
— எஸ்.ஹலரத் அலி (+91 99653 61068.)
அல்லாஹ் மனிதர்களைப் படைத்து, அவர்களுக்கு வேண்டிய எல்லா வாழ்வாதாரங்களையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், உலகில் உள்ள அனைத்தையும் மனிதர்களுக்குப் பயன்தருபவைகளாக அமைத்துள்ளான். அந்த வகையில் மனித வாழ்வோடு பின்னிப்பிணைந்த கால்நடைகளைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:
”(மனிதர்களே!) ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளையும் அவனே உங்களுக்காகப் படைத்திருக்கின்றான். அவற்றில் உங்களுக்காக (குளிரைத் தடுத்துக் கொள்ளக்கூடிய) கதகதப்புண்டு. இன்னும் (அநேக) பயன்களுமுண்டு. மேலும் நீங்கள் அவற்றிலிருந்து புசிக்கிறீர்கள்.”
— அல்குர்ஆன் – 16:5.
மேலும் வேறொரு வசனத்தில்,
“(ஆடை போன்ற) பற்பல பொருள்களையும் தயாரிப்பதற்கு, அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளி, (ஒட்டகத்தின்) உரோமம், (வெள்ளாட்டின்) முடி, ஆகியவைகளையும் (அவன் உங்களுக்காகப் படைத்திருக்கின்றான். அவற்றாலான பொருள்கள்) ஒரு காலம் வரையில் உங்களுக்குப் பயன்படுகின்றன”.
-அல்குர்ஆன் – 16:80.
ஆதிமனிதன் முதல் தொடரும் தொடர்பு:
மனிதனின் வாழ்விற்கு அடிப்படைத் தேவைகள் மூன்று:
உணவு, உடை, உறைவிடம். இம்மூன்றையுமே மனிதன் கால்நடைகளிலிருந்து பெற்றுக்கொண்டதால், ஆடு, மாடுகளுடனான அவனது தொடர்பு ஆதி மனிதனிலிருந்தே தொடங்கிவிட்டது.
உதாரணமாக, மனிதர்களின் தந்தை ஆதம் (அலை) அவர்களின் மகன்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
“ஆதமுடைய (ஹாபில், காபில் எனும்) இரு மகன்களின் உண்மைச் செய்திகளை நீங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பியுங்கள். இருவரும் ‘குர்பானி’ (பலி) கொடுத்தபோது அவ்விருவரில் ஒருவருடைய (குர்பானி) ஏற்றுக்கொள்ளப்பட்டது, மற்றொருவருடையது ஏற்கப்படவில்லை!.”
— அல்குர்ஆன் – 5:27.
இவ்வசனத்திற்கு இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் தரும் விளக்கத்தில், ‘குர்பானி கொடுக்கப்பட்டது செம்மறியாடு’ என்று இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்ததாகப் பதிவு செய்துள்ளார்கள். எனவே, கால்நடைகளின் பயன்பாடு முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களின் காலத்திலிருந்தே தொடங்கிவிட்டதை அறியலாம்.
சொல்லப்போனால், மனிதனைப் படைப்பதற்கு முன்பே, அவனுக்குத் தேவையான வாழ்வாதாரங்களை அல்லாஹ் தயார் செய்துவிட்டான்.
கதகதப்பூட்டும் கம்பளி உரோமம் (Wool)
கால்நடைகளான ஆடு, ஒட்டகம் ஆகியவற்றின் உரோமம் ஆங்கிலத்தில் ‘Wool’ என்றும், தமிழில் ‘கம்பளி’ என்றும் அழைக்கப்படுகிறது.
ஆடைகள் நெய்வதற்குப் பருத்தி, பட்டு, லினன் (Linen), சணல் மற்றும் நவீன செயற்கை இழைகள் (Synthetic fibers) எனப் பல பொருட்கள் இன்று பயன்பாட்டில் உள்ளன. ஆனால், இந்த இழைகள் எதற்கும் இல்லாத தனித்துவமான அறிவியல் சிறப்புகள் கால்நடைகளின் கம்பளிக்கு இருப்பதாக நவீன அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.
மனித இன வரலாற்றில் எவ்வளவோ அறிவியல் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன; வியக்கத்தக்க புதிய கண்டுபிடிப்புகள் வந்துவிட்டன. ஆனால், அல்லாஹ் தன் கரங்களைக் கொண்டு படைத்த கால்நடைகளின் —
அல்குர்ஆன் 36:71.
ஒரே ஒரு உரோமத்தைப் போன்ற ஒன்றைச் செயற்கையாக நூறு சதவீதம் துல்லியமாக இன்றுவரை மனிதர்களால் உருவாக்க முடியவில்லை. ஏனென்றால், கம்பளி உரோமத்தின் உள்ளமைப்பு (Complex structure) மிக மிகச் சிக்கலான தொழில்நுட்பத்தைக் கொண்டது.
இதை உணர்த்தும் விதமாக அமைந்த நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் இங்கு கவனிக்கத்தக்கது:
”குர்பானி பிராணியின் உரோமத்திற்கு நன்மை கொடுக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, “ஒவ்வொரு உரோமத்திற்கும் நன்மை கொடுக்கப்படுமா?” என்று தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ”ஆம்! ஒவ்வொரு உரோமத்திற்கும் நன்மை உண்டு” என்று பதிலளித்தார்கள்.”
அறிவிப்பவர்: ஜைத் பின் அர்கம் (ரலி), ஆதாரம்: இப்னு மாஜா.
கம்பளியின் அறிவியல் ரகசியம்:
(Exothermic Reaction)
கம்பளி உரோம இழைகள் (Wool fiber) ‘கார்டிகல்’ (Cortical) செல்களால் ஆனவை. இந்தச் செல்கள் ‘கியூட்டிகல்’ (Cuticle) என்ற உறையால் போர்த்தப்பட்டுள்ளன. செதில் போன்ற இந்த கியூட்டிகல், ‘எபிகியூட்டிகல்’ (Epicuticle) என்ற மற்றொரு மெல்லிய உறையால் மூடப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் அற்புதம் என்னவென்றால், இது திரவ நிலையில் உள்ள தண்ணீரை உள்ளே விடாது; அதேசமயம் காற்றில் உள்ள ஈரப்பதத்தை (Moisture/Water vapor) தன்னுள் உறிஞ்சும் தன்மை கொண்டது.
இப்படி உறிஞ்சப்பட்ட ஈரப்பதம் கம்பளி உரோமத்தின் மையப்பகுதிக்குச் செல்லும்போது, கம்பளி மூலக்கூறுகள் (Wool molecules) ஈரப்பதத்தில் உள்ள ஹைட்ரஜனுடன் வேதியியல் மாற்றம் (Chemical reaction) அடைகின்றன. இந்த நிகழ்வின்போது ‘வெப்ப உமிழ் வினை’ (Exothermic reaction) ஏற்பட்டு, சுமார் 140 kJ (கிலோ ஜூல்) அளவு வெப்பம் உற்பத்தியாகிறது.
குளிர்காலத்திலும், குளிர் பிரதேச மக்களும் கம்பளி ஆடைகளை அணிவதற்கு மூலக்காரணம், கம்பளி தானாகவே உற்பத்தி செய்யும் இந்த கதகதப்புதான். உரோமங்களுக்குள் நடக்கும் இந்த நுண்ணிய வேதியியல் மாற்றத்தைத்தான் அல்லாஹ் 1400 ஆண்டுகளுக்கு முன்பே “அவற்றில் உங்களுக்காக கதகதப்புண்டு” என்று மிகத் துல்லியமாகக் கூறியுள்ளான்.
கம்பளி ஆடைகள் 30% நீரில் நனைந்து ஈரமானாலும்..அது தொடர்ந்து கதகதப்பு வெப்பத்தை கொடுத்துக்கொண்டிருக்கும்.
பாலைவனத்திற்கும் ஏற்ற கம்பளி:
கம்பளி ஆடைக்குள்ள மற்றொரு சிறப்பு, இது குளிருக்கு மட்டுமானதல்ல. கடும் வெப்பம் நிலவும் சஹாரா பாலைவனத்தில் வசிக்கும் நாடோடி மக்கள் (Bedouins) மெல்லிய கம்பளி ஆடைகளையே அணிந்திருப்பார்கள். காரணம், கடும் வெப்பத்தில் உடலிலுள்ள நீர்ச்சத்து வறண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.
கம்பளி ஒரு சிறந்த வெப்பக் கடத்தாப் பொருளாக (Insulator) செயல்படுகிறது. இது வெளி வெப்பத்தை உள்ளே விடாது; அதேபோல உடலின் உள் வெப்பத்தை வெளியே விடாது. தெர்மாகோல் (Styrofoam) தக்கை போன்று செயல்பட்டு, உடலின் வெப்பநிலையை ஒரே சீராக வைத்திருக்க உதவுகிறது.
காலத்தை வெல்லும் கம்பளி: (Soof)
திருக்குர்ஆன் கூறுவது போல “ஒரு காலம் வரையில் உங்களுக்குப் பயன்படுகின்றன”. கம்பளி ஆடைகள் மிக நீண்ட காலம் உழைக்கக்கூடியவை. கம்பளிக்கு அரபியில் ‘ஸூஃப்’ (صوف – Soof) என்று பெயர். எல்லாக் காலத்திற்கும், எல்லாச் சூழலுக்கும் ஏற்ற இந்தக் கம்பளியைப் போர்த்திக் கொண்டு, காடு மலைகளிலெல்லாம் இறைவனின் மெய்ஞானத்தைத் தேடி அலைந்த காரணத்தினாலேயே அந்த ஆன்மீகப் பெருமக்கள் “ஸூஃபியாக்கள்” (Sufis) என்று அழைக்கப்பட்டனர் என்ற வரலாற்றுத் தகவலும் உண்டு.
(கம்பளியில்)
“இன்னும் அநேக பயன்களுண்டு!
-அல்குர்ஆன்-16:5.
என்று அல்லாஹ் கூறுகின்றான்.
இந்த வசனம் இறங்கிய காலத்தில் மக்களுக்குத் தெரிந்திருந்த பயன்களை விட, இன்று நமக்குத் தெரிந்திருக்கும் பயன்கள் அதிகம். இறைச்சி, பால், தோல், கம்பளி ஆகியவற்றுடன் நின்றுவிடாமல், இன்று கம்பளியிலிருந்து பிரிக்கப்படும் ‘லானோலின்’ (Lanolin) மருத்துவ மற்றும் அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் வீடுகளை அலங்கரிக்க,விமானத்தில் தீப்பிடிக்காமல் இருக்க கம்பளி துணிகளையே பயன்படுத்துகிறார்கள். ஒலியைத் தடுக்கும் திரைகளாக (Acoustic panels) என கால்நடைகளின் உப பொருட்கள் பல வழிகளில் மனிதனுக்குப் பயன்படுகின்றன.
இறைவனின் படைப்பில் ஒவ்வொன்றும் ஓர் அற்புதம். அதில் ஆழமாகச் சிந்திப்பவர்களுக்குப் பல அறிவியல் சான்றுகள் ஒளிந்திருக்கின்றன!