அப்துஸ்ஸமத் மதனீ,  ஆத்தூர்

  وَمنْ يُناَدِي اسْمِــيْ أَلْفًا بِخلْوتِهِ   عَزْماً بِهِـمَّـتِـهِ صَرْمًا لِغَفْوَتِــهِ

أَجَـبْـتُهُ مُسْرِعًا مِنْ أَجْلِ دَعْوَتِـه   فَلْيَدْعُ يَا شَيْخُ عَبْدَ الْقَادِرْ مُحْيِ الدِّيْنِ

   அன்புடையோர்களே! கனவான்களே! இந்த பதம் என்னவென்றுத் தெரிகிறதா? யாகுத்பா என்ற பெயரில் நமது ஏரியாக்களில் பக்திப்பரவசத்தோடும், மச்சானைப் பார்த்தீங்களா? என் மனவாழைத் தோப்புக்குள்ளே! கிளியக்கா கொஞ்சம் நீ பார்த்துச் சொல்லு! வந்தாராக் காணலியே! என்ற மெட்டிலும், கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே! காட்டினிலே வாழ்வதற்கோ கன்னி இளமானே! என்பன போன்ற பழைய மற்றும் புதுப்புது சினிமாப் பாட்டுக்களில் மெருகூட்டி பக்திபரவசத்தோடும் கோரஸாக அணிகள் பல அமைத்தும் நம் பகுதிகளில் பாடப்படுகின்றது. இந்தப் பாட்டின் அர்த்தமென்ன? தாங்களுக்குத் தெரியுமா? என்று ஓதக்கூடிய நம்மூர் சகோதரர்களிடம் கேட்டால், தெரியாதே என்றுதான் பதில் வரும். இதோ! அதன் பொருள்:

    எவர் என்னை தனியாக இருந்து, தன் முயற்சியில் உறுதி கொண்டவராக தன்னுடைய சோர்வை முறித்து சுறுசுறுப்பானவராக என் பெயர் கூறி ஆயிரம் தடவை அழைப்பாரோ அவர் இவ்வாறு அழைத்ததன் நிமித்தம் விரைந்தோடி வந்து அவருக்கு பதில் அளிப்பேன். எனவே, ஷைகு அப்துல் காதிர் முஹைய்யத்தீனே! என்று அவர் என்னை அழைப்பாராக!

     ஆயிரம் தடவை கூப்பிட்டதும் கூப்பிட்டக் குரலுக்கு பதிலளித்து அப்துல் காதீர் ஜீலானி (ரஹ்) அவர்கள் வருகிறார்களா? அதுவும் ஆத்தூரில் இருந்து அழைத்தாலும் அல்லது அமெரிக்காவிலிருந்து எவர் அழைத்தாலும் பக்தாதில் அடக்கப்பட்டுள்ள அப்துல் காதிர் வருகிறார்களா? இவ்வளவு ஆண்டுகளாக அறியாமையில் அல்லவா நாம் இருந்து விட்டோம். இதை பாகவீகளும், மிஸ்பாஹிகளும் நமக்குச் சொல்லித்தராமல் எவ்வளவு பெரிய அரும் பாக்கியத்தை அடைவதிலிருந்து நம்மைத் தடுத்துவிட்டார்கள்.

     ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் அவர்கள் பேரில் கொடியேற்றி, உண்டியல் குலுக்கி, அரிசி மாவு பவுடரை உண்டியலில் பைசா போடும் பெண்களிடம் லாவகமாகக் கொடுத்துப் பரவசமடைந்து, பத்து நாட்களாக புதுப்புது சினிமாப் பாடல்களில் மெட்டமைத்து பாக்களைப்பாடி, கடைசி நாளன்று அவர்கள் பெயரில் நெய்ச்சோறு ஆக்கி ஆக இப்படி என்னவெல்லாமோ அப்பன் பாட்டன் வழியாக கண்டதை செய்து எவ்வளவோ பக்தி பரவசத்தை வெளிக்காட்டுகிறோம்தான். ஆனால், அப்துல் காதிர் ஜீலானீ அவர்களைக் கூப்பிட்டு குளத்தாங்கரைத் தெருவில் அவர்களை ஆஜர்ப் படுத்துவது அல்லவா பக்தியின் உண்மை வெளிப்பாடு.

     இவ்வளவு ஆண்டுகளாக இதுபற்றி வாய்த்திறக்காமல் மூடி மறைத்தவர்களை நான் கண்டிக்கிறேன். இருந்தாலும் பரவாயில்லை! இந்த விஷயத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை அல்லாஹ் என் இதயத்தில் போட்டதற்காக நன்றி செய்வோம். கவலை வேண்டாம். இவ்வளவு காலமாக பெற முடியாத பாக்கியத்தை வரும் ஆண்டாவது பெற முயற்சிப்போம். அக்கம் பக்கத்திற்கெல்லாம் இப்போதிருந்தே அறிவிப்புகள் செய்வோம்.

    இந்த ஆண்டு இன்னக்கிழமைக்கு நாங்கள் எங்கள் ஊருக்கு ஜீலானீ அவர்களை அழைக்கிறோம். எனவே, யாரும் அவர்களை அதே நாளில் அதே நேரத்தில் அழைத்து அவர்களைச் சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். ஏனென்றால், பக்கத்து ஊர்க்காரர்களும் அதே சமயம் அழைத்து முடிப்பார்களேயானால் அவர்களுக்கு எங்கு போவதென்றே தெரியாமல் சங்கடமாகிவிடுமல்லவா? அதற்காகத்தான் சகல முன்னேற்பாடுகளும் செய்து கொள்ள உங்களை அழைக்கிறேன். நானும் என்னால் முடிந்த அளவுக்கு இண்டர்நெட்டின் மூலமாக இது பற்றிய அறிவிப்பைச் செய்கிறேன். கவலை வேண்டாம். தயாராகுங்கள். தீவிரமாக முழு முயற்சியோடு அக்கம் பக்கத்திலிருந்து வருவோர் போவோரிடமெல்லாம் தயவாக இந்த வருடம் நீங்கள் யாரும் கூப்பிடாதீர்கள் எனக் கேட்டுக் கொள்ளுங்கள். எல்லோரையும் வரும் திருவிழா நாளில் ஆத்தூரில் குளத்தாங்கரைத் தெருவில் அணி திரள அழைப்புக் கொடுங்கள்! இந்தப் பாக்கியத்தை ஒரு முன் மாதிரியாகச் செய்து நம் மாவட்டத்துக்கே இல்லை! இல்லை! நம் மாநிலத்துக்கே முன்னோடியாகத் திகழ முடிவெடுங்கள். ஈமான் வாழ்க! இஸ்லாம் வாழ்க! வாழ்க!

    ஒன்று படுவோம்! ஒரே குரலில் கூப்பாடு போட்டு அழைப்போம்! அப்துல் காதிர் ஜீலானீ (ரஹ்) அவர்களை குளத்தாங்கரைத் தெருவில் கொண்டுவந்து நிற்பாட்டி கண்டு களித்து தரிசனம் பெற்று தரணியில் பெருமைப் பட்டு பேசித்திரிவோம்! செய்வீர்களா?

 

       

 உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த