காலத்தின் மீது சத்தியமாக…

in அல்குர்ஆன்,முன்மாதிரி முஸ்லிம்

 sura 103காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து. சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்த மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).(103:1-3)

திருமறையில் உள்ள சூராக்களில் சிறியவைகளில் ஒன்று மேலே தரப்பட்டுள்ளது. இமாம் ஷாபி(ரஹ்) அவர்கள் ‘இந்த சூராவைத் தவிர வேறு ஒரு ஆதாரமும் அல்லாஹ்வினால் அவனது படைப்பினங்களுக்கு இறக்கப்பட வில்லையாயினும் இதுவே போதுமானதாக இருக்கும்’ என்று சொல்லும் அளவிற்கு கருத்துச் செறிவு மிக்கது.

நம்மைப் படைத்து போஷித்து வரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வாக்குகளே திருக்குர்ஆன் என்பதை நாம் உளப்பூர்வமாக நம்புகிறோம்; வெளிப்படையாகச் சொல்லுகிறோம்; இத்தகைய திருமறையில் அல்லாஹ் சத்தியம் செய்து கூற வேண்டியதன் காரணம் என்ன? உண்மையை எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே அறிவான்.

அல்லாஹ் நம்மை சிந்திக்கும்படி ஏவுகிறான். மறதியும் பலஹீனமும் நிறைந்த நம்மைத் தட்டி எழுப்பி விழுப்புணர்ச்சி ஊட்டி செயல்படுவதற்காகவே அல்லாஹ் சத்தியம் செய்து கூறுகிறான் என்று எண்ணத் தோன்றுகிறது. காலத்தின் மீது சத்தியம் செய்கிறான். சிறிதோ பெரிதோ சாதாரணமோ அசாதாரணமோ நல்லதோ கெட்டதோ மகிழ்ச்சிகரமோ துக்ககரமோ எத்தகையதாக இருந்தாலும் இந்த உலகில் நிகழ்கின்ற எண்ணிறைந்த சம்பவங்கள் யாவுமே கால விரயமில்லாமல் நிகழ்வதில்லை. காரண காரியங்களின் தரமும் பலனும் நோக்கி காலம் கழிவது மாறுபடுவதில்லை. ஒரே கதியில் கடந்து கோண்டே இருக்கிறது. கடந்து செல்லும் ஒவ்வொரு வினாடியும் நம்மை மறுமையின் பக்கம் நெருக்கிக் கொண்டிருக்கிறது என்ற யதார்த்தத்தை நாம் உணரவேண்டும்.

உணர்வின்மை மற்றும் அசிரத்தை காரணமாக காலம் விரைந்து கழிந்து கொண்டிருப்பதைப் பற்றி கவலை இல்லாமல் தன்னுடைய உடனடியான தேவைகளை நிறவேற்றுவதிலும் சூழ்நிலை உருவாக்கிய தற்காலிக பிரச்னைகளுக்கு நிவாரணம் காணுவதிலுமேயே காலத்தை மனிதன் விரயம் செய்கின்றான். இன்று இருப்பது நாளை இல்லாமல் ஆகிவிடும். எல்லாக் காரியங்களையும் தாங்களே நிர்வகிக்க வேண்டும் நிறவேற்ற வேண்டும் அங்கணம் அல்லாத பட்சம் அவைகள் பாழாகி விடும் என்று தன்முனைப்போடு அக்காரியங்களிலேயே மூழ்கி விடுகின்ற இன்றைய சமுதாயம் வெகு விரைவில் இவ்வுலகிலிருந்து நின்றும் மறைந்து விடுவர் என்ற யதார்த்தம் மனிதனின் சிந்தனையைத் தொடுவதில்லை.

‘மனிதன் நிச்சயமாக நஷ்டத்தில் இருக்கிறான்’ என்ற வசனத்தில் நஷ்டம் என்று குறிப்பிடப்படுவது உலக காரியங்களிலோ பொருளாதார ரீதியாகவோ ஏற்படும் இழப்பை அல்ல என்பதை நாம் தெளிவாக உணரலாம்.

நிராகாிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம். ”(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும் அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். அதுவே அவர்களுடைய கூலியாகும் (அதுதான்) நரகம் ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும் என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள். (18:102-106)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் செல்வமும் உங்களுடைய மக்களும் அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (63:9)

மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்குகிறவனும் இருக்கிறான் அவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின் அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும்; திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மையிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் இதுதான் தெளிவான நஷ்டமாகும். (22:11)

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

நிச்சயமாக நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவறற்றை அமல்களை அந்நாளில் கண்டு கொள்வான் மேலும் காஃபிர் ”அந்தோ கைசேதமே! நான் மணண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!”” என்று (பிரலாபித்துக்) கூறுவான். (78:40)

அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது; அவர்கள் சம்பாதித்துக் கொண்டதில் எப்பொருளும் அவர்களுக்குப் பயன் தராது; அல்லாஹ்வையன்றி எவற்றை அவர்கள் பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் (அவர்களுக்குப் பயன் தராது); மேலும் அவர்களுக்கு மாபெரும் வேதனையுமுண்டு. (45:10)

எனக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் சாட்சியாயிருக்க அல்லாஹ்வே போதுமானவன்; வானங்களிலும் பூமியிலும் இருப்பவற்றை அவன் அறிகிறான்; எனவே எவர் பொய்யானவற்றை நம்பி அல்லாஹ்வை நிராகரிக்கிறார்களோ அவர்கள் தாம் நஷ்டவாளிகள்” என்று (நபியே!) நீர் கூறும். (29:52)

இவ்வசனங்கள் யாவுமே அல்லாஹ் ‘நஷ்டம்’ என்று குறிப்பிடுவது மறுமையின் நஷ்டத்தைத் தான் என்பதை தெளிவுறுத்துகின்றன. எனவே இந்த மீளாப் பெரும் நஷ்டத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள காலம் கடந்துவிடுமுன் நாம் ஆவன செய்யவேண்டும்.

எத்தனையோ சாம்ராஜ்யங்கள் தோன்றி மிக்க அதிகாரத்தோடு ஆட்சி செலுத்தி பரந்து வளர்ந்து பின்னர் அழிந்து இருந்த அடையாளமின்றி மறைந்த விபரங்களை எல்லாம் சரித்திரம் நமக்கு அறிவிக்கின்றது. எத்தனையோ விதமான நாகரீகங்களும்இகலாச்சாரங்களூம் தழைத்து ஓங்கி உச்ச கட்டத்தை எய்தி பின்னர் மங்கி மறைந்து விட்டன. கோடான கோடி மக்கள் உலகில் பிறந்து வளர்ந்து வாலிபமடைந்து வயது முதிர்ந்து இறந்து மண்ணோடு மண்ணாய் கலந்து விட்டனர். பிரமாண்டமான இராணுவ பலம் கொண்ட நாடுகள் பல வென்று ஆட்சியை நிலை நாட்டி ‘தானே இறைவன்’ எனக்கோரி மக்கள் தன்னையே வணங்க வேண்டும் என்று ஆணையிட்ட மன்னர்கள் தோன்றினர். அவர்கள் எல்லாம் கூட மறைந்து இருந்த இடம் தெரியாமல் ஆகிவிட்டனர். இவ்வுண்மைகளை உணர்ந்து நாம் செயல்படவேண்டும். நம்முடைய காலமும் விரைந்து கடந்து விடும். மறுமை வந்தே தீரும்.

இறைவனைச் சந்தித்து அவன் கேள்வி கேட்கும் நேரத்தில் நிராகரித்தவர்கள் “தான் மண்ணாக இருந்திருக்க வேண்டாமா என்று பிரலாபிப்பான் (78:40) மனிதருள் மாணிக்கம் என்று கருதப்பட்ட உத்தமர்கள் கூட தீர்ப்பு நாளில் நடு நடுங்கி கதி கலங்கி நிற்பர். அவர்களில் சிலர் நாம் மரத்தைக் கொத்தித் தின்னும் பறவையாகவோ ஒரு புல் சருகாகவோ இருந்திருக்கலாகாதா என்று அங்கலாய்ப்பார்கள். விரக்தியடைந்து ‘என் தாய் என்னை பெற்றெடுக்காமல் இருந்தார்களில்லையே’ என்று கைசேதப்படுவார்கள். இந்த வேலையில் தான் உண்மை ‘நஷ்டம்’ என்பது என்னவென்று உணர்வார்கள். இத்தகைய ஒரு நஷ்டத்தைத் தவிர்க்க மனிதன் என்ன செய்யவேண்டும் என்று அத்தியாயம் 103ல் அல்லாஹ் கற்றுத் தருகிறான்.

1.நம்பிக்கை: அல்லாஹ்வை மட்டுமே நமது எஜமானனாகவும் இரட்சகனாகவும் பாதுகாவலனாகவும் தேவையைப் பூர்த்தி செய்பவனாகவும் உறுதியாக நம்புவனாக இருக்க வேண்டும். அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்கோ முன்னோர்களுக்கோ அணுவளவும் இவ்விஷயங்களில் அதிகாரமில்லை என்பதையும் உறுதியாக நம்பவேண்டும்.

2.நல்லகாரியங்கள் செய்யவேண்டும்: நல்ல காரியங்கள் என்றால் அவற்றில் நபி(ஸல்) அவர்களின் முத்திர பதிந்திருக்க வேண்டும். அவர்கள் சொல்லாத செய்யாத அங்கீகாரம் இல்லாத எந்த காரியமும் அது எவ்வலவு அழகாக நமக்கு தெரிந்தாலும் முன்னோர்கள் நாதாக்கள் எல்லாம் காலம் காலமாக கடைப்பிடித்து வந்திருந்தாலும் அவை நல்ல அமலாக காரியமாக ஒரு போதும் ஆகாது என்று உறுதியாக நம்பி அவற்றை விட்டுவிட்டு நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளை மட்டுமே நல்ல காரியமாகக் கடைபிடிக்க வேண்டும்.

3.உண்மையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்க வேண்டும்: மார்க்கத்தைப் பற்றி உண்மையை மற்றவர்களுக்கு எடுத்து வைக்காதர்வகள் அவர்களது ஈமானும் நல்ல அமல்களும் அவர்களுக்கு வெற்றியைத்தரா. மாறாக அவர்களும் நஷ்டத்திலேயே இருக்கிறார்கள். இம்மை வாழ்வு எத்தனை செழிப்பும் மகிழ்ச்சியும் மிக்கதாக இருந்தாலும் மேற்கூறிய செயல்களை மேற்கொள்ளாதவன் வெற்றியாளனாக மாட்டான். மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான் என்று அல்லாஹ் காலத்தின் மீது சத்தியம் செய்வதை உணர்ந்து அதன் வாய்மையில் உறுதி கொண்டால் மனிதன் இம்மையில் தன் இலட்சியம் என்னவென்பதையும் தான் சாதிக்க வேண்டியவை எவை என்பதையும் பற்றி பரிசீலனை செய்ய முற்படுவான்.

Er.H.அப்துஸ்ஸமது. சென்னை

{ 1 comment… read it below or add one }

Aslal saja September 23, 2014 at 9:31 am

Pleas follow the quraan

Reply

Leave a Comment

Previous post:

Next post: