
ஹஜ் பெருநாளன்று பிராணிகளை
அறுத்துப் பலியிடுவதே "குர்பானி" என்று சொல்லப்படுகின்றது. நபி இப்ராஹீம்(அலை)
அவர்களின் தியாகத்தை முன் மாதிரியாகக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் இதனைச்
செய்துள்ளனர். அல்லாஹ்வும் தன் திருமறையில் இதை ஒரு வணக்கமாக அங்கீகரித்துள்ளான்.
"உமது இறைவனுக்காகத் தொழுது, மேலும் (அவனுக்காக) அறுத்துப்
பலியிடுவீராக!" என்று திருமறை (108:2) வசனத்தில் இறைவன் கூறுகிறான்.
"ஹஜ் பெருநாள் தினத்தில், அறுத்துப் பலியிடுவதை விடச் சிறந்த
அமலை ஒருவன் செய்து விடமுடியாது. அந்தப் பிராணியிலிருந்து சிந்துகின்ற இரத்தம்
அல்லாஹ்விடம் மிகவும் உயர்ந்த மதிப்பைப் பெற்றதாகும். அதனைச் சிறந்த முறையில்
அறுங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரழி)
நூல்:திர்மிதீ
தானே
அறுக்க வேண்டும்
குர்பானி யார் கொடுக்கின்றாரோ, அவர் அறுப்பதற்கு ஆட்களைத்
தேடிக்கொண்டிராமல் தானே அறுப்பது சிறந்ததாகும். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் தானே
அறுத்துள்ளனர்.
"நபி (ஸல்) அவர்கள் இரு கொம்புகள் உள்ள வெண்மையும், கறுப்பும்
கலந்த இரண்டு ஆடுகளை "குர்பானி" கொடுத்தனர். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று
கூறி அவர்கள் தன் கையால் அறுத்தனர். அறிவிப்பவர்:அனஸ் (ரழி) நூல்:புகாரி
எப்படி அறுப்பது என்று தெரியாதவராக இருந்தால் அறுக்கின்றபோது,
அந்த இடத்தில் நின்று கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில் பாத்திமா (ரழி)
அவர்களை அவ்வாறு செய்யும்படி நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.
குர்பானி கொடுக்க
எண்ணியவர் செய்யக் கூடாதவை
குர்பானி கொடுக்க வேண்டும் என்று எவர் நாடுகிறாரோ, அவர்
துல்ஹஜ் பிறை ஒன்றிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை, பத்து நாட்களுக்கு நகங்கள்,
முடிகளைக் களையக் கூடாது.
உங்களில் யாரேனும் குர்பானி கொடுக்க விரும்பினால் அவர் துல்ஹஜ்
கண்டதிலிருந்து (அறுத்து முடியும்வரை பத்து நாட்களுக்குத்)தன் நகங்களையும்,
முடிகளையும் களையாதிருக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குர்பானி கொடுக்கும் நேரம்
பெருநாள் தொழுகையும், அதன் பின்பு ஓதப்படுகின்ற இரண்டு
குத்பாக்களும் முடிவதற்கு முன்னால் குர்பானி கொடுக்கலாகாது. அதற்கு முன்பே ஒருவர்
அறுத்து விட்டால் அது ஏற்கப்படாது. இன்னொன்றை அவன் அறுத்துப் பலியிட வேண்டும்.
எவன் தொழுகைக்கு முன்னர் அறுக்கின்றானோ அவன் தனக்காக
அறுக்கின்றான். எவன் தொழுகையும், இரண்டு குத்பாக்களும் முடிந்த பின்
அறுக்கின்றானோ அவனே முழுமையாக வணக்கத்தை நிறைவேற்றியவனாவான். முஸ்லிம்களின்
சுன்னத்தையும் அவனே செய்தவனாவான் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
நூல்:புகாரி,முஸ்லிம்
நபி(ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை தொழுதேன்,
முடித்தபின் ஆடு ஒன்று அறுக்கப்பட்டுக் கிடப்பதை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள்.
அப்போது "யார் தொழுகைக்குமுன் அறுத்து விட்டாரோ, அந்த இடத்தில் வேறொன்றை
(தொழுகைக்குப் பின்) அறுக்கவேண்டும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஜுந்துப்
இப்னு சுப்யான் (ரழி) நூல்கள்:புகாரி, முஸ்லிம்
குர்பானி பிராணிகள்
ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்றை மட்டுமே குர்பானி கொடுக்க
வேண்டும். இம்மூன்றையும் அரபியில் "அன்ஆம்" என்று கூறுவர் (சூரதுல் ஹஜ் 22:34)
இம்மூன்றைத் தவிர மற்ற எந்தப் பிராணியும் குர்பானிக்கு உரியதன்று மாடு, ஒட்டகத்தை
ஏழு பேர்கள் கூட்டாகக் கொடுக்கலாம். ஹுதைபியா உடன்படிக்கை ஏற்பட்ட வருடம், ஏழு
நபர்கள் கூட்டாக ஒரு மாட்டையும், அதுபோல் ஏழு நபர்கள் கூட்டாக ஒரு ஒட்டகத்தையும்,
நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் குர்பானி கொடுத்தோம் என்று ஜாபிர்(ரழி) அவர்கள்
அறிவிக்கின்றார்கள். நூல்:முஸ்லிம்
ஒற்றைக் கண் குருடு, வியாதியுடையது, நொண்டி, கிழட்டுக் பருவம்
அடைந்தது ஆகிய பிராணிகள் குர்பானிக்கு ஏற்றவையல்ல என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர்: பராஇப்னு ஆஸிப் (ரழி) நூல்கள்:அஹ்மத், அபூதாவூது, இப்னு
ஹிப்பான், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா
ஒரு குடும்பத்திற்கு
ஒன்று போதும்
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபர் தனக்கும் தன்
குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்துள்ளார் என்று அபூ
அய்யூப்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: இப்னுமாஜ்ஜா, திர்மிதீ
இந்த ஹதீஸின் அடிப்படையில் தனக்கும், தன் குடும்பத்திற்கும்
சேர்த்து ஒரு ஆட்டைக் கொடுப்பது போதுமானது.
கூலியாகக்
கொடுக்கக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுக்கும் பணியை என்னிடம்
ஒப்படைத்தபோது அதன் இறைச்சியையும் தோலையும் ஏழைகளுக்குக் கொடுக்கும்படியும்,
உரித்தவர்களுக்குக் கூலியாக இதில் எதனையும் கொடுக்கக்கூடாது என்றும்
கட்டளையிட்டனர் என்று அலி(ரழி) அவர்கள் அறிவித்துள்ளனர். நூல்கள்: முஸ்லிம், புகாரி
பங்கிடும் முறை
(குர்பானி கொடுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை) நீங்களும்
உண்ணுங்கள்! (உறவினர்கள், ஏழைகளுக்கும்) உண்ணக் கொடுங்கள்! சேமித்தும் வைத்துக்
கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்)அவர்கள் கூறியுள்ளதால் நாம் அதனை உண்ணுவதும்,
பிறருக்கு உண்ணக் கொடுப்பதும் சுன்னத்தாகும். இவ்வளவு தான் கொடுக்க வேண்டும்
இவ்வளவுதான் உண்ண வேண்டும் என்று வரம்பு எதுவும் கிடையாது. அவரவர் விரும்பிய அளவு
தர்மம் செய்யலாம்.
உங்கள்
நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த