இஸ்லாம் பெண்ணைக் கண்ணியப் படுத்தியதிலும் சங்கை செய்திருப்பதிலும் முதன்மையாக விளங்குகிறது.
‘ஒரு பெண் தன் கணவரைத் தேர்ந்தெடுக்க முழு உரிமை பெற்றவள்’ என்று கூறியிருப்பதே! தம் மகளை நிர்ப்பந்தம் செய்து அவள் விரும்பாத ஒருவருக்கு அவளை மணமுடித்து வைக்க எந்தப் பெற்றோருக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கவில்லை.
இந்த உரிமையை ஒவ்வொரு நேர்வழி பெற்ற முஸ்லிம் பெண்ணும் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். அதே நேரம் தம் பெற்றோரிடம் ஆலோசனை செய்து தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு முஸ்லிம் பெண் கூச்சப்பட மாட்டாள் நாணம் கொள்ள மாட்டாள்.
தம்மை மணமுடித்துக் கொள்ள எவராவது விரும்பினால் அது சம்பந்தமாக முதலில் தன் பெற்றோரிடம் கலந்தாலோசனை செய்துவிட்டே முடிவெடுப்பாள்.
வாழ்க்கையின் தரத்தையும் மக்களின் தரத்தையும் தன்னைவிட தன் பெற்றோர்களே தெளிவாக அறிந்து வைத்திருப்பார்கள் என்பதை விளங்கி இருப்பாள். அதே சமயம் தனது தகப்பனின் பிடிவாதத்திற்கோ உலக ஆசைகளுக்கோ தன் உரிமை பறிக்கப்படுவதையும் ஏற்க மாட்டாள்.
சில சமயங்களில் அவளுக்குப் பிடிக்காத ஒருவனை மணமுடித்து வைக்க தகப்பன் நிர்ப்பந்திக்கக் கூடும். அந்த நிலையிலும் பெண்ணாகிய அவளிடம்தான் முடிவெடுக்கிற உரிமை உண்டு என்பதற்கு பலமான மார்க்க ஆதாரம் இருக்கிறது. இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் மூலமாக அறிவிக்கும் ஓர் அறிவிப்பே அந்த ஆதாரம்.
கன்ஸா பின்த் கிதாம் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘என்னை எனது தந்தை தன் சகோதரன் மகனுக்குத் திருமணம் முடித்து வைத்தார். ஆனால் நான் அந்தத் திருமணத்தை விரும்பவில்லை. எனக்கு அது வெறுப்பாகவே இருந்தது. இதைப்பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள் ‘‘உனது தந்தை செய்ததை நீ ஏற்றுக்கொள் பொருந்திக் கொள்!” என்றார்கள். நானோ ‘எனது தந்தையின் செயல் எனக்குப் பிடிக்கவில்லை’ என்பதாக மறுத்து விட்டேன்.
நபி (ஸல்) அவர்கள்
‘‘அப்படியானால் நீ செல்லலாம் இந்தத் திருமணம் ஆகுமான திருமணம் அல்ல இது செல்லாது நீ விரும்பியவரை மணம் முடித்துக் கொள்ள உனக்கு உரிமை இருக்கிறது!” என்று கூறி என் திருமணத்தை ரத்து செய்தார்கள். எனினும் நான்‘‘அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை செய்ததை ஏற்றுக் கொண்டேன். இருப்பினும் பெண்கள் விஷயத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு (நிர்ப்பந்திக்க) எந்த அதிகாரமும் இல்லை என்பதை வெளிப்படுத்தவே இப்படி விசாரித்தேன். பெண்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்தேன். (ஸஹீஹுல் புகாரி)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த நிகழ்ச்சியில் அந்தப் பெண்ணுக்கு முதலில் என்ன உபதேசம் செய்தார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
‘‘தந்தையின் செயலை ஏற்றுக்கொள்! பொருந்திக் கொள்!” என்று உபதேசித்தார்கள். ஆம்! இதுதான் உண்மை. பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் நல்லபடி வாழ வேண்டும் என்றும் வெற்றிகரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணுக்கு அவர் விரும்பாத ஒருவரை அவரது பெற்றோர் மணமுடித்து வைத்துள்ளார்கள் என்பதை உணர்ந்தவுடன் ‘தன் கணவனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் அதிகாரத்தை’ அவருக்கு முழுமையாக வழங்கி விட்டார்கள். அதுமட்டுமின்றி அநியாயக்காரத் தந்தை தன் பெண்ணுக்கு இழைக்கிற அநீதத்தை விட்டும் பாதுகாப்பு வழங்கினார்கள்.
இஸ்லாம் பெண்ணுக்குச் சிரமத்தை அளிக்கவோ தான் விரும்பாத ஒருவரோடு அவள் வாழ்வதையோ விரும்பவில்லை. காரணம் திருமணம் என்பது வெற்றிகரமானதாகவும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஓர் உறுதியான பொருத்தம் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. மேலும் தம்பதியர் இருவரும் அவர்களின் ஆசையிலும் இயற்கைப் பண்பாடுகளிலும் தோழமையிலும நோக்கங்களிலும் ஒருவர் மற்றவருக்கு நிகரானவராக மனமொப்பி வாழவேண்டும் எனவும் விரும்புகிறது.
இப்படிப்பட்ட இல்லறக் கோட்டையை நிர்மாணிப்பதில் இடையூறு ஏற்பட்டு விட்டால்… கணவன் மனைவி இருவரின் வாழ்க்கையும் சுவையாக இல்லை என்றால்… தன் கணவனிடம் இருந்து அன்பையும் மனத்தூய்மையையும வாக்குறுதியை நிறைவேற்றுகிற நேர்மையையும் ஒரு பெண் பார்க்க முடியவில்லை என்றால்… கணவனால் இறைமறுப்புக்கு ஆளாகிவிடுவோம் என்று பயந்தால்… கணவனைக் கொண்டு இறைக் கட்டளைகளை அமல் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டால் அப்போது அந்தப் பெண தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோருவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கிறது. இதை நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஸாபித் பின் கைஸ் (ரழி) என்ற நபித்தோழன் மனைவி, நபியவர்களிடம் வந்தார். அவரது பெயர் ‘ஜமீலா’ என்பதாகும். (இவர் அப்துல்லாஹ் இப்னு உபை உடைய சகோதராவார்.) ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் கணவர் ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால நான் இஸ்லாமில் இருந்து கொண்டே நிராகரிப்புக்குரிய செயலைச் செய்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்” என்றார்.
அதாவது நல்லவரான தன் கணவருடன் வெளியுலகத்தில் மனைவியாக வாழ்ந்து கொண்டு மனதளவில் அவரை வெறுத்துக் கொண்டு இரட்டை வேடம் போடுவதை தாம் விரும்பவில்லை என்பதைச் சூசகமாகச் சொன்னார். அல்லது நல்லவரான தம் கணவரை வெறுத்த நிலையிலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தால எங்கே தாம் நிராகரிப்பாளர்களின் செயல்களில் சிக்கிவிடுவோமோ என்று அஞ்சுவதாகத் தெரிவித்தார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள்
‘‘ஸாபித் உனக்கு மஹராக – மணக்கொடையாக அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘‘ஆம் அல்லாஹ்வின் தூதரே! நான் அதைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்றார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள தமது தூதர் ஒருவரை ஸாபித் பின் கைஸிடம் அனுப்பி ‘‘நீ அவருக்கு (ஜமீலாவுக்கு) கொடுத்த தோட்டத்தை ஏற்றுக் கொண்டு அவரைத் தலாக் சொல்லிவிடு!” என்று கூறி விட்டார்கள்.
ஸஹீஹுல் புகாரியின் மற்றோர் அறிவிப்பில அந்தப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடும் போது
‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஷ் (ரழி) அவர்களுடைய மார்க்கப் பற்றையோ குணத்தையோ குறை சொல்லவில்லை. எனினும் அவரைச் சகித்துக் கொண்டு என்னால் வாழ முடியவில்லை” என்று கூறியதாக வந்துள்ளது. (ஸஹீஹூல் புகாரி)
இஸ்லாம் பெண்ணுக்குரிய மனித உரிமையைப் பாதுகாக்கிறது அவளுடைய கண்ணியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவளுக்குரிய உரிமையை மதிக்கிறது. அவளுக்குப் பிடிக்காத ஓர் ஆணுக்கு அவளை மணமுடித்து வைக்க தந்தையோ வேறு நெருங்கிய உறவினர்களோ யார் முயன்றாலும் அதைத் தடை செய்கிறது. இதற்கு பரீரா (ரழி) அவர்களது சம்பவம் இன்னுமோர் ஆதாரமாகும்.
