P.ஜெய்னுல் ஆபிதீன்

    எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் நபி முஹம்மது (ஸல்) அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும் மறுமையில் "ஷபாஅத்" என்னும் பரிந்துரை செய்பவர்களாகவும்," மகாமுன் மஹ்மூத்" என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான்.

    அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புக்களை வழங்கி இருப்பாதாக கூறி இருக்கிறானோ, நபி (ஸல்) அவர்கள், தனக்கு எந்த சிறப்புக்கள் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ, அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளைக் கட்டிவிடுவது மிகப்பெரும் குற்றமாகும்.காரணம் நபி (ஸல்) அவர்களுக்குறிய தனிச் சிறப்புகள் அல்லாஹ் சொல்லாமல் நாமாக அறிந்து கொள்ள இயலாத ஒன்றாகும்.இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை  நபி(ஸல்) அவர்கள் மிக வண்மையாக கண்டித்துள்ளனர்.

    ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதாவேன், மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன்.அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன். (அஹ்மத்,பைஹகீ)

    எனது தகுதிக்கு மேல் என்னை உயர்த்தாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் என்னை (அவனது) அடியானாக ஆக்கிவிட்டான். (ஹாகீம்,தப்ரானி)

    "கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்தது போல்,என்னை நீங்கள் வரம்பு மீறி புகழாதீர்கள்" (புஹாரி,தாரமி,அஹ்மத்,திர்மிதீ)

    மேற்கூறிய மூன்று நபிமொழிகளிலும் நபி (ஸல்) அவர்கள் தன்னை வரம்பு மீறிப் புகழ்வதை கண்டித்துள்ளார்கள். அவர்கள் உத்தரவுக்கு மாற்றமாக புகழ்கிறோம் என்ற எண்ணத்தில் வரம்பு மீறுவது உண்மையில் புகழாகாது. மாறாக நபி (ஸல்) அவர்களின் உத்தரவை அலட்சியம் செய்த மாபெரும் குற்றமாகிவிடும். இந்த அடிப்படையை நாம் தெரிந்து கொண்டபின், பிரச்சனைக்குள் இப்போது நேரடியாக நுழைவோம்.

    முதன் மனிதராக ஆதம்(அலை) அவர்களை அல்லாஹ் மண்ணிலிருந்து படைத்தான் என்பதைத் திருக்குர்ஆன் பல இடங்களில் சொல்லிக் காட்டுகின்றது. ஆதம்(அலை) அவர்களின் சந்ததிகளின் சங்கிலித் தொடரில் அப்துல்லாஹ்விற்கும்,ஆமினாவுக்கும் மகனாக நபி (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். ஈஸா நபி தவிர மற்ற மனிதர்கள் எந்த முறையில் பிறந்தார்களோ,அப்படித்தான் நபி(ஸல்) அவர்களும் பிறந்தார்கள். எல்லா மனிதர்களுக்கும் எது மூலமாக இருந்ததோ அதுவே நபி(ஸல்) அவர்களுக்கும் மூலமாக இருந்தது. இதுதான் குர்ஆன் ஹதீஸ் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

    இன்னும் அவன் தான் மனிதனை(குறிப்பிட்ட) நீரிலிருந்து படைத்தான். (அல்குர்ஆன்:25:54)

    மனிதனை ஒரு இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன் பார்க்கவில்லையா? (அல்குர்ஆன்:36:77)

    இன்னும் பல வசனங்கள் மனித இனத்தின் மூலப் பொருளாக விந்து துளியையே குறிப்பிட்டு காட்டுகின்றன. முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் களி மண்ணால் படைக்கப்பட்டர்கள் என்பதைப் பல வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன.

    அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்;இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான். (அல்குர்ஆன்:32:7)

    இதுபோன்ற ஏராளாமான வசனங்கள் மனிதத் தோற்றம் மண்ணிலிருந்து துவங்கி, பின்னர் விந்திலிருந்து தொடர்கிறது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

    இதற்கு மாற்றமாக முதலில் அல்லாஹ் முஹம்மது நபி(ஸல்)அவர்களின் ஒலியைப் படைத்தான், அந்த ஒளியிலிருந்து எல்லாப் படைப்புக்களையும் படைக்கத் துவங்கினான் என்று கூறுவது திருக்குர்ஆனின் வசனங்களுடன் நேரடியாக மோதுவதேயாகும்.

    அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்னிலிருந்து ஆரம்பித்தான். (அல்குர்ஆன்:32:7)

    இந்த வசனத்தை கொஞ்சம் ஆராய்ந்து பாருங்கள்! மனிதப் படைப்பின் துவக்கமே களி மண்தான் என்று எவ்வளவு தெளிவாகக் கூறுகின்றது! களி மண்தான் மனிதப் படைப்பின் துவக்கம்,ஆரம்பம் என்று அல்லாஹ் கூறிக்கொண்டிருக்க, இல்லை நபி (ஸல்) அவர்களின் ஒளி தான் ஆரம்பம் என்று கூறுவது அல்லாஹ்வுக்கு நாம் சொல்லிக் கொடுப்பது போலவும், அதிகப் பிரசங்கித்தனமாகவும் தோன்றவில்லையா? (நவூதுபில்லாஹ்)

    அல்லாஹ் திருக்குர்ஆனின் எந்த வசனத்திலும், நபி (ஸல்) அவர்கள் ஒளியால்  படைக்கப்பட்டார்கள் என்று கூறவே இல்லை. நபி (ஸல்) அவர்களும் தன்னை அல்லாஹ் ஒளியிலிருந்து படைத்தான் என்று கூறியதாக எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படவில்லை.

    இந்தக் கதையை கட்டி விட்டவர்கள் "முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக்" என்ற ஹதீஸ் நூலில் இது உள்ளதாக ஆதாரம் காட்டிக் கொண்டிருந்தனர். பல நூற்றாண்டுகளாக இது நம்பப்பட்டு வந்தது. பரலேவிகள் இந்த முஸ்ஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் என்ற நூலையே தங்கள் கூற்றுக்கு ஆதராமாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

    எந்த நூலில் இந்தக் கதை இருப்பதாக இதுகாலம் வரை கூறிக் கொண்டிருந்தார்களோ, எதை நம்பி, பல நூல்களில் எழுதி வைத்துச் சென்றார்களோ, அந்த நூலிலேயே அது இல்லை என்று நிரூபணமாகி விட்டபின், எள்ளளவும் ஆதாரமற்ற கட்டுக்கதைதான் அது என்பது ஜயத்திற்கிடமின்றி முடிவாகிவிட்டது.

    இறைவா! என் உள்ளத்தில் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் பார்வையிலும் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! எனது செவியிலும் எனக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக! என் வலது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் இடது புறத்திலும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என் மேல் புறத்திலும், கீழ் புறத்திலும், எனக்கு முன்னும்,  பின்னும் ஒளியை ஏற்படுத்துவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி துஆச் செய்பவர்களாக இருந்துள்ளார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி) புஹாரி,முஸ்லிம், அஹ்மத், அபூதவூத்)

    ஒளியால் படைக்கப்பட்டார்கள் என்று கூறுவது எந்த ஹதீஸ் நூலிலும் காணப்படாத போது இதைச் சொல்பவர்களின் நிலை என்ன? "நூரே முஹம்மதியா" என்று கூறித் திரிபவர்களின் நிலை என்ன? அதையும் அல்லாஹ்வின் தூதரே தெளிவுபடுத்துகிறார்கள்.

    "எவன் என்மீது திட்டமிட்டு ஒரு பொய்யைச் சொல்கிறானோ, அவன் தனது  தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக்கொள்ளட்டும்"

    இந்த நபி மொழி இடம்பெறாத ஹதீஸ் நூலே இல்லை. முதவாதிர் என்ற அந்தஸ்து பெற்ற ஹதீஸ்களில் முதலிடத்தை வகிக்கின்ற ஹதீஸ் இது எல்லா ஹதீஸ் நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை மீறி துணிந்து இப்படிப் பொய்யைப்  பிரச்சாரம் செய்பவர்கள் எங்கே செல்ல விரும்புகின்றனர்?

    நபி (ஸல்) அவர்களின் தனிச் சிறப்புகளைச் சொல்லவே நேரம் போதவே இல்லை. அவர்களின் ஒழுக்கம், நேர்மை, தூய்மையான அரசியல், சிறந்த இல்லறம், வணக்க வழிபாடு, அவர்களின் அருங்குணங்கள், அல்லாஹ்வை தவிர எவருக்கும் அஞ்சாமை, அவர்களின் வீரம், தியாகம் போன்ற எண்னற்ற சிறப்புகளை அல்லாஹ் அவர்களுக்கு  வழங்கியுள்ளான். பொய்யானவைகள் மூலம் அவர்களைப் புகழும் நிலையில் அல்லாஹ் அவர்களை வைத்திருக்கவில்லை.

    நபி (ஸல்) அவர்களின் அன்பு மகன் இப்ராஹீம்(ரழி) இறந்த போது ஏற்பட்ட கிரகணத்திற்கு ஸஹாபாக்கள் இப்ராஹீமின் மரணத்தை காரணமாக கட்டிய போது நபி (ஸல்) அவர்கள் இந்தப் பொய்யான புகழைக் கண்டித்துள்ள வரலாறு எவரும் அறிந்த ஒன்று. (புஹாரி, முஸ்லிம்)

    இந்தக் கதையை அடிப்படையாக வைத்து நபி (ஸல்) அவர்கள் வெயிலில்  நடந்தால் நிழல் விழாது என்ற துணைகதை வேறு, இதற்கும் எவ்வித ஆதாரமும் கிடையாது. இதுபோன்ற பொய்களைக் கூறி நரகத்திற்கு ஆளாவதை விட்டும் அல்லாஹ் நம்மைக் காக்கட்டும்! அவர்களின் உண்மை வரலாற்றைக் கூறி அவர்களை உண்மையாகப் புகழ்ந்தவர்களில் அல்லாஹ் நம்மை ஆக்கட்டும்.

 

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த