மதவாதமா? இனவாதமா?

in சமூகம்,பகுத்தறிவுவாதம்

தொன்று தொட்டு இன்றுவரை மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாய் சிந்தப்பட்டுள்ளது. மதம் பிடித்த மனிதன்தான் மனிதனை கொல்கின்றான். இன்று உலகில் காணப்படும் அமைதியின்மைக்கு மதங்கள்தான் காரணம் மதங்கள் அழிந்தால்தான் மதங்களை ஒழித்தால்தான் மனித இனம் அமைதி பெறும் என்றெல்லாம் நாத்திகர்கள் ஓயாமல் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். இன்று உலகில் நடைபெறும் சம்பவங்ளை பார்க்கும்பொழுது இதில் உண்மையிருக்குமோ என்று மக்களுக்கும் சந்தேகம் ஏற்படுகின்றது. மதத்தின் பெயரால் இன்று மக்கள் மத்தியில் வெறுப்பு ஏற்படுவதற்கு இந்த சந்தேகங்களும் ஒரு காரணமாகும்.

    மதங்கள் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கை வரவேண்டும் என்றால் முதலில் மதவாதிகள் தங்களுக்குள் சண்டை போடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். ‘மத்ஹப் நஹீன் சிகாதா ஆபஸ் மே பேர் ரக்னா’ என்று அல்லாமா இக்பால் கவிதை பாடினார். எந்த மதமும் தங்களுக்குள் பேதங்களைப் பாராட்ட சண்டையிட்டுக்கொள்ள கற்றுத்தரவில்லை. என்பது இதன் அர்த்தமாகும். பிறகு மதங்களின் பெயரால் இந்தச் சண்டை ஏன்? இந்தக் கேள்விக்கு நாம் விருப்பு வெறுப்பின்றி ஆராய்வோம்.

    மதத்தின் பெயரால் தான் மனித இரத்தம் அதிகமாக சிந்தப்படுகின்றது என்ற நாத்திகர்களின் வாதம் பொய்யானது. அடிப்படை இல்லாதது.

    உலகில் நடைபெற்ற மிகப்பெரிய யுத்தங்களான கருதப்படுவது முதலாவது உலக யுத்தமும், இரண்டாவது மகா உலக யுத்தமும்தான். இந்த யுத்தங்கள் ஈவு இறக்கமில்லாமல் லட்சக்கணக்கான மனித உயிர்களை அநியாயமாக பலிவாங்கின. இந்த யுத்தங்கள் மதத்தின் பெயரால் நடத்தப்பெற்ற யுத்தங்கள் அல்ல. இனத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடத்தப்பட்ட யுத்தங்களாகும். இந்தியாவை எடுத்துக்கொண்டால் மகாபாரத யுத்தம் போல் இதுவரை ஒரு யுத்தம் நடந்ததில்லை. இதுவும் மதத்தின் பெயரால் நடந்த யுத்தம் அல்ல. ஆதிக்க வெறியால் நடபெற்ற யுத்தமாகும். அடுத்து இலங்கை என்ற நாட்டையே இராமர் எரித்து சாம்பலாக்கிய மகாயுத்தம், இதில் மோதிய இராமரும் இராவணரும் இருவரும் இந்துக்கள்தான். இதுவும் மதத்தின் பெயரால் நடந்த யுத்தமல்ல. பெண்ணுக்காகவும், மண்ணுக்காகவும் நடத்தப்பட்ட யுத்தம். இவையெல்லாம் புராண இதிகாசகால யுத்தங்கள்.

    வரலாற்று ரீதியாக பார்ப்போமானால் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய யுத்தம் கலிங்கத்துப் பரணியில் சாம்ராட் அசோகன் நடத்திய யுத்தம். இதுவும் மத்ததின் பெயரால் நடந்த யுத்தம் அல்ல. நாடு பிடிக்கும் ஆசையில் நடந்த யுத்தங்களாகும். சந்திரகுப்தன், அலெக்சாண்டர், நெப்போலியன் போன்றோர் நடத்திய யுத்தங்களும் நாடு பிடிக்கும் யுத்தங்களே. அன்மையில் நடைபெற்ற யுத்தமான வளைகுடாப் போர் கூட நாடு பிடிக்கும் யுத்தமே.

    இன்று உலகில் வல்லரசுகள் மோதுவது மதத்தின் பெயரால் அல்ல. ஆதிக்கத்தின் பெயரால்தான் மோதுகின்றன. ரஷ்யாவில் நடைபெற்ற புரட்சி மதத்தின் பெயரால் நடைபெற்றதல்ல. அது வர்க்கப் போராட்டம். இதில் பத்து லட்சத்திற்கும் மேலாக மக்கள் மடிந்தார்கள். ஆப்ரிக்கா கண்டத்திலும், அமெரிக்க கண்டத்திலும் நடைபெறுவது வெள்ளையன் கருப்பன் என்ற இனப்போராட்டம். நம் நாட்டிலும் மேல்ஜாதி, கீழ்ஜாதி என இனத்தின் பெயரால்தான் மனிதனின் இரத்தம் சிந்தப்பட்டுள்ளது. தங்களை பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள் என்று தமிழகத்தில் வலம்வரும் இவர்கள் நடத்தும் போராட்டங்களும் இனப்போராட்டங்களே. இலங்கையில் நடபெற்று வரும் இரத்தக் களரிக்குக் காரணம் இன வெறியே தவிர மதவெறி அல்ல.

