சமுதாயத்தின் வலிமையை நிலைநாட்டும் கூட்டுத் தொழுகை

in தொழுகை

வல்ல இறைவன் அல்லாஹ் தன் அடியார் மீது கடமையாக்கி இருக்கின்ற வணக்கவழிபாடுகளிலெல்லாம் தலையாய வழிபாடு தொழுகை என்னும் வழிபாடாகும், தன்னுடைய எல்லாப் புலன்களையும் ஒருங்கிணைத்து ஒரு இறை நம்பிக்கையாளன் செய்யக்கூடிய இந்த வணக்கம் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயலாகும், இந்த தொழுகை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட பின் ஒரு அடியான் நிறைவேற்ற வேண்டிய முதல் கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் திருக்குர்ஆனில் நூற்றுக் கணக்கான வசனங்களில் தொழுகையைப் பற்றி வலியுறுத்துகிறான்.

“தொழுகையை நிலைநாட்டுங்கள், ஸகாத்தை கொடுங்கள், குனிந்து ருகூவு செய்து வணங்குவோருடன் நீங்களும் வணங்குங்கள் (அல்குர்ஆன் 2:43)

ஒரு நாள் ஒன்றிக்கு ஐங்காலத் தொழுகையை நிலை நாட்டுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். ஆண், பெண், பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடில்லாமல் எல்லோரும் நிறைவேற்ற வேண்டிய கடமையாக தொழுகை உள்ளது. இந்த தொழுகையைப் பற்றித்தான் மறுமையில் முதலாவதாக கேள்வி கேட்கப்படும், அதற்கு சரியான பதில் சொல்லக்கூடியவன் மட்டுமே அடுத்த கட்டங்களை இலேசாக கடந்து செல்ல முடியும்.

மறுமையில் ஒரு அடியான் முதல் முதலாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித்தான் அதில் யார் சரியான பதிலை சொல்லி விடுகிறாரோ அதற்கு பின்னாலுள்ள விஷயங்களெல்லாம் இலேசாக ஆகிவிடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வணக்கத்தைக் கூட்டாக நிறைவேற்ற வேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. காரணம் சமூகக் கூட்டமைப்பு அன்றாடம் நிலை நாட்டப்பட்டுக் கொண்டே இருப்பதற்கு பொருத்தமான ஒரு வணக்கமாக இந்த கூட்டு வணக்கத்தை வல்ல அல்லாஹ் ஆக்கியுள்ளான்.

தொழுகையை பள்ளிவாசல்களில் கூட்டாக நிலை நாட்டுவது இஸ்லாமிய சின்னங்களில் மிக முக்கிய மானதாகும். பள்ளிவாசல்களிலிருந்து நாளொன்றிற்கு ஐந்து நேரம் விடுக்கப்படுகின்ற பாங்கு என்னும் அழைப்பு, முஸ்லிம்கள் எல்லோரும் விரைந்து வந்து கூட்டாக தொழுகையை நிலைநாட்டவேண்டும் என்பதற்காகக் கொடுக்கப்படும் அழைப்பாகும். எந்த ஒரு மதத்திலும் எந்த ஒரு கொள்கை கோட்பாட்டிலும் காணப்படாத மிக அற்புதமான ஒரு எழுச்சிக் குரலாக பாங்கு என்னும் அழைப்பு அமைந்துள்ளது. பாங்கு சப்தத்தை செவியுற்ற பின்பும் பள்ளிவாசலுக்கு வந்து கூட்டாகத் தொழுவதற்குரிய எல்லாவாய்ப்புகளும் இருந்தும், கூட்டுத் தொழுகையில் பங்கு பெறாமல் உதாசீனப்படுத்தக்கூடியவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

“யார் பாங்கு சப்தத்தைக் கேட்ட பின்பும் கூட்டுத் தொழுகையில் பங்கு பெறாமல் தங்கள் இல்லத்தில் இருக்கிறார்களோ அப்படிப்பட்டவர்கள் மீது அவர்களின் வீடுகளை எரித்து விட வேண்டும் என்று நான் நினைத்தேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள் : புகாரி, முஸ்லிம்

“தொழுகைக்கான அழைப்பை செவியேற்ற பின்பும் கூட்டுத் தொழுகையில் பங்கு பெறாமலிருப்பதற்கு பார்வை இழந்தவருக்குக் கூட அனுமதி வழங்கப்படவில்லை. கண் தெரியாத நபித்தோழர் ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து, எனக்கு பார்வை இல்லை, என்னை பள்ளிவாசலுக்கு அழைத்து வருவதற்கு யாரும் இல்லை, எனவே எனக்கு என் இல்லத்திலேயே தொழுகையை நிறைவேற்ற அனுமதி தாருங்கள் என்று கேட்ட போது, அனுமதி வழங்கவில்லை, பாங்கு சப்தத்தை செவியேற்றால் பள்ளிக்கு வந்தாக வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். நூல் : முஸ்லிம்

 உறுதியற்ற கொள்கையுடையவர்கள், நயவஞ்சகர்களுக்குத்தான் கூட்டுத் தொழுகை மிகவும் பாரமானதாக இருக்கும். “நயவஞ்சகர்கள் மீது மிகவும் பாரமான தொழுகை இஷா தொழுகையும், பஜ்ர் தொழுகையுமாகும். அந்த இரண்டு தொழுகைகளை கூட்டாக நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை உங்களில் ஒருவர் அறிவாரானால் நடக்க முடியாத நிலையிலும் சிரமப்பட்டாவது பள்ளிக்கு வந்துவிடுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்கள்: புகாரி, முஸ்லிம்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இஸ்லாமிய சின்னம் முஸ்லிம்களாலேயே பேணப்படாமலும், மதிக்கப்படாமலும் இருந்து வருகிறது. இஸ்லாமிய சமுதாயம் தொழுகையை நிறைவேற்றுவதிலே, அதிலும் கூட்டுத் தொழுகையை நிறைவேற்றுவதிலே மிகவும் பின் தங்கி இருக்கிறது. தொழுகை இஸ்லாமின் மிக முக்கியமான ஒரு கடமை என்பதைக் கூட நிறைய முஸ்லிம்கள் புரியாமல் இருக்கிறார்கள். இதன் காரணத்தினால் சமுதாயம் மிகப்பெரிய சோதனைக்கும் வேதனைக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறது.

அனைத்து முஸ்லிம்களும் ஐங்காலத் தொழுகைகளை முறையாக அல்லாஹ்வுடைய பள்ளி வாசல்களில் கூட்டாக நிறைவேற்றுவார்களானால் நிச்சயம் இந்த சமுதாயம் மேன்மை மிக்க சமுதாயமாகவும், வலிமை மிக்க சமுதாயமாகவும் மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. வலுவான சமுதாயக் கூட்டமைப்புத் தேவை என ஆசைப்படும் சமுதாய இளைஞர்கள், சமூகப் பிரமுகர்கள் இஸ்லாத்தின் மிகப்பெரும் சின்னமாக விளங்குகின்ற கூட்டுத் தொழு கையை நிலைநாட்ட அயராது பாடுபடுவது அவசியமாகும்.

அல்ஜன்னத்

Leave a Comment

Previous post:

Next post: