|
|
|
|
மறு உலக நம்பிக்கை
இது ஆன்மீகம் சம்பந்தப்பட்ட மிக முக்கிய நம்பிக்கை. அதாவது என்றாவது ஒரு நாள் இந்த அகிலம் அழிந்து போகும். அதன்பின் நம்மைப் படைத்த இறைவன் மீண்டும் அனைத்து படைப்புகளையும் உயிர்ப்பித்து உண்டாக்குவான்.ஏற்கனவே ஒன்றும் இல்லாத உயிரனங்களைப் படைத்த அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பி மனிதர்களை விசாரணை செய்து இவ்வுலகில் செய்தவற்றிற்கு நீதி வழங்குவதாகவே அன்றைய தினம் இருக்கும். நற்செயல்களுக்கு வெகுமதிகளும் தீயவற்றிற்கு தண்டனைகளும் வழங்கப்படும். அவெகுமதிகள் என்றென்றும் அழியாத பெரும் பரிசுகளாகும். தண்டனைகளோ மனிதர்களால் தாங்க முடியாத கடுமையான வேதனைகளாகும்.
இந்த உலகை ஒரு தேர்வுக்கூடமாக இறைவன் ஆக்கித் தந்திருக்கிறான். இங்கு முறையாக வெற்றி பெறவில்லையென்றால் மறு உலகில் இறைவன் தண்டிப்பான் என இஸ்லாம் சொல்கிறது. இது மிக அடிப்படையான ஒரு நம்பிக்கை.
மேலே சொன்னவற்றில் இந்த உலகம் அழியும் என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்தல்ல. ஏனெனில் இந்த அண்டத்தில் காணப்படும் கோள்கள் அனைத்துமே முட்டி மோதக்கூடிய வாய்ப்புகள் உண்டு என விஞ்ஞானமும் சொல்கிறது சூரிய, சந்திர ஏனைய கோள்களுடைய ஈர்ப்பு சக்திகள் குறைவடைந்து ஒன்றைவிட்டு ஒன்று பிரிய நேர்ந்தால் அல்லது ஒன்றை ஒன்று இழுக்க ஆரம்பித்தால் முட்டிமோதி பெரிய அழிவுகள் ஏற்படும். எனவே மேற்சொன்ன நம்பிக்கை உள்ள மனிதன் எல்லாவிதமான குற்றச் செயல்களிலிருந்தும் தன்னை முழுமையாகப் பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
உதாரணமாக திருடும் ஒருவன் அரசாங்கத்திற்குத் தெரியாமல் திருட முடியும், மாட்டிக் கொண்டால் கூட அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி அக்குற்றத்திலிருந்து தப்பித்து விட முடியும். வருமான வரியை ஏமாற்றி விடமுடியும். இன்னும் கொலைக் குற்றத்திலுருந்து கூடத் தப்பித்துவிடலாம். இவ்வாறு மனிதர்களைத் தாராளமாக ஏமாற்றலாம்.
ஆனால் இறைவன்(கடவுள்) என்னைப் பர்த்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அவனுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும். அவனிடம் நான் தப்பிக்கவே முடியாது என்ற நம்பிக்கை மேலோங்கும் போது திருட்டு, மோசடி, கலப்படம் போன்ற குற்றச் செயலின் மூலம் எவருக்கும் மனிதன் துரோகம் இழக்கமாட்டான் எந்தத்தீய காரியத்தையும் செய்ய முனையமாட்டன். இறைவனை ஏமாற்றி குறுக்கு வழியில் அசிங்கமாக நடக்க முனைய மாட்டான்.ஏனெனில் அதிகாரிகள் கண்களில் மண்ணைத் தூவா விட்டாலும் காசைத் தூவி காரியம் முடிக்கமுடியும். ஆனால் இறைவனிடம் எதைக் கொடுத்தும் தப்ப முடியாது.
இத்தகைய ஆன்மீகச் சிந்தனை மனிதனை ஆட்கொள்ளும்போது மோசடி, திருட்டு, இலஞ்சம், ஊழல், கலப்படம், சுரண்டல் எதுவுமே இருக்காது. அதோடு இந்த நம்பிக்கையால் முழு உலகும் பயனடையும்.
இதற்கு மேலும் சில சட்ட திட்டங்கள், உப விதிகள் உண்டு. சுருக்கமாக அவைகளைக் கூறி முடிக்க முடியாது. அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு இவை போதுமானது. எனவே உங்களுக்குள் இருக்கும் சந்தேகங்களை இப்போது நீங்கள் கேளுங்கள். நீங்கள் கேட்கும் கேள்விகள் எப்படிப் பட்டவையாக இருந்தாலும் உங்களுக்கு எதிராக ஒரு சிறு சலனமும் இங்கு நிகழாது என்று உறுதியளிக்கிறோம்.
சென்ற நூற்றாண்டில் சொன்னது இந்த நூற்றாண்டில் இந்த நூற்றாண்டுக்கு பொருந்தாமல் இருக்க பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் சொன்ன இஸ்லாத்தின் கருத்து இந்த நூற்றாண்டிற்கு எப்படி பொருந்தும்? காலம் கடந்த அக்கொள்கையின்பால் மக்களை அழைக்கிறீர்களே! இது அறிவீனமில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். அல்லது மதத்தின் பெயரால் பெண்களின் உரிமைகளைப் பறித்து அவர்களைக் கொடுமைப்படுத்துகிறீர்களே என்று கேட்கலாம்.
மேலும் முஸ்லிம்களைப் பார்த்து நீங்கள் விளங்கி வைத்திருக்கக்கூடிய அடிப்படையில், அவர்களிடம் சகிப்புத் தன்மை இல்லை, வெட்டிக் குத்திக் கொள்கிறார்களே? என்பன போன்ற சமுதாய சம்பந்தப்பட்ட கேள்விகளையும் கேட்கலாம்.
இஸ்லாம் அனுமதி வழங்கியவை பற்றியோ, தடுத்தவை வினா எழுப்பலாம். அல்லது இறைத்தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப்பற்றி வினாக்களைத் தொடுக்கலாம். முடியாவிட்டால் குற்றம் புரியும் முஸ்லிம்களை திட்டியாவது வினா எழுப்புங்கள். உங்களது அச்செயலால் அவர்கள் திருந்த வாய்புண்டு.
நீங்கள் எதை எப்படி கேட்டாலும் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் எவரும் எவ்வித எதிர்ப்பும் காட்டமாட்டார்கள். காட்டவும் கூடாது. மீறி செயல் படுபவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். அந்த உத்தரவாதத்தோடு தான் அவர்கள் இங்கு அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள். உங்களது கேள்விகளால் முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். அவர்களது முக பாவனையில் கூட அதை அவர்கள் வெளிக்காட்ட மாட்டார்கள். சிரிப்போ, கேலி பண்ணும் தோரணையோ இருக்காது.இது உங்கள் சபை என எண்ணி தைரியமாகக் கேளுங்கள்.
உங்கள் கேள்விகளுக்கு அறிவுப்பூர்வமான இஸ்லாமிய விளக்கங்களை நாம் முன் வைப்போம். அவ்விடைகள் மூலம் நீங்கள் திருப்தி அடைந்தாலும் அல்லது அடையாவிட்டாலும் ஆதாரப்பூர்வமானதாக அறிவுப்பூர்வ மானதாகவே இருக்கும். ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் உங்களது சுயவிருப்பம். எனினும் புரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.இறைவன் நமக்கு அருள்பாலிப்பானாக