     இனம், மொழி, நாடு, வர்க்க நலன் என்ற எண்ணங்கள் தலை தூக்கும் பொழுதெல்லாம் உலகில் மனித இரத்தம் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகின்றது. உலகில் சாந்தியும் சமாதானமும் இல்லாமல் போனதற்கு இப்படிப்பட்ட வாதங்கள்தான் காரணமாகும். வகுப்பு வாதம் வளருவதற்கு இவைகள்தான் துணைபோகின்றன. இப்படிப்பட்ட வகுப்பு வாதங்களுக்கு சாவு மணி அடிக்க இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கம் ஒன்றே வழி. அது ஒன்றுதான் இனவாதத்திற்கும், வகுப்பு வாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றது. எந்த மார்க்கம் வகுப்பு வாதத்திற்கு எதிராக இருக்கின்றதோ, அந்த மார்க்கத்தவர்களை வகுப்பு வாதிகள் என்ற பட்டம் சூட்டி இந்த திருடர்கள் தப்பிக்கப் பார்க்கின்றனர்.

    மதத்தின் பெயரால் சண்டைகளே நடக்க வில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். நடக்கின்றன. ஆனால் இனத்தின் பெயரால், ஆதிக்கத்தின் பெயரால், மண்ணின் பெயரால் நடைபெறும் சண்டைகளுக்கு முன்னால் இந்த சண்டைகள் ஒன்றும் அவ்வளவு பெரிய சண்டைகள் அல்ல. உதாரணத்திற்கு சொல்கின்றேன்: இஸ்லாத்தை நிலைநாட்ட நபி(ஸல்) அவர்களும் சில யுத்தங்களில் கலந்து கொண்டார்கள். இதைப் பற்றி பேராசிரியர் K.S.ராமாகிரிஷ்ணராவ் எழுதிய “இஸ்லாமிய மார்க்கத்தின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்)” என்ற தலைப்பில் எழுதிய நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

    இறைத்தூதர் யுத்த களத்தின் அணுகுமுறையை முழுக்க மாற்றினார். அரேபிய தீபகற்பம் முழுக்க அவர் ஆளுகையின் கீழ் வந்தபோது, அவர் வாழ்நாளில் ஏற்பட்ட எல்லா போர்களிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு சில நூறுகளை தாண்டவேயில்லை. அவர் அரேபியாவின் காட்டுமிராண்டிகளுக்கு தொழக்கற்றுக் கொடுத்தார். தனியாகவல்ல; யுத்தத்தின் ஆரவாரங்களுக்கு நடுவேயும், கூட்டமாகத் தொழக் கற்றுத் தந்தார். எப்பொழுதெல்லாம் தொழுகை நேரம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் தொழுகையை கைவிடக்கூடாது; ஏன் ஒத்திப் போடக்கூடாது என்று அவர் போதித்தார். படைகளில் ஒரு பிரிவினர் தொழுது கொண்டிருக்கும் பொழுது மற்றொரு பிரிவினர் போரிட்டுக் கொண்டிருப்பார்கள். ஒரு பிரிவினர் தொழுகையை முடித்த பிறகு போர் செய்ய செல்வார்கள். காட்டுமிராண்டித்தனம் நிலவிய காலத்தில் யுத்தங்களே மனிதத் தன்மை உடையதாக ஆக்கப்பட்டது. கொள்ளையடித்தல், ஏமாற்றுதல், வாக்கு முறித்தலுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் வெளியிடப்பட்டன. குழந்தைகள், பெண்கள், வயதான ஆண்களை காயப்படுத்தக்கூடாது; கொல்லக்கூடாது என்று கட்ட்ளைகள் வெளியிடப்பட்டன. பேரிச்ச மரத்தை, பல மரங்களை வெட்டக்கூடாது என்றும், மத குருமார்களை அவமானப்படுத்தக் கூடாது என்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

    மெக்காவை அவர் கைப்பற்றியபோது அவரது அதிகாரம் உச்சகட்டத்தில் இருந்தது. எந்த நகரம் அவரது போதனைகளை கேட்க மறுத்ததோ, எந்த நகரம் அவரையும் அவரை பின்பற்றுவோரையும் பெரும் சித்திரவதை செய்ததோ, எந்த நகரம் அவரையும் அவரது ஆதரவாளர்களையும் துரத்தி அடித்ததோ, 200 மைல்களுக்கு அப்பால் ஒரு இடத்தில் அடைக்கலம் புகுந்திருந்த நிலையிலும் இடையறாத பகையில் தாக்குதல்களை தொடுத்ததோ, அந்த நகரம் இப்பொழுது அவரது காலடியில் கிடந்தது. தன்மீதும் தன்னை பின்பற்றுவோர் மீதும் இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக யுத்த விதிகளின்படி அவர் பழி தீர்துக்கொண்டிருக்கலாம். ஆனால் அவர் என்ன செய்தார்? முஹம்மதுவின் இதயத்திலிருந்து அன்பும் இரக்கமும் பெருக அவர் “உங்கள் மீது எந்தப் பழிவாங்கும் நடவடிக்கையும் இல்லை” என்று கூறினார்.

    தற்காப்புக்காக மனித உள்ளங்களை ஒன்று படுத்த யுத்தத்தை அவர் ஏன் அனுமதித்தார் என்பதற்கான முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நோக்கம் நிறைவேறிய பொழுது அவர் தன்னுடைய மோசமான எதிரிகளைக்கூட மன்னித்துவிட்டார். தன்னுடைய சிறிய தந்தையார் ஹம்ஸாவை கொன்றவர்கள் அவரது உயிரற்ற உடலை கீறி ஈரலை வெளியே எடுத்து கடித்த மிகவும் கொடூரமான எதிரிகளைக் கூட அவர் மன்னித்துவிட்டார்.

    உலகம் தழுவிய சகோதரத்துவம், மனித குலத்தின் சமத்துவம், போதித்த கொள்கைகள் மனித இனத்தை மேம்படுத்த அவர் தந்த போதனைகளில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. எல்லா பெரிய மதங்களும் அந்தக் கொள்கைகளை போதித்துள்ளன. ஆனால் இறைத்தூதர் முஹம்மது மட்டும்தான் அந்தக் கொள்கைகளை உண்மையில் நடைமுறைப் படுத்தியவர் ஆவார். அதன் மதிப்பு எதிர்காலத்தில் சர்வதேச உள்ளுணர்வு முழுக்க விழித்தெழும் வேளையில் முழுமையாக உணரப்படும். இன வேற்றுமைகள் மறையும். வலிமை வாய்ந்த உலக சகோதரத்துவக் கொள்கை நிலை பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இன்று உலகில் நடைபெறும் மதச்சண்டைகளுக்கு அந்த மதங்களல்ல காரணம். இனவெறி பிடித்த ஆதிக்க சக்திகள். தங்கள் சக்திகளை மறைக்க விலை போகும் சில மதவாதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துகிறார்கள். தங்கள் தில்லுமுல்லு, சூழ்ச்சிகளை மறைக்க மதங்கள் மீது பழிபோடுகின்றனர். சிலுவை யுத்தங்களுக்கு காரணம் கிறிஸ்துவ பாதிரிமார்கள். பாலஸ்தீன யுத்தங்களுக்கு காரணம் யூதகுருமார்கள். ஆப்கானிஸ்தான் நிலைமைக்கு காரணம் சில சுயநலமிக்க முல்லாக்கள். பாபர் பள்ளிவாசல் தகர்க்கப்பட்டதற்கும், அதன் பின் நடந்த கலவரங்களுக்கும் சில சாதுகளும், சன்னியாசிகளும்தான் காரணம். முஸ்லிம்களிடையே நடைபெறும் சுன்னத் ஜமாஅத், ஷியா கலவரங்களுக்கு சில முஸ்லிம் முல்லாக்களே காரணம். ஆக இந்த சண்டைகளுக்கும் சச்சரவுகளுக்கும் காரணம் இந்த மதங்களை தங்கள் கைக்குள் வைத்து ஆட்டி படைக்கும் மதக்குருக்கள்தான் காரணம். இவர்களை ஓரங்கட்டினால், தனிமைப்படுத்தினால் இந்த சண்டைகள் தானாக நிற்கும்.

    மதங்கள் வேண்டும். மதங்கள் தான் மனிதனை மேன்மைப்படுத்தும். மதங்கள்தான் உலகில் அமைதியை கொண்டுவரும். ஆனால் குருக்கள், சன்னிதானங்களை தலையில் தூக்கி ஆடுவோமேயானால் அமிர்தமும் விஷமாகிவிடும். உலக பிரச்னைக்கு ஒரே தீர்வு மதங்களை தூய்மைப்படுத்துவது, புரோகிதரர்களின் கைகளிலிருந்து மதங்களை விடுவிப்பது. இதை விடுத்து மதங்களை குற்றம் சொல்வதில் பயனில்லை. உலக அமைதிக்கு ஒரே வழி. ஒன்று இன வெறி, ஜாதி வெறி, மொழி வெறி, ஆதிக்க வெறி, வகுப்பு வெறி இவை அனைத்தும் களையப்படவேண்டும். மதங்களிலிருந்து புரோகிதரர்களைக் களையெடுக்க வேண்டும். இதைத் தவிர வேறு வழியில்லை.

M.P.ரபீக் அஹ்மத்

Leave a Comment

Previous post:

Next post: