அவ்லியாக்கள் நித்திய ஜீவன் உள்ளவர்களா?

in பொதுவானவை

சிலர், வலிமார்கள் மரணத்திற்குப் பிறகும் உயிருடன் உள்ளனர் என்றும், வேறு சிலர் இறந்து விட்டனர் என்றும் இரு வேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். இதில் எது சரியானது என்பதைத் தெளிவாக ஆராய்ந்தாலே இதன் உண்மையை விளங்க முடியும்.

முதலில் (மரணித்த பின்னும்) ‘உயிருடன் இருக்கிறார்கள் என்ற கருத்துக் கொண்டோரின் வாதங்களைப் பார்ப்போம்.

“அல்லாஹ்வின் பாதையில் வெட்டப்பட்டோரை இறந்தவர்களென்று எண்ண வேண்டாம்; அவர்கள் உயிருடன் உள்ளனர். இறைவனிடமிருந்து உணவும் அளிக்கப்படுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளித்த பேருபகாரங்களை எண்ணி மகிழ்ச்சியில் நினைத்தவர்களாக உள்ளனர்”. அல்குர்ஆன் 3:169,170

அல்லாஹ்வுடைய பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களென கூறாதீர்கள்! அவர்கள் உயிருடன் உள்ளனர். எனினும் அதனை நீங்கள் உணர இயலாது”. அல்குர்ஆன் 2:154

மேற்கூறிய இரண்டு ஆயத்துகளும் (திருகுர்ஆன் வாக்கியங்களும்) அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தை மிகத்தெளிவாக பறைசாற்றுகின்றன. திருகுர்ஆனே இவ்வளவு தெளிவாகக் கூறும்போது நாம் எப்படி மறுக்க இயலும்? என்பது முதல் சாராரின் வாதம். மேலும் கப்ருகளை (மரித்தவர்களின் அடக்க ஸ்தலங்களை) நாம் காணும் போது, ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று கூற வேண்டும். என்று ஹதீஸில் வருகின்றது. ‘ஸலாம்’ உயிருள்ளவர்களுக்குத்தானே சொல்ல முடியும் அதனால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது என்று கூறுகின்றனர்.

இந்த ஆதாரங்கள் சரியானது தானா? என்பதை நாம் ஆராய்வோம். மேற்கூறிய ஆயத்துகள் எப்பொழுது, எதற்காக இறங்கியது என்பதைக் கவனித்தால் தான் அதன் முழுப்பொருளைப் புரிந்து கொள்ள முடியும். பத்ரு போர்க்களத்தில் சில சஹாபாக்கள் (நபிதோழர்கள்) ஷஹீதாக்கப்பட்ட (வீரமரணம் அடைந்த) நேரத்தில் காபிஃர்கள் ‘இந்த முஹம்மது அப்பாவி மக்களை தேவை இல்லாமல் பலி கொடுக்கிறாரே’ எந்தவித பயனுமில்லாமல் அவர்களின் வாழ்வு வீணடிக்கப்படுகின்றதே’ என்று குறை கூறிய போது அவர்களுக்கு பதில் தரும் விதத்தில் இந்த வசனங்களை அல்லாஹ் இறக்கினான். ‘நீங்கள் நினைப்பது போல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்லை. உங்களால் உணரமுடியாத வேறொரு விதமான வாழ்க்கை வாழ்கிறார்கள்’ என்ற பொருள்பட கூறுகிறான். அதனால்தான் முதல் ஆயத்தில் ‘நீங்கள் உணர முடியாது’ என்ற சொல்லையும் இறைவன் அதனுடன் சேர்த்திருக்கின்றான். இரண்டாம் ஆயத்தில் أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ ‘அஹ்யாவுன் இன்த ரப்பிஹிம்’ என்ற சொல்லை இணைத்திருக்கிறான். அதாவது இறைவனின் கண்ணோட்டத்தில் அவர்கள் உயிருடன் உள்ளனர் (உங்கள் கண்ணோட்டத்தில் அல்ல என்ற பொருள்பட)

“காஃபிர்களே! நீங்கள் நினைப்பது போல் அவர்கள் வாழ்வு பயனற்றுப் போய்விடவில்ல மாறாக! அவர்களுக்கு வேறு விதமான உணவுகள் வழங்கப்படுகின்றன. அந்த மகிழ்ச்சியில் அவர்கள் நினைத்துள்ளனர் என்ற பொருள்பட அல்லாஹ் அவர்களுக்கு பதில் கூறுகிறான்” திருக்குர்ஆனுக்குப் பொருள் கொள்ளும் போது எதற்காக, எப்போது அந்த வசனம் இறங்கியது என்பதையும் கருத்தில் கொண்டு தான் விளக்கம் தர வேண்டும்.

எனவே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நம்மில் சிலர் நினைப்பது போல் “நாம் பேசுவதை கேட்பார்கள், நமக்கு பதில் தருவார்கள். நாம் அங்கே செல்வதை உணர்ந்து கொள்வார்கள்” என்பது அதன் பொருள் அல்ல.

அந்த காஃபிர்கள் நினைத்தது போல் “மறு உலக வாழ்க்கை கிடையாது. அவர்கள் மரணித்தவுடன் எல்லாமே முடிந்து விட்டது. மறு உலக சுகங்கள் கிடையாது” என்பதுவும் அதன் பொருள் அன்று.

மாறாக, மனிதர்கள் கண்ணோட்டத்தில் உலகத்துடன் உள்ள தொடர்பைப் பொறுத்தவரையில் அவர்கள் மரணித்து விட்டார்கள். அல்லாஹ்விடம் வேறொரு விதமான வாழ்க்கை அவர்களுக்கு உண்டு என்பதுதான் இந்த ஆயத்துகளின் உண்மைப் பொருள்.

அதனால்தான் நபி(ஸல்) அவர்கள் ‘அந்த நல்லவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவை ரூபத்தில் சுவர்க்கத்தில் சுற்றித்திரிகின்றன’ (முஸ்லிம்) என்று விளக்கம் தந்தனர். நம்மில் பலர் எண்ணிக் கொண்டிருக்கின்ற பொருளில் அல்ல என்பதை இந்த ஹதீஸ் மூலம் தெரியலாம்.

கப்ருகளைக் காணும்போது சலாம் சொல்லுவது அவர்கள் உயிருடன் உள்ளனர் என்ற பொருளில் அல்ல; ஏனென்றால் இந்த சலாம் அவ்லியாக்களுக்கு மட்டும் உரியது அல்ல. எந்த முஸ்லிமின் கப்ரை கடக்க நேரிட்டாலும் சலாம் சொல்லவேண்டும். அதுவும் ‘கப்ருவாசிகளே! உங்கள்மீது சலாம் உண்டாகட்டும்! நீங்கள் முந்தி விட்டீர்கள்; நாங்களும் உங்களுடன் வந்து சேரக்கூடியவர்கள் தான்” என்று இந்த வசனத்தையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். நாம் நம் மரணத்தை நினைவுபடுத்திக் கொள்வதற்காக இதனைச் சொல்ல வேண்டும். நம்முடைய ஸலாம் அவர்கள் செவியில் கேட்கும் என்பது அதன் பொருள் அல்ல. ‘தென்றல் காற்றே! கொஞ்சம் நில்லு’ என்று இலக்கியமாக நாம் அழைக்கின்றோம் என்றால், தென்றல் காற்றுக்கு இந்த அழைப்பு புரியும் என்பது அதன் பொருள் அல்ல. தென்றல் காற்றை அழைப்பது போல் பாவனை செய்கின்றோம்; அது போன்ற இலக்கியம்தான் இதுவும்.

அதனால் முதல் கூட்டத்தினரின் வாதம் மிகவும் பலவீனமானது என்பது நமக்கு நன்கு புலனாகின்றது. இரண்டாவது சாரார் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் முற்றிலும் அந்த வாதத்தை முறியடித்து விடுகின்றன. அவர்களின் ஆதாரங்களைப் பார்ப்போம்.

“ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைக் கட்டாயம் சுவைத்தே தீரவேண்டும்”. அல்குர்ஆன் 3:185, 21:35, 29:57

‘ஒவ்வொரு’ என்ற பதம் எந்த மனிதரையும் இந்த முடிவிலிருந்து நீக்க முடியாத, விதிவிலக்குப் பெற முடியாத விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது; எனவே எல்லோரும் இறந்து விட்டவர்கள் என்பது தெளிவாகின்றது.

ஒரு வாதத்திற்காக, சிலரை இந்த விதியிலிருந்து நீக்கலாம் என்றால், அந்தஸ்தில், வலிமார்கள் எட்டமுடியாத உன்னதமான உயர்வு பெற்ற நபிமார்களுக்கு அந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருகுர்ஆனே மிகத்தெளிவாக நபிமார்களும் மரணித்தவர்கள் என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவாக்குகின்றது. அந்த வசனங்களை நாம் பார்ப்போம். நபி சுலைமான்(அலை) அவர்கள் ‘பைத்துல் முகத்தல்’ கட்டிடத்தைக் கட்டிக் கொண்டிருக்கும் போது மரணித்து விடுகிறார்கள். அவர்கள் மரணித்தது தெரியாமல் ஜின்கள் அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணியைச் செய்து கொண்டிருக்கின்றன. பல நாட்கள் கைத்தடியை ஊன்றியவராகிய அவர்கள் மரணித்த நிலையில் நிற்கிறார்கள். இந்த நிலையில் அவர்களின் கைத்தடியை கரையான்கள் அரித்துக்கொண்டு வந்தபோது, திடீரென அவர்கள் கீழே விழுகிறார்கள். அப்போதுதான் ஜீன்களுக்கு சுலைமான் நபி இறந்து விட்டார்கள் என்ற உண்மை தெரிகிறது. இதனை குர்ஆன்

சுலைமான் மீது நாம் ‘மவ்த்தை’ விதித்தபோது, அவர் இறந்து விட்டார் என்பதை கரையான்களைத் தவித வேறெவரும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. அல்குர்ஆன் 34:14

இந்த வசனம் சுலைமான் நபிக்கு மரணம் சம்பவித்தது என்பதை ‘மவ்த்து’ என்ற வார்த்தையின் மூலம் தெளிவாக்குகின்றது.

‘யாஃகூபிற்கு மரணம் வந்தபோது’ (அல்குர்ஆன் 2:133) என்ற வசனத்திலும் ‘மவ்த்து’ என்ற பதத்தை அல்லாஹ் பிரயோகம் செய்திருக்கிறான். மிகப்பெரும் இரண்டு நபிமார்களே இறந்து விட்டனர். மவ்தாகி விட்டனர் என்றால், வலிமார்கள் எம்மாத்திரம்?

மேலும் நபிமார்களின் தலைவராகிய நபி(ஸல்) அவர்களை நோக்கி ‘நபியே நீரும் மரணிக்கக் கூடியவர், உமக்கு முன் வந்த நபிமார்களும் மரணித்து விட்டவர்கள்’. அல்குர்ஆன்: 29:30

நபி(ஸல்) அவர்களே மரணித்து விட்டவர்கள் என்றால் வேறு யார்தான் (நம்மவர்களின் சிலர் நினைக்கின்ற பொருளில்) உயிருடன் இருக்க முடியும்?

நபி(ஸல்) அவர்கள் இறந்து விட்டபோது, பலரும் அவர்கள் இறக்கவில்லை’ என்று எண்ணியபோது அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் “முஹம்மதை வணங்குபவர்கள் யாரேனுமிருந்தால் (அவர்கள் புரிந்து கொள்ளட்டும்!) முஹம்மது நிச்சயம் இறந்து விட்டார்கள்” என்று சொன்னதும் இங்கே நாம் நினைவு கூறத்தக்கது.

{ 1 comment… read it below or add one }

abdul azeez December 9, 2012 at 12:15 am

அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்

இந்த அவ்லியா அல்லது வலீ என்ற இரு வார்த்தை பிரயோகம் பூமியிலுள்ள மனித இனத்திற்கு பொருந்துமா? என்றால் கண்டிப்பாக கானல் நீர் என்பது உன்மை. இதில் விதிவிலக்கு என்று எடுத்துக்கொண்டால் மலக்குகள் முதற்கொண்டு ஜின்கள் வரை யாரும் தகுதி கொண்டவர்கள் அல்ல ஒரே ஒரு படைப்பான “தாகூத்” தவிர. இந்த தாகூத் பாதுகாப்பு என்பது நம்பிக்கை கொண்டவர்களுக்கல்ல நல்வழி பாதையல்ல.. நிராகர்ப்பவர்களை நரகத்திற்கு பத்திரமாக இழுத்துச் சென்று சேர்ப்பதே தாகூதின் பாதுகாப்பு.

اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا- அல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன்

وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ -ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ – (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்; 2:257

أَنتَ وَلِيُّنَا – நீ தான் எங்களுடைய பாதுகாவலன்.

என்று அல்லாஹ்வை நாம் கூறுகிறோம்.

இப்படி இருக்கையில் இந்த கட்டுரையின் தலைப்பு கேளிக்குரியதன்றோ?

மா சலாம்

அப்துல் அஜீஸ்

Reply

Leave a Comment

Previous post:

Next post: