சிறந்த கணவர்

    இந்த ஆதாரங்கள், மனைவியிடம் நீதமாக அழகிய நடத்தையைக் கொண்டிருக்க வேண்டுமென வலியுறுத்துவதை முஸ்லிம் அறிந்திருப்பார். எனவே நிச்சயமாக அவர் சிறந்த கணவராகத் திகழ்வார். காலமும் வயதும் எவ்வளவு நீண்டாலும் அவரின் மிருதுவான குடும்ப வாழ்க்கையில் இன்புற்று அவரின் உன்னதமான உயர்ந்த தோழமையில் வாழ்வதை அவரது மனைவி பாக்கியமாகக் கருதுவாள். அவர் வீட்டினுள் நுழைந்தால் தனது மனைவி, மக்களை முகமலர்ச்சியுடன் அணுகுவார். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார். அல்லாஹ் ஏவிய பிரகாரம் மகத்துவமிக்க அழகிய முகமனைக் கூறியபடி அவர்களை எதிர்கொள்வார். அது இஸ்லாமுக்கே உரிய தனித்துவமிக்க முகமனாகும்.

    ..... ஆனால் நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வால் உங்களுக்கு கற்பிக்கப்பட்ட, மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான (ஸலாமுன் என்னும்) வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக்கொள்ளவும். இவ்வாறே அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக! (அல்குர்அன் 24:61)

    இந்த முகமனை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள். அனஸ் (ரழி) அவர்களிடம் கூறினார்கள். "எனதருமை மகனே நீ உனது குடும்பத்தாரிடம் சென்றால் ஸலாம் கூறிக்கொள். அது உனக்கும் உனது குடும்பத்தாருக்கும் அருளாகும்.'' ((ஸுனனுத் திர்மிதி)

    ஒரு மனிதர் தனது குடும்பத்தாரை ஸலாம் கூறி சந்திப்பது எவ்வளவு பரக்கத் பொருந்திய காரியம்! அவர்களது வாழ்வை மகிழ்ச்சியும் குதூகலமும் நிம்மதியும் உரியதாக ஆக்கி இல்லத்தில் அன்பையும் அருளையும் திருப்தியையும் எற்படுத்துவார். தனது மனைவிக்கு ஏதேனும் ஒரு தேவை ஏற்பட்டால் உதவிக்கரம் நீட்டுவார். வேலை பளுவின் காரணமாக அவளுக்கு களைப்பு, சடைவு, சஞ்சலம் எற்பட்டால் மென்மையாகப் பேசி அவளுக்கு ஆறுதலும் ஆனந்தமும் அளிப்பார்.

    தன் மனைவியின் உள்ளத்தில் "தான் ஒரு சங்கைமிக்க உயர்ந்த குணமுடைய, கண்ணியமும் வலிமையும் கொண்ட கணவரின் நிழலில் இருக்கிறோம்' என்ற உணர்வை ஏற்படுத்துவார். அவளைப் பாதுகாத்து, பராமரித்து அவளது காரியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பார். தனது சக்திக்கு ஏற்ப அவளது முறையான தேவைகளை நிறைவேற்றித் தருவார். நேரிய மார்க்கம் அனுமதியளித்த பிரகாரம் தன்னை அழகுபடுத்திக் கொண்டு அவளது பெண்மையை திருப்திப்படுத்துவார். தனது தேவைகள், அல்லது நண்பர்கள் அல்லது சொந்த வேலைகள் அல்லது படிப்புகள் என்று தன்னை ஈடுபடுத்திக்கொண்டு நேரமனைத்தையும் செலவிட்டுவிடாமல் அவளது தேவைக்கெனவும் நேரங்களை ஒதுக்குவார்.

    கணவனின் மூலம் சுகமனுபவித்துக்கொள்ளும் விஷயத்தில் மனைவியின் உரிமைக்கு இஸ்லாம் பொறுப்பேற்றுள்ளது. எனவேதான் அவர் தனது அனத்து நேரங்களையும் தொழுகை, நோன்பு, திக்ரு போன்ற வணக்க வழிபாடுகளில் செலவிடுவதைகூட இஸ்லாம் அனுமதிக்கவில்லை. ஏனெனில் இது இம்மகத்தான மார்க்கம் நிர்ணயித்துள்ள சமத்துவ அடிப்படைக்கு எதிராகும். இக்கருத்தை அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் அஸ் (ரழி) அவர்கள் அறிவித்த நபிமொழியில் காணுகிறோம்.

    அப்துல்லாஹ் (ரழி) அவர்களின் அளவுக்கதிகமான வணக்கங்களைப் பற்றி அறிந்த நபி (ஸல்) அவர்கள் "நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேனே?'' என்று கேட்டார்கள். அவர் "ஆம்! இறைத்தூதரே!'' என்றார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள். நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள், தூங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களை சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்த வேண்டிய கடமைகள் உள்ளன'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி,  ஸஹீஹ் முஸ்லிம்)

    உஸ்மான் இப்னு மள்வூன் (ரழி) அவர்களின் மனைவி கவ்லா பின்த் ஹகீம் (ரழி), நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் அழுக்கடைந்த ஆடையுடன், அலங்கோல நிலையில் வந்தார். அன்னையர்கள் "உனக்கு என்ன நேர்ந்தது? (ஏன் இந்தக் கோலத்தில் இருக்கிறாய்)'' என்று கேட்டார்கள். கவ்லா (ரழி) அவர்கள் தனது கணவரைப் பற்றி "இரவு நேரங்களில் நின்று வணங்குகிறார். பகல் காலங்களில் நோன்பு வைக்கிறார்'' என்று கூறினார். அன்னையர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இதுபற்றிக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரழி) அவர்களைக் கண்டித்தவர்களாக "என்னிடத்தில் உமக்கு முன்மாதிரி இல்லையா?'' என்றார்கள். அவர் "ஆம்! இருக்கிறது! அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னை உங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்'' என்றார்கள். அதற்குப் பிறகு கவ்லா (ரழி) மணம் பூசி அலங்காரமாக வந்தார்கள்.

    மற்றோர் அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் "உஸ்மானே! நமக்கு துறவறம் விதிக்கப்படவில்லை, என்னிடம் உமக்கு முன்மாதிரி கிட்டவில்லையா? அல்லாஹ் மீது அணையாக! நான் உங்களைவிட அதிகமாக அல்லாஹ்வை அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் கட்டளைகளை உங்களைவிட அதிகம் பேணுகிறேன்'' என்று கூறினார்கள். (தபகாத் இப்னு ஸஅத்)

   ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் தங்களது அழகிய வழிமுறையை தோழர்களுக்கு கற்றுக்கொடுத்து குடும்ப வாழ்க்கையிலும் வணக்க வழிபாட்டிலும் எவ்வாறு நடுநிலையுடன் நடக்கவேண்டும் என்று வழிகாட்டினார்கள். ஆகவேதான் மார்க்கத்தில் நடுநிலையை கையாளும் குணம் நபித்தோழர்களின் இயற்கை பண்பாகவே மாறிவிட்டது. அவர்களில் ஒருவர் இதற்கு மாறுசெய்யும்போது மற்றவர் அதைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுவார்கள்.

    அபூ ஜுஹைஃபா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "நபி (ஸல்) அவர்கள் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) அவர்களுக்கும் அபூதர்தா (ரழி) அவர்களுக்குமிடையே சகோதரத்துவத்தை ஏற்படுத்தி இருந்தார்கள். அபூதர்தா (ரழி) அவர்களை சந்திக்க ஸல்மான் (ரழி) சென்றிருந்தார்கள். அங்கு அவர்களது மனைவி அலங்காரமற்றவராக இருந்தார். ஸல்மான் (ரழி) "உனக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். அவர் "உமது சகோதரர் அபூதர்தாவுக்கு இவ்வுலகில் எதுவும் தேவையில்லை'' என்றார்.

    அபூதர்தா (ரழி) வந்தவுடன் ஸல்மான் (ரழி) அவர்களுக்கு உணவு தயார் செய்து "நீங்கள் சாப்பிடுங்கள், நான் நோன்பு நோற்றிருக்கிறேன்'' என்றார். ஸல்மான் (ரழி) அவர்கள் "நீர் சாப்பிடாதவரை நானும் சாப்பிடமாட்டேன்'' என்று மறுத்துவிட்டார். பின்னர் அபூதர்தா (ரழி) அவர்களும் சேர்ந்து சாப்பிட்டார். இரவானபோது அபூதர்தா (ரழி) நின்று வணங்க ஆயத்தமானார். ஸல்மான் (ரழி) "தூங்குங்கள்'' என்று கூறியவுடன் தூங்கினார். பின்பும் அபூதர்தா (ரழி) தொழ முயன்றபோது "தூங்குங்கள்'' என ஸல்மான் (ரழி) கூறினார்கள்.

    இரவின் கடைசிப் பகுதியானதும் ஸல்மான் (ரழி) அவர்கள் "இப்போது எழுந்திருங்கள்'' என்று கூறி இருவரும் தொழுதார்கள். அபூதர்தா (ரழி) அவர்களிடம் "உமது இறைவனுக்கு உம்மீது கடமை உண்டு. உமது ஆன்மாவுக்கு உம்மீது கடமை உண்டு. உமது குடும்பத்தாருக்கு உம்மீது கடமை உண்டு. ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய கடமையை நிறைவேற்றுங்கள்'' என்று ஸல்மான் (ரழி) கூறினார்கள். ஸல்மான் (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் "ஸல்மான் உண்மையே உரைத்தார்'' என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி)

    அறிவும் இறையச்சமும் நன்னடத்தையும் கொண்ட முஸ்லிம் தனது மனைவியுடனான இல்லறத்தின் பசுமைகள் வாடிட அனுமதிக்கக் கூடாது. இன்பமூட்டும் விளையாட்டினாலும் ஆனந்தமூட்டும் வார்த்தைகளாலும் தனது மனைவிக்கு அவ்வப்போது மகிழ்ச்சியூட்டி, தங்கள் இருவரிடையே உள்ள உறவை செழிப்பாக்குவார். இதுவிஷயத்தில் நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். மார்க்கத்தை நிலை நிறுத்துவது, முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்குவது, அறப்போருக்காக ராணுவத்தை தயார்படுத்துவது, இன்னும் இதுபோன்ற எத்தனையோ பல முக்கியமான பொறுப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தும் இப்பொறுப்புகள் எல்லாம் அவர்களை ஒரு முன்மாதிரியான கணவராக, தனது மனைவிகளுடன் அழகிய பண்புகளுடனும் பரந்த மனத்துடனும் பழகி, அவர்களுடன் கொஞ்சி விளையாடுவதிலிருந்து அவர்களை தடுக்கவில்லை.

    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தெரிவிப்பதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்காக ஹரீர் என்ற உணவை சமைத்தேன். நான் ஸவ்தா (ரழி) அவர்களிடம் "சாப்பிடுங்கள்!'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் எனக்கும் ஸவ்தா (ரழி) அவர்களுக்கும் மத்தியில் அமர்ந்திருந்தார்கள். ஆனால் ஸவ்தா (ரழி) மறுத்துவிட்டார். ""கண்டிப்பாக அதை சாப்பிட்டே ஆகவேண்டும் அல்லது அதை உங்களது முகத்தில் பூசிவிடுவேன்'' என்று கூறினேன். அப்போதும் அவர் மறுத்துவிட்டார். நான் ஹரீராவில் எனது கையை வைத்து அவரது முகத்தில் பூசிவிட்டேன். இதைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் சிரித்தவர்களாக ஹரீராவில் ஸவ்தாவிற்காக தனது கரத்தை வைத்து ஸவ்தாவிடம் "ஆயிஷாவின் முகத்தில் நீ இதை பூசிவிடு'' என்று கூறினார்கள். (அல் ஹைஸமி)

    மனைவியின் இதயத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அழகிய நடத்தையுடன் இனிமைதரும் விதமாக செயல்பட்டதிலிருந்து அவர்களது விசாலமான உள்ளத்தையும் பரந்த மனப்பான்மையையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

    அன்னை அயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் ஒரு பிரயாணத்தில் நபி (ஸல்) அவர்களோடு இருந்தார்கள். இருவரும் ஒட்டப்பந்தயம் வைத்தபோது ஆயிஷா (ரழி) அவர்கள் முந்திவிட்டார்கள். கொஞ்சம் சதைபோட்ட பிறகு இருவரும் ஒடினார்கள். அப்போது நபி (ஸல்) முந்திவிட்டார்கள். "இது அந்தப் பந்தயத்திற்கு பதிலாகிவிட்டது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஸன்னன் அபூ தாவுத், முஸ்னத் அஹ்மத்)

    தனது நேசமிகு இளம் மனைவியின் இதயம் மகிழ்ச்சி அடையவேண்டும் என்பதற்காக அவர்களை அனுமதிக்கப்பட்ட விளையாட்டுகளைக் காண்பித்து அதை அவர்கள் பார்த்து ரசித்ததைக் கண்டு நபி (ஸல்) அவர்களும் மகிழ்ந்தார்கள்.

    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தபோது சிறுவர்கள், பெரியவர்களின் ஆரவாரத்தை செவியுற்றார்கள். அங்கு சில ஹபஷிகள் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் அவர்களை சூழ்ந்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே! இங்குவந்து பார்'' என்றார்கள். எனது கன்னங்களை அவர்களது தோளின் மீது வைத்துக்கொண்டு, நான் அவர்களது புஜத்துக்கும் தலைக்கும் மத்தியிலிருந்து பார்த்தேன். நபி (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே உனக்கு திருப்தியா? ஆயிஷாவே உனக்கு திருப்தியா?'' என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். என்மீது அவர்களுக்கு இருந்த நேசத்தை அறிந்துகொள்வதற்காக நான் "இல்லை'' என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களைப் பார்த்தேன், தங்களது இருபாதங்களையும் (வலியின் காரணமாக) மாற்றி மாற்றி வைத்துக்கொண்டிருந்தார்கள். (ஸன்னனுன் நஸயீ)

    மற்றோர் அறிவிப்பில், அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் நபி (ஸல்) அவர்களை என்னுடைய அறையின் வாசலில் நிற்கக் கண்டேன். ஹபஷிகள் சிலர் மஸ்ஜிதில் ஈட்டியைக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களின் காதுக்கும் தோளுக்கிடையிலிருந்து அந்த விளையாட்டைக் காண்பதற்காக நபி (ஸல்) அவர்கள் என்னை தனது மேலாடையால் மறைத்துக் கொண்டார்கள். நானாக திரும்பிச் செல்லும்வரை எனக்காக நபி (ஸல்) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுப் பாருங்கள்!'' (ஸஹீஹுல் புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியரிடம் கொண்டிருந்த நல்லுறவு, நகைச்சுவை போன்ற பண்புகளைக் காணும் உண்மை முஸ்லிம், தனது மனைவியுடன் நல்லவராகவும் அவளுக்கு உறுதுணையாகவும் அவளுடன் அன்பான குணமுடையவராகவும் மிருதுவானவராகவும் நடந்துகொள்வார்.

    உண்மை முஸ்லிம் அற்பமான காரணங்களுக்கெல்லாம் கோப நெருப்பை வெளிப்படுத்தும் மூடக்கணவர்களைப் போன்று நடந்து கொள்ளமாட்டார். விருப்பத்திற்கேற்ப உணவு தயார் செய்யவில்லை அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு சமைக்கவில்லை என்பது போன்ற அற்பமான காரணங்களுக்கெல்லாம் சிலர் வீட்டில் ஒரு பூகம்பத்தையே ஏற்படுத்தி விடுகிறார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களை அடியொற்றி நடப்பவர் தனது ஒவ்வொரு நிலையிலும் நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகளை நினைவில் நிறுத்தி அன்பும் நேசமும் பரந்த மனப்பான்மையும் கொண்ட கணவராகத் திகழ்வார்.

    உண்மை முஸ்லிம் நபி (ஸல்) அவர்களின் நடத்தையை நினைவு கூர்வார். நபி (ஸல்) அவர்கள் எந்தவொரு உணவையும் குறை கூறியதேயில்லை. அதை விரும்பினால் சாப்பிடுவார்கள். பிடிக்கவில்லை என்றால் அதை விட்டுவிடுவார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியிடம் ஆணத்தைக் கொண்டு வருமாறு கேட்டார்கள். குடும்பத்தினர் "எங்களிடம் காடி (வினிகர்) மட்டும்தான் இருக்கிறது'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைக் கொண்டு வருமாறு கூறி சாப்பிட்டார்கள். மேலும் ""காடி மிகச்சிறந்த ஆணம். காடி மிகச்சிறந்த ஆணம்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

    தங்களது மனைவியிடம் ஏற்படும் சிறிய குறைகளைப் பார்த்து கோபித்துக் கொள்பவர்கள் சற்று நிதானிக்கவேண்டும். உணவு தாமதமாகுதல், தான் விரும்பிய ருசியின்மை போன்ற காரணங்களுக்காக கோபப்படும்போது அந்த பலவீனமான பெண்ணிடம் அக்குறை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஏனெனில், சில சந்தர்ப்பங்களில் அவள் இதுபோன்ற தவறை செய்ததற்குரிய காரணங்கள் இருக்கலாம். அத தெரிந்துகொள்வதற்கு முன்பே சில ஆண்கள் கோபப்பட்டு விடுகிறார்கள். பெண்களைவிட ஆண்கள் வலிமையானவர்கள் அல்லவா? ஆண்கள்தான் சகித்துக் கொள்ளவேண்டும்.

    உண்மை முஸ்லிம் மனைவியிடம் மட்டுமல்லாது அவளது உறவினர், தோழியர்களிடமும் நல்லுறவைக் கடைபிடிக்கவேண்டும். இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் ஆதாரம் உண்டு. அன்னை அயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: "ஒரு வயோதிகப் பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் வந்து செல்வார்கள். நபி (ஸல்) அவர்கள் அம்மூதாட்டியிடம் பரிவுடனும் கண்ணியத்துடனும் நடந்து, அவர்களிடம் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் நிலை எப்படி இருக்கிறது? நமது சந்திப்பிற்கு பிறகு எப்படி இருந்தீர்கள்?'' என்று விசாரிப்பார்கள். அப்பெண்மணி "நலமாக இருக்கிறேன். என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறுவார்கள்.

    அம்மூதாட்டி சென்றபிறகு அன்னை அயிஷா (ரழி) "இந்த மூதாட்டியை இந்தளவிற்கு நீங்கள் வரவேற்கிறீர்களே! நீங்கள் யாருக்குமே செய்யாத சில காரியங்களையெல்லாம் அவர்களுக்கு செய்கிறீர்களே!'' என்றபோது நபி (ஸல்) அவர்கள் "இந்தப் பெண்மணி நாங்கள் கதீஜா (ரழி) அவர்களின் வீட்டில் இருக்கும்போது எங்களை சந்திப்பவராக இருந்தார்கள். நேசிப்பவர்களை கண்ணியப்படுத்துவது ஈமானில் கட்டுப்பட்டது என்பது உனக்குத் தெரியுமா?'' என்று கூறினார்கள். (முஸ்தத்ரகுல் ஹாகிம்)

    சில சமயங்களில் கணவன்மீது மனைவிக்கு கோபம் ஏற்படலாம். எதேனும் ஒரு காரணத்தால் ஆத்திரத்தை வெளிப்படுத்துவாள். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் முஸ்லிம், பெண்ணின் குண இயல்புகளை ஆழ்ந்து அறிந்தவராக இருப்பதால் மிகுந்த சகிப்புத் தன்மையுடன் அதை எதிர்கொள்ளவேண்டும்.

    நபி (ஸல்) அவர்கள் தங்களது மனைவியர் கோபித்தால் அமைதி காப்பார்கள். மனைவியரில் சிலர் இரவுவரை நபி (ஸல்) அவர்களுடன் பேசாதிருப்பார்கள்.

    உமர் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: "குரைஷி குலத்தைச் சேர்ந்த நாங்கள், பெண்கள்மீது ஆதிக்கம் செலுத்தி வந்தோம். நாங்கள் மதீனா வந்தபோது அந்நகரப் பெண்கள், ஆண்கள்மீது ஆதிக்கம் கொண்டிருந்தார்கள். எங்களது குடும்பப் பெண்கள் அப்பெண்களிடம் பாடம் கற்றுக் கொண்டார்கள். நான் மதீனாவின் மேட்டுப் பகுதியில் உமய்யா இப்னு ஜைத் கோத்திரத்தாருடன் வசித்துவந்தேன்.

    ஒரு நாள் என் மனைவி என்மீது கோபப்பட்டு, என்னை அவர் எதிர்த்துப் பேசியது எனக்கு வெறுப்பை எற்படுத்தியது. அதற்கவர் "நான் உங்களை எதிர்த்துப் பேசியதற்காக நீங்கள் என்னை வெறுக்கிறீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களின் துணைவியர்கள் கூட நபி (ஸல்) அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு பேசத்தான் செய்கிறார்கள். அவர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் பகலிலிருந்து இரவுவரை பேசுவதில்லை'' என்று கூறினார்.

    பின்பு நான் எனது மகள் ஹஃப்ஸாவிடம் சென்றேன். "ஹப்ஸாவே! நீ நபி (ஸல்) அவர்களை எதிர்த்துப் பேசுகிறாயா?'' என்று கேட்டேன், "ஆம்'' என்றார். "உங்களில் சிலர் அல்லாஹ்வின் தூதரிடம் பகலிலிருந்து இரவுவரை கோபமாக இருக்கிறார்களா'' என்று கேட்டேன். அதற்கு ஹப்ஸா "ஆம்'' என்றார். நான் கூறினேன்: "உங்களில் எவரேனும் அவ்வாறு செய்தால் நஷ்டமும் தோல்வியும் அடைந்து விடுவார். உங்களில் ஒருவர்மீது இறைத்தூதருக்கு கோபம் எற்பட்டால் அதனால் அல்லாஹ்வும் கோபமடைந்து அழிந்துவிடுவோம் என்ற அச்சம் அவருக்கு இல்லையா? நீ இறைத்தூதரிடம் எதிர்த்துப் பேசாதே, அவர்களிடம் எதையும் கேட்காதே, உனக்குத் தேவையானதை என்னிடமே கேள்'' என்று கூறினேன்.

    பிறகு உமர் (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கும் தனது மகள் ஹப்ஸாவுக்குமிடையே நடைபெற்ற உரையாடலைக் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்களை நற்பண்புகளிலும் செயல்பாடுகளிலும் பின்பற்ற நினைக்கும் முஸ்லிம் இதுபோன்ற நற்குணங்களை தனக்குள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். அப்போதுதான் இஸ்லாம் என்பது உயர்ந்த சமூக வாழ்க்கைக்குரிய மார்க்கம் என்பதை ஆதாரப்பூர்வமாக நிலைநாட்டியவராவார். மேலும் இன்று தனிமனிதர் அல்லது குடும்பம் அல்லது சமூகத்தில் ஏற்படுகின்ற அதிகமான பிரச்சனைகள், பிரிவினைகள், நெருக்கடிகள், குழப்பங்கள் அனத்திற்கும் காரணம், இஸ்லாம் போதிக்கும் உயர்ந்த பண்புகளை விட்டு தூரமாக இருப்பதுதான் என்பதை மக்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துச்சொல்ல முடியும். உண்மையில் நற்பண்புகளையும் பழக்க வழக்கங்களையும் மேற்கொள்ளும் குடும்பமே ஈடேற்றம், நற்பாக்கியம், நிம்மதி ஆகியவற்றை அடந்துகொள்ள முடியும்.