நபித்தோளர்களின் உயர்ந்த எண்ணம்

     அல்லாஹ்வின் அருள்பெற்ற நபித்தோழர்கள் சகோதரத்துவத்தின் அவசியத்தை உணர்ந்து தனது சகோதரனின் அழைப்பை ஏற்றுக் கொள்வார்கள். "இதை ஏற்பது கட்டாயக் கடமை என்றும் அதில் குறைவு செய்தால் பாவியாகிவிடுவோம்' என்றும் கருதினார்கள்.

    ஸியாது இப்னு அன்அம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் முஆவியா (ரழி) அவர்களின் காலத்தில் ஜிஹாதுக்காக கடலில் பயணித்துக் கொண்டிருந்தோம். எங்களது படகு அபூ அய்யூப் அன்சாரி (ரழி) அவர்களின் படகுடன் இணைந்து நின்றது. எங்களுக்கு மதிய உணவு தயாரானபோது அவர்களை அழைத்தோம். எங்களிடம் வந்து கூறினார்: நான் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் என்னை அழைத்துள்ளீர்கள். எனினும் நான் அழைப்பை ஏற்பது கட்டாயமாகும். நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன், ""ஒரு முஸ்லிம் ஆறு குணங்களை தனது சகோதரரிடம் கடைப்பிடிக்க வேண்டும். அதில் ஒன்றை விடுவாரேயானால் தன் மீது தனது சகோதரருக்குரிய ஒரு கடமையை கைவிட்டவராவார். அவரைச் சந்தித்தால் ஸலாம் சொல்வது, (உணவுக்கு) அழைத்தால் எற்றுக்கொள்வது, தும்மினால் (யர்ஹமுக் கல்லாஹ் என) துஆச் செய்வது, நோய்வாய்ப்பட்டால் நலம் விசாரிப்பது, மரணமடைந்தால் அங்கு ஆஜராவது, அவர் உபதேசம் கேட்டு வந்தால் அவருக்கு நல்லதைக் கூறுவது.'' (அல் அதபுல் முஃப்ரத்)

    மேலும் அவர்கள் தமது முஸ்லிம் சகோதரரின் அழைப்பைத் தகுந்த காரணமின்றி மறுப்பது பாவம் எனக் கருதினார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வருபவர்கள் தடுக்கப்பட்டு, வர விருப்பமற்றவர்கள் அழைக்கப்படும் வலீமா (திருமண) விருந்தே விருந்துகளில் மிகக் கெட்டது. எவர் அழைப்பை ஏற்கவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தவராவார்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

    ஈமானிய சகோதரத்துவம் வெற்றுச் சடங்கும், விளம்பரமுமல்ல. மாறாக அது கடமைகளும் உரிமைகளும் நிறைந்த பரிசுத்தமான இணைப்புப் பாலமாகும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் உரிய முறையில் விசுவாசித்து இஸ்லாமின் கடமைகளை சரியான முறையில் அறிந்திருப்பவரே இந்த உண்மையை விளங்கிக் கொள்ள முடியும். இதை நாம் மதீனாவாசிகளான அன்சாரித் தோழர்களின் செயல்களில் காண்கிறோம்.

    முஸ்லிம்கள் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து அவர்களிடம் வந்தபோது அவர்களைத் தங்களைவிட மேலாக நேசித்து உயர்ந்த முன்மாதிரிகளை வெளிப்படுத்தினார்கள். அவர்களிடம் அன்சாரித் தோழர்கள் தங்களது அனைத்து சொத்துகளையும் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். எந்தளவுக்கென்றால் ஒர் அன்சாரித் தோழர் தனது முஹாஜிர் சகோதரரிடம், "இதோ எனது செல்வம், இதில் பாதியை எடுத்துக் கொள்ளுங்கள். இதோ எனது இரு மனைவிகள், இந்த இருவரில் உமக்குப் பிடித்தவரை குறிப்பிடுங்கள்; நான் தலாக் சொல்கிறேன். இத்தா முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளுங்கள்'' என்று கூறினார். ஆனால் அந்த முஹாஜிர் தனது சகோதரரின் அளவு கடந்த நேசத்துக்கு அழகிய முறையில் பதிலளித்தார். "அல்லாஹ் உமது செல்வத்திலும் குடும்பத்திலும் பரக்கத் செய்யட்டும். எனக்கு இவைகளில் எதுவும் தேவையில்லை. எனக்கு கடைவீதியைக் காட்டுங்கள்! நான் வேலை செய்து கொள்கிறேன்'' எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    ஒர் அன்சாரித் தோழர் தனது முஹாஜிர் சகோதரர் ஒருவரை உணவுக்கு அழைத்திருந்தார். அவரது வீட்டில் குழந்தைகளுக்கு மட்டுமே உணவு இருந்தது. எனினும், தன்னைவிட தனது குடும்பத்தாரைவிட அந்த முஹாஜிருக்கு முன்னுரிமையளித்து தனது மனைவியிடம் "நமது குழந்தைகளை தூங்க வைத்துவிடு. விளக்கை அணைத்து விட்டு உன்னிடமுள்ள உணவை விருந்தாளியின் முன் வைத்துவிடு. அவருடைய உணவுத் தட்டின் அருகே நாமும் அமர்வோம். நாம் சாப்பிடாத நிலையில் அவர் நாம் சாப்பிடுவதாக எண்ணிக் கொள்ளட்டும்'' என்று கூறினார்.

    அவ்வாறே உணவுத் தட்டில் மூவரும் அமர்ந்தார்கள். விருந்தாளி மட்டும் சாப்பிட்டார். அந்தக் குடும்பமே பசியுடன் இரவைக் கழித்தது. அவர் காலையில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "இரவில் நீங்கள் இருவரும் விருந்தளித்ததில் நடந்து கொண்ட முறையைப் பற்றி அல்லாஹ் மகிழ்ச்சியடைந்தான்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    மதீனாவாசிகளான அன்சாரிகள் ஹிஜ்ரத் செய்து வந்த முஹாஜிர்களுக்கு தங்களது செல்வங்களில் பங்களிக்க ஆர்வம் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் "நபி (ஸல்) அவர்களே! எங்களுக்கும் எங்களது சகோதர்களுக்குமிடையே இந்தப் பேரீச்சை மரங்களை பங்கிட்டுத் தாருங்கள்'' என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் "வேண்டாம்'' என மறுத்தார்கள். அன்சாரிகள் "முஹாஜிர்களான நீங்கள் எங்களுக்கு விவசாயத்தில் உதவி செய்யுங்கள். நாங்கள் அதன் பலனில் உங்களையும் கூட்டாக்கிக் கொள்வோம்'' என்றார்கள். முஹாஜிர்கள் "செவியேற்றோம் அடிப்பணிந்தோம்'' என்று கூறி இதை எற்றுக் கொண்டார்கள். (ஸஹீஹுல் புகாரி)

    முஹாஜிர்கள் தங்களது சகோதரர்களான அன்சாரிகளின் செயல்களைப் பெரிதாகக் கருதி நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள்: "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சந்தித்த மக்களில் அற்பமான விஷயங்களில் கூட சமத்துவத்தை வெளிப்படுத்தும் இவர்களைப் போன்ற மனிதர்களை நாங்கள் சந்தித்ததேயில்லை. இவ்வாறே அதிகமான பொருளில் அழகிய முறையில் பிரதி உபகாரம் செய்பவர்களையும் நாங்கள் கண்டதில்லை. சிரமத்தை அவர்கள் அனுபவித்துக் கொண்டு பலனில் எங்களைக் கூட்டாக்கிக் கொள்கிறார்கள். அதனால் அனைத்து நன்மைகளையும் அவர்களே கொண்டு சென்று விடுவார்களோ என நாங்கள் அஞ்சுகிறோம் என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் அவர்களுக்கு நன்றி செலுத்தி, அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் நிலையில் அவ்வாறு ஆகாது'' என்று கூறினார்கள். (ஸன்னனுத் திர்மிதி)

    அன்சாரித் தோழர்களை அல்லாஹ் புகழ்ந்து அவர்களது நற்செயல்களைப் பாராட்டி திருவசனங்களை இறக்கி வைத்தான். அவர்கள் தங்களை விட பிறரை நேசித்ததை இறுதிநாள் வரை முஸ்லிம்களுக்கு ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சியாகக் குறிப்பிடுகிறான்.

    முஹாஜிர்கள் தங்களிடம் வருவதற்கு முன்னதாகவே (மதீனாவில்) வீட்டையும் அமைத்துக் கொண்டு விசுவாசத்தையும் எற்றுக்கொண்டார்களோ அவர்களுக்கும் அதில் பங்குண்டு. இவர்கள் ஹிஜ்ரத் செய்து தங்களிடம் வருவோரை அன்பாக நேசித்து வருவதுடன் (எவரும் தங்களுக்குக் கொடுக்காது) அவர்களுக்கு (மட்டும்) கொடுப்பதைப் பற்றி தங்கள் மனதில் ஒரு சிறிதும் பொறாமை கொள்ளாது தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும், தங்களுடைய பொருளை அவர்களுக்குக் கொடுத்து, உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் தங்கள் கஞ்சத்தனத்திலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றார்களோ அத்தகையோர்தாம் வெற்றி பெற்றார்கள். (அல்குர்அன் 59:9)

    திருமறையில் அன்சாரித் தோழர்களின் அற்புதத் தன்மையைக் குறிப்பிடுவதன் மூலம் மனித நேயத்தைத் தகர்க்கும் உலோபித்தனத்தைக் கண்டித்து தர்ம சிந்தனையை இஸ்லாம் வளர்க்கிறது. அன்சாரித் தோழர்கள் தங்களுக்கும் முஹாஜிர்களுக்குமிடையே நபி (ஸல்) அவர்கள் சகோதரத்துவத்தை ஏற்படுத்தியபோது ஈமானிய சகோதரத்துவத்தின் நோக்கத்தையும், இலட்சியத்தையும் அறிந்து கொண்டார்கள்.

    அவர்கள் உண்மையான முஃமின்களாகத் திகழ்ந்து, நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கேற்ப தாங்கள் விரும்புவதையே தங்களது சகோதரர்களுக்கும் விரும்பினார்கள். தங்களுக்கென அழிந்து போகும் உலக சாதனங்கள் எதையும் வைத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி தாங்கள் ஈட்டிய செல்வங்களின் ஒரு பகுதியை சகோதரர்களுக்கென ஒதுக்கி, மலர்ந்த இதயத்துடன் வழங்கினார்கள்.

    ஹிஜ்ரத்தின் ஆரம்ப காலத்தில் இரத்த பந்துக்களைவிட முஹாஜிர்களையே வாரிசுரிமை பெற்றவர்களாக்கினார்கள். இதன்மூலம் ரஸுலுல்லாஹி (ஸல்) அவர்கள் எந்தச் சகோதரத்துவக் கொடியை உயர்த்தினார்களோ அந்தச் சகோதரத்துவத்தின் கடமைகளை நிறைவு செய்தார்கள்.

    இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: முஹாஜிர்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஏற்படுத்திய இஸ்லாமிய சகோதரத்துவத்தின் காரணமாக அன்சாரித் தோழர்களுக்கு அவர்களது உறவினர்களன்றி இவர்களே வாரிசுகளாகத் திகழ்ந்தனர். ஆனால் திருமறையில்:

    ...(விசுவாசம் கொண்ட ஒருவனுடைய சொத்தை அடைய) மற்ற விசுவாசிகளை விடவும், ஹிஜ்ரத்துச் செய்தவர்களை விடவும் (விசுவாசிகளான) அவனுடைய சொந்த உறவினர்தாம் அல்லாஹ்வினுடைய இவ்வேதத்திலுள்ள பிரகாரம் உரிமை உடையவர்களாக ஆவார்கள்... (அல்குர்அன் 33:6)

    இந்த வசனம் அருளப்பட்டபோது அந்த வாரிசுரிமை ரத்து செய்யப்பட்டது. ஆனால் அன்பும், நேசமும், பெருந்தன்மையும், உபகார மனப்பான்மையும் நிரந்தரமாக அவர்களிடம் காணப்பட்டது.

    சகோதரர்களுக்காக மறைவில் பிரார்த்திப்பார்
    தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பும் உண்மை முஸ்லிம், சகோதரர் தன் சமூகத்தில் இல்லையென்றாலும் அவருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்வார். அவரின் நன்மைக்கு பிரார்த்திக்கும்போது அன்பு உறுதியாகி, தூய்மையான சகோதரத்துவம் பலமடைகிறது. இவ்வாறு பிரார்த்திப்பதில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு மட்டுமே இருப்பதால் அது அல்லாஹ்விடம் தாமதமின்றி விரைவாக ஒப்புக் கொள்ளப்படுகிறது.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "விரைவாக அங்கீகரிக்கப்படும் பிரார்த்தனை, மறைவானவர் மறைவானவருக்குச் செய்யும் பிரார்த்தனையாகும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

    அதனால்தான் நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரழி) அவர்கள் உம்ராவுக்கு அனுமதி கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், தனக்காக துஆச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள். உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் உம்ராவுக்காக அனுமதி கோரினேன். அவர்கள் அனுமதியளித்து, "எனது சகோதரரே! உமது பிரார்த்தனையில் நம்மை மறந்து விடாதீர்'' என்று கூறினார்கள். உமர் (ரழி) கூறினார்கள்: "அந்த வார்த்தைக்குப் பகரமாக இவ்வுலகம் முழுமையும் எனக்குக் கிடைப்பது அதிக மகிழ்ச்சியளிக்காது.'' (ஸன்னனுத் திர்மிதி)

    கண்ணியமிகு ஸஹாபாக்களின் இதயங்களில் இக்கருத்து ஆழமாக பதிந்திருந்தது. துஆ அங்கீகரிக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தங்களுக்காக துஆச் செய்யுமாறு தமது சகோதரர்களைக் கேட்டுக் கொண்டார்கள். இது விஷயத்தில் அவர்களிடம் ஆண், பெண் என்ற வேறுபாடு காணப்படவில்லை. இந்த உன்னதப் பண்பில் சமூகம் இனைத்தும் மேன்மை பெற்றிருந்ததற்கு நமது வரலாறு சான்றளிக்கிறது.

    ஸஃப்வான் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள், (அபூ தர்தாவின் மகள் "தர்தா' இவர்களின் மனைவியாவார்): "நான் ஷாம் தேசத்துக்குச் சென்றேன். அங்கு வீட்டில் உம்மு தர்தா (ரழி) மட்டுமிருந்தார்கள். அபூ தர்தாவைக் காணவில்லை. அவர் என்னிடம் "ஹஜ் செய்யப் போகிறீர்களா?'' என்று கேட்டார். நான் "ஆம்'' என்றேன். அவர், "எங்கள் நலவுக்காக துஆச் செய்யுங்கள். ஏனெனில், மறைவாக உள்ள தனது சகோதரருக்காக ஒரு முஸ்லிம் செய்யும் துஆ ஒப்புக் கொள்ளப்படும். அவருடைய தலையருகில் ஒரு மலக்கு நியமிக்கப்பட்டிருப்பார். எப்போதெல்லாம் தனது சகோதரருக்கு நலவைக் கொண்டு துஆச் செய்கிறாரோ அப்போது அம்மலக்கு ஆமீன்! உனக்கும் அதே போன்றது (கிட்டட்டும்) என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்'' என்றார்.

    ஸஃப்வான் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நான் கடைவீதியில் அபூ தர்தா (ரழி) அவர்களைச் சந்தித்தேன். அவரும் அவ்வாறே கூறி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார். (அல் அதபுல் முஃப்ரத்)

    நபி (ஸல்) அவர்கள் தங்களது தோழர்களிடையே உயிரோட்டமான ஒற்றுமையை வளர்ப்பவர்களாக இருந்தர்கள். அதனால் முழுமையான சகோதரத்துவ உணர்வுகள் அவர்களிடம் எப்போதும் வெளிப்பட்டு வந்தது. ஆன்மாக்கள் துருப்பிடித்து, இதயங்கள் முத்திரையிடப்பட்டு, பார்வைகளைக் குருடாக்கும்படியான சுயநலச் சிந்தனைகள் அவர்களிடம் தோன்றவில்லை. இஸ்லாமின் சகோதரத்துவ சிந்தனை, உயர்வான பண்புகளை வளரச் செய்கிறது. சுயநல சிந்தனையை அகற்றி விடுகிறது. ஒரு மனிதர் சப்தமாக "யா அல்லாஹ்! என்னையும் முஹம்மதையும் மன்னிப்பாயாக!'' என்று பிரார்த்தித்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் "மிக அதிகமான மக்களுக்கு மன்னிப்பைத் தடுத்து விட்டாயே'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

    இதன்மூலம் தனக்கு மட்டும் நன்மையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதை இஸ்லாம் கண்டிக்கிறது என்பதைக் கற்றுக் கொடுத்தார்கள். மேற்கூறப்பட்டவர்தான் உண்மை முஸ்லிம். தனது சகோதரர்களையும் நண்பர்களையும் நேசிப்பார். அவர் மனத்தூய்மை உடையவர். அவர்களுக்கு நன்மையை மட்டுமே நாடுவார். அவர்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் அவர்களது கெªரவத்தையும் செல்வங்களையும் பாதுகாப்பார். தன்னைவிட அவர்களைத் தேர்ந்தெடுப்பார். அவர்களது குறைகளை மறந்து மன்னித்து விடுவார். மென்மையான அணுகுமுறையை மேற்கொண்டிருப்பார். நாவு, கரங்கள், உறுப்புகள் பரிசுத்தமானவராக, வாரி வழங்கும் வள்ளலாக, பொய் பேசாத உண்மையாளராக, கடுமை காட்டாத மென்மையானவராக, மோசடி செய்யாத நம்பிக்கையாளராக, இரட்டை முகமில்லாத தூய மனதுடையவராகத் திகழ்வார்.

    அவர் இப்பண்புகள் அனைத்தையும் கொண்டிருப்பது அதிசயமல்ல. எனெனில் இது உயர்ந்த மனிதனை வடிவமைப்பதில் இஸ்லாம் வெளிப்படுத்திய அற்புதமாகும். இவர்தான் இஸ்லாம் விரும்பும் முன்மாதிரி முஸ்லிமாவார்.