|
|
வாக்குறுதியை நிறைவேற்றுவார்
இஸ்லாமிய நேர்வழியை முற்றிலும் கடைபிடிக்கும் முஸ்லிம் ஒப்பந்தத்தைப் பேணி, வாக்குறுதியை நிறைவேற்றுவார். வாக்கை நிறைவேற்றுவது முஸ்லிமின் சமுதாய வெற்றிக்கான அடிப்படையும் மனிதகுலத்தின் உயர்வுக்கான வழியுமாகும்.
முஸ்லிம் வாக்குறுதியைப் பேணுவதில் முதன்மையானவராக இருப்பார். வாக்குறுதியை நிறைவேற்றுவது இஸ்லாமிய நற்பண்புகளில் தலையாயதாகும். ஒருவருடைய ஈமான் சீரானது என்பதற்கும், அவரது இஸ்லாம் அழகானது என்பதற்கும் இப்பண்பே சான்றாகும். அதை கடைபிடிப்பது ஈமானின் அடையாளமாகும். அதைப் புறக்கணிப்பது நயவஞ்சகத்தனத்தின் அடையாளமாகும்.
விசுவாசிகளே! நீங்கள் (உங்கள்) உடன்படிக்கைகளைப் பூரணமாக நிறைவேற்றுங்கள்... (அல்குர்அன் 5:1)
....உங்கள் வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள். எனென்றால், (மறுமையில்) வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். (அல்குர்அன் 17:34)
இன்றைய காலகட்டத்தில் பல முஸ்லிம்கள் செய்து கொண்டிருப்பது போல ஒப்பந்தம், வாக்குறுதி என்பது காற்றில் பறக்கவிடப்படும் வார்த்தையல்ல. அல்லாஹ்விடம் விசாரணை செய்யப்படும் மிகப்பெரிய பொறுப்பாகும்.
நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்.... (அல்குர்அன் 16:91)
இவ்விடத்தில் மனிதர்களிடம் செய்யப்படும் உடன்படிக்கையை அல்லாஹ்வுடன் செய்யப்படும் உடன்படிக்கையைப் போன்று கூறப்பட்டுள்ளது. அதற்கு காரணம் உடன்படிக்கையின் முக்கியத்து வத்தையும், அதன் கண்ணியத்தையும், அது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என்பதையும் வலியுறுத்துவதேயாகும்.
விசுவாசிகளே! நீங்கள் செய்யாத காரியங்களை(ச் செய்வேன் என்று அல்லது செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்? நீங்கள் செய்யாத காரியங்களைச் (செய்வேன் என்று அல்லது) செய்ததாகக் கூறுவது அல்லாஹ்விடத்தில் பெரும்பாவமாக இருக்கின்றது. (அல்குர்அன் 61:2,3)
வாக்குறுதிக்கு மாறுசெய்வதும் அதை நிறைவேற்றாமலிருப்பதும் அல்லாஹ் தனது அடியார்களிடம் மிகவும் வெறுக்கும் பெரும்பாவமாகும். அல்லாஹ் மேற்கூறிய திருவசனத்தின் ஆரம்பத்தில் கேள்வி எழுப்புவது அல்லாஹ்வின் கண்டனத்தை வெளிப்படுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1) பேசினால் பொய்யுரைப்பான் 2) வாக்களித்தால் மாறு செய்வான் 3) நம்பினால் மோசடி செய்வான்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
ஸஹீஹ் முஸ்லிமின் ஒர் அறிவிப்பில்: "அவன் நோன்பிருந்தாலும் தொழுதாலும் அவன் தன்னை முஸ்லிம் எனக் கருதினாலும் சரியே'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முஸ்லிமின் இஸ்லாம் சீரடைவது தொழுகை, நோன்பு, ஹ்ஜ் போன்ற வணக்கங்களைக் கொண்டு மட்டுமல்ல. மாறாக, இஸ்லாமிய வழிகாட்டுதலின்படி ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதன் மூலமே சீரடைகிறது. அப்போதுதான் உயர்ந்த நற்பண்புகளும், உன்னதமான நடைமுறைகளும் அவரிடம் பிரதிபலிக்கும். அல்லாஹ்வின் வரம்புக்குள் நின்று, ஏவலை செயல்படுத்தி, விலக்கலைத் தவிர்த்து வாழ்பவராகவும், அல்லாஹ்வின் நேர்வழியை எல்லா நிலையிலும் பின்பற்றுபவராகவும் இருப்பார்.
எனவே உண்மை முஸ்லிமின் வாழ்வில் பொய்யும், வாக்குறுதிக்கு மாறு செய்வதும் ஒப்பந்தங்களில் மோசடி செய்வதும் நிகழாது.
இந்த கசப்பான உண்மையை வியாபாரிகளும் தொழிலாளர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும். அவர்கள் மக்களிடம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்துத் தருவதாக வாக்களித்து, பிறகு அதை நிறைவேற்றுவதில்லை. அவர்கள் எதேனும் ஒரு விஷயத்தில் ஒப்பந்தம் செய்து, பிறகு அந்த ஒப்பந்தத்தை முறித்து விடுகிறார்கள்.
பொருள், ரகசியம், வாரிசுரிமை போன்ற விஷயங்களில் வைக்கப்பட்ட நம்பிக்கைக்கு மோசடி செய்து விடுகிறார்கள். இது போன்ற குணமுடையவர்கள் நயவஞ்சகர்களாவர். அவர்கள் தொழுதாலும், நோன்பிருந்தாலும், தங்களை முஸ்லிம்களாக எண்ணிக் கொண்டாலும் சரியே.
"நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்திலும் கீழ்பாகத்தில்தான் இருப்பார்கள்.'' (அல்குர்அன் 4:145)
நற்குணமுடையவர்
உண்மை முஸ்லிம் நற்குணமுடையவராகவும், மென்மையாக உரையாடுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அவருக்கு உண்டு. நபி (ஸல்) அவர்களின் பணிவிடையாளரான அனஸ் (ரழி) அவர்கள் கூறியதுபோல, நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் மிகவும் நற்குணம் உடையவர்களாகத் திகழ்ந்தார்கள். அனஸ் (ரழி) அவர்கள் இதை மிகையாகக் கூறவில்லை. நபி (ஸல்) அவர்களின்பால் அவர்கள் கொண்டிருந்த அன்பு அவர்களை மிகைப்படுத்திக் கூறத் தூண்டவுமில்லை. நபி (ஸல்) அவர்களிடம் வேறு எவரும் காணாத விஷயங்களை கண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் நற்குணத்தின் ஒரு பகுதியை பின்வருமாறு சுட்டிக்காட்டினார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நான் நபி (ஸல்) அவர்களுக்கு பத்து ஆண்டுகள் பணிவிடை செய்தேன். அவர்கள் என்னிடம் ஒருபோதும் "சீ' என்று கூறியதில்லை. நான் செய்த எந்த காரியத்துக்கும் ஏன் செய்தாய் என்றோ நான் செய்யாத எந்த காரியத்திற்கும் ஏன் அதைச் செய்யவில்லை? என்றோ கூறியதில்லை.'' (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் ஆபாசமாகவோ அருவருப்பாகவோ பேசியதே இல்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் சிறந்தவர் யாரெனில் உங்களில் நற்குணத்தால் அழகானவரே.'' (ஸஹீஹுல் புகாரி)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அசிங்கமான சொல், செயல்கள் இஸ்லாமில் உள்ளவை அல்ல. மனிதர்களில் அழகானவர் யாரெனில் அவர்களில் நற்குணத்தால் அழகானவரே. (முஸ்னத் அஹ்மத்)
மேலும் கூறினார்கள்: "உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற் குரியவரும், மறுமையில் சபையால் எனக்கு மிகவும் நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் கோபத்திற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் அதிகமாகப் பேசுபவர், அடுக்குமொழியில் பேச முயற்சிப்பவர், அகந்தை உடையவர் அகியோரே.'' (ஸுனனுத் திர்மிதி)
அல்லாஹ்வின் அருள் பெற்ற நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நற்பண்புமிக்க இவ்வழிகாட்டுதலை செவியேற்றார்கள். அவர்கள் தங்களது கண்களால் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் வெளிப்படுத்திய பண்புகளைக் கண்டார்கள். ஆகவே அவர்களின் பொன்மொழியை முழுமையாக ஏற்று செயல்படுத்தினார்கள். இதனால் உலகில் எந்த சமுதாயத்திலும் காணமுடியாத மகத்தான முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள்.
அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்கள் கருணையாளராக இருந்தார்கள். அவர்களிடம் எவர் வந்தாலும் அவருக்கு வாக்களித்து தன்னிடமிருப்பதைக் கொடுத்து உதவுவார்கள். ஒருமுறை ஜமாஅத் தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டார். அவர் "என் தேவைகளில் சில நிறைவேறவில்லை; (இப்போது செய்யவில்லையெனில்) அதை நான் மறந்து விடுவேனோ என அஞ்சுகிறேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள் அம்மனிதருடன் சென்று அவரது வேலையை முடித்து வந்தபின் தொழவைத்தார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
நபி (ஸல்) அவர்கள் அந்த கிராமவாசியின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதை நிறைவேற்றுவதை தொழுகைக்கான இகாமத்தின் சமயத்தில் கூட சிரமமாகக் கருதவில்லை. தொழுகைக்கு முன் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆடையைப் பிடித்து இழுத்த கிராமவாசியின் செயல் அவர்களது இதயத்தை சங்கடத்தில் ஆழ்த்தவில்லை. ஏனெனில், அவர்கள் நற்குணத்தின் சங்கமமாக இருந்தார்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதை கற்றுக் கொடுத்தார்கள். இஸ்லாமிய சமூகம் இத்தகைய சிறப்புப் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டுமென்ற கருத்தையும் உறுதிப்படுத்தினார்கள்.
முஸ்லிமல்லாத ஒருவரிடம் நற்குணங்கள் காணப்பட்டால் அதற்கு சிறந்த வளர்ப்பு முறைகளும், உயர் கல்விகளும்தான் காரணமாக இருக்கும். ஆனால் முஸ்லிமிடம் காணப்படும் இப்பண்புகளுக்கு முதன்மைக் காரணம் மார்க்கத்தின் போதனைதான். மார்க்கம் இப்பண்புகளை முஸ்லிமின் இயற்கையாகவே மாற்றிவிடுகிறது.
முஸ்லிமின் அந்தஸ்தை உலகில் உயர்த்துவதுடன், மறுமையின் தராசில் நன்மையின் தட்டை கனமாக்குகின்றன. மறுமை நாளில் நன்மையின் தராசுத்தட்டை கனமாக்குவதில் நற்பண்புகளுக்கு இணையானது வேறெதுவுமில்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மறுமை நாளில் முஃமினின் தராசுத் தட்டில் நற்பண்புகளைவிட கனமானது வேறெதுவுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் இழி நடத்தை உள்ளவனையும் அருவருப்பாகப் பேசுபவனையும் கோபிக்கிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)
நற்குணத்தை, ஈமான் பூரணமடைந்ததற்கான அடையாளமாக இஸ்லாம் கூறுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஈமானால் பரிபூரணமானவர் யாரெனில் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே.'' (ஸன்னனுத் திர்மிதி)
நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அடியார்களில் மிகவும் நேசத்துக்குரியவர் என்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு உஸப்மா இப்னு ஷுரைக் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழி சான்றாகும். நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமூகத்தில் எங்களுடைய தலைகளில் பறவை அமர்ந்திருப்பது போல (ஆடாமல் அசையாமல்) அமர்ந்திருந்தோம். நபி (ஸல்) அவர்களின் சபையில் எங்களில் எவரும் பேசமாட்டார். அப்போது சிலர் வந்து நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிக நேசத்திற்குரியவர் யார்?' என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் குணத்தால் மிக அழகானவர்'' எனக் கூறினார்கள்.
நற்குணமுடையவர் அல்லாஹ்வின் அன்பிற்குரியவராக இருப்பதில் ஆச்சரியம் எதுமில்லை. எனெனில் நற்குணம் இஸ்லாமில் மகத்தான விஷயமாகும். நாம் முன்பு கண்டதுபோல், இது மறுமை நாளில் அடியானின் தராசுத் தட்டில் வைக்கப்படும் மிகக்கனமான அமலாகும். இஸ்லாமின் இரண்டு பெரும் தூண்களான தொழுகை, நோன்புக்கு இணையானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தராசுத் தட்டில் வைக்கப்படுவதில் நற்குணத்தைவிட மிகக் கனமான அமல் வேறெதுவுமில்லை. நற்குணம் உடையவரை அவரது நற்குணம் தொழுகை, நோன்பால் கிடைக்கும் அந்தஸ்திற்கு உயர்த்திவிடுகிறது.'' (ஸுனனுத் திர்மிதி, முஸ்னதுல் பஸ்ஸார்)
மற்றோர் அறிவிப்பில்: "ஒரு அடியான் தனது நற்குணத்தால் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் தொழுபவரின் அந்தஸ்தை அடைந்து கொள்வார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தங்களது சொல், செயலால் நபி (ஸல்) அவர்கள் நற்குணத்தின் முக்கியத்துவத்தை தோழர்களிடம் உணர்த்தி, அதன்மூலம் தங்களை அழகுபடுத்திக்கொள்ள தூண்டினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் "அபூதர்ரே! உமக்கு நான் இரண்டு குணங்களைப் பற்றி அறிவிக்கட்டுமா? அவை இரண்டும் செய்வதற்கு மிக இலகுவானவை. மறுமையின் தராசுத்தட்டில் எல்லாவற்றையும்விட மிகக் கனமானவை'' என்று வினவினார்கள். அபூதர் (ரழி) "அல்லாஹ்வின் தூதரே! கூறுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ""நற்குணத்தையும் நீண்ட மெªனத்தையும் பற்றிப் பிடித்துகொள்ளுங்கள். எவனது கைவசம் என் ஆன்மா இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! இந்த இரண்டைப் போன்ற வேறு எதனாலும் மனிதகுலம் அழகு பெறவில்லை'' என்று கூறினார்கள். (முஸ்னத் அபூ யஃலா)
மேலும் கூறினார்கள்: "நற்குணம் வளர்ச்சியாகும், துற்குணம் அழிவாகும், உபகாரம் ஆயுளை அதிகப்படுத்தும், தர்மம் தீய மரணத்தைத் தடுக்கும்.'' (முஸ்னத் அஹ்மத்)
நபி (ஸல்) அவர்கள்: "யா அல்லாஹ் எனது தோற்றத்தை நீயே அழகுபடுத்தினாய். எனது குணத்தையும் அழகுபடுத்துவாயாக'' என்ற துஆவை வழமையாகக் கூறி வந்தார்கள். (முஸ்னத் அஹ்மத்)
....(நபியே!) நிச்சயமாக நீர் மகத்தான நற்குணமுடையவராகவே இருக்கின்றீர். (அல்குர்அன் 68:4)
அல்லாஹு தஅலா தனது திருமறையில் இவ்வாறு கூறியிருந்த போதும் நபி (ஸல்) அவர்கள் தனது குணத்தை அழகுபடுத்துமாறு துஆ செய்ததிலிருந்து நற்குணத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம்கள் அதை மென்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதையும் புரிந்து கொள்ளலாம். நற்குணம் என்பது முழுமையானதொரு வார்த்தையாகும். அதனுள் மனிதனை பரிசுத்தப்படுத்தும் குணங்களான வெட்கம், விவேகம், மென்மை, மன்னிப்பு, தர்மம், உண்மை, நேர்மை, பிறர்நலம் நாடுவது, நன்மையில் உறுதி, உளத்தூய்மை, முகமலர்ச்சி போன்ற பல நற்பண்புகள் உள்ளடங்கியுள்ளன.
இஸ்லாமின் சமூகக் கண்ணோட்டத்தைப் பற்றி ஆராய்பவர் அச்சமூகத்தை மேன்மைப்படுத்தும்படியான நற்பண்புகளை வலியுறுத்தும் ஏராளமான சான்றுகளை கண்டுகொள்வார். சமூகத்தில் முஸ்லிம் தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு இஸ்லாம் மிகுந்த முன்னுரிமை அளிக்கிறது. பொதுப்படையானதாக இல்லாமல் சமுதாயத்தின் ஒவ்வொரு நபர்களின் ஒவ்வொரு செயலிலும் அப்பண்புகளை இஸ்லாம் வளரச் செய்திருக்கிறது. சமூகம் அனைத்தையும் நற்பண்புகளால் அலங்கரித்த சாதனையை இஸ்லாமை தவிர வேறெந்த கொள்கையாலும் சாதிக்கமுடியவில்லை.
இறையச்சமுள்ள முஸ்லிம் சமூகத்தில் தனித்தன்மை பெற்றுத் திகழ்வதற்காக, இஸ்லாம் எற்படுத்தியுள்ள மார்க்க நெறிகளைப் பின்பற்றுவது சிரமமானதல்ல என்பதை அதன் சான்றுகளை ஆராய்பவர்கள் அறிந்துகொள்வர்.
இறைவன் எற்படுத்திய வரம்புக்குள் நின்று, அவனது விலக்கலைத் தவிர்த்து, மார்க்க நெறிகளை முழுமையாக ஏற்று, முஸ்லிமின் இலக்கணமாகத் திகழ்பவரின் ஒவ்வொரு செயலிலும் நற்பண்புகள் பிரகாசிக்கின்றன. முஸ்லிம் மோசடிக்காரராக, வஞ்சகராக, எமாற்றுபவராக, பொறாமைக்காரராக இல்லாமல் அனைத்து மக்களிடமும் நற்குணத்துடன் நடந்துகொள்வார்.