![]()
1 இஸ்லாத்தில் ஒரு மனிதனுக்கு கெட்ட காலம் என்றும் நல்ல காலம் என்றும் உள்ளதா?
2 பாங்கு சொல்லும்போது கட்டை விரலை கண்ணில் ஒத்தி முத்தமிடலாமா? தலையில் தொப்பி கைக்குட்டை இல்லயென்றால் குச்சி பேப்பர் இவைகளை காதில் வைக்கிறார்களே இது நபி வழியா?
3 மார்க்கத்தில் சில காரியங்களை பித்அத் என்கிறார்கள் 'பித்அத்' என்றால் என்ன ?
4 மழை வந்தால் பலர் சனியன் பிடித்த மழை விட மாட்டேங்குதே என்று கூறுகிறார்களே இவ்வாறு கூறலாமா?
5 தொழும்போது பெண்களின் உடை எவ்வாறு இருக்க வேண்டும்?
6 காபிர்களின் இறப்புச் செய்தியை கேட்டால் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்' என்று கூறலாமா?
7 பெண்களுக்கு ஜமாஅத் தொழுகை உண்டா? ஜும்ஆ பெருநாள் தொழுகை உண்டா?
8 பஜ்ருக்கு தொழுகைக்கு முன் உள்ள சுன்னத் இரண்டு ரக்அத்களையும் அவசியம் தொழவேண்டுமா?
9 தனித்து தொழுன்போது பாங்கு இகாமத் சொல்லி தொழ வேண்டுமா?
10 ரமழான் மாதத்தில் உம்ர செய்தால் உள்ள நன்மை சம்பந்தப்பட்ட ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ன?
|
|
|
காலத்தில் நல்ல நேரம், கெட்ட நேரம் என்பது இல்லை. நல்ல நேரம் என்று கருதுகிற நேரத்தில் கெட்ட விஷயங்களும் நடக்கின்றன.இஸ்லாத்தில் நல்ல காலம் கெட்ட காலம் என்பது அறவே கிடையாது. எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும். திருமறை குர்ஆன் கூறுகிறது: வானங்களிலும், பூமியிலுள்ளோர் அனைவரும் (தங்களுக்கு வேண்டியவற்றை) அவனிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நாளிலும் அவன் (அல்லாஹ்) காரியத்திலேயே இருக்கிறான். (அல்குர்ஆன் 55:29) இக்கருத்தினை விளக்கும் முகமாக ரசூல் (ஸல்) அவர்கள் மனித இனம் முழுமைக்கும் அறிவுரைக் கூறுகிறார்கள்: காலத்தை நேரத்தை ஆதத்தின் மகன் திட்ட வேண்டாம். ஏனெனில் நானே அதனை நிகழச் செய்கிறேன். இரவையும் பகலையும் அனுப்பி வைக்கிறேன். நான் விரும்பினால் அதனை பற்றிக் கொள்வேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம், அபூதாவூத்
இந்நபி மொழியில் இரவு பகல் என்பதை நல்லது கெட்டது, சுகம், துக்கம் என்ற
கருத்துக் கொள்ளவும் இடம் உண்டு. எனவே நல்லதும் கெட்டதும் அல்லாஹ்வின் தனிச்
சட்டத்தில் உருவாவது என்பதே ஈமானின் ஒரு விதி என்பதை எல்லா முஸ்லிம்களும்
அறிவர். இதனை நாம் "வல் கத்ரி கைரிஹி வ ஷர்ரிஹி மினல்லாஹி தஆலா" எனக்
கூறுகிறோம்.
|
|
|
|
|
பாங்கு சொல்லப்படும்போது அதனை அப்படியே திருப்பிக் கூறவேண்டும். ஹய்ய அலஸ் ஸலாத், ஹய்ய அலல் ஃபலாஹ் கூறும்போது மட்டும் "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி" எனக்கூற வேண்டும். மற்ற வாசகங்களை முஅத்தின் கூறுவது போலவே கூறவேண்டும் என்பது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ள அறிவுரையாகும். அறிவிப்பவர்:அபூஹுராரா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜ்ஜா, அஹ்மத் அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ் சொல்கையில் கட்டை விரலை கண்ணில் ஒத்தி முத்தமிடுவது நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத ஒரு புதுமை வழக்காகும். அடுத்து பாங்கு கூறப்படும்போது தலையில் தொப்பி, கைக்குட்டை இல்லாத நிலையில் காதில் பேப்பரோ, குச்சியை வைப்பது அறியாமையாகும். கடமையாக்கப்பட்ட ஐவேளை தொழுகைக்கே தலையை மூடுவது ஒரு ஷர்த்தல்ல. மார்க்கத்தை முறையாக விளங்காததினால் சிலர் இப்படி செய்கின்றனர். |
|
|
|
|
மார்க்க வணக்க வழிபாடுகளில் புதியதாக ஒன்றைச் செய்வதே புதுமை 'பித்அத்' ஆகும். இறை நெருக்கம் பெற்று இம்மை மறுமையில் ஈடேற்றம் பெருவதற்கான வழிகளை வல்ல அல்லாஹ்வும் நாம் உயிரினும் போற்றும் நபி (ஸல்) அவர்களும் மிகத் தெளிவாக நமக்குக் காட்டித் தந்துள்ளார்கள். அல்லாஹ்வால் நிறைவு செய்யப்பட்ட இம்மார்க்கத்தில் அவனது தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளை வெளேர் என்று விட்டுச் சென்ற மார்க்கத்தில், மனிதர்கள் தங்களது யூகங்களையும் பொய்யான கற்பனைகளையும் புகுத்துவதைப் 'பித்அத்' என்றும், இது நம்மை பல வழிகேடுகளில் இட்டுச் சென்று நரகத்தில் தள்ளும் எனவும் நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக எச்சரித்துள்ளார்கள். "வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம். நடைமுறையில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்களின் நடமுறை. காரியங்களில் கெட்டது (பித்ஆத்) புதுமையாகும். பித்அத்துகள் அனைத்தும் வழிகேடு; வழிகேடுகள் அனைத்தும் நரகில் சேர்க்கும்" (இப்னு மஸ்வூத் (ரலி), ஜாபிர் (ரலி) புகாரி, முஸ்லிம், நஸயி.
மார்க்கத்தை பிழைப்பாக
ஆக்கிக் கொண்ட மவ்லவிகள் மார்க்கத்தில் இல்லாத 'பித்அத்' பலவற்றை
மார்க்கமாக்குவதற்கு அவர்களாக அவர்கள் இஷ்டத்திற்கு 'பித்அத் ஹஸனா' அழகிய
பித்அத் என்றும் 'பித்அத் ஸஸ்யிஆ' கெட்ட பித்அத் என்றும் இரண்டாகப் பிரித்தும்
பிழைப்புக்காக உண்டாக்கியுள்ளனர். மற்றபடி மார்க்கத்தில் நுழைக்கக் கூடிய
'பித்அத் ஹஸனா' ஒன்றும் இல்லை.
"எவர் எம்மால் ஏவப்படாத அமல்களைச்
செய்கின்றாரோ, அவை அல்லாஹ்விடத்தில் மறுக்கப் பட்டவையாகும். அவை நூறு
ஷரத்துகளாயினும் சரியே" என்று நபி
صلى الله عليه وسلم
அவர்கள் கூறினார்கள். (புகாரீ,
முஸ்லிம்) |
|
|
|
|
மனிதர்களில் பலர் குறிப்பாக முஸ்லிம்கள் கூட இறைவனின் அருட்கொடைகளைப் போற்றி புகழாது நன்றி கெட்டவர்களாகவே உள்ளனர். மேலும் தாங்கள் கூறியபடி மழையை பழிக்கும் புத்தி உடையவர்களாகவும் உள்ளனர். அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை) நோட்ட மிட வேண்டாமா? (அல்குர்ஆன் 32:27)
வெயிலும் மழையும்
காற்றும் இன்ன பிற வஸ்துகளும் மனிதனது நலனுக்காகவே வல்ல அல்லாஹ்வால்
அருளப்படுகின்றன. இவ்வருட்கொடையை பழிப்பது மாபெரும் தவறு. நமக்கு நாமே நாசத்தை
தேடிக்கொள்ளூம் வழி. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மழை பெய்வதைப் பார்த்தால்
"அல்லாஹும்ம ஸய்யிபன் நாஃபியா" - யா அல்லாஹ் பலன் தரும்
மழையை பொழிய வைப்பாயாக! என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள். இச்செய்தி புகாரியில் இடம்பெற்றுள்ளது. ஆகவே நாம் பழிப்பதை
தவிர்த்து பலன் தரும் துஆக்களை கேட்போம்.
|
|
|
|
|
ஆதமுடை மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; (அல்குர்ஆன் 7:31) ஆதமுடைய மக்களை தொழுகைக்காக அலங்கரிக்கச் சொல்லும் இறைவன் அலங்கரிக்கும் முறைகளையும் தெளிவாகக் கூறுகிறான். குறிப்பாக பெண்களின் உடை தொழுகையிலும், தொழாத நேரங்களிலும் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்பதை வல்ல அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறுவதைப் பாருங்கள். முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ளவேண்டும். அலங்காரத்தை அதனின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31) நபியே நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும் அவர்கள் தங்கள் முன்றானைகளைத் தாழ்த்தி கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன்; மிக அன்புடையவன். (அல்குர்ஆன் 33:59) நபி(ஸல்) அவர்களுடன் ஆயிஷா(ரலி) இருக்கும்போது அஸ்மா(ரலி) வருகிறார்கள். அப்போது அவர்களது ஆடை மிக மெல்லியதாக (உடல் தெரியும் நிலையில்) இருக்கிறது. அதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் "யா அஸ்மா! ஒரு பெண் பருவமடைந்து விட்டால், அவளுடைய இந்த இந்த பாகங்களைத் தவிர மற்றவை வெளியே தெரிவது நல்லதல்ல" என்று கூறும் பொழுது அவர்களின் முகத்தையும் மணிக்கட்டு வரையிலான கைகளையும் சுட்டிக் காட்டினார்கள். (ஆயிஷா(ரலி) வாயிலாக காலித் இப்னு தரீக் அறிவித்துள்ளார்கள் நூல்: அபூதாவூத், அபூஹாத்தம்) ஒரு முறை அன்னை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பின் வருமாறு கேட்டார்கள். ஒரு பெண் தனது இடுப்பில் எவ்வித ஆடையுமின்றி நீளமான ஒரு சட்டை தலை முக்காடு ஆகியவற்றை மட்டும் அணிந்தவளாக தொழுவது கூடுமா? என்று கேட்க, பதிலாக அவளின் சட்டை அவளது இரு பாதங்கள் வெளியாகாது மறைத்துக்கொள்ளும் வகையில் நிறைவானதாக அமைந்திருக்குமானால் (கூடும்) என்றார்கள். (அறிவிப்பாளர்: உம்மு ஸலமா(ரலி) நூல்: அபூதாவூத்) மேற்கண்ட நபி வழிகளின்படி சாதாரன நேரங்களில் முகம், மணிக்கட்டு வரை மட்டும் தெரிய மற்ற அங்கங்களை மறைப்பது போல் தொழுகைக்கும் மறைக்க வேண்டும். குறிப்பாக இரு பாதங்கள் வெளியில் தெரியாத அளவு உடை அணிய வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன். |
|
|
|
|
முஸ்லிம்கள் இறந்த செய்தியை கேட்டால் மட்டுமே 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்' எனக்கூறும்படி சொல்லப்படாததாலும் காஃபிர்கள் இறந்தச் செய்தியைக் கேட்டால் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்' எனக் கூறக்கூடாது என தடை இல்லாதிருப்பதாலும், துன்பம் ஏற்படும் பொழுது 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்' (அல்குர்ஆன் 2:156) என பொதுவாகக் கூறப்பட்டிருப்பதாலும் கஃபிர்கள் இறந்தச் செய்தியைக் கேட்டாலும் 'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்' என தாராளமாக சொல்லலாம் என அறிய முடிகிறது. அந்த வாசகத்தில் பொருளை அறிந்திருப்போமேயானால், காஃபிர்கள் இறந்தாலும் அந்த வாசகத்தை சொல்லலாம் என்ற முடிவிற்கே வர முடிகிறது. பொருள்: இன்னா லில்லாஹி: நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், வ இன்னா இலைஹி ராஜிவூன்: மேலும் நிச்சயமாக நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்ல வேண்டியிருக்கிறது.
மரணமோ
அல்லது மற்றெந்த துயரமான செய்திகளைக் கேள்விப்படும் பொழுது அல்லாஹ்விடமே நாம்
மீள வேண்டியிருக்கிறது என்ற சொற்றொடர் நல்ல அமல்கள் செய்தவர்களாக இறைவனை
சந்திக்க வேண்டுமே என்ற இறையச்சத்தை நம்முள் ஏற்படுத்துவதால், எவரது இறப்புச்
செய்தியையோ மற்ற துக்ககரமான செய்தியையோ கேள்விப்படும்போது இந்த வாக்கியங்களை
தாராளமாக சொல்லிக் கொள்ளலாம் என்ற முடிவிற்கு சுலபமாக வர முடிகிறது. அல்லாஹ்
மிக அறிந்தவன். |
|
பெண்களுக்கு ஜமாஅத் தொழுகைக்கு அனுமதி உண்டு. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து ஜமாஅத்துடன் தொழுதுள்ளனர். பள்ளிவாசலுக்கு ஜமாஅத்துடன் வந்து தொழ விரும்பும் பெண்களை எவரும் தடுக்க முடியாது. எனினும் வீடுகளில் தொழுவதே சிறப்பானது. பெண்களை பள்ளிக்கு வருவதைத் தடுக்காதீர்கள்! அவர்களின் வீடுதான் அவர்களுக்குச் சிறந்தது என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்) நபி(ஸல்) காலத்தில் ஜும்ஆ தொழுகைக்கும் பெண்கள் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு ஜும்ஆத் தொழுதால் அவர்களுக்கும் லுஹர் தொழுகை அன்றைய தினம் இல்லை. எனினும் 'ஜும்ஆவுக்கு வரவேண்டும்' என்ற கட்டாயம் பெண்களுக்கு இல்லை. மாறாக வீட்டிலேயே 'லுஹர்' தொழலாம். "அடிமைகள், பெண்கள், சிறுவர், நோயாளிகள் தவிர மற்ற முஸ்லிம்கள் அனைவர் மீதும் ஜும்ஆ கட்டாயக் கடமையாகும்" என்பது நபிமொழி (அறிவிப்பவர்: தாரிக் இப்னு ஷிஹாப் (ரலி) நூல்: அபூதாவூத்) பெருநாள் தொழுகை பெண்களுக்கும் அவசியம்தான். கண்டிப்பாக அவர்களும் பெருநாள் தொழ பெருநாள் தொழும் மைதானத்துக்கு வரவேண்டும்.
நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள்
உட்பட அனைவரையும் கலந்துகொள்ளும்படி நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக்
கட்டளையிட்டனர். எனினும் மாதவிடாய் பெண்கள் தொழுகையில் மட்டும் கலந்து
கொள்ளாமல் துஆக்கள் மற்றும் இதர காரியங்களில் கலந்து கொள்ள வேண்டும் எனவும்
நபி ஸல் அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(ஹதீஸ் சுருக்கம்) உம்மு அதிய்யா(ரலி) புகாரி,
முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், திர்மதீ, நஸயீ, இப்னுமாஜ்ஜா! |
|
|
|
|
நபி(ஸல்) அவர்கள் (சுன்னத்) நஃபிலான தொழுகைகளில் அனைத்துப் பார்க்கினும் பஜ்ருடைய இரண்டு ரகஅத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத் பஜ்ருக்கு முன்னால் தொழும் இரண்டு ரக்அத்துகளும் எனக்கு அகில உலகத்தைவிட மிகவும் விருப்பமுடையவையாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ கைஸ் பின் உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் சுப்ஹு தொழச் சென்றேன். நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழ வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவுடன், அவர்களோடு சேர்ந்து பர்லைத் தொழுது விட்டு, பின்னர் நான் தொழாதிருந்த பஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகளையும் எழுந்து தொழுதேன். அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த நபி(ஸல்) அவர்கள் என்ன தொழுதீர்? என்று என்னை கேட்க "நான் விடுபட்ட சுன்னத்தைத் தொழுதேன்" என்று கூறினேன். அதற்கவர்கள் எதுவும் சொல்லாது போய்விட்டார்கள். (அறிவிப்பவர்: கைஸ் பின் உமர்(ரலி) நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத் மேற்கண்ட ஹதீஸ்களில் பஜ்ருடைய சுன்னத் தொழுகையின் முக்கியத்துவத்தையும், ஜமாஅத் நடந்து கொண்டிருந்தால் அதில் உடனே சேர்ந்து கொண்டு, பின்னர் விடுபட்ட அந்த சுன்னத்தைத் தொழ வேண்டும் என்பதையும் காண்கிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன். |
|
|
|
|
"நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது மூமின்களுக்கு விதியாக்கப்பட்டுள்ளது" சூரத்துன்னிஸா வசனம் 103. மேற்கண்ட வசனம் ஒரு முஸ்லிம் எந்நிலையிலும், எங்கிருப்பினும் கடைைமயான தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழவேண்டும் என கட்டளையிடுகிறது. கடமையான எத்தொழுகைக்கும் பாங்கு இகாமத் கூறுவது நபி வழியாகும். நாம் தனித்த நிலையில் தொழுதாலும் இந்நபி வழியை கடைபிடிக்கலாம். இதன் சிறப்பைப் கீழ்காணும் ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன. மழை உச்சியில் ஆடுகளை மேய்ய்க்கும் இடையன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் பொழுது பாங்கு கூறித் தொழுவது பற்றி உம் இறைவன் மகிழ்ச்சியுற்று (வானவர்களை நோக்கி) எனது அடியானை நோக்குங்கள். என் மீது உள்ள அச்சத்தின் காரணமாக அவன் பாங்கு கூறித் தொழுகிறான். நிச்சயமான நான் என் அடியானின் பாவத்தை மன்னித்து விட்டேன். அன்றி அவனை நான் சுவனபதியிலும் செல்லச் செய்வேன் என்று அல்லாஹ் கூறுகிறான் என்ற செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என உக்பதுப்னு ஆமிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (அபூதாவூத், நஸயி) ஆடுகளையும், கானகத்தையும் நீர் நேசிப்பதை நான் காண்கிறேன். எனவே நீர் உமது ஆடுகளுக்கிடையிலோ அல்லது உமது காட்டிலோ இருந்து விடுவீராயின் அப்பொழுதும் தொழுகைக்காக பாங்கு கூறும். நிச்சயமாக பாங்கு கூறுவோரின் ஒலி எவ்வளவு தொலை கேட்கிறதோ அவ்வளவு தொலைவிலுள்ள மனிதர்கள் - ஜின்கள் மற்றுமுண்டான எல்லா பொருள்களும் செவியுற்று அவருக்காக மறுமை நாளில் சாட்சியம் கூறும். நிச்சயமாக அபூ ஸயீத்(ரலி) அவர்கள் இதனைக்கூறி, இதனை தாம் நபி(ஸல்) அவர்களிடம் செவியுற்றதாக கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு அப்துர் ரஹ்மான் அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி புகாரி, முஅத்தா, நஸயியில் இடம்பெற்றுள்ளது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
|
|
|
|
|
உம்முஸனான் என்று கூறப்படும் ஒரு பெண்ணை நோக்கி நபி(ஸல்) அவர்கள் நீர் நம்முடன் ஹஜ் செய்வதை எது தடை செய்தது? என்று கேட்டார்கள். (அதற்கு) அவர் "என் கணவரிடம் இரண்டு ஒட்டகங்கள் இருந்தன; அவற்றில் ஒன்றில் அவரும் அவருடைய மகனும் ஹஜ்ஜுக்கு சென்றனர். மற்றொரு ஒட்டகத்தால் எங்களுடைய நிலத்துக்கு நீர் இறைத்துக் கொள்ளப்பட்டு வந்தது" என்று கூறினார். (எனவே) நபி(ஸல்) அவர்கள் ரமழானில் உம்ரா செய்வது ஹஜ்ஜுச் செய்வதற்கு நிகராகும் அல்லது என்னுடன் ஹஜ் செய்வதற்கு சமமாகும். ஆகவே ரமழான் மாதம் வந்ததும் நீர் உம்ரா செய்யும். ஏனெனில் நிச்சயமாக ரமழானில் உம்ரா செய்வதானது ஹஜ் செய்வதற்குச் சமமாகும் என்று எடுத்துரைத்தனர். இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் இச்செய்தி புகாரி, முஸ்லிம் நஸயியில் இடம்பெற்றுள்ளது. ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து "நிச்சயமாக நான் ஹஜ்ஜுக்கான ஏற்பாடுகளை செய்து முடித்திருந்தேன். ஆனால் எனக்கு ஒன்று குறிக்கிட்டு விட்டது" என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "ரமழானில் உம்ரா செய்து கொள்வீராக" ஏனெனில் ரமழானில் உம்ரா செய்வது ஹஜ் செய்வதற்கு நிகராகும் என்று கூறினர். அபூபக்ருப்னு அப்துர் ரஹ்மான் அறிவிக்கும் இச்செய்தி முஅத்தா அபூதாவூதில் இடம்பெற்றுள்ளது. மேற்கண்ட ஹதீஸில் ரமழானில் உம்ரா செய்வதால் அதிகப்படியான சிறப்புகளை அறிய முடியும். அல்லாஹ் மிக அறிந்தவன். |
|