அல்லாஹ்வுக்காக நேசிப்பார்
    தனது சகோதரர்களையும் நண்பர்களையும் சுயநலமற்று நேசித்து, எவ்வித எதிர்பார்ப்புமின்றி தூய அன்பு கொள்வது உண்மை முஸ்லிமின் தனித்தன்மையான பண்புகளில் ஒன்றாகும். இஸ்லாம் உண்மையான சகோதரத்துவ அமைப்பாகும். இது அல்லாஹ், அவனது தூதரால் மனித உறவில் எற்படுத்தப்பட்ட சங்கிலிப் பிணைப்பாகும். மனித வரலாற்றில் சகோதரத்துவத்தைப் பேணுவதில் இஸ்லாம் மட்டுமே தனித்து நிற்கிறது.

    ஒருவரது இனம், மொழி, நிறம் போன்ற பேதமைகளுக்கு அப்பாற்பட்டு "லாஇலாஹா இல்லல்லாஹ்' என்ற திருக்கலிமாவின் கீழ் இஸ்லாம் மனிதர்களை சகோதரத்துவத்தால் பிணைக்கிறது.

    விசுவாசிகள் (யாவரும்) நிச்சயமாகச் சகோதரர்களே! (அல்குர்அன் 49:10)
    ஈமானிய சகோதரத்துவம் இதயங்களை இணைப்பதில் மிக உறுதியானதாகும். அது ஆன்மாவையும் அறிவையும் இணைக்கிறது. இந்தச் சகோதரத்துவம் உன்னதமான ஏற்பாடாகும். இதற்கு இஸ்லாம் "அல்லாஹ்வுக்காக நேசித்தல்' என்று பெயரிடுகிறது. இதில்தான் உண்மை முஸ்லிம் ஈமானின் இன்பத்தைப் பெற்றுக் கொள்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவரிடம் மூன்று தன்மைகள் இணைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். இவை: 1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது, 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது, 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களின் அந்தஸ்து
    அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு நேசித்துக் கொள்பவர்களுக்கு அல்லாஹ் சுவனத்தில் தயார் செய்து வைத்திருக்கும் அருட்கொடைகள் மற்றும் மறுமை நாளில் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கவிருக்கும் உன்னத அந்தஸ்து பற்றியும் விவரித்துக் கூறும் அநேக நபிமொழிகள் உள்ளன. இது விஷயத்தில் அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத நாளில் அல்லாஹ் நிழல் தரும் எழு நபர்களைப் பற்றி

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: " 1. நீதமான அரசன் 2. அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபட்ட வாலிபர் 3. இதயத்தால் மஸ்ஜிதுடன் இந்திருக்கும் மனிதர் 4. அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இரு மனிதர்கள், அல்லாஹ்வுக்காகவே ஒன்று சேர்ந்திருந்தார்கள்; அல்லாஹ்வுக்காகவே பிரிந்தார்கள் 5. ஒரு மனிதர், அவரை அழகும் வனப்புமுடைய பெண் அழைத்தாள்; அவர் "நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்'' என்று கூறி (மறுத்து) விட்டார் 6. வலது கரம் செய்த தர்மத்தை இடது கரம் அறியாத வகையில் தர்மம் செய்தவர் 7. தனிமையில் அல்லாஹ்வை திக்ரு செய்து, கண்ணீர் வடிக்கும் மனிதர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    அல்லாஹ்வின் நிழல் மட்டுமே உள்ள மறுமை நாளில் அந்த நிழலுக்காக தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கும் இடமுண்டு என்பதிலிருந்து அவர்களுக்கு எவ்வளவு பெரிய கெªரவம் உண்டு என்று தெரிந்து கொள்ளலாம். அல்லாஹ்வுக்காகவே நேசிப்பவர்களை சிறப்பித்துக் கூறும் முகமாக மஹ்ஷர் மைதானத்தில் அல்லாஹ் கூறுவான்: "என்னுடைய மகத்துவத்துக்காக தங்களிடையே நேசித்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறெந்த நிழலும் இல்லாத இன்றைய நாளில் என்னுடைய நிழலில் அவர்களுக்கு இடமளிக்கிறேன்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

    துன்பமும், துயரமும், சிரமங்களும் நிறைந்த கடுமையான நாளில் அல்லாஹ்வுக்காகவே நேசித்தவர்களுக்குக் கிடைக்கும் அல்லாஹ்வின் பேரருள் எவ்வளவு மகத்தானது! "அல்லாஹ்வுக்காகவே நேசித்தல்' என்பது அல்லாஹ்வின் பொருத்தத்தை மட்டும் நோக்கமாகக் கொண்ட நட்பாகும். உலக     ஆசாபாசங்கள், பலன்களை எதிர்பார்ப்பது அல்லது துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வது போன்ற வேறு நோக்கங்கள் இருக்கக் கூடாது. ஆனால் பரிசுத்த ஆன்மாவும், தூய இதயமும் கொண்டு அல்லாஹ்வின் திருப்திக்கு முன்னால் உலக இன்பங்களை அற்பமாகக் கருதும் இயல்புடையவர்களுக்குத்தான் இது சாத்தியமாகும். இத்தகையோருக்கு ஈருலகில் அல்லாஹ் அந்தஸ்தையும் அருட்கொடைகளையும் வாரி வழங்குவது தூரமான விஷயமல்ல.

