வசந்தம் என்றாலே மனம் இனிக்கும். ஏனெனில் அது பூமி பூக்கும் காலம். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு வசந்தக் காலம் உண்டு. ஒட்டு மொத்த பூமிக்கும் சேர்த்து ஒரு வசந்தம் உண்டா…
ஆம் உண்டு. ஆசியாவும், ஆப்ரிக்காவும், அமெரிக்காவும், ஐரோப்பாவும், உலகின் மேல் பகுதியும் கீழ் பகுதியும் ஒன்று சேர்ந்து எதிர்பார்க்கும் வசந்தம். … அந்த வசந்தம் வருவதற்கு முன்பே அந்த வசந்தம் பற்றிய திருவிழாக்கள் ஒவ்வொருவரின் மனதிலும். இதோ நமக்கு எதிரில், அருகில் வந்து விட்டது அந்த வசந்தம். அந்த வசந்தத்திற்கு பெயர் ரமளான். முத்தாக ஒரு மாதம் பூக்கும் அந்த மலர்களுக்குப் பெயர் நோன்பு.
தான் ஒரு இறையடிமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் இன்னும் ஆழமாக இறைவனிடமும், உலகப் பார்வையாளர்கள் முன்பும் பதித்துக் கொள்ளும் மாதம். அனுமதிக்கப்பட்ட உணவுகளைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு பட்டினிக் கிடப்பதில் ஆனந்தம் கொள்ளும் அற்புதம் நிகழும் மாதம்.
இன்று நேற்றல்ல..
வருடந்தோரும் வரும் இந்த வசந்தம் துவங்கி சில நூறு ஆண்டுகளோ, அல்லது வெறும் ஆயிரம் ஆண்டுகளோ ஆகவில்லை. இதன் சரித்திரம் பல ஆயிரம் வருடங்களைக் கடந்ததாகும். இறைவன் நேசிக்கக் கூடிய, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடிய அடியார்கள் என்றைக்கு இந்த பூமியில் வாழத் துவங்கினார்களோ அவர்கள் காலத்திலிருந்து துவங்கியது இந்த வசந்தம்.
நோன்பு என்றால் என்ன?
மனிதன் தன் உள்ளத்தையும் உடலையும் பக்குவப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்கிறான். அவன் மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளை உள்ளடக்கியதாக நோன்பு அமைந்துள்ளது. எழுத்தில் இதை முழுமையாக விளக்க முடியாது. அனுபவத்தால் மட்டுமே உணரும் காரியமாகும் இது.
பசியின் தன்மை உணர்த்தப்படுகிறது. வேண்டா கொழுப்புகள் குறைக்கப்பட்டு உடல் நலம் காக்கப்படுகிறது. தீய எண்ணங்களும் செயல்களும் மனிதனை விட்டு விலகி ஓடுகின்றன.
பிறர் மீதான அக்கறையும் இல்லாதோருக்கு கொடுத்துதவும் மனப்பக்குவமும் கூடுகின்றது. அதிகமான இறை வணக்கங்களால் மனம் மிகுந்த அமைதிப் பெறுகிறது.
பாவக்கறை படிந்தவனாக இருக்கும் நிலையில் மனிதனை மரணம் வந்தடைந்து விடாமல் இருக்க இறைநம்பிக்கையாளர்களின் பாவங்களை அவனை விட்டு அகற்ற இந்த நோன்பு வழிவகுக்கிறது.
நம்பிக்கையுடன் நன்மையை எதிர்பார்த்து எவர் ரமளானில் நோன்பு வைக்கிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று இறைத்தூதர் (ஸல்) கூறியுள்ளார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி முஸ்லிம் திர்மிதி)
Er.ஹமீது சுல்தான்