|
|
|
நேர்ச்சை |
நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. அவை மார்க்கம் அனுமதித்த வகையில் இருக்க வேண்டும். மார்க்கம் அனுமதிக்காத வழிகளில் நேர்ச்சை செய்திருந்தால் அதை நிறை வேற்றத் தேவையில்லை.
இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிவான். (அல்குர்ஆன்: 2:270)
மர்யமே அவற்றை உண்டு ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் பர்க்க நேரிட்டால் மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கிறேன்; ஆதலால் இன்று எந்த மனிதருடனும் பேச மாட்டேன்' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்: 19:26)
இம்ரானின் மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறினார். (அல்குர்ஆன்: 3:35)
'நல்லவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்' (அல்குர்ஆன்: 76:7) என அல்லாஹ் கூறுகிறான்.
நேர்ச்சையானது விதியில் எழுதப்படாத எந்த ஒன்றையும் மனிதனிடம் கொண்டு வந்து விடாது. மாறாக, அவனுக்கு எழுதப்பட்ட விதியின் பக்கமே நேர்சை அவனைக் கொண்டு செல்கிறது. நேர்ச்சை செய்வதன் மூலம் கஞ்சனிடமிருந்து இறைவன் (செல்வத்தை) வெளிக்கொணர்கிறான். இதற்கு முன் எந்தக் காரணத்திற்காக (ஏழைக்கு) அவன் வழங்காமல் இருந்தானோ அதே காரணத்திற்காக (இப்போது) வழங்கத் தொடங்கி விடுகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்
அல்லாஹ்வுக்கு வழிபடும் காரியத்தில் ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை அவர் நிறைவேற்றி) அவனுக்கு அவர் வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் காரியத்தில் ஒருவர் நேர்ச்சை செய்திருந்தால் (அதை நிறைவேற்றி) அவனுக்கு அவர் மாறு செய்ய வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம் புகாரி, திர்மிதீ நஸயீ
மேற்கண்ட குர்ஆன் வசனங்களும், நபி மொழிகளும் நேர்ச்சை செய்யலாம் என அறிவிக்கின்றன. எனினும் ஒரு ஹதீஸில் நேர்சை ஒருவனது விதியில் எதையும் மாற்றிவிடாது. நேர்சை கஞ்சனிடமிருந்து அவனது பொருள் செலவு செய்வதற்கும் காரணமாகி விடுகிறது என்றும் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
குர்ஆன் ஓதுவது நல்ல வணக்கம்தான். அதற்காக நேச்சை செய்வதும் ஆகுமானதுதான். ஆனால் அவர்தான் குர்ஆன் ஓதவேண்டுமே தவிர சிலரை அழைத்து கூலிக்கு குர்ஆன் ஓதுவது மார்க்கம் அனுமதிக்காத செயல் ஆகும். நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் இவ்வாறு செய்ததாக எந்த ஒரு ஆதாரத்தையும் நாம் ஹதீஸ்களில் காண முடியாது.