அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அனாச்சாரங்கள்

in இணைவைத்தல்

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!
இன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் மார்க்கம் மக்களிடையே பரவாமல் தடுப்பதென்ற முடிவுடன் பலவித உத்திகளைக் கொண்டு அவப்பெயர் களையும், முஸ்லிம்களை மாத்திரம் தீவிரவாதத்தை உடையவர்களென பொய்ப் பிரச்சாரங்கள், பிட் நோட்டீஸ்கள் இன்னும் பிற முயற்சிகள் மேற்கொண்டாலும், இஸ்லாம் மார்க்கம் மேலும் மேலும் பரவி சத்தியத்தை நிலை நிறுத்துவதைக் காணலாம்.சத்தியம் அறியாத மக்களிடையே பரவினாலும், இந்த சத்திய மார்க்கத்தில் ஒவ்வொருவரும் நன்மையை ஏவி தீமையை தடுத்து சிறந்த சமுதாய முன்னோடிகளாக திகழக் கூடிய முஸ்லிம்களை ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கி கற்றவர்கள் எனக் கூறிக் கொள்ளும் உலமாக்கள், மெளலவிகள் தங்களின் தவறான பிரச்சாரத்தின் மூலம் ”தர்கா” என்று சொல்லக் கூடிய சமாதிகளின் மீது அடிமைப்பட்டுக் கிடக்க வைத்துள்ளனர். இந்த அடிமைத்தனம் இன்று நேற்றல்ல நூஹு(அலை) அவர்களின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

படைத்த இறைவனை மறந்து, தத்தமது சமூகங்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட நபியின் வழிமுறைகளை (சுன்னத்துகளை) மறந்து, இறைவனால் தூக்கியெறியப்பட்ட ஷைத்தானின் சூழ்ச்சியாலும், தத்தமது மன இச்சைகளைப் பின்பற்றியும் இறைவன் எதை மன்னிக்கவே மாட்டானோ அந்த இணை வைத்தலை செய்து வருகின்றனர்.

இவர்கள் செய்யக்கூடிய செயல்கள் தவறானது என்று நாம் கூறினோம் என்றால், அவர்கள் அளிக்கக் கூடிய பதில் “”உடம்பு சரியில்லையென்றால் டாக்டரிடம் காட்டுகின்றோம்; அவர் குணப்படுத்துகின்றார்; நாம் ஒரு முதலமைச்சரை சில காரணங்களுக்காக சந்திப்பது என்றால் நம்மால் இயலாது. அதற்கு நமக்கு தெரிந்த ஒரு M.L.A., M.P. ஐயோ தான் நமக்கு சிபாரிசு பண்ணக் கூடியவர் என்று நம்புகின்றோம்; செயல்படுத்துகின்றோம். நாமெல்லாம் பெரும் பாவம் பண்ணி இறைவனின் கோபத்திக்கு ஆளாகியுள்ளோம். எனவே நாம் பாவத்தை மன்னிப்பதற்கும் மறுமையில் சிபாரிசு பண்ணுவதற்கும் வக்கீலாகவே அவ்லியாக்களிடம் வேண்டுகிறோம் என்று கூறுவதைக் காணலாம்.

இவர்களுக்கு இறைவன் கூறக் கூடிய பதில் என்ன? தத்தமது நாயகர்களாக நினைக் கூடியவர்களிடத்தில் நடக்கும் அனாச்சாரங்கள் என்ன? என்பதை பற்றிப் பார்ப்போம்.

“தர்கா” என்பது மார்க்கப் பெரியார்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கபுரடிகளாகும். இச்சமாதிகளின் மூலம் வழிகெடுவதுமல்லாமல், பலவித அனாச்சாரங்களைப் புரிவதையும் காணலாம். இது மட்டுமில்லாமல் இறந்துபோய் கபுரில் அடக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதையும் காணலாம். ஏன் இந்த நிலையென்றால் – இறந்துபோன பெரியவர்கள் மூலம் தமது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகின்றன என்ற தீய எண்ணத்தை தவறான பிரச்சாரத்தின் மூலம் மனதில் நிறுத்தி வைத்திருப்பதே முக்கிய காரணமாகும். அவ்லியாக்கள் எனப்படுவோர் யார்? அவர்களின் தகுதிகளாக இறைவன் குறிப்பிடுவது எவற்றை? அவ்லியாக்களை எவர் அறிய இயலும்? இன்னார்தான் அவ்லியா என்பதற்கு என்ன அத்தாட்சி? இறைநேசகர்கள் யார் என்றால், இறைவனை ஏற்று, இறைவனால் அனுப்பப்பட்ட நபியைப் பின்பற்றி, நன்மை தீமைகளை மக்களிடம் எடுத்துரைக்கக் கூடிய மூஃமின்கள் அனைவரும் இறைநேசகர்கள் தான். இதை இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்(தயவு செய்து பார்க்கவும்) 2:195;2:2222;3:76;3:146,148,159;5:13;5:42;5:93;9:4-7,108;10:62,63; 49:9;60:8;61:4
மேற்குறிப்பிட்ட வசனங்களின் வாயிலாகவே இறைநேசகர்களின் அடையாளங்களையும், தகுதிகளையும் குறிப்பிடுகின்றான்.

தர்காவில் அடங்கி இருக்கும் இந்த இறை நேசர்களெல்லாம் தூய இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என்ற நன்நோக்கில் ஊரைவிட்டு, தாம் பிறந்த நாட்டை விட்டு, மனைவி மக்களையெல்லாம் விட்டு சத்தியத்தை எடுத்துரைக்கும் பொருட்டு ஹிஜ்ரத் புரிந்து, மார்க்கத்தை எடுத்துரைத்த இவர்களை இவர்களின் இறப்புக்குப் பின் அவர்களின் கபுரின் மேலாக கட்டிடம் எழுப்பி, அதற்கு வெள்ளையடித்து, பூமாலை, பூக்கள் தூவி அந்த கபுருக்கருகில் பச்சை நிற தலைப் பாகையுடன் ஒருவர் கையில் மயிலிற குடன் அமந்து கொண்டு அங்கு வருவோர் போவோரிடம் அவ்லியா சக்திமிக்கவர் பலவிதநோய்களைத் தீர்க்கக் கூடியவர், பல கராமத்களை உடையவர் என்று கூறி இன்ன அவ்லியாவுக்கு பாத்திஹா ஓதுங்கள் எனக்கூறி, தமக்குத் தெரிந்த அரைகுறையான அரபி வார்த்தைகளை முனுமுனுத்து அதைக் கொண்டு வயிறு வளர்ப்பதைக் காணலாம்.

அங்கு வரக்கூடிய மக்கள் இன்ன அவ்லியாவிடம் வேண்டிக் கொண்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைக் கிடைக்கும். நோய் தீரும் என்று நம்பி வந்து தங்களது ஈமானை இழக்கின்றனர். இந்த மக்கள் என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா? இறைவனை நம்ப மறுத்து, அதற்கு இணையாக வணங்கும் கற்களை நோக்கி, மாரியம்மா, காளியம்மா , மூலியம்மா என்றழைக்கக்கூடிய காஃபிர்களும் கூட கற்களை வணங்குவதால் அவர்களுக்கும் நோய் தீர்ந்து விடுகின்றது. குழந்தை பிறக்கின்றது. இன்னும் பல தேவைகளும் பூர்த்தியாகின்றன. இதை வைத்து அவர்கள் வணங்க கூடிய கற்களை அவ்லியாக்களாக தங்களது பாதுகாவலர்களாக ஏற்றுக் கொள்வார்களா? சிந்திக்கவும். மேலும் நிராகரிப்பவர்கள் செய்யக்கூடிய செயல்களை யெல்லாம், முஸ்லிம் என்ற லேபிளில் செய்வதைக் காணலாம்.

அவர்கள் தத்தமது தெய்வங்களுக்கு வணங்க சூடம், சாம்பிராணி, பத்தி கொளுத்துவது போன்று, நம்மவர்களும் அவ்லியாக்களின் சமாதிகளுக்கு பூச்சூடி, பத்தி கொளுத்தி வருவதைக் காணலாம். அவர்களிடத்தில் விளக்கு ஏற்றி இறுதியில் பிரசாதம் என்ற பெயரில் சாம்பலை அளிக்கின்றார்கள். நம்மவர்களிடத்தில் துவாரஜகோஜனம் என்னும் பெயரில் பத்தி, நாட்டுச் சர்க்கரை, பூ எல்லாம் கலந்த கலவையாக அளிப்பதையும், அதை வாங்கி பக்தி சிரத்தையுடன் உண்பதற்கும், கூட்டம் அடித்து பிடித்து அலைமோதுவதையும் காணலாம். அவர்கள் ஊர் கூடி பால்குடம், தீர்த்தக் குடம் எடுத்தால், நம்மவர்கள் சந்தனக் குடம் எடுத்து விமரிசையாக கொண்டாட்டம் போடுவதைக் காணலாம். இதுபோன்ற பல உதாரணங்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்னும் இந்த அவ்லியாக்களுக்கு பல பாத்திஹாக்கள் ஓதுவதைக் காணலாம். பாத்திஹா ஓதுவதால் பரக்கத் ,செல்வம், சிறப்பு என்று பல கிடைக்கின்றன என்றால்,பாத்திஹா ஓத வைக்கக் கூடிய உங்களுக்கு இது போன்றவை கிடைக்கும் எனில்…. ஓதக் கூடிய பச்சை தலைப்பாகை பண்டாரங்களுக்கு எவ்வளவு கிடைக்க வேண்டும்? அதுவும் நீங்கள் பயணம் செய்து அவ்லியாக்களுக்கு பாத்திஹா ஓதுகிறீர்கள். அவ்லியாவுக்கு பக்கத்திலேயே காலம் பூரா அமர்ந்து இந்த செயல்களை செய்கின்ற இந்த பண்டாரங்கள் உங்களோட கைகளை எதிர்பார்த்து ரூ.5,10க்கு ஆசைப்படுவது எதைக் காட்டுகின்றது?

அங்கிருக்கக் கூடியவர்களுக்கே ஒன்றும் இல்லை….ஆனால் உங்களுக்கு மட்டும் பரக்கத் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுவதை எப்படி எதிர்பார்க்க இயலும்? அதுவும் அவ்லியாவின் மேலே அவர்களுக்கே நம்பிக்கையில்லை. தத்தமது உணவு பிரச்சினை தீர்க்க உண்டியல் நடப்பட்டு, அதில் விழக்கூடிய காசுகளை எதிர்பார்ப்பது எதைக் காட்டுகின்றது? சிந்திக்கவும். இங்கு ஓதக் கூடிய பாத்திஹாக்களுக்குப் பின் கொடுக்கப்படும் நார்சா மிக சிறப்பாக கண்ணியப்படுத்தப்படுகின்றது. பக்தி சிரத்தையுடன் பெற்று தமது சொந்தக்காரர்களுக்கு உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதை சாப்பிடுவதால் பலா முஸீபத்துகள் (நோய் நொடிகள்) வெருண்டோடுவதாகவும் நம்பிக் கொள்கின்றனர். கடையில் இருக்கும் சர்க்கரை, பூ, கல்கண்டு இவைகளுக்கு இருக்கும் இடத்தில் மதிப்பு இல்லை. ஆனால் இது நார்சாவாக உருவெடுத்தால், இவைகளின் மீது அவ்லியாவின் பரக்கத் இறங்கியுள்ளதாக எண்ணுவது எந்த அளவு அறியாமை?

மேலும் இந்த அவ்லியாக்களால் நோய்களையும், பேய்(?)களையும் குணப்படுத்த இயலும் என்று நம்பச் செய்து பேய்(?) பிடித்து இருப்பவர்களை அழைத்து வந்து அவர்களை அங்கு தங்கச் செய்து, பல சித்திரவதைகள் புரிந்து மனநிலை சரியில்லாத்வர்களை குற்றுயிரும், குலையுயிருமாக வெளிக் கொண்டு வருவதையும் காணலாம்.

இறந்தவர்கள் பேயாக வருவதில்லை:
ஒரு மனிதரோ, பெண்ணோ மன அழுத்தத்தின் காரணமாக மன வியாதிக்கு ஆட்பட்டால் அவர்களையெல்லாம் பேய் பிடித்து உள்ளவர் என்று கூறி தர்காக்களில் சங்கிலிகளால் பிணைத்து அவர்களை அடித்து, உதைத்து சித்திரவதைப்படுத்தி தன் வயிறுகளை வளர்க்க மிரட்டி இன்ன இன்ன  பொருள்களை தொடுத்தால் இன்னாரை விட்டு விலகி விடுகின்றேன் எனச் சொல்லச் செய்து, அதே போன்று பொருட்களைப் பெற்று – தர்ம அடிகளை பரிசாகக் கொடுத்து, சுரண்டுவதில் குளிர்காய்கின்றனர்.

மனநிலை சரியில்லாதவர்களை அவ்லியாக்களிடத்தில் சென்றுதான் குணப்படுத்த வேண்டும் என்பதில்லை. இறைவனின் மீது தவக்கல் வைத்து சிறந்த மனநல மருத்துவரை நாடி சிகிட்சை பெற்றாலே போதும். ஆனால் உளறல் பிதற்றல் ஓடுவது, சப்தமிடுவது ஆகிய அனைத்தும் விரோதி சைத்தானின் தூண்டலே. பிறந்த குழந்தை மீண்டும் தாயின் கர்ப்பப்பையில் எப்படி நுழைய முடியாதோ, கறந்த பால் மீண்டும் எப்படி மடிபுகாதோ அதே போல் இறந்தவர்களின் ஆன்மா மீண்டும் இவ்வுலகம் வர முடியாது. 39:42 இறைவாக்கின்படி இறப்பில் கைப்பற்றப்பட்ட ஆன்மா மீண்டும் இவ்வுலகிற்கு வரவே முடியாது. இப்படி இருக்கையில் இறந்த ஒருவரின் ஆன்மா மற்றொருவதை சார்வது எப்படி சாத்தியமாகும்? சிந்திக்கவும்!

“கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களையும் அவற்றில் பள்ளிகள் கட்டுபரைவுயும் விளக்கேற்றுபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தனர்.”  ஆதாரம்: அபூஹுரைரா(ரழி), நூல்: ஸுனன்.

மேற்காணும் ஹதீஸுக்கு மாறாக பெண்கள் சாரைசாரையாக கபுருக்கு செல்வதையும் விளக்கேற்றுவதையும் கப்ரின் மேலே கட்டம் கட்டப்பட்டுள்ளதையும் காணலாம். இச்செயல்கள் மிக வேதனைக் குரியதாக உள்ளன. நபி(ஸல்) அவர்களை நேசிப்பதகாவும், உயிருக்கு மேலானவர்கள் என்று எண்ணக்கூடியவர்கள் கீழ்வரும் ஹதீஸை கவனிக்கவும். நபியின் மகளார் பத்திமா(ரழி)க்கே கப்ருக்கு சென்றால் கடுந்தண்டனை கிடைக்கும் என்பதை காணலாம்.

நபி(ஸல்) அவர்களோடு சென்று நாங்கள் ஓர் மைய்யத்தை அடக்கம் செய்த பின் அவர்களோடு அந்த இறந்தவரின் வீட்டின் பக்கம் திரும்பி வரும் போது எதிர்பாரா வண்ணம் ஒரு பெண் முன்னாலிருந்து வருவதை நபி(ஸல்) கண்டுவிட்டனர். அப்பெண் எவர் என்பதை நபி(ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்று நான் எண்ணிணேன். அவர் பாத்திமா(ரழி) அவர்கள் தாம்! எனவே நபி(ஸல்) அவர்கள் (தம் அருமை மகளாரை நோக்கி)” உம்முடைய வீட்டிலிருந்து எக்காரணம் கொண்டு வெளி வந்தீர்! என்று வினவினார்கள்; அதற்கு பாத்திமா(ரழி) அவர்கள், இறந்தவரின் குடும்பத்தினரிடம் சென்று அவர்களுடைய இறந்த உறவினருக்கு இறையருளைக் கேட்டுவிட்டு அவர்களுக்கும் அனுதாபம் கூறிவிட்டு வருகிறேன் என்று கூறினார்கள். (அது கேட்ட) நபி(ஸல்) அவர்கள் நீர் அவர்களுடன் அவரின் அடக்க இடத்திற்கு சென்றீரா? என்று வினவ (அதற்கு) பாத்திமா(ரழி) அல்லாஹ் என்னை காத்தருள்வானா! நிச்சயமாக தாங்கள் இதுபற்றி (கூடாது என்று) கூறி வந்ததை நான் செவியுற்றேன்”என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் நீர் அவர்களோடு (அவரின்) அடக்கதலத்திற்கு சென்றிருப்பீராயின் அதன் காரணமாக உமக்கு கடும் வேதனையுண்டு என்று கூறி “”உன் தந்தையின் பாட்டன் சொர்க்கம் செல்லும் வரை நீயும் செல்ல முடியாது” என்று கூறினார்கள்.
ஆதாரம்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரழி), நூல்: அபூதாவூத், நஸயீ.

மேற்கண்ட ஹதீஸின் வாயிலாக பெண்கள் கப்ருக்குளுக்குச் சென்றால் கடுந்தண்டனை உண்டு என்பதை உணரலாம். இது மாத்திரம் அல்லாமல் தர்காக்களில் தட்டு, தாயத்துகள் விற்கப்படுகின்றன. இதைக் கொண்டு (செப்புத் தகட்டில்) ஏதோ சில அரபி வாசகங்களை எழுதி தத்தமது வீடுகளின் முகப்பில் பிரேமிட்டு மாட்டி விட்டால் முஸீபத்துகள், கெட்ட செயல்களெல்லாம் விலகிவிடும் என்றும், தாயத்துகள் அணிந்து கொண்டால் பேய்கள், ஆவிகள், பயம் ஆகியவற்றி லெல்லாம் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று விற்பனை செய்கின்றனர். இதை நம்பி வாங்கக் கூடிய மக்கள் இந்த தகடு, தாயத்துகள் மீது மிகுந்த மரியாதை செலுத்துவதையும் காண்கின்றோம். இந்தப் செப்புத் தகட்டிற்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பத்தி, சாம்பிராணி போடப்பட்டடு மிக பக்தி சிரத்தையுடன் பாதுகாக்கின்றனர். ஆனால் இதற்கு அளிக்கக்கூடிய சிரத்தையை குர்ஆனுக்கு அளிக்கின்றார்கள்? என்பதை பார்த்தோமானால் நிச்சயம் இல்லையென்றே சொல்லலாம்.

குர்ஆனை பக்குவமாக பட்டுத்துணியெடுத்து அதை உறையாக தைத்து உயரமான இடத்தில் வைத்து விடுகின்றனர்; ஒரு சிறைக் கைதியைப் போல. ஏனெனில் சிறையில் இருக்கக்கூடிய ஒருவன் தான் பரோலில் வெளியே வந்து, பரோலின் காலம் முடிந்த பின் மீண்டும் சிறைக்கு செல்வானோ, அதுபோல குர்ஆனை உயரமான இடத்தில் வைத்து விட்டு, வீடுகளில் எவரேனும் இறந்து, இறந்தவர்களுக்கு -3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்ற நிலைக்கு மாத்திரம் குர்ஆனை கையிலெடுத்து அரபி வாசகங்களை ஓதிவிட்டு, மீண்டும் இருந்த இடத்திலேயே வைக்கின்றார்கள். இறைவன் “”குர்ஆன்”க்கு மாத்திரம் பேசக் கூடிய சக்தியை அளிதிருப்பானாயின் குர்ஆன் இறைவனிடத்தில் பிரார்த்திக்கும் “”யா இறைவா இன்னார் வீட்டில் தொடர்ந்து மரணத்தை அளிப்பாயாக”, ”அப்பொழுதுதான் என்னைக் கையிலெடுத்து ஓதுகின்றார்கள் ” அந்த சந்தர்பத்திலாவது எனக்கு விடுதலை கிடைக்கின்றதாகப் பிரார்த்திக்கும்.

-குர்ஆனைப் பற்றி இறைவன் தன் திருமறையில் இந்த குர்ஆனை நன்கு நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:40)

இதற்கு மாற்றமான முறையிலேயே பயன் படுத்துவதைக் காணலாம். மேலும் தாயத்துகளை அணிவதை ஹதீஸ் தடை செய்கின்றது. இதுமட்டுமல்ல சந்தனக்கூடு – உரூஸ் என்ற பெயரில் பல அனாச்சாரங்களும் நடக்கின்றன.

சந்தனக்கூடு – உரூஸ் அன்று விசே­பாத்திஹாக்கள் ஓதப்பட்டு, சந்தனம் ஊற்றப்பட்டுள்ள சந்தனக் குடத்தை ஊர்வழியாக ஊர்வலம் சென்று அவ்லியாக்களின் சமாதிகளில் பூச, விழா ஏற்படுத்தி அந்த விழாவில் கூட்டங்கள் அலைமோ, ஆண், பெண் இருபாலரும் கூட்டத்தின் நெரிசலில் இடித்து, கெட்ட செயல்களையெல்லாம் புரிந்து அனாச்சாரங்களை நிறைவேற்றும் இடங்களாக அவ்லியாக்களின் சமாதிகளுகும், அடக்க ஸ்தலங்களும் பயன்படுகின்றன.

இந்த உரூஸில் சிலம்பாட்டம், ஒலியாட்டம், குரங்காட்டம் போன்ற பல செயல்களை இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத முற்றிலும் மாற்று இனத்தவர்கள் புரியக் கூடிய செயல்களை இஸ்லாமிய திருவிழா போல நடத்துவதைக் காணலாம்.

இதுவும் அல்லாமல் பூக்குழி இறங்குதல் என்ற பெயரில் நெருப்பு மிதித்தல் என்ற நிகழச்சியையும் நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி எதன் வாயிலாக நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி எதன் வாயிலாக என்றால் தாங்கள் குடும்பத்தார்கள் படைத்த இறைவனை விட்டு தனது அடிமையிடம் தாங்களது பிரார்த்தனையை வேண்டி, அந்த பிரார்த்தனைகள் இறையருளால் பூரணம் ஆனால் – அது அந்த அவ்லியாவால் தான் நடந்தது என்று எண்ணி அந்த அவ்லியாவுக்கு நன்றிக் கடன் செலுத்துவதாக எண்ணி இந்த நெருப்புக் குழியில் இறங்கி, தங்களது நேரத்தையும், கால்களையும் புண்ணாக்கி கொண்டு, யா முஹைதீன், யா காஜா என்றெல்லாம் கூப்பாடுகளிட்டு அலறுவதில் எத்தகைய பயனும் இல்லை.

அந்த அவ்லியாவுக்கு நேர்ந்து முடி இறக்குவதும், ஆடு மாடு, கோழிகளை அறுத்து பலியிடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  மேலும் அந்த அவ்லியாக்களின் சமாதிகளில் விபச்சாரங்களும், சீட்டாட்டங்களும், மது விற்பனைகளும் நடப்பதை காண்கையில் நிச்சயமாக இந்த இடம் புனிதமானதாகவோ, பயணம் செய்யக்கூடிய இடங்களோ என்றால் நிச்சயமாக இல்லை. அதுவும் அவ்லியாக்களின் பெயரைக் கேட்டால் சிரிப்பு வரவழைக்கும் பெயர்களைக் காணலாம்.

பீர்அவ்லியா, சட்டி மஸ்தான், நெட்டைபாவா, சைதானீபீவி அவ்லியா என்றெல்லாம் அழைக்கப்பட்டு இந்த அவ்லியாக்களுக்கும் கராமத்துகள் உண்டென்று நம்ப வைத்து பணம் சுரண்டி உண்டு வருவதையும காணலாம். இதுபோன்ற பெயர்களில் எல்லாம் உள்ள அவ்லியாக்கள் நிச்சயமாக இறை நேசகர்களாக இருக்க முடியாது. ஏனெனில் எங்க ஊர் பக்கம் ஒரு கதை சொல்வாங்க.
(இக்கதை மார்க்கமல்ல)

ஓர் ஊரில் தகப்பனும், மகனும் வசித்தார்கள் அவர்கள் இருவரும் வேலை என்றாலே வேப்பங்காய் கசப்பை போன்றதாக எண்ணுபவர்கள். இந்நிலையில் ஊரார்கள் இவர்களின் நிலையைக் கண்டு அடித்து விரட்டவே, இவர்கள் தங்கள் உணவிற்காக அடுத்த ஊரை நோக்கிச் சென்றார்கள். செல்லும் போது தகப்பனுக்கு ஓர் எண்ணம்!

தன் மகனிடம் “”மகனே நீ பக்கத்து ஊருக்கு போ, நான் வேறு ஊருக்கு செல்லுகின்றேன்” என்று கூறி சென்று விடவே, மகன் பக்கத்து ஊருக்குச் சென்றான். பக்கத்து ஊரில் அவனுக்கு எவரும் உணவளிக்க மறுக்கவே, உட்கார்ந்த இடத்திலிருந்தே உண்ணவும், பணம் சம்பாதிக்கவும் எண்ணிய அவன், அவ்வழியே சென்ற ஒரு நொண்டிப் கழுதையினை அடித்து புதைத்து விட்டு, புதைத்த இடத்தில் மண் கோபுரம் எழுப்பி, அதற்கு பூஜைகளை செய்து வந்தான். அவ்வழியே வருவோர் போவாரிடம், இன்ன இடத்தில் மிகப் பெரிய மகான் ஒருவர் அடங்கி உள்ளார். இவருக்கு பல சக்திகள் உண்டு, நோய்களை தீர்ப்பார், பேய்களை விரட்டுவார் என்றெல்லாம் கூறவே, அதை நம்பிய மக்கள் தத்தமது தேவைகளை நிறைவேற அந்த மிகப் பெரிய(?) மகானிடம் வேண்ட அதுவும் ஏதோ காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக நிறைவேற, கூட்டம் கூடவே, மகானுக்கு தட்சணை என்ற பெயரில் மக்கள் பொருட்களையும், பணங்களையும் கொடுக்க அதை மகன் எடுத்து தம் வயிற்றுப் பசி நீக்கி, எஞ்சிய பொருட்களில் மிகப்பெரிய வீடுகட்டி வாழ, அதை அறிந்த தகப்பன் வந்து சேர்ந்து, மகனிடம் நீ எவ்வாறு இவ்வளவு பெரிய ஆளாக ஆனாய்? என்று வினவவே, அவன் “”கழுதை மிகப்பெரிய மகானான கதை” கூறினார். இந்த சிந்தனை எனக்கு வரவில்லை,என்று கூறி “மகனுடன் தகப்பனும் சேர்ந்து கொண்டான்”.

மேற்கண்ட கதையைப் போலவே தத்தமது வயிறுகளை வளர்க்க நம்மவர்கள் உருவாக்கிய பல சமாதிகளாக பல தர்காக்கள் கட்டி வைத்துக் கொண்டு மக்களிடம் சுரண்டி வருகின்றனர். மேற்கூறப்பட்ட செயல்களுக்கும், அவ்லியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மேலும் இறைவனும், இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டி தந்த முறைதானா என்றாலும் இல்லை. மாறாக இறைவன் தன் திருமறையில், தன்னை விட்டு தன் அவ்லியாவிடம் கையேந்துபவர்களை நோக்கிக் கூறுகின்றான்.

