சகோதரர்கள், நண்பர்களுக்கு நன்மை நாடுவார்
    உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்மை நாடுபவராக இருப்பார்.

    நபி (ஸல்) அவர்கள் "மார்க்கம் என்பது நன்மையை நாடுவது'' என்று கூறியபோது, நாங்கள் கேட்டோம்: "யாருக்கு?'' நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும் அவனது வேதத்துக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

    பிறர் நலம் பேணுதல் என்பது இஸ்லாமின் அடிப்படைகளில் தலையாயதாகும். ஆரம்ப கால முஸ்லிம்கள் இறைத்தூதருடன் செய்து கொண்ட வாக்குப் பிரமாணங்களில் ஒன்றாக இது இருந்தது.

    ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் நபி (ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத் கொடுப்பது, அனைத்து முஸ்லிம்களுக்கும் நன்மை நாடுவது ஆகியவற்றிற்கு உறுதிப் பிரமாணம் செய்துகொண்டேன்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    முந்திய நபிமொழியில் மார்க்கம் "தீன்' என்றால் பிறர் நலம் பேணுதல் என்று பொருள் கூறியிருப்பதன் மூலம் இது மார்க்கத்தின் அடிப்படை என்பதைக் காட்டுகிறது. ஏனெனில் அது இல்லாமல் எவரது ஈமானும் இஸ்லாமும் சீரடையாது. இதுவே பின்வரும் நபிமொழியின் கருத்தாகும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை ஈமான் கொண்டவராக மாட்டார்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    பிறர் நலம் நாடுபவராக இருந்தால்தான், தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்புவார். ஆனால் இது மிகவும் சிரமமானது என்பதில் சந்தேகமில்லை. தான் விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்ப வேண்டுமென்பது ஈமானின் மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். மார்க்கம் என்பதே "பிறர் நலன் பேணல்' என்ற அடிப்படை, முஸ்லிமின் உணர்வுடன் ஒன்றிவிட்டால் இதைச் செயல்படுத்துவது சிரமமல்ல.

    இஸ்லாமிய மறுமலர்ச்சி இதயத்தினுள் கலந்துவிட்ட முஸ்லிமின் இயல்பு, பிறர் நலம் பேணுவதாக இருப்பதில் ஆச்சரியமில்லை. தான் விரும்பியதையே தனது சகோதரர்களுக்கும் விரும்பிய நமது முன்னோர்களின் சரித்திரங்கள் வரலாற்றுப் பக்கங்களில் நிரம்பி வழிகின்றன.

    இந்த இடத்தில் "ஷாம்' (சிரியா) நகரின் வியாபாரிகளைப் பற்றி முந்திய தலைமுறைப் பெரியவர் கூறிய விஷயம் என் நினைவுக்கு வருகிறது. அந்நகரில் அத்தர் கடைகள், துணிக் கடைகள், தையற் கடைகளென ஒவ்வொன்றுக்குமான கடைத் தெருக்கள் இருந்து வந்தன. அவற்றில் ஒரு கடையில் ஒருவர் எதேனும் பொருட்களை வாங்கிச் சென்று விட்ட பின் அதே கடைக்கு வேறு எவரேனும் பொருள் வாங்க வந்தால் அக்கடைக்காரர் மென்மையாக "நான் வியாபாரம் செய்து விட்டேன். உங்களுக்குத் தேவையானதை பக்கத்திலிருக்கும் கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்! அவருக்கு இன்னும் வியாபாரம் நடக்கவில்லை'' என்று உறுதியாகக் கூறிவிடுவார்; அவரிடம் வியாபாரம் செய்யமாட்டார்.

    இந்தச் சகோதரத்துவ நிழலில் அனுபவிக்கும் வாழ்வின் மகிழ்ச்சியும் சந்தோஷங்களும் எவ்வளவு அற்புதமானது! இஸ்லாமின் ஆன்மா அவர்களை உடுருவிச் சென்றவுடன் அவர்களது வாழ்வுதான் எவ்வளவு இன்பமயமானது! "மார்க்கம் என்பது பிறர் நலம் பேணுதல்' என்ற தத்துவத்தின் கீழ்தான் மனிதன் இத்தகைய இன்பங்களை அனுபவிக்க முடியும்.

    இது குறித்து அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: "முஃமின் தனது சகோதரருக்கு கண்ணாடியாவார். அதில் எதேனும் ஒரு குறையைக் கண்டால் இதைச் சீர் செய்து விடுவார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

    அபூ ஹுரைரா (ரழி) அவர்களின் மேற்கண்ட கூற்று பின்வரும் நபிமொழியின் பிரதிபலிப்பாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முஃமின் தனது சகோதரருக்கு கண்ணாடியாவார். முஃமின் மற்றொரு முஃமினுக்கு சகோதரர் ஆவார். அவரைச் சுற்றி நின்று பாதுகாத்து அவரது அழிவைத் தடுப்பார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

    இது முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமிடம் வெளிப்படுத்த வேண்டிய இயற்கைப் பண்பாகும். இதற்கு முரணாக ஒர் உண்மை முஸ்லிமால் செயல்பட இயலாது. இத்தகைய உயர்ந்த அந்தஸ்தில் வாழும் முஸ்லிம் சுயநலம், அகம்பாவம் போன்ற கீழ்த்தரமான காரியங்களில் இறங்க மாட்டார். ஆம்! பாத்திரத்தில் இருப்பதுதான் அகப்பையில் வரும்! மலர்கள் நறுமணத்தைத்தான் பரப்பும்! செழுமையான பூமி நல்ல மரங்களைத்தான் வளர்க்கும்!

    நேர்மையையும் உபகாரத்தையும் இயல்பாகக் கொண்டிருப்பார்
    உண்மை முஸ்லிம், நண்பர்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுவதையும், உபகாரம் செய்வதையும் இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். "முஸ்லிம் தனது பெற்றோருடன்' என்ற தலைப்பில் முன்பு குறிப்பிட்டது போன்று தனது பெற்றோர்களின் நண்பர்களையும் தனது நட்பு வட்டத்துக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும். சகோதரத்துவம் மற்றும் நட்பின் கயிறுகளைப் பலப்படுத்தும் விதமாக உபகாரத்தை தனது இயல்பாகக் கொண்டிருக்க வேண்டும். நமது முன்னோர்கள் தங்களது வாழ்வில் வெளிப்படுத்திய நற்பண்புகளே அவர்களை உலக மனிதர்களில் சிறந்தவர்களாக்கியது.

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""உபகாரத்திலெல்லாம் மிகப் பெரிய உபகாரம் ஒருவர் தனது தந்தையின் நேசத்திற்குரியவர்களோடு இணக்கமாக இருப்பதுதான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

    அப்துல்லாஹ் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு உமர் (ரழி) அவர்களை ஒரு கிராமவாசி மக்கா நகரின் வழியில் சந்தித்தார். அவருக்கு இப்னு உமர் (ரழி) ஸலாம் கூறி, தான் ஏறி வந்த கழுதையின் மீது அவரை அமரச் செய்து தனது தலையிலிருந்த தலைப்பாகையை அவருக்குக் கொடுத்தார்கள். இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அவர்களிடம் "அல்லாஹ் உங்களது காரியங்களைச் சீர்படுத்துவானாக!. அவர்கள் கிராமவாசிகள், குறைவான கண்ணியத்தைக் கொண்டே திருப்தி அடைவார்கள்'' என்று கூறினோம். அப்போது இப்னு உமர் (ரழி) அவர்கள், "இவருடைய தந்தை எனது தந்தை உமர் (ரழி) அவர்களுக்கு மிகப் பிரியமானவராக இருந்தார். "உபகாரத்திலெல்லாம் மிகப் பெரிய உபகாரம் ஒருவர் தனது தந்தையின் நேசத்திற்குரியவர்களோடு இணைந்திருப்பது'' என நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் வாய்ப்பு கிட்டும்போதெல்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் உபகாரம் செய்ய வேண்டுமென ஆர்வத்தை வளர்த்தார்கள். பனூ ஸலமாவைச் சேர்ந்த ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என் பெற்றோரின் மரணத்திற்குப் பிறகு நான் அவர்களுக்குச் செய்ய வேண்டிய உபகாரங்கள் எதேனும் இருக்கிறதா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! அவ்விருவருக்காகவும் துஆச் செய்வது, அவர்களுக்குப் பின் அவர்களது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது, அவர்களால் மட்டுமே உமக்கு எற்பட்ட இரத்த பந்துக்களிடம் இருந்திருப்பது, அவ்விருவரின் நண்பர்களுக்கு கண்ணியமளிப்பது'' என்று கூறினார்கள். (ஸன்னன் அபூ தாவூத்)

    நபி (ஸல்) அவர்கள் இவ்வாறான நட்பை மதிப்பது பற்றி மிக அதிகமாக வலியுறுத்தினார்கள். அது சில வேளைகளில் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுக்கு ரோஷத்தை எற்படுத்தியது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் அன்னை கதீஜாவின் (ரழி) தோழியர்களுக்கு மிக அதிகமாக உபகாரம் செய்து வந்தார்கள்.

    இதோ அன்னை ஆயிஷா (ரழி) அவர்களே கூறுகிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (ரழி) அவர்கள் மீது ரோஷப்பட்டதுபோல வேறெந்த மனைவியர் மீதும் ரோஷப்படவில்லை. நான் அவரைப் பார்த்ததில்லை. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரழி) அவர்களை அடிக்கடி நினைவு கூர்வார்கள். சில வேளைகளில் நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்து இதை பல பங்குகளாகப் பிரித்து கதீஜா (ரழி) அவர்களின் தோழியருக்கு அனுப்பி வைப்பார்கள். நான் சில வேளைகளில் ""உலகத்தில் கதீஜாவைத் தவிர வேறெந்தப் பெண்ணும் இல்லையா?'' என்று கூறுவேன். நபி (ஸல்) அவர்கள், ""கதீஜா இப்படி இப்படியெல்லாம் இருந்தார்கள்; அவர் மூலமாக எனக்கு குழந்தைகள் இருக்கிறார்கள்'' என்று கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    மற்றோர் அறிவிப்பில்: "நபி (ஸல்) அவர்கள் ஆட்டை அறுத்தால் கதீஜா (ரழி) அவர்களுடைய தோழியர்களுக்குத் தேவையான அளவு (இறைச்சியை) அனுப்பிவைப்பார்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    இதோ இந்த இஸ்லாமிய நேர்மையை விட உயர்ந்த வேறு நேர்மை இருக்க முடியுமா? பெற்றோர்கள் அல்லது மனைவி இறந்துவிட்ட பின்னரும் அவர்களின் தூரமான தோழர், தோழியர்களுக்கும் உபகாரம் செய்யப் பணிக்கப்பட்டுள்ளோம். அப்படியிருக்க நாம் நமது வாழ்வில் நமது நெருங்கிய தோழர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

    இஸ்லாம் கற்றுக் கொடுத்த நேர்மை, உபகாரம், பிறர் நலம் பேணுதல், நேசம் கொள்வது என்பது போன்ற பண்புகளின் நோக்கம் என்னவெனில் ஒருவர் தனது சகோதரருக்கு எல்லா நிலைகளிலும் உதவி செய்தாக வேண்டும். அதாவது தனது சகோதரர் சத்தியப் பாதையில் இருந்தால் அவருக்கு உதவி, ஒத்தாசை செய்து அவரைப் பலப்படுத்த வேண்டும். அவர் அசத்தியத்தில் இருந்தால் அவரைத் தடுத்து அவருக்கு நல்வழி காட்டி, வழிகேட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும். இதையே பின்வரும் நபிமொழி நமக்கு போதிக்கிறது:

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஒரு மனிதர் தனது சகோதரருக்கு உதவி செய்யட்டும்! அவர் அநீதியிழைப்பவராக, அல்லது அநீதியிழைக்கப்படுபவராக இருந்தாலும் சரியே. அவர் அநீதியிழைப்பவராக இருந்தால், அவரைத் தடுக்கட்டும். அது அவருக்கு உதவியாகும். அநீதி யிழைக்கப்பட்டவராக இருந்தால் அவருக்கு உதவி செய்யட்டும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

    உண்மை முஸ்லிம் தனது சகோதரன் அநீதம் செய்பவனாக இருந்தாலும் அநீதி இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் அவனைப் பிரியமாட்டார். ஏனெனில் தான் விரும்புவதையே தமது சகோதரனுக்கும் விரும்பவேண்டுமென்கிறது இஸ்லாம். எந்தவொரு முஸ்லிமும் தான் பிறருக்கு அநீதி இழைப்பதையோ பிறர் தனக்கு அநீதி இழைப்பதையோ விரும்பமாட்டார். அவ்வாறே தனது சகோதரருக்கும் இதை விரும்பமாட்டார். அதனால் சகோதரன் அநீதிக்குள்ளாக்கப்பட்டால் அவருடைய தோளோடு ஒட்டி நின்று அநியாயத்தைத் தடுத்து உதவி செய்வார். அநீதி செய்பவராக இருந்தாலும் தோளோடு ஒட்டி நின்று அவரை அநியாயம் செய்வதிலிருந்து தடுப்பார். இதுதான் உண்மையான உபகாரம். இதுதான் தூய்மையான பிறர் நலம் பேணுதலாகும். இதுதான் ஒரு முஸ்லிம் எங்கும், எப்போதும் மேற்கொள்ள வேண்டிய அழகிய பண்பாகும்.

    மென்மையாக நடப்பார்
    முன்மாதிரியாகத் திகழும் உண்மை முஸ்லிம், தனது சகோதரர்களுடன் மென்மையாகவும், அவர்களை நேசிப்பவராகவும், அவர்களால் நேசிக்கப்படுபவராகவும் இருப்பார். இது விஷயத்தில் உயர் பண்புகளை வலியுறுத்தும் இஸ்லாமின் கண்ணோட்டத்தை ஆய்வு செய்வார்.

    அல்லாஹ் தனது திருமறையில் முஃமின்களை வர்ணிக்கும்போது:
    ....அவர்கள் விசுவாசம் கொண்டவர்களிடம் பணிவாக நடந்து கொள்வார்கள்; இறைநிராகரிப்பாளர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள். (அல்குர்அன் 5:54) இத்திருவசனத்தில் முஃமினான சகோதரர்களுடன் நல்லிணக்கம் பேணி, மென்மையுடன் பழக வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

    அடுத்து இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மென்மை, அது இருக்கும் அனைத்தையும் அலங்கரிக்கும். அது அகற்றப்பட்டதை விகாரமாக்கி விடும்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

    நற்பண்புகளின் இலக்கணமாகத் திகழ்ந்த நபி (ஸல்) அவர்களின் நடைமுறை முஸ்லிமின் கண்களில் பிரகாசிக்கும். நபி (ஸல்) அவர்களின் இனைத்து பண்புகளும் மென்மையாக அமைந்திருந்தது. அவர்களது நாவில் ஒருபோதும் ஆபாச வார்த்தை வெளியானதில்லை. எவரையும் திட்டியதோ, சபித்ததோ கிடையாது.

    நபி (ஸல்) அவர்களுடனே இருந்து அவர்களுக்கு ஊழியம் செய்து வந்த அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஏசுபவராகவோ, கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ இருக்கவில்லை. எங்களில் ஒருவரைக் கண்டிக்கும்போது கூட "அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும்'' என்றே கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரி) நெற்றி மண்ணில் படட்டும் என்பதற்கு பொருள் அதிகமாக ஸஜ்தா செய்ய வேண்டும் என்பதாகும்.