முஸ்லிம் தனது உறவினருடன் இணைந்திருப்பார்

    உறவினரோடு இணைந்திருக்கும் முஸ்லிமை உலகாதாயங்களோ, சொத்துகளோ, மனைவி, மக்களோ அந்த உறவினர்களுக்கு செலவிடுவதையும் உபகாரம் செய்து கண்ணியப்படுத்துவதையும் தடுத்துவிடக்கூடாது. அவர் இது விஷயத்தில் இஸ்லாமின் வழிகாட்டுதலை துணையாகக் கொள்வார். அந்த உறவுகளுக்கு உபகாரம் செய்வதில் முக்கியத்துவம் மற்றும் நெருக்கத்தை வைத்து வரிசைப் படுத்துவார். முதலில் தாய், பின்பு தந்தை, அடுத்து நெருக்கமான உறவினர்கள் என அந்த வரிசை நீண்டு செல்லும்.

     ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் மிக அழகிய முறையில் நடந்து கொள்ள மிகவும் தகுதி பெற்றவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உமது தாய், பின்பும் உமது தாய், பின்பும் உமது தாய், பிறகு உமது தந்தை, அதற்குப் பிறகு உமக்கு மிக நெருக்கமாக இருப்பவர், அடுத்து உமக்கு நெருக்கமாக இருப்பவர்.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

     ஒரு முஸ்லிம் தனது உறவினருக்கு உதவி செய்தால் இரட்டைக் கூலியைப் பெற்றுக் கொள்கிறார். உறவினருக்கு உதவியதின் நன்மையும், தர்மத்தின் நன்மையும் கிடைக்கிறது. அதனால் உறவினர்கள் தேவையுடையவர்களாக இருந்து பொருளாதார நெருக்கடிக்கு ஆளானால் அதிகமதிகம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இதனால் அல்லாஹ்விடம் அவர் நற்கூலியையும், உறவினர்களிடம் நேசத்தையும் பெற்றுக் கொள்கிறார். இதை நபி (ஸல்) அவர்கள் மிகவும் விரும்பி, வலியுறுத்தியுள்ளார்கள்.

     அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரழி) அவர்களின் மனைவி ஜைனப் (ரழி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ""பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். எனவே என் கணவரிடம், "நீங்கள் மிகக் குறைந்த செல்வம் உடையவர்களாக இருக்கிறீர். நபி(ஸல்) அவர்கள் எங்களை தர்மம் செய்யுமாறு ஏவினார்கள். நான் உங்களுக்கு தர்மம் செய்வது ஆகுமானதாக இருப்பின் அந்தத் தர்மத்தை உங்களுக்கே செய்துவிடுகிறேன். இல்லையென்றால் பிறருக்குக் கொடுத்து விடுகிறேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டு வாருங்கள்'' என்று கூறினேன். அதற்கு என் கணவர், "நீயே சென்று கேள்'' என்று கூறிவிட்டார்கள்.

     அப்போது நான் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றேன். என்னைப் போலவே இதே தேவையை முன்னிட்டு இன்னொரு அன்சாரிப் பெண்ணும் நபி (ஸல்) அவர்களின் வாசலில் காத்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் மீது எங்களுக்கு கண்ணியம் கலந்த பயம் இருந்தது.

    அந்நேரத்தில் எங்களுக்கு அருகில் பிலால் (ரழி) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் எங்களுக்காக நபி (ஸல்) அவர்களிடம் சென்று நீங்கள் இவ்வாறு கூறுங்கள்: "உங்களது வீட்டின் வாயிலில் நின்று கொண்டிருக்கும் இரண்டு பெண்கள் "கணவனுக்கும், தங்களது அரவணைப்பில் வாழும் அநாதைகளுக்கும் தர்மம் அளிப்பது அவர்களுக்கு நன்மையைப் பெற்றுத் தரப் போதுமானதா?' என்று கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் யார் என்று நீங்கள் கூறாதீர்கள்'' என்று கூறி அனுப்பினோம்.

     பிலால் (ரழி) ரஸூலுல்லாஹி(ஸல்) அவர்களிடம் வந்து இக்கேள்வியைக் கேட்டார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ""அவ்விருவரும் யார்?'' என்று கேட்க பிலால் (ரழி) அவர்கள் ""ஒருவர் அன்சாரிப் பெண், மற்றொருவர் ஜைனப்'' என்று கூறினார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் ""அவர் எந்த ஜைனப்?'' என்று கேட்டார்கள். ""அப்துல்லாஹ்வின் மனைவி ஜைனப்'' என்று பிலால் (ரழி) அவர்கள் பதில் கூறினார்கள். பின்பு ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் "அவ்விருவருக்கும் இரண்டு கூலிகள் இருக்கின்றன. ஒன்று உறவின் கூலி. மற்றொன்று தர்மத்தின் கூலி'' என்று கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஏழைகளுக்கு தர்மம் செய்வது தர்மமாக மட்டும் இருக்கும். ஆனால் உறவினருக்கு தர்மம் செய்வதில் இரண்டு நன்மை கிடைக்கும். ஒன்று தர்மத்தின் நன்மை. இரண்டாவது உறவினருக்கு உபகாரம் செய்த நன்மை.'' (ஸுனனுத் திர்மிதி)

     நபி (ஸல்) அவர்கள் சந்தர்ப்பம் கிட்டியபோதெல்லாம் நெருங்கிய உறவினருக்கு உபகாரம் செய்வதன் மாண்புகளை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள். "தானம் செய்தால் உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில், நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்...'' (அல்குர்அன் 3:92) என்ற திருவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, "தானம் செய்தால் உங்களுக்குப் பிரியமான பொருளிலிருந்து நீங்கள் செலவு செய்யாத வரையில், நிச்சயமாக நீங்கள் நன்மையடைய மாட்டீர்கள்...'' எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் "பைருஹா' என்னும் தோட்டமாகும். நான் அதை அல்லாஹ்விற்காக தர்மம் செய்து விடுகிறேன். அது எனக்கு அல்லாஹ்விடம் நன்மையாகவும் சேமிப்பாகவும் இருக்க வேண்டுமென விரும்புகிறேன். எனவே, "அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறி, நபி (ஸல்) அவர்கள் ""ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்றுவிட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் பொருத்தமாகக் கருதுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூ தல்ஹா (ரழி) ""அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!'' எனக் கூறிவிட்டு அத்தோட்டத்தை தமது நெருங்கிய உறவினர்களுக்கும், தமது தந்தையுடன் பிறந்தவரின் மக்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்துவிட்டார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் எத்தனையோ காலங்களுக்கு முன் ஏற்பட்ட உறவுகளை நினைவுபடுத்தி தற்காலத்திலும் அதற்குரிய மரியாதை செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் தற்காலத்திலும் மிஸ்ரு தேசத்தவரை நேசிக்குமாறு ஏவி, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""நீங்கள் விரைவில் மிஸ்ரை வெற்றி கொள்ளப் போகிறீர்கள். அப்படி வெற்றி கொண்டால் அம்மக்களிடம் அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில், அவர்களுக்கு நம்முடன் பாதுகாவலும் இரத்த பந்தமும் இருக்கிறது''. மற்றோர் அறிவிப்பில் ""பாதுகாவலும் திருமண உறவும் இருக்கிறது'' என்று கூறினார்கள்.  (ஸஹீஹ் முஸ்லிம்)

    அறிஞர்கள் இதன் விரிவுரையில் இரத்த பந்தம் என்று கூறியது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் "ஹாஜர்' மிஸ்ர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதனாலாகும். திருமண பந்தம் என்பது நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீமின் தாய் "மாரியா' (ரழி) அந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதைக் குறிப்பதாகும்.

    உறவைப் பேணுவதிலும் உபகாரம் புரிவதிலும் இஸ்லாமின் அணுகுமுறை எவ்வளவு உயர்ந்தது! காலங்கள் பல கடந்து தலைமுறைகள் பல உருவானாலும் இரத்த உறவையும் திருமண உறவையும் பேண வேண்டும் என்று எவ்வளவு அழகாக இஸ்லாம் வலியுறுத்துகிறது. இத்தகைய அழகிய மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம் தனது முழு முயற்சியையும் இரத்த பந்தத்தைப் பேணி அவர்களுக்கு உபகாரம் செய்வதற்கு செலவழிப்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

    முஸ்லிமல்லாத இரத்த பந்துக்களுடனும் இணக்கமாக இருப்பார்

    இஸ்லாம் மனித நேயத்தில் மேலோங்கி நிற்கிறது. இரத்த பந்துக்கள் முஸ்லிம்களாக இல்லையென்றாலும் அவர்களுடன் இணைந்திருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துகிறது.

     ஆம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது: ""இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என் நேசர்கள் அல்லர். என் நேசர்கள் யாரெனில், அல்லாஹ்வும் நல்ல இறை நம்பிக்கையாளர்களும்தான். ஆயினும் அக்குடும்பத்தாருடன் எனக்கு இரத்த பந்தம் உண்டு. அதை நான் உபகாரத்தால் பசுமையாக்குவேன்'' என நபி (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி பகிரங்கமாகவே கூறினார்கள். (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    நீர் உம்முடைய நெருங்கிய பந்துக்களுக்கும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்... (அல்குர்அன் 27:214) என்ற இந்த இறைவசனம் அருளப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் குறைஷிகளை அழைத்தார்கள். சிலரைக் குறிப்பிட்டும் சிலரைப் பொதுவாகவும் அழைத்துக் கூறினார்கள்: ""அப்து ஷம்ஸ் கிளையார்களே! கஅப் இப்னு லுவய்யி கிளையார்களே! உங்களை நரகிலிருந்து பாதுகாத் துக் கொள்ளுங்கள். முர்ரா இப்னு கஅபின் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்து முனாஃப் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஹாஷிம் கிளை யார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிப் கிளையார்களே! உங்களை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஓபாத்திமாவே! உன்னை நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள். நிச்சயமாக உனக்கு அல்லாஹ்விடமிருந்து நான் எதையும் செய்வதற்கு உரிமையற்றிருக்கிறேன். ஆனால் உங்களுக்கு (என்னுடன்) இரத்த பந்தம் என்ற உறவு இருக்கிறது. அதை நான் உபகாரத்தால் ஈரமாக்குவேன்'' என்றார்கள். (ஸஹீஹ்முஸ்லிம்)

     உறவினருடனான மனித நேயமானது முஸ்லிமின் இதயத்திலிருந்து எந்த நிலையிலும் நீங்கிவிடாது. உறவினர்கள் முஸ்லிம்களாக இல்லையெனினும் சரியே! நபி (ஸல்) அவர்களுடைய பொன்மொழிகள் இக்கருத்தையே வலியுறுத்துகின்றன.

     நபி (ஸல்) அவர்கள் இரத்த பந்தத்தை பூமியுடன் ஒப்பிட்டார்கள்.
    இந்த இரத்த பந்தம், "உபகாரம் செய்தல்' என்ற நீர் உற்றப்படும்போது அன்பு, தூய்மையெனும் கனியை அது தருகிறது, துண்டித்து வாழ்வதால் அது காய்ந்து கோபத்தையும் வெறுப்பையும் வளரச் செய்கிறது. உண்மை முஸ்லிம் பிறரை நேசிப்பவரும் மற்றவர்களால் நேசிக்கத் தகுந்தவருமாவார். அவரிடம் குடிகொண்டுள்ள நற்பண்புகளின் காரணமாக அனைத்து மக்களும் அவரை மிகவும் நேசிப்பார்கள். இதனால்தான் உமர் (ரழி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தங்களுக்குக் கொடுத்த ஆடையைத் தனது தாய் வழி சகோதரர் முஷ்ரிக்காக இருந்தும் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். (ஹீஹுல் புகாரி)

     இஸ்லாம் முஸ்லிமல்லாத பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறு கட்டளையிட்டதை முன்புள்ள பாடத்தில் படித்தோம். இங்கு முஸ்லிமல்லாத உறவினருக்கும் உபகாரம் செய்யக் கட்டளையிடுகிறது. இது இம்மார்க்கத்தின் மனிதநேய வெளிப்பாடாகும். ஆனால் இது இஸ்லாமைப் பொறுத்தவரை ஆச்சரியத்திற்குரியதல்ல. எனெனில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களிடம் கூறுகிறான்.

     (நபியே!) நாம் உம்மை உலகத்தார் யாவருக்கும் ஒர் ஆம்ளாகவே அனுப்பியிருக்கிறோம். (அல்குர்அன் 22:107)
    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன்னைப் பற்றிக் கூறினார்கள்: ""நான் அனுப்பப்பட்டதெல்லாம் நற்குணங்களைப் பரிபூரணப்படுத்தவே.'' (அல் முவத்தா)

     இரத்த பந்துக்களுடன் இணைந்து வாழ்வதன் விசாலமான பொருளை விளங்கிக்கொள்வார்

    பொருளை உறவினர்களுக்காக செலவு செய்வது மட்டும் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதாகாது. சேர்ந்து வாழ்வதற்கு பல வழிகள் உண்டு. உதாரணமாக உறவினர்களில் எழையாக இருப்பவர்களுக்கு பொருளைச் செலவு செய்வது, (இது அன்பையும் நேசத்தையும் அதிகரித்து உறவைப் பலப்படுத்தும்) அவர்களைச் சந்திக்கச் செல்வது, அவர்களுக்கு உபதேசம் செய்வது, உதவி, ஒத்தாசை புரிவது, விட்டுக் கொடுப்பது, அழகிய வார்த்தை பேசுவது, மலர்ந்த முகத்துடன் பார்ப்பது போன்றவையாகும்.

     மற்றும் இவைகள் அல்லாத பல நல்வழிகளின் மூலமாகவும் உறவினர்களுடன் சேர்ந்து வாழலாம். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் சுருக்கமாகக் கூறினார்கள்: ""ஸலாமைக் கொண்டாவது உங்களுடைய இரத்த பந்துக்களை ஈரமாக (பசுமையாக) வைத்திருங்கள்.'' (இந்த ஹதீஸை இமாம் பஸ்ஸார் அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலமாக பல வழிகளில் அறிவித்துள்ளார்கள். அவைகளில் ஒன்று மற்றொன்றை உறுதிப்படுத்துகிறது. (முஸ்னத் பஸ்ஸார்)

    உறவைப் பேணுவார்
    உண்மை முஸ்லிம் தமது இரத்த பந்துக்கள் தன்னுடைய உறவைப் பேணாமல் விலகிச் சென்றாலும் அவர்களுடன் உறவைப் பேணவேண்டும். உறவைப் பேணுவதின் மூலம் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும், மேன்மைக்குரிய இஸ்லாமியப் பண்புகளையும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் முஸ்லிம், தன்னைப் போன்றே அவர்களும் உறவைப் பேணுபவர்களாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கக் கூடாது. இஸ்லாமின் மனிதநேயப் பண்புகளை வெளிக்காட்டும் விதமாக அந்த முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் இரத்த பந்துக்கள் மற்றும் ஏனைய உறவினர்களின் உறவைப் பேணி நடப்பார்.

     நபி (ஸல்) அவர்கள் இக்கருத்தை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள். ""பதிலுக்குப் பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக, உறவினர்கள் உறவை துண்டித்து வாழ்ந்தாலும் அவர்களுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் அவார்.'' (ஹீஹுல் புகாரி)

     தீமையையும், வன்நெஞ்சத்தையும் கொண்டு உறவுகளைத் துண்டித்து வாழும் இரத்த பந்துக்களுடன் மேன்மையையும், மன்னிப்பையும், பொறுமையையும், நிதானத்தையும் வெளிப்படுத்தி இணைந்திருப்பவர்களை நபி (ஸல்) அவர்கள் மிகவும் புகழ்ந்தார்கள். இரத்த பந்துக்கள் இணைந்து வாழ மறுத்தாலும் அவர்களைச் சேர்ந்து வாழ்பவர்களுடன்தான் அல்லாஹ் இருக்கிறான் என்பதை உறுதிப்படுத்தினார்கள். இரத்த பந்தத்தைத் துண்டித்து நன்மையை மறக்கும் கல்நெஞ்சக்காரர்கள் எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்தவர்கள் என்பதையும் நபி (ஸல்) அவர்கள் சித்தரித்துக் காட்டினார்கள்.

    ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்: ""அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். நான் அவர்களுடன் இணைந்திருக்கின்றேன். அவர்கள் என்னைத் துண்டித்து வாழ்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன், அவர்கள் எனக்கு தீங்கிழைக்கின்றனர். அவர்களுடன் அறிவார்ந்த முறையில் நடந்து கொள்கிறேன், அவர்கள் என்னுடன் மூடத்தனமாக நடந்து கொள்கின்றனர்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) கூறினார்கள்: ""நீ சொல்வது போலவே நீ நடந்து கொண்டிருந்தால் அவர்களைச் சுடும் சாம்பலை சாப்பிட வைத்தவனாவாய். நீர் அதே நிலையில் இருக்கும் காலமெல்லாம் அவர்களுக்கு எதிராக அல்லாஹ்வின் உதவி உமக்கு நீங்காதிருக்கும்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

     கவனித்துப் பாருங்கள்! உறவுகளைத் துண்டித்து வாழும் கல்நெஞ்சக்காரர்களுடன் பொறுமையை மேற்கொண்டு, இணக்கமாக இருப்பவருக்கு அவர்களுக்கு எதிராக அல்லாஹ் உதவி செய்கிறான். அவர்களால் எற்படும் துன்பங்களைச் சகித்துக்கொள்ளும் ஆற்றலையும் வழங்குகிறான். அந்த மனிதநேயமிக்க உயர்வான பண்புகளில் அவரை ஸ்திரப்படுத்துகிறான். நபி (ஸல்) அவர்கள் பாவத்தில் மூழ்கிய அந்த வன்நெஞ்சக்காரர்களைச் சுடும் சாம்பலைத் தின்பவர்களுடன் ஒப்பிட்டுக் கூறியது எவ்வளவு அற்புதமான உவமானம்?

     உண்மை முஸ்லிம் எல்லா நிலையிலும் தனது உறவினர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும். இந்த இணக்கத்தின் மூலம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். உறவினரிடமிருந்து அவ்வப்போது நிகழும் தவறுகள், மூடத்தனங்களை பொருட்படுத்தாதிருக்க வேண்டும். அவர்களிடம் எற்படும் அலட்சியம் மற்றும் சிறு குறைகளைப் புறக்கணித்துவிட வேண்டும்.

    எனெனில், ""இரத்த பந்தம் என்பது அர்ஷுடன் இணைத்துக் கட்டப்பட்டதாயிருக்கும். "எவர் என்னைச் சேர்த்துக் கொள்கிறாரோ அல்லாஹ் அவரைச் சேர்த்துக் கொள்கிறான். எவர் என்னைத் துண்டிக்கிறாரோ அல்லாஹ் அவரைத் துண்டித்து விடுகிறான்' என்று அது கூறுகிறது'' (ஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றைச் செவியுறும் உண்மை முஸ்லிம் உறவினர்களின் இதுபோன்ற மூடத்தனமான, அற்பத்தனமான செயல்களைப் பொருட்படுத்தாமல் அவர்களுடன் நேசமாக நடந்து கொள்ள வேண்டும்.