|
|
|
|
அழகிய தோற்றமுடையவர்
உண்மை முஸ்லிம் ஆடம்பரமோ வீண்விரயமோ இல்லாமல் தனது ஆடைகளுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டும்; அழகிய வடிவுடன் தூய்மையுடன் தோற்றமளிக்கவேண்டும். அப்போதுதான் அவரைக் காண்பவர்களின் கண்கள் குளிர்ச்சியடையும்; இதயங்கள் அவரை நேசிக்கும். மக்களிடையே வரும்போது இழிந்த தோற்றத்தில் இல்லாமல் தன்னை முறையாக அழகுபடுத்திக்கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் தங்களின் குடும்பத்திற்காக தங்களை அழகுபடுத்திக் கொள்வதைவிட தோழர்களைச் சந்திக்கச் சென்றால் அதிகமாக அழகுபடுத்திக் கொள்வார்கள்.
(நபியே!) கூறுங்கள். அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும் பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்? (அல்குர்அன் 7:32)
இமாம் குர்துபி (ரஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கான விரிவுரையில் குறிப்பிடுகிறார்கள்: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""நபி (ஸல்) அவர்களைக் காண சில தோழர்கள் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரத்தயாரானபோது வீட்டில் நீர் நிரம்பிய குவளையைக் கண்டார்கள். அந்த தண்ணீரில் முகம்பார்த்துக் கொண்டு தனது தலைமுடியையும் தாடியையும் சீர்செய்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் ""நபி (ஸல்) அவர்களே! நீங்களா இதைச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ""ஆம்! ஒரு மனிதர் தன் சகோதரர்களை சந்திக்கச் சென்றால் தன்னை சீர்படுத்திக் கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகையே நேசிக்கிறான்'' என்று கூறினார்கள்.
முஸ்லிம் தன்னை அழகுபடுத்திக்கொள்வதில் நடுநிலையான இஸ்லாமியக் கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொள்வார். நடுநிலையான கொள்கை என்பது வரம்புமீறி அதிகப்படுத்தவும் கூடாது; எல்லை மீறி குறைக்கவும் கூடாது.
அன்றி அவர்கள் செலவு செய்தால், அளவைக் கடந்துவிட மாட்டார்கள், உலோபித்தனமும் செய்ய மாட்டார்கள். இதற்கு மத்திய தரத்தில் இருப்பார்கள். (அல்குர்அன் 25:67)
இஸ்லாம் தனது உறுப்பினர்கள், குறிப்பாக அழைப்புப்பணி செய்பவர்கள் பிறரால் நேசிக்கப்படும் தோற்றத்தில் திகழவேண்டுமென்றும் வெறுப்படையச் செய்யும் தோற்றத்தைக் கொண்டிருக்கக் கூடாது எனவும் விரும்புகிறது. எவரும் பற்றற்றவன், பணிவுடையவன் என்று கூறிக்கொண்டு தன்னை மிக இழிவான அழகற்ற தோற்றத்தில் காட்டிக்கொள்வதை இஸ்லாம் ஏற்பதில்லை.
ஏனெனில் பற்றற்றவர்கள் மற்றும் பணிவுடையவர்களின் தலைவரான நபி (ஸல்) அவர்கள் அழகிய ஆடைகளை அணிந்தார்கள். தனது தோழர்கள் மற்றும் குடும்பத்தினருக்காக தங்களை அழகுபடுத்திக் கொண்டார்கள். இந்த அழகு, அலங்காரம் அல்லாஹ்வின் அருட் கொடைகளை வெளிப்படுத்தும் செயலெனக் கருதினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""நிச்சயமாக அல்லாஹ் தனது அடியானிடம் தனது அருட்கொடையின் அடையாளம் வெளிப்படுவதை விரும்புகிறான்.'' (ஸுனனுத் திர்மிதி)
ஜுன்து இப்னு மகீஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: ""எதேனும் ஒரு கூட்டத்தினர் தன்னை சந்திக்க வந்தால் நபி (ஸல்) அவர்கள் அழகிய ஆடையை அணிந்து, தனது நெருங்கிய தோழர்களையும் அணிந்து கொள்ள ஏவுவார்கள். கின்தா என்ற கூட்டத்தினரை சந்தித்தபோது நபி (ஸல்) அவர்களை நான் கண்டேன்; அவர்கள் மீது எமன் தேச ஆடை இருந்தது. அதுபோன்ற ஆடையே அபூபக்கர் ஸித்தீக் (ரழி), உமர் (ரழி) அவர்கள் மீதும் இருந்தது.'' (தபகாத் இப்னு ஸஃது)
உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்கள் புதிய ஆடையை வரவழைத்ததைக் கண்டேன். பின்பு அதை அணிந்து கொண்டார்கள். ஆடை தங்களது கழுத்தை அடைந்தபோது கூறினார்கள்: ""எனது மானத்தை மறைத்து, எனது வாழ்வில் என்னை அழகுபடுத்திக் கொள்ளும் ஆடையை அணிவித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.'' (அத்தர்ஹீப்)
வரம்பு மீறாத வகையில் அழகு படுத்திக்கொள்ளுமாறு அல்லாஹ் தனது அடியார்களுக்கு கட்டளையிடுகிறான்.""ஆதமுடைய மக்களே! தொழும் இடத்திலெல்லாம் (ஆடைகளினால்) உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (இறைவன் உங்களுக்கு அனுமதித்தவற்றை) நீங்கள் (தாராளமாகப்) புசியுங்கள், பருகுங்கள். எனினும் (அவற்றில்) அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். எனென்றால்
நிச்சயமாக அல்லாஹ் அளவுகடந்து (வீண்) செலவு செய்வோரை நேசிப்பதில்லை.''
(நபியே!) அல்லாஹ் தன் அடியார்களுக்காக அளித்திருக்கும் (ஆடை) அலங்காரத்தையும் பரிசுத்தமான (மேலான) ஆகாரத்தையும் (ஆகாதவை யென்று) தடுப்பவர் யார்? என்று கேட்டு, ""அது இவ்வுலக வாழ்வில் விசுவாசம் கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது'' என்றும் கூறுவீராக! அறியக்கூடிய ஜனங்களுக்கு (நம்முடைய) வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம். (அல்குர்அன் 7:32,33)இப்னு மஸ்வூது (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""எவனது இதயத்தில் அணுவளவு பெருமை இருக்கிறதோ அவன் சுவனம் புகமாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, ஒரு மனிதர் ""ஒருவர் ஆடை, காலணி அழகாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் (அது பெருமையில் சேருமா?)'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ""நிச்சயமாக அல்லாஹ் அழகானவன், அழகாக இருப்பதையே நேசிக்கிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுத்து, மனிதர்களை இழிவுபடுத்துவதுதான்.'' (ஸஹீஹ் முஸ்லிம்)
இப்படித்தான் நபித்தோழர்களும் அவர்களை நற்செயல்களால் பின்தொடர்ந்தவர்களும் விளங்கிக் கொண்டிருந்தார்கள். இதனால்தான் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் கம்பீரமான தோற்றத்தையும் அழகிய ஆடையையும் நறுமணத்தையும் உடையவர்களாக இருந்தார்கள். ஆடைகள் தூய்மையாக இருப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்கள். தோற்றத்தை சீர்செய்து கொள்ளுமாறு பிறரையும் தூண்டினார்கள்.
ஒருமுறை தனது சபையில் ஒருவர் கிழிந்த ஆடையை அணிந்திருப்பதைக் கண்டு அவரை தனியாக அழைத்து அவரது தோற்றத்தை சரி செய்துக்கொள்ள ஆயிரம் திர்ஹத்தைக் கொடுத்தார்கள். வாங்க மறுத்த அம்மனிதர் ""நான் செல்வந்தன் எனக்கு இது தேவையில்லை'' என்றார். இமாமவர்கள் அம்மனிதரை கண்டிக்கும் விதமாக ""அல்லாஹ் தனது அடியார்கள் மீது தனது அருட்கொடையின் அடையாளத்தைக் காணவிரும்புகிறான்'' என்ற ஹதீஸ் உன்னை எட்டவில்லையா? எனவே, உனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் உன் நண்பர்கள் உன்னைப்பற்றி கவலையற்றிருப்பார்கள் என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின்பால் மக்களை அழைக்கும் அழைப்பாளர்கள் இத்தகைய அழகிய தோற்றமும் பரிபூரணத் தூய்மையும் பிறரை ஈர்க்கும் தன்மையும் கொண்டிருப்பது அவசியமாகும். அப்போதுதான் அழைப்புப் பணியின் மூலம் பிறரது உள்ளங்களில் உடுருவ முடியும். அழைப்பாளர் எல்லா நிலையிலும் இத்தகைய தன்மைகளை கைக்கொள்ளவேண்டும். அல்லாஹ்வின்பால் அழைப்பவர் தனது தோற்றப் பொலிவை கவனிக்கவேண்டும். உடல், ஆடை, நகம், தலை மற்றும் தாடிமுடியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த நேரிய போதனைக்கு செவிசாய்க்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""ஐந்து விஷயங்கள் இயற்கையான பண்புகளாகும். கத்னா (விருத்த சேதனம்) செய்வது, அபத்தின் முடியை சிரைப்பது, அக்குள் முடியைப் பிடுங்குவது, நகங்களை வெட்டுவது மற்றும் மீசையைக் குறைப்பது.'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
மனிதனுக்குரிய இயற்கைப் பண்புகளைப் பேணுவதன் காரணமாகவே இம்மார்க்கம் நேசிக்கப்படுகிறது. சீரான சிந்தனை உடையவர்கள் இப்பண்புகளைப் பேணுவதில் ஆர்வம் கொள்கின்றனர்.
முஸ்லிம் தனது தோற்றத்துக்கு முக்கியத்துவமளிக்க வேண்டிய அதே நேரத்தில் அவர் தன்னை அழகுபடுத்தி, தூய்மைப்படுத்திக் கொள்வதில் இஸ்லாம் அமைத்துள்ள நடுநிலைத் தன்மைக்கு பங்கம் ஏற்படுமளவுக்கு எல்லை மீறிவிடக்கூடாது. பேணுதலான முஸ்லிம், வாழ்வுத்தராசின் ஒரு தட்டு மற்றொரு தட்டைவிடத் தாழ்ந்துவிடாத வகையில் எல்லா நிலைகளிலும் நடுநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.
அழகுபடுத்தி, தோற்றப் பொலிவுக்கு முக்கியத்துவமளித்து தொழும் இடங்களிலெல்லாம் ஆடைகளால் தங்களை அலங்கரித்துக் கொள்ளுமாறு இஸ்லாம் வலியுறுத்தும் அதே சமயம், அலங்காரத்தில் வரம்புமீறி, சதாவும் உலக அலங்காரங்களில் மூழ்கிவிடுவதை வன்மையாக கண்டிக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""தீனார், திர்ஹம் மற்றும் ஆடை, அணிகலன்களின் அடிமை நாசமாகட்டும்! அவன் கிடைத்தால் திருப்தியடைவான்; கிடைக்கவில்லையெனில் ஆத்திரமடைவான்.'' (ஸஹீஹுல் புகாரி)
இஸ்லாமிய அழைப்பாளர்கள் இஸ்லாம் கூறும் நடுநிலையை உறுதியாகப் பின்பற்றுவதாலும் இம்மார்க்கத்தின் நேரிய கொள்கையை கடைபிடிப்பதாலும் இதுபோன்ற வழிகேடுகளிலிருந்தும் தடுமாற்றங்களி லிருந்தும் தங்களை பாதுகாத்துக்கொள்வார்கள்.
ஆ - அவரது அறிவு
கல்வி என்பது முஸ்லிமின் சிறப்பும் கட்டாயக் கடமையுமாகும். கல்வியின் மூலமே அறிவு மேலோங்கும் என்பதை முஸ்லிம் உறுதி கொள்ளவேண்டும். உலகிலுள்ள அல்லாஹ்வின் அருட்கொடைகளை அறிந்துகொள்ள கல்வியைப் பயன்படுத்திக் கொள்வது கடமையாகும்.நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ""கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமையாகும்.'' (ஸன்னன் இப்னு மாஜா)
கல்வி மற்றும் ஞானத்தின் மூலம்தான் மனிதன் தனது அறிவை சீர்படுத்திக்கொள்ள முடியும் என்பதால் கல்வி கற்றுக்கொள்வது கட்டாயக் கடமையாகும். இறுதி மூச்சுவரை முஸ்லிம் கல்வியைத் தேடவேண்டும். கல்வியைத் தேடுவதில் முஸ்லிம் ஆர்வம்கொள்ள போதுமான காரணம், அல்லாஹ் அறிஞர்களின் அந்தஸ்தை உயர்த்தி, இறை அச்சத்தை அவர்களுக்கே சொந்தமாக்கி உள்ளான், இச்சிறப்புகளை ஏனைய மனிதர்களைவிட அறிஞர்களுக்கே வழங்கியுள்ளான் என்பதாகும்.நிச்சயமாக அல்லாஹ்வுடைய அடியார்களில் அவனுக்குப் பயப்படுவதெல்லாம் (அறிவுடைய) கல்விமான்கள்தாம். (அல்குர்அன் 35:28)
பிரகாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே உரிய முறையில் அல்லாஹ்வை அஞ்ச முடியும். அவர்கள்தான் இப்பிரபஞ்சத்தை படைத்து வாழவைத்து பிறகு (மறுமையில்) உயிர்ப்பிக்கும் அல்லாஹ்வின் மகத்துவத்தையும் ஆற்றலையும் புரிந்து கொள்ளமுடியும். அல்லாஹ் அந்த அறிஞர்களை அகிலத்தார் அனைவரையும்விட மேன்மைப் படுத்துகிறான்
(நபியே) நீர் கேளும்! அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? (இந்த குர்அனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோறெல்லோரும் (கல்வி) அறிவுடையோரே. (அல்குர்அன் 39:9)
ஸஃப்வான் இப்னு அஸ்ஸப்ல் அல் முராதி (ரழி) நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதில் இருந்தார்கள். அவர் ""இறைத்தூதரே! நான் கல்வியைத் தேடி வந்துள்ளேன்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் ""கல்வியைத் தேடுபவரை நான் வரவேற்கிறேன். கல்வியைத் தேடுபவர்களை மலக்குகள் தங்களது இறக்கைகளால் சூழ்ந்து கொண்டு ஒருவர் பின் ஒருவராக வானம்வரை கூடிவிடுகின்றார்கள். வானவர்கள் அவர் தேடும் கல்வியின்மீது கொண்ட அன்பினால் இப்படி சூழ்ந்து கொள்கிறார்கள்'' என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத், முஸ்தத்ரகுல்ஹாகிம்)
கல்வியின் மாண்புகள் மற்றும் அதைத்தேடுவதில் ஆர்வமூட்டும் சான்றுகள் பல உள்ளன. உண்மை முஸ்லிம் கற்பவராக அல்லது கற்றுக்கொடுப்பவராக இருப்பார். மூன்றாமவராக இருக்கமாட்டார்.
மரணிக்கும்வரை கற்பார்
உயரிய பட்டங்களைப் பெற்று, பொருளாதாரத்தை வளப்படுத்தி, நிம்மதியான வாழ்வுக்கு உத்தரவாதமாக ஆக்கிக் கொண்டு அத்தோடு மட்டுமே விட்டுவிடுவது உண்மையான கல்வியல்ல. மாறாக, ஞானத்தின் பொக்கிஷங்களை அதிகப்படுத்திக் கொள்வதற்காக அய்வுகளைச் செய்துவர வேண்டும். கல்வியை ஆய்வு செய்வதை நிரந்தரமாக்கிக் கொண்டு ஒவ்வொரு நாளும் அதை நடைமுறைப்படுத்தி கல்வியை அதிகரித்துக் கொள்ளவேண்டும்.""என் இறைவனே! என்னுடைய கல்வி ஞானத்தைப் அதிகப்படுத்து'' என்று நீர் பிரார்த்தனை செய்வீராக!. (அல்குர்அன் 20:114)
நற்பண்புகளுடைய நமது முன்னோர்கள் கல்வியில் உயரிய அந்தஸ்தை அடைந்திருந்தும் தங்களது வாழ்வின் இறுதிவரை கல்வியைத் தேடி ஞானத்தை அதிகப்படுத்திக் கொள்வதில் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்கள். அதைத் தொடர்வதன் மூலமே கல்வி உயிர்பெற்று, வளர்ச்சியடையும் என்றும் கல்வியில் ஆய்வு செய்யாமல் புறக்கணிப்பதால் அது ஜீவனற்றுப் போய்விடுமென்றும் கருதினார்கள். கல்வி கற்பதிலும் ஆய்வு செய்வதிலும் அவர்கள் கொண்டிருந்த முக்கியத்துவமும் அதை செயல்படுத்துவதில் அவர்கள் கொண்டிருந்த ஆவலும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டிருக்கின்றன.
இமாம் இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: இப்னு அபீ கஸ்ஸப்ன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், ""நீ கல்வி கற்கும் காலமெல்லாமல் அறிஞனாக இருப்பாய். தேவையில்லையென நினைத்து ஒதுங்கிவிட்டால் மூடனாகி விடுவாய்.''
இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ""கல்வி உடையவர் கற்றுக்கொள்வதை நிறுத்திவிடுவது முறையற்ற செயலாகும்.''
இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்களிடம் ""எதுவரை கல்வி கற்பீர்கள்?'' என்று கேட்கப்பட்டபோது இமாமவர்கள் ""மரணம்வரை'' என்று பதிலளித்து, ""எனக்கு பயனளிக்கும் எதேனும் ஒரு விஷயத்தை இதுவரை நான் எழுதிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம் அல்லவா?'' என்று கூறினார்கள்.
இமாம் அபூ அம்ரு இப்னு அலா (ரஹ்) அவர்களிடம், ""மனிதன் கல்வி கற்றுக்கொள்ள உகந்த காலம் எது?'' என்று கேட்கப்பட்டபோது இமாமவர்கள் ""அவன் வாழ்வதற்கு உகந்த காலமனைத்தும்'' என பதிலளித்தார்கள்.
இமாம் ஸன்ஃப்யான் இப்னு ஈயைனா (ரஹ்) அவர்கள் அளித்த பதில் மிகவும் அற்புதமானது. அவர்களிடம் கல்வியைத் தேடுவது யாருக்கு மிக அவசியம்? என்று கேட்டபோது இமாமவர்கள் ""மக்களில் மிக அறிந்தவர்களுக்கு மிக அவசியம்'' என்று கூறினார்கள். ஏன்? (அறிஞர் கல்வியைத் தேடியே ஏகவேண்டும்) என்று கேட்டபோது இமாமவர்கள் ""அறிஞனிடம் தவறு எற்படுவது மிகவும் வெறுக்கத்தக்கது'' என்று கூறினார்கள்.இமாம் ஃபக்ருத்தீன் ராஜி (ரஹ்) பிரபல குர்ஆன் விரிவுரையாளர் ஆவார்கள். எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார்கள். தர்க்கவாதம், தத்துவம் போன்ற பல கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். அக்கால அறிஞர்களில் தலைசிறந்தவராகத் திகழ்ந்து ஹிஜ்ரி 606ல் மரணமடைந் தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு கல்வித்துறையில் மிகப்பெரிய பிரபலத்தை அளித்திருந்தான். அவர்கள் செல்லும் ஊர்கள், நுழையும் நகரங்கள் அனைத்திலும் அறிஞர்கள் தங்களது கல்வித் தாகத்தைத் தணித்துக்கொள்ள அவர்களை நோக்கி வந்தார்கள். இமாமவர்கள் ஒரு சமயம் "மர்வ' என்னும் நகருக்கு வந்தபோது அறிஞர்களும் மாணவர்களும் திரளாக வந்து சந்தித்தார்கள். அவர்களிடம் கற்றுக் கொள்வதை பெருமையாகக் கருதினர்.
அங்கு வந்திருந்த மாணவர்கள் கூட்டத்தில், பரம்பரை பற்றிய கல்வியை நன்கறிந்த ஒரு மாணவரும் இருந்தார். அவர் இருபது வயதைத் தாண்டாதவர். இமாமவர்கள் அக்கலையை திறம்பட அறியாதவர்களாக இருந்ததால் அம்மாணவரிடமிருந்து அதை கற்றுக்கொள்ள விரும்பி னார்கள். எவ்விதத் தயக்கமுமின்றி அம்மாணவரிடம் தனக்கு கற்றுத் தருமாறு கோரினார்கள். அவரை ஆசிரியரின் ஸ்தானத்தில் அமர்த்தி அவருக்கு முன் மாணவராக அமர்ந்தார்கள். அக்காலத்தில் சிறந்த இமாமாக இருந்தும் அந்நிகழ்ச்சி அவர்களது அந்தஸ்தை எவ்வகையிலும் குறைத்துவிடவில்லை. மாறாக, இமாமவர்களின் பணிவையும் மாண்பையும் சுட்டிக்காட்டும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகிவிட்டது.
இந்த அறிஞர்களின் இதயங்கள் கல்வியை எந்தளவு நேசித்திருக்கின்றன! கல்வி அவர்களது பார்வையில் எவ்வளவு உயர்ந்துள்ளது பாருங்கள்! இம்மகத்தான முன்னோர்களைப் பின்பற்றுவது பின்னுள்ளோருக்கு எவ்வளவு அவசியமானது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.