இறுதி நாள்

அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கின்ற இறைவனுக்கே புகழனைத்தும். கருணையும் ஈடேற்றமும் நபிமார்களிலும் இறைத்தூதர்களிலும் மிகச்சிறந்தவர்களான முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக.

நிச்சயமாக மறுமை நாளை நம்புவது ஈமானின் அடிப்படைகளிலும் அதன் ஆறு கடமைகளிலும் ஒன்றாகும். எனவே மறுமை சம்பந்தமாக இறை வேதத்திலும் ஆதாரப்பூர்வமான நபிவழியிலும் வந்தவற்றை நம்பாதவரை ஒருவன் இறைவிசுவாசியாக ஆக முடியாது. நிச்சயமாக மறுமை நாளை அறிந்து அதை அதிகமாக நினைவு கூருவது மனித வாழ்க்கையைச் சீர்படுத்துதல் இறையச்சத்தை ஏற்படுத்துதல் இறை மார்க்கத்தில் உறுதி கொள்ளல் போன்ற பல நன்மைகளுக்கு வழிகோலும். எனவே மறுமை நாளின் அமளிகளையும் கடுமைகளையும் எண்ணிப் பார்க்காமல் மறந்திருப்பதைப் போன்று மனிதனின் உள்ளத்தைக் கல்லாக்கி அவனைப் பாவங்கள் புரிந்திட தூண்டக் கூடியது வேறு எது இருக்க முடியும்?

மறுமை நாள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்:
அந்நாள் குழந்தைகளை நரைத்தவர்களாக்கிவிடும்.(அல்குர்ஆன் 73:17)

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனைப் பயந்து கொள்ளுங்கள் நிச்சயமாக இறுதி நாளின் அதிர்ச்சி மகத்தான பெரும் நிகழ்ச்சியாகும். அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்து விடுவதையும் ஒவ்வொரு கர்ப்பிணியும் தான் சுமந்திருக்கும் குழந்தையைப் பெற்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். இன்னும் மனிதர்களை மதி மயங்கியவர்களாகக் காண்பீர்கள். அவர்கள் (மதுவில்) மயங்கியவர்களல்லர். எனினும் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.(அல்குர்ஆன் 22:2)

மரணம்
மரணம் இவ்வுலகில் உயிருள்ளோரின் இறுதிக்கட்டமாகும். அல்லாஹ் கூறுகிறான்:

 ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை சுகித்தே தீர வேண்டும்.(அல்குர்ஆன் 3:185)

(பூமியில்) உள்ளயாவரும் அழிந்து போகக்கூடியவரே (அல்குர்ஆன் 55:26)

(நபியே!) நிச்சயமாக நீரும் மரணிக்கக் கூடியவரே இன்னும் அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே.(அல்குர்ஆன் 39:30)

இவ்வுலகம் எந்த மனிதருக்கும் நிரந்தரமானதல்ல. அல்லாஹ் கூறுகிறான்:
(நபியே)உமக்கு முன்னால் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தர வாழ்க்கையை ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 21:34)

1- மரணம் என்பது சந்தேகத்திற்கு வழியில்லாத உறுதியான விஷயமாகும். இவ்வாறிருந்தும் மனிதர்களில் அதிகமானோர் இதை மறந்திருக்கின்றனர். ஒரு முஸ்லிம் மரணத்தை அதிகமாக நினைப்பதும் அதற்குத் தயாராக  இருப்பதும் அவசியமாகும். இதுபோன்றே அவன் தன் மறுமை வாழ்விற்காக இவ்வுலக வாழ்வில் அதற்குரிய நேரம் வருவதற்கு முன்னர் நற்செயல்களைச் செய்து தயராகிக் கொள்வது அவசியமாகும்.

 நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஐந்து நிலைமைகள் ஏற்படுவதற்கு முன் ஐந்து நிலைமைகளைப் பேணிக்கொள். மரணத்திற்கு முன் வாழ்வையும், நோய் வரும்முன் ஆரோக்கியத்தையும், வேலைக்கு முன் ஓய்வையும், வயோதிகத்திற்கு முன் வாலிபத்தையும், ஏழ்மைக்கு முன் செல்வத்தையும்; பேணிக்கொள்.

உலகிலுள்ள எந்தப் பொருளும் மரணித்துவிட்டவனுடன் அவனுடைய மண்ணறைக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. நிச்சயமாக அவனுடன் தங்கியிருப்பது அவனுடைய செயல்கள் மட்டுமே. எனவே நற்செயல்களைச் சித்தப்படுத்திக் கொள்வதில் நீ அக்கறை கொள். அதன் மூலம் தான் நீ சந்தோசமடைய முடியும் அல்லாஹ்வின் உதவியால் வேதனையிலிருந்து ஈடேற்றமும் பெறமுடியும்.

2- தெரிந்து கொள்: மனிதனின் தவணை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய முடியாத மறைவான விஷயமாகும். எனவே யார் எப்போது எந்த இடத்தில் மரணமடைவார் என்பதை யாரும் அறிய முடியாது.

3- மரணம் வந்து விட்டால் அதைத் தடுக்கவோ பிற்படுத்தவோ அதை விட்டும் வெருண்டோடவோ முடியாது. அல்லாஹ் கூறுகிறான்: ஒவ்வோரு கூட்டதாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 7:34)

4- ஒரு முஃமினுக்கு மரணம் வந்து விட்டால் நறுமணம் வீசுகின்ற அழகிய தோற்றத்துடன் மலக்குல் மௌத்- உயிரைக் கைப்பற்றும் வானவர் அவனிடம் வருகிறார். அவருடன் சுவர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி கூறும் அருளுக்குரிய மலக்குகளும் வருகிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக எவர்கள் "எங்கள் இறைவன் அல்லாஹ்தான்" என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள்பால் மலக்குகள் வந்து, "நீங்கள் பயப்படாதீர்கள் கவலையும் பட வேண்டாம் - உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள்" (எனக் கூறியவாறு) இறங்குவார்கள். (அல்குர்ஆன் 41:30)

ஆனால் காஃபிருக்கு மரணம் வந்தால் நாற்றமுள்ள கருமுகமுடைய பயமுறுத்தும் தோற்றமுள்ள மலக்கு வருவார். அவருடன் வேதனை பற்றி எச்சரிக்கை செய்யக் கூடிய மலக்குகளும் வருவார்கள். அல்லாஹ் கூறுகிறான்:

அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும் போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) "உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள்; இன்றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில், நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வசனங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள்"  (என்று கூறுவதை நீர் காண்பீர்). (அல்குர்ஆன் 6:93)

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!" என்று கூறுவான். "நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக" (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது. (அல்குர்ஆன் 42:44)

5- மரணமடையும் முன் யாருடைய கடைசி வார்த்தை 'லாஇலாஹ இல்லல்லாஹ்" என ஆகிவிடுகின்றதோ நிச்சயமாக அவர் சுவர்க்கம் செல்வார் என்பது அல்லாஹ் தனது அடியார்களுக்குச் செய்த கிருபையாகும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உலகை விட்டுப் பிரியக்கூடிய ஒருவனின் கடைசி வார்த்தை "லாஇலாஹ இல்லல்லாஹ்" என்றாகிவிடுமானால் அவன் சுவர்க்கம் செல்வான். (அபூதாவூது)

 ஏனெனில் அந்த கஷ்டமான நேரத்தில் இந்த வார்த்தையைச் சொல்வதற்கு எந்த மனிதனாலும் முடியாது. தூய்மையாக நடந்து கொண்டவனைத் தவிர. தூய்மையாக நடந்து கொள்ளாதவன் மரண மயக்கத்தில் அவனுக்கு ஏற்படுகின்ற சிரமத்தால் இவ்வார்த்தையைச் சொல்வதை விட்டும் கவனமற்றவனாகி விடுவான். எனவே மரண நேரத்தை அடைந்தவனுக்கு அங்கு இருக்கக்கூடியவர்கள் லாஇலாஹ இல்லல்லாஹ் எனச் சொல்லிக் கொடுப்பது நபிவழியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் நன்பர்களுக்கு அறிமுகப்படுத்த