பரீரா (ரழி) அவர்கள் ஓர் ஹபஷி (நீக்ரோ) அடிமைப் பெண்ணாக இருந்தார்கள். அவரை அபூலஹபின் மகன் உத்பா சொந்தமாக்கி இருந்தான். தனக்கு அடிமையாக இருந்த காலத்தில் முஃகீஸ் என்ற ஓர் அடிமைக்கு பரீராவைக் கட்டாயப்படுத்தி மணமுடித்து வைத்துவிட்டான்.
பரீரா (ரழி) அவர்களுக்கோ அந்தத் திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லை. தம் கணவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இருந்திருந்தால நிச்சயமாக முஃகீஸை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். இந்த நிலையில் ஆயிஷா (ரழி) அவர்கள் பரீராவின் மீது கருணை காட்டி அவரை விலைக்கு வாங்கி உரிமையிட்டு விட்டார்கள் விடுதலை செய்து விட்டார்கள்.
தான் சுதந்தரமாகி விட்டதை உணர்ந்த பரீரா இனி தமது மண வாழ்க்கையின் நிலைமையையும் முடிவையும் தீர்மானிப்பதில தமக்கு மார்க்கம் வழங்கியிருக்கும் முழு உரிமையையும் நன்கு விளங்கிக் கொண்டார். உடனே தம் கணவடமிருந்து விவாகரத்துப் பெறுவதை நாடினார். இதையறிந்த முஃகீஸ்
‘‘பரீராவே! என்னை ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள்!” என்றவாறு அவர் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தார்.
இமாம் புகாரி (ரஹ்) அவர்கள இந்தச் செய்தியை இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கிறார்கள். அதில் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகிறார்கள்:
‘‘பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மை பிரிந்து விட நினைக்கிறார் என்பதை அறிந்த போது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுத வண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்ததை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் (எனது தந்தையான) அப்பாஸ் (ரழி) அவர்களிடம ‘‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள வெறுப்பையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள்.
மேலும முஃகீஸ் (ரழி) அவர்களின் நிலைமையைப் பார்த்து
‘‘முஃகீஸை நீ மீண்டும் ஏற்றுக்கொள்ளலாமல்லவா?” என்று பரீராவிடமும் சொன்னார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளை இடுகின்றீர்களா?” எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘இல்லை இல்லை! நான் சிபாரிசு செய்(யவே விரும்பு)கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா ‘‘(அப்படியானால) அவர் எனக்குத் தேவையில்லை!” என்று கூறிவிட்டார். (ஸஹீஹுல் புகாரி)
இந்த நபிவழிச் செய்தியின் வாயிலாக ஒரு சுதந்தரமான பெண் தனக்குப் பிடிக்காத கணவரை விட்டுப் பிரிந்து விடுவதில மார்க்கம் எந்த அளவிற்கு அனுமதித்துள்ளது என்பதை அறிகிறோம்.
இன்னும் உள்ளத்தை உருக்கக்கூடிய இக்கட்டான நிலையில் நபியவர்கள் சிக்கியிருந்ததையும் உணர முடிகிறது. ஒரு பக்கம தம் மனைவியை ஆழமாக நேசிக்கும் கணவர் மறுபக்கம் கொஞ்சமும் சமரசத்திற்கு இணங்கி வராதபடி தன் கணவரை வெறுக்கும் மனைவி!
இங்கு நபி (ஸல்) அவர்களால் முயன்ற ஒரே விஷயம்
‘‘பரீராவே! முஃகீஸை மீட்டுக்கொள்ள முடியாதா? அவர் உனக்குக் கணவராக உன் குழந்தைக்குத் தந்தையாக இருந்தால்லையா?” என்று சிபாரிசு செய்தது மட்டுமே!
இந்த இடத்தில் இறையச்சமுள்ள பெண்ணான பரீராவைப் பற்றியும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறுவதைக் கேட்டவுடன்
‘‘அல்லாஹ்வின் தூதரே! இது உங்களது கட்டளையா? அல்லது சிபாரிசா? – கட்டளை என்றால் இதோ… உடனே கட்டுப்படுகிறேன்” என்று தனது கீழ்ப்படிதலை வெளிப்படுத்துகிறார். ஆயினும் நபியவர்கள் தங்களது கருத்தை தெரிவித்தவுடன் பரீரா தன் இறுதி முடிவைச் சொல்லி விடுகிறார்.
தங்களது பெண் பிள்ளைகள் மீது வரம்புமீறி நிர்ப்பந்தம் செய்து அவர்கள் விரும்பாத ஆணுக்கு அநியாயமாக மணமுடித்து வைக்கிற பெற்றோர்கள நபி (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
மார்க்கத்தைப் பேணி நடக்க விரும்புகிற நல்ல முஸ்லிமான பெண்களுக்கு ஒரு நிலையான நிரந்தரமான அழகிய அளவுகோல்கள் இருக்கின்றன. அந்த அளவுகோல்களைக் கொண்டே ஒரு முஸ்லிமான பெண் தனது வருங்காலக் கணவரைத் தேர்ந்தெடுக்கின்றாள்.
நம்பிக்கை (ஈமான்) கொண்ட பெண வெறுமனே வெளிரங்க அழகைக் கொண்டோ கவர்ச்சியைக் கொண்டோ உயர்ந்த பதவிகளைப் பார்த்தோ செல்வச் செழிப்பை வைத்தோ மட்டும் அந்தப் பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுப்பது கிடையாது. மாறாக தான் தேர்ந்தெடுக்கப்படுகிற கணவரிடம் உறுதியான மார்க்கப் பற்றும் நல்ல குணங்களும் இருக்கின்றதா என்று தெளிவாகத் தெரிந்த பின்பே தேர்ந்தெடுப்பாள். இவை இரண்டுதான் வெற்றிகரமான இல்லறத்தின் தூண்களாகவும் கணவரை அலங்கரிக்கக் கூடிய ஆபரணங்களாகவும் இருக்கின்றன. அதனால்தான் நபி (ஸல்) அவர்கள ஆண் பெண் இருவரும் தங்களது துணையைத் தேர்ந்தெடுக்கும் போது உன்னிப்பாக கவனிக்க வேண்டிய இரண்டு தகுதிகளாக மார்க்கப்பற்றையும் நல்ல குணத்தையும் குறிப்பிட்டார்கள்.
‘‘எவருடைய மார்க்கப்பற்றைக் குறித்தும் ஒழுக்கப் பண்பாட்டைக் குறித்தும் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதோ அவர் திருமணச் சம்பந்தம் வைத்துக் கொள்வதற்குத் தூது அனுப்பினால் அவருக்குத் திருமணம் செய்து கொடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லையானால் சமுதாயத்தில் குழப்பமும் சீர்குலைவுமே ஏற்படும்” என்று எச்சரித்தார்கள். (ஜாமிவுத் திர்மிதி, ஸுனன் இப்னு மாஜா)
எப்படி ஒரு முஸ்லிமான ஆண
‘(வெளி அழகால்) தன்னைக் கவர்கிறாளே’ என்ற ஒரே காரணத்திற்காக குணத்தால் கெட்ட ஒருத்தியை மணக்க மாட்டாரோ அதுபோலவே ஒரு முஸ்லிமான பெண்ணும் வெளி அழகு மட்டுமே கொண்ட மார்க்கப் பற்றில்லாத வாலிபரையும் மணக்க மாட்டாள்.
நல்ல ஒழுக்கமுள்ள பண்புள்ள கற்பைப் பேணும் நடத்தையுள்ள அழகிய மார்க்கமுள்ள ஒரு வாலிபரே ஓர் உண்மையான முஸ்லிம் பெண்மணியைக் கவர முடியும்.
நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபப் பெண்ணுக்கு ஒரு நம்பிக்கையுள்ள தூய்மையான வாலிபரே தகுதியுள்ள கணவராக இருக்க முடியும். இவ்வாறே ஓர் ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபப் பெண்ணுக்கு அவளைப் போலவே ஒழுக்கமற்ற வழிகெட்ட வாலிபனே தகுதியாக முடியும். இதை அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்:
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு. (அன்னூர் 24:26)
இங்கு ஒன்றை மறந்து விடக்கூடாது. அதாவது தான் தேர்ந்தெடுக்கிற ஆண் சிறிதும் அழகற்றவராக கோரமாக இருந்தாலும் மார்க்கப்பற்றுக்காக அவரைத்தான் மணந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தமும் ஒரு முஸ்லிமான பெண்ணுக்கு இல்லை. அவள் எதிர்பார்க்கும் அழகையும் மனதை நிரப்பும் செழிப்பையும் பெற்ற ஆணை மணக்க அவளுக்கு முழு உரிமையும் உண்டு. அதே சமயம் வெளித்தோற்றத்திற்கு அதிகப்படியான முக்கியத்துவத்தைக் காட்டி உள்ளரங்கமான நற்குணங்களை அலட்சியப்படுத்தி விடவும் கூடாது.
ஒரு முஸ்லிம் பெண்மணி தனது தனித்தன்மைக்கும் மனதிற்கும் உகந்த ஆணை மணமுடிப்பதுடன தனது கணவர் தன் மீது முழு அதிகாரம் பெற்ற நிர்வாகி என்பதையும் புரிந்து வைத்திருப்பாள்.
அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (அன்னிஸா 4:34)
எனவே ஒரு முஸ்லிம் பெண்மணி எப்படிப்பட்ட ஆணைத் தனக்குக் கணவராகத் தேர்ந்தெடுக்க விரும்புவாள் என்றால் அவள் தேர்ந்தெடுத்த கணவர் அவளை நிர்வகிப்பதால் அவள் கண்ணியத்தையும் மரியாதையையும் அடைய வேண்டும் அந்தக் கணவருடன் வாழ்வதைக் கொண்டு அவள் மகிழ்ச்சியுற வேண்டும்.
‘இவனைப் போய் மணமுடித்துக் கொண்டோமே!’ என்று நாளை புலம்புகிற நிலைக்கு அவள் ஆகிவிடக்கூடாது.
கரங்களைக் கோர்த்து நம்பிக்கையுடன் தொடங்குகிற இல்லற வாழ்க்கையில் இஸ்லாம் விரும்புவதெல்லாம் அது காட்டிய நெறியின்படி வாழ வேண்டும் என்பதுதான்.
கணவன் மனைவி இருவரும் மனித குலத்துக்கு இஸ்லாம் விடுக்கிற செய்தியை எடுத்துரைக்க வேண்டும் முழுமையான முஸ்லிம் குடும்பத்தை உருவாக்க வேண்டும் தூய்மையான சந்ததியை உருவாக்குவதிலும அதற்கு நல்ல அறிவைப் புகட்டுவதிலும சிறந்த சிந்தனைகளைத் தங்கள் பிள்ளைகளிடம் விதைப்பதிலும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்த முயற்சியில் ஒருவருக்கொருவர் அன்புடனும் நெருக்கத்துடனும் இணங்கி செயல்பட வேண்டும். இருவரின் போக்கிலும் முரண்பாடுகளோ குண மாறுதல்களோ ஏற்பட்டுவிடக் கூடாது. இயற்கையிலும் பண்பாட்டிலும் வித்தியாசங்கள் உண்டாகி விடக்கூடாது. மார்க்கப்பற்றில் கோளாறு வந்து விடக்கூடாது.
ஓர் இறை நம்பிக்கையுள்ள ஆணும் பெண்ணும் ஒரு மகா சமுத்திரத்தில அருகருகே இணைந்து சென்று கொண்டிருக்கிற இரண்டு ஓடங்களைப் போன்றவர்கள் ஆவர். எனவே இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணிக்காமல் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் இஸ்லாம் விரும்புகிற இல்லறத்தை நடத்திக் காட்ட முடியும்.
இஸ்லாம் என்பது உலக மக்களுக்கு அல்லாஹ் எடுத்துச் சொல்ல விரும்பும் நேர்வழியின் தூதுத்துவ செய்தியாகும். அதை ஒவ்வோர் ஆண் பெண் மீதும் அமானிதமாகச்” (“அமானிதம் – அடைக்கலம்) சுமத்தியிருக்கிறான். இதையே தனது சங்கைமிகு நூலில் கூறும்போது….
நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும் நம்பிக்கையாளரான ஆண்களும் பெண்களும் (இறைவனுக்கு) வழிப்படும் ஆண்களும் பெண்களும உண்மையே கூறும் ஆண்களும் பெண்களும பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடக்கும் ஆண்களும் பெண்களும தானம் செய்யும் ஆண்களும் பெண்களும நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும கற்புள்ள ஆண்களும் பெண்களும அல்லாஹ்வுடைய பெயரை அதிகமாக நினைவுகூரும் ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார்ப்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்அஹ்ஸாப் 33:35)
ஆகவேää வாழ்க்கைப் பயணத்தை நல்ல முறையில் தொடங்குவதற்கும சரியான இலக்கை நோக்கி நகர்த்துவதற்கும் திருமண உறவு பலமிக்கதாக இருக்க வேண்டும். குடும்பத்தின் தூண்களை உறுதிப்படுத்த வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரத்தின் மீது அந்தக் குடும்பம் நிலைபெற வேண்டும். பாதுகாப்பான அஸ்திவாரம் என்பது ஒன்றை அழகிய முறையில் தேர்ந்தெடுப்பதே!
எத்தனையோ நல்ல முஸ்லிம் பெண்மணிகள் இருக்கிறார்கள். அவர்களின் உயர்ந்த நோக்கங்களும் தனித்தன்மைகளும் மிகச் சிறப்பானவை. கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் காட்டுகிற ஒரு தொலைநோக்குப் பார்வை உண்மையில் பாராட்டுக்குரியது.
இத்தகையோல் ஒருவராகத்தான் உம்மு ஸுலைம் பின்த் மில்ஹான் (ரழி) அவர்களை அறிகிறோம். அன்ஸாப் பெண்களிலேயே மிக விரைந்து இஸ்லாமைத் தழுவிய பெண்களில் இவரும் ஒருவர்.
உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் இஸ்லாமைத் தழுவிய காலத்தில்
‘மாலிக் பின் நழ்ர்’ என்பவருக்கு மனைவியாக இருந்தார்கள். (உம்மு ஸுலைமுக்கு மாலிக் பின் நழ்ரு மூலமாக பிறந்தவரே அனஸ் (ரழி).)
உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமை ஏற்றது மாலிக் பின் நழ்ருக்குப் பிடிக்கவில்லை. எனவே உம்மு ஸுலைமை வெறுத்து விலகிவிட்டார்.
தன் கணவர் தன்னை ஆதரவின்றி விட்டுவிட்டாரே என்பதற்காக உம்மு ஸுலைம் (ரழி) இஸ்லாமைத் துறந்து விடவில்லை விட்டுக் கொடுத்து விடவில்லை. மாறாக இஸ்லாமில் உறுதியாக நிலைத்திருந்தார்.
சில காலங்கள் கழிந்தன. மாலிக் இறந்துவிட்ட செய்தி உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்குக் கிடைத்தது. அப்போது நபியவர்களுக்குப் பணிவிடை புரியுமாறு பத்து வயதே நிரம்பியிருந்த தனது மகன் அனஸை நபியவர்களிடம் ஒப்படைத்து விட்டிருந்தார்கள்.
கணவரை இழந்த உம்மு ஸ{லைம் (ரழி) அவர்களுக்கு இளம் வயதுதான். இந்த நிலையில மதீனாவில் மிகப்பெரும் செல்வந்தராகவும் அழகிய தோற்றமிக்கவராகவும் நன்கு பிரசித்தி பெற்றவராகவும் இருந்த ஒருவர் உம்மு ஸுலைமை மணமுடிக்க முன்வந்தார். அவரது பெயர்தான்
‘அபூதல்ஹா’.
அபூதல்ஹா (ரழி) அவர்கள் அப்போது முஸ்லிமாகவில்லை. எனினும மதீனத்துப் பெண்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்டு பலரின் உள்ளங்களைக் கவர்ந்தவராக இருந்தார். தான் உம்மு ஸுலைமை மணமுடித்துக் கொள்ள விரும்புவதைத் தெரியப்படுத்தினால் அதை அவர் உடனே விரும்பி சந்தோஷப்பட்டு மனமாற ஏற்றுக்கொள்வார் என்று நினைத்திருந்தார். ஆனால் உம்மு ஸுலைமைச் சந்தித்து அவரது பதிலைக் கேட்ட போதோ அபூதல்ஹாவுக்குப் பெரியதோர் அதிர்ச்சியாக இருந்தது.
உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கேட்டார்கள்:
‘‘ஓ… அபூதல்ஹாவே! நீ வணங்கக் கூடிய தெய்வம் என்னவென்று பார்த்தீரா? அது பூமியிலிருந்து முளைக்கக் கூடிய ஓர் அற்ப மரம். அதை ஹபஷி அடிமை ஒருவன் சிலையாகச் செதுக்கினான்”.
இதற்கு அபூதல்ஹா
‘‘ஆம் அப்படித்தான்!” என்று ஆமோதித்தார். உடனே உம்மு ஸுலைம் (ரழி)‘‘அபூதல்ஹாவே! என்ன உமக்கு வெட்கமாக இல்லையா? பூமியிலிருந்து முளைத்த ஒரு மரத்திற்கு ஹபஷி ஒருவன் உருவம் கொடுத்தான். அதைப்போய் வணங்குகிறீரே? அதற்குச் சிரம் பணிகிறீரே?” என்று அறிவுரை கூறினார்.
இதைக் கேட்டு அபூதல்ஹா சற்று சுதாரித்துக் கொண்டு உம்மு ஸுலைம் (ரழி) அவர்களுக்கு ஆசைட்டும் விதமாக
‘‘உம்மு ஸுலைமே! உமக்கு ஓர் உயர்ந்த வாழ்க்கையைத் தருகிறேன் பெரும் மஹரையும் கொடுத்து மணமுடித்துக் கொள்கிறேன்” என்றார். ஆனாலும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள ‘‘இல்லை ஒருக்காலும் நான் உம்மை ஏற்றுக் கொள்ளமாட்டேன்” என்று உறுதியாக மறுத்து விட்டார்.
மேலும் கூறினார்:
‘‘அப10தல்ஹாவே! உம்மைப் போன்ற ஓர் ஆணை யாரும் திரும்ப அனுப்பமாட்டார் ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார் ஆனால நீரோ ஏக இறைவனை நிராகரிக்கக் கூடிய காஃபிராக – நிராகரிப்பாளராக இருக்கிறீர் நானோ ஒரு இஸ்லாமியப் பெண்! உம்மை மணமுடித்துக் கொள்ள எனது மார்க்கத்தில் எனக்கு அனுமதியில்லை. நீர் இஸ்லாமை ஏற்றுää நம்பிக்கை கொண்டால அதையே எனக்குரிய மஹராக ஏற்று நான் உம்மை மணமுடித்துக் கொள்கிறேன் அதைத் தவிர வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று தெளிவாகத் தெரிவித்து விட்டார்கள். (ஸுனனுன் அந்நஸாம்)
திரும்பிச் சென்ற அபூதல்ஹா மீண்டும் இரண்டாவது முறையாக உம்மு ஸுலைமிடம் வந்து முன்பு கூறியதைவிட அதிகமான மஹரைத் தருவதாகக் கூறினார்.
இப்போதும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டார்கள். அவர்களின் வைராக்கியம் (மனஉறுதி) அபூதல்ஹாவின் உள்ளத்தில் உம்மு ஸுலைமின் மீது நேசத்தையும் அன்பையுமே அதிகப்படுத்தியது. உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் மீண்டும் சொன்னார்கள்:
‘‘அபூதல்ஹாவே! ஓர் அற்ப மரத்திலிருந்து அடிமை ஒருவன் செதுக்கியதையே நீர் தெய்வமாக வணங்குகிறீர் அதற்கு தீ மூட்டினால் எரிந்து சாம்பலாகி விடும். இது உமக்குத் தெரியாதா?”
இந்த ஞானமிக்க பேச்சு அபூதல்ஹாவின் உள்ளத்தில் ஆழமாக இறங்கியது. தன் மனதிற்குள்ளேயே
‘‘என்ன… கடவுளை எரிக்க முடியுமா? எரிந்து சாம்பலானால் அது கடவுளாகத்தான் இருக்க முடியுமா?” என்று கேட்டுக் கொண்டார். பின் அதே இடத்தில் தம் நாவை அடக்க முடியாமல ‘‘நான் சாட்சி சொல்கிறேன் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை! இன்னும சாட்சி சொல்கிறேன் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதரும் அடியாரும் ஆவார்கள்” என்று மொழிந்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உடனே உம்மு ஸுலைம் (ரழி) அவர்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் பொங்கின. தம் மகன் அனஸ் (ரழி) அவர்களை நோக்கி ‘‘அனஸே! எழு தயாராகு உனது தாய் உம்மு ஸுலைமை அபூதல்ஹாவுக்கு மணமுடித்து வை!” என்று கூறினார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள சாட்சிகளை வரவழைத்து தமது தாயை அபூதல்ஹா (ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். அந்தத் தருணத்தில் அபூதல்ஹா (ரழி) அவர்கள் அடைந்த ஆனந்தத்தை எப்படித்தான் வருணிக்க!
தமது செல்வம் அனைத்தையும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களிடமே கொட்டி விட்டார்கள். இருப்பினும உம்மு ஸ{லைம் (ரழி) அவர்கள்
‘‘அபூதல்ஹாவே! நான் உங்களை அல்லாஹ்விற்காகவே மணமுடிக்கிறேன் அதைத் தவிர வேறு எந்த மஹரும் எனக்குத் தேவையில்லை” என்பதாகச் சொல்லிவிட்டார்கள்.
அபூதல்ஹா (ரழி) அவர்களை மணமுடித்ததைக் கொண்டு தமக்குப் பொருத்தமான நிகரான ஒருவரைத் துணையாக்கிக் கொண்டோம் என்று மட்டும் உம்மு ஸுலைம் (ரழி) அவர்கள் நினைக்கவில்லை. மாறாக இந்த உலகச் செல்வங்கள் அனைத்தையும் மிகைத்த ஒரு செல்வத்தை நன்மையை அல்லாஹ்விடம் அடைந்து கொண்டோம் என்றே விளங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தி அவர்களுக்குத் தெரியாமலா இருந்திருக்கும்…?
‘‘உங்கள் மூலமாக அல்லாஹு தஆலா ஒருவருக்கு நேர்வழி காட்டுவது உங்களுக்குச் சிவந்த ஒட்டகைகள் கிடைப்பதை விடச் சிறந்தது” என்றல்லவா நபியவர்கள் கூறியிருக்கிறார்கள்!? (ஸஹீஹுல் புகாரி)
இன்றைய முஸ்லிம் பெண்மணிகள் உம்மு ஸுலைம் (ரழி) அவர்களைப் போன்ற பெண்களின் வரலாற்றைப் படித்து படிப்பினை பெற்றுக் கொள்ள வேண்டும். இவர்களையே முன்மாதிகளாக பின்பற்றி வாழ வேண்டும். இவர்களிடம் இருக்கும் தனித்தன்மைகளையும் ஈமானின் (நம்பிக்கையின்) தூய்மையையும் கொள்கை உறுதியையும் கணவரைத் தேர்ந்தெடுப்பதில் அழகிய முறையைக் கையாள்வதையும் கற்றுக் கொள்ள வேண்டும்.
தாருல் ஹுதா
{ 7 comments… read them below or add one }
Nice… and good advice too…
எந்த சமுதாயம் தனது துணைகளை உண்மையான மார்க்க விடயங்களை மதிபிடாமல் உலக விடயங்களை வைத்து தேடிகொள்வர்களோ அப்பொழுது அல்லாஹ்வுடைய சோதனையையும் எதிர்பார்த்து இருக்கட்டும். இறைவனே கலிமா சொன்ன மக்களுக்கு உண்மையான தெளிவை நீயே அவர்களுக்கு கொடுத்து விடுவாயாக….ஆமீன்.
Very nice information. mainly All Young Muslim Girls.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இன்றைய காலத்து பெண்களுக்கு ஏற்ற உபதேசம் வழங்கியதற்கு அகம் நிறைந்த நன்றி!
YA ALLAH, VULAHATHIL VULLA MUSLIM AAN MATRUM MUSLIM PEN ANAIVARAYUM NERVALIYIL SELUTHUVAAYAHA. YENGALUKKU YENTHA THEENGUM VARAAMAL KAAPPAATRUVAYAHA.
Good information,for my situation …………..!
thanks you very much
Assalamu alaikkum. inraya muslim penkalukku miha avasiyamana. upathesaththai thadhthatharkku jasakkallahu haira