மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதை(ச் செய்ய) ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் தடுக்கிறீர்கள். இன்னும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் இருக்கின்றனர். எனி னும், அவர்களில் பலர் பாவிகளாகவே இருக்கின்றனர். (3:110)
நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நன்மையை ஏவுகின்றனர். தீமையை விட்டும் விலக்குகிறார்கள்….. (9:71)
காலத்தின் மீது சத்தியமாக ! (103:1)
நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். (103:2)
ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக் கொருவர் உபதேசம் செய்து, மேலும், பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை) (103:3)
இஸ்லாமிய தாவா அல்லது பிரச்சாரம் என்பது இன்று பெரும்பாலும் பயான்கள் மூலம் நடத்தப்படுகிறது. உரைகள் நிகழ்த்தத் தனிப்பட்ட மேடைகள் உதவுகின்றன. பேசிய உரைகள், அந்தக் காலத்தில் ஆடியோ கேசட்டுகளிலும், பின்னர் படிப்படியாக, வீடியோ, CD, இன்டர்நெட், தம் டிரைவ் என பல பரிமாணங்களில் கேட்க, பார்க்க முடிகிறது.
இஸ்லாத்தின் அடிப்படையில் பார்க்கும் போது, குரு-மாணவர் சிஸ்டம் கிடையாது மட்டுமல்ல; பிழையானதும் கூட. கற்போம்-கற்பிப்போம் (Learning and Teaching Together) என்ற சிஸ்டம்தான் சஹாபாக்கள் காலத்தில் இருந்தது. அதாவது ரசூல்(ஸல்) அவர்கள் பயிற்றுவித்த சமூகம் அப்படித்தான் உருவாக்கப்பட்டது. கற்றுக் கொடுப்பவன் மட்டுமே, அதாவது நான் பயான் செய்வேன்…. அதற்கான தகுதி எனக்கே உள்ளது. நான் நிறையப் படித்து உபதேசம் செய்யும் உயரிய அந்தஸ்தில் அல்லாஹ் என்னை வைத்துள்ளான். மக்களாகிய நீங்கள் எல்லோரும் கேட்க வேண்டும் என்று யார் சொன்னாலும் அது ரசூல்(ஸல்) அவர்கள் பயிற்றுவித்த முறை கிடையாது.
தமிழகத்தில் ஒரு சொல் வழக்கத்தில் உள்ளது. அதாவது ”கேட்டுக் கேட்டு இஸ்லாம்” என்பார்கள். இதனை எல்லாம் ஆலிம் உலமாக்களும் பயானிலும் சொல்வார்கள். பேசும்போது தம்மைத் தாழ்த்திப் பணிவாகப் பேசுவார்கள். ஆனால் எந்த பள்ளியிலாவது சாதாரண ஆட்களை கொஞ்சம் பயிற்சி கொடுத்தாவது ஜுமுஆ பயான் செய்ய அனுமதிப்பார்களா?
ஆக ஒருவர் பேசி எப்பொழுதும் பேசி பேசி ஒரு சமூகம் எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருந்தால் அதற்குப் பெயர் மதம்; இஸ்லாம் அல்ல. இஸ்லாத்தை நபி(ஸல்) அவர்கள் மதமாக ஆக்கவே இல்லை. ஆகவே குரு-மாணவர் சிஸ்டத்தை நீக்கி, கற்போம், கற்பிப்போம் (Learning and Teaching Together) என்ற சிஸ்டம் உருவாக நாம் என்ன செய்ய வேண்டும்? உங்களின் பதிவுகளை எங்களுக்குத் தெரிவியுங்கள். பயான் பண்ணுவதற்காக ஒரு சிலர் இருப்பது மேலோட்டமாக நல்லதுதான். அது மற்ற மதங்களுக்கும், இயக்கங்களுக்கும் நன்மையே. ஆனால் இந்த உலகிற்கே ரஹ்மத்துல் ஆலமீனாக வந்த நபி(ஸல்) அவர்கள் தங்களின் உபதேசத்தை ஒரு சமயத்தில் எவ்வளவு நேரம் நீட்டினார்கள்? சத்திய சஹாபாக்கள் பலரும் எப்படி பயான் செய்தார்கள்? பேச்சாளர்களைத் தயார் செய்தார்களா? பின்பற்றுபவர்களைத் தயார் செய்தார்களா? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியும்போது “”கற்போம்-கற்பிப்போம் (Learning and Teaching Together) என்ற சிஸ்டம் என்றால் என்ன என்பதை நாம் அறிய முடியும். இஸ்லாமியக் கல்வி வேண்டும் என எல்லா தரப்பு முஸ்லிம்களும் சொல்கிறார்கள். ஆனால் மறைமுகமாக “”குரு-மாணவர்” அதாவது “”உஸ்தாத் -பின்பற்றுபவர்” என்ற நிலைப்பாடுகள் தொடர எல்லாம் செய்கிறார்கள். ஒட்டுமொத்தமாக சில பல ஆண்டுகள் படித்துப் பட்டம் வாங்கிய பின்தான் இமாமாகப் பணி புரிய வேண்டும் என்ற விதி யாரால் எப்பொழுது உருவாக்கப் பட்டது?
சுபுஹையும், லுஹரையும் தொழ வைக்கும் ஒருவர் பிந்தைய நேரத்தில் முழுமையாக வியாபாரம் செய்ய ஏன் அனுமதிக்க கூடாது? அதே போல அசர், மஃரிப், இஷா தொழ வைப்பவர் ஏன் பகலில் வேறு வேலைக்குச் செல்ல ஏற்பாடு செய்யக் கூடாது? ஒவ்வொரு மஹல்லாவிலும், அந்தப் பள்ளிக்கு அருகாமையில் வசிக்கும் பத்துப் பேருக்குத் தொழுகை நடத்தும் பயிற்சியினை சொல்லிக் கொடுக்கக் கூடாது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியும் போது கற்போம்-கற்பிப்போம் (Learning and Teaching Together) என்ற சிஸ்டம் என்றால் என்ன என்பதை நாம் அறிய முடியும்.
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே, நாம் உங்களை எந்த சங்கமும் வைக்கச் சொல்லவில்லை. எந்த புது ஜமாஅத்திலும் சேரச் சொல்லவும் இல்லை. அதே சமயம் குர்ஆனையும், சுன்னாவையும் விளங்கிய பல்லாயிரம் பேர் இன்று சந்தர்ப்பச் சூழ்நிலைகளைக் காரணம் காட்டித் தம்மைத் தாமே தொலைத்து வாழ்கிறார்கள். இது பெரும் தவறு.
ஈமான், இஸ்லாம், இஹ்சானைப் பின்பற்றி வாழ முயலுங்கள். பிறருக்கும் இதனை எடுத்து வையுங்கள். பெரும் பாவங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இதனை உங்கள் குடும்பத்தில் செய்யுங்கள். பிறகு உங்கள் தெரு, ஊர் என்றளவில் சிறிய அளவிலாவது தொடர்ந்து செய்யுங்கள். உங்கள் ஊரில் உள்ள பழைய சகோதரர்களையும், பல்வேறு அமைப்புகளுக்குப் போய், மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்து சோர்ந்து மனம் வெறுத்து ஒதுங்கியுள்ளவர்களையும் சந்தித்து மாதம் ஒரு முறையாவது, சிறு அளவிலாவது கலந்துரையாடல்களை செய்யுங்கள். அதுதான் கற்போம் கற்பிப்போம் எனும் வழியில் ஒரு துவக்கமாக அமையலாம். இன்ஷா அல்லாஹ் மாற்று கருத்துக்களை மனம் விட்டுப் பேசுங்கள். நாம் எல்லோரும் கலிமா சொல்லியுள்ளோம். நாம் எல்லோரும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் நிரபராதிகளாய் நின்று வெற்றி பெற ஆசைப்படுவோமாக; ஆமீன்.
பஷீர், புதுக்கோட்டை