    முஅத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர் கூற நான் கேட்டிருக்கிறேன்: அல்லாஹ் கூறுகிறான்: "என்னுடைய மகத்துவத்திற்காக ஒருவருக்கொருவர் நேசித்துக் கொண்டவர்களுக்கு ஒளியினாலான மேடைகள் உண்டு. அதில் நபிமார்களும் ஷுஹதாக்களும் அவரைக் கண்டு ஆசை கொள்வார்கள்.'' (ஸன்னனுத் திர்மிதி)

    தனக்காகவே நேசித்துக் கொள்ளும் தனது அடியார்களை அல்லாஹ் நேசிப்பதிலும், மேற்கூறப்பட்டதைவிட மிக உயரிய அருட்கொடைகளை வழங்குவதிலும் ஆச்சரியம் எதுமில்லை. அந்த அருட்கொடைதான் அவனது அன்பாகும். இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைக் காண்போம்.

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் மற்றொரு உரில் உள்ள சகோதரரை சந்திக்கச் சென்றபோது அவரது பாதையில் அல்லாஹ் ஒரு வானவரை எதிர்பார்த்திருக்க வைத்தான். அம்மனிதர் அந்த வானவரைக் கடந்த போது அவர், "எங்கே செல்கிறாய்?'' என்று கேட்டார். அவர் "இந்த ஊரிலுள்ள எனது சகோதரரை சந்திக்கச் செல்கிறேன்'' என்று கூறினார். அம்மலக்கு "அவர் உமக்கு எதேனும் உபகாரம் செய்ய வேண்டுமென்பதற்காகவா (செல்கிறாய்?)'' என்று கேட்டார். அவர் "இல்லை, எனினும் நான் அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார். "நான் அல்லாஹ்விடமிருந்து உம்மிடம் அனுப்பபட்ட தூதர். நீ அல்லாஹ்வுக்காக உமது சகோதரரை நேசித்தது போல நிச்சயமாக அல்லாஹ் உம்மை நேசிக்கிறான்'' என்று அம்மலக்கு கூறினார். (ஸஹீஹ் முஸ்லீம்)

    மனிதனை அல்லாஹ் நேசிக்கும் அளவுக்கு உயர்த்தும் இந்த அன்பு எவ்வளவு மகத்தானது? இந்த மேன்மையான விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் பெரிதும் கவனத்தைச் செலுத்தினார்கள். அல்லாஹ்வுக்காக நேசிக்கும் இருவரில் சிறந்தவர் யாரெனில் தனது சகோதரரை எவர் மிக அதிகமாக நேசிக்கிறாரோ அவரே என நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "(அல்லாஹ்வுக்காக) நேசிக்கும் இரு சகோதரர்களில் மிகச் சிறந்தவர் யாரெனில் அவர்களில் மற்றவரை மிக அதிகமாக நேசிப்பவரே.'' (அல் அதபுல் முஃப்ரத்)

    நேர்வழி பெற்ற முஸ்லிம், சமுதாயத்தில் நேசத்தை பரவச்செய்ய வேண்டுமென்பதற்காக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஒரு மனிதர் தனது சகோதரரை (முஸ்லிமை) நேசித்தால் அவரை நேசிப்பது பற்றி அவருக்கு அறிவித்து விடட்டும்.'' (ஸன்னன் அபூ தாவூது)

    சமூக நல்லிணக்கத்தைப் பேணிக் காப்பதில் ஆழ்ந்த தாக்கத்தை எற்படுத்தும் உறுதியான நேசத்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும், நேசம் கொள்வதின்பால் முஸ்லிம்களை அழைத்தார்கள். அந்த நேசத்தை வெளிப்படையாக அறிவித்து விடுமாறும் ஏவினார்கள். அப்போது இதயக் கதவுகள் திறந்துவிடும். அன்பும் நேசமும் மனிதர்களிடையே உடுருவிச் செல்லும்.

    அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அமர்ந்திருந்தார். அவரை ஒருவர் கடந்து சென்றபோது நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! இந்த மனிதரை நான் நேசிக்கிறேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். ""இதை நீ அவருக்கு அறிவித்து வீட்டீரா?'' அவர் "இல்லை'' என்றார். நபி (ஸல்) அவர்கள் "(உமது நேசத்தை) அவரிடம் அறிவித்து விடும்'' என்றார்கள். அவர் தனது நண்பரிடம் சென்று, "நான் அல்லாஹ்வுக்காக உம்மை நேசிக்கிறேன்'' என்றார். அம்மனிதர்" அல்லாஹ்வுக்காக என்னை நீர் நேசித்தீர், அல்லாஹ்வும் உம்மை நேசிக்கட்டும்'' என்று கூறினார். (ஸுனன் அபூதாவூது)

    நபி (ஸல்) அவர்கள் இதைச் செயல்படுத்திக் காட்டி, சமூகத்திடையே அன்பையும் சகோதரத்துவத்தையும் முஸ்லிம்கள் எவ்வாறு நிலைநாட்ட வேண்டுமென்பதைக் கற்றுத் தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரழி) அவர்களின் கரம் பற்றியவர்களாக, "முஆதே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் உம்மை நேசிக்கிறேன்; பின்பு நான் உமக்கு உபதேசிக்கிறேன். முஆதே! ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் "யாஅல்லாஹ்! உன்னை திக்ரு செய்வதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உனக்கு அழகிய முறையில் வழிபடுவதற்கும் எனக்கு உதவி செய்வாயாக!' என்ற துஆ ஒதுவதை விட்டு விடாதீர்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)

    இந்தத் தூய நேசத்தை நெஞ்சத்தில் சுமந்த முஆத் (ரழி) அவர்கள் முஸ்லிம்களிடையே இதைப் பரப்பினார். அல்லாஹ்வுக்காக நேசிப்பவர்களுக்கு அல்லாஹ் சித்தப்படுத்தியுள்ளது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் அறிந்ததை முஸ்லிம்களிடையே எடுத்துரைத்தார்.

    அபூ இத்ரீஸ் கவ்லானி (ரஹ்) அவர்கள் கூறியதாக இமாம் மாலிக் அவர்கள் தனது முவத்தாவில் அறிவிக்கிறார்கள்: "நான் திமஷ்க் பள்ளியினுள் நுழைந்தேன். அங்கு ஒரு வாலிபர் முத்து போன்ற பற்களுடன் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி மக்கள் அமர்ந்திருந்தனர். தங்களின் கருத்துவேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்வதற்காக அவரிடத்தில் வருகிறார்கள்; அவரது ஆலோசனையை மனமுவந்து ஒப்புக் கொள்கிறார்கள். அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் முஆத் இப்னு ஜபல் (ரழி) என்று தெரிவிக்கப்பட்டது.

    அடுத்த நாள் வெகு சீக்கிரமாகவே எழுந்தேன். ஆனால் முஆத் (ரழி) என்னைவிட சீக்கிரமாக எழுந்து தொழுது கொண்டிருந்தார். தொழுகையை முடிக்கும் வரை நான் காத்திருந்து விட்டு பிறகு அவருக்கு முன்னால் சென்று அமர்ந்து ஸலாம் சொல்லி, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை நான் நேசிக்கிறேன்'' என்றேன். அவர் "அல்லாஹ்வின் மீது அணையாகவா?'' என்றார். நான் "அல்லாஹ்வின் மீது ஆணையாக!'' என்றேன். அவர் "அல்லாஹ்வின் மீது ஆணையாகவா?'' என்றார். நான் "அல்லாஹ்வின் மீது ஆணையாக!'' என்று கூறினேன். எனது ஆடையின் நுனியைப் பிடித்து அவரின் பக்கம் என்னை இழுத்துக் கூறினார். உமக்கோர் நற்செய்தி! நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்: "எனது திருப்திக்காக நேசிப்பவர் மீதும் எனது திருப்திக்காக சபையில் அமர்பவர் மீதும் எனது திருப்திக்காக சந்தித்துக் கொள்பவர் மீதும் எனது திருப்திக்காக செலவு செய்பவர் மீதும் எனது நேசம் கட்டாயமாகிவிட்டது'' என்று அல்லாஹ்ு தஅலா கூறுகிறான்.

    அல்லாஹ்வுக்காக நேசிப்பதால் முஸ்லிமின் வாழ்வில் எற்படும் மாற்றங்கள்
    அல்லாஹ்வுக்காக நேசிப்பது முஸ்லிமை சுவனத்தில் நுழைய வைக்கும் ஈமானின் நிபந்தனைகளில் மிக முக்கியமானதென நபி (ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தினார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: "யாருடைய கைவசம் என்னுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் ஈமான் கொள்ளாதவரை சுவனத்தில் நுழைய மாட்டீர்கள். உங்களிடையே நேசித்துக் கொள்ளாதவரை நீங்கள் ஈமான் கொண்டவர்களாக மாட்டீர்கள். நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை அறிவித்துத் தரட்டுமா? இதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்வீர்கள். (அந்த விஷயம்) உங்களிடையே ஸலாமைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள்.  (ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் பின்வரும் விஷயத்தை நன்கு உணர்ந்திருந்தார்கள். அதாவது உள்ளத்தின் குரோதங்களை அழித்து, போட்டி, பொறாமை என்ற அழுக்குகளை தூய்மைப்படுத்தும் ஒரே சாதனம் உன்னதமான சகோதரத்துவம்தான். இதுதான் முஸ்லிம்களின் வாழ்க்கையை சூழ்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் சமுதாய வாழ்க்கை பரஸ்பர அன்பு, ஒற்றுமை என்ற உறுதியான அடித்தளத்தின் மீது அமையும். இன்னும் இதன் மூலமே சமுதாய கட்டிடம் சூழ்ச்சி, வஞ்சம், பொறாமை, அநீதம் போன்ற விரிசல்களிலிருந்து பாதுகாப்பு பெறும். இதை முன்னிட்டு சகோதரர்களுக்கிடையே ஸலாமைப் பரப்புமாறு நபி (ஸல்) அவர்கள் எவினார்கள். அதன்மூலம் இதயங்கள் விரிவடைந்து நன்மைகள் பொங்கி வழியும்.

    நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை தனது தோழர்களிடம் வலியுறுத்தி அவர்களது இதயங்களில் சகோதரத்துவத்தின் நேச வித்துகளை விதைத்தார்கள். இதைப் பராமரித்து மென்மேலும் வளர்க்க வேண்டுமெனவும் உபதேசித்தார்கள். அப்போதுதான் இஸ்லாம் முஸ்லிம்களிடம் விரும்பும் பிரகாசமிக்க சகோதரத்துவக் கனிகளை சுவைக்க முடியும்.

    நபி (ஸல்) அவர்கள் இந்த நேசத்தை, இஸ்லாமியப் பேரொளியை இவ்வுலகம் முழுவதும் பரவச் செய்த தனது தோழர்களிடம் உருவாக்கினார்கள். அவர்கள் இஸ்லாமியக் கோட்டையின் அடித்தளமாக அமைந்தார்கள். இஸ்லாம் முஸ்லிம்களின் இதயங்களில் இந்தத் தூய்மையான நேசத்தை விதைத்திருக்கவில்லையெனில் ஆரம்பகால முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிரான போராட்டங்களையும் சித்திரவதைகளையும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. முஸ்லிம் நாடுகளைக் கட்டமைப்பதில் அவர்கள் மகத்தான தியாகங்களைச் செய்திருக்க முடியாது. இந்த உன்னதமான நேசத்தின் மூலமே நபி (ஸல்) அவர்கள் மனிதகுல வரலாறு கண்டிராத இஸ்லாமிய சமூகத்தை உருவாக்கினார்கள்.

    நபி (ஸல்) கூறினார்கள்: "ஒரு முஃமின், மற்றொரு முஃமினுக்கு கட்டிடத்தைப் போன்றவராவார். அதில் ஒரு பாகம் மற்றொரு பாகத்திற்கு வலுச் சேர்க்கிறது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    மேலும் கூறினார்கள்: "முஃமின்கள் தங்களிடையே நேசிப்பதற்கும், கருணை காட்டுவதற்கும், இணைந்திருப்பதற்கும் உதாரணமாகிறது ஒர் உடலைப் போன்றதாகும். அதில் எதேனும் ஒர் உறுப்பு நோயுற்றால் எல்லா உறுப்புகளும் காய்ச்சலையும் தூக்கமின்மையும் முறையிடுகின்றன.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "முஸ்லிம்கள் ஒரே உடலைப் போன்றவர்கள். கண் "வலி'யை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன. தலை "வலி'யை முறையிட்டால் அனைத்து உறுப்புகளும் முறையிடுகின்றன.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்களின் இந்த உன்னத வழிகாட்டலை அறிந்த முஸ்லிம் தனது இதயத்தை மென்மையாக்கி சகோதரர்களையும் நண்பர்களையும் நேசிப்பதைத் தவிர வேறு வழியைக் காணமாட்டார். இதனால் அவர் இவ்வுலகில் நன்மைகளை விதைக்கிறார். அதன் பலனாக மறுமையில் அல்லாஹ்வின் நேசத்தையும், திருப் பொருத்தத்தையும், வெற்றியையும் அறுவடை செய்து கொள்கிறார்.