உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!

Post image for உண்ணுவதன், பருகுவதன் ஒழுங்கு முறைகள்!

in நபிமொழி

அல்லாஹ் கூறுகின்றான்:

“(நம்   தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) “தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள்   உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான்   நன்கு அறிபவன்’ (23:51)

‘அல்லாஹ்   அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு   திரியாதீர்கள்” (2;60)

ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூற   மறந்துவிட்டால்!

بسمِ اللهِ أَوَّلَهُ وَآخِرَهُ

உங்களில்   ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (“பிஸ்மில்லாஹி” என்று) கூறி (ஆரம்பம்   செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு   வந்து)விட்டால்

‘பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ’

எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி.

பொருள்: இதன்   ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)

பிஸ்மில்லாஹ் கூறாமல் சாப்பிட்டால்   அவ்வுணவு ஷைத்தானுக்கு போய் சேருகிறது!

“நபி   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், ‘பிஸ்மில்லாஹ்’ கூறாத உணவை   ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.”  அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)-   ஆதாரம்: முஸ்லிம.;

நின்றுகொண்டு நீர் அருந்துவது கூடாது!

‘நின்றுக்   கொண்டு நீர் அருந்துவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்’ அறிவிப்பவர்: அபூ   ஸயீத் அல்-குத்ரி, ஆதாரம்: முஸ்லிம்.

‘உங்களில்   எவரும் நின்றுக்கொண்டு நீர் குடிக்க வேண்டாம். மறந்து குடித்திருந்தால் வாந்தி   எடுக்கட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி);   ஆதாரம்: முஸ்லிம்.

  நிர்பந்தமான சூழ்நிலைகளில் நின்று கொண்டு குடித்தல்

நபி (ஸல்) அவர்கள “ஸம் ஸம்” தண்ணீரை நின்றவர்களாகக் குடித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: புகாரி

அலீ (ரலி) அவர்கள் நின்றவர்களாகக் குடித்தார்கள். பிறகு கூறினார்கள்: “மக்களில்   சிலர் நின்று கொண்டு குடிப்பதை வெறுக்கின்றார்கள். ஆனால் நான் நின்று கொண்டு   குடிப்பதை நீங்கள் பார்ப்பதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் செய்ததை நான்   பார்த்திருக்கின்றேன்”  நூல்: புகாரி

குடிக்கும் பாத்திரத்தில் ஊதி   குடிக்கலாகாது!

குடிக்கும்   பாத்திரத்தில் மூச்சு விடுவதையும் (ஊதி குடிப்பதையும்) நபி (ஸல்) அவர்கள் தடை   செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: திர்மிதி, அபூதாவுத்,   இப்னுமாஜா

“(குடிப்பவர்) தன்னுடைய பாத்திரத்தில் மூச்சுவிடவேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்)   அவர்கள் கூறினார்கள் அபூ கதாதா தன்னுடைய தந்தையின் வாயிலாக அறிவித்தார்.

‘உங்களில் ஒருவர் (எதை) அருந்தினாலும் அந்தப்   பாத்திரத்திற்குள் அவர் மூச்சு விட வேண்டாம்’ அறிவிப்பவர்: அபூ கதாதா (ரலி),   ஆதாரம்: புகாரி

இடது கையால் குடிப்பதோ சாப்பிடுவதோ கூடாது!

‘உங்களில் எவரும் இடது கையால் குடிக்கவோ,   சாப்பிடவோ வேண்டாம். ஏனெனில் ஷைத்தான் தான் இடது கையால் குடிக்கிறான்;   சாப்பிடுகிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்; இப்னு உமர் (ரலி);   ஆதாரம்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவுத், திர்மிதி.

தங்கம், வெள்ளியிலான பாத்திரத்தில்   குடிப்பது கூடாது!

‘எவர் தங்கம், வெள்ளிப் பாத்திரத்தில் குடிப்பாரோ   அவர் தன் வயிற்றில் நரகத்தின் நெருப்பையே விழுங்குகிறார்’ என நபி (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

“வெள்ளி (அல்லது தங்க)ப் பாத்திரத்தில்   அருந்துகிறவன் தன்னுடைய வயிற்றில் மிடறுமிடறாக நரக நெருப்பையே விழுங்குகிறான்.”   அறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி), ஆதாரம்: புகாரி “நாங்கள் ஹுதைஃபா(ரலி) அவர்களுடன்   புறப்பட்டோம். அவர்கள், ‘தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகாதீர்கள்.   (ஆண்கள்) சாதாரணப் பட்டையும் அலங்காரப் பட்டையும் அணியாதீர்கள். ஏனெனில், அவை   இம்மையில் (இறை மறுப்பாளர்களான) அவர்களுக்கும், மறுமையில் (இறைநம்பிக்யாளர்களான)   உங்களுக்கும் உரியனவாகும். என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக்   கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அபீ லைலா (ரஹ்), புகாரி.

வீண் விரயம் செய்வது கூடாது!

“உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம்   செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை   நேசிப்பதில்லை.” (7:31)

ஒரே மூச்சில் நீர் அருந்தாமல் மூன்று முறை   மூச்சுவிட்டு அருந்த வேண்டும்!

(என் பாட்டனார்) அனஸ் (ரலி) பாத்திரத்தில் (பருகும்   போது) இரண்டு அல்லது மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்தார்கள். நபி (ஸல்)   அவர்கள் மூன்று முறை மூச்சுவிட்டு(ப் பருகி) வந்ததாகக் கூறினார்கள். அறிவிப்பவர்:   ஸுமாமா இப்னு அப்தில்லாஹ் (ரஹ்), ஆதாரம்: புகாரி

உணவா? தொழுகையா? எது முதலில்?

“இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக   இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்.” என இறைத்தூதர்   (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); ஆதாரம்: புகாரி.

‘உணவு வந்து காத்திருக்கும் போதும், சிறுநீர்   மற்றும் மலத்தை அடக்கிக் கொண்டும் தொழக்கூடாது’ அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), ஆதாரம்:   முஸ்லிம்

குடிபானத்தில் ஈ விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் எவரது பானத்திலாவது ஈ விழுந்து விட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே)   முக்கட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டு விடட்டும். ஏனெனில் அதன் இரு   இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் இருக்கின்றது”

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி

உணவில் எலி விழுந்துவிட்டால் என்ன செய்ய   வேண்டும்?

‘நெய்யில் விழுந்துவிட்ட எலியைப் பற்றி நபி(ஸல்)   அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, ‘அந்த எலியையும் அதைச் சுற்றியுள்ள நெய்யையும்   எடுத்து எறிந்துவிட்டு உங்கள் நெய்யை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்)   அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: மைமூனா (ரலி), ஆதாரம்: புகாரி.

தட்டின் நடுப்பகுதியிலிருந்து சாப்பிடக்   கூடாது! ஓரத்திலிருந்து சாப்பிட வேண்டும்!

‘பரக்கத் உணவின் நடுப்பகுதியில் இருக்கிறது. எனவே   ஓரங்களில் சாப்பிடுங்கள்; உணவின் நடுப்பகுதியில் இருந்து சாப்பிடாதீர்கள்’ என நபி   (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); ஆதாரம்: அபூதாவுத்,   திர்மிதி, இப்னுமாஜா

உணவுத் தட்டில் வலது கரத்தால் அருகில்   இருப்பதை எடுத்துச் சாப்பிட வேண்டும்!

(நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகிய) உமர்   இப்னு அபீ ஸலமா (ரலி) கூறினார்: நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மடியில்   வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும்   அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம்,   ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு   அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன்   பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது. ஆதாரம்: புகாரி.

உணவுப் பொருள் கீழே விழுந்து விட்டால் அதை   சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்!

(சாப்பிடும் போது) உங்களிடமுள்ள (உணவு) ஒரு துண்டு   கீழே விழுந்து விட்டால் அதில் அசுத்தமான பொருள் ஒட்டியிருந்தால் அதை நீக்கிவிட்டு   சாப்பிடவும். அதை ஷைத்தானுக்கு விட்டுக்கொடுக்க வேண்டாம். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி);   ஆதாரம்: முஸ்லிம்.

விரல்களை சூப்பி சாப்பிட வேண்டும்!   கைக்குட்டையால் துடைக்க வேண்டாம்!

“தனது விரல்களை சப்பாமல் கைக்குட்டையால் கையை   துடைக்க வேண்டாம். ஏனெனில் எந்த உணவில் பரக்கத் உள்ளது என்று அவன் அறிய முடியாது!”   அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி); ஆதாரம்: முஸ்லிம்.

இருக்கின்ற உணவை பங்கிட்டுச் சாப்பிட   வேண்டும்!

“இருவருடைய உணவு மூவருக்குப் போதுமானதாகும்.   மூவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும்.” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

வயிறு முட்ட சாப்பிடுவது உண்மையான   முஃமினுக்கு அழகல்ல!

“(உண்மையான) முஸ்லிம் ஒரே குடலில் சாப்பிடுவார்.   இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில் சாப்பிடுவான்.’ என இறைத்தூதர் (ஸல்) அவர்கள்   கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்: புகாரி.

“இப்னு உமர் (ரலி) தம்முடன் சாப்பிட ஓர் ஏழையேனும்   அழைத்து வரப்படாமல் உணவு உண்ணமாட்டார்கள். எனவே, (ஒரு நாள்) அவர்களுடன் சாப்பிட   ஒருவரை நான் அழைத்துச் சென்றேன். அம்மனிதர் நிறைய உண்டார். இப்னு உமர் (ரலி)   ‘நாஃபிஉ! இவரை (இனிமேல்) என்னிடம் அழைத்து வராதீர்கள். நபி (ஸல்) அவர்கள்   ‘இறைநம்பிக்கையாளர் ஒரே குடலில் சாப்பிடுவார். இறைமறுப்பாளனோ ஏழு குடல்களில்   சாப்பிடுவான்’ எனக் கூறுவதை கேட்டிருக்கிறேன்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்:   நாஃபிஉ (ரஹ்), ஆதாரம்: புகாரி.

சாய்ந்தவாறு அல்லது வயிற்றில் படுத்தவாறு   சாப்பிடுவது கூடாது!

“நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்.” என   இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி), ஆதாரம்:   புகாரி.

உணவில் குறை கூறாதீர்கள்!

“நபி(ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை   சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்)   விட்டுவிடுவார்கள்” அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

பால் அருந்திய பிறகு வாய்கொப்பளித்தல்:

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பால்   அருந்திவிட்டு வாய் கொப்பளித்தார்கள். அப்போது, ‘இதில் (பாலில்) கொழுப்பு   இருக்கிறது’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), ஆதாரம்: புகாரி.

நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு   சாப்பிட்டார்கள்?

“நபி (ஸல்) அவர்கள் உணவு மேசையில் (அமர்ந்து)   சாப்பிட்டதில்லை; பெரிய வட்டிலில் (ஸஹனில்) வைத்தும் சாப்பிட்டதில்லை;   அவர்களுக்காக மிருதுவான ரொட்டி தயாரிக்கப்பட்டதுமில்லை.” அறிவிப்பவர்: அனஸ் இப்னு   மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் இப்னு அபி   ல்ஃபுராத் அல்குறஷீ(ரஹ்) கூறினார்.

இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த கத்தாதா இப்னு   திஆமா(ரஹ்) அவர்களிடம், ‘எதன் மீது அமர்ந்து அவர்கள் சாப்பிடுவார்கள்?’ என்று   கேட்டேன். அவர்கள், ‘(தோலாலான) உணவு விரிப்புகளின் மீது’ என்று பதிலளித்தார்கள்.

ஒரு சபையில் பானங்களை வலது   புறத்திலிருந்து கொடுத்து வரவேண்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டுக்   வந்திருந்தபோது அவர்கள் பால் அருந்தியதை பார்த்திருக்கிறேன். அப்போது நான் ஓர்   ஆட்டிலிருந்து பால் கறந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காகக் கிணற்றிலிருந்து (நீர்   எடுத்துக்) கலந்தேன். அவர்கள் (பால்) கிண்ணத்தை வாங்கி அருந்தினார்கள். அவர்களின்   இடப் பக்கத்தில் அபூ பக்ர்(ரலி) அவர்களும் வலப்பக்கத்தில் கிராமவாசி ஒருவரும்   அமர்திருந்தனர். (தாம் அருந்திய) பாலின் மிச்சத்தை அந்தக் கிராமவாசிக்குக்   கொடுத்துவிட்டு, ‘வலப்பக்கத்தில் இருப்பவருக்கும், அடுத்து (அவருக்கு) வலப்   பக்கத்தில் இருப்பவருக்கும் (கொடுங்கள்)’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்   இப்னு மாலிக் (ரலி), ஆதாரம்: புகாரி.

இறைத்தூதர்   (ஸல்) அவர்களிடம் பானமொன்று கொண்டுவரப்பட்டது. அவர்கள் அதை அருந்தினார்கள்.   அப்போது அவர்களின் வலப்பக்கம் சிறுவர் ஒருவரும், இடப்பக்கம் முதியவர்களும்   அமர்ந்திருந்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிறுவரிடம், ‘(இந்தப் பானத்தை   முதியவர்களான) இவர்களுக்கு அளிக்க எனக்கு நீ அனுமதியளிப்பாயா?’ என்று கேட்டார்கள்.   அதற்கு அச்சிறுவர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் அவர்களே! தங்களிடமிருந்து   எனக்குக் கிடைக்கும் இந்தப் பேற்றை (வேறு) எவருக்காகவும் நான் விட்டுத் தரமாட்டேன்’   என்று பதில் கூறினார். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதை அச்சிறுவரின் கையில்   வைத்துவிட்டார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி), ஆதாரம்: புகாரி.

பானங்களை பரிமாறுபவர் இறுதியில் தான்   பருக வேண்டும்!

‘….(பானங்களை)   ஊற்றுபவர் தான் இறுதியில் பருக வேண்டும்’ (முஸ்லிமில் இடம்பெறும் நீண்ட ஹதீஸில்   இடம் பெறும் வாசகம்.) அறிவிப்பவர்; அபூ கதாதா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்.

சமைப்பவருக்கும் உணவு வழங்க வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால் அவர்   அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக் கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்   கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு ஒரு பிடி அல்லது இரு பிடிகள் அல்லது ஒரு கவளம்   அல்லது இரு கவளங்கள் உணவு கொடுக்கட்டும். ஏனெனில் அவர் (அதை சமைத்த போது) அதன்   வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்”      அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)  நூல்: புகாரி

உணவுப் பாத்திரங்களை மூடி வைக்கவேண்டும்!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் உறங்(கப் போ)கும்போது விளக்குகளை அணைத்து   விடுங்கள். கதவுகளைத் தாழிட்டுவிடுங்கள். தண்ணீர் பைகளைச் சுருக்கிட்டு   மூடிவிடுங்கள். உணவையும் பானத்தையும் மூடிவையுங்கள்’ என்று கூறினார்கள். அதன் மீது   ஒரு குச்சியை குறுக்காக வைத்தாவது (மூடிவையுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள்   சொன்னதாக எண்ணுகிறேன். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), ஆதாரம்: புகாரி.

தோல் பையின் வாயிலிருந்து நீர்   அருந்துவது கூடாது!

நபி (ஸல்)   அவர்கள் தண்ணீர் தோல் பையின் வாய்ப் பகுதியிலிருந்து (தண்ணீர் அருந்த வேண்டாமெனத்   தடை விதித்தார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம்: புகாரி.

உண்ணும் போதும் பருகும் போதும்   அல்லாஹ்வைப் புகழ்ந்தால் அதை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்!

‘ஒரு அடியான் உணவைச் சாப்பிடும் போது அந்த   உணவுக்காக அவனைப் புகழ்வதையும், நீரைப் பருகும் போது அந்த நீருக்காக அவனைப்   புகழ்வதையும் அல்லாஹ் பொருந்திக்கொள்கிறான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி); ஆதாரம்:   முஸ்லிம், திர்மிதி, நஸயீ, அஹ்மத்

சாப்பிட்டபிறகு கூற வேண்டிய துஆ!  

    اَلْـحَمْدِ للهِ الَّذِيْ     أَطْعَمَنِـيْ هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْـرِ حَوْلٍ مِنِّـيْ وَلاَ قُوَّةٍ.

“அல்ஹம்துலில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி   மின்கைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்” என யாரேனும் கூறினால் அவரின் முன்   பாவங்கள் மன்னிக்கப்படும். ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி   பொருள்: “எனது எவ்வித   சக்தியும் ஆற்றலும் இன்றி எனக்கு இவ்வுணவை வழங்கி உண்ணச் செய்த அல்லாஹ்வுக்கே   எல்லாப்புகழும்”

اَلْـحَمْدِ للهِ كَثِيْـرًا   طَـيِّـبًا مُبَارَكًا فِيْهِ غَيْـرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ   مُسْتَغْنىً عَنْهُ رَبُّـنَا

நபி (ஸல்) அவர்கள் முன்னாலிருந்து சாப்பாட்டுத் தட்டு   எடுக்கப்படுமானால் ‘அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹி   கைர முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹூ ரப்புனா’  என்று கூறுவார்கள்.

