|
|
|
|
துண்டிக்கவோ, வெறுக்கவோ மாட்டார்
மார்க்கச் சட்டங்களை அறிந்த முஸ்லிம், இஸ்லாம் மனித குலத்தை, அன்பின்பால் அழைக்கிறது என்பதையும், கோபத்தையும், வெறுப்பையும், பிரிவினையையும் தடை செய்துள்ளது என்பதையும் அறிந்திருப்பார். ஆடையில் எற்படும் சில பிரச்னைகள் இரு உண்மையான நண்பர்களுக்கிடையே பிரிவினையை எற்படுத்தி விடாது. ஏனெனில், அல்லாஹ்வுக்காக நேசித்தல் என்ற கயிறு மிக உறுதியானது; அது சிறு பிரச்னைகளிலெல்லாம் அறுந்துவிடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரு நண்பர்களில் ஒருவரின் தவறு, அவ்விருவருக்குமிடையே பிரிவினையை எற்படுத்தி விட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்க்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)இஸ்லாம் மனிதனின் இயற்கைப் பண்புகளை புறக்கணிக்கவில்லை. கோபத்தின் காயங்களையும் சில வினாடிகளில் நட்பில் எற்படும் தடுமாற்றங்களையும் மறந்துவிடவில்லை. அச்சூழலில் கோப நெருப்பு இணைந்து போவதற்கான கால அவகாசத்தை நிர்ணயித்துள்ளது. முரண்பட்டு நிற்கும் இரண்டு முஸ்லிம்களிடையே அந்த அவகாசம் கடந்து விடக்கூடாது. அவ்விருவரோ அல்லது ஒருவரோ ஒன்று சேர்வதிலிருந்து விலகி நிற்கக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். அனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்வது கூடாது). ஸலாமை முந்திச் சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
உறுதியான சான்றுகளைக் காணும் உண்மை முஸ்லிம் எந்த நிலையிலும் தனது சகோதரருடன் சண்டையிடுவதோ, தர்க்கமோ செய்யாமல் இணக்கத்துடன் நடந்து கொள்வார். சிறந்தவர் முந்திக்கொண்டு ஸலாம் சொல்பவர்தான். மற்றவர் அந்த ஸலாமுக்கு பதில் கூறிவிட்டால் இணைந்ததற்கான கூலியை இருவரும் பெற்றுக்கொள்வார்கள். அவர் பதிலளிக்கவில்லையெனில் ஸலாமைக் கூறியவர் சகோதரனை வெறுத்த பாவத்திலிருந்து நீங்கி விடுவார். ஸலாம் கூற மறுத்தவர் மட்டுமே சகோதரத்துவத்தைத் துண்டித்த பாவத்திற்கு பொறுப்பாளியாவார்.
அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்: "முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களாகி விட்டால் அவரைச் சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலிருந்து நீங்கிவிட்டார்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
அவர்களுக்கிடையேயான வெறுப்பும் முரண்பாடும் தொடரும் காலமெல்லாம் பாவமும் குற்றமும் அதிகரித்துக்கொண்டே செல்லும். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) கூறினார்கள்: ""ஒருவர் தனது சகோதரரை ஒரு வருடம் வெறுத்திருந்தால் அந்தச் சகோதரரின் இரத்தத்தை சிந்தியவர் போலாவார். (அதாவது இச்செயல் கொலைக்கு ஒப்பானதாகும்).'' (அல் அதபுல் முஃப்ரத்)
மனித இதயங்களைப் பண்படுத்துவதற்கான இஸ்லாமிய வழிகாட்டல், நேசம் மற்றும் அன்பின் மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் உண்மை முஸ்லிமின் வாழ்வில் கோபமும் பொறாமையும் காணப்படாது. அவரது வாழ்வில் இத்தகைய கீழ்த்தரமான குணங்கள் எப்படி இடம் பெற முடியும்!'' மனித குலம் அறிந்திருந்த அனைத்து நற்பண்புகளை விடவும் மிக உன்னதமான பண்புகளைக் கற்றுக் கொடுத்த நபி (ஸல்) அவர்களின் பொன்மொழி அவரது காதில் எரொலிக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் ஒருவருக்கொருவர் துண்டித்து வாழாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். கோபப்படாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்களை எவியவாறு சகோதரர்களாக இருங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சந்தேகப்படுவதிலிருந்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில் சந்தேகம் கொள்வது மிகப்பெரிய பொய்யாகும். பிறரின் குறைகளை ஆராயாதீர்கள். பிறரைக் குறை தேடும் நோக்கத்துடன் கண்காணிக்காதீர்கள். ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். மாறாக அல்லாஹ்வின் அடியார்களாகவும் சகோதரர்களாகவும் இருங்கள்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மேலும் கூறினார்கள்: ""ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாங்கும் நோக்கமில்லாமல் பிறரைத் தூண்ட வேண்டும் என்பதற்காகவே விலையை அதிகப்படுத்தாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவரது வியாபாரத்தில் மற்றவர் குறுக்கிட்டு வியாபாரம் செய்யாதீர்கள். அல்லாஹ்வின் நல்லடியார்களாக, சகோதரர்களாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரராவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார். மோசடி செய்யமாட்டார். அவரை அற்பமாகக் கருதமாட்டார். இறையச்சம் என்பது இந்த இடத்தில் என்று தனது நெஞ்சின் பக்கம் மூன்று முறை சைக்கினை செய்தார்கள் ஒருவர் தமது சகோதரரை இழிவாகக் கருதுவது அவரது கெடுதிக்குப் போதுமானதாயிருக்கும். ஒரு முஸ்லிமுக்கு பிற முஸ்லிமின் இரத்தம், அவரது சொத்து, அவரது கெªரவம் ஹராமாகும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)
ஒரு முஸ்லிம் பிற முஸ்லிமின் உயிர், பொருள், கண்ணியம் ஆகியவற்றில் பங்கம் விளைவிப்பது கடுமையான குற்றமாகும் என்பது இதன் பொருளாகும். நேர்வழி பெற்ற முஸ்லிம் இந்த நபிமொழியை ஆழ்ந்து சிந்தித்தால் பரஸ்பர நேசம், அன்பு, சகோதரத்துவத்தைப் பேணி நடப்பார். இதயத்தில் நோயுள்ள, கல்நெஞ்சம் உடையவரே இத்தகைய பண்புகளைப் புறக்கணிப்பார்.
இவ்விடத்தில் அந்தக் கல்நெஞ்சக்காரர்களுக்கும், இஸ்லாமின் நற்பண்புகளைப் புறக்கணிப்பவர்களுக்கும், பிறர் மீதான கண்ணியத்தை மறுப்பவர்களுக்கும், வெறுப்பின் மீதே நிலை கொண்டிருப்பவர்களுக்கும் மிகக் கடினமான எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அவர்கள் தங்களது மறுமைப் பேற்றைத் தகர்த்தெறிந்து விடுகிறார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் அருளும் மன்னிப்பும் தடுக்கப்பட்டு விடுகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மன்னிக்கப்படமாட்டான். அப்போது சொல்லப்படும் "இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
அபூ தர்தா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நோன்பு நோற்பதை விட, தர்மம் செய்வதை விட சிறந்தவொரு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை எற்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக் கூடியதாகும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
இது நேசம் மற்றும் சகோதரத்துவத்தின் மீது நிர்மாணிக்கப்பட்ட இம்மார்க்கத்தின் உயிரோட்டம் எத்தகையது என்பதைப் பற்றி பிரபல நபித்தோழரின் கண்ணோட்டமாகும். பகைமை கொள்வது நற்செயல்களை அழித்து நற்கூலியை வீணாக்கிவிடும். இதனால்தான் பிரிந்திருக்கும் இரு சகோதரர்களிடையே இணக்கத்தை எற்படுத்துவது நோன்பு, தர்மத்தை விட சிறந்தது.
பெருந்தன்மையுடைவர், மன்னிப்பவர்
முஸ்லிம் தனது சகோதரரின் மீது கோபப்பட்டால் இதைக் கட்டுப்படுத்தி அவரைத் தாமதமின்றி மன்னித்து விடுவார். தனது சகோதரரை மன்னிப்பதை தனக்குக் குறையாகவோ, இழிவாகவோ கருதமாட்டார். மாறாக, இதை அல்லாஹ்வின்பால் தன்னை நெருக்கி வைக்கும் ஒரு நன்மையாகவே கருதுவார். அல்லாஹ் தனது நல்லடியார்களுக்கு மட்டும் சொந்தமாக்கிய அவனது நேசத்தை அடைந்து கொள்ள அம்மன்னிப்பைக் காரணமாக்கிக் கொள்வார். இது பற்றி அல்லாஹ் தனது அருள்மறையில் கூறுகிறான்:...அவர்கள் கோபத்தை விழுங்கிவிடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்அன் 3:134)
சில நேரங்களில் மனிதன் தனது கோபத்தை அடக்கும்போது அது உள்ளுக்குள் குரோதமாக உருவெடுக்கலாம். ஆகவே கோபத்தை வெளிப்படுத்தி விடுவது குரோதத்தை விட சிறந்ததாகும். ஆனால் உண்மை முஸ்லிம் பகைமையோ வஞ்சமோ கொள்ளாமல், மறந்து மன்னித்து, நன்மையாளராகி விடுவார். கோபத்தை அடக்குவது உண்மையில் மிகச் சிரமமான காரியமாகும். இதயத்தில் நெருப்பை மூட்டி விடும். இதைப் புறக்கணித்து மன்னித்துவிட்டால், அந்தச் சுமை நீங்கி மனதில் குளிர்ச்சியும் அமைதியும் ஏற்படுகிறது. தனது சகோதரனை மறந்து மன்னித்து விடுவது முஸ்லிமின் இயல்பான உணர்வாகும்.
உண்மை முஸ்லிம் அல்லாஹ்வுக்காகவே தனது சகோதரரை மறந்து மன்னித்து விடுவார். அல்லாஹ்வுக்காகவே தனது சகோதரனிடம் பணிந்துமிருப்பார். அதன் மூலம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து கண்ணியத்தையும் கெªரவத்தையும் தேடிக் கொள்வார்.
நபி (ஸல்) கூறினார்கள்: ""ஒருவர் அல்லாஹ்விற்காகப் பணிந்து நடந்தால் அல்லாஹ் அவரை உயர்த்தியே தீருவான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
உண்மை முஸ்லிம் தன் சகோதர முஸ்லிமின் தவறுகளை மறந்து, மன்னித்து கெªரவப்படுத்துவதால் அல்லாஹ் இத்தகைய உயர்வை அளிக்கிறான். அதன் மூலம் அவர் மனிதர்களால் நேசிக்கப்படுபவராகவும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற நல்லடியாராகவும் ஆகிறார். தனது மார்க்கத்தின் இலட்சியங்களை அறிந்த முஸ்லிமின் இதயத்தில் வஞ்சத்திற்கு சிறிதும் இடமில்லை. அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெறுவதற்கு மனத்தூய்மையும் மன்னிக்கும் மனப்பான்மையும் அவசியம் என்பதை அவர் அறிந்திருப்பார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று பாவங்களைத் தவிர மற்ற பாவங்கள் செய்தவர்களில் அல்லாஹ், தான் விரும்பியவர்களை மன்னித்து விடுகிறான். அம்மூன்று பாவங்களாவன: அல்லாஹ்வுக்கு இணைவைத்த நிலையில் மரணமடைவது, சூனியத்தைத் தேடிச் செல்வது, தனது சகோதரர் மீது வஞ்சம் கொள்வது.'' (அல் அதபுல் முஃப்ரத்)
மலர்ந்த முகத்துடன் எதிர்கொள்வார்
முஸ்லிம் நற்குணமும் தூய இதயமும் புன்னகையால் மலர்ந்த முகமும் உடையவராக இருப்பார். எனவே தனது சகோதரர்களைச் சந்திக்கும்போது புன்னகையால் பிரகாசிக்கும் முகத்துடன் அணுகுவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.'' (ஸஹீஹ் முஸ்லிம்)மலர்ந்த முகம் என்பது இஸ்லாம் வலியுறுத்தும் அழகிய பண்புகளில் ஒன்றாகும். இதைச் செய்பவருக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது பரிசுத்தமான இதயத்தின் பிரதிபலிப்பாகும். அந்தத் தூய்மையைத்தான் இஸ்லாம் உள்ளேயும் வெளியேயும் முஸ்லிம்களுக்கு மிகவும் வலியுறுத்தி வருகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உம்முடைய சகோதரரின் முகத்தை நீர் புன்னகையோடு பார்ப்பதும் தர்மமாகும்.'' (ஸன்னனுத் திர்மிதி)
நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களிடம் எப்போதும் மலர்ச்சியாகவே காணப்பட்டார்கள். எவரையேனும் கண்டால் உடனே புன்னகைப்பார்கள். இதுபற்றி பிரபல நபித்தோழர் ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நான் இஸ்லாத்தைத் தழுவிய பின் தன்னைச் சந்திப்பதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்னகை செய்யாமல் என்னைப் பார்த்ததில்லை.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
அலீ (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: "முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து உரையாடினால் அவர்களில் மிக அதிகமான முகமலர்ச்சி உடையவரை அல்லாஹ் மன்னிக்கிறான்.''
இதனால்தான் நபித்தோழர்கள், எவரேனும் பிரயாணத்திலிருந்து திரும்பினால் மகிழ்ச்சியுடன் முஆனகா (இணைத்துக் கொள்வது) செய்வார்கள். சந்தித்துக் கொண்டால் முஸப்ஃபஹா (கைலாகு) செய்து கொள்வார்கள். இதன் மூலம் சகோதரர்களிடையே அன்பும் நேசமும் அதிகரிக்கிறது.
இப்னு ஸஃது (ரஹ்) அவர்களின் தபகாத் என்ற நூலில் வருவதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபரிலிருந்து வந்தபோது நபி (ஸல்) அவர்களை ஜஅஃபர் இப்னு அபீதாலிப் (ரழி) சந்தித்தார்கள். அவரை நபி (ஸல்) அவர்கள் இறுகப்பற்றிக் கொண்டு அவரது இரு கண்களிடையே முத்தமிட்டார்கள். மேலும் "கைபர் வெற்றியடைந்தது, ஜஅஃபர் வருகை தந்தது என்ற இந்த இரண்டில் எது பற்றி நான் மிக அதிகம் மகிழ்ச்சி அடைவது என்று எனக்குத் தெரியவில்லை'' என்றார்கள்.
மற்றொரு அறிவிப்பில்: நபி (ஸல்) அவர்கள் ஜஅஃபர் (ரழி) அவர்களைத் தங்களுடன் இணைத்து, "முஅனகா' செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இஸ்லாம், சகோதரர்கள் சந்தித்துக் கொள்ளும்போது ஸலாம் கூறுவதையும், முஸப்ஃபஹா, முஆனகா செய்வதையும் வலியுறுத்துகிறது. முஃமின்களின் சகோதரத்துவப் பிணைப்பு உறுதியாகவும், இதயங்களிடையே நேசம் நிரந்தரமாகவும் இருக்க இது துணை செய்யும். அதன் மூலம் தனது வாழ்வில் இஸ்லாமின் அழைப்புப் பணியை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வதற்கான வலிமையும் முஸ்லிம் சமூகத்திற்குக் கிடைக்கும்.