|
|
|
இமாம் அபூஹனீபா(ரஹ்) பெயரில் ஹனபி மத்ஹபின் பிக்ஹூ நூல்களான இவையனைத்தும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு 300 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை தொகுத்தவர்கள் எவருமே அபூஹனீபா அவர்களிடமிருந்து எப்படிப் பெற்றார்கள் என்ற விபரத்தையோ, அறிவிப்பாளர் வரிசைகளையோ குறிப்பிடவேயில்லை. ஆனால் பின்னால் வந்தவர்கள் முந்திய நூல்களை ஆதாரமாகக் காட்டியுள்ளனர், அவற்றிலும் விபரங்களில்லை. இதனைத் தொகுத்தவர்கள் அரபு குலத்தவரோ, மொழியினரோ மட்டுமல்ல. அரபியை கற்றறிந்த மாற்று நாட்டவராலும், குலத்தவராலும், இனத்தவராலும், மொழியினராலும் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் குறிப்பிட்டுள்ள "ஃபதாவா ஆலம்கீரி" மொகலாய பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் தொகுக்கப்பட்டதாகவும், அத்தொகுப்புக்கு காயல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களும் உதவியதாகவும் ஒரு செய்தியுள்ளது நினைவு கூறத்தக்கதாகும்.
இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அறவே திருக்குர்ஆன், உண்மையான நபிமொழிகளை ஆதாரமாக கொடுக்கவில்லையெனக் கூறிவிட முடியாது. அப்படி எழுதியிருப்பார்களேயானால் இந்நூல்கள் இவ்வளவு பிரபல்யமாகியிருக்க முடியாது. எனவே ஆங்காங்கு ஒரு சில குர்ஆன் வசங்களையும் நபி மொழிகளையும், செருகி அதனை தங்களது மத்ஹபு கொள்கைக்கொப்ப வளைத்தும், திரித்தும் "ஃபத்வா" (மார்க்கத்தீர்ப்பு) வழங்கியிருப்பதை காணலாம். ஒரு சில இடங்களில் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான மார்க்க தீர்ப்பை வழங்கி விட்டு தொடர்ந்து அதற்கு மாற்றமான தீர்ப்பையும் முஸ்தஹபு, முபாஹ் லாபஃஸ் என்ற அரபிச் சொல்லையும் கொண்டு குழப்பியிருப்பதையும் காணலாம்.
இமான் மாலிக்(ரஹ்) அவர்கள் எழுதிய "முஅத்தா மாலிகி" நூலுக்கு விளக்கம் தந்து "அவ்ஜஜுல் மஸாலிக்" என்ற நூலை ஹனபி மத்ஹபினராக முகம்மது ஜக்கரிய்யா சாகிப் அவர்கள் சென்ற நூற்றாண்டில் எழுதினார்கள். மாலிக் மத்ஹபின் பல சட்டங்கள் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபியின் நடைமுறை சட்டங்களுக்கு மாற்றமாக இருப்பதை கண்டார்கள். எப்படி தனது மத்ஹபை விட்டுக் கொடுக்க முடியும்! எனவே முஅத்தா மாலிகி நூலை எழுதிய மாலிகி(ரஹ்) அவர்களையே முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் ஹனபியாக மாற்றி விளக்கம் தந்தார்கள். இதனை இன்றும் ஹதீஸ் கலா வல்லுனர்கள் முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் "முஹன்னஃபுல் மாலிகி" மாலிக்(ரஹ்) அவர்களை ஹனபியாக்கி விட்டார் எனக் கூறி வருவதை ஹதீஸ் கலையில் காணலாம். இந்த அளவு தங்களது மத்ஹபின் மீது அளவற்ற பற்று வைத்து தனியா வெறியுடன் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.
எந்த அரபி மதரஸாவிற்காவது ஹனபி மார்க்கத் தீர்ப்பு கேட்டு எவராவது இன்று ஒரு வினா எழுதி அனுப்பினால் அவர்கள் பெரும்பாலும் நாம் குறிப்பிட்டுள்ள கடைசி இரு (துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி) நூல்களிலிருந்து ஆதாரம் தருவதைக் காணலாம். அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன் உண்மையான நபிமொழிகளின் ஆதாரங்களில் ஃபத்வா தீர்ப்பு தரமாட்டார்கள். தங்களிடமுள்ள ரெடிமேட் பிக்ஹு நூல்களிலிருந்து எடுத்துரைப்பார்கள். அதாவது அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிற்கு 1000 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டதிலிருந்து மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். அத்தீர்ப்பை அவர்கள் எப்படி எடுத்தார்கள் என்ற விபரம் இருக்காது. அந்நூல்கள்தான் தங்களது சட்ட நூல்கள் என்ற பாணியில் சட்டம் தருவார்கள்.
அல்லாஹ்வின் பேரருளால் இன்று மக்களிடையே இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் நாட்டம் உருவாகியுள்ளது. பெரும்பான்மையினர் ஆதாரம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். இதனை ஒரு சில மெளலவிகளும் உணரத் தொடங்கி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் பேசவும் செயலாற்றவும் ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.