|
|
கேள்வி: வேலாயுதம் - மதுரை
குர்ஆனில் கூறப்பட்டிருப்பது போல் இறைவன் ஒன்றுதான். முஹம்மது நபியும் இறைத் தூதர்தான். அவர் கடவுள் இல்லை. அப்படி இருக்க தங்கள் மதத்தில் அவ்லியாக்கள், தர்காக்கள் வைத்து இறந்தவர்களுக்கு கும்பிடு போடுகிறார்களே இது முறையா?
பதில்:
அழகான கேள்வி இஸ்லாமிய சமுதாயம் வெட்கி தலைகுனிய வேண்டிய கேள்வி. தர்கா என்றால் என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்தியாக வேண்டும். அப்போதுதான் இக்கேள்விக்கான விடை புரியும்.
அதிகமான மக்களுக்கு இது விளங்குவதில்லை. தர்கா என்பது இறைவன் இருக்கும் இடம் என அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உலகில் வாழுகின்ற காலத்தில் நல்ல மனிதர் எனப் பெயர் எடுத்த ஒருவர் இறந்து விட்டால் அவரை அடக்கம் செய்து விட்டு அப்புதை குழியின் மேல் கட்டிடம் கட்டி அவருக்கு வழிபாடு நடத்தப்படும் இடம் தர்காவாகும்.
இறைவன் ஒருவன் தான் என குர்ஆனில் கூறப்பட்டிருக்க தர்காவுக்கு போகலாமா? என சகோதரர் வேலாயுதம் அவர்கள் கேட்டார்கள். நிச்சயமாக முடியாது. இது மிகப் பெரும் தவறு. சவூதி அரேபியாவிலோ வேறு எந்த அரபு நாடுகளிலோ தர்காக்கள் கிடையாது. அமெரிக்கா போன்ற மிகப்பெரிய நாடுகளிலெல்லாம் முஸ்லிம்கள் வாழுகிறார்கள் அங்கெல்லாம் தர்காக்கள் கிடையாது.
'எனது சமாதியில் கட்டிடம் கட்ட வேண்டாம், வழிபாடு நடத்த வேண்டாம், விழாக்கொண்டாட வேண்டாம்' என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். அவர்களின் சமாதியே வழிப்படக் கூடாதென்றால் மற்றவ்ர்களின் சமாதிகள் எம்மாத்திரம்! அறியாமையின் காரணமாக, இஸ்லாம் என்றால் என்ன? என்று புரியாததன் காரணமாக இது நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. வயிற்றுப் பிழப்புக்காகவும் நடத்தப்படுகிறது.
ஆளுகொரு கடவுள் வைத்துக் கொள்ள விரும்புவது மனிதனிடம் காணப்படும் பலவீனமாகும். ராஷ்டீரிய ஜனதாதளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் அவர்கள் ஒரு முறை பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்துகையில் 'இந்தியாவின் ஜனத் தொகையின் அளவுக்கு இந்தியாவில் கடவுள் உண்டு எனக் கூறினார்.அதாவது எத்தனை கோடி மக்கள் நாட்டில் வாழ்கிறார்களோ அத்தனை கோடி கடவுள் உண்டு என்பதுதான் அதன் பொருள். ஒன்றைப் பார்த்து அது கடவுள் என நான்கு பேர் சொன்னால் ஜம்பது பேர் அதை ஆமோதிப்பார்கள். இப்படித்தான் கடவுள் கோட்பாடு இருக்கிறது.
முஸ்லிம்களில் பலர் குர்ஆனையும் படிக்காமல், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளையும் தெரிந்து கொள்ளாமல் தர்காக்களுக்கு கும்பிடு போட்டுக் கொண்டிருக்கின்றனர். இச்செயலுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பே கிடையாது. இஸ்லாமிய பெயர்களை மட்டும் வைத்துக் கொண்டால் முஸ்லிமாகி விட முடியாது. இந்தக் கேள்வியிலிருந்து முஸ்லிம்கள் பெற வேண்டிய பாடம் ஏராளம் உண்டு.