பொருள்:   துய்மையான ஏராளமான புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. இறைவா! நீ உணவின் பால்   தேவையுடையவன் அல்லன்! உன்னை யாரும் விட்டுவிட முடியாது!

    தொகுப்பு

    Mohamed Muzathik Meerasahiboo

{ 4 comments }

H.B.R. Zaman July 16, 2013 at 2:30 am

What a beautiful religion. .
Simple steps .. Make big things. Brothers n sisters let’s practice. .
Thank you brother.

ஆசிப் அஹமது May 21, 2014 at 5:18 pm

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள், ‘பிஸ்மில்லாஹ்’ கூறாத உணவை ஷைத்தான் ஆகுமாக்கிக் கொள்கிறான்.” அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரலியல்லாஹு அன்ஹு)- ஆதாரம்: முஸ்லிம.

என்ற ஹதீஸ் எனக்கு கிடைக்க பெறவில்லை தயவு கூர்ந்து முஸ்லிம் தமிழ் பதிப்பகம் ஆங்கிள பதிப்பகம் ஆதார எண்னை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கு மாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஜஸாக்கல்லாஹ் ஹைரா

Iqbal May 22, 2014 at 1:13 pm

4105. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (சேர்ந்து) உணவு உண்பதற்கு அமர்ந்தால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் கை வைப்பதற்கு முன் எங்கள் கைகளை (உணவில்) நாங்கள் வைக்கமாட்டோம். ஒருமுறை நாங்கள் உணவு உண்பதற்கு அவர்களுடன் அமர்ந்தோம். அப்போது ஒரு சிறுமி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவளைப் போன்று (விரைந்து) வந்து, (பிஸ்மில்லாஹ் சொல்லாமல்) உணவில் கை வைக்கப்போனாள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவளது கையைப் பிடித்துக்கொண்டார்கள். பிறகு ஒரு கிராமவாசி, (யாராலோ) தள்ளிவிடப்பட்டவரைப் போன்று (விரைந்து வந்து பிஸ்மில்லாஹ் சொல்லாமல் உணவில் கை வைக்க) வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது கையையும் பிடித்துக் கொண்டார்கள்.
அப்போது, “அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாத உணவில் ஷைத்தான் பங்கேற்கிறான். அவன் இச்சிறுமியுடன் வந்து, அவள் மூலமே இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே, அவளது கையை நான் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். பிறகு இந்தக் கிராமவாசியுடன் வந்து அவர் மூலம் இந்த உணவில் பங்கேற்கப் பார்த்தான். ஆகவே,இவரது கையைப் பிடித்து (அதைத் தடுத்து)விட்டேன். என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஷைத்தானின் கை அச்சிறுமியின் கையுடன் எனது கைக்குள் சிக்கிக்கொண்டது” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உணவு உண்ண (விருந்துக்கு) அழைக்கப்பெற்றால்…”என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
இதில் (“தள்ளிவிடப்பட்டவரைப் போன்று” என்பதற்குப் பதிலாக) “துரத்தப்பட்டவரைப் போன்று” என்றும், முதலில் கிராமவாசி வந்தார்; பிறகு அச்சிறுமி வந்தாள் என்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், ஹதீஸின் இறுதியில் “பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) சொல்லி உணவு உண்டார்கள்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
– மேற்கண்ட ஹதீஸ் ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள் ளது.
அதில் “கிராமவாசிக்கு முன் அச்சிறுமி வந்தாள்” என்று காணப்படுகிறது.
Book :36

ABDUL AZEEZ May 24, 2014 at 5:58 pm

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர் இக்பால்
உங்களுக்கு அந்த ஹதீதில் சந்தேகம் இருந்தால் விட்டுடலாம்.

உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (“பிஸ்மில்லாஹி” என்று) கூறி (ஆரம்பம் செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு வந்து)விட்டால்

‘பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ’ எனக் கூறட்டும்

என்பதை மட்டும் பின்பற்றலாம்.

மேர்கொண்டு ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் ஹதீதின் கருத்து பிஸ்மில்லாஹி சொல்லாத உனவு சைதானுக்கு உரியது என்பது மட்டுமே !

மா சலாம்.
அப்துல் அஜீஸ்

Comments on this entry are closed.

Previous post:

Next post: