கேள்வி: ஷிர்க் பற்றி எழுதி இருந்ததை என்னால் ஏற்க இயலவில்லை. உங்களுக்கு ஏதாவது வழக்கு என்றால் வக்கீலிடம் செல்கிறீர்கள்! உடல் நிலை சரியில்லாவிட்டால் மருத்துவரிடம் சென்று அவரது உதவியை  நாடுகிறீர்கள்! இதுவும் ஷிர்க் தானே? டாக்டர்கள் வக்கீலிடம் கேட்கும்போது வலிமார்களிடம் கேட்பதில் என்ன தவறு? மேலும் கலிமா சொன்னதன் மூலம்  அல்லாஹ் ஒருவன் என்று நாம் ஏற்றுக்கொண்டு விட்டோம். மனதில் அல்லாஹ் ஒருவன் என்ற நம்பிக்கை உள்ள நிலையில் தானே வலிமார்களிடம் கேட்கிறோம்? இது எப்படி ஷிர்க் ஆகும்? உங்கள் சந்தேகம் நீங்க வேண்டுமானால் வலிமார்களின் தர்கா ஷரீபில் சில நாட்கள் தங்கிப் பாருங்கள்! பலன் கிடைக்கும். s.ஹமீது தமிழ்நாடு

    பதில்: ஆம்! தமிழ் நாட்டிலிருந்து ஒரு வாசகர் இப்படி எழுதி இருக்கிறார். அவர் தனது முகவரியை எழுதாவிட்டாலும் அவர் கேட்டிருக்கின்ற சந்தேகம்  மக்கள் மனதில் பரவலாக உள்ளதால் அதற்கு விளக்கம் தருகிறோம். மறுத்துவரிடம் சென்று மருத்துவம் செய்வதற்கும், இறந்துவிட்ட  வலிமார்களிடம் கேட்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

    முதல் வேறுபாடு மருத்துவரிடம் நான் மருத்துவ உதவியைத் தேடுகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அந்த சந்தர்ப்பத்திலோ அல்லது மற்றோர் சந்தர்ப்பத்திலோ என்னிடமிருந்து ஒரு உதவியை தேடுகிறார் பெற்றுக்கொள்கிறார். இந்த சந்தர்ப்பத்தில் நானும் டாக்டரும் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்கிறோம். நல்ல காரியங்கள், இறையச்சமுடைய காரியங்களில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவிகொள்ளுங்கள் என்று அல்லாஹ் இதனை பரஸ்பரம் உதவிகொள்வதை அனுமதிக்கிறான்.

    இறந்து போன வலிமார்களிடம் கேட்கின்ற உதவி இத்தகையது அல்ல. நம்மவர்கள் கபுராளிகளிடம் சென்று உதவி கேட்கிறார்களே எப்போதாவது கபுரில் உள்ளவர்கள் நம்மிடம் வந்து ஏதாவது உதவி கேட்டிருக்கிறார்களா? நாளைக்காவது கேட்டுவிடுவார்கள் என்று நம்பவாவது இயலுமா? சிந்தித்து பாருங்கள்! இங்கே நாமும், இறந்து போன அவ்லியாவும் பரஸ்பரம் உதவிக் கொள்ளவில்லை. மாறாக நாம் அவரிடம் உதவி பெற்றுக்கொண்டே இருக்கப் பிறந்தவர் போலவும், அவர் வாரி வழங்கிப் கொண்டிருக்கவே பிறவி எடுத்தவர் போலவும் மக்கள் கருதுகிறார்கள். எவரிடத்திலும் எந்தத் தேவையுமாகாமல் கொடுப்பதற்கே உள்ளவன் அல்லாஹ் மட்டுமே. இறந்துபோன வலிமார்களிடம் உதவி கேட்பது அவர்களை இறைவனுக்கு இணையாக ஆக்கிவிட்டதாகத்தான் கருதப்படும்.

    பரஸ்பரம் உதவிக்கொள்ளுதல் என்பதை தாஆவுன் என்று அரபியில் சொல்வர். இரண்டாவதாகக் கூறப்பட்ட ஒரு தரப்பு உதவி தேடுதலை இஸ்திஆனத் என்று கூருவர். தஆவுன் என்பதை மேற்கூறிய வசனத்தின் மூலம் அல்லாஹ் அனுமதிக்கிறான். மருத்துவரிடம் பெரும் உதவி தஆவுன் என்ற வகையில் சேரும். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்ற வசனத்தின் மூலம் இஸ்திஆனத் அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கப்படவேண்டும் என்று அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். இறந்துபோன வலிமார்களிடம் கேட்பது இந்த வகையைச் சேர்ந்தது என்பதால் அதனைக் கூடாது என்கிறோம்.

    இரண்டாவது வேறுபாடு
    நான் மருத்துவரிடம் உதவி தேடுகிறேன் என்றால் என்னைப்போல் ஒரு நூறு பேர்ஒரே நேரத்தில் தங்கள் நோயைச் சொல்லி அந்த மருத்துவரிடம் முறையிட்டால், அந்த மருத்துவரால் எதையும் செவிமடுக்க இயலாது. என்பதை அவரது வரையறைக்குட்பட்ட சக்தியை நன்றாக தெரிந்து வைத்துக்கொண்டு தான் நான் மருத்துவரை நாடுகிறேன்.

    ஆனால் கபுராளிகளை ஒரே நேரத்தில் பல ஊர்களிலிருந்து பல்லாயிரக் கணக்கானோர் ஒரே நேரத்தில் அழைக்கின்றனர்.அத்தனையையும் அதே  நேரத்தில் அந்தக் கபுராளி செவிமடுக்கிறார் என்று எண்ணவும் செய்கின்றனர். எங்கிருந்து எத்தனை பேர் அழைத்தாலும் அத்தனையையும் அதே நேரத்தில் கேட்பவன் அல்லாஹ் மட்டுமே. அல்லாஹ்வின் தனிப்பண்பு அந்தக் கபுரில் உள்ளவருக்கு இருப்பதாகக் கருதுவது இணை வைத்தலில்லாமல் வேறு என்ன? மருத்துவரிடம் கேட்கப்படும் உதவிகள் இத்தகையது அல்லவே.

    அடுத்து அல்லாஹ் ஒருவன் என்று கலிமாவின் மூலம் ஏற்றுக் கொண்டுவிட்டு தானே இப்படி அழைக்கிறோம். எப்படி ஷிர்காகும் என்று கேட்கிறார். குளித்து  விட்டுத் தானே சேற்றைப்பூசுகிறேன் என்று கேட்பதற்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. எப்போது கலிமாவின் தத்துவத்தை உணர்ந்து அதனைக் கூறுகிறானோ அப்போது அவன் முஸ்லிமாகிறான். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் கடவுளில்லை என்று கூறி விட்டு அதற்கு மாற்றமாக இன்னும் பல தெய்வங்களை அவன் இறைவனுக்கு இணையாக்கும்போது அந்த ஈமான் போய்விடுகின்றது.

    மக்கத்து காபிர்களும் அல்லாஹ் ஒருவன் என்பதை நம்பாமலா இருந்தனர்? மிக உறுதியாக நம்பினர். ஆனால் இன்றைக்கு இருப்பது போன்ற தவறான நம்பிக்கையின் காரணமாகவே அவர்களைக் காபிர்கள் என்று அல்லாஹ் அழைக்கிறான். தர்காக்களில் தங்கிப்பார்க்கச் சொல்கிறார். சந்தேகம் தீருமாம். நாம் உண்மையிலேயே அனுதாபப்படுகிறோம். அதனால்தான் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இவ்வளவு விளக்கம் தருகிறோம்.

    மேலும் அறிய

    கப்ரில் நபி(ஸல்) அவர்களின் நிலை

    நல்லடியார்கள்

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த