இறைவனைக் காட்டுங்கள்

in பொதுவானவை

நாஸ்திக நண்பர்கள் ‘இறைவனைக் காட்டுங்கள்’ கண்ணால் பார்த்து ஏற்றுக் கொள்கிறோம் என்று பிடிவாதம் செய்கின்றனர், அவர்களின் இந்த வாதமே மிகவும் பலவீனமாகும். ஆனால் உண்மை என்ன தெரியுமா? உண்மையான இறைவன், இந்த மனிதனது பார்வையிலோ, புலன்களின் உய்த்துணர்விலோ வரமுடியாது. அப்படி வரும் ஒன்று நிச்சயமாக இறைவனாக இருக்க முடியாது. காரணம் மனிதனது பார்வையிலோ, புலன்களின் உய்த்துணர்விலோ வரக்கூடிய ஒன்று நிச்சயமாகச் சில கட்டுப்பாட்டிற்குள் இருந்தாக வேண்டும். கட்டுப்பாட்டிற்குள் கட்டுப்படும் ஒன்று எப்படி இறைவனாக இருக்க முடியும்?

உதாரணமாக நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்குச் சில நிபந்தனைகள் நிறைவேறியாக வேண்டும் அப்படியானால்தான் அந்தப் பொருளைப் பார்க்க முடியும். அந்தப் பொருளுக்கு ஒரு உருவம் இருக்க வேண்டும். அந்தப் பொருளில் வெளிச்சம் படவேண்டும். அந்தப் பொருளுக்கும் கண்ணுக்கும் இடையில் திரை இருக்கக்கூடாது; இவை பார்ப்பதற்ககுரிய நிபந்தனைகளாகும். அந்தப் பொருளுக்கு உருவம் இல்லையென்றாலும், இருட்டில் இருந்தாலும் அல்லது ஒரு திரை இருந்தாலும் நம்மால் பார்க்க முடியாது. ஆக இவையெல்லாம் சரியாக இருந்து அந்தப் பொருளிலிருந்து வெளிச்சம் வெளியாகி அது நமது கண்களின் ஒளித்திரையை அடைந்தால் மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது. மிகவும் சிறியதாக இருந்தால் அதை பெரிதாக காட்டும் கருவியின் உதவி கொண்டே பார்க்க முடிகின்றது. இப்படிப்பட்ட கட்டுப்பாட்டிற்குள் வரும் ஒன்று எப்படி இறைவனாக இருக்க முடியுமா?

மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புலனின் சக்தியும் வரயறைக்குள் கட்டுப்பட்டிருப்பதையே பார்க்க முடியும். ஒரு புலனின் செயலை மற்றொரு புலன் செய்ய முடியாது. கண்ணால்தான் பார்க்க முடியும் காதால் பார்க்க முடியாது. காதால் ஒலிகளை கேட்க முடியும் கண்ணால் கேட்க முடியாது. பார்ப்பதற்கு இருப்பதுபோல் கேட்பதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகள் நிறைவு பெற்றால் மட்டுமே பார்க்கவும் கேட்கவும் முடியும். இல்லையென்றால் அறிந்துகொள்ள முடியாது.

இறைவனை நம்பிச் செயல்படத் தயங்கும் மனிதன், தனது வாழ்வில் தனது காரியங்கள் அத்தனையையும் நம்பிச் செயல்பட வேண்டிய நிர்பந்த நிலையில்தான் இருக்கிறான். படிக்கும் மாணவன் திறமையுடன் படித்து முடித்தால் உயர்ந்த உத்தியோகமும் அதன் மூலம் வளமான வாழ்வும் கிடைக்கும் என்று நம்பித்தான் படிக்கிறான். உயர்ந்த உத்தியோகத்தையும் வளமான வாழ்வையும் கண்ணால் பார்த்தபின் படிக்க ஆரம்பிப்பதில்லை. விவசாயி வீட்டில் பாதுகாப்பாக இருந்த நெல்லை வயலில் கொண்டு கொட்டுகிறான் என்றால் ஒரு மூட்டைக்கு பகரமாக பல மூட்டைகள் கிடைக்கும் என்று நம்பித்தான் செய்கிறான். வியாபாரி கையிலுள்ள முதலை எல்லாம் போட்டு வியாபாரம் செய்ய முற்படுகிறான் என்றால் அதவிட அதிக முதல் கிடைக்கும் என்று நம்பியே செய்கிறான்.

ஆக மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே பிறக்கின்றது. நம்பியபடி கிடைக்கவும் செய்யலாம்; கிடைக்காமலும் போகலாம். இரண்டிற்குமே இடம்பாடுண்டு. இருந்தாலும் மனிதன் நம்பிச் செயல்படத்தான் செய்கிறான். அதிக மூட்டைகள் கிடைக்கும் என்று நம்பி வயலில் வீட்டிலிருந்த மூட்டைகளையும், உரத்தையும் கொட்டியவன் மழையின்மை காரணமாக பயிர் காய்ந்து நஷ்டப்படவும் நேரிடுகிறது. அதனால் அவன் விவசாயத்தை விட்டு விடுவதில்லை.

மனிதனது ஒவ்வொரு முயற்சியிலும் அவன் நம்பிக்கை வைத்ததற்கு நேர்மாற்றமாக நஷ்டம் அடையும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. அதன் காரணமாக அதன்பின் மனிதன் அந்த முயற்சியைக் கைவிட்டு விடுவதில்லை. இப்படி உலக காரியங்கள் அனைத்தையும் நம்பிச் செயல்படும் மனிதன் மறு உலக வாழ்க்கை விஷயத்தில் மட்டும் நம்பிச் செயல்படத் தயாராக இல்லை என்பது விவேகமான செயலா? என்பதைச் சிந்திக்கவும். நம்பிச் செயல்படும் உலக காரியங்களின் பலன்களை உலகிலேயே கண்டு விடுகிறோம். மறுமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அப்படியல்லவே? என்று கூறுவதும் தவறான கூற்றேயாகும்.

நம்பிச் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பலனையும் கண்டுகொள்ள வெவ்வேறு கால அவகாசம் தேவைப்படுகின்றது. சிலவற்றின் பலன்களை சில மாதங்களில் பார்க்கிறோம்; சிலவற்றின் பலன்களை சில வருடங்களில் பார்க்க முடிகின்றது. ஆக ஒவ்வொன்றின் பலனையும் பார்க்க ஒரு காலக்கெடு கண்டிப்பாக தேவைப்படுகின்றது. அந்தக் கெடு தீருமுன் பலனைப் பார்க்க முடியாது; ஒரு விவேகி அப்படி பார்க்க முற்படவும் மாட்டான். இதுபோல் மறு உலக வாழ்க்கையின் பலன்களைப் பார்க்க மரணம் காலக்கெடுவாக இருக்கிறது. அந்தக் கெடு தீருமுன் பலன்களைப் பார்க்க முற்படுவது அறிவுடமையா? என்று இப்போது சிந்தித்து பாருங்கள்.

தாயின் கர்ப்பப் பையில் இருக்கும் போதுதான் குழந்தையின் கைகள் கால்கள் இன்னும் அனைத்து உறுப்புகளும் தயாராகின்றன. அவற்றின் பலன்களை தாயின் கர்ப்பப் பையிலேயே குழந்தை அறிய முற்பட்டால் அது முடிகிற காரியமா? தாயின் கர்ப்பப்பை என்ற இருள் உலகிலிருந்து இந்த உலகிற்கு வந்த பின்னரே அவற்றின் பலன்களை குழந்தை காண்கிறது. நொண்டியாகவோ, குருடாகவோ குழந்தை பிறந்தால், இந்த உலகில் வாழும் காலமெல்லாம் நொண்டியாகக் குருடாக வாழ்ந்து கஷ்டங்களை அனுபவிக்கிறது. இதை நாஸ்திகரும் மருக்க மாட்டார் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

இதே அடிப்படையில் தாயின் கர்ப்பப் பையில் 10 மாதங்களில் தயாராகும் உடல் இவ்வுலகில் வந்து அதைவிட பல மடங்கு அதிகமான காலம், தங்கி இவ்வுலகில் நலன்களையோ, கெடுதிகளையோ அனுபவிக்கும் என்பதையும் இவ்வுலகிற்கு வந்த பின்னரே, உடல் உறுப்புகளின் பலன்களைப் பார்க்கிறது. எப்படி கர்ப்பப் பையில் இருக்கும்போது பார்க்க முடியவில்லையோ மறு உலகின் லாப நஷ்டங்களை அங்கு போன பின்னரே அறிந்து கொள்ள முடியும், இவ்வுலகில் அறிந்து கொள்ள முடியாது என்பதையும், உடலின் உறுப்புக்கள் கர்ப்பப் பையில் தயாரானது போல், ஆன்மா இவ்வுலகிலேயே தயாராகியே ஆகவேண்டும் என்பதையும் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்துகொள்ள முடியும்.

இந்த மறுக்க முடியாத உண்மைகளை நாஸ்திக நண்பர்கள் விளங்கித் தங்களின் போக்கை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். அப்படியானால்தான் அவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியும். கைமேல் பலன்களைப் பார்த்துத்தான் செயல்படுவேன் என்று அடம் பிடிக்கும் மனிதன், இவ்வுலகிலும் வெற்றிபெற முடியாது, மறு உலகிலும் வெற்றி பெற முடியாது என்பதையும் உணரவேண்டும்.

Leave a Comment

Previous post:

Next post: