ஓதுவோம் வாருங்கள்! -2

Post image for ஓதுவோம் வாருங்கள்! -2

in அனாச்சாரங்கள்,மூடநம்பிக்கை

நமது முன்னோர்கள்

“பெரிய, பெரிய மேதைகள் எல்லாம் செய்திருக்கிறார்களே” என்ற பதில் சரியானதன்று என்பதை நாம் தெரிந்து கொண்டோம். குறிப்பாக நம் தமிழகத்தைப் பொறுத்தவரை, முன்னர் வாழ்ந்த அறிஞர்கள் எனப்படுவோரில் பெரும்பாலோர் அறிஞர்களாக, குர்ஆன் ஹதீஸை அறிந்தவர்களாக இருந்திருக்கவில்லை. மாறாக அரபுத்தமிழ் படித்துவிட்டுத் தங்களை அறிஞர்கள் என்று காட்டிக் கொண்டனர். தெளிவான சிந்தனை அவர்களுக்கு இருந்திருக்கவில்லை. அதனால்தான் “ஆங்கிலம் படிப்பது ஹராம்” என்று ‘பத்வா’ வழங்கினார்கள். முழுக்கால்சட்டை (பேண்ட்) அணிவது கூடாது என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள் முடி வளர்த்திருக்க, நபித்தோழர்களில் மிகப் பெரும்பாலோர் முடி வளர்த்திருக்க, இவர்கள் மொட்டை அடிப்பதை மார்க்கமாக்கினார்கள். பல இளைஞர்கள் நாத்திகத்தை நோக்கிச் செல்வதற்கு இது போன்ற ஆதாரமற்ற தீர்ப்புகளே காரணங்களாயின.

“முஸ்லிம்களில் பலர் கோவில்களுக்குச் செல்லத் துவங்கிவிட்டனர்” என்று காரணம் காட்டி சமாதிகளைக் கோவில்களாக்கினர். “கோவில்களுக்கு முஸ்லிம்கள் செல்வதைத் தடுத்துவிட்டோம்” என்று கூறிக் கொண்டனர். இஸ்லாத்திற்குள்ளேயே பல தெய்வ வணக்கத்தை ஏற்படுத்தியதை அவர்கள் உணரவில்லை.

தேர்த்திருவிழாக்களுக்கு முஸ்லிம்களும் சென்று தேர் இழுக்கத் துவங்கி விட்டதைக் கண்ட அந்த முன்னோர்கள், “நீங்கள் அங்கே செல்ல வேண்டாம்! இங்கேயே நாம் தேர் இழுப்போம்!” என்று தர்ஹாக்களில் தேர்களைப் பவனிவரச் செய்தனர் – அந்தக்காலத்து அறிஞர்கள். (?)

கடவுள் சிலைகளுக்குப் பால் அபிஷேகம் செய்வதைக் கண்டவர்கள், இங்கே சமாதிகளுக்கு சந்தன அபிேஷகம் செய்யத்தூண்டினர்; அங்கே ‘துவஜாரோகனம்’ என்ற பெயரில் கொடியேற்றினால் இங்கேயும் கொடியேற்றம்.

அங்கே கதாகலேட்சேபம், வில்லுப்பாட்டு என்று நடந்து கொண்டிருக்க, இங்கே அதே அமைப்பில் நூறுமஸாலா அப்பாஸ் நாடகம் என்ற பெயர்களில் இஸ்லாத்திற்குச் சம்பந்தம் இல்லாத கட்டுக் கதைகள் அரங்கேற்றினார்கள். இதற்கெல்லாம் காரண கர்த்தாக்கள் இந்த முன்னோர்களே.

சாவு வீட்டில் திதி, திவசம் என்று பணம் பறிக்கும் மோசடியை மூன்றாம், ஏழாம், நாற்பதாம் பாத்திஹா என்ற பெயரில் இங்கே உருவாக்கினர். தங்கள் தொப்பையை அதன்மூலம் வளர்த்துக் கொண்டனர்.

திருனீறு, விபூதி என்று அங்கே வழங்கப்பட்டால், இங்கே அதே பக்தி சிரத்தையுடன், காய்ந்து போன பூக்களையும் சாம்பிராணிச் சாம்பலையும் ‘தப்ரூக்’ என்ற பெயரில் வழங்கத் துவங்கினர், அன்றைக்கு அறிஞர்கள் என்று பெயர் வாங்கியவர்கள்.

அங்கே இறந்து போனவர்களுக்காகப் பலவிதமான உணவு பொருட்களை வைத்துப் படையல் செய்யப்படுவதற்கு ஈடாக இங்கே பாத்திஹா என்ற பெயரில், படையலை உண்டாக்கியவர்களும் அன்றைய அறிஞர்களே!(?)

அவர்கள் தெய்வங்களுக்குப் பூ, பழம், தேங்காய், சூடம் என்று காணிக்கை செலுத்தப்படுவதற்குப் பதிலாக இங்கே சர்க்கரை ஊதுபத்தி என்று ஏற்படுத்தினார்கள். அங்கேயும் உண்டியல் இங்கேயும் உண்டியல்!

தாயத்துக் கட்டுவதையும், தகடுகள் எழுதுவதையும், நூல் முடிவதையும் அங்கிருந்து கற்றுக் கொண்டனர். பெயர் சூட்டுவதும் திருமணம் நடத்துவது, மரணச் சடங்குகள் நடத்துதல், கட்டிடங்களுக்கு அஸ்திவாரம் இடுதல், நிலை வைத்தல், புதுமனை புகுவிழா மற்றும் பெண்கள் பருவம் எய்துதல், வெளியூர்ப் பயணம் செல்லல் போன்றவற்றுக்குச் சில சடங்குகளை உருவாக்கி, “புரோகிதர்கள் இல்லாமல் அவற்றைச் செய்ய முடியாது” என்று அங்கே உள்ளது போல் இங்கேயும் புரோகிதர்களாகத் தங்களை மாற்றிக் கொண்டவர்களும் இந்த அறிஞர்களே.

இப்படி எல்லாம் தங்கள் மார்க்கத்தைப் புரோகிதர்களிடமிருந்து கற்றுக் கொண்டு அதனை இஸ்லாம் என்ற ‘லேபிளி’ல் பரவச் செய்தனர். குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் இவர்கள் தங்கள் மார்க்கத்தைக் கற்றிருக்கவில்லை.

அதனால் தான், சில பைத்தியக்காரர்களைக் கூட ‘மஸ்தான்கள்’ என்று பட்டம் சூட்டி மக்கள் வழி தவறும்போது மவுனம் சாதித்தனர். அங்கே தீட்சை வழங்குவது போல், இங்கே முரீது வியாபாரத்தைச் சிலர் துவக்கியபோது, மவுன விரதத்தை மேற்கொண்டனர். எத்தனையோ கிஸ்ஸாக்கள் இஸ்லாத்தின் பெயரால் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது அதற்கு எதிராக, வாய் திறவாமல் இருந்தனர். அவ்லியாக்களின் வாரிசுகள் என்று, கஞ்சா அடித்துக் கொண்டு பக்கிரிசாக்கள் ஊர்ஊராக வலம் வந்து மக்களை ஏமாற்றியபோதும் அதைப் பற்றி வாய் திறந்ததில்லை இவர்கள்.

தமிழ் மக்கள் இஸ்லாத்தை முழுமையாகத் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, குர்ஆனையும் நபிமொழிகளையும் தமிழில் தராமல் மறைத்ததும் நமது முன் அறிஞர்களே.

ஆண்களும், பெண்களும் கலந்து, ஒட்டி உரசிக் கொள்ளும் சந்தனக்கூடு நிகழ்ச்சிக்குத் தன் மனைவி மக்களை அழைத்துச் சென்ற மிகப் பெரிய அரபிக் கல்லூரி முதல்வர்களும் இருந்திருக்கிறார்கள். கந்தூரியன்று நடக்கும் பல தீமைகளில் தாமும் இரண்டறக் கலந்து கொண்ட மிகப்பெரும் (?) அறிஞர்களும் இருந்திருக்கின்றனர். அவர்களை இன்றைக்குக்கூட “பெரிய ஹஜ்ரத்” என்ற லேபிளில் தான் மக்கள் குறிப்பிடவும் செய்கின்றனர்.

கப்ருக்களுக்குக் கட்டிடம் கட்டும் விழாவுக்கும் அதன் திறப்பு விழாவுக்கும் தலைமை தாங்கிய ஆலிம்களும் இருந்திருக்கின்றனர்; இருக்கின்றனர். தங்கள் வயிறு நிறைவதற்காக எது செய்யவும் தயாராக இருந்தவர்கள் கடந்த காலத்தில் அறிஞர்கள் என்ற பெயரில் உலா வந்தவர்களில் பெரும்பாலோர்.

இத்தகையவர்களைப் பின்பற்றினால் எப்படி நேர்வழி அடைய முடியும்? எனது சொந்த ஊரில் நடந்ததாகப் பெருமையோடு மக்கள் பேசிக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியை இங்கே நினைவுபடுத்துகிறேன். பள்ளிவாசலும் ஒரு சமாதியும் அருகருகே இருக்கின்றன. சமாதியில் ஒரு கந்தூரி விழா! அதில் மவ்லிது நடந்ததாம். அதில் ஒரு அவ்லியா கலந்து கொண்டாராம். மாலை நான்கு மணிக்குத் துவங்கிய மவ்லிது இரவு ஒன்பது மணிக்கு முடிந்ததாம். அதுவரை அந்த அவுலியா மவ்லிதில் லயித்திருந்தாராம். இடையில் எழுந்திருக்கவே இல்லையாம். இதைப் பெருமையாக எனது ஊர் மக்கள் இன்றளவும் பேசுகின்றனர். அருகே இருக்கின்ற பள்ளியில் அஸர் தொழுகை நடக்கின்றது! அவுலியா வரவில்லை; பின்னர் மஃரிபு தொழுகை நடக்கின்றது! அவுலியா வரவில்லை; இஷாஜமாஅத் நடக்கிறது! அவுலியா அதில் கலந்து கொள்ளவில்லை. அவர் மவ்லிதில் லயித்துப் போய் இருக்கிறார். இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களைத்தான் நாம் மகான்கள், மேதைகள் என்று ஏமாந்து போய்க் கொண்டிருக்கிறோம். தொழுகையை விட, ஒருவன் மனதைப் பாடல்கள் கவருமானால் அவன் எப்படி இறை நேசனாக இருக்க முடியும்?

நான் எல்லா ஆலிம்களையும், ஒட்டு மொத்தமாக குற்றம் சாட்டவில்லை. மிகப் பெரும்பாலோர் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். தங்கள் வருவாய் ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு மார்க்கத்தைச் சீரழித்த இந்த முன்னோர்களைப் பின்பற்றுவதால் எப்படி நேர்வழி அடைய முடியும்? எண்ணிப் பாருங்கள்.

அவர்கள் நரகவாதிகளா?
சதகத்துல்லா அப்பா போன்ற ஞான மேதைகள் தானே இதனை இயற்றினார்கள். அவர்கள் நரகவாதிகளா என்ற ஒரு கேள்வியும் இங்கே கிளம்புகிறது. ஒரு மனிதர் இறந்து போய்விட்டால், அவர் பெயரால் சில மோசடிக்காரர்கள் கதைகளைச் கட்டிவிடுவார்கள். அப்போதுதான் அவர்கள் வியாபாரம் நடக்கும் நல்லவர்கள் இதனைச் செய்திருக்கமாட்டார்கள்.

அப்படியே செய்திருந்தாலும் அவர்கள் நரகவாதிகளா? சொர்க்கவாதியா, என்று நாம் முடிவு எடுக்க வேண்டிய அவசியமில்லை. அவன் நாடினால் மன்னிக்கலாம்! அல்லது தண்டிக்கலாம்! “நாம் நரகவாதியாக ஆகாமல் இருக்க என்ன சேய்ய வேண்டும்” என்பதைத் தான் நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:-

அந்த சமூகத்தினர் சென்று விட்டனர். அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே! நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தததைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள். -அல்குர்ஆன் 2:134,141.

இந்தத் திருவசனத்திலிருந்து “முன்னோர்களில் தனிப்பட்ட நபர்களைப் பற்றி நாம் எந்த முடிவும் எடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று இறைவன் உணர்த்துகிறான்.

நமது காரியங்கள் குர்ஆன், ஹதீஸ் வழியில் அமைத்துக் கொண்டு செல்ல வேண்டியது தான் நமது கடமை. முன்னோர்கள் நல்லவைகளைச் செய்திருந்தால் அதற்கான பரிசுகள் நமக்குக் கிடைக்கப் போவதில்லை; அவர்கள் தீமையைச் செய்திருந்தால் அதற்கான தண்டனைகளையும் நாம் அனுபவிக்கப் போவதில்லை. நமது செயல்களை நாம் திருத்திக் கொள்வோம். இதுவரை நாம் எழுதியவற்றிலிருந்து , “முன்னோர்” என்ற மாயை தவறானது என்று புரிந்து கொண்டோம்.

மார்க்கப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள். அதனை நியாயப்படுத்துபவர்கள் இந்த உலகப் பிரச்சனைகளில் முன்னோர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை, ஆயிரம் முறை பரிசீலனை செய்து “தங்களுக்கு நல்லது” என்று தெரிந்தால் மட்டுமே, உலக பிரச்சனைனனனகளில் முன்னோர்களைப் பின்பற்றுகின்றார்கள்.

‘முன்னோர்கள் கால்நடையாகப் பல நூறு மைல்கள் பயணம் செய்தார்கள்’ என்பதற்காக எவரும் இன்று அவ்வாறு பயணம் செய்யத் தயாராக இல்லை. அன்று மண்ணென்ணெய் விளக்குகளைப் பயன்படுத்தினார்கள் என்பதற்காக, இன்று எவரும் மின் விளக்குகளைப் பயன் படுத்தாமலில்லை. முன்னோர் மண் குடிசையில் வாழ்ந்தார்கள் என்பதற்காக, இன்று எவரும் உறுதிவாய்ந்த கட்டிடங்களைக் கட்டிக் கொள்ளாமலில்லை.

‘பெரியார்கள் சொன்னார்கள்’ என்பதற்காக மார்க்கப் பிரச்சனைகளில் அவர்களைக் கண்மூடிப் பின்பற்றத் தயாராக இருப்பவர்கள், உலகப் பிரச்சனைகளில் பெரியார்களைக் மூடிப் பின்பற்றத் தயாராக இல்லை. மாறாக, பலமுறை பரிசீலனை செய்து தங்களுக்குப் பயன் தந்தால் மட்டுமே பெரியார்களைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். ‘நம்மிடம் இருக்கின்ற மதிப்பு மிக்க ஒரு பொருளைக் சாக்கடையில் எறியும்படி, ஒரு பெரியார் சொன்னால் நாம் அதனை நிறைவேற்ற முன் வருவதில்லை. ஆனால் மார்க்க பிரச்சனைகளில் மட்டும் அவ்வாறு பரிசீலனை செய்ய நம்மில் பெரும்பாலோர் தயாராக இல்லை. இந்த முரண்பாட்டுக்குக் காரணம் என்ன? என்ன?

இந்த உலகப் பொருட்கள், அவைகளால் ஏற்படும் பயன்களைப் புரிந்து வைத்துள்ள அளவு, அவற்றின் மதிப்பை நாம் உணர்ந்து வைத்துள்ள அளவு மறு உலகப் பொருட்களின் மதிப்பையோ, நமது வணக்கத்தின் மதிப்பையோ நம்மவர்கள் உணர்ந்திருக்கவில்லை என்பது தான் இதற்குக் காரணமாகும்.

“மவ்லிது ஓதலாம், ஓத வேண்டும்” என்று கூறுபுவர்களின் முதல் ஆதாரமான முன்னோர்கள் மீது வைத்துள்ள குருட்டு நம்பிக்கை குர்ஆனின் தெளிவான வசனங்களால் தகர்த்தெறியப்பட்ட பின்பும் தங்கள் மனோ இச்சையை சிலர் விடுவதற்குத் தயாராக இல்லை. மாறாக அதை எப்படியேனும் நியாயப்படுத்திட பொருத்தமற்ற காரணங்களைக் கூறுகின்றனர்.

முன்னோர்களைக் கண்மூடித் தனமாகப் பின்பற்றுவதைக் கண்டிக்கும் குர்ஆன் வசனங்கள் தங்களுக்குப் பொருந்தாது. அவை காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்கள். “காபிர்களைப் பற்றி இறங்கிய வசனங்களை, எங்களைப் போன்ற மூமின்களுக்குப் பயன்படுத்தலாமா?” என்றும் கேட்கின்றனர். இந்தக் கேள்வி எவ்வளவு தவறானது? என்பதையும், அவர்களின் கேள்வியிலேயே அவர்களுக்கு பதிலும் அமைந்துள்ளது என்பதையும் பார்ப்போம்.

“அல்லாஹ் இறக்கியருளியவற்றின் பாலும் (அவன்) தூதரின் பாலும் வாருங்கள்!” என்று அவர்களுக்குச் சொல்லப்படும் போது, எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 5: 104)

“குர்ஆனையும், நபிவழியையும் பின்பற்றுங்கள்!” என்று சொல்லப்பட்ட போது “எங்கள் முன்னோர்களையே நாங்கள் பின்பற்றுவோம்” என்று காபிர்கள் சொன்னார்கள். அதில் சந்தேகமில்லை. இதுபோன்ற வசனங்கள் காபிர்கள் பற்றியே இறங்கியது என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் இப்படிச் சொன்னதால் தான் காபிர்கள் என்ற பெயரைப் பெற்றோர்களேயன்றி, காபிராகவே பிறக்கவில்லை. முஸ்லிம், காபிர் என்ற பேதம் பிறப்பால் உருவாவது அல்லவே! எந்த வாதத்தை எடுத்து வைத்ததினால் ஒரு சமுதாய மக்கள் காபிர்களானவர்களோ – அவர்கள் காபிர்களாக ஆனதற்கு எது காரணமாக இருந்ததோ -அதை முஸ்லிம்கள் (என்ற தம்மைச் சொல்லிக் கொள்பவர்கள்) எப்படி எடுத்து வைக்க முடியும்?

“ஒரு கருத்தை ஒரு சமுதாயம் சொன்னால் அது மாபாதகமாம்! அதே கருத்தை இன்னொரு சமுதாயம் சொன்னால் அதில் தவறு ஏதும் கிடையாதாம்!” இது எந்த வகையில் நியாயமாகும்? இறைவனின் தீாப்பு இந்த அடிப்படையில் தான் இருக்கும் என்று எண்ணுகிறார்களா?

முஸ்லிம்கள் என்றால் நபிமார்களும், அவர் தம் தோழர்களும் எந்த வாதங்களை எடுத்து வைத்தார்களோ அவற்றை மட்டும் எடுத்து வைக்க வேண்டும்! பிர்அவ்னும். நம்ரூதும், அபூஜஹ்லும் நபிமார்களின் எதிரிகளும் எடுத்து வைத்த வாதத்தை ஒரு முஸ்லிம் எப்படி எடுத்து வைப்பான்?

