலம், இமாம் இப்னு ஹஜர் காலத்தில், நபித்தோழர்தான் என பரவலாக அறியப்பட்டுள்ளார் என்பது ஊர்ஜிதமாகிறது.

வட இந்தியாவில் உள்ள ஒருவர், சென்னையில் பிரபலமாக உள்ள ஒருவரை, ‘பிரபலமாகாதவர்’ என விமர்சனம் செய்தால் அது அவரின் அறியாமை. அதுபோல, 21வது நூற்றாண்டில் வாழ்ந்து வரும் ஒருவர், 14-ம் நூற்றாண்டிலும், அதன் பிறகும் பிரபலமாக இருந்து வந்த ஒரு நபித்தோழரை ‘பிரபலமாகாதவர்’ என்று விமர்சிப்பது மாபெரும் கேலிக் கூத்தாகும்.

ஹதீஸ்கலை அறிஞர்களால் இந்த விமர்சனம் கூறப்பட்டுள்ளதா? அல்லது சந்தேகம் என்றாவது கூறியுள்ளார்களா? என்றால் அவ்வாறு ஒருவரும் கூறவில்லை.

விலைபோகாத மூன்று குற்றச்சாட்டுகள்:

ஆக, அபூ தாவூதின் அறிவிப்பின் மீது இவர்கள் சுமத்திய மூன்று குற்றச்சாட்டுகளும் நாம் அளித்த தெளிவான விளக்கத்தின் மூலம், ஒன்றன் பின் ஒன்றாக வேரறுந்து விழுந்து விட்டதால், இந்த ஹதீஸ் ஸஹீஹானதுதான் என்பது உறுதியாகிவிட்டது. எனவே, வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு இந்த நபி மொழி சரியான சான்றாக விளங்குகிறது என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை.

 

‘வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என உலகில் உள்ள எந்த நூலிலும் கூறப்படவில்லை.’ என்ற இவர்களின் வார்த்தைகள், ஹதீஸ் நூட்களை பார்வையிட நம்மை தவிர வேறு யாரும் இல்லை என்ற இறுமாப்பில் கூறப்பட்ட பொய்யாகும்.

இந்நபி மொழியை உறுதி செய்யும் நபித்தோழர்களின் நடைமுறை:

வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறும் இந்நபி மொழியை நபித்தோழர்களின் நடை முறைகளும் உறுதி செய்கின்றன.

நபித் தோழர்களின் நடைமுறை எவ்வாறு இருந்தது என்பதை அறியும் முன், நபி(ஸல்)அவர்களின் ஆட்சி காலத்திலும், நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் காலத்திலும் ஜகாத் வழங்கும் முறை எவ்வாறு நடைமுறையில் இருந்தது என்பதை சற்று அறிந்து கொள்வோம்.

நாம் தற்காலத்தில் ஜகாத் வழங்கி வருவது போன்று ஒவ்வொருவரும் தங்கள் விருப்பம் போன்று தனித்தனியாக ஜகாத் வழங்க அப்போது அறவே அனுமதி இல்லை. மாறாக, ஆட்சித் தலைவர் இதற்கென ஆட்களை நியமனம் செய்து, அவர்கள் மூலம் ஜகாத்தை மொத்தம் திரட்டி அதற்குரிய வழிகளில் (பார்க்க:9:60 வசனம்) வினியோகம் செய்வதே சட்டமாக இருந்து வந்தது. அதாவது ஜகாத்தை வசூலித்து, வினியோகம் செய்வது அரசின் கடமைகளில் ஒன்றாகவே இருந்து வந்தது.

 

இறைத்தூதர் மற்றும் நபித்தோழர்கள் ஆகியோரின் ஆட்சி காலங்களில், ஜகாத் வசூல் எவ்வாறு நடை பெற்றது? ஒரு மணிக்கு ஒரு தடவையா? தினமும் ஒரு தடவையா? வாரம் ஒரு முறையா? மாதம் ஒரு முறையா? வருடம் ஒரு முறையா? என அறிந்து கொள்வது அவசியமான ஒன்றாகும். ஏனெனில் இஸ்லாமியச் சட்டங்களுக்கு செயல் வடிவம் தந்த முதல் சமுதாயம் நபித்தோழர்கள்தான். அவர்களது நடைமுறைகள் சில சட்டங்களை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு விளக்கமாக அமையும்.

இறைத்தூதர் மற்றும் நபித்தோழர்களின் காலத்தில் ஜகாத் வசூல்:

7151 وأخبرنا محمد بن موسى بن الفضل ثنا أبو العباس(محمد بن يعقوب) أنبأ الربيع (بن سليمان بن عبد الجبار المرادي أبو محمد المصري) أنبأ الشافعي أنبأ إبراهيم بن سعد عن بن شهاب قال إنّ أبا بكر وعمر رضي الله عنهما لم يكونا يأخذان الصدقة مثناة ولكن يبعثان عليها في الجدب والخصب والسمن والعجف لأن أخذها في كل عام  من رسول الله  صلى الله عليه وسلم سنة. رواه البيهقي واللفط له وإبن أبي شيبة ومسند الشافعي .( صحيح الإسناد)

இப்னு ஷிஹாப் கூறுகிறார்:

“அபூ பக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும், (இரு வருடத்திற்குரிய) ஜகாத்தை (ஒரே வருடத்தில்) இரட்டிப்பாக்கி எடுப்பதில்லை. மாறாக, செழிப்பான காலத்திலும் வறட்சியான காலத்திலும் (ஒவ்வொரு வருடத்திற்குரிய) ஜகாத்தினை (அந்த ஆண்டிலேயே) வசூலிப்பதற்காக (ஆட்களை) அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஏனெனில், ஒவ்வொரு வருடமும் அதனை வசூலிப்பது இறைத்தூதர் ஏற்படுத்திய வழிமுறையாகும்.” (பைஹகி, முஸன்ஃப் இப்னி அபீ ஷைபா. முஸ்னத் ஷாஃபி. (குறைகூற முடியாத சரியான அறிவிப்பாளர்கள் தொடரைக் கொண்ட செய்தியாகும்.)

“மதீனாவில் ஆட்சி புரிந்த அபூபக்கர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோரில் யாரும் (இருவருடத்திற்குரிய) ஜகாத்தை (ஒரே வருடத்தில்) இரட்டிப்பாக்கி வசூலித்ததாக யாரும் அறிவிக்கவில்லை. மாறாக ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பி (வசூலித்துக்) கொண்டிருந்தார்கள்” என முஸன்னஃப் இப்னி அபீ ஷைபா என்ற ஹதீஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

முதல் மூன்று கலீஃபாக்களின் ஆட்சி காலத்திலும் ஜகாத்தை வருடா வருடம் வசூலித்து வந்துள்ளார்கள். இது அவர்களாக எடுத்துக் கொண்ட முடிவல்ல. இறைத்தூதர் காட்டிய வழி முறையின் அடிப்படையில்தான் இதை செயல்படுத்தி வந்தார்கள் என்பதை இச்செய்தியின் இறுதியில் இடம் பெற்ற (ஒவ்வொருவருடமும் அதை வசூலிப்பது இறைத்தூதர் ஏற்படுத்திய வழி முறையாகும்) என்ற வாசகமும் உறுதிப்படுத்துகிறது.

ஜகாத்தை வசூலிப்பதற்கு இறைத்தூதர் ஆட்களை அனுப்பி வைத்த செய்தி எல்லா ஹதீஸ் நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவ்வாறு அனுப்பி வைத்துள்ளார்கள் என்பதை இறைத்தூதர் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் அனைவரும் அறிந்தே இருப்பர். அதைத் தான் மேற்கண்ட செய்தி உறுதிப்படுத்துகிறது. மேலும், மாபெரும் இமாமான ஷாஃபி அவர்களின் அர்ரிசாலா என்ற நூலிலும், இப்னு ஹஸ்ம் அவர்களின் அல்முஹல்லா என்ற நூலிலும் இடம் பெற்றிருக்கும் செய்திகளும் இதையே உறுதிசெய்கின்றன.

 

ثم كان مانقلت العامة عن رسول الله   في زكاة الماشية والنقد أنه أخذها في كل سنة مرة..   (الرسالة للإمام الشافعي)

 

“கால்நடை மற்றும் நாணயங்களின் ஜகாத்தை ஒவ்வொரு வருடமும் ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் வசூலித்துள்ளார்கள் என்பதை இறைத்தூதரிடமிருந்து (நபித்தோழர்கள்) அனைவரும் கூறியுள்ளனர்.” (அர்ரிசாலா)

 
قال أبو محمد( إبن حزم)… قد ثبت أن رسول الله   كان يبعث المصدقين في كل عام لزكاة الإبل, والبقر, والغنم. هذا أمر منقول نقل الكافة.(المحلى)

 

“ஒட்டகம், மாடு, ஆடு ஆகியவற்றின் ஜகாத்தை வசூலிக்க நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்கள் என்ற செய்தி போதுமான சான்றுகளோடு கூறப்பட்டு அது உறுதி செய்யப்பட்டுள்ளது. (அல்முஹல்லா பாகம்:6 பக்கம்:28)

“வருடா வருடம் ஜகாத்தை வசூல் செய்வது இறைத்தூதர் ஏற்படுத்திய வழிமுறையாகும்” என்ற செய்தியும், நேர்வழி பெற்ற கலீஃபாக்கள் வருடா வருடம் ஜகாத் வசூலித்து வந்தார்கள் என்ற செய்தியும் அபூ தாவூதில் இடம் பெற்ற “வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும்” என்ற நபி மொழியை உறுதிப்படுத்துகிறது.

 

மேலும், நிஸாப் அளவு செல்வம் ஒருவனிடம் இருந்தால் அவன் மீது உடனே ஜகாத் கொடுப்பது கடமை இல்லை. ஒரு வருடம் கழித்து கொடுப்பதே கடமை என்பதும் இங்கே புரிந்து கொள்ளப்படுகிறது.

இதுவரை நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளின் மூலம், குறிப்பிட்ட(நிஸாப)ளவு செல்வம் வைத்திருப்பவர் வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்கிய நபித்தோழர்கள்:

ஒரு பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்று குர்ஆனில் அல்லது நபி மொழியில் கூறப்பட்டுள்ளதா? என கேட்கும் புத்திசாலிகளின்(!) கவனத்திற்கு.

குர்ஆனையும் நபி மொழியையும் சரியாகப்புரிந்து அதனை அப்படியே நடை முறைப்படுத்துவோரில் முதலிடம் வகிப்போர் நபித்தோழர்கள்தான் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை. காரணம் குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்ளுக்கு உடனுக்குடன் இறைத்தூதரிடம் விளக்கங்களை நேரிடையாகக் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டவர்கள். எனவே, ஒட்டு மொத்த நபித் தோழர்களும் ஒரு ஹதீஸை எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அது போன்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்களைவிடவும் நாம்தான் சரியான விளக்கம் அளிப்போம். ஒட்டு மொத்த நபித்தோழர்களும் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம் என ஒருவர் கூறினால், அது அவரது அறிவீனமாகும்.

இவ்வுண்மையைப் புரிந்து கொண்டு ‘ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்க வேண்டும்’ என்ற நபி மொழியை நபித்தோழர்கள் எவ்வாறு செயல்படுத்தி வந்தார்கள் என்பதை அறிந்து கொள்வோம். இது ஜகாத் பற்றிய இப்பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வாக அமையும்.

நபித் தோழர்கள் தவறாகவும் புரிந்து கொள்வார்கள் என சம்பந்தமில்லாத சில உதாரணங்களைக் காட்டி, பொத்தாம் பொதுவாக பேசிவரும் சிலர், தாம் புரிந்து கொள்வதில் தவறே ஏற்பாடாதது போல் நடந்து கொள்கிறார்கள். அதனால், அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் போது, அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மை இவர்களுக்கு ஏற்படுவதில்லை. அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

மனிதர்கள் என்ற அடிப்படையில் நபித் தோழர்களுக்கும் தவறுகள் ஏற்படும் என்பதை நாம் மறுக்கவில்லை. ஒட்டு மொத்த நபித் தோழர்களும் ஒரு விஷயத்தை தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்பதை ஒருவரும் ஏற்க மாட்டார்.

 
இப்னு உமர் அவர்கள்:

أخبرنا سفيان عن أيوب عن نافع عن بن عمر ثم أنه كان يزكي مال اليتيم(رواه الشافعي في مسنده)

 

நாஃபி அவர்கள் அறிவிக்கிறார்:
இப்னு உமர் அவர்கள் அனாதைகளின் செல்வத்தில் தொடர்ந்து ஜகாத் வழங்கி வந்தார்கள். (நூல்: முஸ்னத் ஷாஃபி.)

 

عن ابن جريج قال أخبرني موسى بن عقبة عن نافع أن عبد الله بن عمر كانت تكون عنده أموال اليتامى …. يخرج زكاتها كل عام من أموالهم.(عبد الرزاق)

 

நாஃபி அவர்கள் அறிவிக்கிறார்:
அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் வசம் அனாதைகளின் செல்வம் இருந்து வந்தது…….. அவற்றில் ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்கி வந்தார்கள். (முஸன்னஃப் அப்துர் ரஜ்ஜாக்).

அனாதைகளின் செல்வத்தில் வருடா வருடம் இப்னு உமர் ஜகாத் கொடுத்து வந்த செய்தி சாலிம் என்பவரின் மூலம் முஸன்னஃப் இப்னி அபீ ஷைபாவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(ஜகாத் வழங்குவது பொருளாதாரத்தை தூய்மைப்படுத்துகிறது என புகாரியில் இடம் பெற்ற செய்தியை கூறியவர் இவர்தான். அவ்வாறு கூறியவரே, திரும்ப திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்றுதான் புரிந்து, அதனைச் செயல்படுத்தி வந்துள்ளார் என்பது இதன் மூலம் உறுதி செய்யப்படுகிறது. இப்னு உமர் கூறியதில் தங்களுக்கு சாதகமானதை மட்டும், எடுத்துக் கொண்டு தம் கருத்துக்கு எதிரானதை புறக்கணிப்பதை என்னவென்று கூறுவது?

 
ஆயிஷா (ரலி) அவர்கள்:

 أخبرنا سفيان عن يحيى بن سعيد عن القاسم بن محمد يقول: كانت عائشة تزكي أموالنا ونحن أيتام في حجرها.رواه البيهقي ومسند الشافعي والمحلى عن طريق أحمد بن حنبل.

عن مالك عن عبد الرحمن بن القاسم عن أبيه أنه قال كانت عائشة تليني وأخا لي يتيمين في حجرها فكانت تخرج من أموالنا الزكاة رواه مالك

 

காசிம் பின் முஹம்மது அவர்கள் கூறுகிறார். “நாங்கள் ஆயிஷா அவர்களிடம் அனாதைகளாக வளர்ந்து வந்தோம். எங்களின் செல்வத்தில் ஆயிஷா அவர்கள் தொடர்ந்து ஜகாத் வழங்கி வந்தார்கள். (பைஹகி, அல் முஹல்லா, முஸ்னத் ஷாஃபி, முஅத்தா மாலிக்).

இப்னு உமர் (ரலி), அன்னை ஆயிஷா (ரலி) ஆகியோர் அனாதைகளின் செல்வத்தில் தொடர்ந்து ஜகாத் வழங்கி வந்துள்ளனர் என்பது நம்பகமானவர்கள் அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். தொடர்ந்து வழங்குவது என்றால், கொடுத்த பொருளுக்கு மீண்டும் மீண்டும் வழங்கினார்கள் என்று தானே அர்த்தம். ஏனெனில் அனாதைகளின் செல்வத்தில் புதியது வர வாய்ப்பில்லை. தன் கைவசம் இருந்து வந்த பொருளுக்குத்தான் திரும்பத் திரும்ப ஜகாத் வழங்கி வந்துள்ளனர். இப்னு உமர் பற்றிய ஒர் அறிவிப்பில் ‘ஒவ்வொரு வருடம்’ என்ற மிகத் தெளிவான வார்த்தை இடம் பெற்றுள்ளது.

உமர் உட்பட பல நபித்தோழர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்களை தீர்த்து வைத்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்ற நபி மொழியை, ஒரு பொருளுக்கு மீண்டும் மீண்டும் வழங்க வேண்டும் என்று புரிந்துதான் செயல்படுத்தி வந்துள்ளார்கள்.

ஒரு பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்குவது குர்ஆனுக்கும் நபிவழிக்கும் எதிரானது என்றிருந்தால், இறைத்தூதரின் ஒவ்வொரு அசைவையும் அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற ஆசை கொண்ட இப்னு உமர், ஆயிஷா ஆகியோர் தம்மிடம் வளர்ந்த அனாதைகளின் செல்வத்தில் தொடர்ந்து ஜகாத் வழங்கி அவர்கள் ஏழையாகிட (இவர்களின் கருத்துப்படி) காரணமாக இருக்கமாட்டார்கள்.

இந்த நபித்தோழர்கள் செயல் படுத்தியது அவர்களின் சொந்தக் கருத்து. அதனை ஏற்க முடியாது என்றெல்லாம் தட்டிக் கழிக்கவும் முடியாது. மார்க்கத்தில் புதிய ஒரு சட்டத்தை தன் சுய விருப்பப்படி உண்டாக்கி அதை செயல்படுத்தக் கூடியவர்களல்லர் நபித்தோழர்கள். தங்களின் எல்லா செயல்களுக்கும் இறைத்தூதரின் முன் மாதிரியை வைத்தே செயல்படுவார்கள் என்பது உரிய இடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

அனாதைகளின் செல்வத்திற்கே திரும்பத் திரும்ப ஜகாத் வழங்கிய நபித்தோழர்கள் நிச்சயமாக தமது செல்வத்திற்கும் அவ்வாறுதான் ஜகாத் வழங்கி வந்திருப்பார்கள் என்பதில் எள் முனையளவுகூட சந்தேகம் கொள்ள முடியாது.

எனவே, ஒவ்வொரு வருடமும் ஜகாத் வழங்குவதுதான் நபிவழி. இதில் ‘ஏற்கனவே வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும்’ என்ற கருத்தும் உள்ளடங்கி இருக்கிறது. நபித்தோழர்கள் இதனை தங்களது வாழ்வில் செயல்படுத்தியும் வந்துள்ளனர். எனவே, ஒரே பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்று தனியாகக் கூற வேண்டிய அவசியம் இல்லை.

பாரபட்ச மின்றி சிந்திப்போருக்கும் உண்மையைப் உண்மையாகவே புரிந்து கொள்ள வேண்டும் என எண்ணுவோருக்கும் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளே போதுமானதாகும். அல்லாஹ் அனைவருக்கும் சத்திய வழியைக் காட்டி, அதன்படி நடப்பதற்கு அவனது பேரருளைப் பொழிந்திட வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம்.

உண்மைக்குப் புறம்பானவை:


ஒரேபொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் என குர்ஆனிலோ நபிமொழியிலோ கூறப் படவில்லை என்று உண்மைக்குப் புறம்பாகக் கூறியதால் அதனை மறைக்க அது போன்ற உண்மைக்கு புறம்பான பல தகவல்ளைக் கூற வேண்டிய நிர்பந்தமும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு உண்மைக்கு புறம்பான எத்தனை தகவல்களை அவர்கள் கூறியுள்ளனர், எவ்வாறெல்லாம் முன்னுக்குப் பின் முரண்பட்டு பேசியுள்ளனர் என்பதற்கான சுருக்கமான பட்டியல் இதோ!

புறம்பானது -1
“பொருளாதாரத்தை தூய்மைப் படுத்தக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என இறைத்தூதர் கூறியதாக கூறுவது. இது இறைத்தூதர் மீது இட்டுக் கட்டிய மாபெரும் பொய்யாகும். என்பதை சான்றாய்வு -1ல் தெளிவாக விவரித்துள்ளோம்.

புறம்பானது -2
‘ஹஜ் ஒரு முறைதான்’ என குர்ஆனிலும் நபி மொழியிலும் குறிப்பிடவில்லை.’
இது தவறான செய்தியாகும். ஏனெனில், ஹஜ் ஒரு முறைதான் என நபி மொழியில் காலம் குறிக் கப்பட்டுள்ளது என்பதை தக்க ஆதாரத்துடன் சான்றாய்வு -3ல் குறிப்பிட்டுள்ளோம்.

புறம்பானது -3
‘வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என உலகில் உள்ள எந்த நூலிலும் கூறப்படவில்லை.’
ஹதீஸ் நூட்களை பார்வையிட நம்மை தவிர வேறுயாரும் இல்லை என்ற இறுமாப்பில் கூறப்பட்ட பொய்யாகும். இதற்கான பதிலை சான்றாய்வு -7ல் குறிப்பிட்டுள்ளோம்.

புறம்பானது -4
“ஜகாத் வழங்கிய பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லை என நாம் மட்டும் கூறவில்லை. எல்லாக்காலத்திலும் இக்கருத்துடையோர் சிறு பான்மையினராகவே இருந்து வந்தனர். இப்னு ஹஸ்ம் அவர்கள், முஹல்லா என்ற தனது நூலில் அவ்வாறு கூறியோரைப் பட்டியலிட்டுக்காட்டியுள்ளார்”

இறைத்தூதர் மீதே பொய்யுரைத்தவர்கள், இப்னுஹஸ்மின் மீதுபொய் யுரைப்பதற்குத் தயங்குவார்களா என்ன?. உண்மையில் இப்னு ஹஸ்ம், அப்படியொரு பட்டியல் எதையும் வெளியிடவில்லை என்பது மட்டுமல்ல உலகில் உள்ள எந்த நூலிலும் அவ்வாறு கூறப்படவில்லை. மாறாக, திரும்பத் திரும்ப ஜகாத் வழங்க வேண்டும் என்பதில் யாரும் எந்தக் காலத்திலும் கருத்து வேறுபாடு கொள்ளவில்லை என்றுதான் கூறியுள்ளார். அவர் கூறிய செய்தியை அவரது நூலிலிருந்து “திரித்துக் கூறப்பட்ட இப்னு ஹஸ்மின் கூற்று! என்ற தலைப்பில் ஆரம்பத்திலேயே விளக்கினோம்.

 

முரண்பாடுகள்

 

முரண்பாடு-1
வருடா வருடம் ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுபவர்களால், ஜகாத்தை எப்போது வழங்க வேண்டும் என்பதை சான்றுடன் நிரூபிக்க முடியவில்லை. அதனால், முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார்கள்.

ஒவ்வொரு நாளும் வழங்க வேண்டும். வருடா வருடம் வழங்க வேண்டும். கணக்குப் பார்க்கும் போதெல்லாம் கொடுக்க வேண்டும் என்று பலவாறு கூறுகின்றனர்.

கணக்குப் பார்க்கும் போதுதான் ஜகாத் வழங்க வேண்டும் என்றால் ஒருவர் கூட ஜகாத் வழங்க மாட்டார். ஏனெனில், கணக்குப் பார்த்தால்தானே ஜகாத் வழங்க வேண்டும். அதற்கு கணக்கு பார்க்காமலேயே இருந்துவிடலாம் என்று எண்ணி யாரும் கணக்குப் பார்க்கவும் மாட்டார். ஜகாத் வழங்கவும் மாட்டார்.

1. தினமும் கணக்குப் பார்த்து கொடு என்று சொல்வதாக இருந்தாலும், அதற்கு என்ன ஆதாரம்?

2. புதிதாக வரும் செல்வத்திற்கு உடனே ஜகாத் வழங்க வேண்டும் என்பதற்கு என்ன ஆதாரம்?

புதிதாக வரும் செல்வத்திற்கும் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறுவோர் பின் வரும் நியாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

அ) இன்று ஒருவனிடம் பத்து லட்சம் இருந்தது. 25 ஆயிரத்தை அதற்கான ஜகாத்தாக வழங்கி விட்டு, மீதி உள்ள ரூ9.75 லட்சத்தில் புதிய சொத்து வாங்கினான். இந்த புதிய சொத்துக்கு அவன் எப்போது ஜகாத் வழங்க வேண்டும். சொத்து வாங்கிய அன்றே வழங்க வேண்டுமா? அவ்வாறெனில் பத்து லட்சத்திற்கு ஜகாத் வழங்கி 24 மணி நேரம் கூட முடியாத நிலையில் அவன் மீண்டும் ஜகாத் வழங்க வேண்டும் எனக் கூறுவது அநீதி இல்லையா? அவ்வாறு இஸ்லாம் கூறுகிறதா?

ஆ) அது போன்றே, அறுவடை செய்த நூறு மூட்டை விளைபொருளில் பத்து மூட்டையை ஜகாத் வழங்கி விட்டு, அன்றைய தினமே மீதி உள்ளதை விற்பனை செய்ததன் மூலம் இப்போது புதிதாக பணம் வந்துள்ளது. புதிதாக கிடைத்த இப்பணத்திற்கு அவன் ஜகாத் வழங்க வேண்டுமா? அது எப்போது?. ஜகாத் இல்லை எனில் புதிதாக வந்ததற்கு ஏன் ஜகாத் இல்லை? புதிதாக கிடைத்ததற்கு ஜகாத் உண்டு/இல்லை எனக் கூற என்ன அளவு கோல்?

 
முரண்பாடு -2
“ஒரே பொருளுக்கு திரும்பத் திரும்ப ஜகாத் கொடு என்று கூறினால், ஒரு இலட்சம் வைத்திருப்பவன் செல்வத்தை சுழற்சி முறையில் வளர்ச்சி அடையச் செய்யாது விரைவிலேயே பிச்சைக் காரனாகிவிடுவான்” எனக் கூறிய சிலவினாடிகளில், ‘பொருளாதாரம் என்றாலே சுழற்சிமுறையில் வளர்ச்சியடைந்து கொண்டுதான் இருக்கும். ஒரு பக்கம் கூடும். ஒரு பக்கம் குறையும். கூடுதலாகக் கிடைத்துக் கொண்டிருக்கும் புதிய செல்வத்திற்கு ஜகாத் வழங்கிக் கொண்டே இருப்பான்.” என முன்னுக்குப் பின் முரணாகப் பேசிவருகிறார்கள்.

ஜகாத் தொடர்ந்து கொடு என்று கூறினால் செல்வத்தை சுழற்சி முறையில் வளர்ச்சி அடையச் செய்யமாட்டானாம். ஒரு முறை கொடு என்று கூறினால் சுழற்சி முறையில் வளர்ச்சி அடையச் செய்வானாம்? மாஷா அல்லாஹ் என்னே ஆய்வு?

 
இது போன்ற இன்னும் ஏராளமான முரண்பாடுகள் அவர்களது உரைகளிலும் எழுத்துக்களிலும் மலிந்து கிடக்கின்றன. அதனைப் பார்வையிடுவோர் நாம் கூறுவது உண்மை என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறிந்து கொள்வார்கள்.

இறுதியாக இவர்களுக்கு இறைவன் கூறிய எச்சரிக்கையை நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

ஜகாத் கொடுக்க வேண்டாம் அவ்வாறு கொடுத்தால் பிச்சைக்காரர்களாக மாறிவிடுவீர்கள் என்று கூறுவது, மக்களை கஞ்சர்களாக மாற்றும் முயற்சியாகும். அவ்வாறு செய்ய முனைவோர் பின்வரும் வசனத்தில் உள்ள எச்சரிக்கையை சற்று கவனத்தில் கொள்ளட்டும்.

 

الَّذِينَ يَبْخَلُونَ وَيَأْمُرُونَ النَّاسَ بِالْبُخْلِ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ عَذَاباً مُهِيناً) (النساء:37)

“தாமும் கஞ்சத்தனம் செய்து மக்களையும் கஞ்சத்தனம் செய்யத் தூண்டி, அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளை மறைக்கும் இறை மறுப்பாளர்களுக்கு, இழிவுபடுத்தும் வேதனையைத் தயாரித்து வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 4:37)

அல்லாஹ்வை அஞ்சி அவனது கட்டளைகளை ஏற்று நடப்பவர்களாக நம் அனைவரையும் ஆக்க வேண்டும். தீமைகள் செய்யத் தூண்டும் ஷைத்தான் மற்றும் தீய நஃப்ஸிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்வோம்.

அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

 

 

அன்புடன்

 மௌலவி, ஹாஃபிழ், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி
தபால் பெட்டி எண்: 204, தாயிஃப், சவுதி அரேபியா
செல்போன்: 050-9746919   மின்னஞ்சல்:
fazilbaqavi@gmail.com

www.ilamkalvi.com

{ 1 comment… read it below or add one }

hafiz,fazlulhaque,rashadi April 28, 2013 at 12:09 am

shukran

Reply

Leave a Comment

Previous post:

Next post: