|
|
|
மவ்லவி P.ஜெய்னுல் ஆபிதீன் |
|
இன்னும் அவர்கள் தங்கள், இறைவனுடைய வசனங்களைக்கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின்மீது விழமாட்டார்கள். (அல்குர்ஆன் 25:73)
அல்லாஹ்வின் இந்த திருவசனம் சிந்தனையின் மேன்மையை நமக்கு தெளிவு படுத்துகின்றது. திருமறைக் குர்ஆனையே ஆழ்ந்த கவனத்துடன் கவணிக்கவேண்டும் என்னும்போது மற்றவர்களின் சிந்தனைகள், அவர்களின் சன்மார்க்கத் தீர்ப்புகள் எந்த அளவு பரிசீலிக்கப்படவேண்டும் என்பதை யாரும் மறுக்கமுடியாது. யார் எதைச் சொன்னாலும், அதனை மார்க்கம் என்று எண்ணிக் கொள்கின்ற மனநிலை நம்மவரிடம் காணப்படுவதால் இஸ்லாத்தில் இல்லாத பல சட்டங்கள் இஸ்லாத்தின் பெயரால் உலா வரத்துவங்கிவிட்டன.
மக்களை வழி நடத்திச் செல்லவேண்டிய உலமாக்களில் பெரும் பகுதியினர் சரியான வழி காட்டத் தவறியதோடு தவறான வழியையும் இஸ்லாத்தின் பெயரால் அறிமுகப்படுத்தினர். இன்னும் அவ்வாறு அறிமுகம் செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.
ஒரு இஸ்லாமியனுக்கு ஏற்படுகின்ற நியாயமான சந்தேகங்களுக்கு அவன் மார்க்க மேதைகள் என்று கருதப்படுவர்களிடம் விளக்கம் கேட்கும்போது கூடும் என்றோகூடாது என்றோ ஒரு வார்த்தையில் பதில் தருகின்ற நிலைமையைத்தான் நாம் காணமுடிகின்றது. பெரும்பாலான அரபிக்கல்லூரிகளும், இஸ்லாமிய பத்திரிகைகளும், தனிப்பட்ட ஆலிம்களும் இந்த நிலையைத்தான் மேற்கொண்டுள்ளனர். குர்ஆனின் எந்த வசனத்தின் அடிப்படையில், எந்த ஹதீஸின் அடிப்படையில் அவ்வாறு ஒரு முடிவை எடுத்தனர் என்று குறிப்பிடுவதில்லை. குறிப்பிடுவது தேவை இல்லை என்றும் கருதுகின்றனர். கூடும் அல்லது கூடாது என்று முடிவு எடுப்பது தங்கள் அதிகாரத்தில் உள்ளது என்று கருதுகின்றனரோ என்னவோ?
இன்னும் சில அறிஞர்கள் தங்கள் தீர்ப்புக்கு ஆதாரமாக ஏதோ கடந்த காலத்தில் எழுதப்பட்ட ஒரு நூலைத் குறிப்பிட்டு அதில் இப்படி உள்ளது என்று தீர்ப்பு வழங்குகின்றர். சரியான ஆதாரங்களுடன் தீர்ப்பை வழங்கி விட்டதாக எண்ணிக் கொள்கின்றனர். எந்த நூலிலிருந்து இந்த தீர்ப்பை பெற்றனரோ, அந்த நூலாசிரியர், குர்ஆனின் எந்த வசனத்தை, எந்த ஹதீஸை ஆதாராமாகக் கொண்டு இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கின்றாரோ அதனை மக்கள் முன்னே வைப்பதில்லை.
ஒரு அரபிக் கல்லூரி கூடும் என்று கூறியதை இன்னொரு அரபிக் கல்லூரி கூடாது என்று தீர்ப்புத்தருவதும், ஒரு பத்திரிகை கூடாது என்றதை இன்னொரு பத்திரிகை கூடும் என்று கூறுவதும், இரு சாராரும் இரு வேறு அரபிக் கிதாபுகளை ஆதாரம் காட்டுவதும், ஒன்றுமறியாப் பாமரன் குழம்பி போவதுதான் இதனால் கண்டபலன்.