“நான் தான் உங்களின் மிகப் பெரும் கடவுள்” என்று பிர்அவ்ன் சொன்னான். அது குற்றம். “நாங்கள் முஸ்லிம்களாக இருப்பதால் நாங்கள் இதே வார்த்தையைப் பயன்படுத்துவோம். இது குற்றமாகாது” என்று இவர்கள் சொல்லப் போகிறார்களா?

“வேதங்களில் சிலவற்றை நாங்கள் நம்புவோம்! சிலவற்றை நிராகரிப்போம்!” என்று யூதர்கள் தான் சொல்லக் கூடாது! நாங்கள் இதே வார்த்தையைச் சொல்லலாம் என்று எண்ணுகிறார்களா?

ஈஸாவை அல்லாஹ்வின் குமாரர் என்று கிறிஸ்தவர்கள் சொன்னால் தான் தவறு. நாங்கள் முஸ்லிம்களாக உள்ளதால், அப்படிச் சொல்ல எங்களுக்கு அனுமதி உண்டு” என்று கருதுகிறார்களா?

“நாங்கள் அல்லாஹ்வின் குமாரர்கள்” என்று மக்கத்து காபிர்கள் சொன்னார்கள். அது தவறு. நாங்கள் தான் முஸ்லிம்களாயிற்றே! இதே வார்த்தையை நாங்கள் சொல்லலாம் என்று கூறப்போகிறார்களா? அப்படியானால் முஸ்லிம், காபிர், என்ற வேறுபாடு பிறப்பை அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் காட்ட முற்படுகிறார்கள். முஸ்லிம் குடும்பத்தில் ஒருவன் பிறந்து விட்டால் அவன் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லலாம்! அவன் காபிர் குடும்பத்தில் பிறந்து விட்டால் அவன் இப்படிச் சொல்லக் கூடாது என்று அவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள். நபிமார்களில் சிலரின் மக்கள் ஏன் காபிரானார்கள்? என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கட்டும்! இது போன்ற வாதங்களில் கடுகளவும் நியாயமே இல்லை. சிந்தனை உடையவர்களிடம் இது அறவே எடுபடக் கூடியதுமல்ல.

திருமறைக் குர்ஆனில், காபிர்கள், யூதர்கள், கிறித்துவர்கள் சில தனி நபர்களின் தவறான வாதங்களை அல்லாஹ் எடுத்துச் சொல்லியிருப்பது “நாம் அதனைச் சொல்லக் கூடாது” என்பதை உணர்த்திடத்தான். அறிவுடையோர் அப்படித்தான் புரிந்து கொள்வார்கள். ஏனென்றால் இந்தக் குர்ஆன் கியாமத் நாள் வரை மக்களுக்கு வழி காட்டக் கூடிய வகையில் அருளப்பட்டது. ஒரு காலத்தோடு அதன் போதனை, எச்சரிக்கை முடிந்து விடவில்லை.

ஒரு வாதத்திற்காக அவர்களின் இந்தத் தவறான கூற்றை ஏற்றுக் கொண்டால், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற இன்னபிற கடமைகள். கட்டளைகள் எல்லாம் ஸஹாபாக்களுக்கு இறங்கியது நமக்கு அல்ல. என்றும் கூற வேண்டி வருமே! (அல்லாஹ் காப்பாற்றுவானாக)

எனவே இது போன்ற பொருந்தாக் காரணங்களைக் கூறி தங்கள் நிலைமையை நியாயப் படுத்துவதைத் தவிர்த்து குர்ஆன், ஹதீஸ் கட்டளைகளுக்கு நாம் கட்டுப்பட்டாக வேண்டும். அல்லாஹ் அந்த மனப்பான்மையை நமக்குத் தந்தருள்வானாக!

இதுவரை மவ்லிது ஆதரவாளர்களின் முதல் ஆதாரத்தை அலசினோம். இனி அவர்களின் இரண்டாம் ஆதாரத்தைப் பார்ப்போம். -வளரும்- இன்ஷா அல்லாஹ்

இரண்டாவது ஆதாரம்
கவிதைக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. மவ்லிது என்பது கவிதையாக உள்ளதால் அதை ஓதக் கூடாது என்று மவ்லிது மறுப்பாளர்கள் கூறவில்லை. மாறாக வேறு பல காரணங்களின் அடிப்படையில் தான் அதை மறுக்கின்றனர்.

ஆனால் மவ்லிது ஆதரவாளாகள், மக்களை திசை திருப்பும் எண்ணத்தில் இஸ்லாம் சில கவிதைகளுக்கு வழங்கியுள்ள அனுமதியை அதற்குரிய ஆதாரங்களை எடுத்து வைத்து, நபி(ஸல்) அவர்களே கவிதையை அங்கீகரித்துள்ளனர்” என்பதால் தாராளமாக மவ்லிது ஓதலாம் என்கின்றனர்.

“கவிதை” என்ற காரணத்துக்காக மவ்லிதை நாம் மறுக்கவில்லை. வேறு பல காரணங்களுக்காகவே மவ்லிது மறுக்கப்படுகின்றது. மறுப்பத்குரிய காரணங்கள் இருக்குமானால், வசனமாக இருந்தாலும் நாம் மறுப்போம். எனவே கவிதைக்கு இஸ்லாம் வழங்கியுள்ள அனுமதியை, இன்றைய மவ்லூதுகளை நியாயப்படுத்துவதற்கு பயன்படுத்துவது பொருந்தாததாகும்.

அதை விரிவாகப் பார்ப்பதற்கு முன், கவிதை பற்றி இஸ்லாத்தின் நிலையைத் தெரிந்து கொள்வது பிரச்சனையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள உதவும்.

கவிதையும், கவிஞர்களும்
கவிஞர்களை வழி கெட்டவர்கள் தான் பின்பற்றுகின்றார்கள். “நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு திடலிலும் தட்டழிந்து திரிகின்றனர்”. என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் செய்யாத காரியங்களை (செய்ததாக) கூறுகின்றனர். (அல்குர்ஆன் 26 : 224, 225, 226)

இந்தத் திருக்குர்ஆன் வசனம் “கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் இல்லை, அவர்கள் பொய்கள் பல கூறுபவர்கள்” என்று நமக்குத் தெளிவு படுத்துகின்றது.

“உள்ளங்களில் ஒருவனின் உள்ளத்தில் கவிதை நிரம்பியிருப்பதை விட, அவனது உள்ளத்தில் ‘சீழ்’ நிரம்பி இருப்பது மேலானது” என்பது நபிமொழி

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) நூல்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூது, நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா, தாரமீ

நபி(ஸல்) அவர்களுடன் ‘அர்ஜ்’ என்ற ஊருக்கு நாங்கள் சென்று கொண்டிருந்த போது, கவிதை இயற்றிக் கொண்டு ஒரு கவிஞர் தென்பட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள், “இந்த ஷைத்தானைப் பிடியுங்கள்! உங்களில் ஒருவரது உள்ளம் கவிதையால் நிரம்பி இருப்பதை விட ‘சீழ்’ நிரம்பி இருப்பது மேலானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயிதுல் குத்ரீ (ரழி) நூல் : முஸ்லிம்

மேற்கூறிய திருக்குர்ஆன் வசனமும், இரு நபி மொழிகளும், கவிஞர்களையும், கவிதைகளையும் கடுமையாகக் கண்டனம் செய்கின்றன. இதிலிருந்து கவிதையை இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை என்று தெரிகின்றது. எனினும் இந்தக் கண்டனம் எல்லாக் கவிஞர்களுக்கும், எல்லாக் கவிதைகளுக்கும் பொருந்தாது. அதற்குரிய ஆதாரங்களைப் அடுத்து பார்ப்போம்.
(வளரும்)

இப்னு மர்யம்

Comments on this entry are closed.

Previous post:

Next post: