காலத்தின் மீது சத்தியமாக….

Post image for காலத்தின் மீது சத்தியமாக….

in அல்குர்ஆன்

 
உண்மையுடனேயே இதை அருளினோம். உண்மையுடனேயே இது இறங்கியது. உம்மை நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்.  (அல்குர்ஆன் 17:105 )

அல்லாஹ் குர்ஆனை உண்மையைக் கொண்டே இறக்கினோம் அதுவும் உண்மையைக் கொண்டு இறங்கியது என்று கூறுகிறான். அல்லாஹ்வின் போதனைகளை நிலைநாட்டப்பட பரஸ்பரம் ஒருவருக்கொருவர் உபதேசிப்பது முக்கியமானது.  அல்லாஹ்வின் கட்டளைகளை உபதேசிப்பவர் முதலில் அதனை ஏற்று செயல்படுத்துபவராக இருப்பது அவசியம்.



ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.   (அல்குர்ஆன் 61:2,3)

எனவே உண்மையை அறிந்தவர்கள் அதன்படி செயல்படுபவர்கள் உனண்மையை உபதேசிக்க கடமைப்பட்டவர்கள் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட கடமைபட்டிருக்கிறார்கள்.


அவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்; நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள் தீமையை விட்டும் விலக்குகிறார்கள். மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்; இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்று முள்ளவர்கள்.  (அல்குர்ஆன் 3:114)

நேர்மையைக் காப்பது கடினமான காரியம்; நேர்வழி நடக்கும்போது எதிர்படும் இடர்பாடுகள், கொடுமை அநீதி அக்கிரமம் நேர்வழி நடப்போர் சந்திக்கும் இன்னல்கள் ஒரு மூஃமினை நேர்வழியிலிருந்தும் அகலாது இருக்கச் செய்ய பரஸ்பர உபதேசம் நற்கருமங்களில் தம்மை ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் வழிகேட்டில் இருக்கும் மக்கள் நேர்வழி பெற வேண்டுமென்ற உணர்வு நேர்வழி நடக்க தூண்டுகோலாக உதவும். வாழ்க்கை நெறியாகிய இஸ்லாத்தை நிலை நாட்ட பரஸ்பர உபதேசம் மூலம் ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்கும் ஒன்றுபட்ட சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்.

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).  (அல்குர்ஆன் 103:1-4)

உண்மையை உபதேசிக்கும்போது இன்னல்களும் இடையூறுகளும் ஏற்படுவன, நிதிக்கப்படுவோம், தண்டிக்கப்படுவோம், கொடுமைக்கு உள்ளாக்கப்படுவோம். நபி (ஸல்) அவர்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.  நபி (ஸல்) அவர்களுக்கு உண்மையை வழங்கி மக்களுக்கு உபதேசிக்குமாறு பணித்தபோது நல்கிய அறிவுரை


உம் இறைவனுக்காகப் பொறுமையுடன் இருப்பீராக.  (அல்குர்ஆன் 74:7)


அவர்கள் (உமக்கெதிராகக்) கூறுவதைப் பொறுத்துக் கொள்வீராக; மேலும், அழகான கண்ணியமான – முறையில் அவர்களை விட்டும் வெறுத்து ஒதுங்கி விடுவீராக.   (அல்குர்ஆன் 73:10)

நபி (ஸல்) அவர்களைத் தொடர்ந்து உண்மையை உறைத்த நபித்தோழர்களும் பல இன்னல்களுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகினர். எண்ணிக்கையில் குறைந்திருந்த அவர்களைச் சூழ்ந்திருந்தவர்கள் பயமுறுத்தி ஒழிக்க கங்கணம் கட்டினர். இந்த சூழ்நிலையில் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அறிவுரை:


நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.  (அல்குர்ஆன் 2:153)

 

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (அல்குர்ஆன் 3:200)

மனிதனின் நிரந்தர வெற்றிக்குரிய வழியை திருமறை தெளிவாக அறிவிக்கும் நிலையிலும் மனித சமுதாயம் அழிவையும் இழிவையும் நோக்கிச் செல்கிறது. உண்மைக்காக உழைக்கும் நேர்மையும் நீதியும் நிறைந்த அதிகார வர்க்கம் இல்லை. தன்னலமும் ஊழலும் நிறைந்த அதிகார வர்க்கமே ஆட்சியும் செய்கிறது.

இந்நிலையில் முஸ்லிம்கள் நன்மை, நேர்மை, நீதி யாவற்றினின்றும் விலகி நிற்கின்றனர்.  அழிவிலிருந்தும் நஷ்டத்திலிருந்தும் மீட்சி பெற அல்லாஹ் வழங்கிய வாழ்க்கை நெறியை அலட்சியப்படுத்தி மாறாக முரண்பட்ட கோட்பாடுகளையும், சம்பிராதயங்களையும், சடங்குகளையும், பின்பற்றும் மக்களாக மாறிவிட்டனர்.

இஸ்லாம் தவிர்க்கக்கோரும் உணர்வுகளுக்கும், செய்கைகளுக்கும் இரையாகி விட்டனர். காலம் விரைந்து கடந்து விடுமுன்பாக முஸ்லிம்கள் விழித்துக்கொள்வார்களாக! அல்லாஹ் வகுத்தளித்த நபி (ஸல்) வாழ்ந்து காட்டிய நேர்வழி நின்று வெற்றி பெற அல்அஸ்ர் சூரா நம்மை தூண்டிக்கொண்டிருக்கிறது. ஆழ்ந்து சிந்தித்து உண்மையை உணர்ந்து பெரும் நஷ்டத்தை தவிர்த்து வெற்றி பெற பாடுபடுவோமாக!

E.r.H. அப்துஸ்ஸமது

{ 1 comment… read it below or add one }

U.L.RIFAUDEEN MOULAVI NINTAVUR October 2, 2013 at 1:51 am

This page is very good page Jazakumullahu khairen

Reply

Leave a Comment

Previous post:

Next post: