أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ ﴿١﴾ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ ﴿٢﴾ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ ﴿٤﴾ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ
1.யானை(ப்படை)க்காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்க வில்லையா? 2.அவர்களுடைய சூழ்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 3.மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பினான். 4.சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 5.அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப்போல் அவன் ஆக்கி விட்டான்.
யானைப்படை அழிந்த வரலாறு
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன், அப்ரஹா என்ற பெயருள்ள அரசன் மக்காவிற்கு கிழக்கிலுள்ள எமன் நாட்டில் அரசு செலுத்தி வந்தான். இயற்கையில் அவன் துற்குணமுள்ளவன். மக்காவிலுள்ள கஃபாவானது அரபியர்களிடம் விசேஷ மதிப்பு பெற்றிருந்தது பற்றி அவன் பொறாமை கொண்டு தன் நாட்டின் தலைநகர் ஸன்ஆ விலும்மொரு பெரிய கோவிலை கட்டினான். மக்காவிற்குச் ஹஜ்ஜு செய்யக் கூடாதென்றும் தன்னுடைய கோவிலுக்கே எல்லோரும் வரவேண்டுமென்றும் பிரகடன படுத்தினான். இவன் வார்த்தைக்கு ஒருவரும் மதிப்பு கொடுக்கவில்லை.
அரபியர்கள் வழக்கப்படி கஃபாவிற்கே யாத்திரை போனார்கள் இவன்கட்டிய கோவிலுக்கு யாரும் வரவில்லை. அதைப்பற்றி அவனுக்கு அதிக வருத்தம் உண்டு. இப்படியிருந்து வரும் சமயம் இவனுடைய கோவிலில் மலபாதை கழித்து ஆபாசம் செய்துவிட்டார்கள். அதைப்பற்றி விசாரிக்கும்போது அவ்வாறு செய்தது மக்காவாசி என்று தெரிந்தது. சிறிது காலத்திக்குப்பின் அந்தக் கோவிலும் தீப்பற்றி எரிந்து விட்டது. விசாரணையில் மக்காவாசியே தீ வைத்ததாக தெரிந்தது. இவ்விரு சம்பவங்களாலும் இயற்கையில் அவனுக்கு கஃபாவின் மீதும் மக்கா வாசிகளின் மீதும் இருந்து வந்த கோபம் மிகவும் அதிகமாகி விட்டது.
கஃபாவை இடித்து நாசம் செய்துவிட வேண்டுமென்று தீர்மானித்து, ஒரு பெரிய படையுடன் மக்காவை நோக்கி புறப்பட்டான்.அப்படையில் யானைகள் அதிகம் இருந்ததால் யானைப் படைகள் என்று கூறப்பட்டது. அதில் மிகப்பெரிய யானையின் பெயர் மஹ்மூது. கஃபாவை மட்டும்தான் இடித்துத் தகர்க்கப் போவதாகவும் பொதுமக்களுக்கு எத்தகைய இடையூறும் விளைவிக்கப் போவதில்லையென்றும் ஆனால் இடிப்பதை எவராவது தடுத்தால் எல்லோரையும் தொலைத்து விடுவதாயும் முற்கூட்டியே மக்காவாசிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி விட்டான். இதனால் நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிபைத் தவிர்த்து பாக்கியுள்ள மக்காவாசிகள் அனைவரும் பீதியினால் நகரை விட்டும் பக்கத்திலுள்ள மலைகளில் போய் மறைந்து கொண்டார்கள்.
அப்துல் முத்தலிபும் அப்ரஹாவும்
அப்ரஹாவின் படைகள் மக்காவிற்குச் சிறிது தூரத்திலுள்ள வாதியே முகஸ்ஸர் என்ற இடத்தில் தங்கி இருந்தன. ஒரு தினம் அப்துல் முத்தலிப் அவர்கள் அப்ரஹாவிடம் விஜயம் செய்ய, அப்ரஹா அவர்களை வரவேற்று உமது தேவை என்ன என வினவினான். எனது ஒட்டகைகளை உமது படையினர் பிடித்துக் கொண்டார்கள், அதனைப் பெற்றுச் செல்லவே வந்திருக்கிறேன் என்றார். இதைக்கேட்ட அப்ரஹா வியப்புடன் உமது ஒட்டகையைப் பற்றிய விசயத்தைத்தான் தெரிவிக்கிறீர், நான் கஃபாவை இடிக்க வந்திருக்கிறேனே அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே என்று அப்ரஹா சொல்ல அதற்கு முத்தலிப் ஒட்டகைக்கு நான் சொந்தக்காரன் என் பொருளை நான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் கஃபாவின் சொந்தக்காரன் வேறு. அவன் உடமையை அவன் காப்பாற்றிக்கொள்வான். என அர்த்தமுடன் பதிலுரைத்தார். ஒட்டகைகளைக் கொடுத்து அப்துல் முத்தலிபை அனுப்பிவிட்டு அப்ரஹா காஃபாவை இடித்து தரை மட்டமாக்கும்படி தனது யானைப்படைக்கு உத்தரவு பிறப்பித்தான். கட்டளையை நிறைவேற்ற யானைப்பாகர்கள், யானைகளை எவ்வளவுதான் அடித்து மிரட்டியும் அவை ஒரு அடிகூட முன் எடுத்து வைக்கவில்லை. ஏனேன்றால் மஹ்மூது என்ற தலமை யானை கஃபாவை நோக்கிச் செல்ல மறுத்து முன்னால் படுத்து விட்டது. அதைக் கிளப்ப அவர்களால் முடியவில்லை. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அவைகள் முழுச் சத்தியாக்கிரகம் செய்துவிட்டன.
கரு நிறமான பறவைகள்
இச்சமயம் ஜித்தா கடற்கறையின் திசையிலிருந்து கரு நிறமான பறவைகள் கூட்டங் கூட்டமாக பறந்து வந்தன. ஒவ்வொரு பறவையின் இரு கால்களிலும் அலகிலும் பொடிக் கற்கள் இருந்தன. யானைப் படையினர் நேருக்கு நேர் அவை வந்ததும் ஆகாயத்தில் பறந்துக்கொண்டே அப்பொடிக் கற்களை படைகள் மீது எறிந்தன. அக்கற்கள் யார்மீது விழுந்தனவே அவர்கள் மெல்லப் பட்ட வைகோள்களின் சக்கை போன்று ஆயினர்.
கஃபாவை இடித்துத் தள்ள கட்டளை பிறந்தபொழுது மறுத்துச் சத்தியாக்கிரஹம் செய்த யானைகளைத் தவிர்த்து மற்றெல்லாப் படையினரும் இக்கதிக்குள்ளாயினர். ஆங்காங்கே மலைகளில் மறைந்துக் கொண்டிருந்த மக்காவாசிகள், குரைஷிகள் கண்கூடாக பார்த்தனர். கஃபாவை தாக்க வந்த பெரும்படை சிறிய பரவைகளால் நாசமாக்கப்பட்டது, நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னறிக்கையான அற்புதம் என்றும் கூறப்படுகின்றது. இச்சம்பவம் நடந்த 55 வது நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.
எனவே, தங்களின் படை பலத்தாலோ, செல்வச் செருக்காலோ, நாவன்மையாலோ அல்லாஹ்வின் மார்க்கத்தை அழித்துவிடக் கணவு காண்பவர்கள், யானைப் படையின் கதியும், அதன் சம்பவமே போதிய சான்றாகும்.
மெளலவி E.M.அப்துர் ரஹ்மான்
Comments on this entry are closed.