கீரைகள் (2)

in பொதுவானவை

 

புளியாரைக் கீரை

அரைக்கீரை வகையைச் சேர்ந்த புளிப்புச் சுவையை உடைய இந்தக் கீரையில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. நன்கு பசியைத் தூண்டி, உடல் எடையை அதிகரிக்கும். உடலில் புது ரத்தம் ஊற வைக்கும். நாள்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்து இது. தலைவலி, தலைச்சுற்றல், காய்ச்சல், வாந்தி, மயக்கம், வாத நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும். இந்தக் கீரையைத் தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் அதிசயமான பலன்களைப் பெறலாம். குளிர்ச்சியான உடல் தன்மை கொண்டவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

புளியாரைக் கீரையின் மருத்துவப் பயன்கள்

1. புளியாரைக் கீரையுடன் சிறிது வேப்பந்துளிர், மிளகு (3), மஞ்சள் தூள் (2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டால் ரத்தம் தூய்மையாகி, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
2. புளியாரைக் கீரையை சிறுபருப்பு சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தீரும்.
3. புளியாரைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் நன்றாகப் பசி எடுக்கும்.
4. புளியாரைக் கீரையுடன் வெந்தயம் சேர்த்து அரைத்து மோரில் கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
5. புளியாரைக் கீரையை மிளகு சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான காய்ச்சல்களும் சரியாகும்.
6. புளியாரைக் கீரையைச் சாறு எடுத்து, அதில் உப்பு சேர்த்துக் காய்ச்சவும். மீண்டும் மீண்டும் காய்ச்சுவதில் பாத்திரத்தில் படியும் உப்புப் படிவத்தை எடுத்து வைத்துக்கொள்ளவும். இதைப் பொடியாக்கி வைத்துக்கொண்டு, 2 சிட்டிகையை எலுமிச்சைச் சாறில் கலந்து சாப்பிட்டால், எப்படிப்பட்ட வயிற்று வலியும் உடனே மறையும். குடற்புண்களும் மாயமாக மறையும்.
7. புளியாரைக் கீரை சாறு எடுத்து, அதில் மாதுளம் பழத்தோலை அரைத்து, தயிரில் குழைத்துச் சாப்பிட்டால் சீதபேதி, வயிற்றுக் கடுப்பு இரண்டும் தீரும்.
8. புளியாரைச் சாறில் சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் பித்த நோய்கள் குணம¡கும்.
9. புளியாரைச் சாறில் துத்தி இலையை சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த மூலம் சரியாகும்.
10. புளியாரைச் சாறில் ஓமத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

———————————————————————————

மணத்தக்காளி

 

வாய்ப் புண் உள்ளவர்களுக்கு வயிற்றிலும் புண் இருக்கும். இந்த பிரச்னைக்கு நல்ல மருந்து மணத்தக்காளி கீரை.

இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர வாய்ப் புண்ணும், வயிற்றுப் புண்ணும் குணமாகும்.

மூலநோய்க்கும் குடல் பிரச்னைக்கும் இந்த கீரை நல்ல மருந்து. மேடைப் பேச்சாளர்கள், பாடகர்களுக்கு தொண்டைக் கட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம். இவர்கள் மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.

———————————————————————————

கொத்தமல்லிக் கீரை

கொத்தமல்லிக் கீரை வீட்டுத் தோட்டங்களிலும் மட்டுமின்றி சிறு தொட்டிகளில் கூட வளர்க்கலாம். வழக்கமாக ரசம், சாம்பார் போன்றவற்றில் மணத்திற்காக இக்கீரையைப் பயன்படுத்துவார்கள்.

கொத்தமல்லிக் கீரை உப்புச் சுவையுடையது. உஷ்ணமும் குளிர்ச்சியும் கலந்த தன்மை உடையது.

கொத்தமல்லிக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் காய்ச்சல் குணமாகும். வாதம், பித்தம் நீங்கும். உடல் பலம் பெறும். தாது விருத்திக்கும் நல்லது.

இக்கீரை பசியைத் தூண்டும் சக்தி படைத்தது.

இக்கீரையின் சாறு பிழிந்து பித்தத் தழும்புகள் மீது பூசினால் விரைவில் குணம் கிடைக்கும்.

இக்கீரையை எண்ணெயில் சிறிது வதக்கி, கட்டிகள், வீக்கங்களின் மீது வைத்துக் கட்டினால் குணம் கிட்டும்.

கொத்தமல்லிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிடலாம். தினமும் இக்கீரையை உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் எளிதாய் பிரியும்.

பற்களுக்கு உறுதியை அளிக்கும். பல் சம்பந்தமான எல்லா நோய்களும் இக்கீரையை உண்டுவரக் குணமாகும்.

முதுமைப் பருவத்தில் ஏற்படும் தோல் சுருக்கத்தைப் போக்கி தேகத்திற்கு அழகையும் மினுமினுப்பையும் தரும்.

 

———————————————————————————

மணலி கீரை

கடந்த இதழில் பொடுதலைக் கீரையின் மருத்துவப் பயன்களைப் பற்றி அறிந்தோம். இந்த இதழில் மணலிக் கீரை பற்றி தெரிந்து கொள்வோம்.

மணலிக் கீரை பூண்டு இனத்தைச் சேர்ந்தது. இது தென்னிந்தியா முழுவதும் பரவிக் காணப்படும். மேலும் பஞ்சாப், சிந்து போன்ற இடங்களிலும் பரவிக் கிடக்கிறது.

மணலிக் கீரை சமையலுக்கு உகந்த கீரைகளுள் ஒன்று.

இதனை மணல்கீரை, நாவமல்லிக்கீரை என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இதன் இலை தண்டு அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. நம் முன்னோர்களின் மருத்துவக் கீரைகளில் மணலிக் கீரையும் இடம்பெற்றுள்ளது.

வதைமறும் நெஞ்சேறி வந்த கபம்விலகுஞ்

சீதமுட நோய்பலவுந் தீருங்காண் – போதவுள்ளே

வீறு கிருமியோடு மேவாப் பயித்தியம்போங்

கூறுமண லிக்கீரைக்கு

– அகத்தியர் குணபாடம்

வயிற்றுப் பூச்சி நீங்க

வயிற்றில் கிருமிகள் இருந்தால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளையும் இவை உறிஞ்சி விடுவதால், உடல் பலவீன மடைந்து காணப் படுவார்கள். பெரும்பாலும் சிறு குழந்தைகள் தான் இந்த வயிற்றுப் பூச்சியால் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். மேலும் வயிற்றுப்புண், குடல்புண், அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படுவதற்கு இவை காரணமாகின்றன. இந்த வயிற்றுப் பூச்சிகளுக்கு மருந்துகள் சாப்பிட்டாலும் முழுமையாக ஒழிந்துவிடாது. இவை முற்றிலும் அறவே நீக்க மணலிக் கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கலந்து கூட்டு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பூச்சி நீங்கும்.

மார்புச்சளி

சளியின் அபகாரம் அதிகரித்து அது மார்பு பகுதியில் சேர்ந்து சளி கட்டிக்கொள்வதால் தொடர்ந்து இருமல், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பாகிறது. இந்த மார்புச் சளியை போக்க, மணலிக்கீரையை நன்கு நீர்விட்டு அலசி பின் அதனுடன் சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும். அல்லது மணலிக் கீரையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் தேன் கலந்து காலயில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மார்புச்சளி நீங்கும்.

மலச்சிக்கல் நீங்க

பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டது. மணலிக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி வாரம் இருமுறை பாசிப்பருப்பு கலந்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

ஞாபக சக்தியைத் தூண்ட

ஞாபக மறதி மனிதன் வாழ்வை சீரழிக்கும் நோய். ஞாபக மறதிக்கு பித்த அதிகரிப்பே காரணம். மேலும் மூளைக்கு தேவையான சத்துக்கள் குறைவதால் ஞாபக மறதி உண்டாகும். இக்குறையை நீக்க மணலிக் கீரை மசியல் செய்து சாப்பிடுவது நல்லது.

குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்க

மணலிக் கீரையின் சமூலத்தை நீர்விட்டு அரைத்து 70 கிராம் அளவாக எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் மூன்று நாள் அருந்தி விட்டு மறுபடியும் நான்கு நாள் இடைவெளிவிட்டு மூன்று நாட்கள் அருந்தி வந்தால் குடலில் உள்ள தட்டைப் புழுக்கள் நீங்கும்.

பைத்தியம் மாற

மூளை பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மணலிக் கீரையை மசியல் செய்து கொடுத்தால் மூளை நரம்புகள் நன்கு பலம் பெறும். இதனால் பைத்தியம் குணமாக வாய்ப்புண்டு.

ஈரல் பலப்பட

ஈரல் பாதிக்கப்பட்டாலே உடலின் உறுப்புகள் அனைத்தும் பாதிக்கப்படும். இரத்தம் சீர்கெடும். கண்பார்வை கோளாறுகள் உண்டாகும். ஈரலைப் பலப்படுத்த மணலிக்கீரை கசாயம் செய்து அருந்தி வரவேண்டும்.

மணலிக் கீரையை குடிநீரில் கொடுக்க மார்புச் சளி, வயிற்றுப்புண் நீங்கும்.

மணலிக்கீரை கிடைக்கும் காலங்களில் வாங்கி உண்டு அதன் முழு மருத்துவப் பயனையும் அடைந்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

 

———————————————————————————

வல்லார

வல்லாரை கால்வாய் மேட்டிலும், குளக்கரைகளிலும், ஆற்றோரங்களிலும், வயல் வரப்புகளிலும் தானாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம். நீர் பிடிப்புள்ள இடங்களில் இது கொடியாகப் படர்ந்து கிடக்கும்.

இந்தக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. பொதுவாக இது உணவாகப் பயன்படுவதைவிட மருந்தாகப் பயன்படுவதுதான் அதிகம்.

வல்லாரைக் கீரையைச் சமைக்கும்போது புளி சேர்க்கக்கூடாது. புளி சேர்த்தால் அதன் சுவையும், மருத்துவக் குணமும் கெட்டுவிடும்.

வல்லாரையுடன் வெங்காயம், மிளகு, சீரகம் சேர்த்து சாம்பார் செய்து சாப்பிடலாம். உளுந்தை வறுத்து அதனுடன் வதக்கிய வல்லாரை, தேங்காய், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துத் துவையல் அரைக்கலாம். பாசிப்பருப்புடன் சேர்த்துக் கூட்டாக வைக்கலாம்.

இந்தக் கீரையை சாம்பார் செய்து சாப்பிடுவதன் மூலம் உடல் எரிச்சல், மூட்டு வலி, வீக்கம், சிறுநீர் மஞ்சள் நிறமாகப் போதல் போன்ற நோய்கள் குணமாகும். வல்லாரைத் துவையல் மலச்சிக்கலை அகற்றும்.

வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.

சொறி, சிரங்கு, மாரடைப்பு, மாலைக்கண், நீரிழிவு, காக்கை வலிப்பு, காய்ச்சல், பைத்தியம் போன்ற நோய்களையும் வல்லாரை குணப்படுத்துகின்றது.

வல்லாரை கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து அது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

வல்லாரைக் கீரை பொதுவாக மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபக சக்தியை வளர்க்கிறது. நரம்புத் தளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இருதய பலத்துக்கும், தாது விருத்திக்கும் உதவுகின்றது. குடல் புண், காமாலை, தொழுநோய், வாதநோய், நீரிழிவு, சளி, சிறுநீர் தகராறு, யானைக்கால் நோய், காய்ச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்துகிறது.

வல்லாரை வைத்தியம்

1. அதிகாலையில் நான்கு வல்லாரை இலைகளைப் பறித்து நன்றாக மென்று தின்று அடுத்த நான்கு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடாமல் இருந்தால், எந்த விதமான அச்சம், பயம் போன்ற பல வகையான மனநோய்களும் விலகும்.
2. தினமும் நான்கு வல்லாரை இலையுடன் இரண்டு பாதாம் பருப்பு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடல் வலிமை பெறும். இனிமையான குரல் வளம் உண்டாகும்.

3. வல்லாரை இலை 4, அக்ரூட் பருப்பு 1, பாதாம் பருப்பு 1, ஏலக்காய் 3, மிளகு 3 ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும்.

4. வல்லாரைச் சாறு 15 மி.லி., கீழாநெல்லி இலைச்சாறு 15 மி.லி., பசும்பால் 100 மி.லி. ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், முற்றிய மஞ்சள் காமாலை கூட குணமாகும்.

5. வல்லாரைச் சாறில் திப்பிலியை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் கலந்து சாப்பிட்டால் சளி, கபம், இருமல் போன்றவை விலகும்.

6. வல்லாரைச் சாறில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து எடுத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மாதவிலக்குக் கோளாறுகள் சரியாகும்.

7. வல்லாரை இலை, பொடுதலைக் கீரை இரண்டையும் நிழலில் தனித்தனியே உலர்த்திப் பொடியாக்கி, சம அளவு எடுத்து ஒன்றாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

Comments on this entry are closed.

Previous post:

Next post: