முஸ்லிம் தனது பிள்ளைகளுடன்

குழந்தைகள் மனிதனுக்கு கண்குளிர்ச்சியாவார்கள். அவர்களால் தான் மனித வாழ்வு இனிமை பெறுகிறது. அல்லாஹ்வுக்குப் பின் அவர்கள் மீதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்படுகிறது. அவர்கள் மீது இறங்கும் அல்லாஹ்வின் அருள் பெற்றோருக்கும் கிடைக்கிறது. பிள்ளைகளால் அல்லாஹ் உணவில் பரக்கத் செய்கிறான்.

    மேற்கூறிய அனத்தும் சிறந்த முறையிலான குழந்தை வளர்ப்பின் மூலமே சாத்தியமாகும். அழகிய முறையில் அவர்களை வளர்க்கும்போது அவர்களது இதயங்களில் நற்சிந்தனைகள் பிரகாசிக்கின்றன. உள்ளங்கள் நற்பண்புகளின் ஊற்றாகத் திகழ்கின்றன. அவர்கள் நற்பாக்கியத்தின் பிறப்பிடமாக அமைவார்கள். இவ்வாறான தன்மைகளைக் கொண்ட குழந்தைகள்தாம் உண்மையில் மனித வாழ்வின் அலங்காரமாகத் திகழ முடியும்.

    அல்லாஹ் அவர்களைப் பற்றி தனது திருமறையில் வர்ணிக்கிறான்:
    பொருளும் மக்களும் ஆவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே. (அல்குர்அன் 18:46)

    இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் தனது பிரியத்திற்குரியவருக்கு பின்வருமாறு துஆ செய்தார்கள்:
    அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களும் அவர்களது தாயும், தாயின் சகோதரியும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கு தொழ வைத்தபின் எல்லா நலவுகளையும் வேண்டி அவர்களுக்காக பிரார்த்தனை செய்தார்கள். அனஸ் (ரழி) அவர்களின் தாயார் கூறினார்கள்: "இறைத்தூதரே! உங்களது குட்டி பணியாளருக்காக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்.'' நபி (ஸல்) அவர்கள் அனஸ் (ரழி) அவர்களுக்காக எல்லா நலவுகளையும் வேண்டி துஆச் செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையின் இறுதியில் "யா அல்லாஹ்! அவருடைய செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்கி அவருக்கு பரக்கத் செய்வாயாக!'' என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி)

    பெற்றோர், குழந்தை வளர்ப்பிலும் அவர்களைச் சிறந்த முறையில் கண்காணித்து கவனம் செலுத்துவதிலும் அசட்டையாக இருந்தால் அக்குழந்தைகள் சோதனையாக, கவலையாக உருவெடுத்து விடுவார்கள். அதற்குப் பின் அந்தப் பெற்றோருக்கு தூக்கமற்ற இரவுகளும் துன்பமான பகல்களும்தான் பரிசாகக் கிடைக்கும்.

    மகத்தான கடமைகளை அறிவார்
    அருள்மறை குர்ஆனின் கம்பீரமான எச்சரிக்கைக் குரலை செவியேற்கும் முஸ்லிம், குழந்தை வளர்ப்பு எனும் மகத்தான பொறுப்பை அறிந்து கொள்வார்.
    விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை மனிதர்களும் கற்களுமாகும். (அல்குர்அன் 66:6)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு ஈட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவரின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவாள். அடிமை தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவான். அறிந்து கொள்ளுங்கள்! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளிகளே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள்.'' ஸஹீஹுல் புகாரி, ஸஹ்ீஹ் முஸ்லிம்)

    இஸ்லாம், இந்த முழுமையான பொறுப்பை உலகில் வாழும் அனைவரின் கழுத்திலும் பிணைத்துள்ளது. அதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. இஸ்லாம் கற்றுக் கொடுத்த முறையில் குழந்தைகளை வளர்ப்பதும், அதன் அழகிய நற்பண்புகளை அவர்களிடம் உருவாக்குவதும் பெற்றோர்களின் பொறுப்பாகும். நற்பண்புகளைப் பூரணமாக்கி, மக்களிடையே அதை உறுதிப்படுத்தவே ரஸுலுல்லாஹ்ி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நான் நற்பண்புகளை பரிபூரணப்படுத்தவே அனுப்பப்பட்டேன்.'' (முவத்தா மாலிக்)

    பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளை அல்லாஹ், அவனது ரஸுல் (ஸல்) அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் நபிமொழி மிகப்பெரிய ஒர் ஆதாரம் என அறிஞர்கள் பலர் உறுதி செய்துள்ளனர்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும்போது அவர்களை தொழுகைக்கு ஏவுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள்''..... (ஸன்னன் அபூதாவூத்)

    ஒருவர் இந்த ஹதீஸை செவியேற்ற பின்னரும் தனது குழந்தைகளுக்கு ஏழு வயதாகியும் அவர்களைத் தொழுகைக்கு ஏவவில்லையானால், பத்து வயதாகியும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடிக்கவில்லையானால் அவரது இல்லம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய, குறைபாடுகளுடைய இல்லமாகும். இதற்காக பெற்றோர் இருவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்பார்கள்.

    சிறந்த இல்லம் ஒரு நற்பண்புள்ள தாயின் மடியைப் போன்றதாகும். அதில்தான் பிள்ளைகள் வளரத் துவங்குகிறார்கள். அது குழந்தைகள் நற்பண்புகளுடன் மலர்வதற்கான முதல் கட்டமாகும். அவர்களது ஆசைகளும், ஆர்வங்களும், பண்புகளும் உருப்பெறும் மையமாகும். எனவே இக்காலகட்டத்தில் அப்பிஞ்சு இதயங்களைப் பண்படுத்துவதில் பெற்றோரின் பங்கு மகத்தானது. அவர்களது உடல் அரோக்கியத்தைப் பேணுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல், அறிவு, ஆன்மா என அனைத்தும் பூரணத்துவம் பெற்றுத் திகழ பெற்றோர்கள் பாடுபட வேண்டும்.

    விவேகமான வழிமுறைகளைக் கையாள்வார்
    குழந்தையின் தாயும் தந்தையும் அதன் இயல்புகளை அறிந்து கொள்ள வேண்டும். அதன் தூய்மையான, மென்மையான உள்ளத்தினுள் ஊடுருவிச் சென்று அக்குழந்தையின்பால் நேசத்தை வெளிப்படுத்த வேண்டும். அந்த அணுகுமுறையில் மிக நுட்பமான வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

    முஸ்லிம் தனது குழந்தைகளிடம் பல வழிகளிலும் அன்பைத் தேடவேண்டும். அவர்களிடம் நெருங்கிப் பழகவேண்டும். அவர்களது வயது, அறிவிற்கேற்ப அவர்களுடன் விளையாடி, சிரிப்பூட்டி அவர்களை இன்புறச் செய்து அக்குழந்தைகளின் இதயங்களுக்கு மகிழ்வான அன்பான வார்த்தைகளைக் கூறவேண்டும். நேசம் மற்றும், மரியாதையின் காரணமாக கட்டுப்படுவதற்கும், மிரட்டல், நெருக்கடி, நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் கட்டுப்படுவதற்குமிடையே மிகுந்த வேறுபாடுண்டு. முந்தியது நிரந்தரமான அடிபணிதல். இரண்டாவது கண்டிப்பும் மிரட்டலும் இல்லாதபோது நீங்கிவிடும் தன்மை உடைய தற்காலிக அடிபணிதலாகும்.

    சிலர், பெற்றோர் பிள்ளைகளுடன் எளிமையான முறையில் கலந்துறவாடினால் அது தங்களின் ஸ்தானத்துக்கே பெரும் இழுக்காகிவிடும் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பார்கள். இது முற்றிலும் தவறானதாகும். பிள்ளைகளுடன் நற்பண்பு மிக்க அழகிய நடத்தையை மேற்கொள்வது, அறிவார்ந்த பெற்றோரின் வெற்றிகரமான வழிமுறை எனத் தற்கால குழந்தை வளர்ப்புத் திட்டங்களும் எற்றுக் கொள்கின்றன. இதை நபி (ஸல்) அவர்கள் பதினைந்து நூற்றாண்டுகளுக்கு முன்பே தனது சொல்லாலும் செயலாலும் வலியுறுத்தியுள்ளார்கள்.

    நபி (ஸல்) அவர்கள், அப்பாஸ் (ரழி) அவர்களின் பிள்ளைகளான அப்துல்லாஹ், உபைதுல்லாஹ், குஸய்யிர் (ரழி) ஆகிய மூவரையும் அணிவகுக்கச் செய்து "எவர் என்னிடம் முந்தி வருகிறாரோ அவருக்கு இன்னின்ன கிடைக்கும்'' என்று கூறுவார்கள். சிறுவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒடி வந்து அவர்களது முதுகிலும் நெஞ்சிலும் விழுவார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அச்சிறுவர்களை முத்தமிடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

    இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தனது "அல் அதபுல் முஃப்ரத்' என்ற நூலிலும் இமாம் தப்ரானி (ரஹ்) தனது "முஃஜம்' என்ற நூலிலும் அபூஹுரைரா (ரழி) அவர்களின் வாயிலாக அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸைன் (ரழி) அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களது பாதங்களை தனது பாதத்தின் மீது வைத்து பிறகு "நீ மேலே ஏறு'' என்று கூறினார்கள்.

    மகத்தான போதனையாளரான நபி (ஸல்) அவர்கள் ஹஸன் ஹுஸைன் (ரழி) அவர்களைச் சுமப்பதிலும் பாசத்தைப் பொழிவதிலும் நேசிப்பதிலும் காட்டிய நடைமுறைகள், பெற்றோர்களுக்கும் பாட்டனார்களுக்கும் எல்லாக் காலத்திற்குமான அழகிய முன்மாதிரியாக அமைந்துள்ளது. அந்த மென்மையான இளம் நாற்றுகளுடன் நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும். தாங்கள் எவ்வளவு பெரிய அந்தஸ்துடனும் மதிப்புடனும் இருந்தாலும் அது சிறுவர் சிறுமியரிடம் நேசத்தை வெளிப்படுத்துவதற்கு தடையாகி விடக்கூடாது என்ற விஷயம் பின்வரும் ஹதீஸிலிருந்து மிகத் தெளிவாகத் தெரிகிறது:

    ஷத்தாத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் அல்லது ஹுஸனைச் சுமந்தவாறு வந்தார்கள். முன்னால் வந்து நின்று கீழே உறக்கிவிட்டு பின்பு தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள். தொழுகையில் நீண்ட நேரம் ஸஜ்தாவில் இருந்தார்கள். சந்தேகத்தில் நான் தலையை உயர்த்திப் பார்த்தபோது சிறுவர் நபி (ஸல்) அவர்களின் முதுகில் இருந்தார். உடன் நான் ஸஜ்தாவுக்குத் திரும்பி விட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவு செய்தபோது நபி (ஸல்) அவர்களிடம் தோழர்கள் வினவினர். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நீண்ட ஸஜ்தா செய்தீர்களே (காரணமென்ன?)'' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எனது மகன் என் மீது சவாரி செய்து கொண்டிருந்தார். அவர் தனது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்குள் நான் அவசரப்பட விரும்பவில்லை.''(ஸன்னனுன் நஸயீ)

    முஸ்லிம் தங்களது பிள்ளைகளுடன் இம்மாதிரி நடந்து கொள்வது அவசியமாகும். அவர்களுடன் கலந்துறவாடி அன்பை வெளிப்படுத்த வேண்டும். வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் அப்பிஞ்சு இதயங்களில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டவேண்டும்.

    அன்பை உணரச் செய்வார்
    பெற்றோரின் தலையாயக் கடமைகளில், அவர்கள் பிள்ளைகளிடம் தங்களது அன்பையும் நேசத்தையும் உணரச் செய்வதும் ஒன்றாகும். அப்போதுதான் பிள்ளைகள் மன ஆரோக்கியத்துடன் வளர்வார்கள். அவர்களது உள்ளங்களில் உறுதியும் தெளிவும் நிறைந்திருக்கும். கருணை இஸ்லாமின் அடிப்படைப் பண்பாகும். அது நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட மிகச் சிறந்த பண்பாக இருந்தது. அவர்களது நடைமுறைகள் அனைத்திலும் கருணை வெளிப்பட்டது.

    அனஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "நபி (ஸல்) அவர்களை விட குடும்பத்தாரிடம் கருணை கொண்ட எவரையும் நான் கண்டதில்லை.'' மேலும் கூறினார்கள்: "மதீனாவின் மேடான பகுதியிலிருந்த ஒரு வீட்டில் நபி (ஸல்) அவர்களின் மகனார் இப்ராஹீம் (ரழி) அவர்களுக்கு பாலூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்) அவர்கள் அங்கு சென்று வருவார்கள், நாங்களும் டனிருப்போம். வீட்டினுள் நுழைந்து அவரைத் தூக்கி முத்தமிடுவார்கள். பின்பு திரும்பி வருவார்கள்.'' (ஸஹீீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் சிறு குழந்தைகள் மீது மட்டும் அன்புடன் இருக்கவில்லை. மாறாக, விளையாடிக் கொண்டிருக்கும் இளம் சிறார்களைக் காணும்போது அவர்களிடமும் பாசத்தையும் வெளிப்படுத்துபவர்களாக இருந்தார்கள்.

    அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி (ஸல்) அவர்கள் சிறுவர்களைக் கண்டால் அன்பை வெளிப்படுத்தி அவர்களுக்கு ஸலாம் கூறுவார்கள்.'' ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்களது பொன்மொழிகளில் ஒன்று: "நம்முடைய சிறுவர்கள் மீது அன்பு செலுத்தாதவரும் பெரியவர்களின் கடமைகளை அறியாதவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.'' (முஸ்னத் அஹ்மத்)

    அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரழி) அவர்களை முத்தமிட்டார்கள். அப்போது அக்ரஃ இப்னு ஹ்ாபிஸ் (ரழி) அவர்கள் "எனக்கு 10 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் எருவரையும் நான் முத்தமிட்டதில்லை'' என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ""கருணை காட்டாதவர் கருணை காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் எப்போதும் மனிதர்களின் இதயங்களில் அன்பையும் கருணையையும் வளர்த்து வந்தார்கள். அதுவே மனிதத் தன்மைகளில் மிக விசேஷமான தன்மை என்பதை வலியுறுத்தினார்கள்.

    ஒரு நாள் கிராமவாசி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "நீங்கள் உங்கள் குழந்தைகளை முத்தமிடுகிறீர்களா? நாங்கள் முத்தமிடுவதில்லை'' ஊஎறு கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பை நீக்கியிருப்பதற்கு நான் பொறுப்பாளியா?'' என்று கூறினார்கள். ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஃபாத்திமா (ரழி) வந்தால் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று வரவேற்று முத்தமிடுவார்கள். அவரைத் தங்களது இருக்கையில் அமரச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரழி) அவர்களிடம் சென்றால் அவர்கள் எழுந்து நபி (ஸல்) அவர்களை மகிழ்வுடன் வரவேற்று கரத்தைப் பிடித்து முத்தமிடுவார்கள். இன்னும் தங்கள் இக்கையில் அமரச் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் மரணமடைவதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஃபாத்திமா (ரழி) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவர்களை வரவேற்று முத்தமிட்டார்கள். ஸஹீஹுல் புகாரி)

    உண்மை முஸ்லிம் இந்த உயரிய வழிகாட்டுதலைப் புறக்கணித்துவிட முடியாது. தங்களது இதயங்கள் பசுமையற்று வறண்டதாக, கடின சித்தம் உடையதாக இருந்தாலும் சிறுவர்களுடன் பழகும்போது வன்மையாக நடந்து கொள்ளக்கூடாது. ஏனெனில், இம்மார்க்கம் பிரகாசமான நேர்வழியைக் காட்டித் தருகிறது; இதயத்தை மென்மைப்படுத்துகிறது; அன்பின் ஊற்றுகளைப் பீறிடச் செய்கிறது.