பெற்றால்தான் பிள்ளை!

Nasar ali khan, Dubai


   உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை, உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை! இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை. அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான். அவர்களை அவர்களின் தந்தை பெயரை சேர்த்தே அழையுங்கள் அதுவே அல்லாஹ் விடத்தில் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்களை கொள்கையில் சகோதரர்களாகவும், நண்பர்களாகவும் ஆவார்கள். தவறுதலாக நீங்கள் கூறிவிட்டால் உங்கள் மீது குற்றமில்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவது குற்றமாகும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனுமாக இருக்கிறான். அல்குர்ஆன் : 33: 4, 5

   மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை ஆய்ந்து படியுங்கள். இறைவனாகிய அல்லாஹ்வின் வசனங்களில் நம்பிக்கை கொண்ட நாம் இவ்வசனத்தின் அடிப்படையில் நடக்கிறோம் என்றால், நிச்சயமாக இல்லை. எத்தனையோ முஸ்லீம்கள் பிறரின் பிள்ளைகளை தத்து எடுத்து வளர்க்கின்றனர். அப்பிள்ளைகளை தம் பிள்ளைகள் எனக் கூறுவதோடு மடடுமில்லாமல் தம் பிள்ளைகளுக்கு தரவேண்டிய அனைத்து உரிமைகளைகளையும் கொடுத்தும் மற்றும் எடுத்தும் வருவதை காண்கிறோம். இது தவறு என்பதை உணர்த்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

   நாம் ஒரு குழந்தையை தத்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. மாறாக அக்குழந்தையை தன் குழந்தை எனக் கூறுவதைத்தான் தவறு என்கிறது. காரணம் ரத்த பந்தங்களை மாற்றிக்கூறுவதை இஸ்லாம் வெற்று வார்த்தைகள் அதாவது பொய் எனக் கூறுகிறது. பிறரின் பிள்ளைகளை தம் பிள்ளைகள் எனக் கூறுவது பொய்தானே! ஆகவே அப்பிள்ளைகளை அவர்களின் தந்தை பெயருடன் அதாவது (இன்ஷியலுடன்) அழையுங்கள். பள்ளியில் சேர்க்கும் போதும் சரி திருமணம் போன்ற சடங்குகளிலும் சரி தந்தையின் பெயரை சேர்த்தே குறிப்பிட வேண்டும். இது அல்லாஹ்வின் கட்டளையாகும்.

   அவர்களின் தந்தையை அறியமுடியாத அநாதைக் குழந்தையாய் இருந்தால். அதாவது மருத்துவ மனையில் அல்லது தற்போது தமிழக அரசால் நடத்தப்படும் தொட்டில் குழந்தை போன்ற இடங்களில் இருந்து குழந்தையை எடுத்து வளர்த்தால் அவர்களை சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும் பாவிக்க வேண்டும் அல்லது நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்க வேண்டும்.

   தந்தை பெயர் இல்லாவிட்டால் பள்ளிக்கூடத்தில் சேர்க்கமாட்டார்கள் என்று வாதம்புரிவோர் எந்தவொரு படிவத்திலும் தந்தை அல்லது காப்பாளர் என எழுதியிருப்பதை அறியதவராகவே இருக்கின்றனர். மேலும் பிறரின் பிள்ளை எனக் கூறி வளரப்பதால் அப்பிள்ளையின் மனம் புண்படும் என வாதிப்போர், பிற்காலத்தில் அவனுக்கு புத்தி வந்த பின் தெரிய வரும்போது ஏற்படும் மன உளைச்சலை எண்ணிப்பார்க்க வேண்டாமா?

   இயல்பிலேயே மனிதன் குழந்தையில்லாத போது தத்து எடுத்து வளர்ப்பான் தொடர்ந்து இவனுக்கு பிள்ளைப்பேறு கிடைத்தபின் தத்துப்பிள்ளையை வேறுபடுத்திப்பார்ப்பான் இது மனித இயல்பு. இப்படி நடத்தப்படும் போது அப்பிள்ளைக்கு மன வருத்தம் ஏற்படும். எனவே ஆரம்பத்திலிருந்தே பிறரின் பிள்ளைதான் என்பதை தெளிவு படுத்தி விடவேண்டும். அதுமட்டும் இல்லாமல் சொத்துப் பங்கீடு எனும் பாகப்பிரிவினையில் கூட தத்துப் பிள்ளைகளுக்கு எந்த உரிமையையும் இஸ்லாம் வழங்க வில்லை.

   காரணம் பெற்ற பிள்ளைகள் இருக்கும் போது தத்துப் பிள்ளைகளுக்கு பங்கு தரும்போது பிரச்சினைகள் வரும் வளர்த்தது போதாதா சொத்து வேறு தரனுமா? என பெற்ற பிள்ளைகள் கேட்பார்கள். பிரச்சினைகள் பெரிதாகி பல்வேறு தவறுகளுக்கு வழிவகுக்கும். ஏனவே தான் இஸ்லாம் எந்த சட்டத்திலும் தெளிவான முடிவுகளை அறிவிக்கிறது. ஆனால் தனக்குரிய மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தன் விருப்பத்தின்படி யாருக்கும் தர்மம் செய்வதற்கு இஸ்லாம் அனுமதிக்கிறது. அதனடிப்படையில் வளர்ப்புப் பிள்ளைகளுக்கு தம் சொத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கை எழுதி வைக்கலாம். இருப்பினும் எழுதி வைக்காவிட்டால் வளர்ப்புப் பிள்ளைகளுக்கு சொத்திலிருந்து எந்தப் பங்கும் சேராது என்பதையும் கவனத்தில் கொள்க.

   ஆகவே பிள்ளைகளை எடுத்து வளர்ப்போரும், வளர்வோரும் தங்கள் நிலையை அறிந்து இறைவனின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். பிறரிடம் வளரும் பிள்ளைகள் தங்கள் பெற்றோர் உயிரோடு இருந்தால் அவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளையும். உரிமைகளையும் செவ்வனே நிறைவேற்ற வேண்டும்.

   தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி மனிதனுக்கு வலியிறுத்தினோம்.  அல்குஆன் 46 :15 என இறைவன் தன் திருமறையில் கட்டையிடுகிறான்.

   ஒரு மனிதர் இறைதூதரிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் நல்ல விதமாக நடந்து கொள்ள அனைவரை விடவும் உரிமை பெற்றவர் யார்? எனக்கேட்டார் அதற்கு இறைதூதர் (ஸல்) அவர்கள் உம்முடைய தாய் என்று கூறினார்கள். அதற்கடுத்து யார்? என அம்மனிதர் கேட்டபோது இறைதூதர் (ஸல்) இரண்டாவது முறையும் உம்முடைய தாய்  என்று கூறினார்கள். அம்மனிதர் மூன்றாவது முறையாக அதற்கடுத்து யார்? என கேட்ட போது இறைதூதர் (ஸல்) உம்முடையதாய் என்றே பதிலளித்தார்கள். நான்காவது முறை அம்மனிதர் அதற்கடுத்து யார்? எனக் கேட்ட போது உம்முடைய தந்தை என்றும் படிப்படியாக நெருங்கிய உறவினர்களும்  என்று பதிலளித்தார்கள். அறிவிப்பாளர் : அபூஹீரைரா (ரலி) நூற்கள் : புகாரி, முஸ்லீம்.

   உலகில் அனைவரைவிடவும் தாய் மதிக்கப்படும் உறவு. எந்த அளவுக்கு என்பதை மேற்கூறிய ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது. ஆகவே! தன் விஷயத்தில் சரியாக நடக்காத தாயாக இருப்பினும் இதே நிலைதான்.காரணம் நல்ல தாய் கெட்ட தாய் என இறைவனோ, இறைத் தூதரோ வேறுபடுத்திக் கூறவில்லை!.

   ஒரு சிலர் தத்துப்பிள்ளையை சொந்த பிள்ளையைவிட அதிகமாக நேசிப்பதும் கண்காணிப்பதும் உண்டு. இது தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும். அதுபோலவே தம்மை எவரேனும் எடுத்து வளர்த்து ஆளாக்கினாலும் கூட பெற்ற தாய்- தந்தை இருப்பின் அவர்களை கவனிப்பதும் தம் கடமை என பிறரிடம் வளர்ந்த பிள்ளைகள் அறிய வேண்டும்.

   இதில் மாறு செய்யக்கூடியவர்கள் நிச்சயமாக ஏக இறைவனின் தண்டணைக்கு உள்ளாவார்கள் என்பதை அஞ்ச வேண்டும். இன்னும் சில பகுதிகளில் திருமணமான பிறகு மகனை இழக்கும் பெற்றோரும் உண்டு. இதற்கு மார்க்க அறிவில்லாத சம்மந்திகளும் மருமகள்களுமே காரணம் என்பதை நாம் விரிவாக விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே எண்ணுகிறேன். தாயிடம் இருந்து பிள்ளையை பிரிப்போர் பின் வரும் ஹதீஸை படித்து திருந்த வேண்டும்.

   எவர் தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் பிரிவினையை உண்டு பண்ணி விடுகிறாரோ, அவருக்கு பிரியமானவர்களை விட்டு மறுமையில் இறைவன் பிரிவினையை ஏற்படுத்தி விடுவான். என இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம் : அஹ்மத்.

   பிள்ளைகளுடைய உரிமைகளைப் பெற தகுதியானவர்கள் பெற்றோரே! அதில் குறிப்பாக தாய் முதல் மூன்று இடங்களை பெற்றவராக இருப்பதால் பெற்றால்தான் பிள்ளையா? என்றெல்லாம் முரட்டு வாதம் புரிவோர் இறைவனிடம் கூற எந்த பதிலை தயார் செய்து வைத்திருக்கின்றார்களோ தெரிய வில்லை.

   குர்ஆன் ஹதீஸ் ஒளியில் பெற்றால்தான்பிள்ளை என்பதை விளங்கி அதனடிப்படையில் நடப்போமாக! அதற்கு ஏக இறைவன் உதவியும் செய்வானாக !

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த