பாமரமக்களும் இதுபற்றி பெரிதாக அக்கரை எடுத்துக்கொள்வதில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் இப்படிச் செய்யச் சொல்லி இருக்கின்றார்களா? என்று கேட்பதில்லை. அப்படிக் கேட்கும் உரிமைக்கூட தனக்கு இருப்பதாக கருதுவதுமில்லை. மாறாக ஆலிம்கள் சொல்லி விட்டால் அதை ஏற்பதைத் தவிர வேறு வழியே தனக்கு இல்லை என்று கருதிக்கொள்கின்றனர்.
எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச் செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப்பட்டவையாகும். அவை நூறு ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ,முஸ்லிம்)
உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன் அவற்றைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழி தவறவே மாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் வேதம்,இரண்டு எனது வழிமுறை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மாலிக் இப்னு அனஸ்(ரழி) முஅத்தா)
அவர்கள் சிந்தித்து பார்ப்பதில்லை மாறாக சட்டமியற்றும் அதிகாரம் மார்க்க அறிஞர்களிடம் உள்ளதாக கருதிகொள்கின்றனர். இந்த எண்ணத்தின் காரணமாகவே யூத கிறித்தவர்கள் தவறான வழியில் செல்லத் தலைப்பட்டனர். இதற்கு ஆதாரமாக பின் வரும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
அவர்கள் (யூத கிறித்தவர்கள்) தங்கள் மதகுருக்களையும், பாதிரிகளையும் கடவுள்களாக ஆக்கிவிட்டனர். (அல்குர்ஆன் 9:31) என்ற திரு வசனம் இறங்கியபோது, கிறித்தவராக இருந்து பின்னர் இஸ்லாத்தின் இனைந்த "அதீ இப்னு ஹாதம் என்ற நபித் தோழர்" அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மத அறிஞர்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லையே (கடவுள்களாக ஆக்கிவிட்டதாக இறைவன் கூறுகின்றானே!) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் உங்கள் மத அறிஞர்கள் ஹலால் என்று கூறியவற்றை ஹலால் என்றும், அவர்கள் ஹராம் என்று கூறியவற்றை ஹராம் என்றும் (கண்மூடித்தனமாக) நீங்களும் கருதினீர்கள் அல்லவா? அதுதான் அவர்களை கடவுள்களாகக் கருதியதற்கு நிகரானது என்று நபி (ஸல்) அவர்கள் விளக்கம் தந்தார்கள்.(அஹ்மத், திர்மிதீ)
இந்த நிகழ்ச்சியிலிருந்து எவரையும் கண்மூடித்தனமாகப் பின்பற்ற எவருக்கும் உரிமையில்லை. மார்க்க அறிஞர்கள் சொல்லி விட்டார்கள் என்பதற்காக அதற்குரிய ஆதாரங்களை அறிய முற்படாமல் பின்பற்றுவது மிகப்பெரிய குற்றம் என்பதையும் இந்த நிகழ்ச்சி நமக்கு தெளிவாக்கும்.
அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல்குர்ஆன் 2:185) என்று கூறுவதற்கிணங்க, எளிமையான மார்க்கமாகிய இஸ்லாம் நமக்கு சிரமமாகிப் போனதும் இதனால் தான். பிறப்பிலிருந்து இறப்புவரை அத்தனை காரியங்களையும் நம்மவருக்கு சிரமமானதாக ஆக்கப்பட்டுவிட்டது. ஒரு சிலர் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்படுத்திய போலி சடங்குகளிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. நீங்களாக உங்கள் மீது சிரமத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வும் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி விடுவான். என்ற நபி மொழியும் இதற்கு போதிய சான்றாகும். (அனஸ் (ரழி) அபூதாவூத்) அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக.
உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த
![]()