புறம், கோள் சொல்வதிலிருந்து விலகியிருப்பார்
    உண்மை முஸ்லிம் புறம்பேசுவது, கோள்சொல்வது போன்ற காரியங்களிலிருந்து முற்றிலும் விலகியிருப்பார். அவர் இஸ்லாமிய பண்புகளிலும் அதன் கலாச்சாரத்திலும் வளர்ந்தவர். எனவே இத்தகைய செயல்களுக்கு தனது வாழ்வில் இடமளிக்கமாட்டார். அல்லாஹ்வின் வேதத்தையும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும் அறிந்து கொள்வதில் மூழ்கியிருப்பார். அந்த வழிமுறைகள் ஏவியதை ஏற்று நடப்பார், விலக்கியதை தடுத்துக் கொள்வார்.

    உங்களில் ஒருவர் மற்றெவரையும் புறம் பேச வேண்டாம். உங்களில் எவனும் தன்னுடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவானா? அதனை நீங்கள் வெறுப்பீர்களே! (புறம் பேசுவதும் அவ்வாறே இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (பாவத்திலிருந்து) விலகுவோரை அங்கீகரிப்போனாகவும் கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 49:12)

    இத்திருவசனத்தைக் காணும் முஸ்லிமின் இதயத்தில் புறம் பேசுவதன்மீது அளவில்லா கோபமும், வெறுப்பும் உண்டாகிவிடும். அவர் புறம் பேசுபவரை இறந்துவிட்ட தனது சகோதரனின் மாமிசத்தை சாப்பிடுபவர் போன்று கருதுவதால், அல்லாஹ்விடம் தெªபாவை நோக்கி விரைந்தோடுவார். ஏனெனில் புறம் பேசியதற்கு அல்லாஹ் தெªபாவைத் தான் பரிகாரமாகக் கூறுகிறான்.

    ஒரு மனிதரின் கேள்விக்குப் பதிலளித்த நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் கவனத்தில் கொள்வார். ஒருவர் ''அல்லாஹ்வின் தூதரே! முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: ''எவரது நாவிலிருந்தும் கையிலிருந்தும் முஸ்லிம்கள் நிம்மதி பெறுகிறார்களோ அவரே முஸ்லிம்களில் சிறந்தவர்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

    இத்தகைய அறிவார்ந்த உபதேசத்தையும், உயரிய வழிகாட்டு தலையும் பெற்றுள்ள முஸ்லிம் புறம்பேசத் துணியமாட்டார். சமூகத்தில் எவருக்கும் தனது நாவாலும் நோவினை செய்யமாட்டார். அவர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். வரம்பு மீறும் சிலரது நாவுகள், ஒரு முஸ்லிம் சகோதரரைப் பற்றி அவர் இல்லாதபோது தவறாகப் பேசினால் அதைத் தடுத்து நிறுத்தி அவரது கெªரவத்தைக் காப்பார்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''எவர் தனது சகோதரர் இல்லாத போது அவரது கெªரவத்தைக் காக்கின்றாரோ அவரை நரகிலிருந்து விடுதலை செய்வது அல்லாஹ்வின் கடமையாகும்.'' (முஸ்னத் அஹ்மத்)

    குறைகூறிப் புறம் பேசித்திரிவோருக்கெல்லாம் கேடுதான். (அல்குர்ஆன் 104:1)

    உண்மை முஸ்லிம் கோள்சொல்லித் திரியமாட்டார். ஏனெனில் கோள் சொல்வது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதையும், நண்பர்களிடையே உறவைத் துண்டிப்பதையும் நோக்கமாக கொண்ட தீயவர்களுடன் தன்னைச் சேர்த்துவிடும் என்பதை அவர் அறிவார்.

    நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள்: ''உங்களில் சிறந்தவரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' நபித்தோழர்கள், ''அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''அவர்களைப் பார்த்தால் (பார்ப்பவருக்கு) அல்லாஹ்வின் நினைவு ஏற்படும்.'' பின்பு கூறினார்கள் ''உங்களில் மிகக் கெட்டவர்களைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? அவர்கள் யாரெனில் கோள்

    சொல்லித் திரிபவர்கள், நேசர்களுக்கிடையே குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள், நிரபராதிகளிடம் குறைகளைத் தேடித்திரிபவர்கள்.'' (முஸ்னத் அஹ்மத்)

    கோள் சொல்லும் குழப்பவாதிகளுக்கு உலகில் இழிவும், மறுமையில் கொடிய முடிவும் ஏற்படும். அவன் தனது தவறை தொடர்ந்து கொண்டிருந்தால் வெற்றிக்கான அனைத்து வாயில்களும் மூடப்பட்டுவிடும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''கோள் சொல்லித் திரிபவன் சுவனம் நுழையமாட்டான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    கோள் சொல்லித் திரிபவனை கப்ரில் வைக்கப்பட்டதிலிருந்து அல்லாஹ்வின் கடுமையான தண்டனை தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பதை அறியும்போது உள்ளத்தில் அச்சமும் நடுக்கமும் ஏற்பட்டுவிடும்.

    இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருக்கு அருகாமையில் கடந்து சென்றபோது கூறினார்கள் ''அறிந்து கொள்ளுங்கள்! இந்த இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். இவர்கள் வேதனை செய்யப்படுவது வெளித் தோற்றத்தில் கடுமையாகத் தெரியும் ஒன்றுக்காக அல்ல. அறிந்து கொள்ளுங்கள்! அந்த இருவரில் ஒருவர் கோள்சொல்லித் திரிந்து கொண்டிருந்தார், மற்றொருவர் சிறுநீர் கழித்தபின் தூய்மைபடுத்திக் கொள்ளவில்லை.''

    இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ''நபி (ஸல்) அவர்கள் ஈரமான மரக்கிளை ஒன்றை கொண்டுவரச்செய்து, அதை இரண்டாகப் பிளந்து இந்தக் கப்ரில் ஒன்றும் அந்தக் கப்ரில் ஒன்றுமாக நட்டினார்கள். பின்பு, இந்த மரக்கட்டைகள் காயும்வரை அவர்களது வேதனை இலேசாக்கப்படலாம் என்று கூறினார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    பொய்யைத் தவிர்ப்பார்

   உண்மை முஸ்லிமின் பண்புகளில் அவர் பொய்யான சொல்லிலிருந்து விலகியிருப்பதும் ஒன்றாகும். ஏனெனில் அது அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்டதாகும்.

    ...அன்றி பொய்யான வார்த்தைகளிலிருந்தும் நீங்கள் தப்பித்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 22:30)

    பொய்ச்சொல் விலக்கப்பட்டதாக இருப்பதுடன், அது நம்பிக் கையைக் காயப்படுத்தும், கெªரவத்தைத் தகர்க்கும் செயலாகவும் உள்ளது. ஆகவே இது முஸ்லிமின் பண்புகளில் இடம்பெற முடியாது. அல்லாஹ் தனது நல்லடியார்களைப்பற்றி கூறும்போது இவ்வாறான செயல்களில் அவர்கள் ஈடுபடமாட்டார்கள் என்று புகழ்ந்து கூறுகிறான்.

    ... அன்றி எவர்கள் பொய் சாட்சி சொல்லாமலும் (வீணான காரியங்கள் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டுவிட்ட போதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதனைக் கடந்து) சென்றுவிடுகின்றார்களோ அவர்களும்... (அல்குர்ஆன் 25:72)

    இது எத்தகைய கொடுமையான பாவம் என்பதற்கு பாவப்பட்டியலில் இரண்டு பெரிய பாவங்களுக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இதைக் குறிப்பிட்டதன் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இக்குற்றத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் பலமுறை எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் ''பெரும்பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவத்தை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா?'' என வினவினார்கள். நாங்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அறிவித்துத் தாருங்கள்'' என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள் ''அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்கு நோவினை செய்வது'' என்று கூறினார்கள். அப்போது சாய்ந்து அமர்ந்திருந்த அவர்கள் எழுந்து உட்கார்ந்து கூறினார்கள், ''அறிந்து கொள்ளுங்கள்! பொய்ச்சொல், பொய்சாட்சியம்.'' நபி (ஸல்) அவர்கள் இதைத் திரும்பத்திரும்ப கூறிக்கொண்டே இருந்தார்கள். அப்போது நாங்கள் 'நபி (ஸல்) அவர்கள் அமைதியாக வேண்டுமே' என்று நினைத்தோம். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    தீய எண்ணங்களைத் தவிர்ப்பார்
    மனிதர்கள் பற்றி தீய எண்ணம் கொள்ளாதிருப்பதும் உண்மை முஸ்லிமின் பண்புகளில் ஒன்றாகும். அவர் நிரபராதிகளைப்பற்றி தனது கற்பனைக்கு ஏற்றவாறு தவறாக பேசவோ, அல்லது அபாண்டமான பழி சுமத்தவோ மனதில்கூட எண்ணம் கொள்ளமாட்டார்.

விசுவாசிகளே அநேகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ஏனென்றால் நிச்சயமாக சந்தேகங்களில் சில பாவமானவைகளே.... (அல்குர்ஆன் 49:12)

    சந்தேகிப்பதையும் மக்கள்மீது அவதூறு சொல்வதையும் நபி (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உங்களை நான் எச்சரிக்கிறேன்! நீங்கள் சந்தேகங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சந்தேகமான பேச்சு, வார்த்தைகளில் மிகப்பொய்யானதாகும்.''

    நபி (ஸல்) அவர்கள் சந்தேகத்தை மிகவும் பொய்யான வார்த்தை என்பதாகக் கூறியுள்ளார்கள். உண்மை முஸ்லிமின் நாவில் பொய்யின் வாடைகூட வராது. பிறகு மிகப்பொய்யான வார்த்தைகள் எப்படி வரமுடியும்?

    நபிமொழி, சந்தேகிப்பதிலிருந்து எச்சரித்து அதை மிகப்  பொய்யானதொரு பேச்சென்று கூறும் அதே நேரத்தில், மனிதர்களின் வெளிப்படையான செயல்களைக் கொண்டுதான் முஸ்லிம் தீர்மானிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. அவர்களைப் பற்றி யூகம், சந்தேகம், தீய எண்ணம் கொள்வதிலிருந்து அவர் விலகியிருக்க வேண்டும். மக்களின் ரகசியங்களை ஆராய்வதும், அவர்களது அந்தரங்கத்தில் தலையிடுவதும், அவர்களது கெªரவத்துக்குப் பங்கம் ஏற்படுத்துவதும் முஸ்லிமின் பண்பல்ல.

    அனைத்து ரகசியத்தையும் பரகசியத்தையும் நன்கறிந்த அல்லாஹ்வே மனிதனின் அந்தரங்கத்தை நன்கறிந்தவன். ஆகவே, அதை அவனே விசாரித்துக் கொள்வான். மனிதன் தனது சகோதரனின் வெளிப்படையான செயல்களை மட்டுமே அறிந்துகொள்ள முடியும். தனது சகோதரனைப் பற்றி தீய எண்ணம் கொள்ளாது, நபித்தோழர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் காட்டித் தந்த நெறியை ஏற்று நடக்க வேண்டும்.

    உமர் (ரழி) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உத்பாபின் மஸ்வூத் (ரழி) கூறினார்கள்: ''நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சில மனிதர்கள் வஹியின் மூலம் தண்டிக்கப்பட்டார்கள். இன்று வஹி நின்றுவிட்டது. நாம் உங்களது வெளிப்படையான செயல்களைக் கொண்டே உங்களைத் தண்டிப்போம். எவர் நன்மை செய்வதாக நமக்குத் தெரிகிறதோ நாம் அவர் மீது நம்பிக்கைக் கொண்டு அவரை நெருக்க மாக்கிக் கொள்வோம். அவருடைய அந்தரங்கம் பற்றி நமக்கொன்றும் தெரியாது. அல்லாஹ் அவருடைய அந்தரங்கத்தைப் பற்றி விசாரிப்பான். எவரேனும் தீமை செய்வதாக நமக்குத் தெரிந்தால் நாம் அவர் சொல்வதை உண்மைப்படுத்த மாட்டோம், அவர் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருப்போம். அவர் 'தனது மனம் தூய்மையானது' என்று வாதிட்டாலும் சரியே.'' (ஹயாத்துஸ் ஸஹாபா)

    முஸ்லிம், இவ்வாறான விஷயங்களைப் பேசுவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அவரது உணர்விலும் சிந்தனையிலும் அல்லாஹ்வின் திருவசனம் மறைந்துவிடாது.

    (நபியே!) நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் நீர் பின்தொடராதீர்! ஏனென்றால் நிச்சயமாக கண், காது, இருதயம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)

    உண்மை முஸ்லிம் ஞானமிக்க இறைவனின் இத்தடையை அறிந்து கொண்டு, தான் அறியாத விஷயங்களைப் பேச மாட்டார், உறுதியாகாதவரை எந்த விஷயத்தையும் தீர்மானிக்கவும் மாட்டார்.

    அவர் சந்தேகங்களின் காரணமாக பிறர் கண்ணியத்தைப் பாழ்படுத்துவதிலிருந்து அஞ்சி விலகிக்கொள்வார். தான் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் எழுதி பாதுகாக்கக்கூடிய ஒரு வானவர் தன்னுடன் சாட்டப்பட்டுள்ளார் என்பதை அவர் நினைவில் கொள்வார்.

    (மனிதன்) எதைக் கூறிய போதிலும் அதனை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகின்றது.)  (அல்குர்ஆன் 50:18)

    இத்திருவசனத்தின் பொருளை நன்கறிந்த முஸ்லிம் தம்மிடமிருந்து வெளியாகும் ஒவ்வொரு வார்த்தையும் அல்லாஹ்வின் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்பதைப் புரிந்து கொள்வார். ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக பலமுறை சிந்தித்தே வெளியிடுவார். ஏனெனில் ஒவ்வொரு வார்த்தையும் அல்லாஹ்வின் அருளை அல்லது அவனது கோபத்தை பெற்றுத் தரும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒரு மனிதர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளைப் பேசுவார்; ஆனால் இந்த வார்த்தை எத்தகைய நிலையை அடைந்தது என்பதை அறிய மாட்டார். அல்லாஹ் மறுமை நாள்வரை அவருக்கு தனது திருப் பொருத்தத்தை எழுதுகிறான். ஒருவர் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும் வார்த்தைகளைக் கூறுவார்; அதன் விளைவைப் பற்றி சிந்திக்கமாட்டார். இதனால் அல்லாஹ் மறுமை நாள்வரை அவருக்கு தனது கோபத்தை எழுதுகிறான்.'' (அல் முவத்தா)

    நாவுகளால் பேசப்படும் வீணான வார்த்தைகள் எவ்வளவு விபரீத விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன? அகம் தூய்மையான முஸ்லிம், மனிதர்களின் வீண் பேச்சுகளிலிருந்து விலகி, நமது சமுதாயத்தில் காணப்படும் சந்தேகங்கள், யூகங்கள், கட்டுக் கதைகளை அலட்சியப்படுத்தி விடுவார். பிறரிடமிருந்து தான் செவியேற்ற செய்தி உண்மையா? என்று உறுதி செய்யாமல் பிறருக்குக் கூறுவதைத் தவிர்த்துக்கொள்வார். இவ்வாறு செய்வதை நபி (ஸல்) அவர்கள் பொய் என்று கூறுகிறார்கள். பொய் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''ஒரு மனிதன் பொய்யன் என்பதற்கு அவன் (பிறரிடம்) கேட்டதையெல்லாம் பேசுவதே போதுமாகும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)