கீரைகள் (4)

in பொதுவானவை

முள்ளங்கிக் கீரை

முள்ளங்கி மண்ணுக்கு அடியில் தோன்றும் கிழங்கு ஆகும். அதன் மேல்பாகத்தில் வளரும் கீரையே முள்ளங்கிக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இக்கீரைக்கு மருத்துவக் குணங்கள் உண்டு என்றாலும் அடிக்கடி சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இக்கீரை வயிற்றில் புழுக்களை உண்டாக்கும். பித்தத்தையும் அதிகரிக்கும். வாய்வுத் தொல்லையை உண்டாக்கும். இருப்பினும் வெள்ளையால் வரும் நீர் அடைப்பிற்கு முள்ளங்கியைப் போலவே இக்கீரையும் பயன்படுகிறது. இக்கீரையின் தளிர்களைப் பறித்து, சோற்று உப்புடன் சேர்த்து தினமும் காலையும் மாலையும் உண்டு வந்தால் வெள்ளையால் உண்டாகும் நீர் அடைப்பு விலகும். இக்கீரை கல்லீரலில் உண்டாகும் பல கோளாறுகளைக் குணப்படுத்தும், அதுபோல் இருதயத்திற்கும் பலம் சேர்க்கும். இதயப் படபடப்பு, இதய பலவீனம் உடையவர்கள் அவ்வப்போது இக்கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் பலன் கிட்டும்.

  

———————————————————————————

முடக்கத்தான்

 

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.

முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்ட¡கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.

இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.

துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.

முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.

இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.

வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.   

——————————————————————————-  

வெந்தயக் கீரை

 

சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.   

வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.   

வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக்கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேக வைத்து உணவுடன் சேர்த்து வந்தால் இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரை ஒரு சிறந்த பத்திய உணவாகும். இதை அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும். இந்தக் கீரையை வதக்கி அதனுடன் வாதுமைப் பருப்பு, கசகச கோதுமை ஆகியவற்றைச் சேர்த்துப் பால்விட்டு அரைத்து நெய்விட்டுக் கிண்டி உட்கொண்டால் உடலுக்கு வலிமையும், வனப்பும் ஏற்படும். இடுப்பு வலி நீங்கும். வெந்தயக் கீரையுடன் சீமைப்புள், அத்திப்பழம், திராட்சை ஆகியவை சேர்த்துக் கஷாயமிட்டு தேன் கலந்து உண்டால் மார்பு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்கள் நீங்கும். மூலநோய், குடல் புண் போன்ற நோய்களுக்கும் இந்தக் கீரை சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.   

வெந்தயக் கீரையை அரைத்துச் சூடு செய்து வீக்கங்கள் மீது பூசினால் வீக்கம் குறையும். இவ்வாறு செய்வதால் தீப்புண்களும் குணமாகும். இந்தக் கீரையை சீமை அத்திப்பழத்துடன் சேர்த்துக் கரைத்துக் கட்டிகளின் மீது பற்றுப் போட்டால் அவை விரைவில் பழுத்து உடையும். வெந்தயக் கீரைக்கு இரத்தத்தில் உள்ள சர்க்கரையையும், சிறுநீரில் உள்ள சர்க்கரையையும் குறைக்கும் ஆற்றல் உள்ளது. இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. வெந்தயக் கீரை சீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டுகிறது. சிறுநீர் உறுப்புகளை சுத்தம் செய்கிறது. மூளை நரம்புகளைப் பலப்படுத்துகிறது. வயிற்றுக் கட்டி, உடல் வீக்கம், சீதபேதி, குத்திருமல், வயிற்று வலி ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது. வெள்ளைப் பூசணிக்காய் சாம்பாரில் வெந்தயக் கீரையைச் சேர்த்துச் சாப்பிட்டால் பெருத்த உடல் இளைக்கும்.  

———————————————————————————  

ஆரைக் கீரை

 

நீர் நிறைந்த வயல்கள், நீரோடையின் கரைகள், ஏரிக்கரைகளில் வளரும் இக்கீரைக்கு பூவோ காயோ எதுவும் இல்லை. நான்கு இலைகளுடன் காணப்படும் இக்கீரையை ஆவாரை, சதுப்பன்னி என்றும் அழைக்கிறார்கள். ஆரைக்கீரை இனிப்புச் சுவை உடையது.

குளிர்ச்சித் தன்னம உடையது. நாக்கிற்கு நல்ல சுவை தருவது இக்கீரை. உடல் உஷ்ணத்தைத் தணித்து, குளிர்ச்சி குறையாமல் வைத்திருக்கும்.
இது அதிகமாய் வெளியேறும் சிறுநீரைக் கட்டுப்படுத்தும். அதனால் உடலில் நீர்ச்சத்து இருக்கும். வறண்ட தேகம் உடையவர்க்கு உகந்கது.
இக்கீரையைச் சமைத்து உண்டால் வெள்ளை நோய் குணமாகும். அதிகமான தாகத்தைத் தணிக்கும். சிலருக்கு சிறுநீரில் இரத்தம் கலந்து போகும். அவர்களுக்கு இக்கீரை கண் கண்ட மருந்து. சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள் மதியம் மட்டும் இக்கீரையைத் தொடர்ந்து நாற்பது நாட்கள் சமைத்து உண்டுவர, நல்ல குணம் கிட்டும். இக்கீரை உடலுக்கு நல்ல வலுவூட்டும். இக்கீரையை வெயிலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். அதில் அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் காய்ச்சி வடி கட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு சக்கரையை கலந்து நாள்தோறும் குடித்து வந்தால் நோய்கள் வராது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  

———————————————————————————-  

கீழாநெல்லிக் கீரை

 

நீர் நிறைந்த சதுப்பு நிலங்களிலும், வயல் மற்றும் கால்வாய் ஓரங்களில் வளரும் இக்கீரை எளிதில் கிடைக்கும்.  

கீழாநெல்லி, கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறது. இக்கீரையில் கிட்டத்தட்ட அனைத்துச் சுவைகளும் அடங்கியுள்ளன. புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகிய நான்கு சுவைகளும் உண்டு. இக்கீரை குளிர்ச்சித் தன்மை உடையது.  

இக்கீரையின் தளிர்களை அரைலிட்டர் தண்ணீரில் இட்டுக் காய்ச்சி, வடிகட்டி தண்ணீரை மட்டும் குடித்து வந்தால் சீதபேதி உடனே மாறும். இரத்த சோகையால் உடல் வெளுத்துக் காணப்படுபவர், மேகநோயால் அவதிப்படுபவர் இதை நன்றாக அரைத்து பசுவின் தயிரில் கலந்து நாள்தோறும் காலையில் பருகி வந்தால் நல்ல பலன் கிட்டும்.  

மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த இக்கீரையைத் தவிர வேறு மருந்து கிடையாது. கீழாநெல்லிக்காய்களே ஆங்கில மருத்துவத்திலும் மஞ்சள் காமாலைக்குப் பயன்படுத்தப் படுகிறது.  

கீழாநெல்லி, தும்பை இலை, கரிசலாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து, காலை, மாலை சுமார் பத்து நாட்கள் உண்டு வந்தால் காமாலை நோய் பூரணமாகக் குணமாகும். பெரியவர்கள் நெல்லிக்காய் அளவும், சிறியவர்கள் சுண்டைக்காய் அளவும் உட்கொண்டால் போதுமானது. காரம், புளியைத் தவிர்த்து, வழக்கத்திற்கு பாதி உப்பு சேர்த்து, பால்சோறு அல்லது தயிர்சோறு மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.  

தாது பலம் இழந்து மனம் மற்றும் முகவாட்டத்துடன் இருக்கும் ஆண்கள் இக்கீரையுடன் ஓரிதழ் தாமரை இலையையும் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு தினமும் சுமார் நாற்பது நாட்கள் உண்டால் போதும். இழந்த உயிர்சக்தியை மீண்டும் பெறலாம். ஆண்மை மிகும்.  

இக்கீரை பசியை நன்றாகத் தூண்டும்.  

சொறி, சிரங்குகளுக்கு இக்கீரையை உப்புடன் சேர்த்து அரைத்துப் பூசினால் நல்ல பலன் கிட்டும். காயங்களுக்கு உப்பு சேர்க்காமல் வெறுமனே இக்கீரையை அரைத்து, பற்றுப் போட்டால் காயங்கள் விரைவில் ஆறும்.  

மாதுளைக் கொழுந்தும், இக்கீரையையும் சம அளவில் கலந்து அரைத்து, பசுவின் தயிர் அல்லது மோரில் கலந்து ஓரிரு நாட்கள் குடித்தால் போதும், சீதபேதி குணமாகும்.  

கண் பார்வை மங்குதல், மாலைக் கண் போன்ற கோளாறுகளுக்கு, கீழாநெல்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரையை சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலை, மாலை புளித்த மோரில் கலந்து தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகினால் போதும். பார்வை மிகும். கண்பார்வை கூர்மை பெறும்.  

—————————————————————————-  

துத்திக் கீரை

 

கீரைகளின் பயன்களை அனைத்து மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். காலை நேரங்களில் கீரைக் கட்டுகளை மக்கள் வாங்கிச் செல்வதை நாம் காண்கிறோம்.

குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதன் மகிமையை சில காலம் மறந்து நோய்களின் உறைவிடமாக தங்கள் உடம்பை ஆக்கிக் கொண்டு விட்டனர் பலர்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் குணம் கீரைகளுக்கு அதிகம் உண்டு என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூலிகை சமையல் என்னும் தலைப்பில் ஒவ்வொரு கீரையைப் பற்றி அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் கிராமங்களில் அதிகம் கிடைக்கும் துத்திக் கீரையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட கீரையாகும். இதனை கக்கடி, இக்கசி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இவை இந்தியாவில் உஷ்ணப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இவற்றில் பால் துத்தி, சிறுதுத்தி, கருந்துத்தி, ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி, நிலத்துத்தி, பொட்டகத்துத்தி என பல வகைகள் உள்ளன.

இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்

சாலவதக் கிக்கட்டத் தையலே – மேலுமதை

எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும்

இப்படியிற் றுத்தி யிலையை

(அகத்தியர் குணபாடம்)

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மூல வியாதி குணமாக

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.

இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

உடல் சூடு தணிய

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பக்கட்டி குணமாக

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.

துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

பல்ஈறு நோய் குணமாக

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.
  

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments on this entry are closed.

Previous post:

Next post: