|
|
|
|
கேள்வி: E.V.R.M. தியாகராஜன் - மதுரை.
சல்மான் ருஷ்டி கவிதயை நீங்கள் படித்ததுண்டா? அவருக்கு மரண தண்டனை கொடுத்தது ஏன்? பேச்சுக்கு பேச்சு,எழுத்துக்கு எழுத்து என்று இருக்கும்போது மரண தண்டனை கொடுத்தது எந்த விதத்தில் நியாயம்? சல்மான் ருஷ்டியின் கவிதைகளை படித்திருக்கிறீர்களா? அதற்கு ஏன் மரண தண்டனை வழங்க வேண்டும்? என்ற கேள்வியை சகோதரர் தியாகராஜன் அவர்கள் கேட்டார்கள்.
மரண தண்டனை வழங்கியது யார்?ஏதோ ஒரு நாட்டில் ஒருவர் அதை அறிவித்து விட்டார் என்பதற்காக அது இஸ்லாமியத் தீர்ப்பாகி விடுமா? நான் எனது அறிமுக உரையில் குறிப்பிட்டது போல் அது அல்குர்ஆனில் சொல்லப்பட்டிருந்தால் அல்லது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்தால் அதற்குப் பெயர்தான் இஸ்லாம். அவ்விரண்டிலும் இல்லாதவற்றை ஒருவர் தன் விருப்பத்துக்குச் சொன்னால் அது இஸ்லாம் அல்ல. இவற்றில் நினைவில் வைத்துக் கொண்டு விஷயத்தை கவனியுங்கள்.
சல்மான் ருஷ்டி ஒரு எழுத்தாளன் என்று மேற்கத்திய வாதிகளால் இனம் காட்டப்பட்டு போற்றப்படுபவன். இன்னொரு பெண்ணைப் பற்றியும் அய்யா அவர்கள் கேட்க மறந்து விட்டார்கள். அதற்கும் சேர்த்தே பதில் சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.ஏனெனில் அந்தப் பெண்ணை பற்றியும் இங்கு கேள்விகள் எழுப்பலாம். அவள்தான் பெண்ணினத்திற்கு விடுதலை வாங்கித்தந்தவள் என மேற்குலகால் அறிமுகப்படுத்தப்பட்ட தஸ்லீமா நஸ்ரீன்.
ஆங்கிலம் தெரியாததால் சல்மான் ருஷ்டியின் ஆங்கில நூலை நான் படித்ததில்லை. அதன் மொழிபெயர்ப்பை ஒருவர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.அதை வாசித்து இருக்கின்றேன்.அதில் அவர் என்ன குறிப்பிடுகிறார் என்றால்
கடவுளிடம் இருந்து வந்த வாக்கியங்கள் என நபிகள் நாயகம் சொன்னவைகள் அனைத்துமே சாத்தானிடமிருந்து வந்தவைகள் என குறிப்பிடுகின்றார். அல்குர்ஆனை இறை வேதம் எனக் கூறுகின்ற முஸ்லிம்கள் அவ்வேதத்தை தங்கள் உயிரினும் மேலாக மதிக்கின்ற வேளையில் இப்படிச் சொல்லி புண்படுத்துவது முறையா? அது இறை வேதம் தானா? என்பதற்கான ஆதாரங்களை அவர் கேட்டிருக்கலாம். அதை விடுத்து தரக்குறைவாக விமர்சிப்பது புத்திசாலித் தனமல்ல. பண்பட்ட ஒருவனின் செயலுமல்ல.
அதே போன்று அவன் ஒரு கதையும் எழுதுகின்றான். அதன் கதாபாத்திரங்களாக விபசாரிகளாக இடம் பெறச் செய்து அவர்களுக்கு நபிகள் நாயகத்தின் தாயார் பெயர், மனைவியரின் பெயர்கள், அவர்களைத் தூதர் என ஏற்றுக் கொண்ட பல நல்ல பெண்களின் பெயர்கள் போன்றவற்றைச் சூட்டி இன்பம் கான்கிறான் இக் குறைமதி எழுத்தாளன். இதன் மூலம் அந்த நல்லவர்களை விபச்சாரிகள் என்று எடுத்துச் சொல்ல எத்தனிக்கிறான்.
ஒரு சமூகத்தில் பல இயல்புடையவர்கள் இருப்பர். இவனுடைய இக் குறுகிய சிந்தனையை தெளிவுப்படுத்தும் சீரிய சிந்தனைவாதிகளும் சமுதாயத்தில் இருப்பார்கள். இவனால் இப்படிச் சொல்ல முடிந்ததா? என ஆதங்கப்படுபவர்களும் இருப்பார்கள். உதாரணமாக ஒரு தாய்க்கு பத்து பிள்ளைகள் இருந்து அத்தாயைப் பற்றி சொல்லக் கூடாதவற்றை எவனோ ஒருவன் சொல்லிவிட்டால், சொல்லிவிட்டு போ என்று ஒரு மகன் சொல்வான். இன்னொருவன் செருப்பால் அடித்து விரட்டுவான். இப்படிப் பலவகையான மனிதர்கள் உண்டல்லவா?
ஆன்மீக சம்பந்ததப்பட்ட விஷயத்தில் இவ்வளவு தரக்குறைவான விமர்சனத்தை செய்ய முன் வந்தவனை மக்கள் நிந்திக்காமல் இருப்பார்களா? எம்மைப் பொறுத்தவரை இதற்கு அறிவுப்பூர்வமான விளக்கம் கொடுத்து 'வேதம் ஓதும் சாத்தான்' என்ற தலைப்பில் இலவச வெளியீடொன்றை பத்து ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளோம். இஸ்லாத்தை அவன் தவறாகப் புரிந்து கொண்ட விதம் பற்றி அதில் விளக்கியுள்ளோம்.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தரக்குறைவாகப் பேசி எழுதிய ஒரே காரணத்திற்காக, அவனை மிகப்பெரும் எழுத்தாளன் என அங்கீகரித்து, உயர் விருதுகளும் வழங்கியிருக்கிறது சில மேலை நாட்டு முரட்டு ஜென்மங்கள். நல்ல கற்புகரசிகளை, உலகமே அங்கீகரித்த அந்த பத்தினிகளை விபச்சாரிகள் எனக் குற்றம் சுமத்திய இவனை பெண்ணுரிமைக் காவலர்கள் கூட ஆதரித்த பெரும் கொடுமை நடந்திருக்கிறது.
ஷியாக்கள் என்பவர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள். எந்த விஷயத்தையும் அறிவுப் பூர்வமாக சிந்திப்பதற்கு பதிலாக உணர்ச்சிப் பூர்வமாகவே பார்ப்பார்கள். இப்படி உணர்ச்சி வசப்பட்ட ஈரானியர்கள்தான் இத்தகைய முடிவை அறிவித்து இருந்தார்கள். இப்படி இஸ்லாம் சொல்லவில்லை. ஒரு சபையில் ஒரு விஷயத்தை முன்வைக்கும்போது நாலு விதமான தாக்கங்களை அது ஏற்படுத்தும். அப்படியான ஒரு நிலையில்தான் அத் தீர்ப்பும் கொடுக்கப் பட்டிருக்கிறது.
தஸ்லீமா நஸ்ரீனின் விவகாரமும் இதை ஒத்ததுதான். எந்தப் பெண்ணுக்கும் விடுதலை தேடிக் கொடுக்கும் எந்தக் கருத்தையும் அவளது எழுத்தில் காண முடியவில்லை. 'பெண்ணுக்கு விடுதலை வேண்டும்' என தனது நாவலில் குறிப்பிடுகின்ற அவள் அது பற்றி விவரிக்கின்றபோது கர்ப்பப்பை சுதந்திரம் வேண்டும் எனக் கூறுகிறாள். அதாவது எந்த ஒரு பென்ணும் தான் விரும்புகின்ற ஒரு ஆணின் விந்துவை தனது கர்ப்பப் பையில் செலுத்திக் கொள்ளும் உரிமை வேண்டுமாம். இதை எழுதவும், பேசவும் நமக்கே கூச்சமாக இருக்கின்றபோது ஒரு பெண் துணிந்து இதை நூலாக வடித்திருப்பது வேடிக்கையான விஷயமாக இருக்கிறது. பச்சை வேசித்தனத்திற்கு பல்லாக்கு தூக்குகிறாள்
இப்படிப்பட்ட அசிங்கங்களைத் தான் அவ்விருவரும் எழுதினார்களே தவிர தத்துவங்களையோ, திட்டங்களையோ, சீர்த்திருத்தங்களையோ அல்ல. அதற்காக மரண தண்டனையை நியாயப்படுத்தவும் நாம் தயாரில்லை. அதற்கு இஸ்லாம் பொறுப்புமல்ல. அது அவ்வாறு கூறவுமில்லை.