முஸ்லிம்களில் பலர் நாங்கள் சாதரணமானவர்கள் குர்ஆன் ஹதீஸை எப்படி விளங்க முடியும்? மொழிபெயர்ப்புகளைத்தானே நம்ப வேண்டியுள்ளது என மத்ஹபுகளை நியாயப்படுத்துவோர் எடுத்து வைக்கும் அர்த்தமற்ற வாதங்களில் இதுவும் ஒன்றாகும். இது குர்ஆன் ஹதீஸையே பின்பற்றவேண்டும் என்ற கொள்கை உடையவர்களுக்குக் கூட தடுமாற்றத்தை ஏற்படுத்தும் தவறான  வாதமாகும் இது.

    குர்ஆனும் ஹதீஸ்களும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளன என்பது உண்மைதான். அரபு மொழி அறியாத மக்கள் மொழி பெயர்ப்புகளைத்தான் நம்ப வேண்டியுள்ளது என்பதும் உண்மைதான். இந்த காரணங்களுக்காகத்தான் அரபு மொழி அவசியம் என்றால் மத்ஹபுடைய இமாம்கள் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மொழியில்தான் சட்டங்களை எழுதினார்களா? நான்கு இமாம்களும் தங்கள் தாய் மொழியாக அரபி மொழியைக் கொண்டவர்களே. அவர்கள் எழுதிய அல்லது எழுதியதாக சொல்லப்படுகின்ற நூல்கள் யாவும் அரபு மொழியில் அமைந்தனவையே.

    இதே வாதத்தின்படி இவர்கள் என்ன சொல்ல வேண்டும்? மத்ஹபுகளின் சட்டங்கள் அரபு மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதாலும், அந்த இமாம்கள் அரபியராக இருந்ததனாலும் மத்ஹபுகளும் அதன் சட்டங்களும் விளங்காது என்று கூறியிருக்க வேண்டும். தமிழ் நாட்டில் பிறந்த யாரையாவது இமாமாக ஏற்றிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லையே அது ஏன்? இதைத்தான் நாம் சிந்திக்க வேண்டும்.

    மத்ஹபுடைய மூல நூல்கள் அரபு மொழியில் இருந்தாலும் அதைத் தமிழாக்கம் செய்தால் மக்களுக்குப் புரியும் என்று இவர்கள் நம்பியதால்தானே மத்ஹபுகளைப் பின்பற்றுவதாக கூறுகிறார்கள். அரபு மொழியில் எழுதப்பட்ட மத்ஹபுச் சட்டங்கள் தமிழாக்கம் செய்தால் விளங்க முடியும் என்றால், இந்த நியாயம் குர்ஆன் ஹதீஸ் விஷயத்தில் பொருந்தாமல் போனது ஏன்?

    தவறுகளும் சரியானவையும் கலந்துள்ள மனிதர்களின் அரபு மொழி வாசகங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டால் விளங்க முடியும் என்றால், தவறே இல்லாத முற்றிலும் சரியாகவே உள்ள குர்ஆனும் உண்மையான ஹதீஸ்களும் தமிழாக்கம் செய்யப்படும்போது மட்டும் ஏன் விளங்காது?

    மொழி பெயர்ப்புகளில் மொழி பெயர்த்தவர்களின் கவனக் குறைவினாலோ, வேறு காரணங்களாலோ சில தவறுகள் ஏற்படலாம் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. குர்ஆன் ஹதீஸில் மட்டுமின்றி எல்லா மொழி மாற்றத்தின் போதும் இது ஏற்படத்தான் செய்யும். சிலவேளை அரபு மொழி அறியாதவர்களால் கண்டுபிடிக்காமலும் போகும். ஆனால் அதற்காக குர்ஆன் ஹதீஸை விட்டு விடமுடியுமா? விட்டுவிட வேண்டும் என்றால் மத்ஹபுகள் உட்பட எந்த மொழி மாற்றத்தையும் விட்டாக வேண்டும்.

    நம்மால் இயன்ற அளவு முயற்சித்துப்பார்த்து விட்டு மொழி பெயர்ப்பை நாம் நம்புகிறோம். நாம் அறியாத வகையில் தவறுகள் நிகழ்ந்திருந்தால் அதை அல்லாஹ் மன்னிப்பான். வேண்டுமென்றே குர்ஆன் ஹதீஸை விளங்காது என்று அலட்சியம் செய்வதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

    இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். இந்தக் கருத்துடையவர்கள் தங்கள் சொற்பொழிவுகளில், குத்பாக்களில், புத்தகங்களில் குர்ஆன் ஹதீஸ் மொழி பெயர்ப்புகளை அவ்வப்போது பயன்படுத்துகிறார்களே! விளங்காத குர்ஆன் ஹதீஸை ஏன் மக்களிடம்  கூறவேண்டும். மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதற்கு மட்டும் குர்ஆன் ஹதீஸ்கள் கூறினால் விளங்கும். மற்ற விஷயங்களுக்கு விளங்காதா? இதெல்லாம் ஏமாற்று வேலை. ஷைத்தானின் மாயவலை.