“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி, எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்களும், உங்களைப் போன்ற அடிமைகளே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்லுபவர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.” (அல்குர்ஆன் 7:194)

“”….அவர்களுக்கு கால்கள் இருக்கின்றனவா? அவைகளைக் கொண்டு நடக்கின்றார்களா? அவர்களுக்குக் கைகள் இருக்கின்றனவா; அவைகளை கொண்டு பிடிக்கின்றாரக்ளா? அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றனவா; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனரா? அவர்களுக்கு காதுகள் இருக்கின்றனவா; அவைகளைக் கொண்டு கேட்கின்றனரா? (அல்குர்ஆன் 7:195)

இறந்துவிட்ட அவ்லியாவுக்கு கால்கள் இருந்தும் நடந்து வர இயலாது. கைகள் இருந்தும் அதைக் கொண்டு எவ்வித செயல்களை செய்ய இயலாது. கண்கள் இருந்தும் எந்த ஒரு பொருளையும் பார்க்க இயலாது. காதுகள் இருந்தும், (கேட்கும் பிரார்த்தனைகளை) செவி சாய்த்து, பதில் கூறவோ சிபாரிசு பண்ணவோ இயலாது. மேலும் அவ்லியாக்களுக்கு நேர்ச்சை புரிந்து, ஆடு,கோழி, மாடுகளை அறுத்து பலியிடுகின்றனர். பலியிடுவது முழுவதும் அல்லாஹ்வுக்கே….

“” கால்நடைகளிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு நேர்ச்சைக்காக) இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி, நாங்கள் விரும்புகிற (புரோகிதர், அவ்லியா முதலிய) வர்களைத் தவிர, (மற்றெவரும்) அதனைப் புசிக்க கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.” (அல்குர்ஆன் 6:138)

அவ்லியாக்கள் எங்களுடைய கனவில் வந்து இன்ன தர்காவிற்கு வரச் சொன்னார். அதனால் போகின்றோம் எனக் கூறி தர்காக்களுக்கு செல்லுபவர்களுக்கென அல்லாஹ் கூறுகின்றான்.

“”(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) என்னுடன் இருப்பவர்களின் வேதமும், (அதவாது, குர்ஆன் இன்ஜில், தவ்றாத்) இதோ இருக்கின்றன.(அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதற்கு) உங்களுடைய அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்” என்று கூறும். எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிந்து கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். (அல்குர்ஆன் 21:24)

மேற்கூறப்பட்ட வசனத்திலிருந்து அவ்லியாக்களை வணங்குவ தற்கும், நேர்ச்சை புரிவதற்கும் எந்தவித அத்தாட்சியையும் இறைவனு டைய வேதத்திலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்து எவரும் கொடுக்க முடியாது என்பதை உணரலாம்.

எனவே இறைவனுடைய வாக்கான “”இணைவைத்தலை மண்ணிக்கவே மாட்டேன் ” என்பதற்கிணங்க நாமும் நம் பின்வரும் சந்ததிகளும் இதுபோன்ற விலக்கப்பட்ட செயல்களை விட்டு விலகி, நன்மையை ஏவி தீமையை தடுத்து ரஸூல்(ஸல்) காட்டி தந்த முறையை செயல்படுத்த நம்மீது இறைவன் அருள்புரிவானாக!

 

N.M.ஈஸா, பேட்டவாய்த்தலை

{ 2 comments… read them below or add one }

haja jahabardeen January 9, 2011 at 3:27 am

your text is really super , but , the muslim people is doing still , the some people is going to darga regular.

Reply

amran March 24, 2011 at 5:12 am

your text is really super , but , the muslim people is doing still , the some people is going to darga regular.

Reply

Leave a Comment

Previous post:

Next post: