1. திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் உள்ளது. 9வது அத்தியாத்தில் மட்டும் பிஸ்மில்லாஹ் இல்லை! ஏதாவது தனிப்பட்ட காரணமுள்ளதா?

2. தக்வாவின் சிறப்பம்சம் என்ன?

3. மரணத்தை ஆசிப்பது தவறு என்று கூறப்படுகிறதே. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு ஆசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதே என்ன செய்வது?

4. மாற்று மதத்தவர்கள் நமக்கு ஸலாம் கூறினால் நாம் பதில் ஸலாம் கூறலாமா?

5. நான் நேர்ச்சை செய்து கொண்டேன் அதனை நான் நிறைவேற்றலாமா?

6. அல்லாஹ்வுக்காக ஒரு முஸ்லிமை வெறுத்து ஒதுக்கலாமா?

7. திருஷ்டிக்காக அல்லது கைகால் வலி நீங்குவதற்காக ஓதி முடிச்ச கருப்புக்கயிறை கட்டிக்கொள்ளலாமா?

8. நபி(ஸல்) அவர்களின் மீது உள்ள அன்பின் காரணமாக மவ்லூது ஓதாவிட்டாலும் குர்ஆன் ஷரீப் ஓதி ஹதியா செய்து விருந்து கொடுக்கலாமா?

9. பெண்கள் தங்கள் முகத்தையும் மறைத்தாக வேண்டுமா?

10. காதணிகள் அணியக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே சரியா?

 

 1. திருக்குர்ஆனில் உள்ள 114 அத்தியாயங்களின் ஆரம்பத்தில் பிஸ்மில்லாஹ் உள்ளது. 9வது அத்தியாத்தில் மட்டும் பிஸ்மில்லாஹ் இல்லை! ஏதாவது தனிப்பட்ட காரணமுள்ளதா?


   நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே குர்ஆன் வசங்கள் இறக்கப்பட்டதும் எழுதி வைத்துக்கொள்ள ஜைதுபின் தாபித், உபைஇப்னுகஃபு (ரலி) போன்ற நபித்தோழர்கள் இருந்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் நபி(ஸல்) அவர்கள் ரமழானில் இஃதிகாஃபில் இருக்கும்போது ஒரு தடவை குர்ஆன் வசனங்களை வரிசையாக ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் ஓதி காட்டியிருக்கிறார்கள். ரசூல்(ஸல்) அவர்களின் மரணத்திற்கு முந்திய ரமழானின் இஃதிகாஃபில் இரு தடவைகள் ஓதிகாட்டியிருக்கிறார்கள்.

   இச்செய்திகளை அபூஹுரைரா(ரலி), அனஸ்(ரலி) போன்ற நபித்தோழர்கள் அறிவிப்பதாக புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜ்ஜா, அஹ்மத் போன்ற ஹதீஸ் நூல்களில் காணமுடிகின்றது.

   அதே ஜைது இப்னு தாபித் (ரலி) அவர்கள் தான் பின் குர்ஆனை முழுமையாக ஒரே நூலாக தொகுக்க அபூபக்கர்(ரலி) நியமித்த குழுவின் தலைமையேற்றியிருக்கிறார். நபி(ஸல்) அவர்களின் தலைமை எழுத்தாளராக இருந்த ஜைது(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் எங்கெல்லாம் பிஸ்மில்லாஹ் கூறி ஆறம்பித்தார்களோ அங்கெல்லாம் பிஸ்மில்லாஹ் எழுதினார்கள். 9வது அத்தியாத்தை பிஸ்மில்லாஹ் கொண்டு ஓதவில்லை. எனவே அங்கு பிஸ்மில்லாஹ் இடம்பெறவில்லை.எனவே இதன் அடிப்படயில்தான் இன்று வரை எல்லா மொழிகளிலும் அச்சடிக்கப்படும் குர்ஆனிலும்  மூல அரபி மொழியிலும் பிஸ்மில்லாஹ் என்ற வாசகம் இடம்பெறவில்லை. இந்த ஒன்றைத் தவிர வேறு எந்த தனிப்பட்ட காரணம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

 2. தக்வாவின் சிறப்பம்சம் என்ன?

    "தக்வா" என்பது பயபக்தி, இறை உணர்வு, பாவ தடுப்பு சக்தி முதலியவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளதோர் சிறப்புத் தன்மையாகும். தக்வாவுடன் செய்யப்படும் அமலுக்குத்தான் அல்லாஹ்விடம் அங்கீகாரம் உள்ளது. அல்லாஹ் (அமல்களை) ஏற்றுக் கொள்வதெல்லாம் "தக்வா" பயபக்தி இறை உணர்வு உள்ளவர்களிடமிருந்து தான் (5:27) என்று குர்ஆன் கூறுகிறது.

   ஆகவே நாம் செய்யும் ஒவ்வொரு அமலிலும் தக்வா இருந்தாக வேண்டும். இல்லையேல் அதன் பலனை அடையும் வாய்ப்பினை இழக்க நேரிடும்.

   ஓர் அடியான் பாவமில்லாதவற்றையும் அவை பாவமாக இருந்து விடுமோ என்று பயந்து அவற்றை விட்டொழிக்கும் வரை "முத்தக்கீன்" பயபக்தியாளர்- இறை உணர்வுமிக்கவர் என்ற உயர் நிலையை தான் அடைந்து கொள்ள முடியாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அத்திய்யத்துஸ்ஸஃதீ(ரழி) திர்மிதீ, இப்னுமாஜ்ஜா)

   "தக்வா" ஒருவருடைய உள்ளத்தில் ஏற்பட்டு விட்டால் அவர் சதா காலமும் தான் அல்லாஹ்வின் முன்னிலையில் இருப்பதான உணர்வு அவருக்கு உண்டாகி விடுகிறது. அதன் காரணமாக அவர் தாம் செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் அது பாவமாக இருந்துவிடக் கூடாது என்று மிகவும் எச்சரிக்கையாக இருந்து கொள்வார். அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

  3. மரணத்தை ஆசிப்பது தவறு என்று கூறப்படுகிறதே. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு ஆசிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதே என்ன செய்வது?

    உங்களில் எவரும் மரணத்தை ஆசிக்க வேண்டாம். நல்லவராயிருப்பினும் அவர் நற்காரியத்தை அதிகம் தேடிக்கொள்ளும் வாய்ப்பிருக்கிறது. தீயவராயிருப்பின் அல்லாஹ்விடம் 'தவ்பா' செய்து அவனது பொருத்தத்தை அடைய ஏதுவிருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா(ரலி), புகாரி

   உங்களில் எவரும் தமக்கு ஏற்பட்டுள்ள கஷ்டத்தின் காரணமாக ஆசிக்க வேண்டாம். அவ்வாறு நிர்ப்பந்த நிலை ஏற்ப்பட்டு கேட்க வேண்டுமாயின் பின்வருமாறு கேட்பாராக! யாஅல்லாஹ்! எனக்கு வாழ்க்கை சிறப்புடையதாயிருக்கும் வரை என்னை வாழச் செய்வாயாக! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரலி), புகாரி, முஸ்லிம்)

   ஆகவே மேற்காணும் ஹதீதுகளின் அடிப்படையில் மரணத்தை ஆசிப்பது தவறு என்பதை அறிகிறோம். ஆகையால் மரணம் வருவதை  எதிர்பார்த்துக்கொண்டு அதற்காக  முற்கூட்டியே நல்ல அமல்கள் செய்து கொள்வது வரவேற்புக்குரியதாகும்.

 
   4. நான் நேர்ச்சை செய்து கொண்டேன் அதனை நான் நிறைவேற்றலாமா?

   நேர்ச்சை  செய்வதற்கு  மார்க்கத்தில்  அனுமதியுள்ளது.  அவை  மார்க்கம்  அனுமதித்த வகையில் இருக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்காத வழிகளில் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறை வேற்றத் தேவையில்லை.

   இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிவான். (அல்குர்ஆன்: 2:270)

   மர்யமே அவற்றை உண்டு ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் பார்க்க நேரிட்டால் ' மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கிறேன்; ஆதலால் இன்று எந்த மனிதருடனும் பேச மாட்டேன்' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 19:26)

   இம்ரானின் மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறினார். (அல்குர்ஆன்: 3:35)

    'நல்லவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்' (அல்குர்ஆன்: 76:7) என அல்லாஹ் கூறுகிறான்.

   அல்லாஹ்வுக்கு வழிபடும் காரியத்தில் ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை அவர் நிறைவேற்றி) அவனுக்கு அவர் வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியத்தில் ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு அவர் மாறு செய்ய வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் புகாரி, திர்மிதீ நஸயீ. அல்லாஹ் மிக அறிந்தவன்.

 
   5. மாற்று  மதத்தவர்கள்  நமக்கு ஸலாம் கூறினால்  நாம் பதில்  ஸலாம் கூறலாமா?

    வேதமுடையோர் உங்களுக்கு சலாம் கூறினால் 'வ அலைக்கும்' என்று கூறுங்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம்பெற்ற ஹதீஸாகும்.  இந்த ஹதீஸை வைத்து முஸ்லிமல்லாதர்வர்கள் ஸலாம் கூறினால் 'அலைக்கும்' என்று மட்டுமே கூறவேண்டும் என்கிறார்கள்.

   உங்கள் மீது யூதர்கள் ஸலாம் கூறினால் அஸ்ஸாமு அலைக்கும் (உங்கள்மீது அழிவு ஏற்படட்டும்) என்றே கூறுகின்றனர். எனவே நீங்கள் 'அலைக' என்று கூறுங்கள்! என இப்னு உமர்(ரலி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

   يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுக்கு சலாம் சொல்லாதவரை பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது கூறப்படுகிறது) (24:27)

    யூதர்கள் 'அஸ்ஸாமு அலைக' (உன்மீது அழிவு ஏற்படட்டும்) என்று கூறுகின்றனர். அதனால் நீங்கள் 'அலைக' என்று கூறுங்கள் என என்று நபி(ஸல்) அவர்கள் அதன் காரணத்தை விளக்குகிறார்கள். யூதர்கள் முறையாக சலாம் சொல்லாததினால் தான் நபி(ஸல்) அவர்கள் 'அலைக' என்று கூறும்படி சொன்னார்கள். முஸ்லிம் அல்லாதவர்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும்' என்று முறையாக கூறும்போது நாம் "அலைக" என்று கூற வேண்டியதில்லை.

    யூதர்களில் ஒரு கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து 'அஸ்ஸாமு அலைக' என்றனர். (அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறாமல்) அவர்கள் கூறுவதை நான் விளங்கிக் கொண்டேன். "அலைக்குமுஸ்ஸாமு வல்லஃனது"  (உங்களுக்கு அழிவும் சாபமும் ஏற்படட்டும்)  என்று மறுமொழி கூறினேன்.  இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே!  சற்று  பொறு!  எல்லா  விஷயங்களிலும்  அல்லாஹ்  பண்பாட்டை  (நளினத்தை) விரும்புகின்றான்  என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் கூறியதை நீங்கள் கேட்கவில்லையா? என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் " வ அலைக்கும்" (உங்ளுக்கும் அவ்வாறே) என்று கூறிவிட்டேனே என்றார்கள். ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

    யூதர்கள் அழிவு உண்டாகட்டும் என்று சொல்லியும் கூட அதேபோல் கூறாமல் நாகரீகமாக 'வ அலைக்கும்'  (உங்களுக்கும்) என்று மட்டும் கூறச் சொல்கிறார்கள்.

   
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا  அல்லாஹ் தன் திருமறையில் "உங்களுக்கு முகமன் கூறப்பட்டால் அதைவிட அழகாக அல்லது அதற்கு சமமாக நீங்களும் மறுமுகமன் கூறுங்கள்" (4:86)

    எனவே, முஸ்லிமல்லாதவர்கள் அவர்கள் முறையாக அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறும் போது நாமும் முறையாக பதில் சொல்வதற்கு எந்தத் தடையும் கிடையாது. அல்லாஹ் மிக அறிந்தவன்.
   

  6. அல்லாஹ்வுக்காக ஒரு முஸ்லிமை வெறுத்து ஒதுக்கலாமா?

     எவர் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காக கொடுத்து, அல்லாஹ்வுக்காக கொடுக்க மறுத்து விடுகிறாரோ அவர் ஈமானை நிறைவு செய்து விட்டார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூ உமாமா(ரலி), அபூதாவூத், திர்மிதீ

    மேற்கானும் ஹதீஸின்படி ஒரு முஸ்லிமை, வெறுப்பதும், அவருக்கு எதுவும் கொடுக்காமல் இருப்பதும் சரி என்பதாக தெரிந்தாலும், தொடர்ந்து இந்த நிலை நீடிப்பதை நபி(ஸல்) அவர்களின் கீழ்காணும் ஹதீஸ் தடை செய்கிறது.

     ஒருவர் தனது  சகோதரரை மூன்று தினங்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது முறையாகாது. இருவரும் சந்தித்துக் கொள்ளும்போது இவரை விட்டு அவரும், அவரை விட்டு இவரும் முகம் திருப்பிக் கொள்கின்றனர். இவ்விருவரில் சிறந்தவர் (மற்றவருக்கு) ஸலாம் கூற முந்துபவரேயாவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ அய்யூபுல் அன்ஸாரி (ரலி), புகாரி, முஸ்லிம் அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

  7. திருஷ்டிக்காக அல்லது கைகால் வலி நீங்குவதற்காக ஓது முடிச்ச கருப்புக்கயிற்றை கட்டிக்கொள்ளலாமா?

    திருஷ்டிக்காக அல்லது கைகால் வலி நீங்குவதற்காக ஓது முடிச்ச கருப்புக்கயிற்றை கட்டிக்கொள்ள மார்க்கத்தில் அனுமதியில்லை.

   அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களின் துணைவியார் ஜைனபு(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ஒரு முறை   அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் எனது கழுத்தில் ஓர் கயிற்றை கண்டு இது என்ன? என்றார்கள். இது எனக்காக மந்திரித்த கயிறு என்றேன். உடனே அவர்கள் அதைப்பிடித்து அறுத்துவிட்டு, நீங்கள் அப்துல்லாஹ் (வாகிய என்னுடைய) குடும்பத்தார் ஷிர்க்கை விட்டும் வெகு தூரத்திலுள்ளவர்கள். நிச்சயமாக மந்திரமும், திருஷ்டிக்காக மந்திரித்த கயிறும், சூனியம் செய்தல் ஆகியவை அனைத்தும் ஷிர்க்கு என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்....(அபூதாவூத்)

   மேற்காணும் ஹதீஸிலிருந்து குணத்தை நாடி உடம்பில் கறுப்பு கயிற்றை மந்திரித்து கட்டுவதெல்லாம் இஸ்லாத்திற்கு புறம்பானதாகும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

   8. நபி(ஸல்) அவர்களின் மீது உள்ள அன்பின் காரணமாக மவ்லூது ஓதாவிட்டாலும் குர்ஆன் ஷரீப் ஓதி ஹதியா செய்து விருந்து கொடுக்கலாமா?

    மெளலூது தவறெனில் குர்ஆன் ஓதி ஹதியா செய்வதின் மூலம் அன்பை காட்டலாமா? எனக் கேட்கிறீர்கள். நபி(ஸல்) அவர்கள் மீது அளவு கடந்த அன்பைக் காட்ட அவர்கள் காட்டித் தந்த வழிமுறைதான் நல்லது. தனக்கு குர்ஆன் ஓதி ஹதியா செய்யும்படி அவர்கள் நமக்கு ஏவவில்லை. நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப்பின் எந்த நபித்தோழரும் குர்ஆன் ஓதி அவர்கள் ஹதியா செய்ததாக ஆதாரமும் அறவேயில்லை. ஆனால் நாம் குர்ஆன் ஓதினால் நாம் ஹதியா செய்யாமலே நமக்குறிய நன்மைகள் குறைக்கபடாமல் நபி(ஸல்) அவர்களுக்கும் நன்மை சென்றடைகிறது.

   நபி(ஸல்) அவர்கள் மூலம் நாம் குர்ஆனைப் பெற்றோம். அவர்கள் மூலம் நேர்வழியான இஸ்லாத்தை பெற்றோம். எனவே எந்த ஒரு நன்மையான செயலை வாழையடி வாழையாக செய்ய வைத்தார்களோ, அவர்களுக்கு அந்த நன்மையின் பங்கு சேர்ந்து கொண்டேயிருக்கும். எனவே நாம் குர்ஆன் ஓதினால் அதை ஹதியா செய்யாமலேயே அவர்களுக்கு நன்மை கிட்டும்.

   நிச்சயமாக அல்லாஹ்வும், அவனது வானவர்களும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்கிறார்கள். (எனவே) விசுவாசிகளே! நீங்களும் அவர்மீது ஸலவாத்துச் சொல்லி சலாமும் பகருங்கள். (அல்குர்ஆன் 33:56)

   இந்த வசனத்தில் விசுவாசிகளை அழைத்து நபியின் மீது ஸலவாத்து சொல்ல ஆணையிடுகிறான். நபியின் மீது அதிகமாக ஸலவாத்து சொல்லுவது அவர்மீதுள்ள அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் செயலாகும். நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்தபடிதான் செயல்பட வேண்டும். அவர்கள் விலக்கியதை நாமும் விலக்க வேண்டும். இப்படி இஸ்லாத்தின் ஏவல் விலக்கின்படி நிறைவேற்றுவதுதான் நபி(ஸல்) அவர்கள் மீது நாம் காட்டும் அளவற்ற அன்பு ஆகும்.எவ்வித சடங்குகளுமின்றி ஏழை எளியவருக்கு உணவளிப்பதை இஸ்லாம் வரவேற்கிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.

       

   9. பெண்கள் தங்கள் முகத்தையும் மறைத்தாக வேண்டுமா?

   (நபியே!) மூமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத்தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். தங்கள் அழகையும் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தையும் அதனின்று (சாதரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர வேறு எதையும் வெளிக்காட்டலாகாது. இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்பை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)

   ஒருமுறை அபூபக்ரு(ரழி) அவர்களின் மகள் அஸ்மா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில்  தன்மீது ஓர் மெல்லிய ஆடை அணிந்த நிலையில் வந்தார்கள். அப்போது நபி(ஸல்) தமது முகத்தை திருப்பிக்கொண்டு அஸ்மாவே! ஒரு பெண் பருவம் அடைந்துவிட்டால் இதுவும், இதுவும் நீங்குதலாக என்று தமது முகத்தையும், மணிக்கட்டு வரையுள்ள கையையும் சமிக்கை செய்து காட்டி வேறு பகுதிகளைப் பிறர் பர்ப்பது கூடாது என்று கூறினார்கள் (அஸ்மா(ரழி), அபூதாவூத்)

   மேற்காணும் வசனத்தையும், ஹதீஸையும் முன்வைத்து ஒரு பெண் தனது முகத்தையும், மணிக்கட்டு வரைத் தனது இரு கைகளையும் தவிர மற்ற பாகங்கள் அனைத்தையும் மறைத்தாக வேண்டும் என்பதை அறிகிறோம். அல்லாஹ் மிக அறிந்தவன்.

  10. காதணிகள் அணியக்கூடாது என்று சிலர் கூறுகிறார்களே சரியா?

ஒரு முறை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் நபி(ஸல்) ஆவர்களுடன் நீங்கள் பெருநாளில் இருந்துள்ளீர்களா? என்று கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் 'ஆம்' என்று கூறிவிட்டு நபி(ஸல்) அவர்கள் பெருநாளன்று புறப்பட்டு (பெருநாள் தொழுகையை) தொழுதார்கள். பின்னர் குத்பா - பிரசங்கம் செய்தார்கள். ஆனால் பாங்கு, இகாமத், எதுவும் சொல்லவில்லை. பின்னர் பெண்கள் பகுதிக்கு வந்து அவர்களுக்கு உபதேசம் செய்துவிட்டு அவர்களை ஸதகா தர்மம் செய்யும்படி ஏவினார்கள். அப்போது அப்பெண்கள் தமது காதுகளிலும், கழுத்துகளிலும் உள்ளவற்றைக் குனிந்து கழற்றி பிலால்(ரலி)  அவர்களிடம் கொடுத்தார்கள். பிறகு அவர்களும் பிலால்(ரலி) அவர்களும் அவர்களின் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார்கள். (இப்னு அப்பாஸ்(ரலி) புகாரீ, முஸ்லிம்)

   புகாரியின் அறிவிப்பில் அப்பெண்கள் தமது காது வாலிகளையும் மோதிரங்களையும் கழற்றி கொடுத்தார்கள் என்பதாக உள்ளது. ஆகவே மேற்காணும் ஸஹீஹான ஹதீஸ்களில் சஹாபா பெண்கள் தமது காதுகளை குத்தி வாலி போட்டிருந்தார்கள் என்பதை அறிகிறோம். இதனை அடிப்படையாகக் கொண்டு காதணிகள் அணிபவர்களை நாம் தடை செய்ய முடியாது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. அல்லாஹ் மிக அறிந்தவன்.